நம் உறவினரானப் பூச்சியாருக்குப் பளபளப்பான பழுப்பு நிற, பரிணாம வளர்ச்சிக்குத் தேவையான புறந்தோல்கூறுகளாலான வெளிக்கூடு உள்ளது. உயிரியப்பொறியியல் நம் உடலை புதிய வடிவுருவங்களில் செதுக்கியதைப் போலவே, பரிணாம வளர்ச்சியும் ஆதிகால பூச்சிகளின் மெல்லுவதற்கான வாய்ப்பகுதிகளைப் பின்னோர்களிடம் சிற்றுளிகள், வடிகுழாய்கள், குறுங்கத்திகள் என மாற்றி, புறந்தோல் கூறுகளால் ஆன குமிழ்களைச், சிறப்புக் கருவிகளான மகரந்தங்களை ஏந்திக்கொள்ள சிறு பைகள், கூட்டுக்கண்களைச் சுத்தம் செய்ய சீப்புகள், அப்படியே தாளத்துடன் பாடியவாறு கரங்களை உடலில் ஓடவிட கீறல்கள் உள்ள உடல் என பல்விதமாகச் செதுக்கியுள்ளது.
-அதிககவனம் பெற்ற ‘பூச்சி மனிதர்கள்’ அறிவியல் நிகழ்ச்சியிலிருந்து!
அதிகாலையில் நான் விழிக்கும்போதே உயிரியப்பொறியியல் என்னுள் புகுந்து விளையாடியிருப்பதைக் கண்டறிந்துகொண்டேன். என் நா ஒரு குறுங்கத்தியாக மாறியிருந்தது. இப்போது என் இடங்கையில் புறந்தோல் கூறுகளாலான சிறியதொரு சீப்பு இருந்தது, ஏதோ கூட்டுக்கண்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள போல. எனக்குக் கூட்டுக்கண்கள் இல்லை, எனவே என்னிடம் ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்பதற்கு ஒரு முன்னெச்சரிக்கை இது என்று தோன்றியது.
குறுங்கத்தி வழியாக எப்படி காப்பியைக் குடிக்கப்போகிறேன் என்று வியந்தவாறு படுக்கையிலிருந்து மெல்ல என்னை நானே இழுத்துக்கொண்டு வந்தேன். இனி காப்பியே குடிக்கமுடியாதா, என் காலை உணவில் மண்விழுந்ததா? உயிர்வாழ்வதற்கு, விடியற்காலையில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய கட்டாயம் உள்ள ஓர் உயிரினமாக நான் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கமாட்டேன் என்று நம்பினேன். எந்தவகையான உடல் மாற்றங்களுக்கும் ஏற்றவாறு என் பகற்பொழுதிற்கான ஒழுங்குகள் ஒத்திசைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை; ஆனால், எனக்கு முன்பே விழித்துவிட்ட ஏதேனும் ஒரு
புழுபூச்சியைத் தின்பதற்கு ஆலாய்ப் பறப்பதை எண்ணியவாறு மன எழுச்சியுடன் விடியற்காலையில் நான் விழித்தெழுவதைப் பற்றி நினைக்கையில், பரிணாம மாற்றம் அடையாத என் ஆன்மா மறுத்தலிக்கிறது.
‘கிரக்’ ஐக் குனிந்து பார்த்தேன்; சிவப்பும் வெள்ளையுமாய் இருக்கும் எங்கள் கவந்திகையின் (குவில்ட்) கரைப்பகுதியை முகவாய்வரை இழுத்துப் போர்த்தியவாறு இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தான். இரவோடிரவாக அவனுடைய வாய், ஆழ்ந்தாய்வுக்கேற்ற குழல்வாய் போல் ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் வெவ்வேறாக உருமாறுகிறோமா என்ன?
இன்னும் உருமாறாதிருந்த என்னுடைய ஒரு கரத்தைக் கீழே நீட்டி, எட்டி அவனுடைய தலைமுடியைத் தொட்டேன். அது இப்போதும் மென்மையாகவும், அடர்த்தியாகவும் செழிப்புடன் பழுப்பு நிறத்தில் மெருகுடன் இருந்தது. ஆனால், அவன் வெளித்தோலில் இருந்த தளர்வான புறந்தோல்கூறுகள், புகமுடியாத ஒரு கவசமாகக் கெட்டிப்பட்டுக்கொண்டிருந்ததால், அவனுடையக் கன்னப்பகுதியில் தாடிக்கு உட்புறம் உள்ள தோலின் புரதப்பொருள்கள் கடினத் திட்டுக்களாவதை என்னால் உணர முடிந்தது.
கண்களைத் திறந்தவாறு, அவன், தன் தலையை அசைக்காமல் முன்பக்கமாகக் கலக்கத்துடன் வெறித்துப்பார்த்தான். அவன், தன் வாயை மிகுந்த எச்சரிகையுடன் திறப்பதையும், அதனுள் நடைபெறும் மாற்றங்களை அவதானிப்பதையும் என்னால் காணமுடிந்தது. அவன் தன் தலையைத் திருப்பி மேல்நோக்கி என்னைப் பார்த்துவிட்டு தன் தலைமுடியை லேசாக என் கையில் தேய்த்தான்.
“எழுந்துகொள்வதற்கான நேரமாயிற்றா?” அவன் கேட்டான். நான் மேலும்கீழுமாய் தலையசைத்து சம்மதித்தேன். “அடக் கடவுளே” என்றான். இதை அவன் ஒவ்வொரு காலையிலும் மந்திரம் போல தவறாமல் சொல்லுவதை பழக்கமாகக் கொண்டிருந்தான்.
“நான் காப்பி போடுகிறேன்,” என்றேன். உனக்கு கொஞ்சம் வேண்டுமா?”
வேண்டாமென்று மெதுவாகத் தலையசைத்து மறுத்தான். “ஒரு தம்ளர் சர்க்கரைபாதாமிப் பூந்தேன் ( ஆப்ரிகாட்
நெக்ட்டார்) மட்டும்,” என்றான். அவன் சுருள் வடிவிலிருந்த தன் நீண்ட சொரசொரப்பான நாவை நேராக்கி நீட்டி, கோணப்பார்வையுடன் அதை நோக்கினான். “இது உண்மையில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது, ஆனால் இது இருப்புப்பட்டியலில் இல்லை. விரைவில் பூக்களிலிருந்து மதிய உணவைப் பருகிவிடுவேன். ட்யூக்’ கில் என்னை ஒரு முறை பார்ப்பவர்கள் என்னைக் கட்டாயம் மீண்டும் ஒருமுறை பார்ப்பார்கள்”.
“கணக்கிடும் நிர்வாகிகள் மதிய உணவைப் சப்பவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நான் நினைத்தேன்,” என்றேன்.
வினோதமான தன் வாயின் வடிவுருவைப் புத்தாய்வு செய்துகொண்டே, ” சீரமைக்கப்பட்ட மலர்களிலிருந்தன்று,…. ” என்றான். பிறகு என்னை நிமிர்ந்துபார்த்துவிட்டு கவந்திகையை விலக்கி, “இங்க வாயேன்” என்றான்.
கொஞ்சம் காலம் ஆயிற்றுதான் என்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். எனக்கு வேலைக்கு வேறு கிளம்பவேண்டியிருந்தது. ஆனால் அவனுடைய நறுமணம் என்னைக் கவரும்படியாகத் தூக்கலாக உறைத்தது. ஒருவேளை பாலுணர்வூக்கி நாளங்கள் வளர்கின்றனவோ என்னவோ. நானும் கவந்திகைக்குள் புகுந்து அவன் மீது என்னுடலை நீட்டிக்கொண்டேன். எங்கள் மீது உருவாகிக்கொண்டிருந்த புறந்தோல் கூறுகளாலானக் குமிழ்களும் வினோதமான புடைப்புகளும் சிறிது சௌகரியக்குறைவை அளித்தன. ” வாயில் குறுங்கத்தியை வைத்துக்கொண்டு எப்படி முத்தம் அளிப்பதாம்?” நான் கேட்டேன்.
“செய்வதற்கு வேறு எத்தனையோ இருக்கின்றன. புதிய கருவிகள் புதிய சாத்தியங்களை அளிக்கின்றன”. விரிப்புகளைப் புறந்தள்ளிவிட்டு உருமாறாதிருக்கும் கரங்களை என் உடலில் தோளிலிருந்து தொடை வரை ஓட்டினான். ” என் நா உறுத்தினால் சொல்லிவிடு”.
உறுத்தவில்லை.
படுக்கையிலிருந்து இரண்டாவது தடவையாக எழுந்து அப்படியே கிறுகிறுத்த மனத்துடன் சமையலறைக்குப் போனேன்.
