ஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்

அன்னா ஹசாரே தன் ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த கடந்த வாரக் கடைசி நாட்களில் உங்கள் மின் அஞ்சலில், அல்லது உங்கள் பழகுதளங்களில், அல்லது உங்கள் கைபேசியில் இந்த குறுஞ்செய்தி வரப்பெற்றிருப்பீர்கள்:

In 1982, In Singapore, LOKPAL BILL was implemented and 142 Corrupt Ministers & Officers were arrested in one  single day.. Today Singapore has only 1% poor people & no taxes are paid by the people to the government, 92%  Literacy Rate, Better Medical Facilities, Cheaper Prices, 90% Money is white & Only 1% Unemployment exists.

தமிழில் : ’1982ஆம் ஆண்டு சிங்கப்பூரில் லோக்பால் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரே நாளில் 142 ஊழல் மந்திரிகளும் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இன்று சிங்கப்பூரில் நூற்றில் ஒருவரே ஏழை.  அரசுக்கு யாரும் வரி செலுத்துவதில்லை. அங்கு 92% கல்வியறிவு நிலவுகிறது. சிறப்பான மருத்துவ வசதிகளும் மிகக் குறைந்த விலைவாசியும் உள்ள சிங்கப்பூரில் கறுப்புப் பணத்தின் அளவு பத்து சதவிகிதம் மட்டுமே. அங்கு நூற்றில் ஒருவரே வேலையில்லாமல் இருக்கிறார்.’

இதையடுத்து, “சிங்கப்பூரின் சாலைகளில் தேனும் பாலும் ஓடுகின்றன,” என்ற தகவலுடன் இந்தச் செய்தி தொடர்ந்திருந்தால் நமக்கு அதில் வியப்பதற்கு எதுவுமிருந்திருக்காது. இந்தக் குறுஞ்செய்தி சிங்கப்பூர் நிலவரத்தைவிட, இதன் வாசகர்களின் விருப்பத்தை, லட்சிய சமூகத்தை முன்வைப்பதாக இருக்கிறது நம் கனவுகள் நனவுலக அனுபவங்களின் நீட்சியாக உள்ளதுபோல், சிங்கப்பூரின் இந்தப் பொன்வண்ணச் சித்தரிப்பு ஒரு வித நிஜத்தின் தளத்தில் புனையப்பட்டுள்ளது. அதாவது சிங்கப்பூர் பொதுவாழ்வில் ஊழலை மிகவும் கட்டுப்படுத்தி விட்டிருக்கிறது. அதன் விளைவாக அங்கு பெரும் வளம் மக்கள் வாழ்வில் நிலவுகிறது என்று செய்தி சொல்ல முற்படுகிறது.

ஊழலைக் களைவதில் ஒரு நாடு முற்றிலும் வெற்றி பெற்றிருக்கக் கூட வேண்டாம், பெருமளவு குறைத்தது என்றால் அதுவே ஒரு அசாதாரணமான செய்திதான்.

சிங்கப்பூர் எப்படி ஊழலைக் குறைத்தது என்பதைப் பார்க்கும் முன் ஒரு கேள்வி:

1. எந்த ஒரு அரசும் ஏன் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்?

2. அதற்கான அவசியம்தான் என்ன?

மோசமான அரசில், பதவியில் இருப்பவர்களும் அதிகார வட்டத்துக்கு நெருங்கியவர்களும் ஊழலால் தனிப்பட்ட முறையில் பயனடைகிறார்கள்.  அதிகாரத்தில் இருப்பவர்களும், நெருக்கமானவர்களும் மட்டுமே பெரும் பயனடைந்து விடுவதால் அதை மோசமான அரசு என்கிறோமா, அல்லது அது மோசமான அரசாக இருப்பதால்  இப்படி நடக்கிறதா? இதில் காரண காரியம் என்னவென்று புரியாமல் போவதில் அதிசயம் இல்லை.  ஒன்று  மற்றதைச் சார்ந்து நிற்பது, இரு பாம்புகள் சுற்றிச் சுற்றித் தழுவியதைப் போலத்தான்.

மோசமான அரசை விடுத்து, ஒரு சராசரி மக்களாட்சியையே நோக்கினால், முதல் இரண்டு கேள்விகளுக்கு இன்னும் அவசியம் உண்டு என்பது தெரிய வேண்டும்.  தேர்தலில் வெற்றி பெரும் அரசு, நல்லாட்சி தருவதைத் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், அது ஏன் ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய தரப்பினரைப் பகைத்துக் கொள்ள வேண்டும்?

