ஓராயிரம் கண்கள் கொண்டு

ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது.

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளை கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கிடப்பவள். ‘எய்யா, எக்கி எங்க போற இங்கன இரி’ என வருவோரையும் போவோரையும் கதை சொல்ல அழைத்துக்கொண்டிருப்பவள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஊரின் மூலை முடுக்குகளில் நிகழும் மிகவும் அந்தரங்கமான தகவல்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பவள். அவளின் கதைகளும் இந்த நாவலில் சரி சமமாக இடம் பெற்றுள்ளன..

ஜோவின் உழைப்பு வியக்கத்தக்கது. இப்படி ஒரு நாவலை மீனவரல்லாத ஒருவரால் உருவாக்கியிருக்க முடியாது. மீனவர்களிடையேயும் இதை செய்து முடிக்கும் திறன் உடையவர்கள் உண்டா என்பது சந்தேகமே. மீன்பிடித் தொழில் குறித்த பல துல்லியமான தகவல்கள் நாவல் முழுவதும் வருகின்றன. இவற்றை சரிபார்க்கும் அளவுக்குக் கூட என் போன்ற படித்த மீனவ இனத்தவர்களுக்கு கடல் அறிவு கிடையாது எனச் சொல்லலாம். யாராலும் செய்து முடிக்க இயலாத ஒரு பணியை செய்து முடித்திருக்கிறார் ஜோ.

ஆழி சூழ் உலகு ஒரு கற்பனை மீனவ கிராமத்தின் கதை. உண்மையில் ஆமந்துறை எனும் அதன் பெயர் மட்டும்தான் கற்பனை. மற்றவை ஜோவின் அறிவிலிருந்தும் டி. குருசாவின் வாயிலிருந்தும் வந்து விழுந்துவிட்ட வரலாறும், விமர்சனமும், ஊர்பேச்சும். நாவலில் ஜோவுக்கும் டி. குருசாவுக்குமான வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றன. வரலாற்றை எழுதும்போதோ, அல்லது சமூக நல் நோக்கம் கலந்த கருத்துக்களை எழுதுகையிலோ கதை மொழி வேறாகவும் ஊரில் நிகழும் உணர்ச்சிகரமான விஷயங்களை விவரிக்கையில் கதை சொல்லியின் மொழி முற்றிலும் இயல்பான பேச்சு மொழியாகவே அமைந்துவிடுவதையும் காண முடியும். சில இடங்களில் வம்பு பேச்சு மொழி நடையிலேயே இவை அமைந்துள்ளன.

கதையைப் பொறுத்தவரை காட்சிக் கோர்வைகளாக, நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் நகர்ந்து கொண்டிருக்கிறது. நிறுத்தமில்லாத ஓட்டம். எங்கேயும் நின்று எண்ணங்களை சேகரித்துக் கொள்ளவோ அசை போடவோ இடமில்லை. விரல்களுக்குள் அடங்காத எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள். நாடகத்தன்மை கலந்த மெல்லிய மிகைப்படுத்தல்கள். சுவாரஸ்யம் தோய்ந்துவிடக் கூடாதென்பதற்கான யுக்திகள். ஒரு வேளை மீனவர்களின் வாழ்கையே வெறும் சம்பவக் கோர்வைதானோ என எனக்குத் தோன்றியது. வெறும் எதிர்வினைகளாலானதொரு வாழ்க்கை. ஒரு செயல் இன்னொன்றைத் தூண்ட அது இன்னொன்றை அது வேறொன்றை என நிகழ்வுகளின் இடைவிடா சங்கிலித் தொடர்தானோ மீனவரின் வாழ்க்கை? இருக்கலாம். நிறுத்தி நிதானித்து யோசித்து செயல்படும் ஒரு வாழ்க்கை முறையை நாவல் சொல்லவில்லை. வெறும் அடிப்படை உணர்ச்சிகளால் உந்தப்படும் ஒரு வாழ்க்கையைத்தான் நாவல் சொல்லிச் செல்கிறது. பசி, கோபம், குரோதம், காமம் மட்டுமல்ல தியாகமும் கருணையும் கூட அடிப்படை உணர்ச்சிகள்தான், இல்லையா? கிட்டத்தட்ட ஒரு பழங்குடி அமைப்பை நம் கண் முன் நிறுத்துகிறது ஆழி சூழ் உலகு.

கதை பல இடங்களில் உரையாடல்களின் மூலமே சொல்லப்படுகிறது. இது வாசிப்பை எளிதாக்குகிறது. ஆனால் கதையின் இடத்தை, கதை மாந்தர்களை, சூழலை, நுட்பமாக வர்ணித்து அதன் மேல் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் நிகழ்த்திச் செல்வது சிறந்த இலக்கிய படைப்புகளின் இயல்பு. இந்த நாவல் அதற்கான சமயத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இடைவெளியற்ற ஒரு நாடகம் போல உரையாடல்கள், நிகழ்வுகள் மட்டுமே அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல முக்கிய கதாபாத்திரங்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள் என்றோ, என்ன மாதிரி வீட்டில் தங்கியிருந்தார்கள் என்பதோ விவரிக்கப்படவில்லை. வெறும் கதை மட்டுமே அதிகம் சொல்லப்படுகிறது. இத்தகைய யுக்தியின் ஒரு குறைபாடு என்னவென்றால் நீடித்த நினைவுகளை அவற்றால் உருவாக்க முடிவதில்லை என்பதுதான். பெரும் நாவலோ சிறுகதையோ நம் மனதில் விரிந்து அங்கே நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு இந்த நுண் விவரிப்புகள் தேவைப்படுகின்றன.

