அன்னாவும், அருணாவும்

இந்திய துணைக்கண்டத்தின் மகத்தான தருணம் அது. காந்தியரான அன்னாவின் போராட்டத்துக்குப் பணிந்து, பாராளுமன்றம் அவரது கோரிக்கைகளை ஏக மனதாக ஏற்றுக் கொண்டு, அந்தச் செய்தியை அரசு அவருக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் வழியாக அனுப்பி வைத்தது. ஊழலுக்கு எதிராகப் பலகாலமாக உள்ளே அமுங்கிக் கிடந்த மக்களின் கோபம் பீரிட்டெழுந்து அரசையும், அரசியல்வாதிகளையும் மிரட்டி விட்டது. ஆனால், இந்த வரலாற்றுத் தருணத்தின் முடிவில் விலாஸ்ராவ் தேஷ்முக்கும், அன்னாவும் அருகருகே நின்று கொண்டு தேசிய கீதம் பாடியதுதான் ஒரு நகைமுரண்.

அன்னாவின் தளபதிகளைத் தாண்டி அன்னாவிடம் நேரில் பேச காங்கிரஸ் விலாஸ்ராவை உபயோகித்தது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான அவர் மேல் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உண்டு. வழக்கமாகச் சொல்வதுபோல, “all is well that ends well” என்று, சுபம் போட்டுவிட முடியாமல் சில சங்கடங்கள் உள்ளன இந்நிகழ்வில். அன்னாவே சொல்லியது போல், பாதிப் போர்தான் முடிந்திருக்கிறது.

மிக முக்கியமாக, அன்னாவின் குழுவின் போக்கு. என் வழிதான் ஒப்புக்கொள்ளப் பட வேண்டும் என்னும் பிடிவாதம். இதுபோன்ற அரசியல் பேரத்தில், இருதரப்புக்களும் ஒரு அதீத எல்லையில் இருந்துதான் துவங்கும். மெல்ல மெல்ல இருதரப்புக்களும் தங்கள் நிலையை விட்டு, ஒரு சமரசத்துக்கு வரும். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் அப்படி விட முடியாது. அதுவும், தங்களின் அதிகாரத்துக்குத் தாங்களே சமாதிகட்டும் ஒரு வழிக்கு அவர்கள் வரவேமாட்டார்கள். முடிந்தவரை அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுக்கப் பார்ப்பார்கள். அதனால், அரசுடனான அன்னாவின் பேச்சுவார்த்தைகளில் அவர் மிகப் பிடிவாதமாக இருந்ததினால்தான், இவ்வெற்றி சாத்தியமாகியது.

இப்போராட்டத்தை எதிர்த்து வேறு பல எதிர்க்குரல்களும் எழுந்தன. அருந்ததி ராய் போன்ற போலி அறிவுஜீவிகள் பலர் பல்வேறு காரணங்களுக்காகக், கொத்துக் கொத்தாகக் களத்தில் இறக்கிவிடப் படுகிறார்கள் என்று செய்திகள் வந்தன. பாரதத்தைப் பலவீனப் படுத்தும் சக்திகளின் கைப்பாவைகளாக இருக்கலாம் என்று செய்திகளும், ஊகங்களும் வந்து கொண்டிருந்தன. இருக்கலாம். அவை யாவும், மக்களின் பல ஆண்டுக்கால அடக்கிவைக்கப்பட்ட கோபம் கொந்தளித்தெழுந்த புயலில் சிக்கிச் சிதறிவிட்டன. இந்துவில், அருந்ததியின் கட்டுரை வெளியான சில மணிநேரங்களில் வந்த எதிர்வினைகள் பெரும்பாலும் அவரை வன்மையாகக் கண்டித்திருந்தன.

ஆனால், இந்த ஆழிப் பேரலையில், சில நேர்மையான குரல்களும் அமுங்கிப்போனது ஒரு துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதில், மிக முக்கியமானது, அருணா ராயின் குரல். இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.

