சீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு

சீனாவில் ‘கலாசாரப் புரட்சி’ என்ற பெயரில் நடந்த பல அக்கிரமங்களில் எண்ணற்ற குடும்பங்கள் பிரிந்து சிதறின. நாடும், நாட்டின் வளமும்தான் மனதில் இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, குடும்பங்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டன. வேலை நியமன உத்தரவு என்ற பெயரில் இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்து உறுப்பினர்கள் சிதறிய கதைகள் ஏராளமுண்டு. ஆனால், அப்போது கூட ’குடும்பமே சமூகக் கட்டிடத்திற்கு வலுச் சேர்க்கும் செங்கற்கள்’ என்ற கன்ஃப்யூஷியஸ் உருவாக்கிய சீன சித்தாந்தத்தை கம்யூனிஸ்ட் தலைவர்களால் எத்தனை முயன்றும் உடைக்க முடியாமல் போனது. ஆனால், அன்றைக்கு அதிகாரத்தால் நடக்காதது, இன்றைக்குப் பணத்தால் நடந்து வருகிறது. குடும்பம் உடைவதையெல்லாம் அன்றைக்குக் கண்டபோது மனமுடைந்த சீனச் சமூகம், இன்றைக்குத் தானே பொருளாதார வளர்ச்சிக்காகக் குடும்பங்களை உடைக்கிறது.

வேறு உலக நாடுகளிலும் குடும்ப அமைப்பிலும் சமூக அமைப்பிலும் இடப்பெயர்வுகள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இருப்பினும், அவையெல்லாம் மக்கள் நாடு விட்டு நாடு சென்ற போது சிறியளவில் நடந்தவை. இங்கே சீனத்தில் நடபெறும் இடப்பெயர்வுகளும், அவற்றால் ஏற்படும் குடும்ப மாறுதல்களும் நாட்டிற்குள்ளேயே, ஆனால் மிகப் பெரிய அளவில் நடக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகளும் கிராமத் தொழிலாளர்களை அதிகமாக வசீகரித்ததில், நகரமயமாக்கல் அதிகரித்ததன் விளைவாகக் குடும்ப அமைப்புக்கு சீன மரபு கொடுத்து வந்த முக்கியத்துவம் இன்று மறைந்து வருகிறது. கூட்டுக் குடும்பங்களுக்கு உயரிய அந்தஸ்தை அளித்து வந்திருக்கும் இந்நாட்டில், சிறிய குடும்பங்கள் கூட சிதறிக் கிடக்கும் அவலம் உருவாகி உள்ளது. சீனாவின் பெரும்பான்மையான குழந்தைகள், முழுமையற்ற குடும்பங்களில் வளர்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி, நாடெங்கிலும் சுமார் 58 மில்லியன் குழந்தைகள் வரை, இப்படிக் கிராமங்களிலும், சொந்த ஊர்களிலும், பெற்றோர் இல்லாமல் வளர்கிறார்களாம். இது மொத்த சிறார்களின் எண்ணிக்கையில் 20%.  இரண்டு பெற்றோரும் வந்து போகும் விருந்தாளிகள் போல. அம்மா மட்டுமாவது உடன் இருக்கும் குழந்தைகள் அங்கே ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள். தாத்தா பாட்டி இல்லாத குடும்பங்களில், சிறார்களைத் தூரத்துச் சொந்தங்களுடன் விடுவோரும் இருக்கிறார்கள். இக் குழந்தைகள் சந்திக்கும் கஷ்டங்கள் ஏராளமானவை.

1986ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 74 நகரங்களும், பெரிய ஊர்களும் பங்கெடுத்தன. சுமார் 100,267 பேர் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன்படி, எங்கே இடம்பெயர்வது என்று யோசிக்கும்போது, குடும்பம் இருக்கும் கிராமமோ, ஊரோ தான் முக்கியத் தேர்வாக எல்லோரும் சொன்னார்கள். இரண்டாம், மூன்றாம் தலைமுறைகளுக்கான நகர வேலை வாய்ப்புகள் அடுத்த சில பத்தாண்டுகளில் சற்றே குறையுமென்று கண்டறியப்பட்டது.

இடம்பெயர்ந்த பிறகு 73% பேரின் குடும்ப மொத்த வருவாய் உயர்ந்தது. 25-44 வயதுடைய தம்பதியரைக் கொண்ட சிறிய குடும்பங்கள் தான் அதிகமும் இடம்பெயர்ந்தனர். அடுத்து, ஒரு பெற்றோர் இருக்கும் தம்பதிகள் அதிகமாக வேறிடம் சென்று பொருளீட்டினர். 1977-1986 வரையிலான காலகட்டத்தில் 20-24 வயதுடையோரில் 41% பேர்கள் ஒரு முறையேனும் இடம்பெயர்ந்தவர்கள். அதில் 18% பேர் மணமானோர். அதே வயதுடைய பெண்களில் 25% பேர் ஒரு முறையேனும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் 50% பேர் மணமானவர்கள். 25-29 வயதுடைய இடம்பெயர் தொழிலாளர்களை எடுத்தால் 56% பேர் மணமானவர்கள். இந்த வயதுப் பெண்களில் 78% பேர் திருமணமானவர்கள். இடம்பெயர்ந்த 30-34 வயது ஆட்களில் 90% பேர் மணமானோர். 50-54 வயது கொண்ட கணவனை இழந்த பெண்களில் 23% பேர் நகரிலிருந்து கிராமத்துக்குத் திரும்பிப் போனவர்கள். 65 வயதுடைய கணவனை இழந்த பெண்களில் 69% பேர் இடம்பெயர்ந்தார்கள். குழந்தை குட்டிகள் இல்லாத 65-74 வயதுடைய முதிய பெண்களும் பல சொந்தக் காரணங்களுக்காக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஐந்தோ, அதற்கு மேலோ பிள்ளைகள் கொண்ட 75 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளில் 43% பேர், கடந்த பத்தாண்டுகளில் இடம் பெயர்ந்தனர். இந்த வயதுப் பெண்களில், பிள்ளைகள் இல்லாதவர்களில் 24% பேர் தான் வேறிடம் சென்றனர்.  35-54 வயதான பெண்கள் தான் இடம்பெயர்ந்தோரில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 25-44 வயதான பெண்களில் ஒரு குழந்தையோ, குழந்தை இல்லாதவர்களோதான் ஆக அதிகமாக இடம்பெயர்கிறார்கள்.

இந்தப் புள்ளி விவரங்களை நாம் எப்படிப் புரிந்து கொள்ளலாம்?

நகரங்களுக்கு இடப்பெயர்வுகள் கொண்டு வருவது வெளிச்சத்தை என்று நம்பப்படுகிறது நகரமயமாகிவரும் சீனத்தில். ஆனால், கிராமங்களும் குடும்பங்களும் பெறுவதென்ன, இழப்பதென்ன என்று ஆராயும் போது இரண்டுமே இருந்தாலும், பின்னதே அதிகமென்று தெரிகிறது. கிராமங்களில் பெரும்பாலான ஆண்கள், மனைவி மக்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்துவிட, குடும்பச் சொத்தான விளைநிலத்தில் மனைவி, மக்கள் பாடுபடுகிறார்கள். ஆண்கள் நகரில் நிரந்தரமில்லாத உதிரி வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். சில ஆண்டுகளானதும் கொஞ்சம் காலூன்றிய பிறகு, விவசாயத் தொழிலாளி மனைவி மக்களையும், அடுத்தடுத்த கட்டத்தில் உற்றார் உறவுகளையும் நகருக்கு அழைத்துக் கொள்கிறான். இதையே மற்றவர்களும் செய்கிறார்கள். மனைவிக்கு வேலை ஏற்பாடு செய்து முதலில் அவரை மட்டும் கூப்பிட்டுக் கொள்ளும் ஆண்களே இவர்களில் அதிகம்.

இவ்வாறு வேலைநிமித்தம் நகரங்களுக்குப் போகும் ஆண்கள், கிராமத்தில் விட்டுச் செல்லும் மனைவி மக்களை வருடத்திற்கு ஒரு முறை தான் பார்க்கவே முடிகிறது. சில குடும்பங்களில் பெற்றோர் இருவருமே போய் விட, பிள்ளைகள் தாத்தா, பாட்டியிடம் வளர்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை வந்து போகும் அம்மா அப்பாவை அந்நியர்களைப் போலப் பார்க்கிறார்கள். வந்த அம்மா திரும்பிப் போகும் போது பிள்ளை கலங்குவதோ அழுவதோ இல்லை. பெரும்பாலான பெற்றோர் “இதையெல்லாம் சகிச்சிக்கறது ரொம்ப கஷ்டம் தான். ஆனா, எங்க குழந்தையோட எதிர்காலத்துக்காகத் தானேன்னு நெனச்சி தான் மனசத் தேத்திக்கறோம்,” என்கிறார்கள் .

