பிறந்த நாள்கள்

எனக்குத் தெரிந்த முதல் குழந்தை
அக்கா மாமாவின் பையன். அடுத்தது
இன்னுமொரு குட்டிப்பையன்
இரண்டே பிறந்தநாள்கள்

கூடப்படித்த
கிச்சா, சங்கரன், குமார்,
இவர்களின் குழந்தைகள். பிறகு
மாமா மகள்களின் மகள்கள்
மாமாவின் பையன்களின் பையன்கள்
நண்பர்களின் குழந்தைகள்
ஒன்றுவிட்ட உறவினரின் குழந்தைகள்

இன்னும் நிறைய குழந்தைகள்
இன்னும் நிறைய பிறந்தநாள்கள்

நாள் காட்டியை வாங்கியதும்
முதலில் குறிப்பது
பிறந்த நாள்களைத்தான். இருந்தும்
ஏதாவது ஒரு பிறந்தநாள்
தவறி விடுகிறது.

விடாது
வாழ்த்து அட்டைகள்
அனுப்பிக்கொண்டிருந்தேன்
பிறந்தநாளெனக் குறிப்பிடாத
எல்லா நாளும்
ஏதோ ஒரு குழந்தையின்
பிறந்த நாள்தான்
என்பது புரியும்வரை