அருணா, 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை இங்கிலாந்த்தில் படித்த வழக்கறிஞர். பாட்டி, தொழுநோயாளிகளுக்காக உழைத்த ஒரு சமூக சேவகி. தில்லி, கான்வெண்ட் ஆஃப் ஜீஸஸ் அண்ட் மேரி, சென்னை கலாஷேத்ரா, பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம், தில்லி பாரதிய வித்யா பவன் என பல இடங்களில் பள்ளிப் படிப்பைப் படித்தார். தந்தை ஜெயராமன், காந்தி பக்தர். எம்.என். ராய் மீது பெருமதிப்புக் கொண்டவர். அதனால், இயல்பாகவே, அருணாவுக்கு இவர்கள் இருவரின் பாதிப்பும் இருந்தது. வீடெங்கும் இவர்கள் இருவர் பற்றிய புத்தகங்கள்தான். புத்தகங்கள் படிப்பதும், விவாதிப்பதுமே வீட்டில் எல்லோருக்கும் பொழுதுபோக்கு. மிகத் துணிச்சலான பெண்ணாக வளர்ந்தார்.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அருணாவுக்கு, ஒரு சாதாரணமான குடும்பப் பெண்ணாக வாழப் பிடிக்கவில்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று 1967 ஆண்டு, தன் 21 ஆம் வயதில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆறுமாதப் பயிற்சிக்குப் பின், ஒரு வருட ப்ரோபேஷனில் தமிழ்நாட்டுக்கு வந்தார். அச்சமயத்தில் தான், ஒரு சாதாரண கிராம வாழ்க்கையையும், அதன் வறுமையையும், சிரமங்களையும் முதன்முறையாக நேரில் கண்டார். பின்னர் பாண்டிசேரியில் உதவி கலெக்டராகப் பணி புரிந்தார். அந்த நேரத்தில் (1970), தன்னுடன் படித்த, சமூக ஆர்வலரான பங்கர் ராயைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, சில விதிகளை வரையறுத்துக் கொண்டார்கள். இருவரும், தமக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுத்துப் போகலாம். ஒருவர் மற்றவர் மீது, தன் நம்பிக்கைகளைத் திணிக்கக் கூடாது, ஒருவர் மற்றவரைத் தம் பொருளாதாரத் தேவைகளுக்காகச் சார்ந்திருக்கக் கூடாது. இவ்விதிகளைக் கடைபிடிக்க, குழந்தைகள் பெற்றுக்கொள்வது தடையாக இருக்குமென்பதால், குழந்தைகளும் கூடாது என்பவையே அவை.

திருமணத்துக்குப் பின், தில்லி மாற்றலாகி வந்தார் அருணா. விரைவில் ஆட்சிப் பணியின் அரசியலும், ஊழலும் அவரை மனச்சோர்வு கொள்ளச் செய்தன. இவை புரையோடிப் போயிருப்பதற்கு, மக்களும் சமூகமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தார். வேலையில் ஆர்வம் வடிந்து போனது. வீட்டின் ஒரே வருமானம் இவரது ஊதியம் என்பதால், தன் சகோதரன் படித்து வேலையில் சேரும் வரை காத்திருந்து, தம் வேலையை உதறினார். அவருக்கு இருவழிகள் இருந்தன. சமூக இயலில் உயராய்வு அல்லது, தம் கணவரின் சமூகச் சேவை மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Social work and research Centre – SWRC) சேர்வது. ராஜஸ்தானில், டிலோனியா என்னும் ஊரில் செயல்பட்டு வந்த ஒரு சமூக சேவை நிறுவனமான அதில், 1974 ஆம் ஆண்டு சேர்ந்தார். அப்போது அவருக்கு 28 வயது.

