மகரந்தம்

[stextbox id=”info” caption=”லிபியா – இரு அழுக்கு மூட்டைகளின் மோதல் களம்”]

ஒரு புறம் பார்த்தால் மேற்கு- அமெரிக்கா/ யூரோப் ஆகியன பெரும் கூட்டணியாகச் சேர்ந்து பல வகைகளில் லிபியாவைத் தாக்கி கதாஃபியை ஒழிக்க முயன்றிருக்கின்றன. மக்கள் தொகை என்று பார்த்தால் சிறு நாடான லிபியாவின் சர்வாதிகாரி கதாஃபி இத்தனை நாள் இந்த பெரும் தாக்குதலையும், உள்நாட்டுப் போராளிகளையும் சமாளித்ததே அதிசயம்தான். மேற்கு, லிபியாவில் செலுத்தியுள்ள பராக்கிரமத்தின் விஸ்தீகரணத்தைப் பார்த்தால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பொறுமையாகவும், நீண்ட தயாரிப்புடனும் இருந்தாலே மேற்கின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முடியுமென்பது தெரிகிறது. மேற்கும், அமெரிக்காவும் தம் ஏகாதிபத்திய நோக்கங்களையோ, உலகம் தம் ஆளுமையின் கீழ்ப்பட்டதே என்ற கர்வத்தையும் சிறிதும் இழந்ததாகத் தெரியவில்லை. லிபியாவின் கதாஃபி ஒரு அழுக்கு மூட்டை- அதாவது பெரும் ஊழல் பெருச்சாளி, 40 வருடங்களாக மக்களை இரும்புக் கரத்தில் நசுக்கி இருக்கிறார் என்பது நமக்குத் தெரிந்த போதும், ஒரு நாட்டை பல தூரப் பிரதேச நாடுகள் கூட்டணி போட்டு அழிக்க முடியும் என்பது 16-17 ஆம் நூற்றாண்டின் வரலாறு திரும்பி வருவது போன்ற உருவை நமக்குத் தருகிறது. காலனியத்தின், ஏகாதிபத்தியத்தின் இழி சாயம் பூசிய இந்த முகத்தோடு உலவும் மேற்கை, இந்தியரும் இந்திய அரசும் மிக எச்சரிக்கையோடும், தொடர்ந்த சந்தேகத்தோடுமே அணுகி வருவது நமக்கு நன்மையைத் தரும். மேற்கின் எந்தப் பேச்சையும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் குறைத்தே நோக்குவது நமக்கு பாதுகாப்பைத் தரும். தங்கள் வெற்றி குறித்து எப்படி அமெரிக்கப் பத்திரிகைகள் கொக்கரிக்கின்றன என்பதற்கு இதோ ஒரு சான்று.

http://www.wired.com/dangerroom/2011/08/tech-won-libya-war/?pid=638&viewall=true

[/stextbox]


[stextbox id=”info” caption=”அமேஸான் – ஆறுக்கடியில் ஓடும் ஆறு”]

அமேஸான் ஆற்றின் கீழே தரையடியில் அமேஸான் நதியை விட பன்மடங்கு அகலமான ஒரு நதி ஓடுவதாகக் கண்டறிந்திருக்கிறார்களாம். ப்ரேஸிலில்தான் எத்தனை வகை வளங்கள்? ஆனால் இன்னும் ப்ரேஸில் ‘வளர்ச்சி’ அடையப் பெரும் போராட்டத்தில்தான் இருக்கிறது. பல பத்தாண்டுகளாக வலது சாரி அரசுகள் இந்த நாடெங்கும் குற்றக் கும்பல்களை வளர்த்து விட்டுச் சென்றிருக்கின்றன. கடந்த பத்தாண்டில் இடது சாரி அரசு ஒன்று ஓரளவு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்திருக்கிறதென்றாலும், இன்னமும் இந்த நாட்டில் பெரு நகரங்களில் குற்றக் கும்பல்களின் கேட்பாரற்ற ஆட்சி நடக்கிறதென்பது இங்கு அடிக்கடி நிகழும் மோதல்கள் பற்றிய செய்திகளில் இருந்து நாம் காணலாம். இத்தனை இருந்தாலும் இயற்கை வளங்கள் குறித்த ‘கணக்கெடுப்பு’ ஒரு புறம் நடந்த வண்ணம் இருக்கிறதென்பதை இந்தக் கண்டுபிடிப்பு சுட்டுகிறது. நம் நாட்டிலோ மிகச் சாதாரணமான அகழ்வாராய்ச்சிகள், ‘கணக்கெடுப்புகள்’ போன்றனவற்றை உருக்குலைக்கவும், அடிப்படை நேர்மையோடும், அக்கறையோடும் அவற்றை நடத்த விடாமல் ஒழித்துக் கட்டவும் எத்தனை சக்திகள் செயல்படுகின்றன. இன்னமும் இந்தியக் கடற்கரைகளில் என்னென்ன நடந்தன, நடக்கின்றன என்பதைக் கண்டறிய மைய அரசுக்கோ, மாநிலங்களுக்கோ சிறிதும் ஈடுபாடு இல்லை. நம் நதிகளின் படுமோசமான நிலை குறித்துச் சொல்ல சொற்கள் போதுமா என்ன? இன்னும் தொழில் முறை உற்பத்தி சீனா அளவு பெருகாத நிலையிலேயே கூட நம் அரசுகள் அவற்றை எலலாம் சாக்கடைகளாக மாற்றுவதில் இறங்கி இருக்கின்றன. ப்ரேஸிலாவது ஏதோ முன்னேற்றங்களைக் காண்கிறதே என்று நாம் மகிழ வேண்டியதுதான் போலிருக்கிறது.

http://www.guardian.co.uk/environment/2011/aug/26/underground-river-amazon
[/stextbox]


[stextbox id=”info” caption=”குழு மேலாண்மை – எறும்புகளிடமிருந்து பாடம்?”]