சூழல் குறித்து எத்தனை அதிகம் தகவல்கள் தரப்படுகின்றனவோ அத்தனை நுட்பமாக நமது கற்பனை விரிகிறது. பின்பு அங்கே நீர்படிந்த கண்ணாடிக் காட்சிபோல கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. அதன்பின் கதாசிரியர் அவர்களையும் விவரிக்கிறபோது காட்சி துல்லியமடைகிறது. பாத்திரங்களின் குரலின் தன்மையைக் கூட சில ஆசிரியர்கள் சித்தரிக்கின்றனர். இவற்றின் வழியாக நாம் உருவாக்கும் மனச் சித்திரங்கள் நீண்ட மனப்பதிவுகளை உருவாக்குகின்றன. நம்மால் கதைச் சூழலின் உள்ளிறங்கி அங்கு நடப்பவற்றிற்கு சாட்சியாக நிற்க முடிகிறது. ஆழி சூழ் உலகு உரையாடல்களை, அவற்றின் சுவாரஸ்யத்தன்மையை பெரிதும் நம்பி இருக்கின்றது. ஆழி சூழ் உலகின் நுண்விவரணைகள் கொண்ட காட்சிகள் சிலவற்றைக் கொண்டே நம்மால் இந்த கருத்தை உறுதி செய்து கொள்ள முடியும். ராமேஸ்வர இரயில் புரண்டு கடலில் விழும் காட்சி, சுறா வேட்டை காட்சிகள், கடலில் மூவர் மிதந்து கொண்டிருக்கும் காட்சிகள் என சிலவற்றை வாசகரால் முழுவதும் கற்பனை செய்ய முடிவதையும் நாவலின் மற்ற பகுதிகள் பலவற்றையும் அப்படி கற்பனை செய்ய முடிவதில்லை என்பதையும் நாம் காணலாம். தமிழ் திரையுலகம் இப்போது அதிகம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கிராமியச் சூழலில், கிராமிய சாயலில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கே இந்த நாவலை என்னால் ஒப்பிட முடிகிறது.

’மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன?’ எனும் கேள்வியே நாவலின் மூலக் கேள்வி என்பது ஜோவின் கருத்து. அதற்கேற்றார்போல மரணங்கள் நாவல் முழுக்க அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. ஒருவராக, இருவராக, கூட்டமாக, இயற்கையாக, செயற்கையாக மனிதர்கள் நாவல் முழுவதும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிர்த்தியாகம் ஒரு உன்னத கிறீத்துவ மதிப்பீடு. ‘நண்பனுக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவில்லை’ (யோவான் 15:13) என்கிறார் இயேசு. இதுவே ஆழி சூழ் உலகு நாவலின் திரண்ட கருத்தும் எனலாம். ’மரணத்தை தியாகத்தால் வெல்லலாம்’ என்பது ஜோவின் முடிவு. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அந்த இறுதிகட்ட உயிர்த் தியாகங்களல்ல. ஒரு கணத்தின் வேகத்தில், சூழலின் தாக்கத்தில் நிகழ்ந்துவிடும் உயிர்த்தியாகம் மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியுமா என்ன? அத்தகைய மரணம் எல்லோருக்கும் சாத்தியமா? இல்லையெனில் நம் வாழ்கையை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? அதுவும் தியாகத்தின், அன்பின் வழியாகவே. நாவல் இதனை ஆர்பாட்டமின்றி சொல்லிச் செல்கிறது. காகு சாமியார், தொம்மாந்திரை, கோத்ரா, கொத்தாளத்தா, மேரி என பலர் தூய அன்பின், தியாகத்தின் சாட்சிகளாக கதை முழுவதும் வந்து செல்கிறார்கள். பிரதிபலன் பாராமல் இது தியாகம் இது அன்பு என்ற கூச்சலில்லாமல் ’செய்கிறேன் பார்’ என்ற முழக்கமில்லாமல் தங்கள் முழு வாழ்க்கையையுமே பிறருக்காக அர்ப்பணிக்கும் குணமுடையவர்களாகவே இவர்களைக் காண முடிகிறது.