ஜனநாயக சமுதாயங்களில், கட்சி ஆதரவாளர்களில் கணிசமான நபர்கள் தாம் ஆதரவு தருவதனால் தம் சொந்த வாழ்க்கையில் ஏதாவது பயன் கிட்டும் என்று இயங்குகிறார்கள் என்ற கருத்து நமக்கு அதிர்ச்சி தருவதில்லைதானே?   வாக்களிப்பவர்களில் பெருமளவு மக்கள், ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கையில் இப்படி நேரடிப் பயன் நோக்கிய கணக்கில்லாமல் ஆதரவு தருவர் என்றிருக்கலாம். ஆனால் இந்தப் பொதுமக்களுமே சமூகத்துக்கு இந்தக் கட்சியின் ஆட்சியால் குறிப்பிட்ட நலன்கள் கிட்டும் என்று ஒரு நோக்கமில்லாமல், எதிர்பார்ப்பில்லாமல் ஆதரவு தருவதில்லை.   குறிப்பிட்ட நபரான தமக்கு நன்மை கிட்டும் என்ற கணக்கு இல்லாமல் இருப்பதே சுயநலனற்ற அரசியல் பங்கெடுப்பு என்று ஆகிவிடாது.  பொதுநன்மையை எதிர் நோக்கல் நிறைய பங்கு என்று வேண்டுமானால் சொல்ல இடம் உண்டு.

ஒவ்வொரு கட்சியின் அறிக்கைகள், கொள்கைப் பிரகடனங்கள், செயல் திட்டங்கள் ஆகியன அந்த நலன்கள் என்னவாக இருக்கும் என்று பட்டியலிடுவதை நாம் காண்கிறோம். அந்தப் பட்டியலின் நம்பகத் தன்மை, மேலும் அக்கட்சியின் செயல் திறமை ஆகியன குறித்த ஒரு குத்து மதிப்பான எதிர்பார்ப்பு இன்றி மக்கள் ஒரு கட்சிக்குத் தம் ஆதரவை வாக்குகளாக மாற்றிக் கொடுப்பதில்லை. அதே நேரம் இந்தக் கட்சிகளின் நோக்கங்கள், செயல் திட்டங்கள் ஆகியன குறித்து தகவலை மக்களுக்கு விருப்போடு எடுத்துச் செல்லும் கட்சியின் ஊக்கமிகு ஆதரவாளர்கள்,  கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள், தேர்தல் போதில் பிரச்சாரம் ஆகியனவற்றில் களத்தில் இறங்கிச் செயல்படுவோரில் பெரும்பங்கானவர்களின் நிலை நிறைய வேறாகத்தானிருக்கும். பொது ஜனங்களைப் போலன்றி  இவர்களில் பெருமளவினர்,   பயன்கள் சமூகத்துக்குக் கிட்டுவதோடு, தமக்குமே தனி நபரளவிலேயே கூடக் கிட்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்பது மக்கள் நடுவே பரவலாக ஏற்கப்பட்ட விஷயம்தான்.

தன்னோக்கு இல்லாப் பிறன் நலன் நோக்கு மட்டுமே உள்ள கட்சி ஆதரவாளர்கள், செயலர்கள் உள்ள கட்சிகளே நல்லவை என்பது ஒரு நெடுங்கனவே அன்றி எதார்த்தம் இல்லை.  இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி, தன் நெருக்க ஆதரவாளர்களுக்கு எந்த பயனையும் கொடுக்காது பொது நலனை மட்டுமே கவனிக்கும், கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பகல்கனவே அன்றி எதார்த்தமாக இருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இரண்டு கேள்விகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறது.  அவற்றுக்கு விடை காண முடியுமா என்று பார்க்கலாம்.

மக்களிடையே பெரிய அளவில் அதிருப்தி இல்லை எனில், எந்த அரசும் தன்னை ஆதரிப்பவர்களுக்கு எதிராக செயல்படத் தயங்கவே செய்யும். மக்களாட்சியில் வலுவான, தம் கருத்தை, விருப்பத்தை முன்வைப்பதில் மிக்க சாதுரியமும், ஊக்கமும் உள்ள சிறு குழுக்களின் / அமைப்புகளின் ஆதரவை எந்த கட்சியும் இழப்பதற்குத் தயாராக இருப்பதில்லை.  பரந்த ஜனத் திரள் என்பது அனேகமாக முனைப்பற்ற விருப்புகளின் களமாக மட்டுமே இருக்கிறது.   அந்த விருப்புகள் என்னவென்று அரசியல் களத்தில் நிறைய பயிற்சி உள்ள எந்தக் கட்சிக்கும் நன்கு தெரியும்.  அனேக நேரம் அந்த விருப்புகளுக்கு முகம் கொடுத்து அரசியல் களத்தில் அவற்றை அடையாளம் தெரியும்படிச் செய்வதில் திறமை உள்ள கட்சிகளே முன்னிலையில் இருக்கின்றன என்பதால் ஆளும் கட்சி (களும்) எதிர் கட்சிகளும் போட்டி  போட்டுப் பல விருப்புகளை அரசியல் களத்தில் முன்வைத்த வண்ணம் இருக்கின்றன. இதில் எதார்த்தமே, நியாயமே வெல்லும் என்றில்லை.  பல நேரம் வெற்று வேட்டான, உணர்வுக் கிளர்வை மட்டுமே உள்ளீடாகக் கொண்ட விருப்புகள் கட்சிகளால் தயாரிக்கப்பட்டு களமிறக்கப் படுவதும் நிறைய நடக்கும்.  பல பொய்யுருக்களின், கனவுகளின் நாடக அரங்கு வெகு ஜன அரசியல் என்பது ஜனநாயகத்தில் சகஜமான நிலை.

