ஹெர்டா முல்லர் – புலம்பெயர்தலின் இலக்கியம்

ஹெர்டா முல்லருக்கு 2009-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நொபல் பரிசு வழங்கப்பட்டது முற்றிலும் ‘அசாதாரணமான’ ஒரு நிகழ்வு தான். கடந்த நூறு ஆண்டுகளில் நொபல் பரிசு பெறும் 12-ஆவது பெண் அவர் என்பது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல்  சர்வாதிகார அரசுக்கு எதிராக இயங்கிய எழுத்தாளர்களில் சோல்ஷெனீட்ஸனுக்கு (Solzhenitsyn) அடுத்து இந்த விருதை பெறும் எழுத்தாளர் அவர்.  முல்லர் ரோமனீயாவின் கம்யூனிச சர்வாதிகாரி நிகொலாய் சௌஷெஸ்குவின் (Nicolae Ceausescu) ஆட்சியில் தனிப்பட்ட முறையில் மிகுந்த துன்பங்களை அனுபவித்து, தொடர்ச்சியான அவமானத்துக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் தன் உயிருக்குப் பயந்து தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறினார். அவரது எழுத்துக்களில் இந்த அலைக்கழிப்பை, அதன் வலியை தொடர்ந்து பதிவு செய்துள்ளார். அவரது எழுத்து புலம்பெயர்வை, அதில் உறைந்திருக்கும் துன்பமிகு தருணங்களை மிக நேர்மையாக பதிவு செய்கிறது.

முல்லரின் படைப்புகள் ஜெர்மன் பேசும் மக்களைத் தாண்டி பலரும் அறியப்படாத ஒன்று. ஆனால் ஜெர்மனி, ஸ்விட்ஸர்லன்ட் மற்றும் ஔஸ்ட்ரியா (Austria- ஜெர்மன் உச்சரிப்பு)  ஆகிய நாடுகளில் முல்லரின் எழுத்துக்கள் கொண்டாடப்படுகின்றனர். அவரது எழுத்துக்களை, “அரசியல் பயங்கரவாதத்தின் வரலாற்றைத் தீவிரமாகப் பதிவுசெய்யும் படைப்புகள்,” என்று வகைப்படுத்துகின்றனர். மேலும், “முல்லரிடம் இருக்கும் கலை என்பது சர்வாதிகாரத்தின் விவரிக்க முடியாத ஒவ்வொரு நாளைய பயத்தையும், வதையையும், கொலைகளையும் வார்த்தைகளில் நிரப்புவது தான். நம் வாழும் பேரழிவு சூழ்ந்த காலகட்டத்தின் இலக்கிய ரீதியான சாட்சிதான் அவரது எழுத்து,” என்றும் சொல்லப்படுகிறது.

ஜெர்மனிய சமூகத்திடமிருந்து அந்நியமான நாம் முல்லரின் இந்த எழுத்துக்களை அவர் வாழ்ந்த நிலப்புலனை வைத்தும், அதில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகளின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முல்லர் பிறந்த ரோமனீயாவின் பனத்(Banat) பகுதி வரலாறு முழுக்க யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதி. ஔஸ்ட்ரியாவிற்கும் துருக்கிக்கும் இடையே 16-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 18-ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை நடந்த கோரமான போர் பனத் பகுதியை பெரிதும் பாதித்தது. இப்போரில் பனத் பகுதியின் பூர்வகுடிகள் பெருமளவில் கொல்லப்பட்டனர். சிலர் அந்த இடத்தை விட்டுப் புலம்பெயர்ந்தனர். யுத்தத்தின் முடிவில் ஔஸ்ட்ரியா வெற்றி பெற்றது. பனத் நகரை மீண்டும் புனரமைக்கத் திட்டமிட்ட ஔஸ்ட்ரிய ராணியால் ஜெர்மனி, லக்ஸம்பர்க் போன்ற நாடுகளிலிருந்த மக்கள் பனத் பகுதிக்குக் குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இந்த இடத்தில் குடியேறுவதன் மூலம் பல்வேறு வரிச் சலுகைகளை அவர்களால் பெற முடிந்தது. இதனால் பனத் பகுதிக்கு குடியேறிவர்களில் ஜெர்மனியை சேர்ந்த ஷ்வாபென் (Schwaben) என்ற குழுவும் அடக்கம். இவர்களும் பனத் பகுதியை புனரமைத்தனர். பல்வேறு கட்டுமான வசதிகளையும், புதிய கிராமங்களையும் நகர்ப் புறங்களையும் நிர்மாணித்ததில் இந்தக் குழுவினரின் பங்கு முக்கியமானது. குறிப்பாக நிட்ஸ்கிடார்ஃப் (Nitzkydorf) எனும் கிராமம் குறிப்பிடத்தக்கது. ஹெர்டா முல்லர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.