கடற்புரங்களிலோ அதையொத்த கிராமப்புறங்களிலோ இத்தகைய மனிதர்களைக் காண்பது அரிதல்ல. கடற்கரை கிராமங்களில் நோய், ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளாலன்றி அனாதைகள் என யாரும் அறியப்படுவதில்லை. நான் கடற்புறத்தில் அனாதை என்று ஒருவரைப் பற்றியும் கேள்விப்பட்டதுமில்லை. ’உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி’ என்பதும் கிறீத்துவின் அழுத்தமான கட்டளைகளில் ஒன்றென்றாலும், இதை ஒரு பழங்குடி சமூகப் பண்பாகவும் காண முடியும். கடற்புறங்கள் பழங்குடி மரபிலிருந்து தங்களை இன்னும் முழுமையாக துண்டித்து விடவில்லை. அவர்கள் ஒரே இனத்தவர்கள், மரபணுத் தொடர்புள்ளவர்கள். அங்கே யாரும் அனாதையல்ல, ஆதரவற்றவரல்ல. ஏதேனும் ஒரு சொந்தக்காரர் அல்லது குடும்ப நண்பர் அல்லது தந்தையுடன் வியாபாரம் செய்தவர் என யாரோ ஒருவர் ஆதரவற்றவர்களைக் கண்டு உதவி செய்துவிடுவதுண்டு. இதை இப்படிச் சொல்லலாம், அங்கே எல்லோருமே கைவிடப்பட்டவர்கள், தன்னை நம்பி மண்ணை நம்பி வாழ்பவர்கள், ஆகவே எவனுமே தனித்து கைவிடப்பட்டவன் அல்ல.

எத்தனை அற்புதமான கணங்கள். அயலான் ஒருவனின் துயரங்களைத் தாங்கும் கணங்கள், ஆதரவற்ற பிள்ளைகளை நம் பிள்ளைகளாய் சுவீகரிக்கும் கணங்கள், அன்னியன் ஒருவன் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளும் கணங்கள், தேடிச் சென்று உதவும் கணங்கள். உயிர்த்தியாகத்தால் மட்டுமல்ல வாழ்க்கை அர்த்தம் கொள்வது. பொதுவாக நாம் படிக்காதவர்கள் என்றும், முரடர்கள் என்றும், கொச்சை மொழி பேசுபவர்கள் என்றும் கருதும் இந்த எளிய மக்கள் எத்தனை உயரங்கள் சாத்தியமானவர்கள், எத்தனை உயரங்கள் சென்று மீண்டவர்கள்?

இதில் கோத்ரா பிள்ளைக்கும் காகு சாமியாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒருவர் அங்கி அணிந்த பாதிரியார் இன்னொருவர் மீனவர். இருவருமே பிறர் நலன் நாடுபவர்கள். தேடிச் சென்று உதவுபவர்கள். தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பவர்கள். ஒரு நல்ல மனிதன்தான் நல்ல பாதிரியாராகவும் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் ஒரு நல்ல மனிதனுக்கும் நல்ல பாதிரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

பழங்குடி வாழ்க்கை முற்றிலும் மகோன்னதமான வாழ்க்கையுமல்ல. அப்படி ஒரு அப்பழுக்கற்ற உன்னத வாழ்க்கை முறையை எந்த இனமும் இன்னும் சென்றடையவில்லை. அதை கனவு மட்டுமே கண்டிருக்கிறோம் இன்னும் கட்டமைக்கவில்லை. நீட்டிய கைகளுக்கு வெகு அருகிலேயே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போல அந்தக் கனவு கைவசமாகாமல் சென்று கொண்டிருக்கிறது. பழங்குடி வாழ்கையின் போட்டி பொறாமைகள், உட்பூசல்கள், துரோகங்கள், மனிதம் நீங்கி விலங்காகி உடலெங்கும் வன்மத்தின் நகங்கள் முளைக்க வெறியுடன் பாய்ந்து ஒரு சிற்றுயிரை மாய்க்கும் தருணங்களையும் ஜோ பதிவு செய்திருக்கிறார். நெருங்கிய உறவினர்களுக்குள் சுவற்றில் முளைத்த சின்னஞ்சிறு செடி போலப் பகை மெல்ல நுழைந்து வீட்டையே தகர்க்கும் ஒரு பெரும் விஷ மரமாய் வளர்ந்து ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்ளுமளவிற்குச் சென்றுவிடுவதை சமீப காலங்கள் வரையிலும் நாம் கேள்விபட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளின் உறைவிடமென்றும், ஆன்மாவின் வீடென்றும், அறிவைத் தாங்கியதென்றும், இனங்களிலே பேரினத்தினுடையதென்றும் நாம் உன்னதப்படுத்தி வைத்திருக்கும் உயிருள்ள ஒரு மனித உடலை துகள் துகளாக வெடிகுண்டு கொண்டு சிதறச் செய்யும் கொடுமைகளும் இதே கடற்கரை மணல்களில் இரத்தம் படிய அரங்கேறியுள்ளன. கடவுளும் விலங்கும் ஒருசேரக் கலந்தவனல்லவா மனிதன்?

ஆழி சூழ் உலகில் பெண்களும் இந்த இரு துருவ நிலைகளுக்கு நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். கோத்ராவின் மனைவி தோக்களத்தாவும், சூசையின் மனைவி மேரியும் பிறர்நலம் பேணும் நல்லவர்களாகவும், கணவனைப் புரிந்து செயல்படுவதில் நம் புராண பாத்திரங்களுக்கு நிகராகவும் இருக்கிறார்கள் என்றால் வசந்த மாளிகை எனப்படும் ரெபெக்காவும், ரோஸம்மாவும் அதன் எதிர்பக்கம் எனச் சொல்லலாம். இதன் நடுவே சுந்தரி டீச்சர், வசந்தா போன்ற பாத்திரங்கள்.

நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பாலியல் வழுக்கல்களை நெருடலில்லாமல் பலராலும் படித்துச் செல்ல முடியவில்லை. நான் நாவல் குறித்து மீனவ இனத்தைச் சார்ந்த என் வாசக நண்பரான ஒரு பெண்மணியிடம் பேசுகையில் அவர் சொன்ன ஒற்றை வரிக் கருத்து ‘அவ இவங்கூட ஓடிப்போனான், இவ அவங்கூட ஓடிப்போனாண்ணு எழுதியிருக்கான்’ என்பதுவே. வேறு சிலர் ‘வெறும் கெட்டவார்த்தையா எழுதியிருக்காரு’ என்றார்கள். இதற்கான காரணங்களாக நான் கருதுவது இரண்டு.

முதலில் ஒழுக்கம் சார்ந்த நம் நம்பிக்கைகள். குறிப்பாக ஒரு புத்தகம் என்பது நல்லவை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளை மட்டுமே உள்ளடக்கியிருக்க வேண்டும் எனும் பார்வை. இது வாசிப்பில் உள்ள குறைபாடு. மேலும் எங்கள் மக்களுக்கு சமகால இலக்கிய பரிச்சயம் அதிகம் இல்லை. ஆக காமம் குறித்து எழுதுவதே தவறானது போன்ற ஒழுக்க மதிப்பீடுகளுடன் படைப்பை அணுகுவது தவிர்க்க இயலாதது.

இரண்டாவது நாவலின் காம நிகழ்வுகள் அனைத்தையும் டி. குருசா கிழவி சொல்லியிருக்கிறாள். அதாவது கிராமத்து கிசு கிசு பாணியிலேயே இந்த பகுதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘நல்ல கறுத்த நாட்டுக் கட்டை’ என்றோ ‘காயா இது பழமா’ என சினிமா பாடலின் மேற்கோளுடனோ இந்தப் பகுதிகள் சொல்லப்படுவது அப்படியே கிராமிய வம்புப் பேச்சுகளை ஒத்திருக்கின்றது. சில காட்சிகள் விடலைத்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. சுந்தரி டீச்சருக்கும் சூசைக்கும் களவொழுக்கம் துவங்கும் காட்சி வெறும் கிளர்ச்சியூட்டும் காமக் காட்சியாகவே எழுதப்பட்டிருக்கிறது என்பது எனது திண்ணமான கருத்து.

காமத்தை எழுதுவது அத்தனை எளிதானதல்ல. இவற்றையும் ஜோ என்கிற படித்த பண்பட்ட இளைஞனே எழுதியிருக்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன். ’நல்ல மாநிறம். வளர்த்திக்கேற்ற உடல்கட்டு. தேவையான நெளிவு சுளிவுகள். சிறுத்திருந்த இடையின்கீழ் பருத்த பின்புறங்கள்’ போன்ற வர்ணணைகளும் சரி,  ’வழித்துணையாக வந்தவர்கள் உரசிக்கொண்டதில் நெருக்கம் அதிகரித்து இப்போது தொடர்கதையாகிவிட்டது’ என்று ஒரு களவொழுக்கத்தின் தொடர்ச்சியை போகிற போக்கில் குறிப்பதும் சரி ‘வேலைய முடிங்க’ போன்ற பேச்சுக்களும் சரி மிகச் சாதாரணமான கிளர்ச்சியூட்டும் காமக் கதைகளை ஒத்திருப்பதை மறுக்க முடியாது. இது எழுத்தின் குறைபாடு.

காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இன்றைய இலக்கிய படைப்புக்களில் குறிப்பாக பெரும் நாவல்களில் காமம் மிகச் சாதாரணமாக பேசப்படுகிறது. சில நாவல்கள் காமத்தினால் எழும் மனித உறவு சிக்கல்களை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டுள்ளன. ஆக காமம் பேசப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல , அவசியமானதும்கூட. ஒழுக்கம் சார்ந்த தூயத்துவப் பார்வையுடன் ஆழி சூழ் உலகு அணுகப்படக் கூடாது. ஆனால் காமம் வாழ்க்கையின் ஒரு பகுதியானாலும் அது வெளிப்படையானதல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். காமம் பேசப்படும்போது அதற்கான முதிர்ச்சியுடன் பேசப்படவேண்டும். காம உறவுகளை கொச்சைப்படுத்தும் வர்ணனை ஒன்றையோ எள்ளல் தொனியையோ கையாளுவது நாவலின் தன்மையையே கறை செய்யும்.