இந்த நிலையில் ஊழலுக்கு எதிரான அரசு அமைப்புகள் விளம்பரப் பூச்சுகளாக, நிஜத்தை மறைக்கும்  பொய்மைகளாக மட்டுமே இருக்கின்றன.  வளர்ச்சி பெறாத நாடுகளிலோ, இவை கடன் கொடுத்து உதவும் வெளிநாட்டு நிதி அமைப்புகளைத் திருப்திப்படுத்தவும், உள்நாட்டில் சீர்திருத்தம் வேண்டுபவர்களை சமாதானப்படுத்த தற்காலிக வடிகாலாகவுமே பயன்படுத்தப்படுகின்றன. சில மோசமான அரசுகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உருவான அமைப்புகளைப் பயன்படுத்தி, தமக்கு எதிரான கட்சிகளை ஒடுக்கி, தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளக்கூட பயன்படுத்திக கொள்கின்றன.

சில விசேஷ காரணங்கள் இருந்தாலன்றி ஊழலுக்கு எதிரான அமைப்புகள் வெற்றி பெறுவதில்லை. அந்தக் காரணங்களில் முக்கியமான ஒன்று இது: மக்களில் கணிசமானவர்கள் ஊழலை எதிர்க்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும்.

அதுவோ பொதுவாகக் கடும் பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்தே நிகழ்கிறது. கடும் பொருளாதாரச் சிக்கல்கள், பொருளாதார சீர்திருத்தங்களை ஒருமனதாக செயல்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்தித் தருகின்றன.  இத்தகைய ஒருமித்த குரலின் எதிரொலியாக ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவை பெரும்பான்மையினரின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும்போது பொதுவாழ்வில் நேர்மையை வலியுறுத்துவது வெற்றி பெறுகிறது. இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு இல்லாத நாடுகளில் தலைவர்கள் எவ்வளவு நேர்மையாகவும் மக்களின் ஆதரவைப் பெற்றவர்களாகவும் இருந்தாலும், ஊழலை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்  திருத்தங்களைச் செய்வதில் மக்களையும் பிற அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி பெறுவதில்லை.  கடும் எதிர்ப்பு இல்லாத நிலையில் நிர்வாக சீர்திருத்தங்களைத் தளர்த்தி அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் பயன்பெறும் வண்ணம் விதிகளை வளைத்து தவறான செலவுகள், அரசு ஒப்பந்தங்களில் நேர்மையின்மை, மற்றும் பொதுத்துறை சீர்கேடுகளை எந்த அரசும் ஊக்குவிக்கவே செய்கின்றது.

இந்தப் பொதுப் பின்னணியில் நோக்கினால், சிங்கப்பூர் அரசு ஊழலுக்கு எதிரான அமைப்பை  நடைமுறைப்படுத்துவதில் எப்படி வெற்றி பெற்றது, அது உணர்த்தும் பாடங்கள் என்ன என்பவை கவனிக்கத்தக்கன.

காலனிய அரசுகள் அடிப்படையில் நேர்மையற்றவை. நிர்வாகத்தில் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் அவற்றுக்கு இல்லை. ரயில் பாதைகள், தபால் துறை, சாலை வசதிகள் போற்ற அமைப்புகளை நிறுவி அவற்றை சீர்கெடாமல் இயக்குவதில் உள்ள லாபம், அரசியலமைப்பு, சட்ட அமைப்பு, நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றை அப்பழுக்கின்றிப் பராமரிப்பதில் இல்லை- இன்னும் சொல்லப் போனால் இவற்றில் நேர்மையைக் கடைப்பிடிப்பது  காலனியத்துக்கே எதிரான விளைவுகளைத் தரக் கூடும். எனவே, பிரிட்டிஷ் காலனிய அரசு சிங்கப்பூரில் ஊழலுக்கு  எதிரான சட்டங்களை இயற்றி அவற்றை கோப்புகளில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதோடு மன  நிறைவடைந்தது. 1871லேயே ஊழல் தண்டனைக்குரியது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. 1879 மற்றும் 1886  ஆகிய ஆண்டுகளில் வெவ்வேறு விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இருந்தும் காலனிய ஆட்சியின்  மையத்தில் ஊழல், நேர்மையின்மை இருந்ததால் தீர்வுகள் வெளிப்பூச்சாக மட்டும் நின்று விட்டன.

