சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2

இதன் முதல் பகுதியை இங்கே படிக்கலாம் : முதல் பகுதி

தூது

கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது.

திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன.

அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

என்கிறார் வள்ளுவர். மேலும்,

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

என்கிறார். மேலும்,

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

புராணங்கள், இதிகாசங்கள் தூது பற்றி நெடுகப் பேசுகின்றன. பாண்டவர்க்குத் தூது நடந்த பார்த்தனை ஆழ்வாராதிகள் பாடுகிறார்கள். சம காலத்து அரசியல் தூதர்கள் பலரைப் பார்க்கிறோம். அவர்களுள் புகழ் பெற்றவர் அமெரிக்க ஹென்றி கிஸிஞ்சர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வாரந்தோறும் தூது போகிறார்கள். கொடுங்கொலைகார இலங்கையர் சுற்றுப்பயணம் வந்து போவது போல் இந்தியாவுக்குத் தூது வந்து போகிறார்கள். உலக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கங்கள் நம் தூதுவர்களைப் பிற நாடுகளில் நியமித்து வைத்துள்ளனர். இன்றெல்லாம் கலாச்சாரத் தூதுவர்களாக சினிமா நடிகையர் போய் வருகிறார்கள்.

ஆனால் சிற்றிலக்கியங்கள் பேசும் தூது வேறு வகைப்பட்டன. சிற்றிலக்கியங்கள் எனப் பேசப்படும் 96 வகைப் பிரபந்தங்கள் பற்றிய இலக்கணம் எதுவும் தொல்காப்பியத்தில் பேசப்படவில்லை. ஆனால் இவற்றுள் பல, பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

சீவக சிந்தாமணியின் நாயகியர் எண்மரில், குணமாலை கிளியை சீவகனுக்குத் தூது விடுகிறாள். நள சரிதத்தில் அன்னம் தூது விடப்படுகிறது. இருக் வேதத்தில் சரமா எனும் பெயருள்ள நாயைத் தூது விட்ட செய்தி உளதென்பார்.

‘விரக தாபத்தால் பலபடியாகப் புலம்பும் காமம் மிக்க கழி படர் கிளவி வகைகளுள் இதுவும் ஒன்று’ என்பார் மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர். எனவே இத்தகு தூதுகள் அன்று இயல்பாக விடப்பட்டுள்ளன.

சத்திமுற்றத்துப் புலவர் பசியிலும் குளிரிலும் வாடி, தன் நிலையை மனைவிக்கு அறிவிக்கும் வண்ணம் நாரையைத் தூது விட்ட பாடல் தமிழ் இலக்கியப் பரப்பில் அற்புதமானது.

நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

என்று தொடங்கும் அந்தப் பாடலை ஒரு முறை வாசித்தவர் வாழ்நாளில் மறக்க இயலாது. அதுவும், ‘கையது கொண்டு மெய்யது பொத்தி’ எனும் குளிரில் வாடும் அந்தப் பிரயோகம் வலிமையானது.

சங்க இலக்கியத்தில் நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, தேவாரம், திவ்யப் பிரபந்தம் முதலியவற்றுள் தூதுப் பாடல்கள் உள்ளன.


பயிலரும் கலி வெண்பா வினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூது

என்பர்.

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று இல்லை என்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.

திருமாலிருஞ்சோலை அழகர் மீது பாடப்பட்ட கிள்ளை விடு தூது தவிர்த்து, வேறு கிள்ளை விடு தூதுகள் கிடைத்திலது என்கிறார் பதிப்பாசிரியர் உ.வே.சா.

உ.வே.சா. பதிப்பித்த தூது இலக்கியங்கள் :

1. திருமாலிருஞ்சோலை கிள்ளை விடு தூது
2. கச்சியானந்த ருத்திரேசர் வண்டு விடு தூது
3. மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
4. பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
5. மான் விடு தூது
6. புகையிலை விடு தூது

முதலியன.

தமிழ் விடு தூது சிறப்பித்த இரு வரிகள் :

‘இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் ‘

நினைவுக்கு வருகிறது.