அந்நிறுவனத்தில் பணிபுரிவது, அவருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கியது. ஏனெனில், அது, இந்திய ஆட்சிப் பணி போல், கட்டளை இடும் வேலை அல்ல; மக்களின் குரலைக் கேட்டு உதவி செய்யும் வேலை. அது அவருள் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சாதாரண ஏழை ராஜஸ்தானிப் பெண்கள் மிக வலிமையானவர்களாகவும், குடும்பத்தின் பல முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரும் சக்திகளாக இருந்தது, அருணாவின் கண்களைத் திறந்தன. கலைப் பொருட்கள் செய்பவர்கள், வேளாண் கூலிகள், பொம்மைகள் செய்பவர்கள் என பலதிறப்பட்ட மனிதர்களும், அவர்கள் செயல்திறனும், எழுதப் படிக்கத் தெரியாத ஒரே காரணத்தால், அவர்கள் திறனில்லாத் தொழிலாளிகள் வகைப் படுத்தப் படும் முட்டாள்தனத்தையும் பட்டறிந்தார். SWRC பல்வேறு தொண்டு நிதி நிறுவனங்களில் இருந்து நிதி திரட்டி, ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் கல்விப்பணிச் சேவைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் காலத்தில் ஒரு நாள், தகவல் என்பது எப்படி மக்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது என்று கண்டறிந்தார். அதை அவருக்கு உணர்த்தியவர் நௌர்த்தி என்னும் தலித் பெண்மணி. டிலோனியாவின் அருகில் இருந்த ஹர்மாரா என்னும் ஊரில் வசிப்பவர். அங்குள்ள கூலியாட்கள் ஒரு 500 பேரை, ஒரு குழுவாகத் திரட்டி, அரசாங்கம் தன் வேலைக்கு, சட்டப் படி கொடுக்க வேண்டிய கூலியைக் கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு அரசு அதிகாரி, அருணாவிடம் சென்று பேசிச் சமாதானம் செய்யுமாறு கேட்டார். அப்போது சமாதானம் பேசச் சென்ற அருணாவுக்குத் தோழியானார் நௌர்த்தி. அந்த விஷயத்தை, சுப்ரீம் கோர்ட் வரை SWRC எடுத்துச் சென்றது. இறுதியில், வெற்றி பெற்று, கூலியாட்களின் சட்டபூர்வமான கூலி வழங்கப் பட்டது. இந்நிகழ்வு, அருணாவின் வாழ்வியல் நோக்கையே மாற்றியமைத்தது. நௌர்த்தி அவர் தோழி மற்றுமல்ல ஆசானும்கூட.

1980 வாக்கில், அவருக்கு SWRCயின், பொருளாதாரத் திட்டங்கள் மட்டுமே மக்களின் முன்னேற்றத்துக்குப் போதாது என்று தோன்றியது. முன்னேற்றம் என்பது, பொதுவாழ்வில் மக்களின் பங்களிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று யோசித்தார். இந்தச் சிந்தனையை SWRC ஒத்துக் கொள்ளவில்லை. 1983ல் தன் கணவரின் SWRCயிலிருந்து விலகினார். அடுத்த நான்காண்டுகள், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல பெண்கள் முன்னேற்றக் குழுக்களுடன் சேர்ந்து பணி புரிந்தார்.அந்த நான்காண்டுகளும் அருணாவுக்கு ஒருவிதமான ஆத்ம பரிசோதனைக்காலமாக இருந்தது. மக்களின் முன்னேற்றத்திற்கான மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார்.

1987ல் தன்னோடு ஒத்தக் கருத்துக்கள் கொண்ட ஷங்கர் சிங் மற்றும் நிக்கில் டேயுடன், ராஜஸ்தானின் டேவ்துங்ரி என்னும் கிராமத்தில் குடியேறினார். என்ன செய்யப் போகிறோம் என்று ஒரு திட்டமுமில்லாமல். ஆனால், என்ன செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள். வழக்கமான தன்னார்வ நிறுவனங்கள் போல பொருளாதார, கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப் போவதில்லை.
அடுத்த இரண்டு மூன்றாண்டுகள், அரசு திட்டங்கள் பற்றிய ஆய்வு வேலைகள் செய்து தங்கள் அடிப்படித்தேவைக்கான பணம் ஈட்டிக் கொண்டார்கள். அதில் அரசின் குறைந்த பட்சக் கூலி அளவு மட்டுமே தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். விலைவாசி சட்டென உயர்ந்த காலத்தில் சில காலம், அடிப்படைக் கூலி விலைக்கு வெறும் சுரைக்காய் மட்டுமே வாங்க முடிந்தது. அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்கள்.

1988 வாக்கில் அருகில் உள்ள சோகன்கர் என்னும் கிராமத்தில், ஒரு நிலச்சுவாந்தார், மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, குண்டர்களை வைத்து வேளாண்மை செய்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் போராடி, அந்நிலத்தை மீட்டு மீண்டும் மக்களிடம் ஒப்படைத்தனர் அருணாவும் நண்பர்களும்.

