மேகமூட்டம்

உடற்பயிற்சி இயந்திரத்தின் பெடல்களை நீள்வட்டத்தில் சுழற்றத் தொடங்கினாள் மஞ்சுளா. ஆஸ்பெர்கர் மையத்திலிருந்து ஜிம்மிற்கு பத்து நிமிடங்கள். அஷ்வினுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் என்ற கவலையை தவிர்த்து வேகமாக நடந்ததில் உடலில் பரவிய வெம்மை. மூன்று நிமிடங்களில் இயந்திரத்தின் ஏழாவது மட்டத்துக்கு போய்விட்டாள். சாதாரண நாட்களில் அதற்கு ஆறு நிமிடம் எடுக்கும். நூறு, 110, 120, 125 என்று ஏறிய இதயத்துடிப்பு மனதை நிதானப்படுத்தியது.

காலை பத்து மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் மந்தநிலை, அங்குமிங்கும் நாலைந்து பேர்கள். வேலையை தொடங்குமுன் உடலை பண்படுத்துகிறவர்கள் வந்து போய்விட்டார்கள். பதினொன்றுக்கு அப்புறம்தான் மதிய கும்பல். முன்னாலிருந்த காகித அகல மானிடரில் ஏதோ வம்பு. அதை அணைத்துவிட்டு தலையை தூக்கி மூன்று ஆள் உயர ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். வானத்தில் மேகத்திரள் அகன்று சிற்சில இடங்களில் நீலம். ஆனால், உக்கிரம் தணியவில்லை. வேர்த்துக் கொட்டத் தொடங்கியது. மணிக்கட்டை சுற்றிய துண்டால் நேற்றியையும், கழுத்தையும் அழுத்தித் துடைத்தாள்.

பார்வையை கீழே இறக்கியபோது கால்பந்தாட்ட களத்தின் நடுவே ஒரு அபூர்வ காட்சி. வாழையிலைப் பச்சையில் ஒரு பிருமாண்டமான அமைப்பு. நான்கு பருத்து சாய்ந்த தூண்கள், வரிசையாக சிவப்பு ஜன்னல் கதவுகள். திறந்திருந்த ஒரு வட்டக்கதவு வழியாகத் தெரிந்த நுணுக்கமான இயந்திரத்தின் பகுதிகள். விண்வெளிக்கலம் ஒன்று வழிதப்பி பூமியில் இறங்கி…

“அதை பார்த்தாயா? மஞ்ச்!”

தலையை உட்புறமாக திருப்பினாள். உடற்பயிற்சிக் கூடத்தை மேற்பார்வையிடும் ப்ராட். அந்த வேலை தவிர அவனுக்கு மக்கள் நலத்திலும் ஒரு பதவி. இன்னொரு பொறுப்பாளர் க்ளென்டா போல் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியின் திரைக்குள் அவன் முகத்தை புதைப்பதில்லை. கூடம் முழுக்க சுற்றி நடப்பான். வாடிக்கையாக வருகிறவர்களின் பெயர்களை ஞாபகம்வைத்து பேச்சுக்கொடுப்பான்.

“ஹாய் ப்ராட்! வெளியுலக மனிதர்கள்தான் வந்து இறங்கினார்களோ என நினைத்தேன்.”

“எச்-2-ஓ-2 தெரியுமா?”

“ஹைட்ரஜன் பெராக்ஸைட்தானே?”

ப்ராட் பற்கள் தெரிய சிரித்தான். “இல்லை, இல்லை, அது ஒரு இசைக்குழு. ஹென்றி, ஹாரியட், ஆஸ்கர், ஒலிவியா என்று பிரதானமாக நான்கு பேர். அதனால் அந்தப்பெயர்.”

“பரவாயில்லை, பூச்சிகள், பறவைகள் என்றில்லாமல் சரியான காரணத்தோடு வந்த பெயர்.”

