முதல் கிரிக்கெட் வெற்றி – இங்கிலாந்து மண்ணில்!

நம்ம ஊரில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கிரிக்கெட்டைப்பற்றி பேசினால் அடி விழும், அவ்வளவ வெறுப்பாயிருப்பார்கள். வீரர்களின் ஃபிட்னெஸ் போனதிற்கு இடைவிடாது தொடர்ந்த ஆட்டங்கள், ஐபில் மாட்சுகள் என்று ஆளாளுக்கு காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

உலகக்கோப்பை வெற்றியைப்பற்றி “வந்தப் பாதை”யை திரும்பிப் பார்த்து ஒவ்வொரு மாட்ச்சாக அலசி அனுபவிப்பதற்குள் அடுத்த வாரத்தில் ட்வெண்டி ட்வெண்டி சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள் ஆரம்பித்தாயிற்று!

உலகக்கோப்பை பார்த்த நமக்கே களைப்பு  தீராதபோதே அடுத்த மாட்சுகள்… ஆனால் இந்த கட்டுரை அதைப் பற்றியல்ல, பயப்படாதீர்கள்!

இங்கிலாந்திற்கு வந்த புதிதில் சுற்றியிருந்த பச்சையைப் பார்க்கும்போது கிரிக்கெட்டை எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற எண்ணம் தோன்றியது இயல்பே (ஆனால் “எப்போது வேண்டுமானாலும்” முடியாது. வருடத்தில் நான்கைந்து மாதங்களே அதிகம், ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் என்று தோன்றுவதும் மிக இயல்பே!!)

எல்லாரையும் போல நானும் ஒரு சராசரி இந்தியன் என்பதற்கு கிரிக்கெட் ஆர்வமும் ஒரு காரணி. பள்ளி, கல்லூரி நாட்களில் ஊரிலுள்ள அத்தனை வெயிலும் எங்கள் தலைகளில்தான். இரயில் பயணங்களில் தென்படும் கிரிக்கெட் காட்சிகளைப் பார்த்து, கண் பார்வையிலிருந்து மறைவதற்குள் ஒரு பந்தையாவது முழுமையாகப் பார்த்துவிடவேண்டும் என்று தோன்றுவது சகஜம்தானே!

எனவே, அலுவலகத்தில் அங்குமங்கும் விசாரித்ததில் முதலில் சரியான பதில் இல்லை. நிறைய கால்பந்து – ஐவர், அறுவர் அணிகள். நாம் இந்த ராட்சதர்கள் நடுவில் ஆடினால் (மாட்டினால்) சட்டினிதான். அப்புறம்தான் கிரிக்கெட் அணி விவரம் கிடைத்தது; நாலைந்து அணிகள் உண்டு, மே வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

இருக்கும் அணிகளில் முதலில் கூப்பிட்ட ஒரு சர்தார்ஜி அணிக்கு என் பெயரை (மின்னஞ்சல் விலாசத்தை)  கொடுத்தேன். என்னை மாதிரியே ஆர்வமுள்ள சக தமிழர்களையும் இழுத்து விட்டேன் – நண்பர்கள் பல்வேறு இடங்களில் இருந்து – கோவை, மதுரை, நெல்லை – தினப்பத்திரிக்கை அச்சாகும் ஊர்கள் மாதிரி தோன்றுகிறது, இல்லையா?

முதல் ஆட்டத்திற்கு இரு வாரங்களுக்கு முன், அ ந்த சீசனில் மாட்ச் பதிவு செய்திருந்த நாட்கள் அனைத்திலும் விளையாடுவீர்களா, இல்லையா, இருக்கலாமா என்று கேட்டு அழைப்பு வந்தது.

ஆர்வமாக சொடுக்கினேன்..

இந்த சிவப்பு  கிரிக்கெட் பந்து கல்லூரியில் விளையாடியதோடு சரி; அப்புறம் எப்போதாவது ஆடியதெல்லாம் சும்மா டென்னிஸ் பந்தில்தான். சிவப்பு பந்து கால் முட்டிக்கும் கணுக்காலுக்கும் இடையில் பட்டால் எப்படியிருக்கும் என்ற நினைவே முதுகெலும்ப்பை சில்லிட வைப்பதாயிருந்தது. நிச்சயம் மே மாதக் குளிர் காற்று இல்லை. துணிந்துவிட்டேன்!