போகும் நகரங்களில் வேலை கிடைக்கும் அதிருஷ்டமிருந்தால், கிராமத்து விளைநிலத்தில் ஓராண்டில் சம்பாதிக்கும் பணத்தை சில மாதங்களில் கடுமையாக உழைத்துச் சம்பாதித்து விடுவார்கள். நகரிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆசை சிலருக்கு நாளடைவில் ஏற்படுவதுண்டு. இருப்பினும், பொருளாதார உத்தரவாதம் கொண்ட குடிமக்களுக்கு மட்டுமே எளிதில் கிடைக்கக் கூடிய நகர வசிப்புக்கான குடியுரிமை(ஹுகோவ்) இல்லாததால் அங்கேயே தங்குவது அவர்களுக்குச் சாத்தியமில்லாமல் போகிறது. கிராமத்திலிருந்து வேலை செய்து வீட்டுக்குப் பணம் அனுப்பிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழும் இடம்பெயர் தொழிலாளிகள், முதுமை நெருங்கும் போது கிராமத்துக்கே போய் விடுவார்கள். அங்கே வளர்ந்து நிற்கும் வாலிப மகன்கள் நகருக்கு வேலைதேடி ஓடுவார்கள். அவ்வப்போது வந்து செல்வார்கள். திருமணம் செய்து கொள்ளவும், மனைவி பிரசவிக்கும் பிள்ளையைக் காணவும் வந்து செல்வது மட்டும் இருக்கும்.

நகரிலிருந்து கிராமம் திரும்பியிருக்கும் தாத்தா, பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார். இதுபோல ஒரு சுழற்சியாக இந்த இடப்பெயர்வுகள் நிகழ்கின்றன. “எங்க ஊர்கள்ல இப்ப இளைஞர்களே இல்ல. எல்லாரும் நகரங்களுக்குப் போய்விடுகிறார்கள். குழந்தை காப்பகங்களும், முதியோர் இல்லங்களும் போல இருக்கிறது எங்கள் வட்டாரமே,” என்று தொழிலாளிகளை நகரங்களுக்கு அதிகமாக அனுப்பும் ஸிச்சுவான் போன்ற மாகாணங்களில் முறையிடுகிறார்கள். “நகரத்துக்குப் போய் பணம் பொருளீட்டி வளர்ச்சி பெறும் இளைய சமூகத்தில் பலர் நகரிலேயே தங்கிவிட முடிவெடுக்கிறார்கள்.” ஹூகோவ் இல்லாமலே செலவுகளை எப்படியாவது சமாளித்துக் கொண்டு நகரில் இருக்க விரும்புவோர் தான் மிக அதிகம்.

பேய்ஜிங் போன்ற நகரங்களில் இப்படிப் பல்லாண்டுகள் வசிக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளைக் கிராமத்திலிருந்து கூட்டிக் கொண்டு வந்து நகரைச் சுற்றிக் காட்டி விட்டு மீண்டும் கொண்டு போய் தாத்தா பாட்டியிடமே விட்டுவிடுகிறார்கள். மூத்த குழந்தை கிராமத்தில் இருக்க, கைக்குழந்தையை மட்டும் தம்முடன் நகரில் வைத்து வளப்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டாவது ஆண் குழந்தை என்றால், செலவைப் பார்க்காமல் நகரிலேயே படிக்க வைக்கவும் முயற்சிப்பார்கள். நகர ஹூகோவ் இல்லாமல் இரண்டு குழந்தைகளைப் படிக்க வைப்பதென்பது நடக்காத காரியம். ஒரு குழந்தைக்கென்றால், பல்லாயிரக்கணக்கில் செலவிடுவது சிலருக்கேனும் முடியும். பலருக்கு அதுவும் சிரமம் தான். நகர விலைவாசியைச் சமாளித்துக் கொண்டு வாழ்வதும் சேமிப்பதுமே பெரும் சவாலாக இருக்கிறது. கிராமத்திலிருக்கும் மூத்த மகள், பெற்றோர் இல்லாமல் பாட்டியுடன் வளர்வதோடு, தம்பியுடன் வளரும் வாய்ப்பையும் இழப்பாள். தம்பி தங்கைகளோடு வளரும் குழந்தைக்கோ பொறுப்புகள் கூடி, பெற்றோர் செய்ய வேண்டிய குழந்தை வளர்ப்பைத் தாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஹூகோவ் குடிமக்களுக்குக் கொண்டு வரும் எதிர்மறை விளைவுகள் பல இருந்தாலும், இப்படி தனித்து விடப்படும் குழந்தைகள்தான் அதன் மோசமான விளைவுகளில் ஒரு முக்கிய அம்சம்.  இது, ஆக அதிக நீண்டகாலத் தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஹுகோவ் இல்லாத தொழிலாளர்களின் குழந்தைகள் நகரில் எந்த சேவைகளையும் பெறமுடியாதவர்கள், கல்விகூட அதிக விலையில்தான் கிட்டும் என்பதால், விடுமுறை முடிந்ததும் மீண்டும் கூட்டிக் கொண்டு போய் கிராமத்தில் தள்ளுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

ஆன்ஹூவேய்யின் உள்ளடங்கிய பகுதியில், பெற்றோரால் விடப்படும் பிள்ளைகளைப் பராமரிக்க ஒரு குடியிருப்பே உருவாகியிருக்கிறது. ஆறு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை விட்டுவிட்டு நகருக்குப் போன பெற்றோர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். “இதுங்களுக்கு அம்மா அப்பா கூட இருக்கறதுக்கும் இல்லாததுக்கும் வித்தியாசம் தெரியறதில்ல. மூத்தது மட்டும் அம்மா அப்பா சந்திரப் புத்தாண்டுக்கு வந்துட்டுப் போகும்போது அழுவும்,” என்கிறார் தாத்தா மூத்த பெயர்த்தியைக் காட்டி. “வேற வழியில்ல. நெலம இப்டி தான் இருக்கு.” இது போன்ற ஏற்பாடுகள் மாகாணம் முழுக்கவே காணக்கூடியதாக இருக்கின்றன. அப்பா அம்மா இருவரில் ஒருவர் பிள்ளைகளுக்காக கிராமத்தில் தங்கி விடுவதுமுண்டு. பார்த்துக் கொள்ள பெரியவர்கள் வீட்டில் இல்லை என்று தெரிந்தால் மட்டுமே ஆசிரியர்கள் மாணவரின் வசிப்பிடம் சென்று அவ்வப்போது கவனித்துக் கொள்கிறார்.

திறன் இருக்கும் சில சிறார்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதாக ஆசிரியர்கள் சொல்கிறார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்கவென்று பெற்றோர் நகரில் கஷ்டப்பட, இவர்களுக்கு படிப்பில் நாட்டம் போய்விடுவதால், படிப்பு தடைப்பட்டு பெற்றோருடன் சேர்ந்து தொழிலாளர்களாகும் இளையர்கள் நிறையவே இருக்கிறார்கள். “கல்வியில் பின்தங்குவதுடன், இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பும் குறைந்து போகிறது. எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வுடனே வளர்கிறார்கள்,” என்கிறார் ஓர் ஆசிரியர். இந்தக் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. தற்சமயம் இது பெரியதொரு சமூகப் பிரச்சினை.

ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே தந்தை நகருக்குப் போய்விட, வூ பேய்கென் என்ற 14 வயது சிறுவன் தாயுடன் வசித்தான். பல ஆண்டுகள் நகரில் கடுமையாக உழைத்ததில் தந்தையின் உடல் நிலை மோசமானது. அவருக்கு உதவவென்று தாயும் கிளம்பிப் போய் விட்டதால், இப்போது அவன் தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான்.  “அப்ப, அம்மா கிளம்பிப் போகும் போது எனக்கு கொஞ்சங்கூட புரியல்ல. ரொம்ப அழுதேன். வருத்தமா இருந்துச்சு,” என்கிறான். “மாசத்துக்கு ரெண்டு தடவ ஃபோன் செய்வாங்க. தாத்தா பாட்டி சொல்பேச்சு கேட்டு நடன்னு சொல்வாங்க. பாடமெல்லாம் ஒழுங்காப் படின்னு சொல்லிட்டு வைப்பாங்க. இனி அம்மாவ மறுபடியும் எப்பப் பார்ப்பேன்னு இருக்கு.”

முக்கிய சாலையிலிருந்து அரைமைல் தொலைவிலிருக்கும் பொருட்கள் அதிகமில்லாத பண்ணை வீட்டில் தன்னந்தனியே இரண்டாண்டுகளாக வசிக்கிறாள் 16 வயது ஜாவ் யான். பள்ளிக்குப் போகும் இவள் வளர்ந்து நிற்கும் நெற்பயிரைக் கவனித்துக்கொள்வாள். அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போகும் அப்பாவின் வருகைக்காகக் காத்திருப்பாள். “அப்பா நெனப்பு தான் ரொம்ப வரும்.” மகள் சிறுவயதாக இருந்த போதே தாய் இறந்து விட்டார்.

மகள் தானே சமைத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டதுமே அப்பா ஜோவ் சாங்லியாங் தனது நிலத்தையும் பண்ணை வீட்டையும் தன் ஒரே மகளையும் விட்டுவிட்டு நகருக்குச் சென்றார். 200 யுவான் கட்டணம் செலுத்தி பேருந்தில் ஏறி ஷாங்காய்க்குப் போன தந்தை அறுவடை சமயத்தில் வருடத்திற்கு ஒருமுறைதான் வருவார். 50 வயதென்று சொல்லும் இவர் வயது கூடித் தெரிகிறார். நகரில் வேலை பார்த்துதான் குடும்ப நிலையை உயர்த்த வேண்டும் என்று திடமாக நம்புகிறார். இவளைத் தவிர இரண்டு மகன்களும் இவருக்குண்டு. இராணுவத்தில் ஒரு மகனும் ஷாங்காயில் மெக்கானிக்காக இருக்கும் இன்னொரு மகனும் மூத்தவர்கள். “வீட்டையும் புதுப்பிக்கணும். மராமத்தெல்லாம் நெறைய செய்யணும். கூடுதலா ரெண்டு அறைகளும் கட்டணும். கொஞ்ச காலத்துக்குப் பிறகு என் மகன்களும் வந்துட்டா, எல்லாருக்கும் இடம் வேணுமில்ல?”