முதலாம் உலகப் போரின் முடிவில் பனத் பகுதி ரோமனீயாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியானது. ஷவாபென் மக்கள் ரோமனீயாவின் குடிமக்களாயினர். இரண்டாம் உலகப்போரில் ரோமனீயா ஹிட்லருடன் கைக்கோர்த்தது. 1941-ல் ஹிட்லர் சோவியத் ரஷ்யா மீது படையெடுத்தார். இதில் ரோமனீய ஜெர்மானியர்களும் பங்குபெற்றனர். முல்லரின் தந்தையும் இந்தப் படை வீரர்களில் ஒருவர். ஸ்டாலினின் பழிவாங்கும் படலத்தில் ரோமனீயாவின் பல ஜெர்மானியர்கள் கொடுமையை அனுபவித்தனர். சிலர் ரோமனீயாவின் ஆள் அரவமில்லாத தூரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். சிலர் சோவியத் ரஷ்யாவின் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வகையில் முல்லரின் தாய் ரஷ்யாவிற்கு கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

1953-ஆம் ஆண்டு ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு முல்லரின் தாய் ரோமனீயாவிற்குத் திரும்பினார் . அந்த வருடம் முல்லர் பிறந்தார். ஆனால் சோவியத்தின் வதை முகாமுக்கு சற்று குறைந்ததல்ல சௌஷெஸ்குவின் ஆட்சி. ரோமனீயாவின் மக்கள் அனைவரும் ரகசிய காவல்துறையால் கண்காணிக்கப்பட்டனர். மக்களின் அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இது குறித்து முல்லர் இப்படி எழுதுகிறார் :

“என் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கென்று ஒரு தீவில் வாழ்வதைப் போன்ற தனித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். ஸ்டாலினியம் மிக வலுவாக இருந்த 1950-களில், முற்றிலும் தனித்து விடப்பட்ட எங்கள் கிராமத்திற்கும் நகரத்துக்கும் இடையேயான எந்த சாலையோ தொடர்போ இருக்கவில்லை. ஆனால் வெளியுலகத்திலிருந்து அரசியல் எங்கள் கிராமத்திற்குள் எப்போதும் இறங்கிக் கொண்டுதான் இருந்தது. எங்கள் கிராமத்தை அரசியல் இயக்கத்தை சார்ந்த மூன்று அல்லது நான்கு பேர் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் நகரத்திலிருந்து வந்திருந்தனர். அவர்கள் புதிதாகப் படித்துப் பட்டம் பெற்றவர்கள். ஒரு கிராமத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் தேர்ச்சி அடைய வேண்டி அவர்கள் இந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். மக்களை மிரட்டுவது, அவர்கள் விசாரிப்பது மற்றும் மக்களை கைது செய்வது போன்ற விஷயங்களில் ஒருவரை இன்னொருவர் மிஞ்சினர். எங்கள் கிராமத்தில் 405 வீடுகள். மொத்தம் 1500 மனிதர்கள். அனைவரும் பயத்தின் பிடியிலேயே வாழ்ந்தனர். தங்களுக்கு நேரும் இந்தக் கொடுமை குறித்து யாரும் பேசத் துணியவில்லை. பயம் என்றால் என்ன என்று கூடப் புரியாத சிறு குழந்தையாக நான் இருந்தேன். இருந்தும் பயத்தின் அவல ருசியை, அதன் கோரப் பிடியை நான் அந்த வயதிலேயே உணர்ந்து விட்டிருந்தேன். என் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே கதி தான்.”