அந்த நல்ல நாளும் வந்தது. அதற்கு முதல் இரு நாட்களுக்கு முன்னாலிருந்தே பிபிசி தளத்தில் மழை வராதே, வராதே என்று சில மணி நேர இடைவேளைகளில் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
….

சர்தார்ஜி என்னை அவரது காரில் இழுத்துக்கொண்டு போய்விட்டதால் நான் மாலை 4:30 மணிக்கே மைதானத்திற்கு இருக்கும்படியாக போய்விட்டது.

ஆனால் மற்ற நண்பர்கள் (முதல் தடவை ஆடுபவர்கள்) மாலை 5 மணி மாட்ச் என்பதை புரிந்துகொண்டதே வேறு. 5 மணிக்குத்தான் அலுவலகத்திலிருந்து அவர்கள் கிளம்பினார்கள்.

மைதானத்திற்கு வெளியே யூனியன் ஜாக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது – கூடவே இங்கிலாந்தின் சிவப்பு கிராஸ்  முதல் சில மாதங்களுக்கு கார்களில் இந்த கிராஸ் ஸ்டிக்கரைப் பார்க்கும்போது மருத்துவர் கார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன் (அட, இங்கிலாந்தில் எங்கெங்கு நோக்கினும் மருத்துவர்கள்!).

யூனியன் ஜாக்கிற்கு வருவோம். அடப்பாவிகளா, இந்த கொடி எங்கள் படங்களில் வில்லன் கொடியாயிற்றே! தலை குனிந்து பரிதாபமாக இறங்கும், பக்கத்தில் மூவர்ணகொடி உற்சாகமாக மேலே போகுமே!

…யுனியன் ஜாக் இந்த ஊரில் என்னமோ நன்றாகத்தான் பறந்து கொண்டிருந்தது… சிவப்பும் நீலமும் கலந்து நல்ல கவரக்கூடிய வண்ணக்கலவைதான் என்று மனதில் பட்டது…

அலுவலகத்திற்கு சொந்தமான மைதானங்கள் – நாலைந்து கால்பந்து, போனால் போகிறதென்று ஒரே ஒரு கிரிக்கெட்.  ஆனால் ஸ்கோர் போர்ட், சைட்ஸ்கீரின் என்று எல்லாம் சம்பிரதாயமாகவே இருந்தது. கொஞ்சம் கூச்சமாகத்தான் உணர்ந்தேன் – ரொம்ப அதிகம்பா!

மைதானமென்றால் நம்ம ஊர் செம்மண் தரையை இங்கு எதிர்பார்க்கவில்லைதான், ஆனாலும் அநியாயத்திற்கு அளவாக வெட்டிவிடப்பட்ட பச்சைப்புற்கள்.

சின்னவயதில் முதன்முதலில் ஊட்டி தாவரவியல் தோட்டத்தைப் பார்த்துவிட்டு நானும் தம்பிகளும் உருளோ உருளொன்று உருண்டோம் – அந்த மாதிரி இப்போது உருள வேண்டும் என்று பட்டது! அதே சமயம் கால் வைக்கவே கூச்சமாக இருந்தது!

முதலில் யாருமே இல்லை…அப்புறம் சில கார்கள் வந்தன. பதட்டமில்லாமல் உடைமாற்றிவிட்டு, சிலர் பவுண்டரி கொடிகளை எடுத்துக்கொண்டு மைதானத்தின் எட்டுத் திக்கு விளிம்புகளை நோக்கி போய்க் கொண்டிருக்க, ஸ்டெம்புகளை எடுத்துக்கொண்டு ஒருவர் பிட்சை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.

சரியாக 5 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் டாஸிற்க்கு தயார். அவர்கள் அணியில் பாதிதான் வெள்ளைக்காரர்கள், மீதி பேர் வட இந்தியாவோ, பாகிஸ்தானோ, எனது திராவிடக்கண்களுக்கு ஒரே மாதிரிதான் இருந்தார்கள். பேசியதும் திராவிடக் காதுக்களுக்கு ஹிந்தி மாதிரிதான் இருந்தது.

