20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 17

பாரிஸ் பாணி
The School of Paris (1910-40)
(Ecole de Paris)

1910-40 களுக்கு இடையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து பாரிஸ் நகரில் மோன்ட் மார்ட்டியேர் (Montmartire), மோன்ட் பார்னாஸ் (Montparnasse) குன்றுப் பகுதிகளில் நிலைகொண்டு ஓவியங்களைப் படைத்த தோராயமாக நூறு கலைஞர்கள் வாழ்ந்த காலம்தான் இவ்விதம் அழைக்கப் படுகிறது. இப்படி ஒரு அடையாளமிட்டது யார் என்பது உண்மையில் தெளிவானது அல்ல. பாரிஸ் நகரம் அப்போது கலையுலகின் மையக் களமாக இயங்கி வந்தது. புதிய ஓவிய உத்திகளான இம்ப்ரஷனிஸம், க்யூபிஸம், ப்யூசரிஸம் ஆகியவை தோன்றிய அங்கு பல்வித உத்திகளைப் பழகிய கலைஞர்கள் கூடிப்படைக்க ஒத்த சூழ்நிலையைக் கொண்டதாக பாரிஸ் நகரம் அப்போது விளங்கியது. ஐரோப்பாவில் எந்தக் கலைஞனுக்கும் பாரிஸ் நகரம் செல்வதும், அந்தக் கலைச்சூழலில் சுவாசிப்பதும் பெரு விருப்பமாகவும், வாழ்க்கையின் இலட்சியமாகவும் இருந்தது.

பாரிஸ் நகரைச் சுற்றி ஆறு குன்றுகள் உள்ளன. அண்மைக் காலத்தில் அவற்றில் மூன்று குன்றுகள் நகர எல்லைக்குள் வந்துவிட்டன. மோன்ட் மார்ட்டியேர் (Montmartire), மோன்ட் பார்னாஸ் (Montparnasse) இரு குன்றுகளும் இன்றும் கட்டிடங்களுக்கு இடையில் பசுமைப் புள்ளிகளாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வது அங்கு வசித்த ஓவியர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யும்.

மோன்ட் மார்ட்டியேர்
Montmartire
( Mountain of the Martyr)

கிருஸ்துவத் துறவிகள் டெனிஸ் (St.Denis), ருஸ்டிக் (Rustique), எல்யூதேர் (Eleuthere) மூவருக்கும் ரோம் நாட்டு மன்னன் (Aaretianus 272 A.D) மரண தண்டனை வழங்கினான். துறவி டெனிஸ் பாரிஸ் நகரின் முதல் தலைமைப் பாதிரியாவார். இந்தக் குன்றின் அருகில் அவர்களைத் துன்புறுத்தி பின்னர் தலைகளைக் கொய்து தண்டனை வழங்கப்பட்டது. துறவி டெனிஸ் வெட்டப் பட்ட தமது தலையை நீரினால் கழுவி, குருதி அகற்றி கையில் ஏந்தியவாறு குன்றின் மீதேறி இப்போது கோயில் இருக்குமிடத்தில் விழுந்து மரித்தார் என்று கிருஸ்துவ மத வரலாறு சொல்கிறது.