திருமாலிருஞ்சோலை கிள்ளை விடு தூது

திருமால் இரும் சோலை, பாண்டிய நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டினுள் ஒன்று. சங்க இலக்கியத்துள் பரிபாடல் இத்தலத்தைச் சிறப்பித்துப் பேசுகிறது.


இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தோன்றியப் புகழது

எனும் வரிகள் இத்தளத்தின் பெருமை பகர்கின்றது பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை பேசும் பழமுதிர் சோலை என்பதும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் திருமாலிருஞ்சோலை என்பதும் இந்தத் தலம்தான்.

பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை

என ஆண்டாள் பாடுகிறார்.

இந்த நூலின் ஆசிரியர் பவபட்டடைச் சொக்கநாத பிள்ளை. மதுரையைச் சார்ந்தவர். 270 ஆண்டுகள் முன்பு எழுதப் பெற்ற தூது இது. மும்மணிக் கோவை, யமக அந்தாதி, தேவியுலா, பத்மசிரநாதர் தென்றல் விடு தூது முதலியன இவர் யாத்த பிற.

கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் இவரது சமகாலத்தவர். சைவரான இவர் அழகரைப் பாராட்டிப் பாடிய சமயப் பொறை போற்றத்தக்கது.

அடுபோர் மறம் தரு சீவகனார் மங்கையில் தத்தை
சிறந்தது நின் பேர் படைத்த சீரே

என்று கிள்ளையைக் குளிரப் பேசுகிறார் சொக்கநாதப் புலவர். சீவக சிந்தாமணியின் காப்பியத் தலைவன் சீவகன்; அடுபோர் மறம் மிகுந்தவன்; அவனுக்கு எட்டுத் தேவியர்; அவருள் சிறந்தவன் காந்தர்வ தத்தை; அந்தப் பேர் படைத்த தத்தை எனும் கிளியே அது உன் சீர் என்பது பொருள்.

அழகரைப் பாடும் இடங்கள் பல தரமானவை.

செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும்
சங்கமும் சக்கரமும் தாங்கினோன் – அங்கண் உலகு
உண்ட கனிவாயின் உறையும் திருவயிற்றான்
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் – மண்டி
அளந்த திருத்தாளான் அன்றேற்ற கையான்
விளைந்த பொருள் காட்டும் மெய்யான்

என நீள்கின்றன கண்ணிகள்.

தலைவி, கிளியிடம் அழகரை நினைத்துப் புலம்புவது சிறப்பு.

– இபம் உண்ட
வெள்ளிற் கனியானேன், வேதனை ஈன்றவன் தான்
உள்ளிற் கனியானே, ஊர்ந்து வரும் – பிள்ளை மதி
செவ்வை மதியோ, திரைக்கடல் வாய் சிறிதோ,
கொவ்வை இதழார் மொழிதான் கூற்றன்றோ

எனும் கண்ணிகளில், ‘இபம் உண்ட வெள்ளிற் கனி’ என்பதற்கு யானை நோயுண்ட விளாம்பழம் என்றும், ‘வேதனை ஈன்றவன்’ என்பதற்கு வேதன் எனப்படும் பிரம்மனைப் பெற்றவன் என்றும், ‘செவ்வை மதி’ என்பது கோணிய மதி என்றும் பொருள் கொளல் வேண்டும்.

தலைவி, கிளியிடம், அழகரின் மாலை ஒன்று கேட்டு வர விடுத்த வேண்டுகோளாய்ச் சில கண்ணிகள்,

– நேசமுடன்
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள்
உம்முடைய மாலை உதவீரேல் – அம்மை திருக்
கோதையார் சூடிக் கொடுத்து வர விட்ட
தாதையார் மாலை தனித் தம்மின் என்பாய்!