வெள்ளைக்காரர்களைவிட அதிக அலட்சியப் பார்வை நம் மீது. இங்கேயே இரண்டாவது தலைமுறை போலும்! இருந்தாலும் தோலையும் முடியையும் எத்தனை தலைமுறையானாலும் மாற்ற முடியாதே. பார்வைக்கு சௌகார்பேட்டை பசங்கள் போலத்தான் இருந்தார்கள். பேச்சில்தான் வித்தியாசம் தெரியும் – எல்லா வாக்கிய முடிவிலும் இண்ட், இண்ட்! (in it!)

டாஸிற்கு சர்தார்ஜி போய் வந்தார். “பேட்டிங்!’. சுருக்கமாகச் சொல்லிவிட்டு கிட்பேகைத் திறக்க ஆரம்பித்தார். ” அவர்கள் வெற்றி பெற்று நம்மை அழைத்தார்களா அல்லது….”, முடிப்பதற்குள் சர்தார்ஜி சிரித்துக் கொண்டே விளக்கினார். டாஸே போடவில்லை. எங்கள் அணியால் பீல்டிங் செய்ய முடியாது – மொத்தமே 5 பேர்தான் இருந்தோம்! எனவே வேறுவழியில்லை, அவர்களுக்கு.

பொதுவாக அனைவருக்கும் தனித்தனி கிட்பேக்குகள் – பழைய இருமட்டைகள், கால்,  கை, கொட்டைக் கவசங்கள் என்று. சர்தார்ஜி எங்களைப் போன்ற புதிதாக வருபவர்களுக்கென்றே ஒரு தனி பையை வைத்திருந்தார். இரு மட்டைகள், கவசங்கள் இத்யாதி. (கொட்டை கவசம் மட்டும் நாங்கள் முன்னரே இரு பவுண்டுகள் கொடுத்து வாங்கியிருந்தோம் – சுகாதாரக் காரணங்களுக்காக!)
.
சர்தார்ஜி முதலில் இறங்குகிறாயா?,  என்று கேட்டார். நான் விடுவேனா…வழக்கம் போல பம்மி மறுப்பைத் தெரிவித்தேன். கோவை நண்பர் சுய விருப்பத்துடன் முதல் பலிக்கு சம்மதித்து என்னை காப்பாற்றினார் – அவரும் சர்தார்ஜியும் களம் இறங்கினார்கள்.

எதிரணியினரின் காலணிகள் பளபளவென்று, உடைகள் பளீரென்று…அவ்வையார் – உடைந்த வேல்கள் against புத்தம் புதிதான வேல்கள் பாடலை நினைவு கொண்டு என்னுடைய மனதையும் கோவை நண்பரின் மனதையும் தேற்றிக்கொண்டோம்!)

ஆரம்பத்தில் போட்ட இரு பந்து வீச்சாளார்களும் சரியான வீச்சாளர்கள். இந்தக் காற்றில் சும்மா ஆரஞ்சை மேலே தூக்கிப்போட்டு பிடித்தாலே ஸ்விங்காகிதான் வரும். சிவப்பு பந்தைச்சொல்லவா வேண்டும் – ஐந்து ஓவர் முடிவதற்குள் மூவர் காலி!

இதற்கிடையில் ஒருவழியாக நமது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொந்தக் கார்களிலும் மற்ற கார்களில் தொற்றிக் கொண்டும் வந்து சேர்ந்தனர்.

c_e_s_4

நான் உள்ளே போகும்போது ஒரு ஆன்னாகவும் (சுழி சரிதான், மேலே படியுங்கள்!) பந்து வீச்சாளர் உட்பட மற்ற அனைவரையும் கிங்காங்குகளாகவும் உணர்ந்தேன்.

அதென்னவோ அப்படி ஆகிவிடுகிறது. கால் கவசமோ, கொட்டைக் கவசமோ சரியாக பொருந்தாத மாதிரியே ஒரு உணர்வு…இல்லை கைக்கவசமோ…தெரியவில்லை…பதற்றமாய்….