“நாளை இரவு அவர்களின் கான்செர்ட். அதற்குத்தான் அந்த வினோத மேடை. இங்கே ஒரே கும்பலாக இருக்கும்.”

“நீ வரப்போகிறாயா?”

“ஒரு டிக்கெட் நூற்றைம்பது டாலர், ரொம்ப அதிகம். அது போகட்டும், ஹௌ ஆர் யு டுடே?”

ஜிம் வருவதற்குமுன் நடந்ததை அவனிடம் சொல்லலாமா? சொன்னால் அவள் தவிப்பு அதிகம்தான் ஆகும் என்று தோன்றியது.

“பெரிய கவலையென்று ஒன்றுமில்லை.”

“குட்!” அவன் அகன்றான்.

உண்மையில் பெரிய கவலை இருந்தது. இரண்டு வயது அஷ்வினை ஆஸ்பெர்கர் மையத்தில் விட்டு அரை மணி ஆகிவிட்டது. அதற்குள் விளையாட்டு, பேச்சு, பார்வைத் தொடர்பு என்று பன்னிரண்டு கோணங்களில் அவனை சோதித்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன், அஷ்வினின் பதினாறாவது க்ரோமோசோமை சோதித்தபோது ஒருசில உயிரணுக்கள் சாதாரணத்திலிருந்து அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன. அந்த வேறுபாடு ஆடிசத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என்பது சரவணப்ரியாவின் கருத்து. “ஜெனிடிக் அனாலிசிஸ் லிட்மஸ் டெஸ்ட் மாதிரி நீலம், இல்லாட்டி சிவப்புன்னு இல்ல. எதுக்கும் அஷ்வினை ஆஸ்பெர்கர் சென்டர்லே டெஸ்ட் செய்யறது நல்லது” என்ற அவள் கொடுத்த அறிவுரையின் பேரில் மஞ்சுளா சோதனைக்கு ஏற்பாடு செய்தாள். ஒருவேளை அவளுடைய பயம் அனாவசியமாக இருக்கலாமென சுந்தரிடம் அதுபற்றி சொல்லவில்லை. நிச்சயமான பிறகு சோக செய்தியை தெரிவித்தால் போகிறது.
ஆஸ்பெர்கர் மையத்தில் இரண்டு டாக்டர்கள் அவனைக் கூட்டிச்சென்றபோது அம்மாவை பிரிவதற்காக அஷ்வின் அழவில்லை. அதுவே அவளுக்கு தைரியத்தை கொடுத்தது.

அடுத்த அரைமணியில் வேறு குறைபாடுகளுக்கான சோதனைகள். எல்லாம் முடிந்ததும் அஷ்வினின் நிலை பற்றி ஒரு மருத்துவர் அவளிடம் விவாதிப்பார். கணிப்பு என்னவாக இருக்கும் என்ற கவலையை தள்ளிவைத்து–
தடதடவென திடீரென ஒரு கும்பல், ஏழெட்டு பேர். பதின்மூன்றிலிருந்து பதினேழுக்குள் சொல்லலாம். கோடை விடுமுறையில் பள்ளிப்பாடத்தை மறந்த மாணவர்கள். ஒரே மாதிரி சட்டை, திருப்பதி மஞ்சளில். முன்புறத்தில் கறுப்பு எழுத்துக்கள், தூரத்திலிருந்து மஞ்சுளாவால் படிக்க முடியவில்லை. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை. ஒருகையில் துடைப்பதற்கான துணி, மற்றொன்றில் சுத்தகரிக்கும் திரவம். அவர்களை அழைத்துவந்த ப்ராட் குழுவுக்கு இருவராக பிரித்தான். அவன் அதட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் சுத்தம் செய்வதில் முனைந்தார்கள்.