எளிய தமிழ்தான், எனினும் சுவையரிவான் வேண்டி பொருள் சொல்கிறேன் – “எம்முடைய திருமாலிடம் நேசமுடன் இரு தோள் மாலை கேள். அவருடைய மாலை தந்து உதவ முடியாது எனில், அம்மை, திருக்கோதை நாச்சியார் சூடிக் கொடுத்து விட்ட தாதையார் மாலையினைத் தருவாய் என்பாய்”

இதில் ஒரு குறிப்பு உண்டு. திருவிழாக் காலங்களில், திருமால் இருஞ்சோலை அழகருக்கு, திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து கோதை நாச்சியார் சூடிக் கொடுத்த மாலை ஒன்று வரும் என்பது. அந்த மாலையையாவது தரச் சொல்லிக் கேட்பது பாடலின் நயம்.

மூவரையன் விறலி விடு தூது

விறலி விடு தூதுகள் யாவும் சிற்றின்பம் பேசி, நல்லின்பம் பேண அறிவுறுத்துவது.  நோக்கம் சிற்றின்பம்தான் என்பது தெளிவு. நீலப்படங்கள், குறுந்தகடுகள் வரும் என எண்ணிக்கூட பார்த்திராத காலத்து காமச் சித்திரங்கள். நற்குடிப் பிறந்தார் காமம் துய்க்க தாசி வழிச் சேரல், பொருள் இழத்தல், அவமானப்பட்டு, தாசியால் துரத்தப்பட்டு, விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்தைச் சேர்ந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தல். ஒருவகையில் இஃதோர் சினிமா ஃபார்முலாதான். யாவும் ஒரே மாதிரியாக எழுதப் பெற்றுள்ளன. குறுமன்னர்களின், பாளையப்பட்டுக்காரர்களின் உள்வட்டத்து ஆண்கள் கூடியிருந்து கேட்டுச் சுவைப்பார்கள் போலும்.

தெய்வச்சிலையார் விறலி விடு தூது, செண்டலங்காரன் விறலி விடு தூது, கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, நண்ணாவூர் சங்கமேசுர சாமி விறலி விடுதூது, சிவசாமி சேதுபதி விறலி விடுதூது என பல தூதுக்கள் இருக்கின்றன.

மூவரையன் விறலி விடு தூது இயற்றியவர் மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர். திருமலை நாயக்கர் காலம் என்கிறார்கள். மூவரையன் என்பார் வீரவநல்லூரைச் சார்ந்தவர் என்கிறார்கள்.

குமாரசாமி அவதானி எழுதிய தெய்வச்சிலையார் விறலி விடு தூது. 1650-ம் ஆண்டைச் சார்ந்தது என்கிறார்கள். திருநெல்வேலியை அடுத்த கிருஷ்ணாபுரம் எனும் ஊரைச் சார்ந்தவர்.

‘பாடுகின்ற வில்லாம், முரசாம், கை வெட்டும் கணியானாம்’ என்று 17-ம் நூற்றாண்டின் சிறுதெய்வ வழிபாடு பேசுகிறது இந்த விறலி விடு தூது.

விறலி விடு தூதுக்களிலேயே மிகச் சிறந்தது கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது ஆகும். 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்ப நாயக்கன் மேல் சுப்ரதீபக் கவிராயர் பாடியது.

விறலி என்பவள் யாழிசை, மிடற்றிசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்த மதங்கி. கெட்டு அழிந்தபின், அவளை மனைவியிடம் தூது அனுப்புவது தான் இவற்றின் சாரம். பாலியல் குறிப்புகள், செயல்பாடுகள் பேசும் இலக்கிய வகை எனினும் பல பண்பாட்டு, வரலாற்றுக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

சவுளிக் கடை, ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு, எனும் சொற்கள் புழங்குகின்றன. 1600 காலகட்டத்தில் தாசிப் பெண்களின் ஆடையணிகள் பல அறிகிறோம். வீரவாழிப் பட்டு, பொன்னெழுத்துச் சேலை, வீதி வாணச் சேலை, வண்ணத் தார்ச் சேலை, முத்து வண்ணச் சேலை, நாரண வர்ணச் சேலை, அருகு மணிச் சோலை, கஸ்தூரி கொடிச் சேலை, சரிகைச் சேலை, கம்பாவரித் துகில், கம்பிச்சேலை என பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

பெரும்பாலும் மூவரையன் விறலி விடு தூதின் தகவல்களையும் பாடல் வரிகளையுமே ஈண்டு கையாள்கிறேன். கருவுற்ற பெண்ணின் உடல் மாற்ற்ம் பேசப் படுகிறது ஒரு பாடலில்.

