ஸீயஸ் அவதாரம் – தெய்வ வாரிசுகள்
ஸீயஸ் அவதாரம் கிருஷ்ணவதாரத்திற்கு இணையானது. கிருஷ்ணனுக்கு மாமன் கம்சன் எதிரி. கம்சனின் சாவு தங்கை தேவகியின் மைந்தனால் ஏற்படும் என்ற அசுரீரியை கம்சன் கேட்காமல் இருந்தால் கம்சன் ஒரு பாசமலராக இருந்திருக்கலாம். கிரேக்கக் கதையில் ஸீயஸ்ஸின் எதிரி அவன் தந்தை குரோனஸ். குரோனஸ் தன் தாய் ஜெயியேயின் சாபத்தால் கொடியவனானான். தாயின் கட்டளையை ஏற்றுத் தந்தையைக் கொன்ற குரோனஸ் – அதே தாய், ‘உனக்கும் உன் அப்பனைப்போல் உன் மகனால் மரணமடைவாய்’ என்று சாபம் இட்டு சபதமும் செய்திருக்காவிட்டால் குரோனஸ் நல்லவனாக வாழ்ந்திருக்கலாம். என்ன செய்வது? ஒலிம்பிக் யுத்தம் நிகழ வேண்டுமென்பது ஒரு தலையெழுத்து. விதிக்கு முன்பு மனிதன் மட்டுமல்ல. ஆண்டவனாலும் விதியை வெல்வது கடினமாக இருந்திருக்கிறது.
தந்தை குரோனஸ் வாரிசுகளை வேண்டித் தன் தங்கை ரியாவை மணந்தான். இதன் விளைவாக ஹெஸ்டியா, டி மீட்டர், ஹீரோ என்ற மூன்று புத்திரிகளும் ஹேடஸ், பாசிடான், ஸீயஸ் என்ற மூன்று புத்திரர்களும் பிறந்தனர்.
தாயின் சாபத்தால் எந்தப் பிள்ளையால் என்ன ஆபத்து வருமோ என்று தெரியாமல் பிள்ளைகளைப் பிடித்து விழுங்க நினைத்தபோது பாட்டியின் உதவியால் பாசிடோனும், ஹேடசும் கடலில் ஒளிந்து கொண்டனர். ரியாவின் கர்ப்பத்தில் ஸீயஸ் இருந்தான். பேறு பெற்றால் ஸீயஸ் குரோனஸ் வயிற்றில் ஜீரணமாவானே என்று பயந்து தாயின் உதவியை நாடினான். ஜெயியே ரியாவைக் கடத்திக்கொண்டு போய் கிரீட்டி குகையில் ஒளித்துவைத்தாள். சகுந்தலைக்கு பரதன் பிறந்தது போல் கிரீட்டி குகையில் பாதுகாப்புடன் ஸியஸ்ஸை விட்டுவிட்டு அரண்மனை திரும்பிய ரியா ஒரு கல் குழவியைத் துணியில் சுற்றித் தன் வயிற்றில் இந்தக் கல்குழவிதான் பிறந்தது என்று ரியா கூறவே, அந்தப் பொய்யை நிஜமென்று நம்பிய குரோனஸ் அந்தக் கல் குழவியை விழுங்கி ஜீரணித்தது.
கிரீட்டிஸ் உள்ள ஒரு குகையில் ரகசியமாக வாழ்ந்த குழந்தை ஸீயஸ் செவிலித்தாய் அமார்த்தியாவால் அரவணைக்கப்பட்டார். குழந்தையின் அழுகுரல் கேட்காதபடி குகைக்கு வெளியே கியூட்டஸ் என்ற ஆயுதமேந்திய இளைஞர்கூட்டம் காவலுடன் ஓயாமல் கூச்சலுடன் கும்மாளமடித்தவண்ணம் இருந்தனர். இன்றும்கூட கிரீஸ் நாடக மேடையில் கியூட்டஸ் போர் நடனம் விழாச்சடங்காக நடைபெறுகிறது. புயல் தேவதைகளாகவும் மலைதேவதைகளாகவும் மனிதர்கள் நடிப்பதுண்டு.