இப்போராட்டத்துக்குப் பிறகு, மக்களும், அருணாவும் நண்பர்களும், தங்களுக்கென ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். உழைப்பாளி, விவசாயி மேம்பாட்டுச் சங்கம் (Mazdoor Kisan sakthi sangathan), ஐயாயிரம் மக்களின் ஆதரவோடு பிறந்தது. இது ஒரு வழக்கமான நிறுவனம் அல்ல. இது எந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப் பட்ட கூட்டுறவு நிறுவனமோ, உழைப்பாளர் சங்கமோ அல்ல. அந்நிறுவனம் வேறெந்த நிறுவனத்திடமோ, அரசுத் துறைகளிடமிருந்தோ, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தோ நிதி பெறுவதில்லை. சந்தாவும் வசூலிப்பதில்லை. இதில், தலைவர், செயலர் என்று எந்த அதிகாரக் கட்டமைப்பும் இல்லை. 25 பேர் கொண்டு மத்தியக் குழுவின் வழிகாட்டுதல் மட்டுமே உண்டு. ஓவ்வொரு வருடமும், ஒன்றிரண்டு சமூகப் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு போராடலாம் என்று முதலில் முடிவெடுத்தார்கள்.

முதலில் எடுத்துக் கொள்ளப் பட்ட விஷயம் குறைந்தபட்சக் கூலி. ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த பட்சக் கூலி வழங்க வேண்டும் என்று போராட்டம் துவங்கியது. கிராமத் தலைவர், குறைந்த பட்சக் கூலியை வழங்க மறுத்தார். 12 பேர் குறைந்த பட்சக் கூலியை விடக் குறைவான கூலியை வாங்க மறுத்துப் போராட்டம் துவங்கினர். போலீஸ் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். விஷயம் பெரிதாகி, மத்திய ஊரகத் துறை தலையிட்டு, குறைந்த பட்சக் கூலி வழங்க உத்தரவிட்டது. அது பெரிதாய் வெடித்து, மாநிலமெங்கும் குறைந்த பட்சக் கூலிக்கான போராட்டங்கள் வெடித்தன.

1991ல், அடுத்த நடவடிக்கையாக, நியாய விலைக் கடைகள் திறக்கப் பட்டன. வேலையாட்களுக்கு, குறைந்த பட்சக் கூலி கொடுக்கப் பட்டு, 1% லாபம் மட்டுமே வைத்து, சகாய விலையில் மக்களுக்குப் பொருட்கல் விற்கப்பட்டன. இத்திட்டம், மக்களின் ஆதரவோடு பெரும் வெற்றியடைந்தது.

1994களில் தமது அடுத்த நடவடிக்கையாக, MKSS, பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழலை தட்டிக் கேட்கவும், அரசு திட்டங்களைப் பற்றிய தகவல்களையும் கேட்கத் துவங்கியது. தகவல் அறியும் உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தாலும், பல காலமாக, ரகசியம் என்ற பெயரில் மக்களுக்கு அரசின் செயல்கள், திட்டங்கள் பற்றிய ஒரு தகவலும் தெரிவிக்கப் படாமல் இருந்தன. இதனால், அரசு அதிகாரிகள் மக்களை மிக எளிதாக ஏமாற்றிவந்தனர். அரசுக்கும், மக்களுக்கும் ஒரு தொடர்புமில்லாமல் இருந்தது. MKSS முதலில் ஜன் சுன்வாய் (மக்கள் குரல்) என்னும் மக்கள் கூட்டங்களை நடத்தி, அரசின் திட்டங்கள் பற்றிச் சொல்லத் துவங்கினர். முதல் கூட்டத்தில் ஒரு நடுநிலையான வெளி நபர் ஒருவர் தலைமை தாங்கினார். பல்வேறு தரப்பு மக்கள், வக்கீல்கள், களப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதில், அரசின் திட்டங்களின் வரவு செலவுக் கணக்குகள் மக்கள் முன் சமர்ப்பிக்கப் பட்டன. சம்பள மஸ்டர்களில் இருந்து மக்களுக்குக் கூலி வழங்கிய விவரங்கள் வாசிக்கப் பட்டன. அவற்றுள் பெயர் இடம் பெற்ற பலரும், அத்திட்டங்களில் எந்த வேலையும் செய்யாதவர்கள். மஸ்டர் ரோலில் இறந்த பலரின் ஆவிகளும் உலவின. முடிக்கப் படாத கட்டிடங்கள் முடிக்கப் பட்டதாகக் கணக்குக் காண்பிக்கப் பட்டிருந்தன. இரண்டு அரசு அதிகாரிகள், ஒரு பஞ்சாயத்து காரியதரிசி மற்றும் ஒரு உதவிப் பொறியாளர் என நால்வர் சிக்கினர். இது ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத்து.