இக்குன்று 130 மீட்டர் உயரம் கொண்டது. மேலேயிருந்து பாரிஸ் நகரின் எழிலைக் கண்டு களிக்கலாம். குன்று பாரிஸ் நகர எல்லைக்கு வெளியே இருந்த தால் அங்கு நகரத்தின் வரிகள் வசூலிக்கப் படவில்லை. மேலும் அங்கு வசித்த கிருஸ்துவப் பெண் துறவிகள் தயாரித்து விற்ற திராட்சை மது தனது சுவையால் மக்களை ஈர்த்தது. காலப்போக்கில் மது விரும்பிகளின் உல்லாச இடமாகவும், 19ஆம் நூற்றாண்டின் முடிவிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் அது சமூகம் விலக்கிய ஒழுக்கக் கேடுகளின் மையப் பகுதியாகவும் மாற்றம் கண்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பழமரத்தை நாடிவரும் பறவையினம் போல அங்கு வந்து வாழத் தலைப்பட்டனர். பின்னாட்களில் உலகப் புகழ்பெற்ற பிக்காசோ (Picasso), மோடிக்லியானி (Modigliyani), வான்கோ (van gogh), டூலூஸ் லோட்ரெக் (Toulouse-Lautrec) போன்ற ஓவியர்கள் அங்கு ஒன்றாக வாழ்ந்து ஓவியங்கள் படைத்தனர். அவ்வாறு வாழ்ந்த ஓவியர்களை பொஹீமியன் கலைஞர்கள் (Bohemian Artists) என்று கலைத் திறனாய்வாளர் குறிப்பிட்டனர். (சமூகம் வரையறுத்த ஒழுக்கங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தம்மிச்சையாக, ஓவியர், சிற்பி, பாடகர், நடிகர், எழுத்தாளர் என்று கூடி வாழ்ந்த விதத்தை பொஹீமியன் வாழ்க்கை என்று அழைத்தனர்) அங்கு செல்வோரின் மனம் கவர்ந்த ‘மூலின் ரூஷ்’ (Moulin Rouge) என்ற காபரே திறந்த வெளி நடன அரங்கம், ‘லெ சட் நுவார்’ (Le Chat Noir) என்னும் உணவகம் இரு இடங்களிலும் கலைஞர்களும் மக்களும் கூடியிருப்பது தினசரி நிகழ்வாக இருந்தது.

மோன்ட் பார்னாஸ்
Montparnasse

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் குன்று கலைஞர்களின் வாழ்விடமாக மாறி, கலைகளின் அடிநாதமாக அதிரத் தொடங்கியது. 1910 திலிருந்து இரண்டாம் உலகப் போர் தொடங்கும் மட்டும் அங்கு கலைஞர்கள் தமது ஓவியங்களைப் படைத்தனர். வாழ்க்கையின் அனைத்து ஒழுக்கக் கட்டுப் பாடுகளையும் மறுத்து ஒதுக்கி, முறட்டுத்தம்கூடிய மன முறுக்கல்களுடன் வறுமையில் வாடிய அவர்கள் ஒருவேளை உணவுக்காக ஓவியங்களைக் கலை வர்த்தகருக்கு விற்றனர். இன்று அவை கோடிக்கணக்கில் மதிப்பிடப்படுகின்றன.

உணவகங்களும், மதுபானக் கடைகளும் அவர்களின் கருத்துப் பரிமாறல் களுக்கும், புதிய கற்பனைகளுக்கும் தளமாக விளங்கியது. மிகக் குறைந்த பணத்துக்கு மேசை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கலைஞர்கள் மாலை தொடங்கி பின்னிரவு வரை அங்கு தங்க உணவக முதலாளிகள் அனுமதித்தனர். உண்ணும் உணவிற்கு கொடுக்க போதிய தொகை இல்லாதவரிடம் கடனாக குறித்துக் கொண்டு பின்னர் அவர்களிடம் பணம் வரும் போது வாங்கிக் கொண்டனர். உறங்கிவிடும் கலைஞர்களை எக்காரணம் கொண்டும் எழுப்பக் கூடாது என்றும் பணியாட்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தனர். கலைஞர்களுக்குள் எழும் சர்ச்சைகள் அறிவார்ந்ததாகவும், மதுவின் தாக்கம் கொண்டதாகவும் இருவிதமாகவும் இருந்தன. வாய்ச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிவதும் உண்டு. என்றாலும் உணவக முதலாளிகள் எப்போதும் அதைத் தடுக்க காவல் துறையின் உதவியை நாடியதில்லை.

