அடக்கப் பிரசங்கம்

அந்த ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உறவினர்கள் புகையைக் கக்கிக் கொண்டு கிளம்பிய ரயிலோடு ஓடிச் சென்றனர். தாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியோடும் தங்கள் உயர்த்திய கரங்களை அசைத்தனர்.

ஒரு இளைஞன் ரயிலில் ஒரு சன்னலருகே நின்று கொண்டிருந்தான். அவனது அக்குள் வரை கண்ணாடி உயர்ந்திருந்தது. அவன் இற்றுப் போன வெண் மலர்கொத்தொன்றைத் தன் மார்போடணைத்திருந்தான். அவனது முகம் இறுகியிருந்தது.

இளம் பெண் ஒருத்தி துடிப்பில்லாத குழந்தையொன்றை ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே தூக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவளுக்குக் கூன் முதுகு .

ரயில் போர் முனைக்குக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியை நான் அணைத்தேன்.

அறையின் மத்தியில் ஒரு சவப்பெட்டியில் அப்பா படுத்திருந்தார். சுவரெங்கும், சுவற்றையே மறைக்குமளவு நிறைந்திருந்தன புகைப்படங்கள்.

ஒரு புகைப்படத்தில் தான் பற்றியிருந்த நாற்காலியின் பாதி உயரமிருந்தார் அப்பா.

அவர் கவுன் போன்ற ஒரு ஆடை அணிந்திருந்தார், அவரது வளைந்த கால்கள் கொழுத்துத் திரண்ட உருண்டைகளாய் இருந்தன. பேரிக்காய் போலிருந்த அவரது தலையில் முடியில்லை.

இன்னொரு புகைப்படத்தில் அப்பாதான் மணமகன். அவரது மார்பில் பாதிதான் உங்களால் பார்க்க முடியும். மற்றொரு பாதியை அம்மாவின் கையிலிருந்த இற்றுப் போன வெண் மலர்கொத்து மறைத்தது. செவிமடல்கள் தொட்டுக் கொள்ளுமளவு அவர்களின் தலைகள் நெருங்கியிருந்தன

வேறொரு புகைப்படத்தில் அப்பா ஒரு வேலியின் முன் நெடுங்குத்தாய், விறைப்பாய் நின்றுக் கொண்டிருந்தார். அவரது காலணிகளுக்குக் கீழே பனித்தூள். அவரைச் சூழ்ந்த வெளியெங்கும் அத்தனை பனி இருக்கவும் எங்கும் வெறுமையே நிறைந்திருந்தது. அவருடைய கை சல்யூட் அடிப்பது போல் அவர் தலை மேல் உயர்ந்திருந்தது. அவரது காலரில் ரூன்கள் (எஸ்.எஸ். நாஜிப் படை சீருடை முத்திரைகள்).

அதற்கடுத்த படத்தில், அப்பா தன் தோளில் ஒரு களைக்கொத்தைச் சாய்த்திருந்தார். அவர் பின்னால் ஒரு சோளக் கதிர் வானை நோக்கி நிமிர்ந்து நின்றது. அப்பா தன் தலையில் தொப்பி போட்டிருந்தார். அந்த தொப்பி விரித்த நிழலில் அவரது முகம் மறைந்திருந்தது.

அதற்கடுத்த படத்தில், அப்பா ஒரு ட்ரக்கின் ஸ்டீரிங் வீலின்பின் அமர்ந்திருந்தார். ட்ரக் நிறைய பசுமாடுகள். ஒவ்வொரு வாரமும் அப்பா மாடுகளை நகரில் உள்ள கசாப்புக் கடைக்கு ஓட்டிச் செல்வார். அப்பாவின் முகம் இளைத்திருந்தது, முகவிளிம்புகள் இறுகியிருந்தன..

புகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார். புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது. நாற்காலியை விட்டு எழ முயற்சித்தேன், ஆனால் என் ஆடை மர நாற்காலியில் உறைந்து பிணைந்திருந்தது. என் ஆடை ஒளி ஊடுருவுவதாக, கருப்பாக இருந்தது. நான் அசையும்போதெல்லாம் அது உரத்துச் சரசரத்தது. எழுந்து அப்பாவின் முகத்தைத் தொட்டேன். அது அறையிலிருந்த பொருட்களை விடச் சில்லிட்டிருந்தது. வெளியே கோடைக் காலம். ஈக்கள் பறந்து செல்கையில் தம் புழுக்களை உதிர்த்தன. அகன்ற மணற்சாலையையொட்டி நீண்டு சென்றது கிராமம். அதன் பாதை உஷ்ணமாகவும் பழுப்பாகவும் இருந்தது, பாதையின் பிரகாசம் நம் கண்களைச் சுட்டெரித்தது.

