மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்

நான் மதராஸ் கண்ணனை ஜனவரி 2010ல் சந்தித்தேன். ஒரு கூகுள் தேடலில் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டுவிடலாம் என்ற இணைய யுகத்தில், பெரும் முயற்சிக்குப் பின்னரே அவர் தொலைபேசி எண் கிடைத்தது. நான் அழைத்த போது, “என்னைப் பற்றி பேச என்ன இருக்கிறது?”, என்று கூச்சத்துடன் மறுத்தலித்தார் கண்ணன். மீண்டும் மீண்டும் நச்சரித்தே அவரை பேட்டிக்கு சம்மதிக்க வைக்க முடிந்தது.

வி.எம் தெருவில் உள்ள அவரது வீட்டை அடைந்த போது, கண்ணனே வாசலில் என்னை வரவேற்றார். அலங்காரமான பட்டு குர்தாவில் கண்ணனைக் கண்ட போது அவர் கச்சேரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அவரை அலங்கரித்த அங்கவஸ்திரமும், கழுத்தில் அணிந்திருந்த பல்வேறு மாலைகளும் (புலி நகம் பதித்த நவரத்தின ஆரம் உட்பட) என் எண்ணத்தை வலுப்படுத்தின. இவ்வளவு நாள் காத்திருந்து கிடைத்த பேட்டி, பத்து நிமிடங்கள் கூட நீடிக்கப் போவதில்லை என்று முடிவுக்கு வந்தேன்.

நான் அவரிடம் எதுவும் கேட்பதற்குமுன், “தம்பி! நான் தொலைகாட்சியில் பேட்டிகளைப் பார்த்து வருகிறேன். பேட்டி தருபவர்கள், தன் வாழ்க்கையை ஒரு வீடியோ டேப்பில் திரும்பிப் பார்ப்பது போல, கடந்த கால நிகழ்வுகளை இம்மி பிசகாமல் சொல்கின்றனர். அவர்களால் எப்படி இப்படிப் பேச முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். என்னால் அப்படி ஒரு நாளும் கோவையாகப் பேச முடியாது. முன்னும் பின்னுமாய் அலைக்கழிந்துதான் என்னல் பேச முடியும். அதற்கு நிறைய நேரம் ஆகலாம். உனக்கு ஒன்றும் அவசரம் இல்லையே?”, என்று குழந்தை போலக் கூறினார் கண்ணன்.

அவர் எங்கும் செல்லப் போவதில்லை என்பதை அறிந்ததும் எனக்கு அப்பாடா என்று இருந்தது. அவர் கதவைத் திறந்தபோது என் மனதிலோடிய எண்ணத்தை சொன்னபோது அவர் சிரித்துக் கொண்டே, “நான் எப்போதும் இப்படித்தான் உடை அணிவேன். என் அப்பா என்னை இப்படி வளர்த்துவிட்டார்” என்றார்.

வழைமையாய் தொடங்குவது போல, அவர் பிறந்த ஆண்டிலிருந்து பேட்டியைத் தொடங்கினேன். ஒரு நிமிடம் யோசித்த கண்ணன், “செம்மங்குடியும் நானும் லாயில்ட்ஸ் ரோட்டில் வசித்து வந்தோம். தக்ஷிணாமூர்த்தி பிள்ளை பக்க வாத்தியத்தியம் வாசித்து செம்மங்குடி பாடிய கச்சேரியை நான் கேட்டிருக்கிறேன் என்று நான் சொன்ன போது அவருக்கு ஆச்சரியமாய்ப் போய் விட்டது. என் வயது என்ன என்று கேட்டார். அதற்கு, “என் வயதை டாக்டரிடம் மட்டும்தான் சொல்வேன்,” என்றேன். ஆனால் நீ கவலைப்பட வேண்டாம், என் வயதை உன்னிடம் சொல்கிறேன்,” என்றார் கண்ணன் குறும்பாகச் சிரித்த படி.