சுதந்திரத்துக்கு முந்தைய, பிரிட்டிஷ் காலனியாக இருந்த சிங்கப்பூரில் ஊழல் மலிந்து இருந்ததற்குக் காரணிகள் இவையாக இருந்தன:

குறைந்த ஊதியம் – ஒரே துறையில் ஒரே பணியைச் செய்யும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர், அதே துறையில் அதே பணியில் இயங்கும் பிரிட்டிஷ் ஊழியரைவிட மூன்று மடங்கு குறைவான ஊதியம் பெற்றார். அது மட்டுமல்லாமல் ரேஷன் வசதி, சீருடை வசதி போன்றவற்றிலும் இந்த பாகுபாடு கடைபிடிக்கப்பட்டது.

ஊழல் செய்ய வாய்ப்பு – அரசு ஊழியர்கள் குறைந்த ஊதியம் பெற்றதால், அரசுப் பணியுடன் கூடுதலாக வேறு தொழில்களும் செய்தனர், குறிப்பாக காவல் துறையில் இருந்தவர்கள், மாட்டு வண்டி மற்றும் நடமாடும் உணவகங்கள் வைத்திருந்தனர். இதனால் ஊழல செய்யும் வாய்ப்பு கூடுதலாக இருந்தது. பொதுவாக, லைசன்ஸ் தரும் துறைகள், உணவு மற்றும் விலைவாசி கட்டுப்பாடுத் துறைகள், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் துறைகள் ஊழல் மலிந்தனவாக இருந்தன- இந்நிலை சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பின்னரும் நீடித்தது. ஊழலுக்கு எதிரான நிர்வாகச் சீர்த்திருத்தம் செய்யப்பட்டு பல்லாண்டுகள் ஆனபின்னரே அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

ஊழலுக்கு தகுந்த தண்டனையின்மை – 1871ல் ஊழல் சட்டப்படி தண்டனைக்குரியது என்று பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அறுபத்தாறு ஆண்டுகள் கழித்து, 1937ல்தான் ஊழலுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அந்த சட்டமும் ஊழலால் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வதாயில்லை; கைது செய்யவும் விசாரணை செய்யவும் அது மிகக் குறைந்த அதிகாரங்களையே அளிப்பதாக இருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக ஊழல் வழக்குகளை விசாரிக்கவேண்டிய காவல் துறைக்கு அது போல் வேறு பதினாறு கடமைகள் இருந்தன. கொலை, கடத்தல் போன்ற குற்றங்களில் காட்டும் முனைப்பை காவல் துறை, ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் காட்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இவை அனைத்தினும் மேலாக, காவல் துறையே ஊழல் மலிந்ததாக இருந்தது.

1959ல் சிங்கப்பூர் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. ஒரு தூய நிர்வாகத்தை அளிப்போம் என்று உறுதியளிக்கும் வகையில், பதவிப் பிரமாணத்தின்போது ஆளும் பிஏபி கட்சியின் உறுப்பினர்கள் முழுக்க முழுக்க வெண்ணிற ஆடைகள் அணிந்து வந்தனர். “அரசுக்கு கிடைத்த ஒவ்வொரு டாலர் வருவாயும் ஒழுங்காக அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டு, வழியில் மடைமாற்றப்படாது கடைநிலைக் குடிமகனுக்கு அதன் முழுப் பலனும் கிடைப்பதை நாங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி செய்தோம்,” என்கிறார் லீ க்வான் யூ. தன் நோக்கங்களுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், ஆளும் பீப்பில்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி (People’s Action Party) குடிமக்களை நெறிப்படுத்தவும்,  ஊழலைத் தண்டிக்கவும் கடுமையான சட்டங்களை இயற்றியது.

