20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 18

ஜெர்மனி
1916/1933

1916-33 களுக்கு இடையில் ஜெர்மனி நாட்டில் கலை மற்றும் கலைஞர்களுக்கு நாஸி (Nazi) அரசு கொடுத்த தொல்லைகளையும், அதன் விளைவாக அவர்கள் அடைந்த அல்லல்களையும் பற்றிய தெளிவான புரிதலுக்கு இக் கட்டுரை உதவி செய்யும். கலைகளை பாதித்த, அரசியல் சார்ந்த சில முக்கிய நிகழ்வுகளை வருட வாரியாகப் பார்ப்போம்.

1916: ஜெர்மன் படை முதல் உலகப்போரில் பெற்ற தோல்விகளால் தொடக்கத்தில் அரசு சார்ந்து இருந்த கலைஞர்களும் மக்களும் தங்கள் முடிவு தவறானது என உணர்கின்றனர். அரசியலை முதன்மைப்படுத்திய டி அகிடோன் (Die Aktion / The Action) ஜெயிட் எக்கோ (Zeit Echo / Echo of the Times) என்ற இரு பத்திரிக்கைகளும் வெளிப்படையாகப் போர் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடத் தொடங்குகின்றன. அரசு அவற்றைத் தடை செய்துவிடவே நாட்டை விட்டு வெளியேறி நடுநிலை நாடான ஸ்விஜர்லாந்தில் இயங்க வேண்டியதாகிறது. சமூக, கலாசார மாற்றங்களுக்காகப் புரட்சியில் ஈடுபட்ட அறிவு ஜீவிகளும், அரசியல் தலைவர்களும் தமது இயங்குகளமாக ஸ்விஜர்-லாந்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். ‘தாதா’ (Dada) சிந்தனையும், செயற்பாடும் தோன்றக் காரணமான கலைஞர்களும் எழுத்தாளர்களும் அங்குதான் முதன் முறையாகச் சந்தித்துக் கொள்கின்றனர். ‘வோல்டைர் கேளிக்கை மற்றும் நடனக் கூடம் (Cabaret Voltaire) அவர்களது ‘எதிர் கலை’ (Anty Art) சார்ந்த நடவடிக்கைகளுக்கான தளமாக ஆகிறது.

1917: ஸ்விஜர்லாந்திலிருந்து ஜெர்மனி திரும்பிய ரிச்சர்டு ஹாயல் சென்பெக் (Richard Huelsenbeck) போருக்கு எதிர்குரல் கொடுத்த சிலருடன் இணைந்து ‘நியோ ஜுகண்டு’ (Neue Jugend (New youth)) என்னும் இதழைப் போர் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் தளமாக மாற்றுகிறார். அரசின் தணிகையிலிருந்து தப்பிக்க ‘மாலிக் வெர்லாக்’ (Malik Verlag) என்னும் இன்னொரு இதழையும் பதிப்பிக்கின்றனர். ‘Neue Jugend’ இதழ் அரசால் தடை செய்யப்பட்ட பின் அது தொடர்ந்து வெளிவருகிறது.

ருஷ்யாவில் போல்ஷ்விக் (Bolsheviks) கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. ஜெர்மனியில் சோஷிலிசக்கட்சி (Socialist Party-SPD) உடைந்து பிரிகிறது. சுதந்திர சோஷியலிஸ்ட் (Indepandent Socialists – USPD) என்னும் பெயரில் புதிய கட்சி பிறக்கிறது.

1918: நவம்பர் 9ஆம் தேதி ஜெர்மனி அரசர் கெய்சர் வில்ஹெல்ம்-2 (Kaiser Wilhelm-2) தனது அரச பதவியைத் துறக்கிறார். முதல் உலகப் போரின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட அழிவுகளும், வறுமையின் கொடூரமும் அதன் பின்புலமாகின்றன. 11ஆம் தேதி ஜெர்மனி ருஷ்யா இரு நாடுகளும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. ருஷ்யாவில் நிகழ்ந்தது போன்ற ஒரு புரட்சியை ஜெர்மனியிலும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், SPD கட்சியின் அரசு திடமாகவே இருக்கிறது. என்றாலும் பல கலைஞர்கள் ஒரு புதிய ஆட்சியைக் காணும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறார்கள். ‘நவம்பர் குழு’ (November Group) என்னும் பெயரில் புதிதாகத் தோன்றிய ஓவியர் குழுவின் உறுப்பினர் பலர் உற்சாகத்துடன் 19 ஜனவரி 1919 இல் வரவிருக்கும் முதல் குடியரசு தேர்தலுக்கான விளம்பரச் சுவரொட்டிகளை வடிவமைக்கிறார்கள்.