-பைந்தொடிக்கு
மெய் பசந்து செவ்வாய் வெளிறி முலைக்கண் கறுத்து
மை பசந்த கண்துணையும் வட்டணிப்ப – பைய வயறு
உந்தவே உந்தி மெதப்ப ஒரு தெய்வம்
தந்த கருப்பம் தரித்திடலும்

என்று. இதில் குறிப்பு, கரிப்பம் தரித்தவர் தாசி, அதாவது தேவதாசி அல்லது தேவரடியாள். மனிதர் மூலமன்றி, தெய்வத்தின் மூலம் கருத்தரிக்க வாய்ப்பில்லை. என்றாலும் தந்தை யாரென அறுதியிட்டுக் கூற முடியாத சமூகச் சூழல். எனவே ‘ஒரு தெய்வம் தந்த கருப்பம் தரித்திடலும்’ என்ற வரி.

இளையதாசியைப் பற்றிய வர்ணனைக்கு சில வரிகள் மேற்கோள் :

மீனுக்கு உணவூட்டி வீசுகின்ற தூண்டில் என
மானுக்கு இரு கண்ணில் மைய்யுமிட்டாள் – செஞ்சொற்
கலையெல்லாம் கற்றுக் கிடந்தாள் சங்கீத
நிலையெல்லாம் சாதித்து நின்றாள் – துலையாப்
பரதவிதம் அத்தனையும் பார்த்தாள் மதன்நூல்
சுரதவிதம் அத்தனையும் தோய்ந்தாள் – இருதனமும்
நண்ணிப் புடைக்கும் முன்னே நாகக் குருளையப்போல்
கண்ணில் பரபரப்பும் காட்டினாள்

ஈண்டு, ‘இருதனமும் நண்ணிப் புடைக்கும் முன்னே’ என்கையில் தாசியின் இளமை சுட்டப் பெறுகின்றது. ‘முலை முற்றும் போந்திலவே’ எனும் சங்கப் பாடல் வரி போல. ‘நாகக் குருளையைப் போல் கண்ணில் பரபரப்புக் காட்டினாள்’ என்கையில் யானைக் குட்டியைப் போல் கண்களில் பரபரப்புக் காட்டியதாகப் பொருள்.

காசு கொடுத்தால் யாருடனும் கூடலாம் என்பது தாசிகுலத் தர்மம. கிழத்தாசி, இளைய தாசிக்கும் கூறும் அறிவுரைகள் சில :

பெட்டிச் சுமை எடுக்கும் பேயனும் கைக்காசு தந்தால்
கட்டிச் சுகம் கொடுக்கக் கட்டளை காண்

முக்கொடி செம்பொன் முடிப்புக் கொடுத்தாலும்
கொக்கோக மார்க்கருடன் கூடாதே

இதில் கொக்கோக மார்க்கர் என்பது கலவி நுணுக்கங்களில் கற்றுத் துறை போகிய விற்பன்னர் என்று பொருள் படும்.

இலக்கியவாதிகள் பற்றியும் ஒரு எச்சரிக்கை உண்டு.

பொன் போலத் துதிக்கும் புலவரை நீயும் துதித்துப்
பின் போய் கும்பிட்டு அனுப்பிப் பின்னை வா

இலக்கியவாதிகளிடம் துட்டுப் பெயராது, வேண்டுமானால் ஒரு வெற்று வாழ்த்துக் கவிதைதான் கிடைக்கும் என்பதைப் 16-ம் நூற்றாண்டு தாசியும் தெரிந்து வைத்திருக்கிறாள்.

