மகரந்தம்

[stextbox id=”info” caption=”கிரகங்களை தேடும் கனவு!!”]

ஒரு கிரகத்தில் என்ன வளங்கள், தட்பவெப்ப நிலைகள் இருந்தால் அங்கு பூமியில் உள்ளதைப் போல பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தழைக்க முடியும்? இதை ஓரளவு இன்றைய அறிவியலாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். இப்பட்டியல் பூமியின் நிலைகளை மறுபடி ஒரு வரையறையாகக் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு சுய மையச் சிந்தனையை எப்படித் தவிர்க்க முடியும். நம் உயிரினம் இன்னொரு கிரகத்தில் போய்க் குடியேற முடியுமா என்றுதானே தேடிக்கொண்டிருக்கிறோம், அப்போது நம் இனம், மனித இனம் அங்கு எப்படித் தழைக்க முடியும் என்று பார்க்காமல் எப்படி முடியும்? அப்படி ஒரு கிரகத்தை நம் சூரிய மண்டலத்திற்குச் சற்றே அப்பாலுள்ள இன்னொரு மண்டலத்தில் கண்டிருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கட்டுரையைப் படித்து கனவு காணத் தொடங்குங்கள். உங்களுக்கு அடுத்த தலைமுறைகளில் ஒரு பத்து தலைமுறை தாண்டி இந்தக் கிரகத்துக்கு ஒரு கோளை அனுப்ப வாய்ப்பிருக்குமோ என்னவோ! அதுவரை பூமி நிலைக்குமோ?

http://www.guardian.co.uk/science/2011/sep/13/super-earth-exoplanet-found-support-life

[/stextbox]


[stextbox id=”info” caption=”அணு ஆயுத பொருட்களை எப்படி கண்காணிப்பது?”]

அமெரிக்க இதுவரை 5,900 பவுண்டு அளவிற்கு அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் பொருட்களை உலக நாடுகளுக்கு தந்துள்ளது. அனைவரும் ஆளாளுக்கு அணு ஆயுதங்களை தயாரித்து குவித்துவிட்டனர். ஆனால் இப்போது அவற்றை பயங்கரவாதிகளிடமிருந்து எப்படி காப்பாற்றுவது என்று கவலைப்படத் துவங்கியுள்ளது அமெரிக்கா. இதற்கான ஒரு வழிமுறையை அது யோசிக்கத் துவங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசும் கட்டுரை இது.

http://www.wired.com/dangerroom/2011/09/uranium-mia/
[/stextbox]


[stextbox id=”info” caption=”புற்று நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி”]

அருமையான செய்தி. ஆனால் இது பெரிய எண்ணிக்கை புற்று நோயாளிகள் மீது சோதிக்கப்பட்டு வெல்வதாகக் காட்டப்படும்வரை நாம் கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டி இருக்கும் அப்படியே வென்று வந்தாலும், பெரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கையில் இந்த அணுகுமுறை சிக்கிக் கொண்டு எளிய மக்களுக்குக் கிட்டாத பொக்கிஷமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இப்படி துவக்கத்திலேயே எதிராக, தோல்வியையே எதிர்பார்ப்பதாக ஒரு விஷயத்தை அணுக வேண்டாம் என்று சொல்வாருக்கு ஒரு பதில்தான் இருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் எத்தனை வியாதிகளுக்கான சிகிச்சை முறைகள் எளிய மக்களுக்கும், கடும் நோயாளிகளுக்கும் அவர்களால் கட்டணம் செலுத்தக் கூடிய வகையில் கிட்டி இருக்கின்றன? போலியோ, அம்மை போன்ற சில நோய்கள் இப்படிச் சிகிச்சைக்கு உட்பட்டவை என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவை தொற்று நோய்கள் என்பதே ஒரு காரணம். யாரையும் தாக்கும் அத்தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் கடினமாக இருக்கிறது என்பதால் அரசுகளும், மேலாட்சிக் கூட்டங்களும் இந்த நோய்களை ஒழித்துக்கட்ட முயன்றன. அதுவும் எத்தனையோ பேரின் பல பத்தாண்டு உந்துதல்கள், தனிமனிதத் தியாகங்களால்தான் முன் நகர்த்தப்பட்டிருக்கின்றன.  தொற்று நோய் என்று கருதப்படாத, ரத்தப் புற்று நோய் என்று அறியப்படும் லுகீமியாவைப் பற்றி எந்த அரசு கவலைப்படப் போகிறது? ஆனால் இந்தச் சிகிச்சை பற்றிய அறிக்கையைப் படித்தால், ஆழ்ந்த துறை சார் அறிவில்லாத ஒரு வாசகருக்கு, இது அத்தனை பெருஞ்செலவில்லாத சிகிச்சை முறையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. இதை மட்டும் பரவலாகக் கிட்டும்படி ஆக்கினால் பல்லாயிரம் பேரின் உயிர்களும் வாழ்வும் உருப்படியாக்கப்படும். செய்வார்களா?

http://www.nytimes.com/2011/09/13/health/13gene.html?hpw

[/stextbox]


[stextbox id=”info” caption=”பயண எழுத்துக்கள் சூழலியலாளர்களுக்கு எப்படி உதவுகின்றன?”]

