நான்கு கவிதைகள்

இருட்கடலில்
இன்று தொலையும்
இவ்வுலகமென்றொரு எண்ணம்
வந்ததேனென்பதற்கு விடையில்லை
விழித்தெழும் கணத்தில்
உலகமிருக்குமென்பதற்கும்
உத்தரவாதமேதுமில்லை
இல்லாதவுலகில் நான்
விழித்தெழப்போவதில்லை
பிறகென்ன கவலை?

-o00o-

நடந்து செல்வதற்கில்லை
நிகழ்தல் பயணமல்ல
பந்தயம்
தோற்பது இகழ்ச்சி
தெருநாய்கள் துரத்தும்
சொறிநாய்கள் குரைக்கும்
ஒடு!

-o00o-

வழிநெடுக முகம்
தெரியாத யார்யாரோ
வருகிறார்கள் செல்கிறார்கள்
ஏனோ சிலர் புன்னகைக்கிறார்கள்
எவரோ சிலர் கைகுலுக்குகிறார்கள்
எவரோ சிலர் உடன்வருகிறார்கள்
எவரோ சிலர் விடைபெறுகிறார்கள்
சிலர் பலரில் மறைகிறார்கள்
பலரும் பனித்திரையில் பாதையிலிருந்து
பார்வையிலிருந்து மறைகிறார்கள் மெல்ல
பெயரை
குரலை
முகத்தை
நினைவில் நிறுத்த முயல்கிறேன்
மறதிக்கிணற்றில் மறைந்தவை போக
மற்றவையும் பிசகிவிடுகின்றன
நலமாவென்கிறார் யாரோ ஒருவர்
என்னைப்பார்த்து
என்னைப்போல.

-o00o-

தினமொரு திசையில் தீ
பற்றியெரிகிறதென் வீடு
தொட்டிலிலிட்ட பிஞ்சு
தோட்டத்தில் கதறும்
கலத்திலிருக்கும் சோறு
கையிலெடுக்க நெளியும்
நிசப்தக்கிணற்றில்
அழுகிற பெண்குரல்
நிசியில் அச்சுறுத்தும்
எண்ணவிடாது
உண்ணவிடாது
உறங்கவிடாது
செய்வதறியாது
சித்திரவதையாய்
கடந்த காலத்தை
கடக்கத்தெரியாத
கணமொன்றில்
இருகரங்களிலும் விரல்கள்
ஆறுள்ளவனை நடச்சொல்
நாயுருவிச்செடியொன்றை
நலிவுகள் தீருமென்று
சொன்னவன் சொல்
சொரணையிலுறைக்குமுன்
காற்றிலிசையாய்
காணாமல்போகிறான் ஏகநாதம்.
சான்றிதழ் பார்த்தா
சிகிச்சைக்குச் சம்மதிக்கிறாய்
அறிவு நடித்தது செவிடாக
அனுபவ உரைகல் கேட்க
நல்லதும் அல்லதும் நிகழ்த்தும்
பெருமாயவிசையொன்றை
அறிவு உணராது
இருமையின் மர்மக்கணங்களில்
மனமறிந்தடங்கும்
காணும் மனிதரின்
கைவிரல்களையெண்ணுகிறேன்