கண்ணனை நேரில் பார்ப்பவர்கள் அவர் 1920-ல் பிறந்தவர் என்று நம்புவது கடினம். “இப்போது எனக்கு வயதாகி விட்டது. சில வருடங்களுக்கு முன்னால் சுலபமாக செய்ய முடிந்த காரியங்களை இப்போது செய்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால், இப்போதும் நான் மிருதங்கத்துடன் உட்கார்ந்தால் என் மனதில் நினைப்பதை வாசித்து விட முடிகிறது. அதற்கு என் அப்பாவின் ஆசிர்வாதமும், குரு கடாட்சமும்தான் காரணம்.” நான் கண்டிருந்த டி. எம். தியாகராஜனின் யூட்யூப் வீடியோவில், கண்ணன் மிருதங்கத்துடன் உட்கார்ந்த விதத்திலேயே கம்பீரம் மிளிர்ந்தது. இன்றளவும் அவரால் நிமிர்ந்த முதுகுடன் மூன்று மணி நேரம் உட்கார்ந்து வாசிக்க முடியும் என்றே அவரைப் பார்த்த போது தோன்றியது.

அவர் தலைமுறையில், பெரும்பாலான இசைக் கலைஞர்கள் காவிரிக் கரையில் பிறந்தவர்களாக இருக்கையில், கண்ணன் சென்னை – ராயப்பேட்டையில் பிறந்தவர். கண்ணனின் குடும்பத்தினர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவரது தந்தை ஆதிமூலம் இசையிலும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தந்தையார் என்ன தொழில் செய்து வந்தார் என்று கேட்டதற்கு, கண்ணன் தீவிரமாக யோசித்த பின், “எனக்கு அவர் என்ன வியாபாரம் செய்தார் என்றே நினைவில்லை. நான் மிகச் சிறு வயதிலேயே கச்சேரிகளுக்கு வாசிக்கத் துவங்கிவிட்டேன். நான் சங்கீதத் துறையில் வளர வேண்டுமென்பதை மட்டுமே நோக்கமாக எடுத்துக் கொண்டு, தான் செய்து வந்த வியாபாரத்தை என் தந்தை விட்டுவிட்டார்”, என்கிறார்.

கண்ணன் படித்த துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரே அவருக்கு முறையான பயிற்சி கிடைக்கத் தூண்டுகோலானார். “நான் மேஜையில் தாளம் போட்டுக் கொண்டிருந்ததை அவர் பார்த்துவிட்டு எனக்கு முறைப்படி இசைப் பயிற்சி தர வேண்டும் என்று என் அப்பாவிடம் சொன்னார். ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.

மிருதங்கம் மட்டுமல்லாமல் வயலின், வீணை, தவில் மற்றும் நாதஸ்வரம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கக் கூடிய பிரபலமான குருவாக பீதாம்பர தேசாய் அறியப்பட்டிருந்தார். மிருதங்கத்தில் மதராஸ் வேணு நாயக்கரையும், பிடிலில் கோவிந்தசாமி நாயக்கரையும் அவரிடம் கற்று புகழடைந்த வித்வான்கள் பட்டியலில் குறிப்பிடலாம். பீதாம்பர தேசாயும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அடிக்கடி திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியுடன் நெருங்கிப் பழகி வந்தார். கண்ணனுக்கு எட்டு வயதிருந்தபோது முறைப்படி அரங்கேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யும் முன் பீதாம்பர தேசாய் அவரை ரமண மகரிஷியிடம் அழைத்துச் சென்று ஆசிர்வாதம் வாங்கினார்.

“என் அரங்கேற்ற கச்சேரியில் டைகர் வரதாச்சாரியார் பாடினர். பரூர் சுந்தரம் ஐயர் வயலின். என்னுடன் என் குருநாதரும் மிருதங்கத்தில் பக்க வாத்தியம் வாசித்தார். என் அரங்கேற்றம் முடிந்தவுடனேயே, பீதாம்பர தேசாய் சன்யாசம் வாங்கிக் கொண்டார்,” என்று நினைவு கூர்கிறார் மதராஸ் கண்ணன்.