புதிதாக வரும் கலைஞர்களை முன்பே வசிக்கும் கலைஞர் கூட்டம் உற்சாகமாக வரவேற்றது. 1931 ஆம் ஆண்டில் அவ்விதம் ஜப்பானிலிருந்து அங்கு வந்த சுகுஹாரு ஃப்யூஜிடா (Tsuguharu Foujita) என்ற ஓவியர் வந்த அன்றே சூடான் (Soutine), மோடிக்லியானி (Modigliyani), பாஸ்வின் (Pasuin), லாஜெர் (Lager) போன்ற ஓவியர்களின் நட்பைப் பெற்றார். ஒருவார இடைவெளியில் பிக்காசோ Picasso, ஹென்ரி மாட்டிஸ் (Henri Matisse) இருவருடைய நண்பருமானார். அவ்விதமே, இங்கிலாந்திலிருந்து முற்றிலும் ஒரு அயல் தேசத்திற்கு வந்த பெண் ஓவியர் நினா ஹேம்னெட் (Nina Hamnett) அமர்ந்திருந்த மேசைக்கு அடுத்து இருந்தவர் அவரிடம் புன்சிரிப்புடன், ‘நான் ஒரு யூதன், என் பெயர் மோடிக்லியானி” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்கள் நட்பு பின்னர் இறுகியது. கலைஞர்கள் மட்டுமல்லாது, வ்ளாடிமீர் லெனின் (Vladimir Lenin), லியோன் ட்ரோஸ்கி (Leon Trotsky), போர்ஃபினோ டியாஸ் (Porfino Diaz), சைமன் பெட்லியாரா (Simon Petlyara) போன்ற நாடு கடத்தப்பட்ட அரசியல் தலைவர்களும் அங்கு வசித்தனர்.

பல ஓவியர்கள் மைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணப்பட்டு இடையில் வியன்னா, பெர்லின், முனிச் நகரங்களில் தங்கி, பின் பாரிஸ் நகரம் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் தங்கள் மண் அடையாளத்தையும் கூடவே கொணர்ந்தனர். இதன் காரணமாக, பாரிஸ் பாணி இம்ப்ரஷனிஸம், க்யூபிஸம், பாஃவிஸம் ஆகியவற்றின் தாக்கத்தில் தோன்றி வளர்ந்தது. இம்ப்ரஷனிஸம் பாரிஸில் தோன்றிப் பரவியபோதும் பிரென்ச் ஓவியர்கள் அதை ஒரு அன்னிய பாதிப்பு என்பதாகவே அணுகினர். ஆனால், இந்த ஓவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை நோக்கி நகர்ந்து, இயல்பாக அதை கையாளத் தொடங்கினர். தமது மண்ணில் கிடைக்காத ஒரு விடுதலை பாரிஸ் சூழ்நிலையில் கிடைத்தாக உணர்ந்தனர். தங்கள் நாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இணக்க மான கலைத்தளத்தை அவர்கள் மிகவும் விருப்பத்துடன் அணைத்துக் கொண்டனர். ‘கலைப் பரிதி பாரிஸ் பகுதியில்தான் தனது ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது’ என்பதாக ஓவியர் செகாவ் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர்கள் தமது நிலத்தின் நினைவுகளுடன் இளமைக்கால குதூகலங்கள், பழக்கங்கள், அனுபவித்த துயரங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுதான் பாரிஸ் நகரம் வந்தனர். நிலையற்ற வருமானத்துடன், குறைபாடுகள் கொண்ட, தண்ணீர் வசதியற்ற சிறிய வீடுகளிலும், பரண்களிலும் கூட்டாகத் தங்கி வாழ்ந்தனர். வாழ்வின் தோல்வியிலிருந்தும் அழிவிலிருந்தும், நேசமற்ற அன்னியச் சூழலிலிருந்தும் தப்பிக்க விரைவில் தங்களை ஒரு குழுவாக இணைத்துக் கொண்டனர். அன்றாடம் காய்ச்சிகளாக, என்னேரமும் இலக்கியம் பற்றியும், கலை பற்றியும் ஓயாத சர்ச்சைகளுடன், காதல் விவகாரங்களில் ஈடுபட்டுக் கொண்டும், ஏராளமாகக் குடித்தபடியும் இருந்தபோதும், அந்த ஓவியர்கள் தீவிரமாகவும் வெறியுடனும் ஓவியங்களைப் படைத்தனர். அங்கு நிலவிய கலைச் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தால் அவர்களது படைப்புகளில் முறட்டுத்தனத்துடன் கூடிய வண்ணக் கலவைகளுடன், மனவலியையும், வாழ்க்கை துயரங்களையும் வெளிப்படுத்தும் தன்மையும் தூக்கலாகத் தெரிந்தது.