என் நண்பரும் மனதுக்கினிய எழுத்தாளருமான ஜெயமோகனின் காடு, இரவு, அனல் காற்று நாவல்களில் காமம் பேசப்படுகிறது. காடு முழுக்க முழுக்க தூய காமத்திற்கும் தூய காதலுக்குமான ஒப்பீட்டைச் சொல்கிறது. ஆனால் ஒரு இடத்தில்கூட, களவொழுக்கம் கூட, எள்ளல் தொனியிலோ, விடலைத்தனத்துடனோ சொல்லப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு காம நிகழ்வும், பிறழ்வும் மனித இயல்பின் அடிப்படைகளில் ஏதோ ஒன்றை கேள்விக்குறியாக்குகிறது. ஒரு வேளை தான் ஒரு விலங்கு என்று மனிதன் உணரும் தருணங்களில் ஒன்றாக இது இருக்கலாம். அந்தப் பரிணாமம் பல அர்த்தங்களை உணர்த்தக் கூடியது.

ஆழி சூழ் உலகு ஒவ்வொரு காமப் பிறழ்வுக்கும் ஒரு விளைவைச் சொல்லிச் செல்கிறது. ஜஸ்டின், வசந்த மாளிகையின் உறவு ஒரு கொலையில் முடிகிறது, ஜஸ்டின் வசந்தாவுக்கிழைத்த துரோகம் அவனின் உயிரை அவள் கையாலேயே பறித்து விடுகிறது, பத்தினி மட்டும்தான் கொலை செய்யவேண்டுமென்றில்லையே, சூசை சாராவை வெறி கொண்டு துய்த்த செயல் அவனை குற்ற உணர்வுள்ளவனாக்கி பரிகாரமாய் அவன் உயிரைப் பெற்றுக் கொள்கிறது.

இந்த இடத்தில் தகழி சிவசங்கர பிள்ளையின் ‘செம்மீன்’ எனும் மீனவர் பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல் நினைவுக்கு வருகிறது. செம்மீன் மீனவர்களிடையே உலவிய கற்பு குறித்த ஒரு தொன்மத்துக்கு உயிரூட்டியது. அது திரைப்படமாக வந்தபோது அதன் பாடல் வரிகளிலேயே இது சொல்லப்பட்டது. பெண்ணாளே பெண்ணாளே எனும் பாடலில் கடலில் மீன் பிடிக்கப் போன முக்குவனுக்காக (மீனவன்) கற்புடன் காத்திருந்த மனைவிக்கு கடலம்மை கணவனை திருப்பித் தந்தாளென்றும் அப்படியல்லாதவளின் கணவனை ’கடலம்மே கொண்டு போயி’ என்றும் வரிகள் வருகின்றன. செம்மீன் ஒற்றை இலக்குடன் சொல்லப்பட்ட கதையாகிலும் அதனூடே கேரள மீனவ வாழ்க்கையின் பல முகங்களும் வெளி வந்தன. ஆழி சூழ் உலகு கற்பு குறித்த மீனவத் தொன்மத்தை சிறிதும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அது நிகழ்வுகளை அப்பட்டமாகவே சொல்லிச் செல்ல விழைகிறது. முன்பே நான் சொன்னதைப் போல டி. குருசா இதழோர நமுட்டுச் சிரிப்புடன் சொல்லும் கற்பனை கலந்த காமக் கதைகளின் சாயலையே நாம் ஆழி சூழ் உலகின் காமம் சொல்லும் பகுதிகளில் காண முடிகிறது. சாயலென்ன அவை அப்படிப்பட்ட கதைகள்தாம் என்பதை உறுதியாகவே சொல்ல முடியும்.

நாவல் முழுவதுமே தான் கண்டதையும் கேட்டதையும் படித்ததையும் பெரிதும் இலக்கிய கற்பனையின்றி ஒரு கிராமத்தின் டைரிக் குறிப்பை எழுதுவதைப் போல எழுதப்பட்டிருக்கிறது எனும் உணர்வு எனக்குள்ளது. ஒரு புனைவெழுத்தாளரிடம் நாம் எதிர்பார்ப்பது அபாரமான நினைவாற்றலை மட்டும் அல்ல. நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும்.  ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு. ஆழி சூழ் உலகில் கருத்து நகர்வு என்பது இல்லை. சுவாரஸ்யமான கதை நகர்வு மட்டுமே உள்ளது. நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

அமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. பல வண்ணங்களில் பல சுவைகளில் அவை வரும். ஒரு குண்டு சோற்றுப் பருக்கையின் அளவே இருக்கும். அவை பொதுவாக பழங்களின் சுவையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு பழத்தை எடுத்துக் கொண்டு அதை சுருக்கி சுருக்கி இன்னும் சுருக்கி சிறிதாக்கியதைப் போல. ஒன்றை வாயிலிட்டால் அந்தப் பழத்தை சுவைப்பது போன்ற அனுபவம் நம் புலன்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக வாழைப் பழம் சாப்பிடும் போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்து போகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். எல்லா வகையிலும் ஒரு பழத்தை உண்ணும் அனுபவத்தைத் தரக் கூடியது ஜெல்லிபெல்லி, அளவையும் வடிவத்தையும் தவிர்த்து.  பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ஆழி சூழ் உலகோ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப் போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து. நிகழ்வுகளை அடுக்கிச் செல்லும் சினிமாவின் யுக்தியே இதில் கையாளப்பட்டுள்ளது.