இவ்வாறு ஸீயஸ் வளர்ந்து பெரியவனானான். ஜெயியேயின் சாபம் நிறைவேறும் தருணம் வந்தது. ஓஷியானசின் மகள் மெத்திஸ் ஸியஸ்ஸுடன் துணைநின்று துணைவியுமாகிறாள். மெத்திஸ் வழங்கிய ஒரு மருந்தின் விளைவால் தந்தை ஓஷியானசின் உடம்பிலிருந்து பலவிதமான அசுரப்பேய் உருவங்கள் வெளிவந்து ஸீயஸ்ஸுக்கு அற்புதமான தெய்வீக சக்திகளை வழங்கின. இப்படிப் பல சக்திகளையும் பெற்ற ஸீயஸ் ஒலிம்பிக் யுத்தத்திற்குத் தயாரானார். குரோன ஸ் வெல்ல முடியாதவராயிருந்தார். குரோனசுக்குத் துணையாக ஓஷியானஸ், கோயஸ், கிரியஸ், ஹைபீரியன், அய்யாப்பீட்டஸ் ஆகிய ஐந்து சகோதர டைட்டன்களும் ஸீயஸ்ஸை எதிர்த்துப் போராடினர். ஸீயஸ் போரில் வெல்ல வேண்டுமானால், குரோனஸ் டார்ட்டாரஸ் சிறையில் அடைத்து வைத்துள்ள சைக்னோப்பசையும் ஹிக்கட்கோன் கீர்சையும் விடுவித்தால் ஸீயஸ் வெற்றிபெறுவார் என்று அசரீரி ஒலிக்கவே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேற்படி சைக்னோப்பஸ்- ஹிக்கட்டோன் கீரிஸ் வசமிருந்த அபூர்வ அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்ட குரோனஸ் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டார். இதர டைட்டன்களும் பாதாளச்சிறையில் அடைக்கப்பட்டு ஸீயஸ்ஸுக்கு உதவிய கடல் அசுரப் பேய்களே காவலும் இருந்தன.
ஒலிம்பிக் யுத்தம் முடிவுக்கு வந்தபின் சைக்ளோபன் ஸீயஸ் வசம் வஜ்ராயுதம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதைப் பயன்படுத்தினால் நினைத்த இடத்தில் மழை, புயல், இடிமுழக்கம் செய்யும். ஸீயஸ் தரப்பில் போரிட்ட அண்ணன் ஹேடசுக்கு சைக்ளோப்ஸ் ஒரு மாயக்கவசத்தைப் பரிசாக வழங்கினார். அதை அணிந்ததால் அடுத்தவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். அண்ணன் பாசி டோனுக்கு ஒரு வகை சூலாயுதத்தை வழங்கினார். அந்த சூலாயுதம் எப்படிப்பட்ட பகைவரையும் தோற்றோடவைக்கும். அதுமட்டுமல்ல பூமியில் பூகம்பத்தையும் கடலில் சுனாமியையும் உருவாக்கும். குரோனஸ் வகித்த இந்திரப் பதவியை ஸீயஸ் பெற்றார். தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானார். இருப்பினும் அமைதி திரும்பவில்லை.மீண்டும் போர். ஒலிம்பிக் யுத்தம் ஓய்ந்தாலும் அமிர்த யுத்தம் ஆயத்தமானது.
ஒலிம்பியாவில் (விண்ணுலகம்) ஸீயஸ் அவை மீது ஜெயியே மெள்ள மெள்ள வெறுப்புற்றான். ஸீயஸ்ஸால் சிறைப்பிடிக்கப்பட்ட டைட்டன்கள் எல்லோரும் ஜெயியேயின் புத்திரர்கள் என்பதால் அவர்கள் மீது பரிவுற்ற அசுரத்தாய் ஸீயஸ்ஸை வீழ்த்த திட்டமிட்டாள். குரோனஸ் யுரேனசை வெட்டிச்சாய்த்தபோது விழுந்த ரத்தத்துளிகளிலிருந்து உருவான அசுரக்கூட்டங்களை அசுரத்தாய் உசுப்பிவிட்டாள். இந்த அசுரக்கூட்டம் மந்திரம், தந்திரம் எல்லாம் தெரிந்த மாயாவிக்கூட்டம். எந்த வெட்டுக் குத்துக்கும் மரணமே ஏற்படாத அமிர்த் மூலிகையைத் தேடி அவர்கள் அலைந்து கொண்டிருந்தனர். எனினம் ஸீயஸின் துணைவி மெத்திஸ் மூலம் அசுரத்தாயின் சதித்திட்டத்தை அறிந்த ஸீயஸ் மேற்படி அசுரக்கூட்டத்திற்கு முன்பாகவே அம்மந்திர மூலியைப் பெறத் திட்டமிட்டார். விண்ணுலகில் வெளிச்சமே ஏற்படாதபடி சூரியச்சந்திரர்களுக்கு ஆணையிட்டு அம்மூலிகையைப் பார்க்க முடியாமல் அசுரக் கூட்டம் தடுமாறியபோது ஸீயஸ் இந்த அமிர்த மூலிகையை மீட்க தேவாசுரப் போர் தொடங்கியது.