பாறைகளாலான இடுகாடு. கல்லறைகள் மீது பெருங்கற்கள் இருந்தன.

நான் தாழக்குனிந்து பார்க்கையில் என் காலணி அடிநுனிகள் மேல் நோக்கி வளைந்திருந்ததை கவனித்தேன். இவ்வளவு நேரமாக நான் என் ஷூ லேஸ்களை மிதித்தபடி நடந்திருக்கிறேன். நீண்டு, கனத்து, என் பின்னால் கிடந்த அவற்றின் முனைகள் சுருண்டு உயர்ந்திருந்தன,

சிறு உருவம் கொண்ட இருவர், சிரமத்துடன் தள்ளாடிச் சவப்பெட்டியை சவ வண்டியிலிருந்து தூக்கி எடுத்து அதை பிய்ந்து கொண்டிருந்த இரு கயிறுகளால் கல்லறைக்குள் இறக்கிக் கொண்டிருந்தனர். சவப்பெட்டி ஊசலாடியது. அவர்களுடைய கைகளும் கயிறுகளும் நீண்டு கொண்டே இருந்தன. வறட்சிக் காலமாக இருந்தும், கல்லறையில் நீர் நிறைந்திருந்தது.

உன் அப்பா ஏராளமானவர்களைக் கொலை செய்தார், என்று குடி போதையிலிருந்த சிறுமனிதரில் ஒருவன் சொன்னான்.

நான் சொன்னேன்: அவர் போரிலிருந்தார். அவர் கொன்ற ஒவ்வொரு இருபத்தைந்து பேருக்கும் அவருக்கு ஒரு பதக்கம் கிடைத்தது. அவர் நிறைய பதக்கங்களை வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அவர் ஒரு டர்னிப் வயலில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தார், என்றான் அச் சிறுமனிதன். நான்கு போர் வீரர்களோடு சேர்ந்து அவர் அதைச் செய்தார். அவளது கால்களுக்கு இடையில் உன் அப்பா ஒரு டர்னிப்பை செருகினார். நாங்கள் கிளம்பும்போது அவள் ரத்தப் பெருக்கோடிருந்தாள். அவள் ஒரு ரஷ்யப் பெண். அதன் பின்னர் வந்த பல வாரங்களுக்கு, நாங்கள் அனைத்து ஆயுதங்களையும் டர்னிப்கள் என்றழைத்தோம்.

அது இலையுதிர்காலத்தின் இறுதிக் கட்டம், என்றான் அந்த சிறு மனிதன். டர்னிப் இலைகள் கருகி உறைபனியால் சுருண்டிருந்தன. அடுத்து அந்தச் சிறுமனிதன் சவப்பெட்டியின் மேல் ஒரு பெரும்பாறையைத் தூக்கி வைத்தான்.

குடி போதையிலிருந்த இன்னொரு சிறுமனிதன் தொடர்ந்தான்:

புத்தாண்டுக்கு நாங்கள் ஜெர்மனியில் ஒரு சிறு ஊரின் ஆபெராவுக்குப் போனோம். அந்த ரஷ்யப் பெண்ணின் அலறலைப் போல் அங்கே பாடகியின் குரல் கூர்மையாக எங்களை ஊடுருவியது. ஒவ்வொருத்தராக நாங்கள் அரங்கை விட்டு வெளியேறினோம். உன் அப்பா கடைசி வரை இருந்தார். அதன் பின் பல வாரங்களுக்கு அவர் அனைத்து பாடல்களையும் டர்னிப்கள் என்றும் எல்லா பெண்களையும் டர்னிப்கள் என்றும் அழைத்தார்.

அந்தச் சிறுமனிதன் ஷ்னப்ஸ் குடித்துக் கொண்டிருந்தான். அவனது வயிறு களகளத்தது. கல்லறைகளில் தரை நீர் உள்ள அளவுக்கு என் வயிற்றில் ஷ்னப்ஸ் இருக்கிறது என்று சொன்னான், அந்தச் சிறுமனிதன்.

அடுத்து அந்தச் சிறு மனிதன் சவப்பெட்டியின் மேல் ஒரு பெரும்பாறையைத் தூக்கி வைத்தான்.

அடக்கப் பேச்சாளர் சலவைக்கல்லால் ஆன ஒரு வெண்ணிற சிலுவைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை நோக்கி வந்தார். அவர் தன் இரு கரங்களையும் தன் கோட் பாக்கெட்டில் புதைத்து வைத்திருந்தார்.