1995ல், பைரோன் சிங் ஷெகாவத், அரசு திட்டங்கள் பற்றிய ஆவணங்கள், திட்டங்கள் மீதான மக்கள் தணிக்கை, அது சம்பந்தமான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார். பணம் கட்டி, அரசு திட்டங்கள் சம்மந்தான திட்டங்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

ஆனால் வெறும் அறிக்கை அளவில் மட்டுமே இது இருந்தது. இதை எதிர்த்து, ஒரு தொடர் தர்ணா நடத்த MKSS முடிவு செய்தது. அதற்கான தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொஞ்சம் தானியங்களைத் தானமாகப் பெற்றுத் தயாராக வைத்திருந்தனர். ராஜஸ்தானின் கோடையைத் தாங்கியவாறு ஐம்பத்து மூன்று நாட்கள் ஏழை மக்கள் போராடினர். பாட்டு, கவிதைகள், கோஷங்கள் என்று சென்ற அந்தப் போராட்டத்தை ஊடகங்கள் மிக ஆர்வத்துடன் கவனித்தன. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு கூட்டம், எதற்காக அரசின் செயல்திறன் குறித்துக் குரல் கொடுக்கிறது என்று அவர்களுக்கு ஆச்சர்யம். ஆனால், அரசு இயந்திரம் திறனுற இயங்குவதற்கும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குமுள்ள தொடர்பை மக்கள் MKSS இன் செயல்பாடுகள் மூலம் அறிந்திருந்தார்கள். இத்தொடர் போராட்டத்தின் விளைவாக, 2000 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் அரசு, தகவலறியும் சட்டத்தை இயற்றியது. அதே ஆண்டு அருணாவுக்கு ரமான் மகஸேஸே விருது வழங்கப்பட்டது. (இதே சட்டத்தை மக்களுக்கு எடுத்துச் சென்று, சேவை செய்தமைக்காக, அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, 2006 ஆம் ஆண்டு, ரமான் மகஸேஸே விருது வழங்கப்பட்டது. அருணா மூலவர். கேஜ்ரிவால் உற்சவர்).

இந்தப் போராட்டமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதை. அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் சாதாரண மக்களிடம் செல்லும் போது, அரசு மீதான் அவர்களின் சக்தி அதிகரிக்கிறது. மெல்ல மெல்ல, பஞ்சாயத்து போன்ற அரசு நிறுவனங்களை மேலாண்மை செய்யவும், கண்காணிக்கவும் துவங்குகிறார்கள். இதை ஆர்வத்துடன் கவனித்த, ப்ரஸ் கௌன்சில் ஆஃப் இந்தியா, தகவல் அறிவதைப் பற்றிய ஒரு சட்ட வரைவைத் தயாரிக்க முன்வந்தது. அதே சமயத்தில், இந்திய ஆட்சிப்பணிப் பயிற்சி மையத்தில் இருந்தும் சில ஆர்வலர்கள் இன்னுமொரு வரைவைத் தயாரித்தனர். ப்ரஸ் கௌன்சில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.பி.சாவந்த் தலைமையில் ஒரு வரைவை, சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர், பி,ஜி.வர்கீஸ், மற்றும் இந்தியாவின் அனைத்து செய்தித்தாள்களின் ஆசிரியர்கள், வி.பி.சிங் போன்ற ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளின் துணையோடு இயற்றி பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.