ஸீயஸ் தெய்வத்திற்கு உறுதுணையாக மகள் எத்தினா அபூர்வ அஸ்திரம் தரித்தபடி உதவ வந்தால் மாயக்கவசம் தரித்து வீரசாகசப் புரியக்கூடிய ஹேடஸ், அண்ட சராசரத்தையே கலங்க வைக்கும் திறனுள்ள பாசிடோன், கிரேக்க நாட்டுக் கிருஷ்ணராகிய ஹிராக்ளிஸ் (ஹெர்கலஸ்) எல்லோரும் தேவர்கூட்டம். இந்த அமிர்தயுத்தம் ஒலிம்பியாவில் உள்ள திரேசியன் கடற்கரைத் தீவில் நிகழ்ந்தது.
பகைவர்களின் பலம் எல்லாம் ஜெயியே – அசுரப்போட்டி உசுப்பிவிட அரக்கர்கூட்டங்களில் வெல்லமுடியாத டைஃபோன் ஆவான். ஸீயஸ்ஸின் சிற்றப்பனான இவன் பலம் விண்ணைத்தொடும். எல்லா மலைகளையும் விட உயரமானவன். இவன் கையை நீட்டி கொண்டே போய் நட்சத்திரங்களையும் தொட்டுவிடுவான். இவன் கை விரல்கள் எல்லாம் பாம்புகள். கரத்தை நீட்டினால் நுõற்றுக்கணக்கான பாம்புகள் சீறும். இடும்பிலிருந்து கால்கள் வரை விஷப்பாம்புகள் அலை அலையாக நெளிந்து கொண்டிருக்கும். கண்கள் எரிமலைபோல் நெருப்புக்கோளங்கள். உடலில் இறக்கைகள் வேறு ராட்சசச் சிறகுகள் டைஃபோனைப் பார்த்த கணமே ஸீயஸ் மூர்ச்சையாகிவிட்டார். விண்ணுலக தெய்வங்கள் அஞ்சிக் குலை நடுங்கிப் போய் நாய்களாகவும் நரிகளாகவும் உருமாறினார்கள். எனினும் ஸீயஸ் மூர்ச்சை தெளிந்து எழுந்தபின்னர் போராடத் தொடங்கினர்.