கட்டிடத் தொழிலாளியான அப்பாவிடம் கைபேசி இல்லை. சில வாரங்களுக்கு ஒருமுறை ஜாவ் யான் உறவினர் வீட்டுக்குப் போய், அப்பாவுடன் பேசவென்று தொலைபேசியருகில் காத்திருப்பாள். நெருக்கடி நேரத்தில் அண்டை அயலில் காசு கடன் வாங்கிக் கொள்வாள். உடம்பு சரியில்லாவிட்டால், தானே மருத்துவரைப் போய்ப் பார்ப்பாள். ஒரே உறவினரும் 10 மைல் தொலைவில் வசிக்கிறார். இருப்பினும், உதவி செய்ய ஒரு நட்பு வட்டம் இவளுக்குண்டு. சேர்ந்து சைக்கிளில் பள்ளிக்குப் போய்வருவது, வார இறுதிகளில் உட்கார்ந்து அரட்டையடிப்பது, பாட்மிண்டன் விளையாடுவது மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதென்று பொழுது போக்குவார்கள். உரம் தெளிப்பது, மருந்தடிப்பது என்று வேலைகள் கூடும் போது நண்பர்கள் உதவுவார்கள்.

அடுத்த வீட்டில் வசிக்கும் மூதாட்டி சில சமயம் வந்து ஓரிரு வார்த்தைகள் பேசி விசாரித்து விட்டுப் போவார். எப்போதாவது நண்பர்களும் வந்து போவார்கள். நாய்களும் இரவல் வாங்கிய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியும்தான் ஜாவ் யான்னின் எப்போதுமான துணைகள். வார நாட்களில் ஜாவ் யான் அதிகாலையில் எழுந்து கிளம்பி அரை மணிநேரம் சைக்கிள் மிதித்து பள்ளிக்குப் போவாள். யாருமற்ற வீட்டுக்குத் திரும்பி வந்து, தானே சமைத்து உண்பாள். சிறிய செங்கல் வீட்டை நெருங்கும்போதே குரல் அவள் கொடுத்ததும், வீட்டு நாய் பாய்ந்தோடி வரும். செங்கல்லால் கட்டப்பட்ட விறகடுப்பை மூட்டி சமைக்க ஆரம்பிக்கும் போது அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்.

“அப்பா இல்லாதப்ப வேலையே குறைவாதான் இருக்கும்,” என்று சொல்பவளுக்கு இலக்கியம் பிடிக்கும். எதிர்காலத்தில் ஆசிரியர் பணி செய்யத் தோன்றினாலும், பள்ளிப் பாடங்களைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை. பண்ணை வேலைகள் கூடும் நாட்களில் பள்ளிக்குப் போக முடியாமல் அடிக்கடி விடுப்பெடுப்பதால், பாடங்களைச் சமாளித்துப் படிக்க முடியாமல் திணறுகிறாள். “உயர்நிலைப் பள்ளிக்குப் போவதா? என்னால நெனச்சே பாக்க முடியல. வருஷத்துக்கு சில நூறு டாலராச்சும் வேணுமே. அப்பாவால முடியாது,” என்கிறாள்.

தந்தை போகும் முன்னர் அவளிடம் கொடுத்துச் செல்வது $100. இது மூன்று மாதங்களுக்கானது. மளிகை சாமான்கள் வாங்குவாள். விலை கூடுதல் என்பதால், அவளால் இறைச்சி வாங்க முடியாது. புத்தாண்டுக்குச் சில வார விடுப்பில் அப்பா வரும் போது, வகை வகையாக இறைச்சி சமைத்து அவருக்குப் பரிமாற விரும்புவாள்; தானும் உண்பாள். அவர் வரும் வரை தனக்கு காய்கறிகள் மட்டுமே சமைப்பாள். பலவேளைகள் சாப்பிடும் மனநிலை இல்லாமல் பட்டினி கிடப்பதுமுண்டு.

ஷுவாங்ஃபெங் என்ற கிராமத்தைச் சேர்ந்த யூமெங் என்ற சிறுமியுடைய பெற்றோர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பேய்ஜிங்கில் வேலை பார்க்கிறார்கள். முதன்முதலில் பெற்றோர் நகருக்கு வேலை பார்க்கவென்று இடம் பெயர்ந்தபோது, அவள் பிறந்திருக்கவேயில்லை. அவர்களுக்கு கிராமக் குடும்ப அட்டைதான் இருந்தது. நகர ஹூகோவ் பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில், பேய்ஜிங்கில் பிள்ளை பெற அனுமதி கிடைக்காதென்பதால் அவள் பிறக்கும் முன்னரே பெற்றோர் கிராமத்துக்குப் போக வேண்டி வந்தது. அங்கே குழந்தை பெற அவளுடைய அம்மா விண்ணப்பித்து அனுமதிக்குக் காத்திருந்து பிறந்தவள் யூமெங். “என் மகள நெனச்சா வருத்தமா தான் இருக்கு. எங்களப் போலவே அவளுக்கும் கிராம ஹூகோவ்தானே விதிச்சிருக்கு. இப்ப அதோட பாதிப்பு அவளுக்குத் தெரியற வயசில்ல. எதிர்காலத்துல அவளுக்குத் தெரியும்போது..,” என்று மிக வருந்துகிறார் தந்தை.

32 வயதாகும் யூமெங்கின் அப்பா தூ ஷுஜியான், வீடுகட்டும் தொழிலில் உட்பூச்சும் அலங்காரமும் செய்து மாதம் 2000 யுவான்கள் சம்பாதிக்கிறார். உள்ளூர் ஹூகோவ் இல்லாத காரணத்தினால் 10 ஆண்டுகளாகவே சுகாதாரச் சலுகைகளோ, சமூகநலனோ இவர்களுக்குக் கிடையாது. கஷ்டப்பட்டு வாங்க விரும்பினாலும் ஒரு வீட்டை இவரால் வாங்க முடியாது. “இதுவரைக்கும் நான் எத்தனை பேய்ஜிங் வாசிகளோட வீடுகளை பூசி அலங்கரிச்சிருப்பேன் தெரியுமா?  ஆனா, எனக்கே எனக்குன்னு ஒரு வீடு அமையுமா இனிமேன்னு தெர்ல,” என்கிறார்.

இவ்வாறு கிராமத்தில் முதியோரிடம் விடப்படும் குழந்தைகளைப் பற்றிய அக்கறை அறிஞர்களுக்கு வந்திருக்கிறது. இக்குழந்தைகளின் உடல், உயிர், பாதுகாப்பு மட்டுமின்றி மனோவியல் ரீதியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்றவும் மாற்றவும் வேண்டியதன் அவசியம் சமீப காலங்களில் கூடியுள்ளது. இதன் அவசியம் அதிகமாகப் புரிய ஆரம்பித்துள்ளது. இன்றைய சிறார்கள் நாளைய சீனத்தின் சமூகம் என்றபடியால், அரசு இயற்றும் சட்டதிட்டங்களில் இந்தக் குழந்தைகளைக் கணக்கிலெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக எல்லா ஊர்களிலும் தங்கும் விடுதிகள் நிறையவே முளைத்தபடி இருக்கின்றன. இவை அநாதை விடுதிகளுக்கிணையாக இருக்கின்றன என்று சொல்வோரும் இருக்கிறார்கள். இருப்பினும், சொந்த ஊரில் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள யாருமில்லாவிட்டாலோ, இருந்தும் பிள்ளைகள் முறையாக வளர மாட்டார்கள் என்று கருதுவதாலோ, அவர்களைப் படிக்க வைக்கப் பள்ளிக்கு அருகிலிருக்கும் விடுதிகள் மிகவும் உறுதுணையாகவே இருக்கின்றன. நல்ல கல்வியும், கட்டொழுங்கும் பிள்ளைகளுக்குக் கிடைக்க இதுதான் மிகச் சிறந்த தெரிவாகப் பலருக்குத் தெரிகிறது. தாத்தா பாட்டிகளின் வளர்ப்பில் இன்றைய தலைமுறைக்கு மெதுமெதுவாக நம்பிக்கை போய்க் கொண்டிப்பதும் தெரிகிறது. முதியோர் வாரமொரு முறை விடுதிக்கு வந்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். யாருமில்லாத பிள்ளைகள் தனியே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஃபாங் யாஜிங்யாங் என்ற ஆடவர் 21 வயதிலிருந்தே ஷாங்காய்யில் வசிப்பவர். முப்பத்தைந்து வயதைக் கடந்திருக்கும் புறநகர் பகுதியிலிருக்கும் ஒரு நவீன உணவகத்தில் சமையலறை எடுபிடியாகப் பணிபுரிகிறார். அவரது பரந்த மார்பும், சரும நிறமும் அதிநவீன நகரின் உயர்தர உணவகச் சமையலறையில் பொருந்தாமல் தனித்துத் தெரிகிறார். முன்பு இவர் ஒரு சமையற்கலைஞராகத்தான் இருந்தார். வேலையிட விபத்தில் வலக்கரத்தில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட குறைபாடு அவரை எடுபிடியாக்கிவிட்டது. இதனால், வருவாய் குறைந்து பல சலுகைகளும் நின்றுபோனது. தொடக்கூடாத பொருளையோ விசையையோ தொட்டுவிடக் கூடாதென்ற கவனத்துடனும், பதற்றத்துடனும் பணியாற்றுகிறார். அதே உணவகத்தில் பரிசாரகராக வேலை செய்கிறார் இவரது மனைவி.