அடக்கப் பேச்சாளர் தன் கோட்டின் பட்டன் துளையில் கையளவுக்குப் பெரிய ஒரு ரோஜாப்பூ வைத்திருந்தார். அது வெல்வெட் மிருதுவாக இருந்தது. அவர் என்னருகில் வந்ததும் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கரத்தை வெளியே எடுத்தார். அதை முஷ்டியாக இருந்தது. தன் விரல்களைப் பிரித்து நீட்ட முயன்றார், ஆனால் அவரால் அது முடியவில்லை. வலியில் அவரது கண்கள் வீங்கின. தனியராயிருந்து அவர் மௌனமாக அழலாயினார்.

போரில், உன்னால் உன் தேசத்தாருடன் சரியாகப் பழக முடிவதில்லை, என்றார் அவர். அவர்களை விரட்டி வேலை வாங்க முடியாது.

அடுத்து அடக்கப் பிரசங்கி சவப்பெட்டியின் மேல் ஒரு பெரும்பாறையைத் தூக்கி வைத்தார்.

இப்போது பருமனான ஒருவர் என்னருகில் வந்து நின்றார். அவரது தலை முகமில்லாத குழாய் போல் இருந்தது.

உன் அப்பா என் மனைவியுடன் பல ஆண்டுகள் படுத்திருந்தார், என்றார் அவர். நான் குடித்திருந்தபோது என்னை ப்ளாக்மெயில் செய்தார், என் பணத்தைத் திருடினார்.

அவர் ஒரு பாறையின் மேல் அமர்ந்தார்.

மிக இளைத்த, தோல் சுருங்கிய பெண் ஒருத்தி என்னை நோக்கி வந்தாள், கீழே துப்பிவிட்டு, என்னைச் சபித்தாள்.

ஈமச்சடங்குக்கு வந்த கூட்டம் கல்லறையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தது. நான் கீழே குனிந்து என்னைப் பார்த்துக் கொண்டேன். என் மார்பகங்கள் அவர்கள் அனைவரும் பார்க்கக் கூடியதாயிருந்தன என்பதை அறிந்து அதிர்ந்தேன். எனக்கு சில்லிட்டுப் போனது.

அனைவரின் கண்களும் என்னையே பார்த்திருந்தன. அவை வெறுமையாயிருந்தன. அவர்களுடைய கண் பார்வைகள் இமைகளின் கீழிருந்து குத்திட்டிருந்தன. ஆண்கள் தங்கள் தோள்களில் துப்பாக்கிகளைத் தாங்கியிருந்தனர், பெண்கள் தங்கள் ஜபமாலைகளை உருட்டிக் கொண்டிருந்தனர்.

அடக்கப் பிரசங்கி ரோஜாவின் இதழ்களைப் பிய்த்துக் கொண்டிருந்தார். ரத்தச் சிவப்பாயிருந்த ஒரு இதழைப் பிய்த்துச் சாப்பிட்டார்.

அவர் தன் கையால் எனக்குச் சைகை செய்தார். இப்போது நான் ஒரு உரையாற்ற வேண்டும் என்பது புரிந்தது. அனைவரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு ஒரு வார்த்தை கூடத் தோன்றவில்லை. தொண்டை வழியாக என் விழிகள் தலைக்கு ஏறி கொண்டிருந்தன. நான் என் கையை வாயில் வைத்து விரல்களை மென்றேன். என் கரங்களின் பின்புறங்களில் பற்கள் பதிந்திருந்தததை உம்மால் பார்த்திருக்க முடியும். என் பற்கள சூடாக இருந்தன. வாயின் ஓரங்களில் இருந்து ரத்தம் வடிந்து என் தோள்களில் இறங்கிற்று.

காற்று என் சட்டையின் கையைக் கிழித்துப் போனது. அது காற்றால் நிறைந்து உப்பி, கருப்பாய் வானில் மிதந்தது.

ஒருவன் தன் கைத்தடியை ஒரு பெரிய பாறையின் மேல் சாய்த்து வைத்திருந்தான். குறி பார்த்து என் சட்டைக் கையை தன் துப்பாக்கியால் சுட்டான் அவன். என் முன் விழுந்து மண்ணில் அடங்கியபோது அதில் குருதி தோய்ந்திருந்ததைக் கண்டேன். ஈமக் கூட்டம் கை தட்டியது.

என் கரம் நிர்வாணமாக இருந்தது. நான் அது காற்றில் கல்லாய்ச் சமைவதை உணர்ந்தேன்.

அடக்கப் பிரசங்கி சமிக்ஞை செய்தார். கரவொலி நின்றது.