ஸீயஸ்ஸும் எத்தினாவும் சேர்ந்து டைஃபோனுடன் நேருக்கு நேர் மோதினர். ஸீயஸ் டைஃபோனைப் பிடித்து தேசியஸ் மலைமீது சாய்த்து அவன் உடலைக் காயப்படுத்தினர். ஸீயஸ்ஸின் வாள்பலம் எல்லாம் தூள் டைஃபோன் ஸீயஸ்ஸை லபக்கென்று பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கி சிலீஷியா குகையில் சிறைப்படுத்தியதுடன் அவன் கை, கால் நரம்புகளைத் தனியே எடுத்து ஒரு கரடித்தோல்பையில் ஒளித்துவைத்துவிட்டு டெல்ஃபைன் என்ற நாகாசூரனைக் காவல் வைத்தான். ஆனால் ஸீயஸ்ஸுக்கு உதவ மகன் ஹெர்மசும், பேரன்பேன் என்ற பெயருள்ள “கிரேக்க தக்ஷனும்” முன்வந்தனர். பேரன்பேரனுக்கு ஆட்டுடலும் மனிதத்தலையும் உள்ளதால் கிரேக்கத் தக்ஷாவான். (இந்திய புராணங்களில் சிவனின் மாமனார் தக்ஷன் மாப்பிள்ளையை மதிக்காததால், மாமனாரின் மனிதத்தலையை ஆட்டுத்தலையாக்கிய சிவனின் உட்கருத்து தக்ஷனை மூடனாக எடுத்துக்காட்டுவதாகும்.) ஆனால் கிரேக்கதக்ஷன் புத்திசாலி. டெல்ஃபைனை ஏமாற்றி ஸீயஸ்ஸை விடுவித்து, ஸீயஸ்ஸின் நரம்புகளையும் கைப்பற்றிப் பேரன்பேன் செய்த ரண சிகிச்சையால் குணமடைந்த ஸீஸயஸ் புதிய வேகத்துடன் சிலிர்த்தெழுந்தார். அந்தக்காலத்தில் கறுப்பு – வெள்ளை ஜுபிட்டர் பிலிம்ஸ் வெளியிடும் சினிமாக்களில் ஜீபிட்டர் ரதம் ஓடும் காட்சியை நினைவு கொள்ளலாம். (ஸீயஸ் தெய்வமும் ரோமாபுரிக் கடவுள் ஜுபிட்டரும் ஒன்றே) அதுபோல் ஸீயஸ் ரதத்தில் அமர்ந்தபடி விண்ணில் பறந்தது ? பறக்கும் ரதத்தால் வஜ்ராயுதத்தால் தாக்கினார். யாரை? டைஃபோனைத்தான். அரண்டுபோன டைஃபோன் சிசிலியில் ஒளிந்து கொள்ளவே, எட்னா எரிமலைமீது அஸ்திரப் பிரயோகம் செய்து அக்னிக் குழம்பை டைஃபோன் மீது கொட்டும்படி ஸீயஸ் செய்து டைஃபோனை நெடுமரமாகக் கீழே சாய்த்து டார்ட்டாஸ் குகையில் அடைத்துவைத்தார். அத்துடன் அமிர்த மூலிகை யுத்தம் முடிவுக்கு வந்தது.
யுரேனஸ், குரோனஸ் ஆகிய தெய்வங்களுக்கு நிகழ்ந்தபடி ஸீயஸ்ஸுக்கும் அவன் புத்திரனால் மரணம் சம்பவிக்கும் என்று அசுரப்பாட்டி ஜெயியே சாபமிட்டாள். ஏனெனில் டைஃபோனின் தோல்வியை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ஸீயஸ்ஸின் அன்புக்குரிய வட்ட மகரிஷி மெத்திசின் இரண்டாவது புதல்வனால் இது சம்பவிக்கும் என்ற ரகசியத்தை அறிந்து கொண்ட ஸீயஸ் தன் முதல் மனைவியை மெத்திசை அப்படியே முழுசாக முழுங்கினார். முதல் குழந்தை அவள் கர்ப்பத்தில் இருந்தது. ஸீயஸ் வயிற்றுக்குள் சுவாசித்த மெத்திசுக்குப் பிரசவவலி வந்தது. கிரேக்க விசுவகர்மன் ஹெஃபெஸ்டஸ் வரவழைக்கப்பட்டான். ஸீயஸ் தன் மண்டையை இரண்டாகப் பிளக்கச் சொன்னான். பிளவுபட்ட மண்டையின் இடைவெளி வழியே மெத்திசின் வயிற்றிலிருந்த குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தைதான் எத்தினா. அவன் பெயரில்தான் ஏதன்ஸ் நகர் உருவானது. ஸீயஸ்ஸின் பிளவுபட்ட மண்டை ஒன்று சேர்க்கப்பட்டது. ஸீயஸ்ஸின் மண்டை வழியே பிறந்த எத்தினாவுக்கு ஸீயஸ்ஸின் எல்லா சக்திகளும் சித்திகளாவியன. அவன் புகழ்மிக்க போர்க்கடவுளானாள். பின்னர் மெத்திஸ் ஸீயெஸ் வயிற்றிலேயே அடக்கமானதால் இரண்டாவது குழந்தை பிறக்க வழியில்லாமல் போனதால் ஜெயியேயின் சாபமும் பலிக்காமல் போனது.