தகவலறியும் சட்டம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின், குறைந்த பட்சச் செயல்திட்டத்தில் ஒரு தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கப் பட்டிருந்தது. சோனியா காந்தியின் தலைமையில், தேசிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அதன் குழுவில் ஒரு அங்கத்தினராகச் சேர்க்கப் பட்டார் அருணா. எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த அரசின் சட்ட வரைவு மிக மோசமான ஒன்றாக இருந்தது. மக்கள் தரப்பில் இருந்த வரைவுகளுக்கும், அரசின் வரைவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஆனாலும் ஒரு வழி இருந்தது. எந்த ஒரு சட்டமும், அது நிறைவேற்றப் படும் முன்பு, ஒரு துணைக் கமிட்டியின் கீழ், மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள, மக்களின் பார்வைக்கு வைக்கப் படும். இந்தச் சட்டத்தில் மாற்றம் விரும்பும் குழுக்களோ, தனி நபர்களோ, அதை அக்கமிட்டியின் முன்பு தெரிவிக்கலாம். அருணா ராயும் நண்பர்களும், அரசின் சட்ட வரைவில் 153 திருத்தங்கள் கொண்டு வந்தனர். இறுதியில் அரசு கொண்டு வந்த சட்டம், பல தரப்பின் பங்களிப்பையும் கொண்டிருந்தது என்கிறார் அருணா. அதுதான் மக்களாட்சியில் சரியான வழிமுறையாக இருக்க முடியும் என்பது அவர் வாதம். அருணா கொண்டு வந்த வரைவில், பொது வாழ்க்கையில் ஈடுபடும் எல்லா நிறுவனங்களையும் – தன்னார்வ நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றையும் அதில் சேர்க்க வேண்டும் என்று வாதாடியிருந்தார். ஆனால், அரசு மறுத்துவிட்டது.

ஒரு லிபரல் குடும்பத்தில் பிறந்து, மிக இளம் வயதிலேயே சமூகத்தின் மிக உயர் பதவியை அடைந்து, அதை, சமூகத்துக்காகத் துறந்த ஒரு லட்சிய ஆளுமைதான் அருணா. பொருளாதாரக் கடை மட்டத்தில் மிக மகிழ்வோடு வாழ்ந்து கொண்டே அவர்களுடன் பணி செய்கின்றவர். பல்வேறு நிர்வாக முறைகளை பரிட்சித்துப் பார்த்தவர். நிர்வாக அமைப்பே இல்லாமல், ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர். இப்படிப்பட்ட ஒருவரும், அன்னாவும் ஏன் இந்தப் போராட்டத்தில் விலகியிருக்கின்றார்கள் – இருவரின் லட்சியமும் ஒன்றுதானே?

ஊழலுக்கு எதிரான சர்வ ரோக நிவாரணியாக, லோக்பால் மசோதவை அன்னாவின் குழு, எளிமைப் படுத்துவதைத் தவறு என்று சொல்கிறார் அருணா. அது அரசு இயங்கும் முறைகளில் உள்ள ஊழல்களைக் களைய உபயோகிக்க வேண்டிய சட்டம். மற்றபடி, பொது வாழ்வில் எல்லாத் தரப்புகளிலும் இருக்கும் ஊழலை ஒழிக்க உபயோகித்தால், அதன் நோக்கங்கள் நீர்த்து, அதுவே ஒரு பெரும் அரசு இயந்திரமாகிவிடும் வாய்ப்புகள் உள்ளது என்று எச்சரிக்கிறார். அரசு இயந்திரத்தின் கீழ் மட்ட ஊழல்களை விசாரிக்கத் தனியே ஒரு அமைப்பை உருவாக்கி, லோக்பாலை மிக மேல்மட்ட ஊழல்களை விசாரிக்க உபயோகித்தால், அது பயனுள்ளதாக அமையும் என்கிறார். Grievence என்பது வேறு; graft என்பது வேறு என்பது அவர் வாதம். மேலோட்டமாகப் பார்க்கையில், இது ஒரு மயிர்பிளக்கும் வாதம் போலத் தோன்றுவதென்னமோ உண்மைதான். ஆனால், நடைமுறையில், ஒரு கிராம நிர்வாக அதிகாரி வேலை செய்யத் தாமதிப்பதையும், ராசா போன்ற ஒரு மத்திய மந்திரி செய்யும் மிக புத்திசாலித்தனமான ஊழலையும் விசாரித்து, தண்டனை பெற்றுத் தரும் திறனையும் ஒரே நிறுவனம் எப்படி கொண்டிருக்க முடியும்? அதுவும் ஒரு பொது நிறுவனம்? இந்த வாதம் சற்றே யோசிக்க வைக்கிறது.