இவண் யாம் விவரித்து எழுத ஒண்ணாப் பலவகை நுணுக்கங்கள் பேசப்படுகின்றன, விரிவாக, இன்று பாலியல் விஞ்ஞானப் புத்தகங்கள் குறிப்பிடும் பல செய்திகளையும் நம் புலவர் பெருமக்கள் அறிந்திருந்தனர். பெண் லிங்கம், காமன் கவிகை, சந்திர நாடி எனவும், எட்டுவகையான ஆலிங்கனம் குறித்தும், நகக்குறி, பற்குறி, நாபிக்குறி பற்றியும், சுகக்குரல் என்பதும், சம்போக சுகம் எழத் தட்டுதல் என்ற தாடனம் நால்வகை பற்றியும் அறிய வேண்டுவோர் நேரடியாக வாசித்து அறிக.

வசிய மருந்து கூட்டுதல் பற்றிய குறிப்புக்கள் உண்டு. அருவருப்பு உணர்ச்சி அதிகம் உடையவர் இப்பகுதியைத் தாண்டிப் போகலாம். வசிய மருந்தின் வகைப் பொருட்கள் :

அன்றில் இருந்த மரத்து ஆணிவேர்,
அன்று பிறந்த செந்நாய்க் குட்டியின் பின்னங்கால்,
முன்னாள் இறந்த தேவாங்கின் எலும்பு,
கறந்த பால்,
வெண்ணெய்,
அழும் பூனை மீசை,
பழம் செக்கின் எண்ணெய்,
குழறி அழும் மாதை(ஆந்தை) எச்சம்,
பாழ் ஊருக்குள் ஊமத்தை,
ஓரி(ஆண் நரி) கத்தும் போது பறைச் சேரிக்குச் சென்று எடுத்த சேவின்(எருதின்) பல்,
ஏரிக்குள் பார்ப்பானைச் சுட்ட இடத்தின் பழம் பாசி,
நாய்ப் பாகல்
பிந்து(சுக்லம்)
உடரி,
நன்னாரி,
பேய்க் கருப்பஞ் சாறு,
தலைவடி(முதல்வாற்று) சாராயம்

இத்தனையும் சேகரிப்பது என்பதவிட வசியம் செய்ய முயலாமல் இருப்பது எளிதாக இருக்கும்.

மூவரையன் விறலி விடு தூது வாசித்தவர் – அந்த நூலில் காணும் உவமை ஒன்றைக் கையாண்டால் – ‘சிறு வெள்ளரிக்காய்த் தோட்டத்து நரிபோல’ இந்நூலைச் சுற்றுக்கு விட்டனர் அன்று. அல்லது ‘ஆற்றில் கரைத்த புளி போல்’ ஆயினர்.

மிக அற்புதமான நாட்டார் வழக்குகள் பல கையாளப் படுகின்றன. மாதிரிக்கு ஒன்று : ‘பெரும் பகலே பாலும் பதக்குப் பருகிய பூனை இராக்காலம் உழக்குக் கறக்குமோ?’

மூவரையன் விறலி விடு தூதின் பதிப்பாசிரியர், குறிப்புரை ஆசிரியர், ஆராய்ச்சி உரையாசிரியர், டாக்டர். இரா. நாகசாமி ஆகும் என்பதோ சிறப்பு.

சேதுபதி விறலி விடு தூது

பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதுகுளத்தூர் சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றியது. பெரும்பாலும் அனைத்து விறலி விடு தூதுக்களும் அச்சு முறுக்குப் போன்ற வடிவம், தன்மை, அளவு, குணம். என்றாலும் சில பாடல் நயங்கள் வேறுபடுவதுண்டு. சில உவமைகள் அருமையாய்க் கண்படுவதுண்டு.

உவமை நயத்துக்கோர் எடுத்துக் காட்டு :

-பொன்னைப் போல்
கூட்டிய செந்தேன் எடுத்துக் கொண்ட பேர் நம்மை அவர்
ஓட்டிய ஈ தண்டிப்பது உண்டோ காண் – சூட்டு அரவின்
வாய்க்குள் அகப்பட்ட மண்டூகமும் யானை
வாய்க்குள் அகப்பட்ட வான்கரும்பும் – தீக்குள்ளே
விட்ட நறு நெய்யும் !

எனும் பாடல். அவற்றைப் போல வேசையர் கையில் கொடுத்த பொருளும் மீளாது என்பதற்கு உவமைகள்.