போர் ஓய்ந்த பின்னர் தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் இரண்டாவது தலைமுறை தெய்வங்களைப் படைக்கத் தொடங்கிவிட்டார். முதல் மனைவி மெத்திசின் வயிற்றில் வளர்ந்து ஸீயெஸ் தலைவழி வந்த எத்தினவே மூத்தவள்.
ஸீயஸ்ஸின் இரண்டாவது மனைவி தெமிஸ். தெமிஸ் தெய்வம் சட்டம், ஒழுங்கு, காலம் நேரம், பருவம் ஆகியவற்றைக் குறிக்கிறது. தெமிஸ் மூலம் மூன்று ஹவர்ஸ் பிறந்தனர். ஹவர்ஸ் மூன்று பருவங்களான யுனோமியா, டைஸ், எரினே ஆகும். தாவர வளர்ச்சியின் மூன்று பருவங்களையும் மூன்று புதல்வர்கள் குறித்தனர். தெமிஸ் மூன்று புத்திரிகளையும் பெற்றெடுத்தனர். விதியைக் குறிக்கும் இவர்களின் பெயர்களாவன, குளோத்தோ, லாச்செஸிஸ், அட்ரோப்போஸ்.
ஸீயஸ்ஸின் மூன்றாவது மனைவி யுரைநோம் என்ற கடல்தேவதை. இந்த உறவின் பலனாக மூன்று கிரேஸஸ் பிறந்தனர்- அக்லய்யா, யுஃப்ரோசைன், தாலியா இம்மூவரும் வனதேவதைகளாவர்.
ஸீயஸ் தனது தங்கை டி மீட்டர் மூலம் பெர்சிஃபோன் பிறந்தான். டீமீட்டர் கதைக்குப் பின்னர் தனியே கவனிக்ககலாம். இப்போது மிகவும் சிறப்பான மியூசஸ் கதைக்கு வருவோம். பாட்டைத்தான் மியூசிக் என்கிறோம். இந்த மியூசிக் கிரீஸில் பிறந்த கதை சுவாரசியமானது.
டிமீட்டரை விட்டுவிட்டு ஸீயஸ் ஐந்தாவது மனைவியாக நிமோசைனை மணந்ததின் விளைவால் ஒன்பது கலைவாணிகள் பிறந்தனர். இந்த ஒன்பதும் மியூசஸ் என்ற பொதுப்பெயராலும் அழைக்கப்படவதுண்டு. நிமோசைனின் சக்களத்தியாக ஹார்மோனியா எண்ணப்படுவதுண்டு. ஹார்மோனியாவை அட்லஸ் தோற்றுவித்ததாகவும் மியூசஸின் தாய் ஹார்மோனியா என்ற மரபும் உள்ளது. மியூஸஸ் பாடிய முதல்பாட்டு அமிர்த யுத்தத்தில் ஸீயஸ்ஸின் வெற்றிக்கு முழங்கப்பட்ட போர்கீதமாகும். மியூஸஸுக்கு அர்த்தமுள்ள ஒன்பது பெயர்கள் உண்டு.
1, காலியோப் (காவிய இசை)
2. கிளியோ ( கதை இசை)
3. பாலிஹைமியா (விகட இசை)
4. யூட்டர்ப் (புல்லாங்குழல் இசை)
5. ஏராட்டோ (பக்தி இசை)
6. மெல்போமினே (சோகப்பாட்டு)
7. டெர்சிகோ (நடன இசை)
8. தலியா (இன்ப இசை)
9. யுரேனியா (கிருக சஞ்சார இசை)
டைட்டன்களான கோயஸ் மற்றும் ஃபோபியின் இருபுதல்விகளையும் மணந்த ஸீயெஸ் முறையே, அர்ட்டமிஸ், அப்போலோ ஆகிய இரண்டு புகழ்மிக்க தெய்வங்களுக்குத் தந்தையானார். பின்னர் அட்லசின் மகளான மய்யாவை மணந்து ஹெர்மஸ் என்ற தெய்வத்தைப் பெற்றார். இறுதியில் தன் சகோதரி வல்லவளான ஹீராவுடன் ஏரஸ் என்ற போர்தெய்வத்தையும், முறையே அமிர்தம் வழங்கும் பணிதெய்வமான ஹெபியையும், மகப்பேறுக்குரிய எய்த்திலியா தெய்வத்தையும் பெற்றார். இதுவரை நாம் கவனித்த ஸீயஸ்ஸின் மனைவிகள் அனைவரும் தெய்வீ க மாதாக்கள். ஸீயஸ் மேற்கொண்டு சில மானுடப்பெண்களையும் – அதாவது அமரப்பேறு இல்லாத பெண்களையும் – மணந்து புகழ்மிக்க வீரதெய்வங்களையும் பெற்றுள்ளார்.