1919: கலை மக்களை ஒரு புதிய ஆக்க ரீதியான தளத்துக்கு இட்டுச் செல்லும் என்றும், புதிய கட்சி (USPD) கலைஞனின் கற்பனைச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் என்றும் நம்பி, கலைஞர்கள் அரசியல் சார்ந்து இயங்குவதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். ருஷ்யாவில் போல்ஷ்விக் – அறிவு ஜீவிகளுக்கு இடையில் தோன்றிய புதிய உறவு ஜெர்மனியிலும் நிகழ விரும்புகிறார்கள்.

‘நவம்பர் குழு’வும் ‘கலை செயற்குழு'(Working Council for Art)வும் இணைந்து நாட்டின் எதிர்காலக் கலாசாரக் கொள்கையை அமைக்கும் அறிக்கைகளை வெளியிடுகின்றன. ‘அனைத்துக் கலைஞர்களுக்கும்’ (To All Artists) என்னும் ‘நவம்பர் குழு’ வின் அறைகூவல் உண்மையில் அரசின் விளம்பரத் துறையின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவே முறைப்படுத்தப்படுகிறது. ‘கலை செயற் குழு’வின் ‘கட்டிடக் கலைதான் மற்ற அனைத்துக் கலைகளுக்கும் அடி நாதம்’ என்னும் கொள்கையைப் பின்பற்றி ‘செயல்பாட்டுக் கலைக்கான வெய்மர் பள்ளி’ (Weimar School of Applied Arts) என்னும் கலைக் கல்லூரி அதன் புதிய மேலாளரால் (வால்டர் க்ரோபியே ‘Walter Gropies’) பஹாஸ் (Bauhaus) என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கைவினைக் கலைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டு அவை பயில் கல்வித் திட்டத்தில் இணைக்கப் படுகின்றன. கற்பிக்கும் ஆசிரியர்கள் பலரும் செயற்குழுவின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இதனிடையில், UPSD கட்சி ‘ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி’ (German Cummunist Party-KPD) என்று பெயர்மாற்றம் செய்து கொள்கிறது. வலது சாரி இடது சாரி கட்சிகளுக்கு இடையில் விரிசல் வலுக்கிறது. வேலை நிறுத்தங்களும் உட் பூசல்களும் வன்முறையில் முடிகின்றன. அரசு ஃப்ரெய் கோர் என்ற தனிப்படை கொண்டு கலவரத்தை அடக்குகிறது (ஃப்ரெய் கோர் ‘Frie Korps’ : முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியின் போர்ப் படையைச் சேர்ந்த முன்னாள் முதுநிலை அதிகாரிகள் தங்களுக்கென தனிப் படைகளை அமைத்துக் கொண்டு ருஷ்யாவின் செம்படை தமது நாட்டு எல்லையை நோக்கிப் படையெடுப்பதைத் தடுக்க உபயோகித்துக் கொண்டனர். பின்நாளில் அது ஜெர்மனியப் புரட்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது). பல புரட்சித் தலைவர்கள் நேரிடையாகவோ அரசு கற்பிக்கும் காரணங்களைக் காட்டியோ கொலை செய்யப்படுகின்றனர். வர்த்தக முதலாளிகளும், காவல்துறையும் அரசின் ஒப்புதலுடன் அச்சமின்றி விருப்பம் போல் தவறுகள் செய்கிறார்கள். இவ்வித குழப்பங்களால் ‘ஜெர்மன் தாதா குழு’ (German Dada Group) தனது எதிர்வினைகளைக் கடுமையாக்குகிறது. அவை விளம்பர ஓவியங்களாகவும், அரங்குகளில் நடிக்கப்பட்டும் மக்களிடையே எடுத்துச் செல்லப்படுகின்றன.