ஆன்ஹுவேய் மாகாணத்தில் உள்ளடங்கி இருக்கும் சொந்த ஊரில், பள்ளிக்கு அருகில் இருக்கும் விடுதியில் 13 வயது மகன் யுன் ஜுன்னை இரண்டாண்டுகளாக விட்டிருக்கிறார்கள். தொடக்கப்பள்ளியில் பயின்றவரை அவனை உடன் வைத்துக் கொண்டிருந்தார்கள். மேல்நிலைப்பள்ளிக்கு வந்த போது, செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போனது. “வேற வழியில்ல. கிராமத்துல விசாயத்துல கெடைக்கற வருமானமும் மகனை நல்லபடியா வளர்க்கப் போதாது. எங்களுக்கு தான் நல்ல கல்வி இல்ல. அவனையாச்சும் நல்லாப் படிக்க வைக்கணும். அதான், இப்டி ஓர் ஏற்பாடு.” ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மகனுடன் தொலைபேசியில் பேசுவார்கள்.  “வாரத்துக்கு ஒரு தடவ தான் கூப்பிட்டுப் பேசுவோம். படிப்புல முன்னேற்றமிருக்கான்னெல்லாம் விசாரிப்பேன். உழைத்து கவனமாகப் படிச்சு முன்னேற்றம் காண்பிக்க வற்புறுத்துவேன்,” என்கிறார் இந்தத் தந்தை. விழாக்காலத்தின் போது உணவகத்தில் கூட்டமும் வியாபாரமும் மிக அதிகமாகி மும்முரமாக இருக்கும் என்பதால் இவர்கள் நகரிலேயே தங்கிவிட வேண்டி வந்தது. முயல் ஆண்டில் மகனைக் காண இருவராலும் போக முடியாது போனது. “மனசுக்கு கஷ்டமாத் தான் இருந்துச்சு. எங்க மகன் நல்ல மாணவன். புரிஞ்சுப்பான். நல்லாப் படிச்சு இராணுவப்பள்ளியில சேர்ந்தால், போர்வீரனாகி நாட்டுக்கும் சமூகத்துக்கும் பங்காற்றுவான்.”

புத்தாண்டின் போது வாங் திங்திங் மற்றும் பெற்றோர் சந்தித்த போது ஒருவரையொருவர் பார்த்து இரண்டு ஆண்டுகளாகி இருந்தன. மிக உள்ளடங்கிய கூஃபெங் கிராமத்தில் கூடியவர்களுக்கு, யாரிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் எல்லோரும் விழித்தனர்.  புத்தாண்டுக்காக இவர்கள் அங்கு கூடவில்லை. வாங் திங்திங்கின் பாட்டி இறந்ததால், இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதற்காகத் தான் வந்திருந்தனர். சுத்திகரிப்புத் துறையில் பணியாற்றும் அம்மாவும், கட்டடத் தளத்தில் பணிபுரியும் அப்பாவும் அடிக்கடி விடுப்பெடுக்க முடியாது. எடுத்தால், வேலை பறி போகும்.

வாங் திங்திங்கின் அம்மா அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, “அடுத்த தடவை உன்னை நான் பார்க்கும் போது இன்னும் உயரமாகியிருப்பாய்,” என்றார். இருவரும் ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்ட போது அம்மா மகளுக்கிடையில் தெரித்த உருவ ஒற்றுமை மிகப் பளீரென்றிருந்தது.  ஐந்தாண்டுகளாகக் குடும்பத்தினர் ஒரே இடத்தில் இருக்கவில்லை. தொடக்கப்பள்ளியை முடித்ததுமே, தாத்தா பாட்டியின் வளர்ப்பிலிருந்த திங்திங்கை விடுதியில் சேர்த்தனர். கூஃபெங் அடர்ந்த மலைகள் சூழ்ந்த கிராமம். பனிக்காலங்களில் உறைநிலைக்குக் கீழே போகும் வெப்ப அளவு. சந்தையும், கடைவீதியும், வம்புகளுக்கு அலையும் மக்களும் அடங்கிய அழகிய கிராமம். ஷாங்காயிலிருந்து ஆறு மணிநேரப் பயணதூரத்தில் இருக்கும் கூஃபெங் போன்ற பல கிராமங்களில் 80% இளையோர் இடம்பெயர்ந்து வெளியேறி விடுகிறார்கள். சிறுமி வாங் திங்திங்கின் பெற்றோரும் கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்திருந்தனர்.

மண் வீடுகளுக்கிடையில் நகரிலிருந்து அனுப்பும் பணத்தில் புதிதாய் ஆங்காங்கே எழும் சிமெண்ட் வீடுகளையும் காணமுடிகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீக வீட்டின் ஒரு சுவரை இடித்து விரிவு படுத்த எண்ணி ஆரம்பிக்கப்பட்ட வாங் குடும்பத்தின் மாடி வீடு முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. மாடிப்படிகள் இன்னும் கட்டப்படாத நிலையில் மேலே போகவும் முடியாது. “நகருக்குப் போய் நான் சம்பாதிச்சதால தான் கொஞ்சமாச்சும் கட்டினோம். இல்லைன்னா அதுவுமில்ல. இந்த வீட்டைக் கட்டினமே தவிர நாங்க ரெண்டு பேரும் இங்க வாழ்ந்ததில்லை,” என்றார் வாங். சோகம் கவிழ்ந்தாற் போன்ற அவரது முகத்தில் சிரிப்பு மெல்ல விரிந்தது. கூடத்தில் ஒரு மர மேசையையும் நான்கு குறுகலான நீள் இருக்கைகளையும் தவிர வேறொன்றுமேயில்லை.  மனைவியை இழந்து விட்டதால், திங்திங்கின் அப்பாவைப் பெற்ற 77 வயது தாத்தா பூர்வீக கிராம வீட்டில் இனி தனித்து தான் வசிக்க வேண்டும்.

பெற்றோர் இல்லாத ஏக்கம் திங்திங்கிற்குள் நிரந்தரமாகத் தங்கி விட்டிருப்பது அவளது வெறித்த பார்வையில் தெரிகிறது. சில நாட்களுக்கே வந்திருக்கும் பெற்றோருக்கும், அவளுடன் செலவிட அதிக நேரமில்லாமல் இருந்தது. துட்டி வீட்டில் அண்டை அயல் மற்றும் உற்றார் உறவினர்கள் வருவதும் பேசுவதுமாகவே இருந்தார்கள். “பெரியப்பா வீட்ல இருக்காங்க. வரவங்களோட பேசிட்டே இருக்காங்க. நா அவங்க வாயப் பார்த்துகிட்டு உக்காந்திருந்தேன்,” என்றாள் திங்திங். அம்மாவைப் போலவே கூச்ச சுபாவமும் சோகம் அப்பியிருக்கும் முகத்தைக் கொண்டவள், எப்போதும் ஒருவித பாதுகாப்பின்மையுடன் பதட்டமாவே இருந்தாள். மகளை அணைத்தவாறே அம்மா நின்றிருந்த ஒரு தருணத்தில் சடாரென்று உடைந்தழுதாள்.

திங்திங்கைப் போன்ற பிள்ளைகள் உணர்வு ரீதியாக மூடிய மனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒருவகையில் உண்மை. சீக்கிரமே மனக்காயப் படுபவர்களாக இருக்கிறார்கள். பதின்பருவத்தை அடையும் போது இந்தப் பிள்ளைகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தவறான வழிகளில் போவதற்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி ஒரு நிலைத்தன்மையை அடையும் வரை, இது போன்று தனித்து விடப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் வரும்; அதன் பிறகு, கொஞ்சம் குறைவதற்கான சாத்தியங்களுண்டு என்று சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

அவ்வந்த ஊர்களில் பெற்றோர்களால் தனியே விடப்படும் பிள்ளைகள் ஸிச்சுவான், ஆன்ஹுவேன், ஹென்னன், ஹுன்னன், ஜியாங்ஸி போன்ற வட்டாரங்களை உள்ளடக்கிய மத்திய மற்றும் தென்சீனத்தில் மிக அதிகமாக இருக்கிறார்கள். நாட்டின் பரப்பளவில் சரி பாதி இது. கிழக்கிலிருக்கும் முக்கிய நகரங்களிலிருந்து முதலீட்டாளர்கள், வடக்கிலும் மேற்கிலும் இருக்கும் உள்ளடங்கிய ஊர்களுக்குப் போகும்போதுதான் வளர்ச்சி சீராகி, அங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்; அப்போது தான் கிராமங்களில் விடப்படும் சிறார்களின் எண்ணிக்கை குறையும் என்கிறார்கள் தலைவர்கள். நிறைய நிதி நிறுவனங்கள் தங்கும் விடுதிகளைத் தோற்றுவிக்கின்றன. மாவட்ட அரசிடமிருந்தும், தொழிலதிபர்களிடமிருந்தும்தான் விடுதிகளுக்குப் பொருளாதார உதவிகள் ஓரளவுக்குக் கிடைக்கின்றன.