ஆழி சூழ் உலகு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் மதமான கத்தோலிக்க கிறீத்துவம் குறித்த இரு பார்வைகளை முன்வைக்கிறது. ஒரு பக்கம் காகு சாமியாரை ஒரு நல்ல பாதிரியாருக்கு அடையாளமாக கதையினூடேயே சொல்லிச் செல்கிறது. தூய அன்புடையவராகவும், உண்மையான இறைபக்தியுடையவராகவும் காகு சாமியார் காட்டப்படுகிறார். அவர் மக்களை வழிநடத்தும் ஒரு பழங்குடித் தலைவனின் பிம்பமும்கூட. இன்னொரு பக்கம் பல இடங்களில் கிறீத்துவம் குறித்த விமர்சனங்கள் திடீரென முளைக்கும் சில காட்சிகளாலும் உரையாடல்களாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. நான் கவனித்தவரையில் நாவலில் வெளிப்படையாக ‘கருத்து’ எனச் சொல்லப்பட்டிருப்பவை கத்தோலிக்க திருச்சபையின் மீதான விமர்சனங்களே.

இன்றைய, படித்த மீனவ இளைஞர்கள் மத்தியில் கத்தோலிக்க கிறீத்துவம் குறித்த அதிருப்தி நிலவுவதைக் காண முடிகிறது. பிற சமூகத்தினரிடம் உரையாடலற்ற, உறவற்ற சமூகமாக மீனவ சமூகம் அண்மை வரை இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக கிறீத்துவ மதமாற்றத்திற்குப்பின் இது ‘மீட்கப்பட்டவர்கள்’ ‘மீட்பில்லாதவர்கள்’ என்ற பிரிவினையால் வந்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. அதற்கு முன்பாக பல நேரடி உறவாடல்கள் கடலோர மீனவர்களுக்கும் பிற சமூகத்தினர்களுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது மீண்டும் படித்து தங்கள் புலங்களை விட்டு வெளியே வரும் மீனவ இளைஞர்கள் வெளியே சமூகச் சூழல்களைக் நேரடியாகக் காண்கிறார்கள். கத்தோலிக்க கிறீத்துவம் தங்கள் மீது, தங்கள் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது, இன்னும் செய்து வருகிறது என்று கருதுகிறார்கள். மக்கள். படித்த தங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைவிட பாதிரியார்களுக்கு அதிக மதிப்பிருப்பது அவர்களை ஒரு வகையில் ஏமாற்றமடையச் செய்கிறது. பாதிரியார்களோ, திருச்சபையோ இவர்களை போட்டியாளர்களாகக் காண்பதுவும் உணரப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை துவக்கம் முதலே இந்த இக்கட்டில் இருந்து வருகிறது எனலாம். அதன் ஆன்மிக எல்லைகளைத் தாண்டி திருச்சபை தன் தாக்கத்தை சமூக அரசியல் எல்லைகளுக்குள் செலுத்தும் போதெல்லாம் தவிர்க்க இயலாமல் இந்த இக்கட்டில் விழுகிறது. எதிர்ப்பு வலுக்கும்போது அது தன் ஆன்மிக கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறது. தங்கள் முன்னோர்களின் வரலாற்றையே இருட்டடித்து விட்டது திருச்சபை என்பது இன்னொரு தரப்பின் ஏக்கம். பல கடவுள்களை வணங்கும் ’பெருந்தன்மை’ இந்து மதத்திற்கிருப்பதாக நேரடியான எதிர்மறை ஒப்பீட்டை ஆழி சூழ் உலகு முன்வைக்கிறது. இன்றைய பாதிரியார்கள் பலரும் பக்தியின்றி பகட்டுடனும் ஒழுக்கம் மீறியும் வாழ்வதாயும் குற்றம் சாட்டுகிறது. இதை நான் மேலே குறிப்பிட்டுள்ள அதே பட்டவர்த்தனத்தோடே சொல்கிறது நாவல்.

எந்த நிறுவனமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. குறைந்தபட்சம் அதன் உறுப்பினர்களுக்கேனும் அந்த உரிமை முழுமையாக உள்ளது. திருச்சபையும் இதற்கு விதிவிலக்கல்ல. வரலாற்றை இன்றைய மதிப்பீடுகளின்படி நோக்குவது ஒரு திரையிட்ட பார்வையே என்றாலும், திருச்சபையின் இரண்டாயிரம் கால வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்தாலே ஒன்று புலப்படும். தன்னை விமர்சிப்பவர்களை அது அடக்கிய காலங்களெல்லாம் அதன் இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது. அது தன்னைத்தானே விமர்சித்தும், விமர்சனங்களுக்கு செவிமடுத்தும் தன்னை அவ்வப்போது புதுப்பிக்கத் துவங்கிய பின்னர் அது மிகுந்த ஜனநாயகத் தன்மையை அடைந்து இன்றைய உலகின் மதிப்பீடுகளை உருவாக்கிய, செயல்படுத்திய முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் தன்னை உருமாற்றிக் கொண்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமானது எனலாம்.

