மாற்றம்


இதே வழியில்தான்
தினமும் செல்கிறேன்.
அவளிருந்தபோது அவளுடன்.
அதே
சரிந்து நீளும் சாலையில்
அதை அணைத்து நிற்கும்
பெருமர நிழல்களுக்கு மேல்,
அங்கு சிக்னலில் தேங்கியிருக்கும்
வாகனங்களிடையே, அதையடுத்த
பேருந்து நிறுத்தத்தையும்- அதன்
நிழலடியில் தூங்கும்
பரதேசியையும் கடந்து – அதே
இளநீர் கடையையும்
கண்ணாடிச் சுவர்
அங்காடியையும் பார்த்தவாறே
அங்கு சாலையை
வேடிக்கைப்பார்க்கும் பிள்ளையாரையும்
அவரைப் பார்க்கும் கூட்டத்தையும்
தாண்டி,
காலை நடை போகும்
அதே பூங்காவைக் கடந்து
அந்த பெரிய ஐஸ்கிரீம் கடையை
அடுத்த..
இல்லை, அங்கு கடையை
காணவில்லை.
‘இடமாற்றம்’ என்றொரு
அறிவிப்பு பலகை.
அதை அடுத்திருக்கும் விடுதி
என்னுடையது தானா?
வழி எப்போது மாறியது?
இதே வழியில்தான்
தினமும் செல்கிறேன்.
அவளிருந்தபோது அவளுடனும்.