எடுத்துக் கொண்டு போய் கொஞ்ச நேரம்தான் ஆகிறது. கல்யாணச் சாவும் இல்லை. இளமரணமும் இல்லை. அறுபத்தி இரண்டு வயசுக்கான மாரடைப்பிற்கான, கீழ் நடுத்தரக் குடும்பத்திற்கான மரணம் . அதற்கு உரித்தான அம்சங்கள். ஒரே ஒரு வித்தியாசம்- அங்கே இருவருக்கு மஞ்சள் பூசி , கை நிறைய வளையல் போட்டு விட்டிருந்தார்கள். உடைப்பதற்காக.
லெட்சுமி வெறித்துப் பார்த்தாள். எப்பொழுதும் அவள் அப்படித்தான். உகந்த சூழல் இல்லாத பொழுது அவள் செய்வது அதுதான். அவளைப் பொறுத்தவரை அவர் எப்பொழுது ரெண்டாவது கைக்குழந்தையான பின்பு அவள் பின்னாடி போனாரோ அன்றே செத்த மாதிரிதான். அதன் பின் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். அதற்கு முன் மட்டும் ?
கனகம் அழுது புரண்டு ஓய்ந்து அரற்றி முனகிக் கொண்டிருந்தாள். யார் இருக்கிறார்கள் . யார் போயிருக்கிறார்கள். எதுவுமே ஒரு பொருட்டாகவே இல்லை. ஊர்ப் பெண்கள் கொஞ்சம் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.
உடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும், இல்லையா, கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப்படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.
“ … இருந்தாலும் இம்புட்டு ஆகாதுடி. ரெண்டாம் தாரம் கட்னது வாஸ்தவம் தான். இவள அத்து விட்டுட்டுப் பண்ணலியே. இவ பெத்ததுகளுக்கெல்லாம் வழி செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஊருக்காக ஒப்புக்காகனாலும் ஒரு சொட்டுக் கண்ணீரு வருதான்னு பாரேன்.”
“எளையவிடியாவப் பாரு. எப்பிடி அழுகுறா. ஓடி அழுகுறா. ஓஞ்சு அழுகுறா. பாஞ்சு அழுகுறா. பாடி அழுகுறா. மனசுல பாசம் இருக்கணும். எந்நேரமும் விட்டத்த வெறிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தா. இன்னிக்கும் அப்படித்தான் பாக்குறா.”
அங்கு லெட்சுமிக்கும் ஆதரவாகச் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கும் லெட்சுமி அழாமல் இருப்பது பிடிக்கவில்லைதான். ஊசியால் குத்தியா அழவைக்க முடியும். முக்காட்டை இழுத்து மூஞ்சியை மறைத்து அவர்களே கட்டிப் பிடித்து இழுத்து இழுத்து அழுதனர். டக்கென்று பார்ப்பதற்கு அவளும் அழுவது போல இருக்கும். யாருக்காக இதெல்லாம். கணக்கெடுப்புதான் முடிந்ததே.
லெட்சுமி பார்வையைத் தளர விட்டாள். கனகத்தின் அழுகை அவளை என்னவோ செய்தது. தான் வாழவேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தவள் தனக்குரிய அழுகையை துக்கத்தை நடத்துவதைப் பார்த்து அவளுக்கு அழுகையும் விரக்தியும் சிரிப்பும்..ஆனால் தனக்குரிய வாழ்க்கை பறிபோனதுக்கு கனகம் மட்டும்தான் காரணமா? அவளுக்கு பசித்தது. நேற்றிரவு சாப்பிட்டது. தனியே கூப்பிட்டுப் போய் சாப்பாடு போட்டிருந்தால் அவள் சாப்பிட்டிருக்கக் கூடும். உறவினர்கள்தான் குடிக்கவே மாட்டாதவளை வம்படியாக குடிக்கவைத்தது போல் கூல்டிரிங்க்ஸ் குடிக்க வைத்தார்கள். கனகம் இன்னும் ஒரு துளியும் குடிக்கவில்லை. வம்படியாக வாயில் ஊற்றியதையும் துப்பி விட்டாள்.