“ஏடுகளிலிருந்து கிடைக்கும் அறிவு மட்டுமே இளஞ்சிறார்களுக்குப் போதாது, அதையும் தாண்டிய முழுமையான வாழ்க்கைக்கான கல்வியும் தேவையாக இருக்கிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்கும் இவர்களுக்கு அது கிடைக்கிறதா என்றால் இல்லை,” என்றே சொல்கிறார் விடுதி பொறுப்பாளர். “ஒருவன் வளர்ந்து வரும் பருவத்தில் குடும்பத்தின் பங்கு தேவையா? எந்தளவுக்கு என்றெல்லாம் யோசிக்க ஒண்ணுமே இல்லை. கண்டிப்பாகத் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே? இது போன்ற விடுதியெல்லாம் வேண்டியது தான். ஆனா, இதெல்லாம் ரொம்பச் சின்ன மாற்றத்தைத் தான் கொணரும். சிறார்களுக்கும் பதின்பருவத்தினருக்கும் கிடைக்க வேண்டிய அரவணைப்பு இல்லாட்டா அது ஏற்படுத்தற விளைவுகள் நீண்ட காலத்துக்கு மறையாம நிற்கக் கூடியது. பிரச்சினையோட மூல காரணமென்னன்னு அறிஞ்சு அதைச் சரி பண்ணனுமில்லையா?” என்கிறார்.

விழாக்காலங்களில் சில நாட்களுக்கு பிள்ளைகளை நகருக்குக் கூப்பிட்டுக் கொள்ளும் சற்றே வசதி கொண்ட பெற்றோரும் இருக்கிறார்கள். தாத்தா பாட்டி இருவராலும் மகனைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததைக் கண்ட பிறகு தான் லீ குவாங்யாவ்வை ஷாங்காய்க்குக் கூட்டி வந்தனர். இரண்டாண்டுகள் படித்த பிறகு, 15 வயதாகும் அவனை மீண்டும் குஃபெங்கிலிருக்கும் விடுதியில் சேர்த்தனர். அருகிலேயே இருந்த பள்ளியில் படித்தான். ஷாங்காயில் வேலை செய்யும் இந்தப் பையனுடைய 47 வயதான அம்மா, “தங்கிப் படிக்கிற விடுதில தான் விட வேண்டியதா இருக்கு. வேற வழியுமில்ல. தாத்தா பாட்டி கிட்ட விட்டா ரொம்பச் செல்லம் கொடுத்துடறாங்க. படிக்காம, கெட்டுப் போயிடுவான். வெட்டியா தெருவுல திரிவான். இணையத்துல வேண்டாத தளங்களுக்குப் போகற பழக்கம்லாம் வந்துருது. அதான்,” என்கிறார். சந்திரப் புத்தாண்டுக்கு லீ குவாங்யாவ் அம்மாவைச் சந்திக்க ஷாங்காய்க்குப் போனான்.

“கிராமத்துல நெல் விதைச்சி விவசாயம் செஞ்சிட்டிருந்தோம். கைக்கும் வாய்க்குமா தான் இருந்துச்சு வாழ்க்கை. இதுல குழந்தைய நல்லபடியாப் படிக்க வைக்க வருமானம் எங்கயிருக்கும், சொல்லுங்க? அதான், இந்த மாநகருக்கு வந்துட்டோம்,” என்கிறார் கரோவோகி லௌஞ்சில் சுத்தப் படுத்துபவராக இருக்கும் தாய். தந்தை வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிப்பவராகப் பணிபுரிகிறார். இருவருக்கும் கிடைக்கும் மொத்த வருவாய் அவர்களது அடிப்படைத் தேவைகளுக்கும், மகனின் கல்விச் செலவுக்கும் மட்டுமே சரியாக இருக்கிறது. “சேர்ந்திருக்க முடியல்லன்ற வருத்தம் அப்பப்ப வரும் தான். ஆனா, அவனுக்காகத் தானே செய்யறோம். எங்க குழந்தைப் பருவத்தைப் பார்க்கும் போது இவனுக்கு எல்லாமே இருக்கு. இவன் ரொம்ப அதிருஷ்டசாலி,” என்று லீ குவாங்யாவ்வின் தாய் சொல்கிறார். மகன் அதை மறுத்துப் பேசாது புன்னகைக்கிறான்.

விடுதியிலும் பள்ளியிலும் ஆர்வத்துடன் கூடைப் பந்து விளையாடும் அவன் தொலைநோக்குச் சிந்தனை கொண்டவனாக இருக்கிறான். குளிராக இருக்கும் சிறு அறையில் உட்கார்ந்து கொண்டு, “நா பெரியவனானதும் பொறியியலாளராகப் போறேன். பனிக்காலக் குளிரைச் சமாளிக்கக் கூடிய வீட்டுச் சுவர்களை உருவாக்குவதே என் லட்சியம்,” என்கிறான்.

இதுபோல, பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்வதில் மிகச் சிலரிடம் நல்லதும் நடக்கிறது. எப்போதுமே பெற்றோரைச் சார்ந்திருக்காமல் தனித்தியங்க அரிதாகச் சில பிள்ளைகள் இயல்பாகவே எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். வாங் லீ என்றொரு மாணவி கிழக்கு சீனத்தின் ஆன்ஹுவேய் மாகாணத்திலிருக்கும் சிற்றூரில் விடுதியில் தங்கிக் கொண்டு பள்ளிக்குப் போய் வந்தாள், இவள் நடை பழக ஆரம்பித்த பருவத்திலிருந்தே; இவளது தாய் பணியாற்றுவது ஷாங்காய்யில். அவள் தொடக்கப்பள்ளி முடிக்கும் போது அவளைப் பாட்டி தாத்தாவிடம் விட்டுவிட்டு தந்தையும் ஷாங்காய் போய்விட்டார். முதியோர் இருவருக்கும் வயல்வெளிகளில் ஏராளமான வேலை இருக்க, பெயர்த்திக்கு சமைத்துப் பரிமாறுவதைத் தாண்டி ஒன்றையுமே அவர்களால் செய்ய முடிந்ததில்லை. அத்துடன், பள்ளிப்பாடத்தில் உதவி தேவையென்று வரும் போது விடுதி தான் மகளுக்கு சரி வருமென்றும் கருதியே அப்படித் தீர்மானித்தனர்.

ஒரே நகருக்குள் பெற்றோர் இருவரும் இருவேறு இடங்களில். மகளைப் போலவே தாயும் சில பெண்களுடன் விடுதி அறையில் வாசம். லீக்கு அப்பா அம்மா நினைவு அடிக்கடி வந்து விடும். எப்போதுமே ஒருவித ஏக்கத்துடன் இருந்தாள். சில மாதங்களிலேயே ஒருநாள், மணவிலக்கு பெறப் போவதாக அவளது அம்மா அழைத்துச் சொன்னார். “பெருநகருக்குப் போனதிலிருந்து எங்கம்மா நடத்தை சரியில்லைன்னு எங்க கிராமத்துல நிறைய பேர் குசுகுசுன்னு பேசிக் கேட்ருக்கேன். ஆனா, எப்பவும் அம்மாவுக்காகப் பரிஞ்சி பேசிட்டே இருந்தேன்,” என்று சொல்லும் லீ வளர்ந்து இளம் யுவதியாக நிற்கும் போது, “எங்கம்மா என்னையப் பார்க்க வரும்போது என்ன பேசன்னே புரியறதில்ல எனக்கு. நண்பர்கள் தான் எனக்கு முக்கியமாயிட்டாங்க. விடுதில வளர்ந்த எங்களால தனிச்சு இயங்க முடியுது. அத்தோட, மற்ற இளைஞர்கள விட எங்களுக்கு மனப் பக்குவமும் அதிகமா இருக்கு,” என்கிறார்.

சில இளைஞர்களுக்கு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்வதென்பது அவரவர் சொந்தத் தேர்வாகவே இருக்கிறது. நகர வாழ்க்கையை எந்தக் காரணத்துக்காகவும் இழக்க இவர்கள் தயாராக இல்லை. ஹுன்னன் மாகாணத்தைச் சேர்ந்த லீ ஸியோமிங் என்ற 27 வயதுப் பெண்மணி 560 மைல் தொலைவில் இருக்கும் ஜூஹாய் என்ற ஊரில் மின்சாதனங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஓராண்டுக்கு முன்பு சில மாத விடுப்பில் சொந்த ஊர் திரும்பி பிள்ளை பெற்று, குழந்தையைத் தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பி விட்டார்.

தனது மற்றும் தன் மகளின் எதிர்காலம் குறித்து இவருக்கு இருக்கும் கனவுகளை ஓரளவேனும் நிறைவேற்ற அவருக்கு அந்த வேலை மிக முக்கியம். அத்துடன், இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிவிட்டால், நகர ஹூகோவ்வுக்கு விண்ணப்பிப்பது சுலபம். அது தான் தாய் மகள் இருவருக்கும் எதிர்காலத்தை வெளிச்சமாக்கப் போகும் மின்விளக்கு என்று கருதுகிறார். மகளுடன் இருக்க விருப்பமா என்று கேட்டால், “ம், நல்லா தான் இருக்கும். ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, சிலநாட்களிலேயே என் மேலயும் என் வாழ்க்கை மேலும் அலுப்பும் வெறுப்பும் வந்துரும்,” என்கிறார். நிறுவனத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் லீ. தன் மகளின் இசை நாட்டத்தை அறிந்து அவளை இசைப் பயிற்சிக்கு அனுப்புகிறார். அவளை மிகப் பெரிய பாடகியாக்குவது தான் இவரது லட்சியம். “அதுக்கு கடும் உழைப்பு மட்டுமில்ல, எக்கச்சக்க பணமும் வேணுமில்ல, அதான் இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்.”