சில நூறாண்டுகள் முன்பு ஆப்பிரிக்காவிற்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்ட பல வேற்று நாட்டு மனிதர்கள் அந்நாட்டுக் காடுகள் குறித்தும், அதில் மறைந்திருக்கும் நுட்பங்களையும், மிருகங்களின் குணாதிசயங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய பயணக் குறிப்புகள் சூழியல் பாதுகாப்பாளர்களுக்கு உதவும் பலவிதத் தகவல்களைக் கொண்டிருப்பதாக அறிஞர்கள் பேசத் துவங்கியிருக்கின்றனர். காடுகள் குறித்தும், மிருகங்களின் செயல்பாடுகள் குறித்தும் வாய்வழிச் செய்திகளை விடவும், மிக விரிவான தகவல்களைத் தரும் இந்தக் குறிப்புகள், காடுகளை வரலாற்று நோக்கில் அணுக உதவுகின்றன என்றும் சொல்கின்றனர். இதனால் இந்த பயணக் குறிப்புகளை அழியவிடாமல் மின்-வடிவ கோப்புகளாக மாற்றி இணையத்தில் பதிவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அதற்கான பணிகளைத் துரிதமாக செயல்படுத்துகின்றனர்.

இந்தியாவிலும் நாம் பலவித விஷயங்களை இழந்துவிட்டு, நமக்கான வரலாறு முதற்கொண்டு பல விஷயங்களை மேலை நாட்டு ’அரிவாள’ர்களை எதிர்நோக்கி நிற்கிறோம். இன்னும் நம்மிடம் அத்தகைய பண்டை அறிவைக் கொண்ட விஷயங்கள் நாடெங்கும் தனியார் கையிருப்பில் இருக்கலாம். அவற்றைத் தேடி எடுத்து மின்-வடிவத்தில் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்ய இந்திய அரசுகள் எவற்றுக்காவது முனைப்பு இருக்கிறதா?

http://www.wired.com/wiredscience/2011/09/travel-writing-conservation/

[/stextbox]


[stextbox id=”info” caption=”அமெரிக்க அரசியல், ‘தேநீர் விருந்து’, இதர நாடுகள்…”]

அமெரிக்க அரசியல் இந்திய அரசியலை விடப் படு மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று யாரும் சொன்னால் யாரும் சிறிது யோசிப்போம். ஏனெனில் அமெரிக்க ஜனநாயக அமைப்பு என்பது குறித்த ஒரு மாய நம்பிக்கை உலகெங்கும் இத்தனை காலமாக விதைக்கப்படிருக்கிறது. பல நாடுகளில் போர்களை நடத்திப் பத்தாண்டுகளாகத் தன் பெரும் வளத்தை இழந்து நிற்கும் அமெரிக்கா, இன்று அதன் பல அமைப்புகளின் மோசமான அடித்தளத்தை உலகுக்குக் காட்டி அவமானப்பட்டு நிற்கும் நிலை வந்திருக்கிறது. சீனா அமெரிக்காவுக்கு எப்படி அரசுடைய வரவு செலவுக் கணக்கை சமன் செய்வது அவசியம் என்று புத்திமதி வழங்குகிறது. இந்தியா அமெரிக்க வங்கிகளுக்கு எப்படி வங்கிகளை திவாலாகாமல் நடத்துவது என்று சொல்லித் தருகிறது. இந்திய ஜனநாயகத்தை இத்தனை நாள் ஏளனம் செய்தும், அது குறித்த இழிவான செய்திகளையே முகப்புச் செய்தியாக வெளியிட்டும் அவதூற்றைப் பரப்பி வந்த அமெரிக்க செய்தி ஊடகங்கள் இன்று தம் நாட்டில் கந்தலாகிப் போன ஜனநாயக அமைப்பைப் பார்த்து என்ன செய்வது, எப்படி உண்மையைப் பேசுவது என்று தெரியாமல் பொய் பிரமைகளையே மேன்மேலும் பரப்பி வர முயல்கின்றன. அமெரிக்க பொதுமக்களும் பொய்களை, பிரமைகளையே வேண்டி விரும்பி ஏற்கின்றனர். தமிழகத்து அரசியல் கட்சிகளின் வார சஞ்சிகைகள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றின் பெரும் பொய்களை இத்தனை காலம் தமிழ் மக்கள் வேண்டி விரும்பி அறிவு மரக்க உதவும் பானமாகக் குடித்து வரவில்லையா? அதே நிலையில் இன்று பெருவாரி அமெரிக்கர்கள் உள்ளனர்.