1920: பிப்ரவரி மாதம் ‘நாஸி’ கட்சி பிறக்கிறது. நாட்டில் நிகழும் இந்தத் தில்லுமுல்லுகளை விரும்பாத பல கலைஞர்கள் தங்களை அதன் நடவடிக்கைகளிலிருந்து விலக்கிக் கொள்கிறார்கள். தொடர்ந்து செயற்படும் ஓவியர்கள் அதிகரிக்கும் அரசின் கட்டுதிட்டங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஜூன் மாதம் ஜெர்மன் தாதா குழுவின் ஓவியக் காட்சியில் ஒரு ஓவியத்தில் பன்றித் தலையுடன் மனித உருவம் போர்வீரனின் உடையில் இருந்ததால் காவலரால் அது தாக்குதலுக்கு உள்ளாகிறது.

1921: SPD KPD கட்சிகளுக்கிடையில் பகைமை தொடர்ந்தாலும் ஜெர்மனி ருஷ்யாவுடன் சுமூகமான நட்புறவுடன் பழகுகிறது. ‘கலைச் செயற் குழு’ கலைக்கப்படுகிறது. ‘நவம்பர் குழு’ “ப்ரஷ்யன் கலாச்சார அமைச்சகம்” (Prussion Ministry of Culture) தனது ஓவியக் காட்சிக்கான படைப்புகளை தணிக்கை செய்ய ஒப்புக் கொண்டதால் பல ஓவியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவிலிருந்து விலகுகிறார்கள். என்றாலும், 1930கள் வரை ‘நவம்பர் குழு’ ஓவியக் காட்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாக உயிர்வாழ்கிறது. தனது அனைத்து அரசியல் சாயல்களையும் களைகிறது. அக்டோபரில் USPD கட்சியைத் தன்னுடன் KPD இணைத்துக் கொள்கிறது. நாட்டில் தோன்றிய பணவீக்கத்தின் காரணமாகப் பொருளாதாரம் சிதையத் தொடங்குகிறது.

1922: IAH என்னும் (International Worker’s Aid) பன்னாட்டு தொழிலாளர் உதவி அமைப்பு ருஷ்ய ஓவியர்களின் ஓவியக் காட்சி ஒன்றை பெர்லின் நகரில் காட்சிப்படுத்தப் பொருளுதவி செய்கிறது. ஜெர்மனியில் “ஆர்ட் ஷீட்” (The Art Sheet) என்னும் கலை இதழ் ‘கட்புலக் கலைகள்’ (Visual Arts) பற்றின தனது நிலைப்பாட்டை யதார்த்தம் நோக்கி நகர்த்துகிறது. அவ்விதமே, ‘பஹஸ்’ கல்லூரி நடைமுறைக்கு ஒத்துவராத நிலையிலிருந்து விலகி மக்களுக்குப் பயன்படும் கலையைப் பேணத் தொடங்குகிறது. ருஷ்யாவின் அறிவு ஜீவிகளிடம் அதிகரித்த போலித்தனத்தால் தனித்துப் போன ஓவியர் கன்டின்ஸ்கி (Kandinsky) ஜெர்மன் நாட்டுக்கு வந்து ‘பஹாமாஸ்’ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்குகிறார்.

1923: முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியும் பிரான்ஸும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நட்ட ஈட்டுத் தொகையைக் கொடுப்பதில் ஜெர்மனி சுணக்கம் காட்டியதால், பிரான்ஸ் ரூர் பள்ளத்தாக்குப் (Ruhr Valley) பகுதியைத் தன் வசம் கொண்டுவந்து விடுகிறது. பொது எதிரிக்கு முன் வலது, இடது சாரிக் கட்சிகள் இணைந்து செயற்படுகின்றன.