காப்பிக்கொட்டைகளைப் பொடிக்கத் திரிகையில் போட அளக்கும்போது, வாயில் உள்ள குறுங்கத்தியால் காப்பிக்கொட்டைகளை ஒரு கை பார்க்கலாம் என்று இடையே தோன்றினாலும், காப்பி குடிப்பதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தேன். நாசமாப் போன இக்குறுங்கத்தி எதற்குத்தான் இருக்கிறது? தெரியவில்லை. கண்டுபிடித்தாக வேண்டுமா என்று கூடத் தோன்றியது.
திரிகையை ஒரு பக்கம் வைத்துவிட்டு, தூலிப்மலர் வடிவக் கண்ணாடித் தம்ளரில் ஒரு டப்பாவிலிருந்து சர்க்கரைபாதாமிப் பூந்தேனை ஊற்றினேன். ஆழமற்ற தம்ளர்கள் வருங்காலத்தில் கிரக்’ கிற்கு சிக்கலாகப்போகின்றன என்று எண்ணிக்கொண்டேன். திட உணவை பற்றியோ கேட்கவே வேண்டாம்.
என்னுடைய தனிப்பட்ட சிக்கலோ, காலையுணவிற்கு என்ன சாப்பிடவேண்டும் என்பதைக் கண்டுபிடித்த பிறகு, காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் சந்திப்பு இருப்பதால் நேரத்திற்கு போகவேண்டும் என்பதேயாகும். பேசாமல் காலையுணவை விட்டுவிடலாம். கிரக் படுக்கையிலிருந்து எழுந்துகொள்வதற்கு முன்பே, வேகமாக உடைமாற்றிக்கொண்டு கதவை விரைவாகத் திறந்துகொண்டு ஓடினேன்.
முப்பது நிமிடங்களுக்குப் பின்னர், நான், ஏறத்தாழ தூக்கம் அரையும்குறையுமாகக் கலைந்தநிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருந்த விற்பனை மேலாளருடன் சிறியதொரு கருத்தரங்க அறையில் அமர்ந்து ‘மாதிரி 2000’ த்தைக் களமிறக்குவதற்கானத் திட்டத்தை மேலாளர் விளக்கக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஹாரி, உயிரியப்பொறியியல் திட்டத்தில் இணையும்போதே சிறப்புறு குரங்கினத் தகவகைமைப்பை, உ. பொ. விருப்பத்தெரிவு எண் 4. ஐத் தெரிவு செய்திருந்தான். அதன்படி பாடபுத்தகத்தில் எடுத்துக்காட்டாக உள்ள படத்தைப் போல் பரிணாம வளர்ச்சியடைந்துகொண்டிருந்தான் : சிறிய வடிவுருவு, நீண்ட கால்கள், தொலைவை எடைபோடுவதற்கு உதவியாக முன்பக்கம் நோக்கும் கண்கள், மரங்களிலிருந்து கீழே விழாமலிருக்க, கவ்வும் திறன்கொண்ட நீண்ட விரல்கள்.
முதல் நிலை விலங்கினங்களுக்கான உடல் அளவைகளுக்கு ஏற்றவாறு வெற்றிக்குத்தோதான கச்சிதமாகப் பொருந்தும் மெல்லிய கோடுகளுடைய மூன்றுடைத்தொகுதியை(த்ரி பீஸ் சூட்) அணிந்திருந்தான். அவனுக்காகத் தைக்கப்பட்ட இந்தத் தனித்தன்மையுடைய உடைக்கு என்ன கட்டணம் கட்டினானோ என்று எண்ணி வியந்தேன். இல்லை, ஒருவேளை குரங்கினங்களுக்கென்றே பிரத்யேகமாக உள்ள ஆயத்தஆடைகள் விற்கும் கடை ஒன்றை ஆதரிக்கிறானோ என்னவோ?
அவன் ஓர் அவத்தமான விற்பனைத் திட்ட முடிச்சிலிருந்து இன்னொன்றுக்கு வேகமாகத் தாவத்தாவ நான் கேட்டுக்கொண்டிருந்தேன். கணிதத்திலிருந்தும் பொறியியலிலிருந்தும் சில சான்றுகளை எடுக்கமுயன்று கடினமான
உருவகங்களுடன் வணிகப்பேச்சாக,
‘குழாய்த் தொடர் செயல்விகிதத்திற்கான காரணிக்கூறுகள் இன்றியமையாதவை; ஊடகத்தைச் சரிகட்டவேண்டும்” என்று ஒரு கீற்றுப்புன்னகைகூட இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன், வணிகமேலாண்மைக்கான கல்விநிலையத்திலிருந்து கற்று வெளிவந்தவுடனேயே நேரடியாக நிறுவனத்தில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. திறமையில் ஊறிய தான் நிறுவனத்திற்கு மிகத்தேவையானவன் என்று கருதினான். எனக்கு அவனைப் பிடிக்கவில்லைதான்; ஆனால் ஆழ்மனதிலிருந்து அரைவேக்காட்டுத்தனமானக் கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துவிடும் அவனுடைய திறனைக்கண்டு கொஞ்சம் அழுக்காறு எனக்கு ஏற்பட்டது. விற்பனையை அதிகரிக்க அவன் தனது ஆலோசனைகளை மடமடவென்று முன்வைத்தபோது நானும் அவனுடன் இணைந்துகொண்டு போகிறபோக்கில் என் விருப்பத்தெரிவுகளைத் தெரிவிக்காததால் அவன் என்னைப் பற்றித் தவறாக நினைத்துக்கொள்ள இடம் கொடுத்தாயிற்று என்பதும் எனக்குப் புரிந்தது.
அவனுடைய விற்பனைத் திட்டத்தைப் பற்றி நான் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை. விளம்பரப்பிரிவானது எவ்வித எதார்த்த அடிப்படையுமின்றி பாடங்களில் உள்ள தேற்றங்களை அப்படியே பயன்பாட்டில் கொண்டுவந்தது. எனக்கு இரண்டு வழிமுறைகள் இருந்தன. ஒன்று நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு தீர்வுக்கு அவனைக் கட்டாயப்படுத்தி இணங்கவைப்பது, மற்றொன்று நான் அவனுடைய முடிவை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லிவிட்டு, எல்லோரிடமும் இது அவனுடைய முடிவுதான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு அவனை ஒருவழி பண்ணிவிடுவது. எந்த வழியைத் தெரிவு செய்வேன் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.
“ஆமாம், உனக்காக நாங்கள் அதை நிச்சயம் செய்வோம்” என்றேன் அவனிடம். ஒரு பிரச்சனையுமில்லை.” இருவரில் யார் தப்பிப்பிழைக்கிறார், யார் முடிவற்ற களையபாரச் சுழலில் மாட்டிக்கொள்கிறார் என்று ஒரு கை பார்த்துவிடுவோம்.
ஹாரியின் கருத்து வெற்றிபெற்றபின்னரும்கூட அவன் அதை இன்னமும் துவைத்தெடுத்துக்கொண்டிருந்தான். என் கவனம் கொஞ்சம் அங்குமிங்கும் சிதறியது– எல்லாம் முன்பே கேட்டதுதான், குளிரூட்டியின் கறங்கும் ஒலி, ஏற்கனவே அறிமுகமான எளிதில் அசட்டைபட்டுவிடக்கூடிய பின்னணிசத்தம்தான். என்னுள் மூழ்கிப்போனேன்; அப்படியே ஈரக்காற்றோட்டத்தில் மிதக்கவேண்டுவது போலவும், வெளிச்சம் மிகுந்த ஒரு மேற்பரப்பில் இறங்கி வெதுவெதுப்பான உணவை ஒருகைபார்க்க பேரவா கொள்வது போலவும் என்னுள் புதிய உணர்வுகள் அலைமோதின.
பூச்சிக்கனவுகளில் நான் மிதந்துகொண்டிருக்கையிலேயே, கருத்தரங்கு நடக்கும் அறையின் மேசைமேல் இருந்த தாள்களையெல்லாம் ஹாரி கையாண்டுகொண்டிருக்கும் போது அவனுடைய மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தின் பொன்முலாம் பூசப்பட்ட பட்டைக்கும், சுருட்டிவிடப்பட்ட சட்டையின் கைப்பகுதிக்கும் இடையே இருந்த சருமத்தின் வாசனையைக் கூர்மையான உணர்ந்துகொண்டேன். அவனுடல் ஒரு பெப்பரோனி பீட்சாவைப்போல் அல்லது கரியடுப்பில் வாட்டிய ஹாம்பர்கரைப்போல் நறுமணம் வீசியது. அவனுடல் அற்புதமாக நறுமணத்துடன் இருந்தாலும் உண்பதற்கு ஒருவேளை அது அத்தனை சுவையாக இல்லாமல் இருக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் எனக்கோ பசி. ஏதோ ஒரு காரணத்திற்காகக்தான் எனக்குக் குறுங்கத்திபோன்ற நா இருந்தது ஆனால் அது தவ்வுத்துண்டுகளைக் குத்தியெடுப்படுத்தற்கு அல்லவே. அப்படியே அவன் கரத்தின் மீது சாய்ந்தவாறு அதன் பின்புறத்தைப் பற்றிக்கொண்டு ஒரு நுண்புழைக்குழாயைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் இருந்தேன்.