மிகச் சிறிய நாடான சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமெனில் அதற்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதை அரசியல் தலைமையில் இருந்தவர்கள் துவக்கத்திலேயே உணர்ந்திருந்தனர். இயற்கை வளங்களோ, பெரும் நிலப்பரப்போ, மக்கள் கூட்டமோ இல்லாத நாடான சிங்கப்பூரை உலக முதலீட்டாளர் கவனத்தில் முன்னிலைப்படுத்த, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியும், வளர்ச்சிக்கு ஆதரவான பொருளாதாரச் சூழலும் இருப்பதவசியம் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், சுதந்திரம் பெற்ற நாள் முதலே, வளர்ச்சிக்கு  சாதகமான பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் ஊழலுக்கு எதிரான நிர்வாகச் சீர்திருத்தங்களில் உறுதியான கவனம் செலுத்தியது சிங்கப்பூர் அரசு. இன்று உலகில் அதிக அளவு அந்நிய முதலீட்டைப் பெறும் முதல் இருபது நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

சுதந்திரம் பெற்ற நாள் முதலே சிங்கப்பூர் ஊழலைக் களைய சட்டங்கள் இயற்றியிருந்தாலும் மத்திய எழுபதுகள் வரை அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரிய அளவில் அது வெற்றி பெறவில்லை. ஹெராயின் கடத்தலில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு அது அரசுக்கு அவமானமாக மாறியபோது எழுந்த மக்களின் கடும் கண்டனத்துக்கு எதிர்வினையாக, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தும் அரசியல் உறுதியை அரசால் வெளிப்படுத்த முடிந்தது. ஊழல் வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணியை மட்டுமே கொண்ட ஒரு அமைப்பு சிங்கப்பூர் அரசால் உருவாக்கப்பட்டது. அதில் நூற்றுக்கும் குறைவான ஊழியர்களே இருப்பினும், இன்று நேர்மையான  நிர்வாகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது!

சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு சட்டமான ப்ரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் ஆர்டினன்ஸ், 1960ல் (Prevention of Corruption  Ordinance, POCA, 1960) ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரவும் கரப்ட் பிராக்டிஸஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோ (Corrupt Practices Investigation Bureau) என்ற அமைப்பை உருவாக்கியது.  இது ஏழு முறை திருத்தப்பட்டு இன்று ப்ரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் ஆக்ட் (Prevention of Corruption Act) என்று அழைக்கப்படுகிறது.

இன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல்,  நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்-  முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும்! அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து  கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம். அவரை விசாரிக்க வேண்டி, எந்த இடத்தையும் சோதனையிட்டு,  தேவைப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் சாட்சி சொல்ல அழைத்து விசாரிக்கலாம். லஞ்சமாகப் பணம் வாங்கியது உறுதி செய்யப்படாதபோதும், ஊழல் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்டதாக நிருபிக்கப்பட்டால் போதும், சிறை தண்டனை அளிக்கப்படும்.

இந்த அமைப்பால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஒரு மந்திரி விசாரணையைத் தொடர்ந்த பன்னிரெண்டாம் நாள் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஊழல் எதிர்ப்பு சட்டத்தைத் திருத்த வேண்டி வந்தது- ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர் எவராயினும், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் ஆணையிடும்; குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தால், அவரது வாரிசுகளிடமிருந்து அந்த சொத்து பறிமுதல் செய்யப்படும்- குற்றம் சாட்டப்பட்டவர் மரணமடைவதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு  அதிகமான சொத்து சேர்த்ததாக நிருபிக்கப்பட்டால், அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்- செத்தபின் ஊழல் செய்தவரின் பிணத்திடமிருந்து மோதிரத்தையே பிடுங்குகிறார்கள் அங்கே, ஆனால், இங்கே நம் ஊரிலோ எந்த அச்ச்சமுமில்லாமல், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளே போகும்போதும் சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்,  வெளியே வரும்போதும் சிரித்துக் கொண்டே வருகிறார்கள்.  அவர்கள் நம்மைப் பார்த்துத்தான் ’அந்த’ச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இவ்வளவு கடுமையான சட்டங்களின் பலத்தில் ஊழல் வழக்குகளைக் கையாளும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் இயக்குனர் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறார். இவர் பிரதமரின் அனுமதிக்குக்  காத்திருக்காமல் மந்திரி மற்றும் எந்த ஒரு அரசு ஊழியர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டையும் விசாரிக்கலாம்-  இக்காரணத்தால், நேர்மையற்ற ஒரு அரசியல்வாதி சிங்கப்பூரின் பிரதமர் பதவியை அடையும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கருதப்படுகிறது. இத்துறை பிரதமரின் கண்காணிப்பில் இருந்தாலும், ஜனாதிபதியின் அனுமதி பெற்று பிரதமரையும் விசாரிக்கலாம்.

ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டமும், உறுதியான அரசியல் தலைமையும் மட்டும் ஊழலைக் குறைத்து விடாது-  அரசு ஊழியர்கள் கணிசமான ஊதியம் பெறுவது, அவர்களுக்கு ஊழல் செய்யும் ஆசை எழாமல் தடுக்கும்,  அதோடல்லாம், ஊழல் செய்து வேலையை இழந்தால் அவர்களுடைய இழப்பு கணிசமாக இருக்க வேண்டும்.

இதை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 1972ல் இருந்து சிறப்பான, தனியார் துறையில் உள்ளோருக்கு இணையான,  ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் அமைச்சர்கள் மற்றும் உயர்பதவியில் உள்ள அரசுப் பணியாளர்களின் ஊதியம், கணக்குப்பதிவுத் துறை, வங்கித்துறை, பொறியியல் துறை, சட்டத்துறை, உற்பத்தித்துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களில் மிக அதிகமான ஊதியம் பெறும் முதல் நான்கு பேரின் ஊதியத்துக்கு இணையாக வழங்கப்படுகிறது.

பல ஆய்வுகளில் சிங்கப்பூரில் ஊழல் மிகக் குறைந்த அளவே உள்ளது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில், ஊழல் ஒழிப்பில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது.

http://www.transparency.org/cpi/2003/cpi2003.en.html

சிங்கப்பூர் இந்த இடத்துக்கு வந்ததென்றால், அதற்கு அந்நாட்டு அரசியல் தலைமையின் தொலைநோக்குப் பார்வையும், அதன் அடிப்படையில் செயல்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்தத் தேவையான உறுதியும் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான அமைப்புகள் சிங்கப்பூரைப்போல் மேலும் பல ஆசிய நாடுகளில் இருந்தாலும்,  அவை பெருமளவில் வெற்றி பெறத் தவறி விட்டன என்பதை கவனிக்க வேண்டும்.

ஆசியாவில் ஊழல் ஒழிப்பில் முன்னிலையில் நிற்கும் சிங்கப்பூர்,  ஏனைய தேசங்களுக்கு சில பாடங்களை உணர்த்துகின்றது.

1. ஊழல் ஒழிப்பு காவல் துறையின் பொறுப்பாக இருக்க முடியாது.

காவல் துறையின் முக்கிய நோக்கம் கொலை கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுப்பதும், சமூகத்தில் வன்முறைகளைத் தடுப்பதும், அன்றாட வாழ்வில் அச்சமின்றி மக்கள் வாழ்க்கை நடத்தத் தேவையான சூழலை உருவாக்குவதுமே இருக்க முடியும். மேலும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் மேற்படி வேலையாக இருக்கும்.

காவல் துறையின் பார்வையில் ஊழல் போன்றன சில்லறைக் குற்றமாகத் தெரிவதில் அதிசயம் இல்லை.  ஒப்பீட்டில் அது, கொலை, கொள்ளைகளைவிட சிறிய குற்றமாகவோ, அவசர உணர்வைத் தராததாகவோதான் இருக்க முடியும்.  பொதுவாக வெள்ளைச் சட்டை ஊழல் என்பது வன்முறையை வெளிப்படையாகக் காட்டாத, நிரூபிப்பதில் செடுக்கு நிறைந்த குற்றமாக இருப்பதால் அது பரபரப்பையோ நெருக்கடியையோ உடனே ஏற்படுத்துவதில்லை.  எனவே காவல் துறை எப்போதும் ஊழல் விவகாரங்களைக் குறைந்த அளவில்தான் பொருட்படுத்தும்.

அனைத்தினும் மேலாக, காவல்துறை மிகப் பெரியது, அது அன்றாடம் குற்றங்களுடன், குற்றவாளிகளுடன் புழங்குகிறது.. இந்தக் காரணங்களால் காவல் துறையில் ஊழல் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. சிங்கப்பூரில் நாலு லட்சம் டாலர் மதிப்புள்ள ஓபியம் கடத்தப்பட்ட விவகாரம் கரப்ட் பிராக்டிஸஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோ (Corrupt Practices Investigation  Bureau) என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தது. இதே போல், ஹாங்காங்கில் இண்டிபென்டெண்ட் கமிஷன் எகென்ஸ்ட் கரப்ஷன் (Independent Commission Againsta Corruption) என்ற சுதந்திரமான ஊழல்  விசாரணை அமைப்பு உருவாக, காவல் துறையில் மலிந்திருந்த ஊழல் குறித்த விமரிசனங்களே காரணமாக  இருந்திருக்கின்றன.