ஜோ முன்வைக்கும் விமர்சனங்கள் பொதுமக்களின் உணர்வை நிச்சயம் பிரதிபலிக்கிறது என்பேன். அது புரிதலின் பிழையாகக்கூட இருக்கலாம் ஆனால் அந்த விமர்சனங்களுக்கு செவிமடுத்து தன்னையோ தன்னைப்பற்றிய புரிதலின் பிழையையோ திருச்சபை சரிசெய்தாக வேண்டும். திருச்சபையோ, கிறீத்துவர்களோ தங்கள் எண்ணங்களையும் செயல்களையும் இயேசுவில் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். வேறெந்த அளவுகோலையும், உரைகல்லையும் தேடத் தேவையில்லை. இதை அடிப்படை நேர்மையுடனும் அறவுணர்வோடும் செய்ய வேண்டும். தென் தமிழக மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் ஒரு பெரும் அமைப்பு கத்தோலிக்க மதம் மட்டுமே. அதற்கேற்ற கடமையுணர்வுடன் அது நடந்து கொண்டிருக்கிறதா என்பதை சோதித்தறிய வேண்டும். இன்னும் மிக முக்கியமாக மீனவ சமூகங்களுக்கும் பிற கத்தோலிக்க சமூகங்களுக்குமேனும் ஒரு இனைப்புப் பாலமாக திருச்சபை விளங்க வேண்டும்.

கிறீத்துவ வாழ்க்கையை மையமாகக் கொண்ட படைப்புகள் தமிழில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. மையமாக இல்லையென்றாலும் பரவாயில்லை, கிறீத்துவப் பின்னணியைக் கொண்ட சாதாரண கதைகளைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம். கிறீத்துவ பத்திரிகைகளில் வரும் நல்லொழுக்கக் கதைகளை நான் இதில் சேர்த்துக் கொள்ளவில்லை. பொதுத் தமிழ் இலக்கியங்களை அல்லது பிற கலைப் படைப்புகளைக் கொண்டு தமிழக வரலாற்றை எழுத முயன்றால் கிறீத்துவம் எந்த இடத்தில் நிற்கும் என்பதை கணக்கிட முடியவில்லை. மிகச் செயற்கையாக நம் திரைப்படங்களில் காட்டப்படும் ‘அன்பு மகனே! மகளே!’ என அங்கி கசங்காமல் வந்து நிற்கும் பாதிரியாரின் சித்திரம் மட்டுமே மிஞ்சும். அந்த வகையிலும் ஆழி சூழ் உலகு ஒரு முக்கியமான, முன்னோடியான படைப்பாகிறது. அது ஒரு கிறீத்துவ கிராமத்தின், கிறீத்துவ வாழ்க்கையின் பல முகங்களையும் காட்டுகிறது. திருவிழாக்கள் ஒருங்கிணைக்கப்படும் விதம், பங்கு கமிட்டிகளின் செயல்பாடுகள், கோவிலின் பாடல் குழு, பிற செயற்குழுக்கள் குறித்த குறிப்புகள் என பல முக்கியமான குறிப்புகளையும் நாவல் உள்ளடக்கியுள்ளது.

ஆழி சூழ் உலகு 1985ல் முடிகிறது. அந்த கால கட்டத்தில் என் கிராமத்தில் தினசரி செய்தித்தாள் கிடைக்கவில்லை, தொலைபேசி இல்லை, தொலைக் காட்சிப் பெட்டிகளில்லை, வானொலியில் இலங்கை நிலைய ஒலிபரப்புக்கள் மட்டுமே அவ்வப்போது கேட்கும், வீட்டுக்கொரு மிதிவண்டி இருப்பதே பெரிய விஷயம், பேருந்து எறுவதற்கு இரண்டு கிலோமீட்டர்கள் வரை மேடும் பள்ளமுமாக ஏறி இறங்கி நடக்க வேண்டியிருந்தது, தார்ச்சாலைகளில்லை, ஆட்டோ வசதியில்லை, தெருவிளக்குகளில்லை. மாலை ஆறு ஏழு மணிக்குப் பிறகு ஊருக்கு வருவதோ போவதோ கடினமானது. பல மீனவ கிராமங்களும் இந்த நிலையில்தான் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தெரு ஒன்றில் நடந்து சென்றால் திண்ணைகளில் யாரேனும் நிச்சயம் அமர்ந்திருப்பார்கள். நான் உறவினர்களின் ஊருக்குச் செல்லும்போது அப்படித் திண்ணைகளிலிருந்து திடீர் திடீரென குரல்கள் என்னை அழைப்பதுண்டு. ’ஏய் நீ அல்லேசி(அலெக்ஸ்) மவனா வந்து சாப்பிட்டுட்டு போயா.’ எனக் கூப்பிடும் அந்த மனிதர்கள் எனக்கு பரிச்சயமில்லாத என் உறவினர்கள். மாலை நேரங்களில் கடற்கரையில் ஆணும் பெண்ணுமாகக் குடும்பமாக அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கடலும் தன்பங்குக்குப் பேசிக்கொண்டிருக்கும்.