என்னை கவனித்துவிட்ட ஹாரி என் தலையின் ஒருபக்கத்தை பட்டென்று தட்டினான். மீண்டும் என்னை அவன் அடிப்பதற்குமுன் பின்வாங்கிக்கொண்டேன்.
கையைத் தேய்த்துவிட்டுக்கொண்டே “மாதிரி 2000 ‘த்தைக் களமிறக்குவது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம், இல்லை மறந்துவிட்டாயா,” என்றான்.
“மன்னித்துக்கொள், காலையுணவை உண்ணாமல் விட்டுவிட்டேன்,” எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.
“சரிதான், கிறிஸ்துவிற்காகவாவது உன் வளர்ச்சியாக்கிகளை (ஹார்மோன்கள்) சரிசெய்துகொள் “. அவன் எரிச்சலடைந்துவிட்டான், என்னால் அவனை உண்மையிலேயே குற்றம்சாட்டவும் முடியவில்லை. “உன்னால் ஒழுங்காகக் கவனம் செலுத்தமுடியுமென்றால் ஊடகத்திற்கு ஒதுக்குவது பற்றியாவது பேசலாம். எனக்குப் பதினொன்று மணிக்கு கட்டடம் எண் இரண்டில் இன்னொரு சந்திப்பு வேறு இருக்கிறது”.
இந்த நிறுவனத்தில் நேரத்திற்குச் சாப்பிட அளிக்காமல் இருப்பது பழக்கமானதுதான் என்றாலும், சிறு பிழைகளைக் கண்டுகொள்ளாமல் இங்கிதத்துடன் சிலநேரங்களில் நடந்தும்கொள்ளும். இனி நேரடியான வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்திலிருந்து எனக்கும் கொஞ்சம் ஒதுக்கி உதவுவான் என்று இனி நம்பிக்கொண்டிருக்க முடியாது,…
சந்திப்பு முடிந்தபின் மீதம் இருக்கும் நேரத்தில், கருத்தரங்கு அறையில் திறந்திருந்த கதவின் பக்கமாக என் பார்வையை அடிக்கடி செலுத்தி வரண்ட இந்த நிறுவன வளாகத்தில் ஒரு புள்ளியாக கானல்நீர்போல் வரவேற்பறையில் இருந்த பெரிய அலங்காரச் செடியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் அது ஒன்றும் அத்துணைச் சாறுள்ளதாக இல்லை, இத்துணைப் பசியில்லாவிட்டால் அதைத் தின்றுவிட நான் விழைந்திருப்பேனா, மாட்டேன், இரண்டு விதமாகவும் நான் செயல்பட்டால் எப்படியிருக்கும்?
அந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.
நல்லவேளை அனைத்துண்ணியாகவாவது இருக்கிறேனே- பெண்நுளம்புகள் (பெண்கொசுக்கள்) தாவரங்களைத் தின்பதில்லை. அப்படியானால் இன்னும் செயல்முறை பூர்த்தியடையவில்லை,….
துணைக்கு ஒரு கிண்ணம் காப்பியைச் சமையலறையிலிருந்து எடுத்துக்கொண்டு கதவை மூடிவிட்டு என் அலுவலக அறையில் அமர்ந்தவாறு எனக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்று எண்ணி வியந்தேன். ஹாரியுடனான நிகழ்வு என்னைத் தொந்தரவு செய்தது. நான் ஒரு நுளம்பாக மாறிக்கொண்டிருக்கிறேனா? அப்படியானால் அது எனக்குப் பெரியதாக என்ன நன்மையைச் செய்து தொலைக்கப்போகிறது. நச்சரிக்கும் ஒரு தனித்த இரத்த உறிஞ்சியால் நிறுவனத்திற்கு எப்பயனுமில்லை.
கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; மெலிதாகத் திறக்கப்பட்ட கதவிடுக்கில் என் முதலாளியின் தலை தெரிந்தது. தலையசைத்தவாறு என் அலுவலகத்தினுள் வர சைகை செய்தேன். என் மேசையின் எதிர்புறமிருந்த விருந்தினருக்கான நாற்காலியில் அவன் அமர்ந்தான். அவன் முகத்தைப் பார்க்கும்போதே அவன் ஹாரியிடம் ஏற்கனவே பேசிவிட்டான் என்று என்னால் சொல்ல முடிந்தது.
டாம் சாம்சன் கொஞ்சம் மூத்தவன் — பண்டைய உயிரியப் பொறியியல்; தூண்டல்-மறுவினை நுட்பங்கள் நன்கு கைவரப்பெற்றவன்; ஆனால் என்னவோ வேலையில் உச்சநிலையை அடையவேயில்லை. எனக்கு அவனைப் பிடித்திருந்தது, ஆனால் அதுதான் அவனுடைய நோக்கமாகவும் இருந்தது. தன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமலேயே தன் தோற்றம், மெய்ப்பாடு, குரலின் தொனி இவையனைத்தையும் பிறர் தனை அணுகுவதற்கு எளிதாக்கியிருந்தான்
அவன் இவ்வாறு செய்கிறான் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் அவனுடைய உத்தி பலன் அளித்தது.
என்னை ஏதோ அனுதாபத்துடன் பார்ப்பது போல் இருந்தாலும் உண்மையில் அது ஏதேனும் எதிர்ப்பு, அல்லது மறுவினையைச் செயலிழக்கச் செய்வதற்காக ஒத்திகை செய்யப்பட்ட பாவனை-தூண்டல்தான். ” ஏதேனும் உன்னை வருத்துகிறதா, மார்க்ரெட்?”
“என்னை வருத்துவதா? எனக்குப் பசி; அவ்வளவுதான். பசியெடுக்கும்போது எனக்கு முன்கோபம் வந்துவிடும்.”
கவனித்துக்கொள், எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். அந்த நிகழ்வை அவன் குறிப்பிடவில்லை. விட்டுவிடலாம், அவனாகவே அந்தப் பேச்சை எடுக்கட்டும். மனத்தை ஒன்றும் உறுத்தாமல் வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக அவன் கண்களைப் பார்த்தேன். நேர்ப்பார்வை இல்லாதிருத்தல் நேர்மையிலாமைக்குச் சமம்.
நானே பேச்சைத் தக்கபடித் துவக்கவேண்டுமென்று டாம் வெறுமென்று என்னைப் பார்த்துக்கொண்டே நேரத்தை ஓட்டினான். என்னுடைய காப்பியிலிருந்து தீய்ந்த வாடை அடித்தது, ஆனாலும் நான், என் நாவை அதனுள் நீட்டி பருகுவதுபோல் பாவனைபுரிந்தேன். “காலைக்காப்பி குடிக்காவிட்டால் நான் மனிதப்பிறவியே கிடையாது,” என்குரல் எனக்கே பொய்மையாக ஒலித்தது. வாயை மூடு என்று நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
இதுபோல் இடையில் நுழைவதற்கான வாயில் கிடைக்கத்தான் டாம் காத்துக்கொண்டிருந்தான். ” அதைப்பற்றிதான் உன்னிடம் எனக்கு பேசவேண்டும் மார்க்ரெட்”. இயற்கையான எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இருக்கும் மலைவாழ் மனிதக்குரங்கு போல தளர்வாக முதுகை வளைத்தவாறு அமர்ந்துகொண்டிருந்தான். ” இப்போதுதான் ஹாரி விந்த்ராப்’ இடம் பேசினேன், விற்பனைக்கான வியூகங்கள் குறித்த சந்திப்பின் போது நீ அவன் இரத்தத்தை உறிஞ்சப்பார்த்தாய் என்றான் “. அவன் ஒரு கணம் பேச்சை நிறுத்திவிட்டு என் எதிர்வினையைக் காண முற்பட்டான், ஆனால் என் முகபாவனை எவ்வித உணர்ச்சியையும் காட்டாது இருந்தது, நானும் எதுவும் பேசவில்லை. ஏமாற்றத்தைப் புலப்படுத்தும் விதமாக அவன் முகம் மாறியது. ” உன் உடல் மூன்று துண்டுகள் இணைந்த உடலாக வளர்ச்சிபெற்றதைக் கவனித்தபோது, உன்னையே அதிகமாக நம்பிக்கொண்டிருந்தோம், உனக்கும் தெரியும். ஆனால் உன் செயல்கள் நாங்கள் எதிர்பார்க்கும் சமூகவளர்ச்சியையும் அமைப்பின் வளர்ச்சியையும் கொஞ்சமும் பிரதிபலிக்கவில்லை”.