ஒரு அறிமுகமில்லாத நவீன உலகத்துக்கு வந்துவிட்ட அவர்களால் தங்களது நிலத்தை என்றுமே மறக்க முடியவில்லை. சர்வாதிகாரியின் கொடுமை களிலிருந்து தப்பித்து வந்துவிட்ட போதிலும் அந்தப் புதிய விடுதலை என்பது ஒருவித மயக்கமானதாகத்தான் தோன்றியது. அவர்களின் அடி மனதில் எதிர் காலம் பற்றின வினாவும், அச்சமும் நிரந்தரமாக இருந்தன. பிரான்ஸ் குடிமகன் களிடம் எப்போதுமே அவர்கள் வேற்று நாட்டானாகவே, அன்னியனாகவே உணரப்படும் நிலைதான் நிலவியது.

‘1919 இல் ‘சலோன் ட^ஆடோம்’ “Salon d’Automme” காட்சிக்கூடத்தில் நடந்த ஓவியக் காட்சியில் கலந்து கொண்ட 950 ஓவியர்களில் 172பேர் வெளி நாட்டவர். அடுத்த ஆண்டு, ‘சலோன் ட இண்டிபெண்டன்ட்’ ‘Salon des Indipendants’ காட்சியில் 928 பேரில் 181 பேர் வெளி நாட்டவர். அதே கலைக் கூடத்தில் 1924 இல் நடந்த ஓவியக் காட்சியில் அவர்களின் எண்ணிக்கை 1150 பேரில் 322ஆக உயர்ந்தது’ என்று போலிஷ் எழுத்தாளர் ‘மாரியாஸ் ரோசியாக்’ (Mariusz Rosiak) குறிப்பிடுகிறார். பல ஓவிய வர்த்தகர்கள் அவர்களது ஓவியங் களை விரும்பித் தமது காட்சிக் கூடத்தில் விற்பனைக்கு வைத்தனர். பாரிஸ் நகர அறிவு ஜீவிகள் அவ்வோவியர்களை ஊக்குவித்து ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து மீண்டுவரத் தங்களை இணைத்துக் கொண்ட அந்தக் கலைஞர்கள் படைப்பு என்று வந்தபோது தனித்தே இயங்கினர். ஒரேபாணியை வளர்க்கவோ, குழுவாகவோ வளரவில்லை. உண்மையில் அவர்கள் வேறு எந்த இயக்கத்துடனும் இணையாததாலும், ஒரே இடத்தில் சேர்ந்து வசித்ததாலும் மட்டுமே ஒன்றாகச் சேர்த்துப் பேசப் படுகிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் யூத மதத்தினராக இருந்தனர். ஆகையால் அவர்களது படைப்புகளில் யூதர்களின் அடையாளம் இயல்பாகவே தெரிந்தது. இந்த ஓவியர்களை ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிச பாணி ஓவியர்களுடன் ஒப்பிடக் கூடாது. மார்க் ஷகால் (Marc Chagall), அமிடியோ மோடிக்ளியானி (Amedeo Modigliani), சுடின் (Soutine) போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் யூதர்கள்தான்.

கடந்த பல நூற்றாண்டுகளாக யூத மதம் உருவம் சார்ந்த ஓவியங்களைப் படைப்பதை தடை செய்திருந்தது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஐரோப்பாவில் யூத மதத்தின் பல பிரிவுகள் மதத்தின் அடிமைத் தளையினின்றும் விடுவிக்கப்பட்டன. அப்போது உருவங்கள் ஓவியங்களில் இடம் பெறுவதும் நிகழத் தொடங்கியது. அவற்றில் யூத மதத்தின் குறியீடுகள், அடையாளங்கள், வழிபாடுகள் போன்றவை இடம் பெற்றன. யூத ஓவியர்களின் பாரிஸ் பாணி வெற்றிப் படைப்புகளில் இவ்வகை முன்மாதிரி பதிவுகள் இடம் பெற்றன.