1968-ல் ரஷ்ய ராணுவ வாகனங்கள் செச்னீயாவை கபளீகரம் செய்ய முற்பட்ட போது முல்லருக்கு வயது 15. ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட செச்னீயர்கள் ஒடுக்கப்படுவதை கண்ட முல்லர் தான் இனியும் செயலற்றிருப்பதை விரும்பாமல் ரோமனீயாவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு ரகசியக் குழுவில் இணைந்தார். ஆனால் அந்தக் குழுவிலும் ரோமனீயாவின் ரகசிய காவல்துறை ஊடுருவியிருந்தது. இதனால் முல்லர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து குற்ற விசாரணைக்கும், அரசாங்கத்தின் தொடர் கண்காணிப்புக்கும் ஆளானார்.

இருந்தும் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற முல்லர் ஒரு தொழிற்சாலையில் மொழிபெயர்ப்பாளராக பணியில் சேர்கிறார். இதனிடையில் ரோமனீயாவின் ரகசிய காவல்துறையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்ற முல்லருக்கு அழைப்பு வருகிறது. இதை அவர் ஏற்க மறுக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் முல்லரின் வார்த்தைகளில் :

”ஒரு நாள் நான் முடிதிருத்தகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். திடீரென யாரோ ஒருவர் என் கையை பிடித்து இழுத்தார். நான் ஒரு அடுக்ககத்தின் கீழ் தளத்திற்கு இழுத்து செல்லப்பட்டேன். என்னை இழுத்துச் சென்றவர் ஒரு காவலாளர். சீருடையில் இல்லாமல் சாதாரண ஆடையை அணிந்திருந்தார். அங்கே மேலும் மூன்று பேர் இருந்தனர். அந்த அதிகாரி என்னை மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். அழகு சாதனப் பொருட்களுக்காக அரபு மாணவர்களுடன் சல்லாபிக்கும் வேசி என்று என்னைச் சொன்னார்(குறிப்பு : கம்யூனிச ஆட்சியில் பொது மக்கள் அழகு சாதன பொருட்கள் உபயோகிக்க தடை இருந்தது). எனக்கு எந்த அரபு மாணவனையும் தெரியாது என்று சொன்னேன். நாங்கள் நினைத்தால் உனக்கெதிராக இருபது அரபு மாணவர்களைச் சாட்சி சொல்ல அழைத்து வரமுடியும் என்று சொன்னார் அந்த காவலாளி. பிறகு அந்தக் காவலாளி என்னை வெளியே அனுப்பக் கதவை திறந்தார். என் அடையாள அட்டையைக் கீழே எறிந்தார். நான் அதை எடுக்கக் குனிந்தபோது என் பின்புறத்தில் பலமாக உதைத்தார். நான் தடுமாறி புற்கள் மண்டிய பகுதியில் கீழே விழுந்தேன். பிறகு என் தலையை உயர்த்தாமல், ஒரு நாயைப் போல நான் வாந்தி எடுத்தேன்.”

இதைத் தொடர்ந்து முல்லர் குறித்து அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் அவரைக் குறித்து அவதூறுகள் பரப்பப்படுகின்றன. முல்லர் இது குறித்து மேலும் சொல்கிறார் : “சர்வாதிகாரம் இப்படித்தான் ஒருவரைக் குறித்த சாத்தியமில்லாத விஷயங்களைப் புனைகிறது. உங்களுக்குக் கொலை மிரட்டல்கள் இருக்கும். ஆனால் அவற்றுடன் நீங்கள் வாழ்ந்துவிட முடியும். ஏனெனில் உங்கள் வாழ்க்கையே ஏதோ ஒரு வகையில் சாவு குறித்த அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்களைக் குறித்தத் தவறான தகவல்களும் வார்த்தைகளும் உங்கள் ஆன்மாவை முற்றிலும் கிழித்துவிடுகின்றன. நீங்கள் ஒரு பயங்கரத்தில் சிக்கிவிடுகிறீர்கள்.”