அவன் கொஞ்சம் நிறுத்தியபோது, என் தரப்பிற்கு ஆதரவாக ஏதேனும் சொல்லவேண்டிய முறை வந்தது. “எல்லாப் பூச்சிகளும் பெரும்பாலும் தனிமைவிரும்பிகள், தெரியுமா? ஒரு கறையானோ ஓர் எறும்போ உருவாகும் என்று எண்ணி நிறுவனம் பிழைசெய்துவிட்டதோ என்னவோ. நான் அதற்குப் பொறுப்பாக முடியாது “.
“இதைப் பார் மார்க்ரெட், என்றான் நட்பார்ந்த கண்டிப்பு தொனிக்கும்படியாகக் குரலை மாற்றிக்கொண்டவாறு,
இது ஒன்றும் அடர்கானகம் இல்லை, உனக்குத் தெரியும். ஒப்புதல் படிவங்களில் நீ கையொப்பம் இட்டபோதே உ. பொ. பணியாளர்கள் உன்னை நிறுவனத்திற்கு ஏற்ற பயன்மிகு உயிரினமாக வார்த்தெடுக்க ஒப்புதல் அளித்துவிட்டாய். ஆனால் இது இயற்கையன்று, இது மனிதர் இயற்கையை மீள்உருவாக்கம் செய்வது. இது சம்பிரதாய விதிகளைப் பின்பற்றுவதில்லை. நீ எதுவாக வேண்டும் என்று உண்மையாக விரும்பினாலும் அதுவாகவே ஆகலாம். ஆனால் நீ ஒத்துழைக்க வேண்டும்.”
“நான் என்னால் இயன்றவரை ஆகச் சிறப்பாகச் செய்கிறேன், என்றேன் இணக்கமான குரலில். ” ஒரு வாரத்தில் எண்பது மணிநேரங்களுக்கான உழைப்பை அளித்துக்கொண்டிருக்கிறேன்”.
” மார்க்ரெட், உன் வேலையின் தரம் பிரச்சனைக்குறியதன்று. மற்றவர்களுடன் ஊடாடுவது குறித்துதான் நீ கவனம் கொள்ள வேண்டும். குழுவின் ஓர் அங்கத்தினராகப் பணிபுரிய நீ கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி புறம் பேசுவதைத் தொடர நான் அனுமதிக்க முடியாது. இன்று மதியம் உ. பொ. கலந்தாய்வாளரிடம் செல்ல ஆர்தரிடம் சொல்லி உனக்கு நேரம் ஒதுக்குவதற்குப் பதிவு செய்து வைக்கிறேன் “. ஆர்தர் அவனுடைய செயலர். துறையில் நடப்பவை அனைத்துமே அறிந்தாலும் பெரும்பாலும் அவன் வாயைத் திறக்கவே மாட்டான்.
டாம் என் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது, “என்னால் சமாளிக்க முடிந்தால் நான் ஒரு சமூகப் பூச்சியாக இருப்பேன்,” என்று முணுமுணுத்தேன். ”ஆனால் அருந்தகங்களில் இருப்பவர்களிடம் என்ன பேசவேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிவதேயில்லை”.
ஐம்பது வெவ்வேறுவிதமானக் கனிப்பூந்தேன் வகைகளுக்கு விளம்பரம் செய்யும் உடல்நலம்பேணும் உணவகம் ஒன்றில் கிரக்’ ஐயும் எங்கள் நண்பர் டேவிட் டெட்லொர்’ ஐயும் மதிய உணவின்போது சந்தித்தேன். நாங்கள் இதற்கு முன் இங்கு உண்டதேயில்லை, ஆனால் இந்த இடம் பிடித்தமானதாய் இருக்கும் என்று கிரக்’ இற்குத் தெரிந்திருந்தது. டேவிட்டிற்கோ முன்பே இது அவனுடைய விருப்பமான உணவகமாக இருந்தது. மேலும், அவனுக்கு எல்லா பற்களும் இன்னும் இருப்பதால், எனக்கும் இது சரி வரும் என்று கண்டுகொண்டேன்.
நான் வந்துசேரும்போதே டேவிட் அங்கே இருந்தான், ஆனால் கிரக் இன்னும் வரவில்லை. டேவிட்’டும் இதே நிறுவனத்தைச் சேர்ந்தவன்தான், ஆனால் வேறு பிரிவில் பணிபுரிந்து வந்தான். நிறுவனத்தின் ஆசைகாட்டல் தந்திரங்களுக்கெல்லாம் குறிப்பிடத்தகுந்த வகையில் தடுப்பாற்றல் கொண்டவனாகத் தன்னை நிருவியிருந்தான். அவன் உ. பொ. லுக்கு உட்படாததுமட்டுமன்று, அவன் ஒரு மூவணி முழுஉடைகூட வாங்கிக்கொள்ளவில்லை. பத்தாண்டுகளுக்கு முன் நாகரிகமாக இருந்த நாராய்ப்போன ஓவுடையையும் ( ஜீன்ஸ்) , வண்ணம் அள்ளித்தெளித்தாற்போல் தோற்றமளிக்கும் ஒரு ஹவாய் மேல்சட்டையையுமே இன்று அணிந்திருந்தான்.
“இப்படியெல்லாம் உடை உடுத்த உன் முதலாளி விடுகிறாரா என்ன?” நான் வினவினேன்.
” எங்களுக்குள் இப்படி ஓர் உடன்படிக்கை இருக்கிறது. அதாவது, எனக்கு வேலை கொடுங்கள் என்று நான் கேட்பதுமில்லை, நான் என்ன அணிய வேண்டும் என்று அந்தப் பெண்மணியும் சொல்லுவதில்லை”.
வாழ்க்கையைப் பற்றி டேவிட்டுடைய கண்ணோட்டம் என்னுடையதைக் காட்டிலும் முற்றிலும் வேறானது. அவன் ஆய்வு-வளர்ச்சித் துறையிலும், நான் விளம்பரப்பிரிவிலும் இருப்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து நான் சொல்லவில்லை . உலகமே சீராக இருப்பதாகவும் , தெரிவுசெய்யக்கூடிய புதிர்கள் அவன் அனுபவிப்பதற்காகவே அதில் இடப்பட்டிருப்பதாகவும் அவன் கருதுகிறான், நானோ அதை எப்படிப் பார்க்கிறேனென்றால், … பங்குகொண்டு வெற்றிபெறவேண்டிய நுழைவுத்தேர்வுத்தொடர்களைப் போல,….
ஒரு மேசைக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது, ” சரி, இப்போது புதிதாய் என்னவாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள், மக்களே?” என்று கேட்டான்.
“கிரக் ஒரு பாழாய்ப்போனப் பட்டாம்பூச்சியாக மாறிக்கொண்டிருக்கிறான். சென்றவாரம் வெளியே சென்று ஈராறு பட்டாலான இத்தாலி வியர்விகளை வாங்கினான். அவை நிறுவனத்திற்கு ஏற்றவாறு இல்லை”.
“அவன் ஒன்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவனில்லை, மார்க்ரெட்”.
“அவன் எதனையும் பயன்படுத்தப்போவது கிடையாது என்றால், பின் எதற்காக இந்த உ. பொ. லுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டான்?”
“எல்லாம் நன்றாகக் காட்சியளிக்கத்தான், கொஞ்சம் சிங்காரித்துக்கொள்கிறான், மைக்கெல் ஜாக்சனைப் போல, உனக்குத் தெரியுமா?”
டேவிட் என்னிடம் விளையாட்டுக்குச் சொல்கிறானா, இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதன் பின் அவன் முடிதிருத்தக குழுவில் பாடுகிறானே , அதில் அவனுடைய பகுதிக்கான இசையைப் பற்றிப் பேசத் துவங்கினான். அடுத்த போட்டிக்காக அவர்கள் கருவண்ணத் தோலாடை அணிந்து, ஷெல் சில்வெர்ஸ்டீய்னின், ” என்னிடம் வந்துவிடு, என் ஆணழகுப் பாப்பா ” பாடப்போகிறார்களாம்.
“அவர்களை அப்படியே கிறங்கடித்துவிடும்,” குதூகலத்துடன் சொன்னான். “பிரமாதமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்”.
“குழு வென்றுவிடும் என்று கருதுகிறாயா, டேவிட்?”. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் நடுவர்களைத் திருப்திப் படுத்துவது மிகவும் விந்தையாக இருக்கும் என்று தோன்றியது.
” யார் கண்டுகொள்ளப்போகிறார்கள்?” என்றான் டேவிட். அவன் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.