அங்கு பன்நாட்டு ஓவியர்களின் பலதரப்பட்ட எண்ணப் பதிவுகளும், பெற்ற அனுபவங்களும், மன அணுகல்களும் அவர்களது ஓவியங்களில் பதிவாயின. பாரிஸ் நகரம் அவர்களுக்கு ஒரு விரிந்த தளத்தைக் கொடுத்தது. ஓவியர்கள் தங்கள் கற்பனைகளை பளீரிடும் வண்ணங்களைக் கொண்டு சமதள மற்ற கித்தான் பரப்புகளில் ஓவியங்களாக்கினர். முதல் உலகப் போரின் குரூர மான விளைவுகளைக் காண நேர்ந்த அவர்கள் அதிலிருந்து மீள, வாழ்க்கையின் இனிமையையும் அழகையும், மனம் கிளர்ச்சி கொள்ளும் காமத்தையும் கருப் பொருளாக்கினர். நிலக் காட்சிகள், பெண் உடலின் எழில், அசையாப் பொருள் (Still Life) போன்றவை மீண்டும் மீண்டும் ஓவியங்களாயின. ஒருவேளை, அவர் கள் தமது நாடுகளிலேயே வசித்திருந்தால் இவ்விதப் படைப்புகளை உலகம் பெற்றிருக்குமா என்பது ஐயத்துக்குறியதுதான்.

என்னதான் தாம் வரித்துக்கொண்ட நாட்டின் கலாசாரமும் ஒத்திசைவும் அவர்களின் போற்றுதலுக்கு உரியதாக இருந்தாலும் பிரான்ஸ் மக்கள் அவர் களை ஒப்புக் கொள்வதிலும் தங்கள் கலையுலகிற்கு அவர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் காட்டினர். அவ்விதமே ஓவியர்களும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்களிடமிருந்து விலகியே செயற்பட்டனர். காலப்போக்கில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளும், துயரங்களும், இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வதும், தமது நாட்டின் இளமைக்கால நினைவுகளும், இந்த வாழ்க்கையின் மேல் ஒரு கசப்பை தோற்றுவித்தன.

1930 களில் ஐரோப்பிய நாடுகளில் வேற்று நாட்டுக் குடிமகன் என்பவனை அச்சத்துடன் வெறுக்கும் மனோபாவம் தோன்றி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் பாணி ஓவியர்களிடம் முன்னர் காட்டப்பட்ட அன்பும், சகிப்புத் தன்மையும் மறைந்து போயிற்று. தங்கள் நாட்டின் கலை மரபைக் குலைக்கும் விதமாக அந்த ஓவியர்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். முன்னர் அவர்தம் படைப்புகளைப் போற்றி, உதவிகள் செய்தவர் இப்போது அவர்களிடமிருந்து விலகிச் சென்றனர். 1920 களில் அவர்களைப் போற்றிய வால்டெமார் ஜார்ஜ் (Waldemar George) என்னும் கலைத் திறனாய்வாளர் இப்போது, “அவர்கள் மோன்ட் பார்னாஸ்இல் கட்டியது ஒரு சீட்டுக்கட்டு வீடு; பிரான்ஸ் நாட்டுக்கு இப்போது தனது மண்ணில் விளையும் விதையைத் தேடும் நேரம் வந்து விட்டது. அது தனது கலைமரபை மீட்டு நிறுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இவ்வித மாற்றங்களால் பாரிஸ் அச்சு ஊடகம் அவர்களைப் பற்றின கட்டுரைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது. அதன் பலனாய் அவர் களுடைய காட்சிகளுக்கு வரும் பார்வையாளரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஓவியங்கள் விற்பதும் குறைந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் இந்த ஓவியர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டனர். பின்னர் தொடர்ந்த இன்னல்களாலும் போரின் விளவுகளாலும் ஓவியர் பலர் பிரான்ஸ் நாட்டை விட்டு ஓடினர். பலர் போரில் மடிந்து போயினர். போருக்குப்பின் அனைத்தும் சிதைந்து போயின. மக்களிடம் பல வெளிநாட்டு ஓவியர்கள் தமது தலைநகரில் வசித்து ஓவியங்கள் படைத்தனர் என்ற மேலோட்டமான நினைவு மட்டுமே மிஞ்சியது. மீண்டும் அந்த நாட்கள் வரவே இல்லை.

பாரிஸ் நுண் கலைப் பள்ளி
des-Ecole Beaux Arts
(School of Fine Arts)

des-Ecole Beaux Arts பிரான்ஸ் நாட்டில் உள்ள பல பிரபலமான ஓவியப் பள்ளிகளைக் குறிக்கும் சொல்லிது. அவற்றில் மிகவும் புகழ்வாய்ந்த பள்ளி பாரிஸ் நகரில் உள்ளது. அது தொடங்கி 359 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு வந்து ஓவியம் பயின்று பின்னாளில் பெரும் புகழ் பெற்ற ஓவியர்களையும் சிற்பிகளையும் இப்பள்ளி உருவாக்கியது.