அதுமட்டுமில்லாமல். அப்படி உருவாக்கப் படும் ஒரு ராட்சத நிறுவனம், ஒரு மைய நோக்கில் அல்லவா செயல்படும்? மையப் படுத்துதல் காந்தியத்துக்கே எதிரானது என்னும் இரண்டாவது வாதத்தையும் முன் வைக்கிறார். இந்த லோக்பால் போராட்டத்தின் போதே, அன்னாவின் தளபதிகளில் இருவர், மிகப் பிடிவாதமாகச் செயல்பட்டு, அன்னாவை எதிர்தரப்பு நெருங்காமல் பார்த்துக் கொண்டார்கள் என்னும் குற்றச் சாட்டு இருக்கிறது. அதனால், இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில், அன்னாவே, தனது குழுவை மாற்றியமைத்தார் என்றும் கூறுகிறார்கள். காந்தி எப்போதுமே யாராலும் மிக எளிதாக நெருங்கிவிடக் கூடிய தலைவராக இருந்தார் என்பதை நாம் உணரவேண்டும்.

2010 மார்ச் மாதம், நேரு நினைவு ம்யூசியத்தில், நடந்த தேசியத் தகவலறியும் சட்டக் கூட்டத்தில், ஜன் லோக்பால் மசோதா பற்றி விவாத்தித்த அவருடைய சகாவான அர்விந்த கேஜ்ரிவால், பின் ஊழலுக்கு எதிரான இந்தியா என்னும் அமைப்பில் அதை மேலெடுத்துச் சென்றார் என்று கூறும் அருணா, அதில் பங்கெடுக்கத் தம்மை அழைத்ததாகவும், ஆனால், அதில் மதத் தலைவர்களை (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் போன்ற) இணைத்தது தமக்கு ஒப்புதல் இல்லாததால், தான் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். அன்னா, அருணாவின் தரப்பை மிக ஆர்வமாகக் கேட்டுக்கொள்ளவில்லை என்பதற்கும் ஏதாவது முக்கிய காரணங்கள் இருக்கலாம். தேசிய ஆலோசனைக்குழுவின் இருக்கும் பெண்மணியிடம் ஏதாவது பேசி, அதை காங்கிரஸ் சாதகமாக உபயோகித்துக் கொள்ளுமோ என்ற பயமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம், தாண்டி, அருணாவிடம் உள்ள நேர்மையும், பங்களிப்பும் யாரும் ஐயப்பட முடியாதவை. தன் கருத்துக்களைக் கூறி, எதிர்தரப்பின் கருத்துக்களையும் கேட்டு, சமரசம் காண முற்படும் ஒரு நேர்மையாளாராகத் தான் அவரைக் காண்கிறோம் – சேகர் குப்தாவுடனான தொலைக்காட்சி நேர்காணலிலும், பல கட்டுரைகள் மூலமாகவும், அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் மூலமாகவும் நமக்கு அப்படி ஒரு ஆளுமைச் சித்திரமே காணக்கிடைக்கிறது.

அன்னாவின் வெற்றி, இந்திய மக்களாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஒவ்வொரு இந்தியனும் தமது என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒரு வெற்றி. இந்த வெற்றிப் படியில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டிய தருணம் இப்போது.

பாராளுமன்றக் கமிட்டியின் முன்பு அமர்ந்து, இதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடும்போது, அரசிடம் காட்டாத இணக்கத்தை, லோக்பால் மசோதா வரைவுகளை தாக்கல் செய்திருக்கும் மற்ற தரப்பினரிடம் அன்னா நிச்சயம் காண்பிப்பார் என்று நம்பலாம். ஏனெனில், அவருக்கு கபில் சிபிலுக்கும் அருணா ராய்க்கும் வித்தியாசம் தெரியும். அதையும் விட, இலக்குகள் வழிமுறைகளை நியாயப்படுத்தாது என்னும் காந்தியின் வாக்கும் அவருக்குத் தெரியும்.

(முற்றும்)