முதலில் சுலபமான எடை, நடை, தடை இயந்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் நிறைய நேரமெடுத்தார்கள். தரை விரிப்புகளை நான்கு பேராக மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று தூசி உதறினார்கள். ரப்பர் மிதியடிகளை தண்ணீரால் பீச்சி அடித்தார்கள். எல்லாவற்றையும் திரும்ப தரையில் கிடத்தினார்கள். கடைசியில், உடற்பயிற்சி இயந்திரங்கள்.

தினம் இந்த நேரத்தில் சுத்தம்செய்ய ஒரு தெற்கத்தி பெண் வருவாளே. அவளுக்குப் பதிலாகவா இவர்கள்?

வேகத்தை பல படிகளில் குறைத்து பெடல் செய்வதை மஞ்சுளா நிறுத்தியபோது பத்து:ஐம்பது. மனக்கலக்கத்தை அடக்கி நேரத்தை எப்படியோ கடத்தியாகிவிட்டது. உடைமாற்றி மெதுவாக நடந்து சென்றால் அஷ்வினின் சோதனை முடிந்திருக்கும். முழு ஆடிசமாக இருக்கக்கூடாதே, கடவுளே!

அவள் இறங்கி வழக்கம்போல் இயந்திரத்தில் வேர்வை பட்ட இடங்களை துடைப்பதற்குள், ஒரு பெண்ணும் பையனும்.

“நாங்கள் சுத்தம் செய்கிறோம்” என்றாள் பெண்.

“தாங்க்ஸ்” என்று மஞ்சுளா வழிவிட்டாள்.

கைப்பிடிகளை மட்டுமல்ல, பெடல், தட்டு, இயக்கும் திரை என்று இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியையும் திரவத்தை பரப்பி பையன் துடைத்தான். பெண் காகிதத்தால் அவற்றை உலர்த்தினாள். அவர்கள் தோற்றத்தின் வினோதம் மஞ்சுளாவை தள்ளி நின்று அவர்களை கவனிக்க வைத்தது. பெண்ணுக்கு பதின்பருவத்துக்கான மெல்லிய நீண்ட உடல். முகத்திலும் கண்களிலும் குறிப்பிட்டுச் சொல்கிறபடி என்ன இருந்தது? அன்பு, பரிவு, கனிவு, இரக்கம், ஆர்வம்? இல்லை, அவை அனைத்தும்.
சுத்தம் முடிந்துவிட்டது. அதுதான் கடைசி இயந்திரம். பேச்சு ஆரம்பித்தது.

“ஏரன்! எங்கே படிக்கிறாய்?”

“ஆன்ட்டியாக் ஸ்கூல்.”

“நான் மார்டின் லூதர் கிங். உனக்கு எவ்வளவு நண்பர்கள்?”

“ஒரேயொரு பையன்.”

“அவன் பெயர்…”

“ஆன்ட்ரு.”

“உனக்கு எந்தப்பாடம் பிடிக்கும்?”

ஏரன் யோசித்தான்.

“கணக்கு?”

“ம்ம்…”

“மொழி?”

“ம்ம்…”

“ஹிஸ்டரி?”

“யெஸ், யெஸ், அதுதான், ஹிஸ்டரி.”

அவர்களை ப்ராட் அழைத்துப்போக வேண்டும். அப்போது அவன் கூடத்தில் இல்லை.

மஞ்சள் சட்டையின் ‘ஆடிசம் அவேர்னஸ்’ என்ற வாசகம் அப்போதுதான் மஞ்சுளாவின் கண்ணில்பட்டது. வயிற்றை கலக்கியது. பையனை கூர்ந்து கவனித்தாள். அஷ்வின் வளர்ந்தால் இப்படித்தான்… அவன் உயரமான கூரையை பார்த்தான், ஜன்னல்களை அளவெடுப்பதுபோல் மேலும் கீழும் தலையை அசைத்தான். பிறகு, தயங்கியபடி கேட்டான். “உன் பேரென்ன?”

“ட்ரேசி.”

“சாயந்திரம் நீ எங்கே வேலை செய்கிறாய்?”

“பீட்ஸா கடையில்.”