அப்போதுதான் கிரக் தலையைக் காட்டினான். தாமிரப்பச்சை வடிவுருவங்கள் கொண்ட கோபால்ட் நீலத்தில் பட்டுவியர்வி ஒன்றை அணிந்திருந்தான். இத்தாலியில் செய்தது. பளிச்சிடும் நீல விமானங்களைப் போன்றதொரு வடிவுருவில் ஒரு
ஜோடி தொங்கும் காதணிகளை வேறு அணிந்திருந்தான். செதுக்கப்பட்ட காய்கறிகள் அலங்கரித்த இடத்திற்கு அருகில் உள்ள மேசை ஒன்று எங்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
“அசத்தலாக இருக்கிறது,” என்றான் டேவிட். எல்லோருக்குமே காய்கறிகள் அருகில் உட்காரவேண்டுமென்று ஆசை. இப்படிப்பட்ட இடத்தில் நீ இங்குதான் உட்கார்ந்துகொள்ள வேண்டும். கிரக்’ ஐப் பார்த்து தலைதுலுக்கியவாறு ,” இது உன் வியர்வி என்று நினைக்கிறேன்,” என்றான்.
“என் ஆளுமையில் இருக்கும் பட்டாம்பூச்சிதான் அது,” என்றான் கிரக். இதுபோன்றவற்றை பரிமாறுபவர்கள் செய்வதேயில்லை. எக்ஸ்ப்ரெஸ்ஸோ எந்திரம் அருகே உள்ள மேசைதான் எனக்கு எப்பவுமே கிடைக்கும்”.
இப்படிப் பட்டாம்பூச்சியாகிவிட்டால் கிடைக்கப்போகும் அனுகூலங்களைப் பற்றியே கிரக் பேசுவதைத் தொடர்ந்தால், நான் உள்ளடக்கத்தை மாற்றிவிட ஆயத்தமாக இருந்தேன்.
“அது சரி டேவிட், எப்படி இன்னும் நீ உ. பொ. லுக்குப் பதிவு செய்துகொள்ளவில்லை? ” நான் கேட்டேன். ” நிறுவனமே பாதிச் செலவை ஏற்றுக்கொண்டுவிடுகிறது, கேள்விகளும் கேட்பதில்லை”.
டேவிட் வாயைக் கோணிக்கொண்டு, கைகளை முகத்தின் அருகில் கொண்டு வந்து, நாசியையும் கண்களையும் சரிப்படுத்திக்கொள்வது போல பூச்சிகளுக்கே உரித்தான சில சிறு அசைவுகளைச் செய்தான். ” இப்போது எப்படி இருக்கிறேனோ அதுவே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.” என்றான்.
இதைக்கேட்டவுடன் கிரக் கொக்கரித்தான், ஆனால் நான் கடுமையான முகபாவத்துடன் இருந்தேன். ” கொஞ்சம் அனுசரித்து நடந்துகொண்டால், இன்னும் வேகமாக முன்னேறலாம். நீ செய்ய நினைத்தால், செய்யலாம், கூடுதலாக உனக்கு நல்லதொரு உளப்பாங்கும் உள்ளது”.
” எனக்கு வேண்டியதைவிட நான் வேகமாகவே முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறேன்- இந்த முதுவேனிற்காலத்தில் நான் நினைத்தபடி எனக்குத் தேவையான மூன்றுமாத கால விடுப்பு எடுக்க முடியாது போலிருக்கிறது”.
“மூன்று மாதங்களா?” நான் அயர்ந்துபோனேன். ” திரும்பி வந்தபின் வேலை இல்லாமல் போய்விடுமோ என்று உனக்கு அச்சமாக இல்லை? “.
நிதானமாக, உணவுப்பட்டியலைத் திறந்தவாறு, “அப்படியேகூட என்னால் வாழ முடியும்”, என்றான் டேவிட்.
பரிமாறுபவர் நாங்கள் தேர்ந்தெடுத்தவற்றைக் குறித்துக்கொண்டு சென்றார். அதிக நார்ச்சத்து உள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தமையால் எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ளுமுகமாக இணக்கமான மௌனத்தில் ஒரு கணம் அமர்ந்திருந்தோம். அதற்குப்பிறகு ஹாரி விந்த்ராப்’ உடனான என் அனுபவத்தைக் கதைபோல் விவரித்தேன்.
“என்னிடம் ஏதோ கோளாறு உள்ளது, ” என்றேன். ” அவன் இரத்தத்தைப் போய் நான் ஏன் உறிஞ்சவேண்டும்? அது எனக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறது? “.
“சரிதான்,” என்றான் டேவிட், ” நீதான் இதைப்போன்ற செயல்களுக்கான அட்டவணையைத் தெரிவுசெய்தாய். இது எங்கேபோய் முடியவேண்டும் என்று எதிர்பார்கிறாய்?”.
“இருப்புப்பட்டியலின்படி பூச்சி எண் 2 ஐத் தெரிவு செய்வது, என்னை இடைமட்ட மேலாண்மையில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஒரு வெற்றிகரமான போட்டியாளராக ஆக்கிவிடவல்லது, மேலும், அதிகாரப் படிநிலையில் மேல்மட்டங்களில் நுழைவதற்கு பலிக்கக்கூடிய மறுவினைகளையும் உருவாக்கவல்லது. இதைச் சொல்லக்கூடாது”. வெறும் விளம்பரத்திற்கான பேச்சுமட்டும்தான், இதையெல்லாம் உண்மையாகவே செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ” எனக்கு வேண்டியது இதுதான். எல்லாமே என் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவேண்டும். நானே தலைவராக இருக்கவேண்டும் “.
“ஒருவேளை நீ திரும்பவும் உயிரியப்பொறியியலுக்குச் சென்று மீண்டும் முயலவேண்டுமோ என்னவோ,” என்றான் கிரக். “சிலநேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை வளர்ச்சியாக்கிகள் செய்வதில்லை. இதோ, என் நாவைப் பார்.” அவன் சுருட்டியிருந்த தன் நாவை பதவிசாக விரித்து நீட்டினான், பின் மீண்டும் வாய்க்குள் சுருட்டி வைத்துக்கொண்டான். “ஏதோ, இது சிறிதுசிறிதாக எனக்குப் பிடிக்கத் துவங்கியிருக்கிறது.”. அருவருக்கும்படியான உறிஞ்சும் ஓசையுடன் தன்னுடைய பானத்தைக் குடித்தான். அவனுக்கு குடிப்பதற்கு உறிஞ்சுகுழல் தேவைப்படவில்லை.
பரிமாறுபவர் அளித்த வனமுளரித் தேநீரைப் பெற்றுக்கொண்டே, உறுதியான குரலில், “நீ ஒன்றும் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதே, மார்க்ரெட்,” என்றான் டேவிட் . உயிரியப்பொறியியலால் , பணவிரயம், நேரவிரயம், பத்து லட்சம் ஆண்டுகளின் பரிணாமவளர்ச்சி விரயம். ஒருவேளை மனிதப்பிறவிகள் மேலாளர்களாகத்தான் ஆகியிருக்க வேண்டுமென்றால் மெல்லிய கோடுகளை மேற்புறம் கொண்ட உடலை பரிணாமத்தின் வழி பெற்றிருப்போம் “.
” புத்திசாலித்தனமாகக் காயை நகர்த்துகிறாய்.” என்றேன், ஆனால் அது மாபெரும் பிழை”.
பரிமாறுபவர், எங்களுக்கான மதிய உணவைக் கொண்டுவந்தார்; அவற்றை எங்கள் முன் பரப்பியவுடனேயே நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டோம். கடும்பசியிலிருந்த மூவரின் எதிர்பார்த்த மௌனம் போல் அது இருந்தது. ஆனால் உண்மையில் இதிலெல்லாம் ஆர்வமற்ற சுற்றியிருப்பவர்கள் முன் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட மூவரின் பணிவண்புமிக்க மௌனம்தான் அது. அவர் அங்கிருந்த சென்றவுடன் நாங்கள் எங்கள் கலந்துரையாடலைத் தொடர்ந்தோம்.
“நான் அதைத்தான் சொல்கிறேன்,” என்றான் டேவிட். ” நிருவாகம் மீண்டெழுவதனால் ஏற்படும் பலன்களைப் பற்றிய ஐயம் ஒருபக்கம் இருக்கட்டும், உயிரியப்பொறியியலுக்கான முயற்சி முழுவதும் விரயம் . உதாரணத்திற்கு ஹாரி விந்த்ராப்’ ஐயேக் கருதினால், அவனுக்கு உயிரியப்பொறியியல் தேவையேயில்லை. அவனோ இங்கே, வணிகக் கல்விநிலையத்தில் படித்து வெளிவந்து, மேல்மட்ட நிருவாகப் பதவிக்காக, இச்சையுடன் இதோ ரீங்காரம் செய்துகொண்டிருக்கிறான். மொத்தத்தில் மேல்மட்டத்தில் ஒரு தலைமைப் பதவிக்கான வாய்ப்பு ஏற்படும்வரை நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறான். உன்னைக்காட்டிலும் அவனிடம் உள்ள சிறப்பு அம்சம் அவனுடைய இளமையும் அனுபவமின்மையும் தானே தவிர
சிறப்புறு குரங்கினத் தகவமைப்பு அன்று.