தன் மகனை இசைத்துறையில் ஈடுபடுத்த வேண்டுமென கனவுகளை வளர்த்துக் கொண்டிருந்த கண்ணனின் அப்பா இதனால் கவலையில். அவர் தலைமுறையைச் சேர்ந்த மற்ற ரசிகர்களைப் போலவே அவரும் அரியக்குடியையும் தட்சிணாமூர்த்தி பிள்ளையையும் தெய்வமாகவே வழிபட்டார், அவர்கள் கச்சேரி செய்ய எப்போது சென்னை வந்தாலும் அவர்களைச் சந்திப்பதுண்டு. பீதாம்பர தேசாய் சன்யாசம் பெற்றபின் கண்னனின் தந்தை ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி பிள்ளையை, கண்ணன் மேலும் கற்க வழி செய்யக் கேட்டுக் கொண்டார். கண்ணனின் எதிர்காலத்தைத் தான் கவனித்துக் கொள்வதாக தட்ணாமூர்த்தி பிள்ளை வாக்களித்தார். அடுத்த சில மாதங்களிலேயே தஞ்சாவூர் ராமதாஸ் ராவிடம் கண்ணன் பயிற்சியைத் தொடர ஏற்பாடு செய்தார்.

“என் அரங்கேற்றத்துக்குப்பின் நான் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளைக்கு வாசித்திருந்தேன், அந்தக் கச்சேரிக்கு ராமதாஸ் ராவ் வந்திருந்தார். அதனால் என்னைத் தன் மாணவனாக ஏற்றுக் கொள்வதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஆனால் நான் என் தகப்பனாருக்கு ஒரே மகன், என் தாயும் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அந்த நாளில், சங்கீதத்தை முழு நேர தொழிலாகச் செய்வது அத்தனை கௌரவமான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை. “கொழந்தையை நட்டுவனாராக்கப் பார்க்கறான்”, என்று என் உறவினர்கள் என் தந்தையைக் கடிந்து கொண்டனர். இன்றும் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் நான் செய்ய நினைத்த காரியத்தை நிறுத்தி விடுகிறேன். முடிந்த வரை முரண்பாடுகளைத் தவிர்த்துவிடுவது என் சுபாவம். ஆனால் என் அப்பா மிகவும் உறுதியான மனிதர். அவர் செய்ய நினைத்ததை என்ன ஆனாலும் செய்து முடித்து விடுவார். அவர் மட்டும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்காவிட்டால், நான் இசைத் துறைக்கு வந்திருக்க முடியாது”, என்கிறார் கண்னன்.

கண்ணன் தஞ்சாவூரில் குருகுலவாசம் செய்த நாட்களில் பள்ளிக் கல்வியைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். பின்னர் சென்னை திரும்பியதும் திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

எங்கள் உரையாடல் மெல்ல அவரது குருநாதரின் வாசிப்பு முறை பற்றிய திசையில் திரும்புகிறது. “அவர் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் மிருதங்க வழியில் வந்தவர். தஞ்சாவூர் நாராயணசாமி அப்பாவிடம் கற்றவர். அவர் வாத்தியத்தைக் கையாண்ட விதமும் (fingering) அவர் மிருதங்கம் வெளிப்படுத்திய நாதமுமே அவரது தனித்தன்மைகள். அவர் மிருதங்கம் வாசிப்பதைப் பார்த்தால்வாசிப்பது போலவே இருக்காது. எவ்வளவு வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போதும் அவரது விரல்கள் மட்டுமெ அசையும். கைகள் அசைவது கூடத் தெரியாது. அவருக்கு அமைந்தது போன்ற தொப்பி, வலந்தலை சமன்பாடு (balance) இன்று வரை வேறு எவருக்கும் அமையவில்லை. பல சமயங்களில் பாலக்காடு மணி ஐயரும் பழனி சுப்ரமணிய பிள்ளையும் என் குருநாதர் வாசிப்பதை கூர்ந்து கவனிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரது வாசிப்பில் என்ன விசேஷம் என்றால், கேட்பதற்கு அது மிகவும் சுலபமாக இருக்கும். ஆனால் அதை வாசிக்க முயற்சி செய்யும்போதுதான் அதில் பொதிந்துள்ள விவகாரங்கள் தெரிய வரும். அவர் வாசிப்பைக் கேட்டு அவர் வாசித்த சொற்கட்டுகளை அறிந்து கொள்வதென்பது முடியாத காரியம். என்னென்ன சொற்களைச் சேர்த்துக் குழைத்து அபப்டிபட்ட நாதக் கலவையை உருவாக்கினார் என்று அவர் விளக்கினால்தான் புரியும்.”