உள்ளே போகும்போது பந்து வீசக் காத்திருந்தவர் தடியாக இருந்த மாதிரி பட்டது, ஆனால் பிட்சில் தாண்டிப் போகும்போதுதான் பார்த்தேன் – சின்னப் பையன், 20 வயதுதான் இருக்கும். பக்கத்தில் பாண்ட்டில் பொறி பறக்க பந்தைத் தேய்த்துக் கொண்டிருந்தவர் அவனது அப்பா என்று இடைவேளையில்தான் தெரிந்தது.

பொதுவாக பேட்டிங் ஆரம்பிக்கும்போது விக்கெட் கீப்பரை கண்பார்க்க மாட்டேன், என்னவோ கூச்சம்/தயக்கம்/சென்டி… ஆனால் இங்கு கண்ணில் பட்டுத் தொலைத்தார். நம்ம ஊர் பையன்தான்.

“நீங்க தமிழா?” அவர் கேட்டவிதம் எப்படி கமலஹாசனுக்கு தெரிய வந்து பல வருடங்களுக்குப்பின் அவரது பல அவதாரப் படத்தில் உபயோகித்தார் என்பது இன்றுவரை மர்மம்தான்.இப்படியெல்லாமா காப்பி?!

“எப்படிங்க, தமிழான்னு தமிழ்லயே கேட்டிங்க?” கேட்டுக் கொண்டே அம்ப்யரிடம் கார்டு எடுத்தேன்.

“அதுதான் நெத்தியில நீறு அழியாம இருக்குதே! மேட்சுக்குன்னே…?!”

“அடயேங்க! காலைல ஈரவிரல்கள்ல தொட்டு பூசினேனா, சாயங்காலம் வரை தாங்குது போல!”

நிமிர்ந்து பார்த்தபோது வீச்சாளர், நடுவர், மற்ற வீரர்கள்…உலகமே எனக்காக, காத்திருந்தது…

கண்டிப்பாய் முதல் பந்து நடு ஸ்டெம்பிற்குதான் என்று நினைத்தேன். இல்லை, ஆப்ஸ்டெம்பிற்கு சற்று வெளியேதான். இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும், ஸ்டெம்பில் பட்டுத் தொலைக்கப் போகிறது என்று (மத்யமர் மனப்பான்மை போலும்!) தடுக்கப் போனேன்…

பந்து மட்டை ஓரத்தை உரசிச் சென்றது போல் எனக்கும் கீப்பருக்கும் மனதில் பட்டது. அவர் அப்பீல் செய்தார். அவர் தரையில் தேய்த்தவாறேதான் பிடித்ததாக எனக்குத் தோன்றியது. எனவே பெவிலியன் திரும்பாமல் நடுவரை தர்மசங்கடமான முகத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

நடுவர் – எங்கள் அணிக்காரர் (வெல்லூர்காரர்) – இவருக்கு பந்து மட்டையில் பட்டதா என்பதே சந்தேகம். எனவே முக்கு வீதி அரசியல் தலைவரின் சிலை போல நின்றார். அடுத்த ஐந்து நிமிடங்கள் சட்டசபை குழப்பம் நிலவியது.

கீப்பர் கத்த, எதிரணி வெள்ளைத் தலைவர் அவரை சமாதானப்படுத்திக் கொண்டே நடுவரிடம் கடுகடுவென விசாரிக்க, மற்றவர்களும் வெல்லூராரை சூழ்ந்து கொண்டனர்.

ஸ்கொயர்லெக்கில் இருந்து ஒரு கருப்பர் – எட்டி மர்ஃபிமாதிரி அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே வந்தாலும் “ஏதோ சத்தம் கேட்டதே?” என்று சந்தேகமாய் கேட்டார்.

புத்தக கதைகள் போட்டியில் முக்கிய விதிமுறை உண்டே “நடுவரின் தீர்ப்பே இறுதியானது” அதுதான் நடந்தது. எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே அவரவர் இடங்களுக்கு திரும்பினர். நான் மிகப்பெரிய ஏமாற்றுக்காரனாக அனைவரும் பார்க்கும்படி உணர்ந்தேன்.