எறும்புகள் எப்படி தம் குழு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றன, எப்படிப் புது நடவடிக்கைகளைத் துவக்குகின்றன, எப்படி பராமரிப்பைச் செய்கின்றன என்பது போன்ற கேள்விகள் விலங்கு உயிரியல் நிபுணர்கள்/ ஆய்வாளர்களை வெகு வருடங்களாக அரித்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்துப் பத்தாண்டுகளில், நிறைய தொழில் நுட்ப உத்திகளின் உதவிகள் கிட்டியிருப்பதால், ஒவ்வொரு வருடமும் புதுப் புதுத் தகவல்கள், முடிவுகள் கிட்டி வருகின்றன. இங்கு தரப்படும் சுட்டியில் போய்ப் படித்தால் எறும்புகள் எப்படிப் புது முடிவுகளை எடுக்கின்றன, அவற்றைக் குழு (புற்றுக் கூட்டம்) ஏற்கும்படி எப்படிச் செய்ய முடிகிறது என்பன குறித்துச் சில புதுக் கண்டு பிடிப்புகள் கிட்டுகின்றன. இவை ஏன் இந்த உயிரியலாளரை ஈர்க்கின்றன? இந்த வகை குழு அமைப்புகளை எறும்புகளே கூட சாதிக்க முடிந்தால் நாம் எத்தனை மேலாக இவற்றைச் சாதிக்க முடியும் என்பது ஒரு யோசனை எனத் தெரிகிறது. இந்த வகை தொடர் கோட்டை ஒரு சிறு உயிரினத்தின் நடவடிக்கையில் இருந்து விலங்கினங்களில் இன்றைய தேதியில் உச்ச பட்ச சிக்கல்கள் நிறைந்த சிந்தனை கொண்ட விலங்கான மனிதர் வரை இழுக்க முடியுமா என்பது ஒரு நியாயமான கேள்வி. ஆனாலும் நம்மைச் சூழ்ந்த உலகில் உயிரினங்கள் எப்படி இயக்கம் கொள்கின்றன என்பது தெரியாமல் நாம் ‘நம்மை’ எப்படி தெரிந்து கொள்ளப் போகிறோம்?

http://www.wired.com/wiredscience/2011/08/experienced-ants/
[/stextbox]


[stextbox id=”info” caption=”உலக வெப்பமேற்றமும் பறவைகளின் மாறும் வாழ்க்கை முறையும்”]

சூடாகி வரும் உலகம் என்பது இன்று அடிக்கடி கேட்கப்படும் ஒரு சொற்றொடர். இல்லை என்று மறுப்பாரும், நடந்து வருகிறது என்பாருமாக களம் ஒரே குழப்பமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இங்கு ஒரு கட்டுரை உலக உஷ்ணம் கூடுவதால் பறவைகள், பிராணிகள் எப்படித் தம் பன்னெடுங்கால வாழ்விடங்களை விட்டு நீங்கி மாற்றிடம் தேடுகின்றன என்பதைச் சொல்கிறது. முன்பு குளிர்ப் பிரதேசமாக இருந்தவை இன்று புதுவகைப் பறவைகள், தாவரங்கள், உயிரினங்களின் பெருக்கத்தைக் காணப் போகின்றனவாம். இந்த மாறுதல் ‘நிபுணர்கள்’ எதிர்பார்த்ததை விடத் துரிதமாக நடந்துவிட்டதாக இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

http://www.ft.com/intl/cms/s/2/afd5c698-cde8-11e0-a409-00144feabdc0.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் போர் எப்படி நடைபெறுகிறது?”]

100415-F-3759D-1585

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டரொன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. கீழே இருக்கும் கட்டுரை அமெரிக்க ஹெலிகாப்டர்களைக் கொண்டு எப்படி ஆஃப்கானிஸ்தானில் போர் நடத்துகிறது என்பதை விளக்குகிறது. நிச்சயம் நாம் படித்து அறிய வேண்டிய ஒன்று. இந்தக் கட்டுரையை படிக்கையில் போரின் கோரத்தையும், வீரர்களின் தியாகத்தையும் உயர்நவிற்சியில் சொல்லும் ஹாலிவுட் திரைப்படங்கள் நிச்சயம் உண்மையை ஒரு இம்மி கூட அளிப்பதில்லை என்றே தோன்றுகிறது. ஹெலிகாப்டர்களை ஓட்டுபவர்களின் மன மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள், ஒவ்வொரு நாளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவற்றை மிக தத்ரூபமாக அளிக்கும் கட்டுரை இது.

http://www.wired.com/dangerroom/2011/08/afghanistans-copter-war/all/1
[/stextbox]