கொஞ்சம் கடுமையாக, ” நல்லது ” என்றேன். கடந்தகாலத்தில் தோல்வியுற்றவைகளைப் பற்றிய அறிவினால் அவன் கட்டுப்படத் தேவையில்லை, அதுவும் திண்ணமாக, ” என்றேன். “ஆனால் இதைச் சொல்லுவதால் என் பிரச்சனை தீரப்போவதில்லை , டேவிட். ஹாரி பதிவு செய்து கொண்டுவிட்டான். நானும் பதிவுசெய்துகொண்டுவிட்டேன். மாற்றங்கள் வேறு நடந்துகொண்டே இருக்கின்றன, எனக்கு வேறு விருப்பத்தெரிவு இல்லை”.
கரடிபொம்மை போன்ற வடிவம் கொண்ட ஒரு நெகிழ்ம புட்டியிலிருந்து ஒரு பெரிய சொட்டு தேனை என்னுடைய தேநீரில் பிதுக்கிக்கொண்டேன். ஒருமிடறு தேநீர் பருகினேன். அது புதினாவின் நறுமணத்தை உடையதாகவும் மிக இனிப்பானதாகவும் இருந்தது. ” இப்போது நான் தவறான பூச்சியாக மாறிக்கொண்டிருக்கிறேன். இதனால் விளைபொருள் விற்பனையைக் கையாள்வதற்கான என் திறன் அழிவடைந்துவிட்டது “.
“கொஞ்சம் அதை அப்படியே கிடப்பில் போடேன்!” என்றான் கிரக் திடீரென்று. ” ரொம்ப சலிப்பாக இருக்கிறது. நிறுவனத்தின் அரசல்புரசலானவற்றையெல்லாம் இனி நான் கேட்கவிரும்பவில்லை. வேடிக்கையான ஏதேனும் ஒன்றைப் பற்றி இனி பேசுவோம்”.
செதிலிறகிகளுக்கு உரித்தான ஒருமுகப்பட்ட கவனமின்மையால் ஆட்கொள்ளப்பட்ட கிரக்’ ஐப் பார்த்து எனக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. “ஏதேனும் வேடிக்கையாக? என்னுடைய நேரம் முழுவதையும், என்னுடைய மரபணுக்கள் தொடர்புள்ளவை அனைத்தையும் இந்தப் பணியில் முதலீடு செய்திருக்கிறேன். இதுதான் இங்கிருக்கும் பாழாய்ப்போன வேடிக்கை”.
தேன் கலந்த தேநீர் என்னுடலை வெப்பமாக உணரசெய்தது. வயிறுவேறு அரித்தது- ஏதேனும் ஒவ்வாமையின் காரணமாக இருக்குமோ என்று வியந்தேன். வெளிப்படையாகவே சொரிந்துகொண்டேன். என் கையைச் சட்டைக்கு உள்ளேயிருந்து வெளியே எடுத்தபோது உள்ளங்கை முழுவதும் மெழுகு போன்ற சிறுசெதில்களால் நிறைந்திருந்தது. என்னதான் இங்கே நடந்து தொலைக்கிறது? அந்தச் செதில்களிலிருந்து ஒன்றை எடுத்துச் சுவைத்தேன், மெழுகே தான். தொழிலாளர் தேனியாக மாறுதல்களா? என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை – மெழுகை வாய்க்குள் திணித்துக்கொண்டேன்.
டேவிட் மும்முரமாக முளைவிட்ட குதிரை மசால் பயறைத் தின்றுகொண்டிருந்தான், ஆனால் கிரக் அருவருப்ப டைந்தான். “இது கன்றாவி, மார்க்ரெட்” பாதி நாவை வெளியே துருத்திக்காட்டி முகக்தைச் சுழித்தான். கன்றாவி பற்றி பேசுகிறாய். ” பசியாறும் வரை உன்னால் பொறுத்திருக்க முடியாதா?”
இயற்கையாக எனக்கு என்ன செய்யவந்ததோ அதைத்தான் செய்துகொண்டிருந்தேன், எனவே அவன் கூற்றுக்கு மதிப்பளித்து எந்த மறுவினையையும் ஆற்றவில்லை. வண்டுகள் சேகரித்த மகரந்தங்களாலான துணையுணவு மேசையின் மேல் இருந்தது. அதை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து மெழுகுடன் கலந்து சத்தமாகச் சுவைக்கத் துவங்கினேன். இன்று விடியும்போதே எதுவும் எனக்குச் சரியாக அமையவில்லை, தவிர கிரக்’ உடன் சச்சரவில் ஈடுபட்டது நாளின் இனிமையையே கெடுத்துவிட்டது.
இவனுக்கோ டேவிட்டுக்கோ நிறுவனத்தில் என் பதவியின் மீது மரியாதை ஏதும் கிடையாது. கிரக் என்னுடைய பணியைத் தீவிரமானதாகக் கருதவேமாட்டான். டேவிட், தனக்கோ , வேறு யாருக்கோ ஏதேனும் பணலாபம் கிட்டுமா என்றெல்லாம் கூடப் பார்க்கமாட்டான், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொண்டே போவான். மீண்டும் இயற்கைக்குத் திரும்புவதைப் பற்றிப் பிரசங்கம் வேறு செய்துகொண்டிருக்கிறான்; அதற்கெல்லாம் இப்போது காலம் கடந்துவிட்டது.
மதிய உணவுக்காக இங்கு வந்ததே காலவிரயம். இவர்கள் சொல்லுவதைக் கேட்டுக்கேட்டு அலுப்பாகிவிட்டது, உடனே பணிக்கு மீண்டும் திரும்பவேண்டும் என்ற தீவிர உந்துதல் ஏற்பட்டது. சட்டென்ற இரு வேகமானக் கொட்டுதல்கள் அவர்களைத் திசைதிருப்பப் போதுமானாவையாக இருந்தன. திடுக்கிடவைப்பதற்கான மிதமிஞ்சிய சலுகை என்னிடமிருந்தது. இன்னும் கொஞ்சம் தேனை அருந்திவிட்டு, மடமடவென்று மெழுகால் அவர்களை மூடினேன். இரு பெரிய எண்கோண வடிவக் கண்ணறைகளில் அருகருகே இருவரும் ஆழ்துயிலில் ஆழ்ந்தனர்.
உணவகத்தை ஒருமுறை சுற்றும்முற்றும் பார்த்தேன். அங்கிருந்தவர்கள் இவற்றையெல்லாம் கவனிக்காத மாதிரி பதற்றத்துடன் பாவனை புரிந்துகொண்டிருந்தார்கள். பரிமாறுபவரை அழைத்து என் கடன் அட்டையைக் கொடுத்தேன். அவர் சில எடுபிடிபையன்களை சைகையால் மூடிய வண்டி ஒன்றைக் கொண்டுவரச்செய்து கிரக்’ ஐயும் டேவிட்’ ஐயும் எடுத்துப்போகச் செய்தார். ” இவர்கள் இருவரும் மெழுகைத் தின்ன முயன்று ஒருவரை ஒருவர் விஞ்சி வியாழன் மதியத்திற்குள் வெளியே வந்து விடுவார்கள் ” பரிமாறுபவரிடம் கூறினேன். நேரடி வெப்பம் படாதவாறு, வெதுவெதுப்பான உலர்ந்த இடத்தில், பக்கவாட்டில் இவர்களைப் பாதுகாப்பாக வையுங்கள், என்று கூறிவிட்டு தாராளமாக அவருக்கும் பணம் கொடுத்தேன்.
என்னுடைய அலுவலகத்திற்கு மீண்டும் நடந்து செல்லும்போது என்மீதே எனக்கு சிறிது வெட்கமாக இருந்தது. இரண்டு நாள்கள் உறக்கத்தில் கழித்தபின்பும் கூட கிரக் , டேவிட், இருவரில் ஒருவர்கூட என் பிரச்சனைகளைக் கருணையுடன் பார்க்கப்போவதில்லை. வெளியே வந்தததும் உண்மையிலேயே வெறிகொண்டவர்கள் போல் ஆகிவிடுவார்கள்.
இப்படிப்பட்டச்செயல்களைச் செய்து எனக்குப் பழக்கமில்லைதான். முன்பெல்லாம் மிகவும் பொறுமையாக இருந்தேன். நான் இல்லையா என்ன? மனிதப்பிறவியில் மாறுபாடுகளைச் சாத்தியப்படுத்துவதை மேலும் ஆதரிக்கும் விதமாக, கலவி, தொலைக்காட்சி இவ்விரண்டிலும் அதிக ஆர்வமுடன் இருந்தேனே.