அடுத்தப்பந்து மிக வேகமாக ஆனால் ஆப்ஸ்டெம்பிற்கு நன்றாக வெளியே ஷார்ட் பிட்சாக விழுந்தது. மிக தன்னிச்சையான, இயல்பான ஸ்கொயர் கட் அது. மட்டை எடைக்குறைவாக இருந்ததும் ஒரு காரணம்.

பள்ளிக் காலங்களில் தாராபுரத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிய இடம் சிக்கலான இடம். இரு சந்துகள் ஆங்கில எல் வடிவில் சந்திக்கும் முனை. பந்து வீச்சாளர் ஒரு சந்தின் ஆரம்பத்தில். இருக்கும் ஒரே பீல்டர் அடுத்த சந்தின் மறுமுனையில். மட்டையாளர் இரு சந்துகளும் சேரும் இடத்தில்.

இரண்டே ஷாட்கள்தான் சாத்தியம். ஒன்று நேராக பந்து வீச்சாளரிடம், மற்றொன்று ஸ்கொயர் கட். பந்து எந்த அளவில் விழுந்தாலும் ஸ்கொயர் கட் அடிக்கவே முயல்வோம்; மிக இயல்பான ஷாட்டாக பழகிவிட்டது.

அந்த Essex மைதானத்தில் அன்று அந்த தன்னிச்சை ஸ்கொயர் கட்தான் கைகொடுத்தது; பந்து வேறு எங்கு விழுந்திருந்தாலும் இருந்த பதட்டத்திலும் குற்ற உணர்விலும் ஆட்டமிழந்திருப்பேன்.

பவுண்டரி எல்லையில் புற்கள் நிறைய வெட்டவில்லை போல; இல்லையென்றால் கண்டிப்பாய் நான்குதான்!

நான் பதினேழாவது ஓவரில் கவரில் காட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது முப்பதிற்கு மேல் அடித்திருந்தேன்…

அப்புறம் பசங்கள் கசாமுசாவென்று அடித்து நூற்று ஐம்பதிற்குமேல் அடித்துவிட்டனர்!!!

இடைவேளையில் நிறைய ஹாம் சாண்ட்விச்சுகள்தான் இருந்தன.

வேறு வழியின்றி இருந்த ஆப்பிள்கள், சாக்லெட்கள், இன்ன பிற சாக்லெட்டினால் செய்யப்பட்ட பண்டங்கள், கிராஸ் பன் இன்னும்
என்னஎன்னவோ,-  எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டினோம்.

அனேகமாக அனைத்து வெள்ளைக்காரர்களும் மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தனர். சிலருடன் அவர்களது செல்ல, ஆங்கிலம் தெரிந்த நாய்களும்.பச்சை, நீலக்கண்களுடன் அவர்களுடைய செல்ல நாய்களைப்போலவே குண்டு குண்டாக கொழுகொழு குழந்தைகள்.

இதுவரை இந்த ஊரில் சோனியான நாய்களே கண்ணில் படாதது நினைவிற்கு வந்தது. பின் வந்த நாட்களில்கூட ஒல்லி, பக்கவாட்டில் எலும்புகள் தெரியும் நாய்களையும் பூனைகளையும் பார்க்கவேயில்லை…

-o00o-

நாங்கள் பீல்டிங் செய்யும்போது ஒரு பிரச்சனை. எங்களையறியாமலேயே அணித் தலைவருக்கும் பந்துவீச்சாளருக்கும் “டிப்ஸ்” கொடுப்பது.

படிக்கும்போது முதலில் தவறாக படவில்லை இல்லையா?

ஆனால் பவுண்டரி எல்லையில் இருந்து கொண்டு “மச்சி, அவனை அங்க அனுப்பு”, “இன்னும் உள்ள போடு”, “மச்சி, கால்லியே போடுடா” இப்படியெல்லாம் கத்தினால்…?