வரலாற்று ஆய்வாளர்கள் தோசாம்பி, பாஷாம் போன்றோர் ஹீராக்னீஸ் (ஹெர்கலஸ்) சாகசஸ்களை இந்தியக் கிருஷ்ணருடன் ஒப்பிடுவதுண்டு. அவ்வாறே டையோனைசஸ் கிரேக்க இந்திரனாவார். இந்த இரண்டு வீரதெய்வங்களும் ஸீயஸ் கொண்டிருந்த மானுடப்பெண்கள் உறவால் பிறந்தன. ஹீராக்ளீசின் தாய் அல்மினா. டையோனைசஸின் தாய் சிமிலி இந்த இரு வீரதெய்வங்களைப் பின்னர் விவரமாக கவனிப்போம்.
ஸீயஸ் உதவியில்லாமல் ஹீரா உருவாக்கிய ஹெஃபஸ்டஸ் சுயம்பூ. கிரேக்க நாட்டு விசுவகர்மன் இவனே. ஸீயஸ்ஸின் தலையில் ரணசிகிச்சை செய்து எத்தீனாவை வெளியில் எடுத்த இவன் திறமையை முன்பே கவனித்தோம்.
இவ்வாறு புதிய புதிய தெய்வங்களைப் படைத்துப் பொறுப்புகளை வழங்கிய ஸீயஸ் ஆணையின்படி ஒலிம்சில் இடம்பெற்ற 12 தெய்வங்களில் ஸீயஸ் முதல் தெய்வம். 2. பாசிடோன் 3. ஹெஃபெஸ்டஸ் 4.ஹெர்மஸ் 5. ஏரஸ் 1 6. அப்போல்லோ 7. ஹீரா 8. எத்தினா 9. ஆர்ட்டமிஸ் 10. ஹெஸ்டியா 11. அஃப்ரொடைட் 12.டிமீட்டர். இந்தப்பட்டியலில் சர்வவல்லமையுள்ள ஹீராக்ளீஸ் மற்றும் டையோனைசஸ் இடம்பெறவில்லை. ஒலிம்பஸ் என்பது கிரேக்க சொர்க்கம். மேற்படி இரு தெய்வங்களைத் தவிர வேறு பல தெய்வங்களும் ஒலிம்பசில் வசிக்க இயலாவிட்டாலும் இறக்கை கட்டிய தங்க ரதத்தில் விண்வெளிப்பயணம் செய்து உலகுக்கு ஒளிவழங்கின.
சூரியச் சந்திரர்களான ஹீலியஸ், செலீன், பின்னர் ஈவோஸ் (இந்திய உஷா – புலர்காலை) இந்த தெய்வங்கள் தனித்தனி அரண்மனையில் வசித்து வந்தன. குறிப்பிட்ட நேரங்களில் விண்வெளி ரதங்களில் ஏறி, பகல் இரவில் ஒளி, சூரியோதயம் ஆகியவற்றை வழங்குவது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
பின்னர் டைஃபோனிடமிருந்து ஸீயஸ்ஸை விடுவித்து நரம்பு வைத்தியம் செய்த பேன் என்ற ஆட்டுடல் தெய்வத்திற்கும் ஒலிம்பிகில் இடமில்லை. ஆர்க்கேடிய ஆட்டிடையர்களின் பிரார்த்தனைகளே நிறைவேற்றும் பேனின் மனைவியர் எல்லோரும் நீர்த்தேவதைகள். கிரேக்க இலக்கியங்களில் நன்மைபுரியக்கூடிய நீர்த்தேவதைகளுக்குப் பஞ்சமே இல்லை. எனினும் மனிதப்பண்புள்ள தேவகுமாரன் புரோமீத்தியாஸ் பற்றி அடுத்த இதழில் கவனிப்போம்.
(தொடரும்)