1648 இல் பிரான்ஸ் நாட்டின் முதலமைச்சர் கார்டினல் மஸாரின் (Cardinal Mazarin) “Academie des Beauz-Arts” என்னும் கலைப்பள்ளியை பாரிஸ் நகரில் நிறுவினார். ஓவியம், சிற்பம், ‘எங்கிரேவிங்’ (engraving), கட்டிடக்கலை போன்ற பல கலைகளை அங்கு இளைஞர்கள் கற்க அது காரணமாயிற்று. மன்னன் 14ஆம் லூயி (Louis XIV) அங்கிருந்து சிறந்த கலைஞர்களை ‘வெர்ஸைல்ஸ்’ (Versailles) அரச மாளிகையில் பணி செய்யத் தெரிவு செய்தான். 1863 இல் மன்னன் மூன்றாம் நெபோலியன் (Napoleon III) அப்பள்ளியை அரசின் பொறுப்பினின்றும் விடுவித்து தனித்தியங்கும் நிறுவனமாக மாற்றினான். அப்போது அதற்கு “ L’Ecole des Beaux-Arts” என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1897 இல் பெண்களுக்கும் பள்ளியில் சேர அனுமதி கொடுக்கப்பட்டது.

அப்பள்ளியில் ஓவியம்/சிற்பம் என்றும், கட்டிடக்கலை என்றும் இரு பிரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. என்றாலும் இரண்டும் பழைய கிரேக்க மற்றும் ரோமானிய வழி ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை ஆகியவற்றின் பாணியையே முன்னிறுத்தி மாணாக்கருக்குக் கற்பித்தது. அனைத்து மாணாக்கரும் தொடக்கத்தில் கோடுகள் மூலம் வரையும் (Basic drawing) முறையில் தேர்ச்சி பெற்றுத் தமது திறமையை வெளிப்படுத்திய பின்னரே ஓவியம்/சிற்பம் அல்லது கட்டிடக்கலை என்று தாம் விரும்பும் வழியை தேர்ந்தெடுக்கமுடியும். மாணவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகை கொடுக்கப்பட்டது. அதற்கென்று மாணவரிடையே தேர்வு வைக்கப்பட்டு அத்தேர்வு மூன்று நிலைகளில் ஒரு மாத காலம் நடந்தது.

உலகெங்கிலுமிருந்தும் ஆர்வமுள்ள இளைஞர் அங்கு வந்து சேர்ந்து கலை களில் தங்கள் திறமையை செழுமைப்படுத்திக் கொண்டனர். 1968 இல் மாணவர் நடத்திய கிளர்ச்சியின் விளைவாய் கட்டிடக்கலை பிரிவு கலைப் பள்ளியிலிருந்து பிரிந்து தனித்த நிறுவனமானது. இப்பள்ளிக்குப் பெருமை சேர்த்த பலரில் Gericault, Degas, Delacroix, Fragonard, Ingres, Monet, Moreau, Renoir, Sisley போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியர்களும் அடங்குவர்.

சலோன் (Salon) என்று விளிக்கப்பட்ட கலைக்கூடம்

சலோன் (Salon) என்ற அமைப்பு ‘Academy of Fine Arts’ (Academie des Beaux-Arts) என்ற நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது. அது அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 1748 / 1890 களுக்கு இடையிலான ஆண்டுகளில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை (Biannual) நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் மிகப் புகழ் வாய்ந்தவை. 1673 இல் அரசின் நிதி உதவி பெற்ற கலைகளைப் பேணிய நிறுவனம் ‘Academie Royal de Peinture et de Sculpture’ (இது ‘Academy of Fine Arts’ இன் கிளை நிறுவனம்) தனது முதல் சிற்ப/ஓவியக் காட்சியை Carre’ Salon காட்சிக் கூடத்தில் நிகழ்த்தியது. ஆனால், அது முழுவதுமாகப் பொது மக்களுக்கானதாக இருக்கவில்லை (Semy Public). அக்காட்சி வைத்ததன் முக்கிய நோக்கம், புதிதாகப் ஓவியப் பள்ளியில் பட்டயம் பெற்று வெளிவரும் கலைஞர்களின் படைப்புகளை காட்சிப் படுத்தி அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். அதன் தொடர்ச்சியாக, ஒரு கலைஞனின் படைப்பு ‘சலோன்’ இல் இடம் பெற்றால் அவனது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதால் கலைஞர்கள் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ‘சலூன்’ காட்சியகத்தில் தமது படைப்புகள் இடம்பெறுவதைப் பெருமையளிக்கும் நிகழ்வாகக் கருதினார்கள். அது ஒரு அரசின் அங்கீகாரமாகவும் பார்க்கப்பட்டது.

