புண்சட்டை

ஈரக்குருதியுடன்
நீ நடுக்குற்றபோதெல்லாம்
ஒரு கவ்வியைப்போலச் செயல்பட்டு
மென்தென்றலில்
உன்னைக் காற்றாட்டினேன்
சுத்தமானபின்
காணாமல் போய்விடுவாய்
மீண்டும் அழற்புண்களுடன்
வந்து நிற்பாய்

இப்படியாக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்த
வாழ்வில்
எங்கிருந்து வந்தததோ
எனக்கு இந்த நுண்புண்கள்

திரும்பிப்பார்க்காமல்
நீ பயந்து ஓடியவுடன்
புண்களும் ஓடிவிட்டன
சிரிக்காமல் கழற்றுகிறேன்
புண்கள் பேசும் சட்டையை