அதுவும் அந்த நெல்லை கணபதியும் பெரியகுளம் வைரமுத்துவும்…ஒவ்வொரு பந்திற்கும் அறிவுரைக் கூச்சல்…

மைதானமும் சுற்றியிருக்கும் மரங்களும், வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பறவைகளும், மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களும் பட்டொளி வீசிய கொடிகளும் துல்லிய மௌனத்துடன் அடுத்த பந்திற்கு காத்திருக்கும்போது இந்தக் கத்தல்கள்…

பந்து வீச ஆரம்பிப்பார் – ஒரு அறிவுரை காற்றில் கலந்து வரும். வீசுபவர் நின்று அதற்கு விளக்கம் கொடுப்பார். மட்டையாளரும் நடுவரும் கவனம் கலைந்து நிமிர்ந்து நிற்பார்கள். நடுவர் ஒரு வெள்ளைப் பாதிரி மாதிரிதான் தோன்றினார்.

பந்து வீசுபவர் மறுபடியும் ஆரம்பிப்பார்; மறுபடியும் “இப்படி வைத்தால் என்ன” என்று ஒரு குரல் வரும். பந்து வீச்சு நிற்கும்; மட்டையாளரும் நடுவரும் மறுபடியும் கவனம் கலைந்து, எரிச்சலான பார்வையில்.

அடுத்த முறை அல்லது அதற்கடுத்த பந்தின் போது உரத்த குரலில் ஸ்லிப்பும் கவரும் பேசிக்கொள்வார்கள். மறுபடியும் பந்து வீச்சு தடைபடும். மைதானம் முழுவதும் தமிழ் முட்டி மோதி எதிரொலித்து வெள்ளையரை திகைப்பிலாழ்த்தியது.

அடுத்த ஓவரிலேயே நடுவர் அணித்தலை சர்தார்ஜியைக் கூப்பிட்டார். சர்தார்ஜி அவரிடம் கொஞ்சம் வழிந்து அனைவரையும் வட்ட மாநாட்டுக்கு அழைத்தார்.

என்ன அசிங்கமாக உணர்ந்தேன் என்றால், அவர் அப்படிக் கூப்பிட்டு சொல்லும் வரை இது தவறு என்றே யாரும் உணரவில்லை.
ஆனாலும் என்ன, அப்படி அறிவுரை உணர்ச்சிவசப்படுவதை முழுவதுமாக கட்டுப்படுத்திக் கொள்ள நெல்லை கணபதிக்கு மேலும் பற்பல ஆட்டங்கள் ஆயின!

“ஏலேய்” அவ்வப்போது எதிரொலித்து பறவைகளையெல்லாம் கலவரப்படுத்திக்கொண்டே இருந்தது அவன் குரல்…

நானும் இரு ஓவர்கள் ஆஸ்திரேலிய கிரேக் மாத்யூஸ் மாதிரி போடுவதாக நினைத்துக்கொண்டு போட்டேன்.

சுவாரசியமே இல்லாத நிறைய ரன்கள் கொடுக்காமல், விக்கெட் எடுக்க மட்டும் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லாத, மட்டையாளரை பயமுறுத்தாத ஓவர்கள்…

பொதுவாக நம்ம ஊர் மாலை – அப்போதுதான் சுளீர் வெயில் குறைந்து காற்று வீச ஆரம்பிப்பது போல தோன்றி ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்- அதற்குள் வெளிச்சம் குறைந்து ஸ்டெம்புகள் தெளிவாக இல்லாமல் மைனஸ் நான்கு கண்ணாடி போடுபவருக்கு கண்ணாடி இல்லாமல் தெரிவது போலாகி, அப்புறம் கண்ணாடி போட்டாலும் தெரியாததாகி, சட்டென்று இருள் கவிந்து விடும்.

இங்கு மாலை ஐந்து மணிக்கு மேல் காலம் உறைந்து விட்டது போலத் தோன்றியது. எட்டு எட்டரை மணி வரை “ஐந்து மணி” உணர்வுதான்; வெளிச்சம்தான். பின் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தாலும் ஒன்றும் அவசரப்படவேயில்லை. வீட்டிற்கு ஒரு பத்து பதினோரு மணி அளவிற்கு போய் இறங்கும்போது கூட மையிருட்டு வரவில்லை…

ஓ சொல்லவில்லை, இல்லை? அந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றுவிட்டோம் என்று சொல்ல கூச்சமாக இருந்தாலும் அதுதான் நிஜம்.