என்னைப் போன்றதொரு கனிவுமிக்க மனிதப்பிறவிக்கு ஏற்ற வேலையாக என் பணி இல்லை. குறைந்தபட்சம் அது என்னை மதிய உணவுக்கு இனிமையற்ற ஒரு துணையாகவாவது ஆக்கிக்கொண்டிருந்தது. நிறுவன மேலாண்மைக்குள் புகுந்துவிடவேண்டும் என்ற சிந்தனை என்னுள் எழுந்தது எப்படி?
ஒருவேளை பணம் காரணமாயிருக்கலாம்.
ஆனால் அது மட்டுமே அன்று. இதிலுள்ள சவால், ஏதேனும் புதிதாக ஒன்றைச் செய்துகாட்ட வாய்ப்பு, செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டிலும் மொத்தப் பிரயத்தனத்தனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு,..
பணமும்தான் காரணம். என்றாலும் பணத்தை ஈட்ட பல்வேறு வழிகள் இருந்தன. இந்தப் பாழாய்ப்போன வேலையில் எனக்குக் கிடைக்கும் ஆதரவையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு மீண்டும் முதலிலிருந்து துவக்கவேண்டும்.
அப்படியே சாவகாசமாக டாம்’ இன் அலுவலகத்தினுள் சென்று, அவனுடைய விருந்தினருக்கான நாற்காலியைச் சுழற்றி அதனுள் விழுந்தேன். என் விருப்பத்தையும் மீறி ” நான் வெளியேறுகிறேன் ” என்ற இரு சொற்களை மட்டும் நான் பயன்படுத்தியிருந்தால் அவர்களும் இதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். அவன் நடிப்புக்காகவாவது இறும்பூது எய்துவது போன்ற முகபாவனையைக் காட்டுவான். ஆனால் அதன்பின் நடப்பவற்றை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை நான் அவனுடைய மேசை மீது காலைத் தூக்கிவைக்கலாம். அதன் பின் —
ஆனால் நான் முன்பிருந்ததைப் போல மீண்டும் மனிதப்பிறவியாக ஆகிவிடுவது சாத்தியம்தானா? இல்லை, என்னால் அதைச் செய்ய இயலாது. ஒரு புதுமுக மேலாண்மை அங்கத்தினராக மீண்டும் இருக்கவே முடியாது.
கட்டடத்தின் பின்புறம் பணியாளர்களுக்கான நுழைவாயிலை நோக்கி நடந்து சென்றடைந்தேன். கதவருகில் இருந்த ஓர் உறிஞ்சுகருவி என்னை முகர்ந்து என் வாசனையை அடையாளம் கண்டுகொண்டு, கதவின் பூட்டைத் திறந்தது. உள்ளே புதிதாகச் சேர்ந்திருந்த பணியாளர்குழுவினர் கதவருகில் கூட்டமாகக் கூடியிருந்தனர். நிருவாக அலுவலர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும் துறையின் அதிகாரி அவர்களுக்குத் தங்களுடைய சிறப்பின ஈர்ப்பு வளர்ச்சியாக்கிகளுக்கேற்ப பூட்டு தானாகவே விடுவிக்கப்படும் விதத்தை அறிமுகப்படுத்தினார்.
வரவேற்பறை வழியாக நடந்துசெல்லும்போது டாம்’ இன் அலுவலகத்தைக் கடந்து சென்றேன். கதவு திறந்திருந்தது. தன் மேசையில் மீதிருந்த சில காகிதங்களில் தலையைப் புதைத்தவாறு இருந்தவன், நான் கடந்து செல்கையில் என்னை நிமிர்ந்து பார்த்தான்.
“ஆ, மார்க்ரெட் ” என்றான். நான் பேசவேண்டிய சரியான நபர்தான். உள்ளே ஒரு நிமிடம் வருகிறாயா?” கோப்புகளை உள்ளடக்கிய ஒரு பெருங்கோப்புக் காகிதங்கள் மீது இட்டு தன் கைகளை மடக்கி அதன்மேல் வைத்துக்கொண்டான். ” நீ இந்தப்பக்கமாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி”. ஒரு பெரிய வசதியான நாற்காலியைப் பார்த்து
தலையசைத்தான் . ” உட்கார்ந்துகொள்”.
“இந்தத் துறையில் கொஞ்சம் மறுசீரமைப்புப்பணி செய்யப்போகிறோம்,” என்று துவங்கினான், ” இந்தப் பணிக்கு உன்னுடைய பங்களிப்பும் எனக்குத் தேவை, எனவே என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றி உனக்கு முழுமையாகச் சொல்லவேண்டும்”.
எனக்கு உடனே ஐயம் வந்துவிட்டது. எப்போதெல்லாம் டாம், ” பணிக்கு, உன் பங்களிப்பு எனக்குத் தேவை” என்கிறானோ அப்போதெல்லாம் அனைத்தும் ஏற்கனவே முடிவுசெய்தாகி விட்டது என்றுதான் பொருள்.
“முழுத்துறையையும் நாம் மறுஒழுங்கு செய்துவிடுவோம்” என்றவாறு, தொடர்ந்து அவன் வெற்றுக்காகிதத்தில் சிறு பெட்டிகளின் உருவங்களை வரைந்துகொண்டிருந்தான். சென்றவாரம் நடைபெற்ற எங்கள் துறைக்கான
சந்திப்பில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தான்.
“உன்னுடைய துறை, செயல்பாட்டின் அடிப்படையில் இரு தனிப் பிரிவுகளாக்கப்படும். என்ன நீயாக ஏதும் சொல்லமாட்டாயா?
” நல்லது-”
” சரிதான் —“,
உடன்படுவதுபோல் தலையசைத்தவாறு ” ஆமாம்” , என்றான் சிந்தனையுடன். ” அதுதான் இதைச் செய்ய சரியான விதம்” என்றவாறு இன்னும் சில வரிகளையும் கூடுதலாகச் சில பெட்டிகளையும் வரைந்தான். இதிலிருந்து நான் புரிந்துகொண்டது, என்னவென்றால், ஹாரி சுவாரசியமானப் பணிகளைச் செய்யச்செய்ய, நான் அதிலுள்ள
ஏப்பைசாப்பையானவற்றையெல்லாம் செய்யவேண்டும்.
“நீ சொல்வதைப் பார்த்தால் நான் சாதிக்க ஏதுமின்றி, எல்லா சவால்களும் ஹாரி விந்த்ராப்’ உக்காகவென்றே இருக்கும்போலிருகிறதே,” என்றேன்.
“உனக்கான பணியும் மிகவும் முக்கியமானதம்மா,…… அதனால் தான் நீ ஹாரியிடம் ஒவ்வொன்றையும் ஒப்பிக்கத்தேவையில்லை”. அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது பொய்மை போல் இருந்தது.
என்னை ஒரு சின்னஞ்சிறு வட்டத்தினுள் கட்டுப்படுத்திவிட்டான். எப்படியும் இவன் தான் என் முதலாளி. என்னுடைய பகுதிக்கான பணியைப் பெரும்பாலும் எடுத்துக்கொண்டுவிடுவான், அப்படித்தான் தோன்றுகிறது, அவனைத் தடுத்து என்னால் எதுவும் செய்துவிடவும் இயலாது. என் பதவிக்கான அந்தஸ்தில் எந்தக்குறைபாடும் இல்லை என்பது போல் நாங்கள் இருவரும் நடித்தால் எனக்குக் கூடுதலான வருவாய் கிட்டும். இதன்மூலம் என் பதவிக்கான பெயரையும் வருமானத்தையும் நான் தக்க வைத்துக்கொள்ளலாம்.
“ஓ , அப்படியா, சரிதான், ” என்றேன்.
திடீரென்று இவையனைத்துமே முன்பே தீர்மானிக்கப்பட்டவை என்று எனக்கு உதயமாயிற்று, மேலும் ஹாரி விந்த்ராப்’ உக்கும் ஒருவேளை எல்லாமே தெரிந்திருக்குமோ என்னமோ. இதனால், வருமான உயர்வைக்கூட தந்திரமாகப் பெற்றுக்கொண்டுவிட்டாலும் விடுவான். டாம் ஏதோ போகிறபோக்கில் என்னை அழைத்துப்பேசியது போலவும், எனக்குத்தான் இது குறித்து சொல்வதற்கு ஏதேனும் இருப்பதுபோலவும், எல்லாமே தற்செயலாக நடப்பதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியும்விட்டான். திட்டமிட்டு நான் மாட்ட வைக்கப்பட்டுள்ளேன்.
எனக்குப் பித்து பிடித்தாற்போல் ஆகியது. இனி விட்டுவெளியேறுவதற்கான வழியும் இல்லை. இங்கேயே இருந்து போராடுவேன். கூட்டுக்கண்கள்!