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மனதில் கண்ணனுக்கு ஓர் சிறப்பிடம் இருந்தது. கச்சேரிக்காக தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம், ராமதாஸ் ராவ் வீட்டுக்குச் சென்று கண்ணனின் அபிவிருத்தியைக் கண்காணித்து வந்தார். “மிருதங்கத்தில் மேதைமையை பல வித்வான்கள் அடைந்திருக்கின்றனர். ஆனால், தட்சிணாமூர்த்தி பிள்ளை வித்வான்களுக்கும் மேலானவர். சித்த புருஷர்கள் அடைந்த ஆன்மிக உச்சங்களை தன் மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பு மூலமே அடைந்தவர். ‘காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி’ (பாடுகிறார்) என்ற தேவாரப் பண்ணை படிக்கும் பொதும் கேட்கும் போதும் கண்கள் தானாகவே கலங்கும். அந்த வார்த்தைகளில் உணர்ச்சிகள் பெரு வெள்ளமாய் பொங்கி ஓடும். அப்படிப் பட்ட அனுபவத்தை வார்த்தைகளே இல்லாமல், தன் வாசிப்பால் மட்டுமே ஏற்படுத்தக் கூடியவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை”, என்று கண் கலங்குகிறார் கண்ணன்.

தட்சிணாமூர்த்தி பிள்ளையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணனுக்கு ஒரு கச்சேரி நினைவுக்கு வருகிறது. “இதற்குமுன் இதை யாரிடமாவது சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. 1935-ல் காங்கிரஸ் எக்ஸிபிஷன் நடந்தது. அங்கு டைகர் வரதாச்சாரியாரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. பரூர் சுந்தரம் ஐயரும், தட்சிணாமூர்த்தி பிள்ளையும் உடன் வாசிப்பதாக இருந்தது. துரதிருஷ்டவசமாக தட்சிணாமூர்த்தி பிள்ளையின் ரயில் வந்து சேரவில்லை கச்சேரி சரியான நேரத்தில் தொடங்க உடனடியாக ஒரு மாற்று தேவைப்பட்டது. நான் ஏற்கனவே டைகருக்கு வாசித்திருந்ததால் அவர் என் பெயரைப் பரிந்துரைத்தார். நானும் சென்று வாசித்தேன். கச்சேரி துவங்கி ஒரு மணி நேரம் ஆனபின் டைகர் என்னை தனி வாசிக்கச் சொன்னார். நான் தனியை முடித்த சில நிமிடங்களில் தட்சிணாமூர்த்தி பிள்ளை அரங்கினுள் நுழைந்தார். அவரைக் கண்டதும் நான் மேடையை விட்டிறங்க நினைத்து எழுந்திருக்க ஆரம்பித்தேன். என்னை கையால் அமரும் படி ஜாடை காட்டியபடி தட்சிணாமூர்த்தி பிள்ளை மேடைக்கு வந்து என்னருகில் அமர்ந்து கொண்டார். என்னை தொடர்ந்து வாசிக்கச் சொன்னார். அடுத்த பாடலை டைகர் பாடி முடித்த பின், தட்சிணாமூர்த்தி பிள்ளை தன் தாளத்தை தொடர்ந்து போட்ட படி என்னை தனி வாசிக்கச் சொன்னார். நான் அப்போதுதான் ஒரு தனியை வாசித்திருந்ததால் இன்னொன்று வாசிக்க சங்கடப் பட்டேன். விட்டது. டைகரும் என்னை வற்புறுத்தவும், நான் ஒரு சிறு தனி வாசித்தேன். என் தனி முடிந்ததும் தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, “(தன்னைக் காட்டி) இது மாதிரி (என்னைக் காட்டி) அதுவும் வரணும்” என்றார். அந்தக் கச்சேரிக்குப் பின்தான் “மாஸ்டர் கண்ணன்” என்ற பெயர் பிரபலமடைந்தது.

(தொடரும்)