அந்த முதல் ஆட்டத்திற்குப்பின் ஏகப்பட்ட ஆட்டங்கள், அந்த கோடைக் காலத்திலும் பின் வரும் கோடை காலங்களிலும்.
இருபது-இருபது ஓவர் ஆட்டங்கள், வார இறுதி நாற்பது ஓவர் ஆட்டங்கள், டெகன்ஹாம் பக்கம் போய் “அவே” ஆட்டங்கள், மழையினால் ஒரு பந்துகூட வீச முடியாமல் நேராக பப்புகளுக்கோ, கறி உணவகங்களுக்கோ போய் அரட்டைகள் பின்னிரவு வரை அடித்திருக்கிறோம்…

மைதானத்து கிளப்புகளிலே குளித்து, உடை மாற்றி அங்கேயே இருக்கும் உணவகத்தில் தஞ்சமடைந்து அவரவருக்கான பானங்கள், ஒருவரையொருவர் எள்ளி, மிகச்சத்தமாய் நகைத்து, புரிதல் அதிகரித்து….கல்லூரிக்கால மனநிலையை மீண்டும் அடைந்த பொற்காலங்கள்…

இருந்தும் அந்த முதல் ஆட்டம் மனதில் தங்குவதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

எங்களின் பேட்டிங்கின் போது குடிநீர் இடைவெளி முடிந்து நான் எதிர்முனையில் நான்ஸ்ட்ரைகராக நின்று கொண்டிருந்தபோது பந்து வீச ஓடிவந்தவர் அப்படியே நின்றுவிட்டார்.

நானும் நடுவரும் திரும்பிப் பார்த்தோம். அவர் தரையைக் காட்டினார். அந்த பச்சை புற்கள் பந்து வீச்சாளர் ஓடும் பாதையின் மத்தியில் ஒரு பெரிய வழுவழு நத்தை!

நடுவர் மெல்ல சிரிப்புடன் அதை நெருங்கினார். நான் பந்து வீச்சாளரைப் பார்த்தேன். எழுபது, எண்பது மாட்சுகளை பார்த்திருந்தீர்களானால் ஒன்றை கவனித்திருப்பீர்கள். அப்போதைய ஸ்டைலான பெரிய கிருதா, பப் போன்ற, காதுகளை மூடிய சணல் கிராப்…பழைய கபில்தேவ், டென்னிஸ் போர்க், இங்கிலாந்து மைதானங்களில் எல்லா நான்கிற்ககும் உள்ளே வந்து குதிக்கும் மேற்கத்திய தீவு ரசிகர்கள்…நினைவிற்கு கொண்டு வாருங்கள். அந்த மாதிரியான சிகையலங்காரம். அந்த எண்பதுகளிலேயே உறைந்தவர் மாதிரி தோன்றினார். பின்னாளில் இந்த மாதிரி நிறைய பேரை பார்க்கப் போகிறேன் – இவர்கள் இன்னும் VCRல் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை…

இப்போது இருவரும் நத்தைக்கு அருகிலேயே கால்களை மடக்கிக் கொண்டு மெலிதாய் பேசிக் கொண்டிருந்தார்கள். காரணம் புரியாத, முக்கியமாய் பவுண்டரி எல்லைகளில் நின்றவர்களின் லேசான விசாரிப்புகள்…

அப்புறம் நடுவர் தாத்தா நத்தையை கையால் கவனமாக எடுத்து மெது ஓட்டத்தில் கொஞ்சம் தள்ளி அதை விட்டு வந்தார். அதன்பின் ஆட்டம் தொடர்ந்தாலும் ஆட்டம் தடைபட்டு நின்ற அந்த சில நிமிடங்கள், பளீர் வெளிச்சமாகவே சில மணி நேரங்களாய் உறைந்திருந்த மாலை, ஆனாலும் ஊடுவுறும் குளிர் (புகைப்படத்தில் வெளிச்சம்தான் தெரியும், இதை எடுக்கும்போது குளிரியது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்!), பச்சை புல்வெளி மைதானம், இன்னும் அந்த புல்வாசனைகூட நினைவிருக்கிறது…

எனக்கு பதில் அந்த இடத்தில் யாராவது கவிதை எழுதத் தெரிந்தவர் அல்லது ஓவியம் தீட்டத் தெரிந்தவர் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொள்கிறேன்.