மூத்தவிடியா. ம்ம்ம்ஹும். மூத்தகுடியாள். நல்லாத்தான் இருக்குது. கல்யாணம் ஆனபுதுசுல எல்லாம் நல்லபடியாகப் போன மாதிரித்தான் இருந்தது. எங்கு விரிசல் என்று தெரியவில்லை. தப்பு . விரிசல் என்று சொல்லக் கூடாது.
அவர் செய்த சேட்டைகளும் குறும்புகளும் இவளுக்கு கிறுக்குத்தனமாகத் தெரிந்தன. சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தன. ஒரு நாள்
“ அம்மா ! தாயி, பிச்ச போடுங்கம்மா . சாப்புட்டு ரெண்டு நாளாச்சு”
லெட்சுமி தட்டி என்னத்தையோ எடுத்து வந்து பார்த்தால் மாறு வேசத்தில் புருசன். அவளால் இந்தக் கோமாளித்தனங்களைச் சகித்துக்கொள்ள முடியவே இல்லை. அதற்குத்தானே இருக்கிறது விட்டமும் இரண்டு கண்களும்.
அவள் இப்படி இறுக இறுக இன்னொரு பக்கம் கனகம் இளகிக் கொண்டிருந்தாள். வேலை பார்க்கப் போன அசலூரில் தொடுதலாகித் தொடுப்பான போதுதான் தெரிய வந்தது. லெட்சுமி மூன்று நாட்கள். அன்னந்தண்ணி அருந்தவில்லை. அவர்களின் துவக்கம் இவளின் முடிவிலிருந்து ஆரம்பிப்பது போல் இருந்த்து. முதன் முறையாக வாய் திறந்து கணவனுடன் சண்டை போட்டாள். இப்படிச் சண்டை போட்டிருந்தால் கூட வேறிடம் போகாமல் இருந்திருப்பேனே என்று அவன் நினைத்துக் கொண்டான். இடைப்பட்ட வருடங்களில் லெட்சுமியை எப்படி சமாளிக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனாலும் புதிதாகவும் சிலவற்றைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது. லெட்சுமி யார் பேச்சையோ கேட்டு கோர்ட்டுக்குப் போய்விட்டாள்.
ஏகப்பட்ட அலைச்சல். வேலை பார்க்கப் போன இடத்தில் எனக்கு வேலை செய்ய வந்த வேலைக்காரிதான் கனகம் என்று சொல்லித்தான் வெளியே வர முடிந்தது. ஓரிரு வருடங்களில் எல்லோருக்கும் நிதர்சனம் புரிந்தது. யாரோ சொன்ன மாதிரி இதைச் செய்யும் முதல் நபரும் அவன் கிடையாது. கடைசி நபரும் அவன் கிடையாது. எப்பொழுதும் கனகத்தின் வீட்டில். எப்பொழுதாவது லெட்சுமி வீட்டிற்கு என்றாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இன்று கடைசி ஊர்வலமும் ஆச்சு.
லெட்சுமிக்கு பயங்கரப் பசி. என்ன சாப்பாடு போடுவார்கள் என்று யோசித்தாள். முன்பெல்லாம் புளிக்குழம்புதான் வைப்பார்கள். இப்பொழுதெல்லாம் உப்பு கொஞ்சம் அதிகம் போட்டு சாம்பாரே வைத்து விடுகிறார்கள். இழவு வீடில்லையா .
பசி என்றதும் லெட்சுமிக்கு சம்மந்தமில்லாமல் அந்த விசயம் ஞாபகத்திற்கு வந்தது. சம்பந்தமில்லை என்று சொல்ல முடியாது.