சௌஷெஸ்குவின் ஆட்சியில் தொடர்ச்சியாகத் துன்பத்தை அனுபவித்த முல்லருக்கு அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதிருஷ்டவசமாக ரோமனீயாவில் சிக்கிய ஜெர்மானியர்களை ஜெர்மானிய அரசாங்கம் மீட்க முனைந்தது. ஏற்கனவே கடும் பொருளாதாரச் சிக்கலில் அவதிப்பட்டிருந்த ரோமனீயா, கிடைத்த எந்த அன்னியச் செலாவணியையும் வரவேற்கத் தயாராகவிருந்தது.  ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு விலையை நிர்ணயித்த ரோமனீய அரசு அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொருவரையும் விடுவித்தது.முல்லரும் இதை பயன்படுத்திக் கொண்டு ரோமனீயாவை விட்டு வெளியேற முயற்சித்தார். 1985-ல் மேற்கு ஜெர்மனிக்கு குடிபெயற வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் 1987-ல் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் முல்லரும் அவரது கணவரும் 12,000 டச்சு  பணத்திற்கு (Guilder- கில்டர்) ரோமனீயாவை விட்டு வெளியேறினார். ஒருவகையில், இதை “நவீன அடிமை விற்பனை முறை” என்று தான் கருதவேண்டும்.

அனைத்து விதத்திலும் சமூகத்தின் சுதந்திரச் செயல்பாட்டை கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு சர்வாதிகாரத்தை, அதன் கருத்தியலை முழுமையாக எதிர்த்த அறவுணர்வு மிக்க நடவடிக்கைகளுக்காக முல்லர் இந்தப் பெரு விலையைத் தரவேண்டியிருந்தது. தன் சொந்த மண்ணை விட்டு விலகும் போது தனக்கென்று அனுமதிக்கப்பட்ட 80 கிலோ மூட்டை முடிச்சுகளுடன் ரகசியமாகத் தன்னுடைய வலிமிகுந்த நினைவுகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றார் என்றே சொல்லவேண்டும். இத்தகைய பின்னணியில் இருந்து எழும் அவரது படைப்புகளில் மீள மீளத் தோன்றும் சர்வாதிகார எதிர்ப்புக் கருத்துக்களும், வதை குறித்த விவரிப்புகளும் வாசகருக்கு வெறும் புனைவாகத் தோன்ற வாய்ப்பில்லை.

சர்வாதிகார அரசை எதிர்க்கும் தன்னுடைய படைப்பில் கையாளப்படும் மொழியை எவ்விதத்திலும் அந்த அரசால் மாசுபடுத்தப்பட்ட மொழியை கொண்டிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முல்லர், தன் படைப்பில் தான் கையாளும் மொழியை “கலப்பில்லா அப்பாவித்தனத்தின் மொழி” என்றே அழைக்கிறார். கம்யூனிஸ்ட் அரசியல் அமைப்பு ரோமனீய மொழியைத் தனக்கு வசதியான வார்த்தைக் களஞ்சியத்தைக் கொண்டு நிரப்பிவிட்டதாகக் கருதும் முல்லர், ”அதனால் எங்கள் (ரோமனீய) வார்த்தைக் களஞ்சியத்தில் இருக்கும் கருத்தியலால் கறைப்படுத்தப்பட்ட அல்லது மாசுபடுத்தப்பட்ட வார்த்தைகளையும் கருதுகோள்களையும் உபயோகிப்பதைத் தவிர்ப்பதில் நான் மிக கவனமாக இருக்கிறேன். எங்கள் நிதர்சனத்தைப் பதிவு செய்ய (எந்தவிதக் கலப்புமற்ற) அப்பாவியான மொழியைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருக்கிறேன்,” என்கிறார்.