சுப்ரதீபக் கவிராயர் எழுதிய விறலி விடு தூது, சிற்றம்பலக் கவிராயர் எழுதிய விறலி விடு தூது, சரவணப் பெருமாள் கவிராயர் எழுதிய விறலி விடு தூது இவற்றினுள் அமைப்பில் வேறுபாடு இல்லை. சேதுபதி விறலி விடு தூதில், விறலியின் திறம்பாடும் கவிதை வரிகள் சுவாரசியமானவை :

பொங்கு தமிழ்ப் பால்வாங்கிப் பூங்கருணைத் தேன் கலந்து
மங்கள ராகப் பாகின் மத்தித்துச் – சங்கீதக்
கான ரசம் எழுப்பிக் கற்றோர் செவிக்கு அமுதப்
பான ரசம் என்ன இசைப் பண்காட்டித் – ………..
……. ………. ……….. ………. ……… ………..
பாரதியும் நாரணியும் பார்மகளும் தும்புருவும்
நாரதரும் வந்து நயம் கேட்பச் – சாரமுள்ள
பத்தர் மனம் தானுருகப் பட்டமரமும் தழையச்
சித்திரமும் கூடச் சிரம் அசைக்க – எத்திசையும்
விண்டுருகக் கல்லும் கரைந்துருகத் – தொண்டை சற்றும்
விக்காமல் வீணையிசை மிஞ்சாமல் பாடிய சொல்
திக்காமல் ராகம் சிதையாமல் – பக்கத்தில்
சித்தம் கலையாமல் சிற்றிடை தள்ளாடாமல்
குத்து முலையும் குலுங்காமல் – கத்தி முனை
வெல் அம்போ என்னும் விழி இமையும் கொட்டாமல்
வெல்லம் போல் பாடும் விறலியே !

என்று நடக்கும் பாடல்.

எண்ணற்ற தூது இலக்கியங்களில் சிலவற்றை மட்டும் மேலே அறிமுகம் செய்தோம்.

காதல்

இதுவும் ஒரு சிற்றிலக்கிய வகை. மடல் என்று மற்றொன்றும் உளது. இவ்விலக்கியங்கள் பற்றி எனது அறிவு, தகவல் எனும் ரீதியில் மட்டுமே. எனவே விரிவாகப் பேசப் புகவில்லை.

என்றாலும் கூளப்ப நாயக்கன் காதல் என்று ஒன்று கண்ணில் பட்டது. சிற்றின்ப இலக்கியமான காதல் எனும் பிரபந்த வகையினுள், கூளப்ப நாயக்கன் காதல் என்பதோர் சுவையான நூல். இதைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைத்துப் பயிற்றுவிக்க இயலாது. வாயில் பின் அடித்த புணர்ச்சிப் புத்தகங்கள் தமிழில் வருவதற்கு முன், கலவிப் புகைப்படங்கள் காணக் கிடைக்கும் முன்பு, கோயிற் சிற்பங்கள், ஓவியங்கள் மட்டுமே புணர்ச்சிக் காட்சிகளை அறிமுகப்படுத்திய காலத்தில் எழுந்த நூற்கள் இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றைத் தோற்கடிக்கும் பின் நவீனத்துவப் பிரதிகள் என்று பின் அடிக்காத பிரதிகள் தமிழில் உண்டு என்றாலும், அன்று இவை கிளர்ச்சியூட்டும் பனுவல்கள். தனித்த குழாங்களில் வாசித்து மகிழ்ந்த நூல்கள்.

காதல் சுவை மாத்திரமே கொண்டு எழுதப் பெற்றவை.

இதிலும் உலாவைப் போல ஏழ் பருவத்துப் பெண்களே. நிலக்கோட்டை ஜமீந்தார் கூளப்ப நாயக்கர் மீது சுப்ரதீபக் கவிராயர் பாடியது கூளப்ப நாயக்கன் காதல். அதுபோல் மதுரை திருமங்கலம் கம்மாளர் மரபில் தோன்றிய இராமசாமிக் கவிராயர், மதுரைக் காதல் என ஒரு காதல் பாடியதாகத் தெரிகிறது.

(தொடரும்…)

One Reply to “சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2”

Comments are closed.