ஆனால் சில பத்திரிகைகள் அமெரிக்காவிலும் விடாது உழைக்கும் மக்களுக்காக, சாமானிய அமெரிக்கருக்காக உண்மையைப் பேசி வருகின்றன. மதர் ஜோன்ஸ் என்ற ஒரு பத்திரிகை அப்படிப் பட்ட பத்திரிகை. அமெரிக்கா உலக வலதுசாரிகளின் கூடாரம் எனப்து நமக்கு ஊகமாகவாவது தெரியும். ஒபாமா என்ற கருப்பர் எதிர்பார்ப்புக்கு மீறி அதிபரானதும் அவரைப் பல விதங்களில் அச்சுறுத்தி, வெள்ளை மாளிகைப் புல்வெளியில் துப்பாக்கிகளோடு ஊர்வலம், கூட்டங்களெல்லாம் போட்டு இரண்டு மூன்று வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ‘தேநீர் விருந்து’ என்ற ஒரு கூட்டத்தினர் அந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இன்று அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் மன்றத்தில் பெருவாரியினராகி விட்டனர். அந்த ‘தேநீர் விருந்து’ குழுக்கள் எப்படித் திடீரென்று இத்தனை ஊடக விளம்பரம், இத்தனை பிரச்சாரம், இத்தனை வெளிச்சம் பெற்றனர் என்று சில நடுநிலைப் பத்திரிகைகள் காலம் கழித்துக் கேட்க ஆரம்பித்தன. அதில் வெளிவந்த சில தகவல்கள்- அமெரிக்க பிலியனேர்களின் சிறு கூட்டம் ஒன்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியைக் கைப்பற்ற இந்தத் தேநீர் விருந்துக் கூட்டத்தைத் தயார் செய்து அதை வழி நடத்தி பெரும் மக்களெதிர் அரசியல் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்பது. இவர்களில் பலர் குடியரசுக் கட்சிக்கும், இந்தத் தேநீர் விருந்துக் கும்பலுக்கும் மிலியன் டாலர்களெல்லாம் நன்கொடை கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். ஆனால் இதை ரகசியக் கூட்டங்கள் வழியே, வெளியிலிருந்து யாரும் உள்ளே வந்து விடாமல் கடும் காவல் எல்லாம் போட்டு நடத்தப்படும் கூட்டங்கள் வழியே செய்கிறார்கள். இத்தனை நாள் மைய நீரோட்டப் பத்திர்கைகளுக்கு இப்படிக் கூட்டம் நடப்பது தெரிந்தும் ஏதும் தகவல் உள்ளிருந்து கிட்டாமல் ஏதும் செய்ய முடியவில்லையாம். இப்போது உள்ளிருந்து யாரோ இந்தக் கூட்டமொன்றைப் பற்றி விடியோ பதிவு செய்து மதர் ஜோன்ஸ் பத்திரிகைக்கு அனுப்பி விட்டார்கள்.

அந்த பிலியனேர் சதிகாரர்கள் யார் என்பது இப்போது மதர் ஜோன்ஸ் பத்திரிகைக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்த செய்தி அறிக்கை இதோ. சலோன் பத்திரிகையில் ஒரு அறிக்கையும், மதர் ஜோன்ஸில் இன்னொன்றும். சலோன் பத்திரிகை மதர் ஜோன்ஸ் சஞ்சிகைதான் தனக்கு ஆதாரம் என்று ஒத்துக் கொண்டிருக்கும் பத்திரிகை நாகரீகத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

http://motherjones.com/mojo/2011/09/koch-brothers-million-dollar-donor-club

http://www.salon.com/news/tea_parties/index.html?story=/politics/war_room/2011/09/06/koch_donors

இது என்ன அமெரிக்க அரசியல், நமக்கெதற்கு என்று ஒதுங்கி விடுவீர்களானால் இழப்பு உங்களுடையதுதான். ஏனெனில் இந்தப் பட்டியலில் உள்ள பல பிலியனேர்கள் உலகெங்கும் உள்ள பலவகைத் தீவிரக் கிருஸ்தவ மதவாத அமைப்புகளின் பின்னிருந்து இயக்கும் கோடீஸ்வரர்கள். உலகில் உள்ள பல நாடுகளில் அரசியல் அமைப்பைக் குலைத்து அந்நாடுகளின் ஆட்சிகளைச் சரிவர இயங்க முடியாமல் செய்யும் பலவகைத் தாக்குதல்களுக்கு இந்த செல்வந்தர்களின் முயற்சி மிகத் தீவிரமானது. இந்த நிறுவனங்கள் எவை, இவர்கள் யார், இவர்கள் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் எவை என்று நாம் அறிவது நம் நாட்டின் இறையாண்மையை நாம் காத்துக் கொள்ளத் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க உதவும்.

[/stextbox]