காவல் துறையின் பொறுப்பில் ஊழல் ஒழிப்பைத் தருவது குழந்தையின் கையில் மிட்டாயைக் கொடுப்பது போன்றது:   மேன்மேலும் ஊழல் பெருக வாய்ப்புகளையே அது உருவாக்கும்.  காவல் துறை உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் நிகழ வாய்ப்பிருக்கிறது- ஊழல் ஒழிப்பு ஒரு தனித் துறையாகப் போராடினாலன்றி, அந்த அமைப்பின் நோக்கங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கக் கூடும்.

2. ஊழல் ஒழிப்புக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஊழல் ஒழிப்பைத் தன் கடமையாகக் கொண்ட ஒரு அமைப்பு இருந்தால் மட்டும் போதாது, அது வலுவானதாக இருக்கத் தேவையான சட்டப் பின்புலமும் அதற்கு அளிக்கப்பட வேண்டும். எவை எல்லாம் ஊழலாகக் கருதப்பட வேண்டும், யார் இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டும், அவர்களின் அதிகாரம் எத்தகையது போன்ற விபரங்கள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட வேண்டும். இந்த சட்டங்கள், மாறும் காலங்களின் தேவைகளுக்கேற்ப  திருத்தப்பட வேண்டும்.

3. ஊழலுக்கு எதிரான அமைப்புக்குத் தேவையான பணியாளர்களும் நிதி ஆதாரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

ஊழலுக்கு எதிரான அமைப்புகள் எவ்வளவு வலுவானவைகளாக உள்ளன என்பதைக் கொணடே அந்த அரசுகளின் நேர்மையைக் குறித்த ஒரு முடிவுக்கு வர இயலும். ஊழல் ஒழிப்புக்குத் தேவையான ஆள்பலம், கருவிகள் மற்றும் நிதி ஆதாரங்கள் கணிசமான அளவில் தேவைப்படுகின்றன.  ஹாங்காங்கின் 1286 பேர் கொண்ட ICACக்கு அரசு 88  மில்லியன் டாலர்கள் செலவிடுகிறது; சிங்கப்பூரின் CPIB என்பது பேர் கொண்ட அமைப்பு. அதன் செலவு ஆறரை மில்லியன் டாலர்கள். தனி மனிதச் செலவு (per capita expenditure) என்று பார்த்தால், ஹாங்காங் நபரொருவருக்கு 12.57 டாலர்கள் செலவு செய்கிறது, சிங்கப்பூர் 1.54 டாலர்கள் செலவு செய்கிறது. இந்த வேறுபாட்டுக்குக் காரணம்  ஹாங்காங்கின் ஊழலுக்கு எதிரான அமைப்பு ஊழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊழலைக்  கட்டுப்படுத்துதல், ஊழல் வழக்குகளை விசாரித்தல் என்ற மூன்று கடமைகளைச் செய்கின்றது. ஆனால், சிங்கப்பூரில் அதே போன்ற அமைப்பு, விசாரணையை மட்டுமே தன் கடமையாகக் கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் பணியாற்றும் ஊழியர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரிய வேண்டியது. ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்புகள் இருந்தாலும் அவை இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் ஊழல் பேர்வழிகளால் ஊடுருவப்பட்டுக் கடமை தவறுகின்றன.

4. தேவையற்ற விதிமுறைகளைத் தளர்த்துவது ஊழல் வாய்ப்புகளைக் குறைக்கும்.

கொரியாவில் ஊழல் ஒழிப்பு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றால் அதற்குக் காரணமாகச் சிகப்பு நாடாவையே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் தொழிற்கூடமொன்றை அமைக்க சராசரியாக நாற்பத்து நான்கு தரவுகள் (documents) தேவைப்பட்டன. இவையனைத்தையும் தயாரித்து அங்கீகாரம் பெறுவதில் பல கட்டங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. இவை ஒவ்வொன்றும் ஊழல் அழைப்புகள்.

1998ல் தேவையில்லாத விதிமுறைகளை நீக்க அமைக்கப்பட்ட குழு 11115 விதிகளில் 5326ஐ (47.9%) ஒரே ஆண்டில் நீக்கிற்று.

table

5.  பசையுள்ள துறைகளில் ஊழல் வாய்ப்பைக் குறைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

பசையுள்ள துறைகள் பண ஓட்டமுள்ள துறைகள். பொது மக்கள் பெருமளவில் இவற்றைச் சார்ந்திருப்பதால் இங்கு ஊழல் செய்ய வாய்ப்பு அதிகம். காவல் துறை, சுங்கத் துறை, கலால் துறை, பொதுப் பணித் துறை போன்றவற்றைத் தனி கவனத்துக்கு உட்படுத்தி அவற்றின் செயல்பாட்டை அவ்வப்போது மறு ஆய்வு செய்து தேவைப்பட்ட நடை முறை மாற்றங்கள் செய்ய வேண்டியது ஊழலை ஒழிப்பதில் அவசியமான நடவடிக்கை.இவற்றின் விதிமுறைகள் மற்றும் செயல்பாடு இயன்ற அளவு எளிமையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

6. ஊழலுக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும்.