“எனக்கு பீட்ஸா ரொம்ப ரொம்ப பிடிக்குமே.”

“எந்த மாதிரி… சீஸ்… பெப்பரோனி… வெஜ்ஜி…”

“எல்லா மாதிரியும். எனக்கு ஒன்று தருகிறாயா? ப்ளீஸ்‘”

“இது வித்தியாசமானது. ஃபாதர் மர்ஃபி கடை கேள்விப்பட்டிருக்கிறாயா?”

அதற்கான அறிகுறி ஏரனின் முகத்தில் தென்படவில்லை.

“அங்கே செய்வதை உடனே தின்ன முடியாது. வீட்டிற்கு எடுத்துச் சென்று உலையடுப்பில் சுட்டப்புறம்தான்.”

“அப்படி அம்மா செய்வதை பார்த்திருக்கிறேன்.”

“நீ?”

“நான் அடுப்பை தொடக்கூடாது” என்று தலையையும், கைகளையும் அச்சத்துடன் ஆட்டினான்.

அடுத்து அவனுடன் என்ன பேசுவது என்று ட்ரேசி யோசித்தாள். ஏரன்தான் உரையாடலை தொடர்ந்தான். “எனக்கும் வேலை செய்ய ரொம்ப ஆசையா இருக்கே.”

“எங்கே?”

“பீட்ஸா கடையில்.”

“பீட்ஸாவுக்கு என்ன செய்ய தெரியும்?”

“திங்கத் தெரியுமே.” முகம் பிரசாசிக்க, தலை அசைய ஏரன் சிரிக்காமல் சொன்னதைக் கேட்டு தனக்குவந்த சிரிப்பை ட்ரேசி அடக்கிக்கொண்டாள். மஞ்சுளாவும்தான், கொஞ்சம் வருத்தத்துடன்.

“நான் அதைச் சொல்லவில்லை. அதைத் தயாரிக்க…”

ஏரன் முகத்தில் ஏமாற்றம். அதை தொங்கப்போட்டான்.

“நான் சொல்லித் தருகிறேன். மாவைப்பிசைந்து வட்டமாக இட்டு தயாராக வைத்திருப்பார்கள். அதில் கெட்டியான சாஸை ஊற்றி பரப்பவேண்டும்.”

“இப்படியா?” என்று கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலை குப்புறத் திருப்பி இயந்திரத்தின் கால் வைக்கும் தட்டின்மேல் சுற்றினான்.

“அப்படித்தான். மேல்சாமான்களை தூவ வேண்டும்.”

“இப்படியா?” கற்பனை பெப்பரோனியை ஒவ்வொன்றாக எடுத்து அதில் வரிசையாக வைத்தான்.

“பர்ஃபெக்ட். அந்தக் கடை என் அப்பாவுடையது. நான் வேலை வாங்கித் தருகிறேன். உன் போன் நம்பர் என்ன?”

“தெரியாதே” என்று கீழ் உதட்டை பிதுக்கினான். பிறகு, ஞாபகம் வந்து பையிலிருந்து ஒரு காகிதத்துண்டை எடுத்துத் தந்தான்.
ட்ரேசி பிரித்தாள். “373-5625.”

“அதுதான். எப்போது வேலைக்கு வரலாம்?”

“அடுத்த திங்கள். எவ்வளவு சம்பளம் வேண்டும்?”

“தினம் ஒரு பெர்சனல் பீட்ஸா, எனக்கே எனக்கு.”

“ஷுர், அத்துடன் ஐந்து டாலர்.”

“ஒரு நாளைக்கா?” என்று அகல முகம் விரிய ஆச்சரியப்பட்டான்.

“ஐந்து டாலரை என்ன செய்வாய்?”

அவன் பதிலை யோசிப்பதற்குள் ப்ராட் நுழைந்தான். அவனை பார்த்ததும் பேச்சை நிறுத்தி, ட்ரேசியும், ஏரனும் மற்ற இளைஞர்களுடன் கலந்து வெளியேறினார்கள்.