கிராமத்துச் சிறார்கள் இளமையில் அதிக நேரம் பாட்டி தாத்தாக்களோடுதான் செலவிடுகிறார்கள். பெரியவர்களானதும் பெற்றோருடனோ, அல்லது தனியாகவோ வசிப்பார்கள். பெரும்பாலும் நகர வாழ்க்கையாக இருக்கும். நகரங்களில் தான் சீனாவின் கூட்டுக் குடும்பத்தின் மீதான மரபும் பற்றும் வேகமாகச் சிதைந்து வருகிறது. பெற்றோருடன் இருக்கும் பிள்ளைகளும் வீட்டில் தனியே இணையவெளியில் அதிகம் உலவும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். முன்பிருந்தது போல பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் கருத்துப்பரிமாற்றமோ பேச்சு வார்த்தையோ இன்றைய கால கட்டத்தில் இல்லை. தனிமையில் இருக்கும் நகரத்து சிறார்களுக்குப் பள்ளிகளிலேயே புறப்பாட நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. “பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள் பெற்றோர்களே,” என்ற பிரச்சாரத்தைச் சீன அரசு 2006ல் தொலைக்காட்சி ஊடகங்களின் வழி நடத்தியது.

பார்த்துக் கொள்ள தாத்தா பாட்டிகள் அல்லது நெருங்கிய உறவினர் இருந்தால் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு விட்டுப் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது? குழந்தைகளைத் தம்முடன் கூட்டிக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை. போகுமிடம் புதிய இடம். அங்கே நண்பர்கள் அமையவே நாளெடுக்கும். வேலைக்குப் போகும் போது பிள்ளைகளை எப்படித் தனியாக விடுவது? முதுகில் கட்டிக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள் நிறைய பேர். கிழிந்ததும் பழையதுமான அழுக்காடையணிந்து கொண்டு முதகில் தன் பிள்ளையைச் சுமக்கும் தாய், குனிந்து பணக்காரச் சிறுவனின் காலணிக்கு வண்ணம் பூசிப் பளபளக்க வைக்கும் காட்சி, அங்கே நிலவும் ஏழை-பணக்காரகளுக்கிடையிலான இடைவெளியைக் காட்டும் உதாரணக் காட்சி.

வீட்டில் விட்டுவிட்டுப் போகும் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடித் திரிந்து அடிபட்டுக் கொள்வர், அல்லது தொலைந்தும் போகலாம். அதனால் தானோ என்னவோ, ஜேஜியாங் வட்டாரங்களில் செங்கல் சூளைத் தொழிற்சாலைகளில் நீண்ட நேரம் வேலை பார்க்கும் பெற்றோர், தமது இளம் சிறார்களை வீட்டின் சன்னலுக்கருகில் அறைக்குள் கட்டி வைத்து விட்டுப் போகிறார்கள். 10-12 மணிநேரத்துக்கு பிள்ளைகளை இப்படிக் கட்டிவிட்டுப் போகும் பெற்றோர் நிறைய இருக்கிறார்கள். உணவு இடைவேளையின் போது அவகாசமிருந்தால் ஒருநடை அம்மா வந்து பார்க்க முடியலாம். இல்லையென்றால், அதுவுமில்லை. குழந்தைக் காப்பகங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளும், சேவைகளும் எல்லா ஊரிலும் இருப்பதில்லை. இதுபோன்ற இளமைப் பருவம் அச்சிறார்களில் ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியிலான தாக்கங்கள் என்னென்னவாக இருக்குமென்று யோசித்தால், மிகுந்த அயர்ச்சி தான் ஏற்படும். விலங்கைப் போல இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போவதை மனித உரிமைச் சங்கத்தினர் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சிறு வயதில் இப்படிக் கட்டிப் போட்டு வளர்ந்தவர்களில் அழியாத நினைவுத் தழும்பை விட்டு வைப்பதாகச் சொல்வோரும், நினைவிலேயே இல்லை என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

நகர மற்றும் பெருநகரவாசிகளுக்கு இடம்பெயர் தொழிலாளிகளால் நிறையப் பயனுண்டு. தண்ணீர்க் குழாய் ஒழுகுகிறதா, உடைந்திருக்கிறதா, வீட்டைத் தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டுமா, வாகனத்தைக் கழுவ வேண்டுமா, எந்தப் பிரச்சனையானலும் இடம்பெயர் தொழிலாளிகளைக் கூப்பிட்டால் போதும். குறைந்த ஊதியத்தில் வேலையைச் செய்து முடித்து விட்டுப் போய்விடுவர். இது போன்ற வசதிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கே திரும்பி வரும் சீனர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், நகரவாசிகளால் இழிவாக நடத்தப் படுவதால் இடம்பெயர் தொழிலாளிகளில் பலருக்கு கிராமத்துக்கே திரும்பிப் போய்விடும் எண்ணம் இப்போதெல்லாம் தோன்றி வருகிறது. “இங்க காசு கெடச்சாலும் கொஞ்சங்கூட மதிப்பு கெடைக்கறதில்லங்க,” என்று வருந்தும் இவர்கள் தமது உழைப்பை முதலெடுக்க நினைக்கும் நகரவாசிகளை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். வருவாய் மற்றும் சேமிப்பு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர வழியில்லை என்பதையும் இவர்கள் நாளடைவில் பட்டுணர்கிறார்கள்.

“சில ஆண்டுகளா நா பேய்ஜிங்ல வேல செய்யறேன். நல்ல வேலதான். நல்ல வருமானமும் கூட. ஆனா, கிராமத்துல இருக்கற என்னோட தோழர்கள்லாம் கொறச்சலா சம்பாதிச்சாலும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. எல்லாருக்கும் மணமாகி குழந்தை குட்டிகள் கூட இருக்கு. எனக்கு வயசு ஏறுது. இன்னும் கல்யாணத்துக்கான அடையாளம் ஒண்ணையும் காணோம். பேய்ஜிங் வந்தே இருக்கக் கூடாதோன்னு பல நேரங்கள்ள நெனச்சிக்கறேன். இந்த மாநகரத்துல என் எதிர்காலம் என்னன்னு நெனச்சா கொழப்பம் தான் மிஞ்சுது,” என்ற ரீதியில் வருந்தும் இளைஞர்கள் பலருண்டு நகரங்களில். “வீடு வாடகைன்னாலும் வாங்கறதானாலும் கெடைக்கறதேயில்ல. கெடச்சாலும் கண்டபடி வெல சொல்றாங்க. எனக்கு பேய்ஜிங் ஹூகோவ் வேற இல்ல.” ஒரே வருடத்தில் வீட்டு மனைகள் இரட்டிப்பாகியிருக்கின்றன பேய்ஜிங்கில். ஒரு சதுர மீட்டருக்கு 21,164 யுவான் வரை போகிறது. சராசரி 90 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு அடுக்ககம் வாங்க வேண்டுமென்றால் 1.9 மில்லியன் யுவான்கள் எடுத்து வைக்க வேண்டும். பலருக்கு இது எட்டாக்கனியாகவே இருக்கிறது. சட்டப்படி ஒரு குடும்பம் என்றால் சீனத்தில் சட்டப்படி மணமான கணவன் மனைவியும், 18 வயதுக்குக் கீழே இருக்கும் ஒரு குழந்தையையும் கொண்டது. குழந்தைக்கு 18 வயதுக்கு மேலிருந்தால் அதன் பெயரிலேயே ஒரு வீடு வாங்கலாம். அதாவது நகர ஹூகோவ் இருந்தால்.  சில மாதங்களுக்கு முன்னர், 11 மாகாணங்களில் 12 நாளிதழ்கள் நடத்திய கூட்டறிவிப்பில், சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான ஹூகோவ்வை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று ஒன்றாகச் சேர்ந்து குரலெழுப்பினார்கள். குடிமக்களுக்கும் இதில் இசைவிருந்தது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இருப்பினும், அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆகச் சமீப அரசறிக்கையின் படி ‘ஹூகோவ்’ நீக்கப்பட மாட்டாது.

வாழ்க்கைமுறை, கல்வி, பொறுப்பு போன்றவற்றில் பாட்டி-தாத்தாகள் மற்றும் பெற்றோரிடையே நிலவும் பல வேறுபாடுகள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் குழப்பத்தை விளைவிக்கின்றன. வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தாத்தா பாட்டி. நவீன வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய அறிவு குறைவு என்ற காரணத்தால், அதிக செல்லம் கொடுத்து பிள்ளைகளைக் கெடுத்து விடுகிறார்கள். அல்லது கண்டிப்பு என்ற பெயரில் அரவணைக்கத் தவறுகிறார்கள். உடலில் அதிக தெம்பில்லாததால், ஓரளவிற்கு மேல் பிள்ளைகளைக் கவனிக்கவும் அவர்களால் முடிவதில்லை. பிள்ளைகளுக்கோ எப்போதும் அப்பா அம்மாவின் நினைவு; ஒருவித பாதுகாப்பற்ற உணர்வு.