‘பஹஸ்’ பள்ளி மரபு சார்ந்த கலைக் கல்வி முறையிலிருந்து விலகி, நவீன உத்திகளை உட்புகுத்துகிறது. ஆனால் பள்ளி வெகு குறுகிய காலமே இயங்குகிறது. அரசுத்துறை அதற்குக் கொடுத்துவந்த மான்யங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி விடுகிறது.
KPD கட்சிக்காக அதன் ‘குண்டாந்தடி’ (The Truncheon) என்னும் அங்கத இதழுக்கு ஹார்ட் ஃபீல்டு (Heartfield) என்பவர் பொறுப்பேற்கிறார். ஓவியர்கள் க்ரோஸ் (Groz), ஸ்லிட்ச்டெர் (Schlichter) இருவரும் அதில் கேலி, அங்கதக் கோட்டு சித்திரங்கள் (Illustrations) வரைகிறார்கள்.

1924: ருஷ்யாவில் லெனின் மரணமடைகிறார். அங்கு அப்போது கருத்து சுதந்திரத்துக்கான எல்லைகள் சுருங்கத் தொடங்கிவிட்டன. ஜெர்மனியில் SPD கட்சியை ஃபாஸிஸ்டுகள் (Fascists) என்று KPD கட்சி வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறது.

அந்த ஆண்டு நவம்பரில் பன்னாட்டு தொழிலாளர் உதவி அமைப்பு “IAH” (International Worker’s Aid) ‘உழைப்பாளிகளின் தினசரி’ (Worker’s Illustrated News Paper -AIZ) என்னும் செய்தித்தாளை வெளியிடத் தொடங்குகிறது. அதில் ஹார்ட் ஃபீல்டு (Heartfield) வின் பல ஓவியங்கள் முகப்பு அட்டையில் இடம் பெறுகின்றன. “IAH” ஜெர்மனி ஓவியர்களின் படைப்புகளை ருஷ்யாவில் மாஸ்கோ, லெனின்கிராடு நகரங்களில் காட்சிப்படுத்தும் பொறுப்பை (Sponsors) ஏற்கிறது. ருஷ்ய கலைத் திறனாய்வாளர்கள், “விலைமாதிற்குத் தேவையற்ற அழுத்தங்கொடுத்து, முதலாளித்துவக் கொள்கைகளின் தீமைகளை ஓவியமாக்கியதற்கு பதிலாக, பாட்டாளி மக்களை கருப்பொருளாக்கி அவர்கள் படைப்புகள் அமைந்திருந்தால் அது உற்சாகம் தருவதாக இருந்திருக்கும்” என்று அக்காட்சிப் படைப்புகளைப் பற்றி கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.

1925: அனைத்து அரசு நிதி உதவியும் நிறுத்தப்பட்டு வெய்மர் பௌஹாஸ் (Weimar Bauhaus) கல்லூரியை மூடும் கட்டாயம் ஏற்படுகிறது. பின்னர் அதே ஆண்டில் அது டெஸ்ஸோ (Dessau) நகரில் தொடங்கப்படுகிறது. ஓவியர் கஸ்டாவ் ஹார்ட் லௌப் (Gustav F. Hartlaub) இன் ‘தத்ரூபத்தை நோக்கி’ (New Objectivity) என்னும் காட்சி மான்ஹெய்ம் (Mannheim) நகரில் திறக்கப்படுகிறது. பின்னர் அது ஜெர்மனியின் பல நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதில் 32 ஓவியர்களின் படைப்புகள் இடம் பெறுகின்றன. ஆனால், காட்சியில் ‘மாய யதார்த்தம், புதிய கிளாஸிசம் (Magic Realism, Neo classicism) போன்ற உத்திகள் கொண்ட படைப்புகளும் இடம் பெற்றது கொடுக்கப்பட்டிருந்த காட்சியின் தலைப்புக்கு முரணாகப் பார்க்கப்படுகிறது. ‘தத்ரூபத்தை நோக்கி’ (New Objectivity) என்னும் பாணியின் தாக்கம் நாடகக் கலையிலும் நிகழ்ந்தது. முன்னர் புழக்கத்தில் இருந்த உணர்வு சார்ந்த கருப்பொருளை அகற்றி, பெர்டோல்ட் ப்ரெச்ட் (Bertolt Brecht) யின் நாடகங்கள் ஒரு புதிய சமூகப் பார்வையை ஏற்படுத்துகின்றன.