சலோன் (Salon) அல்லது பரி சலோன் (Paris Salon) என்று பின்னர் அழைக்கப்பட்ட அக்காட்சி தொடக்கமாக 1725 இல் லூவ்ரே அரசு மாளிகையில் (Palace of Louvre) வைக்கப் பட்டது. 1737 ஆம் ஆண்டில் அது முழுவதுமாக பொது மக்களுக்கானதாகவும் மாறி, தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை என்பதாகவும், பின்னர் ஒற்றைப்படை ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதாகவும் தொடர்ந்தது. அதன் இயக்கம் உறுதியானதாயிற்று. ஆகஸ்டு 25 ஆம் நாளில் தொடங்கிய அது சில வாரங்களுக்கு மக்களின் பார்வைக்கு இருந்தது. 1748 ஆம் ஆண்டில் படைப்புகளைத் தேர்வு செய்யும் குழு ஒன்று தொடங்கப்பட்டது. முந்தையக் காட்சிகளில் விருது பெற்ற கலைஞர்கள்தான் அதில் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டனர். அதுமுதல் குழுவின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது.

1748 / 1890 கால இயக்கம்

காட்சியில் படைப்புகள் சலூன் வளாகத்தில் கூரை முதல் தரைவரை எங்கும் இடைவெளியின்றிக் காட்சிப்படுத்தப்பட்டன. அதே முறையை மற்ற தனியார் காட்சிக் கூடங்களும் பின்பற்றின. அப்போது அச்சடிக்கப்பட்ட காட்சிக் குறிப்புகள் மற்றும் இதர விவரங்கள் கொண்ட கையேடுகள் பிந்தைய நாட்களில் கலை வரலாற்று வல்லுனர்களுக்கு பேருதவியாக இருந்தன. அரசு இதழ்களில் (Gazettes) வெளிவந்த காட்சிகளைப் பற்றின விவரணைகள் பின் நாட்களில் விமர்சனத் துறையினருக்கு முன் எடுத்துக்காட்டாக அமைந்தது.

பிரான்ஸ் புரட்சி மற்ற நாட்டுக் கலைஞர்களும் காட்சியில் தம் படைப்புகளை காட்சிப்படுத்த வழி செய்தது. 19 ஆம் நூற்றாண்டில் இது மேலும் விரிவு படுத்தப்பட்டு ஆண்டின் அரசு சார்ந்த முக்கிய விழாவாகத் தோற்றம் கொண்டது. தேர்வாளர்களால் தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் அதில் இடம் பெற்றன. மக்கள் நுழைவுக் கட்டணம் கொடுத்து பார்க்க அனுமதிக்கப் பட்டனர். பொதுக் கூடங்களில் (commercial halls) ‘வார்னிஷிங்’ (Varnishing) என்று அழைக்கப்பட்ட தொடக்க நாள் இரவு குதூகலம் நிரம்பியதாகக் கொண்டாடப்பட்டது. அப்போது கூடிய மக்கள் பற்றின கோட்டு ஓவியங்கள், விமர்சனம் போன்றவை செய்தித் தாள்களில் இடம் பெற்றன. 1849 ஆம் ஆண்டில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களைப் பாராட்டும் விதமாக, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்யும் வழக்கம் நடை முறைக்கு வந்தது. 1881 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு ஓவியர்களும் சிற்பிகளும் ஒருங்கிணைந்து “Societe des Artestes Franc,ais” என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அதன் ஆண்டுக் கண்காட்சி சலோன் என்னும் பெயரில் அழைக்கப் பட்டது.