சொந்த ஊர்களில் பாட்டி தாத்தா அல்லது உறவினர்களிடம் விடப்படும் பிள்ளைகளின் உடலாரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே பெருமளவில் பாதிக்கப்படுவதாக குவாந்தோங்கிலிருக்கும் ஃபூயாங் என்ற ஊரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்தினர் அதிகமாக இருக்கும் இந்த ஊரின் மக்கள் தொகை 87,134. சராசரி தனிநபர் ஆண்டு வருவாய் 5154 யுவான்கள். பொருளாதார மற்றும் கல்வித் தகுதியில் நடுத்தரமான ஊர் இது. 5 மேநிலைப் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு உயர்நிலைக் கல்விக்கூடம் உள்ளது. அந்தப்பள்ளிகளில் பயின்ற ஐந்து பிள்ளைகளில் ஒருவர் விகிதம் பெற்றோரால் சொந்த ஊரில் தனியே விடப்பட்டிருந்தார்கள். அதில் பாதிபேர் சராசரிக்கும் அதிக வசதி கொண்ட பிள்ளைகள். நகரிலிருந்து பெற்றோர் அனுப்பும் பணமும், தனியே பிள்ளைகளை விட்டிருக்கும் குற்றவுணர்வு காரணமாக தேவைக்கதிகமாக வாங்கிக் கொடுத்திருக்கும் பொருட்களும் சேர்ந்து, சரியான வழிநடத்தலும் அன்பும் ஆதரவும் இல்லாததால் இவர்களைத் திசைமாறச் செய்கின்றன. குடும்ப வருவாய் அதிகமிருக்கும் பிள்ளைகள் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்துப் பிள்ளைகளை விட அதிகமாகவே உடலாரோக்கியம் கெடுகிறார்கள். இதற்குக் காரணம், முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியில்லாமை ஆகியவை.

சுமார் 18.1% பிள்ளைகளில் ஒரு பெற்றோரோ, இரண்டு பெற்றோருமோ நகரில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலோர் காலையுணவு உட்கொள்வதில்லை என்று தெரிய வந்துள்ளது. அத்துடன், உடற்பயிற்சியும் இவர்களுக்கிருப்பதில்லை. வசதியுள்ள வீடுகளில் இணைய வெளியில் உலவும் போதைக்கு அடிமையாகிறார்கள். இடைவிடாமல் தொலைக்காட்சி பார்க்கும் கெட்ட பழக்கமும் இவர்களிடையே அதிகமிருக்கிறது. வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும் சிறார்களும் இவர்களில் மிக அதிகம். வீட்டிலேயே பணம் திருடுவது, புகைப்பது, உடல் எடை கூடுவது, போதைப் பொருள் புழங்குவது, தற்கொலைக்கு முயல்வது என்று எல்லாமே பிள்ளைகளிடம் காணக்கூடியவை. சீனாவின் 18 க்குக் குறைந்த வயதுடையோர் புகைப்பது சட்டப்படி குற்றமாகும். இருந்தும், இவர்களில் 50.2% பேர் புகைத்திருந்தனர். 69.7% பேர் குடித்தனர். பெற்றோரைப் பிரிந்து வாழும் இளம்பெண்களில் மது அருந்துவோர் இப்போதெல்லாம் கூடி வருகின்றனர்.

நாட்டின் மொத்த பதின்பருவத்தினரில் 60% பேர் உள்ளடங்கிய ஊர்களிலும் கிராமங்களிலும் தான் வசிக்கிறார்கள். 10% சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிந்த குடும்ப அமைப்பின் காரணமாக 4-10 வயதுடைய சிறார்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு இருக்கிறது. 15.3% பேர் எப்போதும் சோகமாக இருந்தனர். 9.4% அவ்வப்போது சோக மனநிலையடைந்தனர். சிறுவர்களை விட சிறுமிகள் அதிக மன அழுத்தம் கொள்கின்றனர். கல்விக்கூடங்களுக்குப் போகாமல் இருக்கும் பிள்ளைகளும், படிப்பைப் பாதியிலேயே விடும் பிள்ளைகளும் அதிகம். கண்காணிக்கவும், அரவணைக்கவும் பெற்றோர் உடன் இல்லாத பதின்பருவத்தினர் தான் அதிகமாகக் கெட்டுப் போகிறார்கள். பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் யுவதிகள் வாலிபர்களைவிட அதிகம்.

இந்த ஊரில் பெற்றோருடன் வாழும் பிள்ளைகளுக்கும், பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் கல்வித் தேர்ச்சியில் அதிக வித்தியாசமில்லை. பெரும்பாலோருக்குப் பெற்றோரின் வேலை என்ன என்றோ, மாத வருவாய் என்ன என்றோ தெரியவில்லை. நிறைய பேருக்கு வீட்டில் கணினியோ, இணையமோ இல்லை. எதிர்காலத்தில் கல்வியுயர்வு பெறக்கூடிய வாய்ப்புள்ள இவர்களின் பெரும்பாலோரது தாய்மார்கள் கல்வி பெற்றவர்கள்.

பெற்றோரில் ஒருவர் உடன் இருந்தால் பிள்ளைகள் கெடும் வாய்ப்பு மிகக் குறைவாகவும், இருவருமே பிரிந்து வாழ்ந்தால் கூடுதலாகவும் இருக்கிறது. தந்தை வேறிடத்தில் வசிக்கும் பிள்ளைகளை விடத் தாய் உடன் இல்லாத பிள்ளைகளின் உடல்/மன வளர்ச்சியில் தேக்கம் வருகிறது. சரியான உணவுப்பழக்கம் இல்லாததால், உடல் பருமன் கூடும் பிள்ளைகளும் நிறைய இருக்கிறார்கள். உடலாரோக்கியக் குறையுடைய சிறுமிகளை விட சிறுவர்களே எண்ணிக்கையில் அதிகம்.

பெரும்பாலும் வயதாகும் தாத்தா பாட்டிகளால் பேரப்பிள்ளைகளைச் சமாளிக்க முடியாமல் தான் போகிறது. வீட்டுப்பாடத்தில் உதவுவதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஒரே தாத்தா பாட்டி பல பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் போது அவர்களால் சுத்தமாக முடிவதில்லை. பத்து வயதை எட்டும் போது பிள்ளைகளும் எதிர்த்து வாயாடுவதும், பிரச்சனைகள் கொடுப்பதுமாக மாறுகிறார்கள். இவர்களை விடுதியுடனான கல்விக்கூடங்களில் சேர்த்தால் ஓரளவுக்கு வழிக்குக் கொண்டு வர முடிகிறது. இல்லையென்றால், சிறார்கள் மெதுமெதுவாக வழிதவறுகிறார்கள்.

பல இடங்களில் சிறார்களும் இளையர்களும் கண்காணிக்கப் பெரியவர்கள் இல்லாமல் திரிகிறார்கள். துணையில்லாத இந்தப் பிள்ளைகள் சமூக விரோதிகளின் கண்ணில் படும் போது ஏற்படும் ஆபத்துக்கள் பலவகை. கடத்தப்படும் பிள்ளைகளைத் தவிர, தாமே வீட்டை விட்டு ஓடிப்போய் விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இதற்கு, பாட்டி தாத்தாக்கள் இல்லாததால் உறவினரிடம் வளரும் பிள்ளைகள் சரியாக நடத்தப் படாதது, கொடுமைப் படுத்தப்படுவது போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தனிமை, துயரம், நம்பிக்கையின்மை, ஆதரவற்ற நிலை, பயம், எதிர்மறைச் சிந்தனை, பெற்றோருக்கான ஏக்கம் என்று பலவிதமான உளவியல் பிரச்சனைகளோடு சதா சோகத்தில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்தில் நடமாடும் குற்றவாளிகளின் இலக்காகிறார்கள். பாலியல் சார்ந்த குற்றங்களால் பாதிக்கப்படும் சிறார்கள் நிறையவே இருக்கிறார்கள். கொத்தடிமைக்கும், பாலியல் தொழிலுக்காகவும் கொண்டு விற்கும் கும்பல்களால் பிள்ளைகள் கடத்தப் படுவதும் நடந்தவாறே இருக்கின்றன.

அரசு இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஆசிரியர்களை ‘தற்காலிக’த் தாயாகவும் தந்தையாகவும் நடந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறது. இது ஆங்காங்கே நடைமுறைப்படுத்தப் பட்டும் வருகிறது. பெற்றோருடன் வாழும் ஆரோக்கியச் சூழலில் வளரும் மாணவனை ‘தோழ’னாகக் கோர்த்து விடச் சொல்கிறது. அவ்வப்போது பேசிப் பகிர தனிமையில் இருக்கும் பிள்ளைகளுக்கு தோழனோ தோழியோ கிடைப்பான்/ள் என்பதே எதிர்பார்ப்பு. ‘நீல வானின் கீழ் அனைவரும் கூடி ஒன்றாய் முன்னேறுவோம்,’ என்றுரைக்கிறது அரசு.

தன்னுடைய நகரமயமாக்கல் திட்டங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, இப்பிரச்சனையை மறக்கடிக்கவென்று செய்யும் மூளைச் சலைவைகள் தான் இதெல்லாம் என்று சமூகவியலாளர்கள் விமரிசிக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் இருக்க வழி சொல்லாமல், ஹூகோவ் விதிமுறைகளில் இப்பிரச்சனைக்கு சாதமான மாற்றங்கள் ஏற்படுத்தாமல், இது போல பிரச்சினையை மேலோட்டமாகப் பார்க்கும் அரசின் போக்கை சில ஊடகங்கள் நார்நாராகக் கிழிக்கின்றன. இதொன்றும் சமீபத்தில் எழுந்த பிரச்சினையே இல்லை, பல்லாண்டுகளாக இருந்த பிரச்சினை தான். சமீப ஆண்டுகளில், தனித்து விடப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியபோது பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு முக்கிய கோணமும் இருக்கிறது. அதுதான், சிற்றூர்களிலும் கிராமங்களிலும் தனியே விடப்படும் மூத்த குடிமக்களின் கோணம். இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் சொல்வோரால் தனித்துவிடப் படுவோர் பிள்ளைகள் மட்டுமல்ல. முதியவர்களான பெற்றோரும் தான்.