1926: ‘செங்குழு’. தனது கடைசி அறிக்கையை வெளியிடுகிறது. ஓவியர் க்ரோட்ஸ் (Grosz) திரும்பவும் இடைநிலை மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்களைப் படைக்கிறார். அவை பெர்லின் நகரில் ஃளெச்தெய்ம் (Flechtheim) கூடத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

1927: ‘குண்டாந்தடி’ வெளிவருவது நின்றுபோகிறது.

1928: க்ரோபியஸ்(Gropius) பஹஸ் பள்ளியின் தலைமைப் பொறுப்பினின்று விலகுகிறார். ஹான்மெஸ் மெயர் (Hanmes meyer) அதன் பொறுப்பை ஏற்கிறார். “ஷெவெய்ச் நல்ல போர்வீரன்“ (The good soldier Sehweik) என்னும் நாடகத்துக்கு படைத்த பின்திரை ஓவியம் தெய்வ நிந்தனை செய்வதாக ஓவியர்கள் Grosz, Herzfelde இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. KPD கட்சி ஒரு புதிய ஓவியக் குழுவை தொடங்குகிறது. (The German Revolutionary Artist’s Association- ARBKD) ஓவியர்கள் எவான் டிக்ஸ் (Evan Dix), க்ரோட்ஸ் (Grosz) இருவரும் முற்றிலுமாகத் தங்களை அரசியலிலிருந்து விலக்கிக் கொள்கிறார்கள்.

1929: நாஸி கட்சி கலைகளைத் தூய்மைப்படுத்துவதற்காக “மிலிடென்ட் லீக் ஃபார் ஜெர்மன் கல்சர்“ (Militant League for German Culture) என்னும் அமைப்பைத் தொடங்குகிறது.

1930: நாஸி கட்சியின் உறுப்பினர் வில்ஹெர்ம் ஃப்ரிக் (Wilhelm Frick) துரிங்கியா(Thuringia)வின் கல்வி அமைச்சராக நியமிக்கப்படுகிறார். ஏப்ரல் மாதத்தில் கருப்பர் கலாசாரத்துக்கு எதிரான அரசு ஆணையை வெளியிடுகிறார். கட்டிடக் கலைஞரும் கலை இலக்கண அறிஞருமான பால் ஷுல்ய்ஸ்- நௌம்புர் (Art Theoreticion) Paul Schultze-Naumbure, வெய்மர் (Weimar) நகர அருங்காட்சியங்களிலிருந்து பல ஓவியங்களை “தரங்குறைந்த கலைப் படைப்புகள்” என்று நீக்கி விடுகிறார். பஹஸ் பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருந்து Hanmes meyer விலக்கப்படுகிறார். ஓவியர் Fritz Hampl, Worker’s Illustrated News Paper (விளக்கப் படங்களுடன் கூடிய தொழிலாளர் செய்தித் தாள்)-AIZயின் போர்ப் படை அமைப்பை (National Army) விமர்சனம் செய்ததற்காக மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறார்.

செப்டம்பர் பாராளுமன்றத் தேர்தலில் நாஸி கட்சி 95 இடங்களைக் கைப்பற்றி SPD கட்சிக்கு அடுத்த வலிமையான கட்சியாகிறது. கிருஸ்த்மஸ் தினத்தன்று ஜெர்மனியில் ‘அவசரநிலை’ நடைமுறைக்கு வருகிறது.

1931: ஓவியர் ஹார்ட்ஃபீல்ட் (Heartfield), இயக்குனர் பிஸ்கேடர் (Piscator) இருவரும் ருஷ்யாவுக்கு பயணம் என்னும் போர்வையில் செல்கிறார்கள்(visit). பல வங்கிகள் செயலிழந்து போகின்றன. டெசு (Dessau) நகர கவுன்ஸில் நவம்பரில் நாஸி வசம் வருகிறது.

1932: அதிபர் தேர்தலில் ஹிட்லர், பால் வான் ஹின்டன்பர்க்கிடம் (Paul von Hindenburg) குறுகிய ஓட்டுகளில் பின்னைடைகிறார். ஆனால், நாஸி கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெருமளவில் வெற்றி பெறுகிறது. டெசு (Dessau) நகர கவுன்ஸில் ‘பஹஸ்’ பள்ளியை அரசாணை மூலம் என்றைக்குமாக மூடிவிடுகிறது. Grosz நியூயார்க் நகரம் சென்று பயில்விக்கத் தொடங்குகிறார்.