ஒரு நாள் மண்டல மாணிக்கத்தில் விசேசம். அங்கு தான் கனகத்தின் இருப்பு என்று தெரியும் . இருந்தும் துணிந்து லெட்சுமி விசேசத்திற்குப் போனாள். விதி சில சமயங்களில் நன்றாகவே சிரித்து விளையாடும் . விளையாடியது. அவள் வழி கேட்ட வீடு கனகத்தின் வீடு.
ஒரு நிமிடம் எல்லோருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கனகம்தான் மௌனத்தை முதலில் உடைத்தாள்.
“ உள்ள வாங்கக்கா”.
லெட்சுமி இதை எதிர்பார்க்காதால் திகைத்துப் போய்ப் பார்த்தாள். அப்படியே திரும்பிப் போயிருக்கலாம் . அல்லது வீட்டிற்குள் போயிருந்திருக்கலாம். இரண்டுமே செய்யாமல் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள்.
கனகத்தால் இதையும் சமாளிக்க முடிந்தது. முக்கால் மணி நேரத்தில் சமையலை முடித்து திண்ணையிலேயே பறிமாறிவிட்டாள்.
என்ன ருசியான சாப்பாடு. நிச்சயம் இது போலச் சாப்பிட்டதில்லை. கை மணத்தது. வாய் மணத்தது. சுற்றியுள்ள இடமெல்லாம் மணமும் ருசியும். நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு முழுவதும் நிரவும் மணமும் ருசியும்.
அவளுக்கே வெட்கமாக இருந்த்து. ஒரு நாளும் இப்படிச் சமைத்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. லெட்சுமி யாருடனும் பேசவும் இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டதை முதலில் பொறாமையுடனும் , ஆற்றாமையுடனும் பார்த்தாள். இறுதியில் விதியை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
அதுதான் முதலும் கடைசியுமாக அவள் வீட்டில் சாப்பிட்டது. இன்றைக்கு அந்தச் சாப்பாடு ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டியதில்லை. பேச்சைக் கட்டுப்படுத்தலாம். நினைவைக் கட்டுப்படுத்த முடியுமா?
அப்படியே கனகத்தைப் பார்த்தாள். அவளுக்கும் பசிக்கும் அல்லவா ? அவள் வயிற்றைப் பார்த்தாள். ஒட்டிய வயிறு. இவ்வளவு சமைத்துச் சாப்பிட்டு எப்படி இப்படி ? ஓ..பிள்ளைப் பெறாத வயிறு.
லெட்சுமிக்குக் கண்ணீர் முட்டியது. கோர்ட்டில் கேஸ் போட்டதை உடைக்க வேலைக்காரி என்று சொன்னதை நிரூபிக்க அன்றைக்கே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டுவிட்டாள் என்று கேள்விப்பட்டது அன்று வன்மத்துடன் கூடிய சந்தோசமாக இருந்தது. என்ன காரியம் செய்து விட்டேன். எவ்வளவு துக்கத்துடன் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறாள். இப்படிச் செய்துவிட்டேனே என்று
எத்தனை பேர் பிள்ளை இல்லாமல் ஏங்கிக் கிடக்கிறார்கள். எத்தனை கல்யாணங்கள் முறிகின்றன. பிள்ளைகளுக்குத்தானே கல்யாணம். விட்டத்தைப் பார்த்துக் கொண்டே நான் கூட ரெண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டேன். இவருடன் வாழ்வதற்காக இப்படி வயிற்றை மூடி , சந்ததியை மூடி தலைமுறையை முடித்துக் கொண்டுவிட்டாளே ! பாவி நானல்லவா! நான் பாவி! துக்கம் என்னென்னவோ செய்தது.
குமுறிக் குமுறி அழுதாள். கனகத்தைக் கட்டிப் பிடித்து அழுதாள். அவளும் முதலில் திகைத்துப் பின் சேர்ந்து அழுதாள். கூடி நின்றவர்கள் கணக்கெடுத்தலில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருந்தது.
(முற்றும்)