77 வயதாகும் காய் ஹோங்யிங் என்ற மூதாட்டி தன்னந்தனியே ஒரு மண்வீட்டில் வசிக்கிறார். நகரிலிருந்து பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் பக்கத்திலேயே பல அறைகளைப் புதிதாக எழுப்பியிருக்கிறார். அறைகளுக்குள் ஒன்றுமே இல்லாமல் காலியாக கிடக்கிறது. வரும் ஆண்டுகளில் இனி அனுப்பப்படும் பணத்தை வைத்து வீட்டுச் சாதனங்களை வாங்க வேண்டும் என்கிறார். பிள்ளைகள் மட்டுமின்றி பேரப்பிள்ளைகளும் நகரத்தில் கடுமையாக உழைத்துச் சேமித்த ஒவ்வொரு காசையும் இதில் போட்டிருக்கின்றனர். ஆனால், அந்த வீட்டில் வசிக்க காவல் பூதமாய் நடமாடும் அந்த மூதாட்டியைத் தவிர வேறு யாருமில்லை. ரயில் கட்டணத்துக்கு சேமிக்க முடிந்து விடுப்பும் கிடைத்தால் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சீனப்புத்தாண்டுக்கு ஒருநடை வந்து விட்டுப் போவார்கள். இல்லையென்றால், அதுவுமில்லை. சிலரால் வரமுடிந்து மற்ரவரால் முடியாமலும் போகிறது. ஒருவருமே வராமல் இருந்தால், முதியவர்கள் அண்டை அயலில் வசிப்பவர்களோடு கொண்டாடுகிறார்கள். இப்படியான முதியோர்களின் எண்ணிக்கையும் சீனாவில் கூடி வருகிறது. இவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் அரசின் கவனத்துக்கு எப்போது வருமென்று தெரியவில்லை.

சீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது.

பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது. 20 ஆண்டுகளுக்குக் கட்ட வேண்டிய வீட்டுக் கடன் சதா அழுத்துவதாகச் சொல்வோர் அதிகமிருக்கிறார்கள். அதைவிடக் கிராமத்தையும், குடும்பத்தினர்களையும், கிராமச்சூழலையும், உற்றார் உறவினர்களையும், தூரத்திலிருந்து நினைவில் மட்டுமே மீட்டெடுப்பதையே மேலும் அதிகமானவர்கள் வருந்துகிறார்கள். நகரில் கிடைக்கும் பணத்துக்காக அவற்றையெல்லாம் இழந்திருப்பதாகவே கருதுகிறார்கள். “நகரத்துல குப்ப கொட்றதொண்ணும் ஈஸியில்ல. போட்டி கடுமையா இருக்கு. இப்ப இருக்கற வேலையும் எப்ப பறி போகும்னு தெர்ல. ஆனாலும், எல்லாத்தையும் விட்டுட்டு இங்கயேதான் இருக்கேன்,” என்கிறவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியென்றால் என்ன என்றே மறந்து போய்விட்டதென்று சொல்கிறவர்களையும் நிறைய சந்திக்க முடிகிறது.

நகரவாழ்க்கைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கான நாட்டமும் பேராசையாகி, கிட்டத்தட்ட நோய்போலப் பரவிவருவதாக கிராமத்து முதியவர்கள் கவலைப் படுகிறார்கள். நகருக்குப் போன பிறகு தான் தாம் நினைத்ததைப் போல நகரவாழ்க்கை சுலபமாகவோ நிறைவாகவோ இல்லை என்றுணர்கிறார்கள். ஆன்ஹுவேன் மாகாணத்தின் ஹேஃபேய் என்ற இடத்தில் வேலை பார்க்கும் காய் ச்சின்பின் என்ற தொழிலாளி கடத்த பத்தாண்டுகளாக நாலைந்து ஊர்களில் வேலை பார்த்துள்ளார். “கிராமத்துல சம்பாதிக்கறத விட இங்க ஐந்து மடங்கு சம்பாதிக்க்கறேன். ஆனா, வாழ்க்கை அத்தனை சுலபமா இல்ல இங்க. வெலவாசியும் கண்டபடி கூடிட்டே போகுது. இங்க சம்பாதிச்சு இங்கயே தானே செலவு செய்ய வேண்டியதிருக்கு. இங்க சம்பாதிச்சு கிராமத்துலயா போய் செலவு செய்யப் போறோம்? காசத் தேடி ஓடிகிட்டே இருக்கற எங்க மாதிரி ஆட்கள் உண்மைல நெறையவே இழக்கறோம்,” என்கிறார்.

ஷுச்செங் என்ற கிராமத்தைச் சேர்ந்த லீ பாங்ரோங் என்றொரு சிறுதொழில் முதலாளி நகரிலிருக்கும் தன்னைப் போன்ற சாதாரணத் தொழிலாளியை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார். இருந்தாலும், கிராமத்தின் மாசற்ற இயற்கைச் சூழல், குறைந்த விலைவாசி, குறுகிய பயண நேரங்கள், பரபரப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகிய எல்லாம் சேர்ந்து அமைதியான நிறைவு வாழ்க்கையைக் கொடுத்துள்ளதென்கிறார். அதே ஊரில் இருக்கும் இன்னொரு விவசாயத் தொழிலாளி, “சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்குன்னு ஏதேதோ சொல்றாங்க. அதப்பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெர்ல. ஆனா, இங்க ஒரு வருஷத்துல சம்பாதிக்கறத நகரத்துல மூணுநாலு மாசத்துல சம்பாதிச்சிரலாமாம்,” என்றவாறே நகரத்தில் கிடைக்கும் வேலைக்கான கனவில் ஆழ்கிறார். முதியவர் ஒருவர், “எல்லா இளவட்டங்களும் நகர நோக்கிப் போயிடறாங்க. வயசாளிகளுக்கு உடம்பு சரியில்லாமப் போனா கூட்டிட்டுப் போய் சிகிச்சை கொடுக்கக் கூட இங்க யாருமில்ல. சரி, அத விடுங்க. இங்க விவசாயம் செய்ய ஆள் இல்லங்க. நகரத்துல இருக்கற ஆட்கள் என்ன சாப்பாட்டுக்கு பதில் காசத் தான் திங்கிறாங்களா? அங்கயும் அரிசிச் சோறு தானே திங்கணும்? ஒருவேள, தொழிற்சாலைல அரிசி உற்பத்தி ஆகுதோ என்னவோ,” என்று சலிப்போடு அங்கலாய்க்கிறார்.

மிகவும் இறுகிய மனநிலையில், வருவாய் குறித்த கவலைகள் விலகாத நடுத்தர வர்க்க ஆட்கள் நிறைய நகரங்களிலுண்டு. அதேபோல மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களும், குறைவென்ற போதிலும் இருக்கவே செய்கிறார்கள். கல்வி பெற்ற, நல்ல வருவாய் உள்ள இடம்பெயர் ஊழியர்களுக்கு வீடு, வாகனம், குடும்பம், மனைவி மக்களுடன் நகரில் வாழ்க்கை நன்றாகவே அமைகிறது. கிராமங்களிலும் மகிழ்ச்சியாக வாழும் எளிய ஏழைகளுண்டு. சுற்றத்தார் சூழ வாழும் இவர்களுக்கு பணப் பிரச்சனையையும் கடந்த நிறைவு வாழ்க்கை அமைந்துள்ளது. பெருநகரங்களில் வசதிகள் அடிப்படையில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்து என்றாலும் மன அழுத்தங்களும் கூடவே அதிகரித்துள்ளன. “பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது. இருந்தாலும், பணம் பாதுகாப்பைக் கொண்டுட்டு தானே வருது,” என்பதே இன்றைய சீனர்களின் திடமான நம்பிக்கை. வெட்டி வறட்டு கௌரவத்துக்கும் நிறைவான வாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள இவர்கள் பேராசைகளும் ஆடம்பரங்களுமில்லாமல் வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்து வாழ்ந்தால் பணத்தால் சந்தோஷத்தைக் கொண்டு வர முடியும் என்றும் சமீப காலங்களில் தான் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை, தங்குவிடுதியுடனான பள்ளி போன்ற வசதிகள் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் குறைவு. இல்லவே இல்லை என்று கூடச் சொல்லலாம். இதுவும் தொழிலாளி குடும்பமாக இடம்பெயரத் தயங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஓரளவு வசதிகள் இருக்கும் ஊர்களுக்குப் போகும் போது ஹூகோவ் சிக்கல்கள் முன்வந்து நிற்கிறது. கிராமத்திலிருக்கும் நிலத்தை அப்படியே விடவும் முடியாமலிருக்கிறது. நகருக்குப் போகும் தொழிலாளிக்கு அந்த வசதிகள் எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் நகர ஹூகோவ் இல்லாதது. இந்தக் குறைகள் களையப்படாத வரையில், குடும்பங்கள் பிரிந்தே கிடக்கும். முதியோரும் சிறு பிள்ளைகளும் கிராமங்களிலேயே தனித்து விடப்பட வேண்டியது தான்.

(தொடரும்)

சீனாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகளால் குடும்பங்கள் சிதைந்து சிறு குழுந்தைகள் பெற்றோரின்றி தனித்து விடப்படும் நிலை குறித்த ஆவணப்படங்கள் இங்கே :

1. http://www.youtube.com/watch?v=l4o0Vx6rSLk

2. http://www.youtube.com/watch?v=VFn5CF70A1g