இன்று எல்லாவிதமான வாகனங்களும் ஊருக்குள் வந்து போகின்றன, கடலுக்குள்ளிருந்து மீனவர்கள் தொலைபேசுகிறார்கள். பல வீடுகளில் தொலைபேசி உள்ளது. 90%க்கும் மேல் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு செல்ஃபோனாவது உள்ளது. கேபிள் தொலைக்காட்சியோ சாட்டிலைட் டிஷ்ஷோ, 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திண்ணைகள் காலியாகியுள்ளன. பழைய வீடுகள் பல புதிப்பிக்கப்படுகின்றன. அவற்றில் திண்ணைகளே இல்லை.

இருபது வருட இடைவெளியில் ஆழி சூழ் உலகு சொல்லும் பழங்குடி வாழ்க்கை முறை காணாமல் போயிருக்கிறது. சக மனிதர்கள் மீதான சார்பு நிலையும் ஆதிக்கமும் தாக்கமும் குறைந்துள்ளது. முன்பு முரட்டு மரங்கள் ஓங்கி வளர்ந்த அழகிய வனத்தைப் போல இருந்த கிராமங்கள் இன்று அளவாய் திருத்தி வடிவமைக்கப்பட்ட தோட்டங்களாயிருக்கின்றன. முரட்டு மரங்கள் அவ்வப்போது உரசி காடே தீ பற்றி எரிவதுண்டு தோட்டங்கள் அப்படியில்லை, நேர்த்தியானவை, ஆனால் தோட்டங்கள் கத்தரிக்கோல்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. பல சமூகங்களைப் போலவே லௌகீகக் கவலைகளில் மீனவர்களின் கவனம் சென்றிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்ந்து வெவ்வேறு உலகங்களை, அவற்றின் கனவுகளை, கவர்ச்சிகளை நிலவறைகளில் கொண்டு கொட்டிக் கொண்டிருக்கிறது. சுருங்கும் உலகம் பல வாய்ப்புகளைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. நுட்பமின்றிச் சொன்னால் பிற சமூகங்களைப் போலவே இங்கேயும் பணம் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல ஒரு பழங்குடி இனம் தன் குழந்தைமையை இழந்து வருகிறது.

எளிமையான, தன்நிறைவு கொண்ட சமூகங்களாக நம் பழங்குடிகள் இருந்து வந்திருக்கின்றன. இன்று கூட்டிலிருந்து கலைத்து விடப்பட்ட தேனீக்கள் போல பணம் தேடி சிதறியோடிக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள். ஒரு பழங்குடி சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொண்டே தன் மரபார்ந்த அடிப்படைகளை தக்கவைத்துக் கொள்வது சாத்தியமா? இனிவரும் காலங்களில் மீன்பிடித் தொழில் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று சேரும் என சிலர் கணிக்கிறார்கள். ஆழ்கடலில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முதல், இதுவரை எந்த விதத்திலும் எதிரி ஊடுருவல்களுக்கு ஆளாகாத பகுதிகளில் இராணுவ பாதுகாப்பிற்கென்று மீனவர்கள் இடம்பெயர்க்கப்படுவது வரை பல திட்டங்களும் மறைமுகமாக இந்த பன்னாட்டு முதலாளிகளின் இலாபங்களுக்காகவே செய்யப்படுகின்றன எனும் ஐயம் இயல்பாகவே எழுகிறது. மீனவர்கள் கூட்டுறவுகளின் மூலமோ, முதலீட்டை ஒன்றாய் குவித்து ஒருங்கிணைப்பதன் மூலமோ பெருவாரியான மீன் பிடிப்புத் தொழிலில் ஈடுபடுவது அவசியம். இது அவர்களை முதலீட்டுத்துவத்துக்கு அழைத்து வருவது மட்டுமல்ல, வெறும் இலாப நோக்கோடு இயற்கை வளங்களை கொடுவாட்கள் கொண்டு அறுவடை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பதிலாக இயல்பாகவே தன் சூழல் மீது அக்கறை கொண்ட, மரபின் மனசாட்சிக்கு கீழ்படிகிற நம் பழங்குடிகள் கையில் நம் இயற்கை வளங்கள் இன்னும் நீள் காலங்கள் நிலைத்து நீடிக்கவும் செய்யும்.

ஒரு சிற்றூரின் கதை யூகிக்க முடியாத பல இடங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. வேலிக் கற்றாழைகளில், கள்ளிச் செடிகளில், பாழடைந்து கிடக்கும் வீடுகளில், பள்ளிகளில், கோவில் சுவர்களில், ஊருக்கு ஒதுங்கிய குன்றின் கற்களில், இவற்றை விடவும் மேலாக அங்கு வாழும் மக்களின் ஆழ்மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கின்றன பல கதைகளும். ஜோ இங்கிருந்தெல்லாம் கதைகளைத் தேடி எடுத்திருக்கிறார். ஒரு மீனவ கிராமத்தில் அவர்களை அறியாமல் படப்பிடிப்புக் கருவிகளை பொருத்தி வைத்து ஓராயிரம் கண்கள் கொண்டு பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற சுவாரஸ்யம் நிச்சயம் ஆழி சூழ் உலகு தரும் அனுபவங்களில் ஒன்று. ‘அதற்கு மேல் என்ன?’ என்பது இலக்கியத்தை பொறுத்தமட்டில் பெரும் கேள்வி.

(முற்றும்)