என் கையில் உள்ள சிறிய சீப்பின் பயன்பாடு இன்றுதான் நிறைவேறப்போகிறது! நான் இருக்கும் சூழ்நிலையின் கட்டமைப்பினுடைய வேதியியல் தன்மையை நான் செவ்வனே உணர்ந்துகொண்டேன். நானும் அதில் ஒரு பகுதியாயிற்றே. நான் எங்கே பொருந்திக்கொள்வேன் என்பதை அறிந்துகொண்டேன். என்னசெய்யப்போகிறேன் என்பதையும்கூட. அது என் இரத்தத்தில் ஊறி மரபணுக்களில் பதிந்துவிட்டது, தவிர்க்கமுடியாததாகவும் ஆகிவிட்டது.
இந்த திடநம்பிக்கை என்னுடைய புறந்தோல் கூறுகளில் ஒரு மாற்றத்தை முடுக்கிவிட்டது; முதல் முறையாக சோடா பானத்தை முகர்வது போல் கொஞ்சம் மரத்துப்போன குறுகுறுப்புடன் என்னுடைய வாயும் நாசியும் இடம்மாறுவதை உணர முடிந்தது. குறுங்கத்திபோன்ற நா, சிறுத்து உருமாறியது, கெத்தரீன் ஹெப்பர்ன்’ ஐப்போல என்னுடைய தாடைகள் அடித்துக்கொண்டன. மாற்றமும் செயல்பாடும் கிளர்ச்சியுறுதலின் போது அடையும் ஒருமித்த உணர்வுக்கு ஈடாக இருந்தன. என் தாடைப்பகுதி முன்னகர்ந்து (கும்பிடுபூச்சியின் வாயைப்போல) அப்படியே திறந்துகொண்டது, டாம் மீது பாய்ந்து அவன் தலையைக் கடித்துத் துப்பிவிட்டேன்.
மேசையிலிருந்து பாய்ந்து தலையற்ற உடலாக அலுவலகமெங்கும் ஆடினான்.
முழுமையான சுயக்கட்டுப்பாட்டுடன் அவனைக் கவனித்தவாறு உரையாடலைத் தொடர்ந்தேன். ” மாதிரி 2000 ஐ களத்தில் இறக்குவது பற்றி,” என்றேன். ” ஊடகங்களைக் கொஞ்சம் சரிகட்டிவிட்டு, குழாய்த்தொடர் செயல்விகிதத்திற்கான காரணிக்கூறுகளுகானத் தேவையை நாம் உருவாக்கினால், இந்த வாரத்துக்குள் விளைபொருள் விற்பனைப்பிரிவிற்கு மிக கவர்ச்சிகரமானதொரு திட்டத்தை அளிக்கலாம் “.
டாம் தட்டுத்தடுமாறிக்கொண்டே தள்ளாடி நடந்தவாறு கலவியில் உள்ள விலங்குகளுக்கான அசைவுகளை ஆபாசமாக செய்துகொண்டே வந்தான். கும்பிடுபூச்சிபோன்று கரங்களை வைத்துக்கொள்ளும் இவனுடைய மறுவினைகளுக்கான தூண்டுதல்களுக்கு நான்தான் பொறுப்பா? எங்களிடையே உடலிச்சைக்கான கூறு இருப்பதையேஅறியாமல் இருந்தேன்.
விருந்தினர் நாற்காலியிலிருந்து எழுந்து, அவனுடைய மேசைக்குப் பின்புறமாக அமர்ந்துகொண்டு தற்சமயம் நடந்தவற்றைப் பற்றி யோசித்தேன். என் செயல்களால் நானே இறும்பூது அடைந்தேன் என்பதைக் கூறத் தேவையில்லை. எரிச்சலடைவது ஒன்று, ஆனால் ஒருவருடைய தலையைக் கடித்துத் துப்புவது வேறல்லவா? என்னை நானே முன்னெடுத்துச் செல்லும் தனித்திறன் பெற வேண்டுமாயின், இரண்டாவதாக எழுந்தது நிச்சயமாகப் பயன்மிக்கதொரு உத்தி என்பதை நானே ஒப்புக்கொள்ளவேண்டும். மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதைவிட இது ஆக்கபூர்வமானது.
சரியான உளப்பாங்கு தேவை என்று டாம் கூறியதில்கூட செய்தி இருக்கத்தான் செய்கிறது.
டாம்’ ஐப்பற்றி எண்ணும்போது, என்னுடைய மூன்றாவது மறுவினை, வருத்தம் மட்டுமே. பெரும்பாலான நேரங்களில் விரும்பக்கூடிய இளைஞனாகவே இருந்திருக்கிறான். ஆனால் நடந்தது நடந்துவிட்டது, தலைக்குமேல் வெள்ளம் போனால், சாணென்ன முழமென்ன.
அவனுடைய உதவியாளனை உள்தகவல்தொடர்புமூலம் அழைத்தேன், ” ஆர்தர், திரு சாம்சனும் நானும், பரிணாம ரீதியில் பிரிய முடிவெடுத்துள்ளோம். தயவுசெய்து அவனை மீண்டும் மாறுதலுக்கு உட்படுத்து. செலவெல்லாம், பணியாளர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் துறையுடையது “.
இப்போது என் முன்கைகளும் தொடைகளும் வினோதமாக அரிப்பெடுக்கின்றன. அப்படியே தாளத்துடன் ஒரு பாட்டைக்கூட பாடியவாறு கரங்களை உடலில் உள்ள கீறல்களில் ஓட்டலாம்.
(முற்றும்)
ஆசிரியர் ஐலீன் குன்’ இன் பின்குறிப்பு:
மைக்ரோசாப்ட்’ இல் என் வேலையை விட்டபின், இந்தக் கதையை எழுதினேன். 1989 ஆம் ஆண்டில் ஹ்யூகோ விருதுக்கு முன்மொழியப்பட்ட கதைகளுள் இதுவும் ஒன்று. எதிர்பாராத சுபமான முடிவுகொண்ட என் மிகச் சிலகதைகளுள் ஒன்று இக்கதை; இதற்கு நான் என்னுடைய உயிர்த் தோழியான ஜெஸ்ஸிக்கா அமண்டா சால்மன்சன்’ உக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இக்கதையை காஃ·ப்காவின் ” Metamorphosis ” நாவலை அடியொற்றியதாகவே கருதுகிறர்கள்; சரியாகச் சொல்லவேண்டுமானால், நான் இதை எழுதத்துவங்கியபோது என் மனதில் இது இல்லை. மைக்ரோசாப்ட்’ இல் வேலை பார்த்தது என் ஆளுமையையே மாற்றிவிட்டது நான் அடைந்த பரிணாம மாற்றத்தையே இங்கு விளக்க முயன்றேன். கதையின் முடிவு குறித்து சிக்கல் ஏற்பட்டபோது வரவேற்பறையில் அமர்ந்திருந்த என் தோழி ஜெஸிக்காவிடம் கதையை விவரித்தேன்.
“காஃப்கா இதை இன்னும் நன்றாக முடித்திருப்பார்” என்றாள் நறுக்கென்று.
அடக்கடவுளே, காஃ·ப்கா இன்னும் நன்றாகத்தான் முடிந்திருந்தார். இப்படி முட்டாளாக இருக்கிறேனே, என நினைத்து மனச்சோர்வில் வீழ்ந்தேன். காஃப்கா மிக நன்றாவே முடித்திருப்பார், நிச்சயமாக . ” சரி நான் பார்க்கிறேன், என்றாள். அலுவலகத்திற்குச் சென்று எடுத்துவந்தேன். உடனே படித்துவிட்டாள்.
“உம், காஃப்காவின் கதை போல் இல்லவேயில்லை” என்றாள்.
எனக்குக் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. முடிவில் சிக்கலிருந்தாலும் காஃப்காவின் கதையைப் போல இல்லையே.
ஜெஸிக்காவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை. அது நீங்கள் படித்த பிரதியில் இல்லை. “ஏன் அவள் அவன் தலையை அப்படியே கடித்துவிடக்கூடாது?” என்று கேட்டாள்.
உடனடியாக அக்கருத்தை மறுத்தேன். மைக்ரோசாப்ட்’ இல் அது சாத்தியமேயில்லை. நிச்சயமாக அழிவுக்கான
உத்தி அது. அதன்பின்தான் எனக்குத் தோன்றியது. நான் தான் இனி மைக்ரோசாப்ட்’ இல் இல்லையே. சிறுகதையல்லவா எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுதான் நான் மீண்டு வருவதற்கான துவக்கம்.
ஆசிரியர் குறிப்பு
எய்லீன் குன்(Eileen Gunn) அமெரிக்க எழுத்தாளர். அறிவியல் புனைவுகளை படைக்கும் இவர் 80-களில் தனியார் பெருநிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்தவர். தற்போது முழு நேர எழுத்தாளராக இயங்கும் இவரது படைப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.