‘நிராகரிக்கப்பட்ட’ கலைஞர்களின் காட்சி
(Salon des Refuses)
salon of the Rejected

இவ்விதம் தெரிவுசெய்யும் உறுப்பினர்களின் கட்டுப்பெட்டித்தனமான மனோ பாவத்தால் பல இளைஞர்களின் படைப்புகள் காட்சிகளில் இடம் பெறவில்லை. அப்படிக் காட்சியில் இடம் பெற்றாலும், காண்போரின் பார்வையில் இருந்து விலகிய பகுதியில் வைக்கப்பட்டது. 1860 களில் வளரும் கலைஞர்களின் இம்ப்ரஷனிஸ்ட், ரியலிஸ்ட் பாணி படைப்புகள் தேர்வுக் குழுவால் காட்சியின் தரத்துக்கு ஏற்றதாக இல்லையென்னும் காரணம்காட்டிப் புறம் தள்ளப்பட்டன. அதனால் மிகுந்த சினம் கொண்ட கலைஞர் கூட்டம் அரசன் மூன்றாம் நெபோலியனிடம் முறையிடவே, மன்னன் அந்தப் படைப்புகளை தனியாக ஒரு காட்சியாக நடத்திவைக்க முறை செய்தான்.

மே மாதம் 17ஆம் தேதி 1863 இல் சலோன் த பரி (Salon de Paris) வளாகத்தில் இக்காட்சி நடந்தது. அதில் இடம்பெற்ற மிகவும் பலவீனமாகவும் காட்சிக்கு பொறுத்தமற்றும் இருந்த பல படைப்புகள் திறனாய்வாளர்களின் கடும் சாடலுக்கு உள்ளாயின. என்றாலும், அவற்றுடன் Edouard Manet, James McNeill, Henri Fantin-Latour, Paul Cezanne, Armand Guillaumin, Johan Jongkind, Camille Pissarro போன்ற ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு சிறப்பு செய்தன.

இந்த அமைப்பின் ஓவியக் காட்சிகள் 1874, 75 களில் நடந்தன. ஆனால் 1881 இல் அரசு அதற்கு அளித்து வந்த பண உதவியை நிறுத்திவிட்டது. எனவே கலைஞர்கள் கூடி Societe des Artistes Francais என்னும் குழுவை அமைத்தனர். 1886 இல் ஓவியக்காட்சியையும் நடத்தினர். அதை சலோன் என்றே அழைத்தனர். குழுவில் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்தனர். குழுவின் தலைவர் ஒரு ஓவியர். துணைத்தலைவர் ஒரு சிற்பி 1890 ஆம் ஆண்டு அதன் தலைவர் William-Adalphe Bouguereau எதிர்காலத்தில் பரிசு பெறாத இளைய தலைமுறை கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் என்னும் கருத்தை குழுவின் முன் வைத்தார். அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமைப்பு உடைந்தது. பிரிந்த கலைஞர்கள் ‘Societe Nationale des Beaux-Arts’ என்னும் பெயரில் புதிய குழுவைத் தொடங்கினர். 1903 இல், குழுவின் செயற்பாட்டில் அதிகாரப் போக்கையும், பழைய பாணியைத் தூக்கிப்பிடிக்கும் பிடிவாதத்தையும் விரும்பாத ஒரு பகுதிக் கலைஞர்கள் விலகி, Pierre-Auguste Renoir, Auguste Rodin இருவரின் தலைமையில் ‘Salon d’Automne’ என்னும் அமைப்பைத் தொடங்கினர். அக்குழு ஓவியக் காட்சிகளையும் நடத்தியது.

கலைஞர்களின் செயற்பாட்டில் பல்விதக் கருத்து மோதல்கள் தோன்றுவதும், அது தொடர்ந்து புதிய குழுக்கள் தொடங்கப் படுவதும், அமைப்புகள் கிளைப்பதும் எப்போதும் இருப்பதுதானே?

(இத்துடன் ஃப்ரான்ஸ்நாட்டின் ஓவியக் கட்டுரைகள் முடிகின்றன அடுத்து வருவது ஜெர்மனிநாடு)

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்துங்கள்]
01-tsuguharu-foujita-little-cavalier02-tsuguharu-foujita03-chaim-soutine04-csoutine05-ninahamnet-woman
[/DDET]
(வளரும்)