நாம் நம் சமூகத்தைப் பற்றி பெருமை கொள்கிறோம். நம் சாதனைகள் நாம் பலம் குன்றி அழியாமல் காக்கின்றன. நம்மை அவமதிப்பதை நாம் அனுமதியோம், என்றார் அவர். நம்மை அவதூறு செய்வதை நாம் அனுமதிக்கப் போவதில்லை. நம் ஜெர்மன் சமூகத்தின் பெயரால் உனக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் தங்கள் துப்பாக்கியை என்னை நோக்கித் திருப்பினார்கள். என் தலைக்குள் செவிடாக்கும் வெடிச்சத்தம் கேட்டது.

நான் குப்புற விழுந்தேன், தரையைத் தொடவில்லை. அவர்களுடைய தலைகளுக்கு மேல் காற்றில் மிதந்திருந்தேன். அமைதியாகக் கதவுகளைத் திறந்தேன்.
.
என் அம்மா அனைத்து அறைகளையும் காலி செய்திருந்தார்.

அந்த அறையில் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இப்போது ஒரு நீண்ட மேசை இருந்தது. அது ஒரு கசாப்புக்காரனின் மேசை. அதில் காலியான ஒரு வெள்ளைத் தட்டு இருந்தது. பூ ஜாடியொன்றில் இற்றுப் போன வெண்மலர் கொத்தொன்று கிடந்தது.

அம்மா சன்னமான கருப்பு உடை அணிந்திருந்தாள். அவள் தன் கையில் ஒரு பெரிய கத்தியை ஏந்தியிருந்தாள். அம்மா கண்ணாடியின் முன் நின்று கொண்டு அந்த பெரிய கத்தியால் தன் அடர்ந்த நரைமுடிப் பின்னலை அறுத்தாள். அவள் தன் இரு கரங்களிலும் அந்தப் பின்னலை மேசைக்கு எடுத்துச் சென்றாள். அதன் ஒரு முனையை தட்டில் வைத்தாள்.

நான் என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் கருப்பே அணியப் போகிறேன், என்று சொன்னாள் அம்மா..

பின்னலின் ஒரு முனையில் தீ வைத்தாள். அது மேசையின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நீண்டு சென்றது. வெடித் திரியைப் போல் பின்னல் பொசுங்கியது. நெருப்பின் நாவுகள் அதை நக்கி விழுங்கின.

ரஷ்யாவில் என் தலைக்கு மொட்டை அடித்தார்கள். அதுதான் குறைந்தபட்ச தண்டனை, என்றாள் அவள். நான் பசியால் தடுமாறினேன். இரவில் ஒரு டர்னிப் வயலுக்குள் தவழ்ந்து சென்றேன். அதன் காவலனிடம் துப்பாக்கி இருந்தது. அவன் பார்த்திருந்தால் என்னைக் கொன்றிருப்பான். வயல் சரசரக்கவில்லை. அது இலையுதிர்காலத்தின் பிற்பகுதி. டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன, உறைபனியில் அவை சுருண்டிருந்தன.

என்னால் அதன்பின் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. பின்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது.

அவர்கள் உன்னைக் கொன்று விட்டார்கள், என்றாள் அம்மா.

அதற்கு மேல் எங்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை, அறையில் அவ்வளவு புகை இருந்தது.

நான் எனக்கு மிக அருகில் அவளது பாத ஒலிகளைக் கேட்டேன். விரித்த கைகளுடன் அவளைத் தேடியலைந்தேன்.

திடீரென்று அவள் தன் எலும்பான கையால் என் முடியை கொத்தாய்ப் பிடித்தாள். என் தலையை உலுக்கினாள். நான் அலறினேன்.

திடீரென்று நான் என் கண்களைத் திறந்தேன். அறை சுற்றிக் கொண்டிருந்தது. நான் இற்றுப் போன வெண்மலர் பந்தொன்றில் படுத்திருந்தேன், வாசல்கள் அடைக்கப்பட்டு.

அடுத்து நான் அந்த அடுக்கு மாடிக் கட்டிடம் சரிந்து தன்னை மண்ணில் பொடித்துக் கொள்வது போலுணர்ந்தேன்.

அலார கடிகாரம் ஒலித்தது. சனிக்கிழமை காலை, மணி ஐந்து முப்பது.

(முற்றும்)

இது ஹெர்டா முல்லரின் THE FUNERAL SERMON என்ற சிறுகதையின் தமிழ் வடிவம் . கதையின் ஆங்கில வடிவத்தை இங்கே வாசிக்கலாம் : http://www.nytimes.com/2009/10/09/books/excerpt-nadirs.html?pagewanted=allஹெர்டா முல்லரை குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரையை படிக்கலாம் :http://solvanam.com/?p=16723