ஊழல் செய்தால் மாட்டிக் கொள்ள மாட்டோம், அப்படியே அகப்பட்டாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ள நாடுகளில் ஊழல் மிகுந்துள்ளது. ஊழலின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்ற நிலையில், ஊழல் ஒழிப்பு வெற்றி பெறுகிறது.

ஊழலைக் குறித்த பொதுக் கருத்தில் மாற்றம் ஏற்பட ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். எங்கே, யார் ஊழல் செய்தாலும், அந்த ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும், ஊழல் குறித்துத் தகவல் தெரிவிக்கவும், ஊழல் குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை அளிக்கப்படும் என்ற தகவலை உணர்த்தவும் தேவையான தகவல்களை மக்கள் பரவலான அளவில் அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது: உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள்  இரக்கமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்யும் ஒருவர் தண்டிக்கப்படும் வாய்ப்பு ஃபிலிப்பைன்ஸில் இருப்பவரைவிட ஹாங்காங்கில் 35 மடங்கு அதிகம். அதாவது, ஹாங்காங்கில் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்படும் நூறு பேருக்கு பிலிப்பைன்சில் மூவர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்த கலாசாரமே மார்கோஸ் குடும்பத்தினர் மகத்தான ஊழல்கள் செய்தும் போருட்படுத்தத்தக்க தண்டனை பெறாமல் தப்பியதற்கு காரணம் என்கிறார் லீ க்வான் யூ.

இந்த ஆறு நடைமுறைகளும் அரசு நிர்வாகங்களில் ஊழலைக் களையத் துணை செய்யும் என்று சொன்னாலும்,  இவற்றை நடைமுறைப்படுத்தத் துணியுமுன் பொதுச் சூழலில் இரு முக்கியமான அம்சங்களை வலுப்படுத்த  வேண்டும்- உறுதியான அரசியல் நிலைப்பாடு, சாதகமான கொள்கை அமைப்பு.

ஊழலுக்கு எதிரான சட்டம் இருந்தாலும், ஊழலைக் களையத் தேவையான ஆள் பலம் மற்றும் நிதியாதாரம் கொண்ட சுதந்திர அமைப்பு இருந்தாலும், அந்த அமைப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த தயாராக இருந்தாலும், உறுதியான அரசியல் தலைமை இல்லாத இடங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதில்லை. ஹாங்காங்,  சீனா, இந்தியா, கொரியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஆய்வின் முடிவு தீர்மானமாகச் சொல்கிறது: “ஊழலுக்கு எதிரான எத்தகைய முயற்சிக்கும் உறுதியான  அரசியல் தலைமை இன்றியமையாததாக இருக்கிறது. அரசியல் தலைமையின் ஆதரவு இல்லாமல் அனைத்தும் தோற்கின்றன.”

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கின் மக்கள் தொகை சிறியது. அவற்றின் அரசுகள் நிலையானவை. வாழ்க்கைத் தரம் மேம்பட்ட ஒன்று. அரசு அமைப்புகள் சீராக செயல்படுகின்றன. நிர்வாக அமைப்புகள் வலுவானவையாக உள்ளன.  இது போன்ற சாதகமான அம்சங்கள் இல்லாத நாடுகள் ஊழலை ஒழிப்பதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்;  அவை தமக்கான தீர்வுகளை பெரும் பிரயாசையின் விளைவாகவே காண முடியும். அனைத்து நாடுகளுக்கும் ஒரே  தீர்வு இருப்பதற்கில்லை.

ஆனால் சிங்கப்பூரின் ஊழல் ஒழிப்புத் துறையின் செயல்பாடு பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது- சொற்களைக் கொண்டு எழுதப்படக்கூடிய எதையும்விட, இந்த எண்கள் சிங்கப்பூரின் வெற்றியை உணர்த்துகின்றன.

http://digitalcommons.law.umaryland.edu/cgi/viewcontent.cgi?article=1188&context=mscas, table 7, 8 and 11.

ஆதாரங்கள்

http://unpan1.un.org/intradoc/groups/public/documents/apcity/unpan036045.pdf

http://ancorage-net.org/content/documents/quah.pdf

http://digitalcommons.law.umaryland.edu/cgi/viewcontent.cgi?article=1188&context=mscas

http://www.adb.org/documents/periodicals/gb/GovernanceBrief11.pdf

http://siteresources.worldbank.org/WBI/Resources/wbi37234Heilbrunn.pdf