மஞ்சுளா நினைவில் ஆழ்ந்தாள்.

இளைஞர்களை அனுப்பிவிட்டு ப்ராட் திரும்பிவந்தான்.

“உடற்பயிற்சி முடித்துவிட்டாய் என நினைத்தேனே” என்ற அவன் வார்த்தைகள் மஞ்சுளாவை நனவுக்கு இழுத்தன.

“நீ அழைத்து வந்தவர்கள் யார்?” என்றாள்.

“ஆடிசம் அவேர்னஸ் நடத்தும் சம்மர் கேம்ப்பை சேர்ந்தவர்கள்.”

“இங்கிருந்து எங்கே போகிறார்கள்?”

“சூபர் மார்க்கெட்டுக்கு, சாமான்களை எடுத்துவைக்க.”
“ஒருசிலர் ‘நார்மலா’க தெரிந்தார்களே.”

“கரெக்ட். பாதி பேர் உன்னையும் என்னையும் போல. சம வயதினருடன் மனம்விட்டு பழகுவது பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை பெறவும், புதிய திறமைகளை வளர்க்கவும் உதவுகிறது.”

“பரவாயில்லையே, அந்த மாணவர்களுக்கு நல்ல மனசுதான்.”

“சமூக சேவையாக இதை செய்கிறார்கள். ட்ரேசி என்றொரு அற்புதப் பெண். மூன்றாவது தடவையாக இந்த முயற்சியில் பங்கெடுக்கிறாள்.”

ட்ரேசியின் முகத்தை மஞ்சுளா நினைவில் கொண்டுவந்தாள்.

“உனக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், சொல்!”

சரவணப்ரியாவுக்கும் தவிப்பு. ஆழ்ந்த கவனம் தேவைப்படும் வேலைகளில் மனம் ஈடுபட மறுத்தது. அஷ்வின் பற்றிய தன்னுடைய கணிப்பு தவறாக இருக்க வேண்டுமே என்ற ஆசை. குணப்படுத்தக்கூடிய அல்லது வாழ்க்கையை மேல்கீழாக மாற்றவேண்டிய அவசியமில்லாத சிறு குறையாக இருக்கலாம் என்ற நம்பிக்கை. ஆராய்ச்சி அறையில் நடை பயின்றாள். தாறுமாறாகக் கிடந்த கேடலாக் அலமாரி கண்ணில் பட்டது. அதை ஒழுங்கு செய்து ஒரு ஆண்டுக்கு மேலேயே இருக்கும். காலாவதியான விலைப் பட்டியல்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளையும் கழித்துக்கட்டினாள். மீதியை அகரவரிசைப்படி அடுக்கினாள். வேலை முடிந்தபோது பதினோரு மணி. மஞ்சுளாவின் அழைப்புக்கு காத்திருந்தாள். எதிர்பார்த்ததுதான் மிச்சம். பதினொன்றரைக்குப்பிறகு அவளால் பொறுக்க முடியவில்லை. அவளாகவே அழைத்தாள்.

“மஞ்சு! அவங்க என்ன சொன்னாங்க?”

“யார்?”

“என்ன இப்படி கேக்கறே? ஆஸ்பர்கர் சென்டர்லதான்… அஷ்வினைப்பத்தி…”

“நான் ஜிம்லே இருக்கேன். இனிமேதான் அங்கே போகணும்.”

சரவணப்ரியாவுக்கு வியப்பாக இருந்தது. முடிவை தெரிந்துகொள்வதில் அவளுக்கு ஆவல், அவசரம், ஆதங்கம் இல்லையா?

“ட்ரேஸி மாதிரி மனிதர்களும் இந்த உலகத்தில இருக்கும்போது அஷ்வினோட டயக்னாசிஸ் எதுவா இருந்தா என்ன?”

(முற்றும்)