1933: ஹிட்லர் சான்ஸ்லர் பதவியில் நியமனம் செய்யப்படுகிறார். SS,SA என்னும் இரு அமைப்புகளும் (Storm Troops) அதிகாரபூர்வமாக ‘உதவிக் காவலர்’ (Auxiliary Police) அமைப்பாக செயல்படத் தொடங்குகின்றன. பிப்ரவரியில் ரெயிஷ்ஸ்டாக் (Reichstag) நகரில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்தால் ஹிட்லர் சர்வாதிகாரியாகச் செயற்படத் தொடங்குகிறார். KPD கட்சி தடை செய்யப் படுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து பல ஓவியங்கள் ‘தரக்குறைவான படைப்புகள்’ என்னும் பெயரில் அகற்றப்பட்டு, நாஸி கட்சியால் மக்களுக்கு காட்சிப்படுத்தப் படுகின்றன. பின்னர் அவற்றை அரசு அழித்தும் விடுகிறது. நாட்டில் கலைச் சிந்தனையை அரசே வழிநடத்தத் தொடங்குகிறது. நாட்டில் யூதர்களின் வர்த்தக அமைப்புகள் புறந்தள்ளப் படுகின்றன. கெஸ்டாப்ஸ் (Gestaps) என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உளவு காவல் துறை நிறுவப்படுகிறது.

டெஸு (Dessau) நகரில் மார்ச் மாதத்தில் ‘கான்சென்ட்ரேஷன் கேம்ப்’ (Concentration camp) என்னும் சிறைக் கூடம் அமைக்கப்படுகிறது.

எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) (1905 – 1940s)
கித்தான் வாகனத்தில் கலைஞனின் சவாரி

வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகுமுறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப்பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களாகம் (Imagery) மேலோங்கி இருந்தன. ஓவியர்கள் தங்களைப் பாதித்த காட்சியை தமது உணர்வுகளுக்கும், அப்போதைய மன நிலைக்கும் ஏற்றவாறு புதிய உருக்கொடுத்து ஓவியங்களாக்கினர். என்றாலும் குறிப்பாக, ஜெர்மன் நாட்டில் இந்தப்பாணி ஓவியர்கள் மனித மனத்தின் இருண்ட பகுதியை, அவனது தீய இயல்பு கொண்ட செயற்பாடுகளை, தமது படைப்புகளில் ஏற்றி, ஓவியக் கலையை ஒரு புதிய தளத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.

1905-1940 களின் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியை மையமாகக் கொண்டு இயங்கிய இப்பாணியில் குறிப்பாக நான்கு குழுக்கள் தீவிரமாகச் செயற்பட்டன. ஒன்றை ஒன்று பாதித்தாலும், அவற்றின் தனித்தன்மை என்பது தெளிவாகவே காணப்பட்டது.

அவை:

01) தி ப்ரூக் DIE BRUCKE (THE BRIDGE) (1905-1913) கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் இணைக்கும் பாலம்
02) டெர் ப்ளௌ ரெய்டர் DER BLAUE REITER (THE BLUE RIDER) 1911-1914 நீலச்சாரதி
03) ப்ஹௌஹாஸ் BAUHAUS (1919-1933)
04) இயல்பு வாழ்க்கையில் கட்டிடமும் வண்ணமும்
தி நாய் சாக்ஸ்லிச்கெயிட் DIE NEUE SAXHLICHKEIT (THE NEW OBJECTIVITY) 1923 முதலாம் உலகப் போரும், சமூக அரசியல் விமர்சனமும்

அவற்றை வரும் வாரங்களில் காண்போம்.

[DDET படங்களைக் காண இங்கே அழுத்தவும்]
02-george-grosz03-ggrosz04-rudolf-s05-rudolf-schtlichter-free-and-easy06-rudolfs07-john-heartfield240px-republican_automatons_george_grosz_1920hannahhannah-flight1931ottodixskatplayers1
[\DDET]

(வளரும்)