ஆனால் முல்லரின் இந்த மொழியே அவரது படைப்புகளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றன. முல்லரின் மொழி “தேக்க”மடைந்து விட்டதாகவும், அவரது படைப்புகள் ”கடந்த காலத்திலேயே உறை”ந்துவிட்டதாகவும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இதற்கான பதிலை நாம் முல்லரின் வார்த்தைகளிலிருந்து பெற முடியும். தான் அனுபவித்த சௌஷெஸ்குவின் ஆட்சியும், சௌஷெஸ்குவுமே மறைந்து வெகுகாலம் கடந்த பிறகும் அவர் ரோமனீயாவிற்குச் செல்ல அஞ்சுவதாகச் சொல்கிறார். தான் இன்னும் ரகசியக் காவல்துறையினரால் கண்காணிக்கப் படுவதாக சொல்கிறார்[1]. அவரது கொடும் நினைவுகள் அவரை விட்டு நீங்க எந்தவித வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

மேலும், தொடர்ந்து ரோமனீயாவை மட்டுமே விமர்சிக்கும் முல்லர் மேற்கத்திய நாடுகளில் நிலவும் அநீதிகளையும் எழுத வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கின்றன. இந்தக் குரல்கள் ரோமனீயாவின் ரகசியக் காவல்துறையின் குரல்களாகவும் இருக்கலாம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால், தொடர்ச்சியான விமர்சனங்கள் தன் மீது வைக்கப்பட்ட போதும் முல்லர் தன் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. தனக்கான மொழியை அவர் தொடர்ந்து கையாள்கிறார். ரோமனீயா குறித்து மட்டுமல்லாமல், சீனா போன்ற நாடுகளில் மறுக்கப்படும் மனித உரிமை குறித்தும், அங்கு கருத்து சுதந்திரம் மலர வேண்டியும், உய்குர் இன மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை அங்கீகரித்தும் பேசி வருகிறார்.

முல்லர் குறித்து எண்ணுகையில் ஒரு யோசனையை என்னால் தவிர்க்க முடியவில்லை. ரோமனீயா என்ற தேசத்தின் சிறு நிலபரப்பில் நடந்த புலம்பெயர்தல் குறித்து படைப்புகள் எழுதி அதன் மூலம் தன் மக்களுக்கும், மொழிக்கும் உலகளவில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுத் தர ஒரு முல்லர் இருக்கிறார். காலனியாதிக்கம் நம் மண்ணை தீண்டிய நாள்முதல் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரும் தமிழர்களைப் பற்றியும் அவர்களின் இன்னல்கள் பற்றியும் நேர்மையாகப் பதிவு செய்த படைப்புகள் நம்மிடம் எத்தனை உள்ளன என்ற கேள்வி எழுகிறது. அப்படி இருப்பவற்றை நாம்தாம் உலகிற்கு எடுத்துச் செல்லத் தவறி விட்டோமா, அல்லது உலகில் இந்த வகை அங்கீகரிப்புகள் மேற்கின் அகதிகளுக்கு மட்டுமே கிட்டுகின்றன, இதர நிலப்பரப்பின் அகதிகளுக்கு அத்தனை கவனிப்பு கிட்டுவதில்லை என்று புரிந்து கொள்ள வேண்டுமா?

எப்படியும் ”அகதிகளின் இலக்கியம்”(Literature of Dispossession) குறித்து நாம் இன்னும் சிந்திக்க வில்லையோ என்று தோன்றுகிறது. முல்லரிடமிருந்து கற்க நமக்கு ஒரு பாடம் நிச்சயம் உள்ளது.

(முற்றும்)

[1] http://www.signandsight.com/features/1910.html

One Reply to “ஹெர்டா முல்லர் – புலம்பெயர்தலின் இலக்கியம்”

Comments are closed.