தலை வெட்டப்பட்ட கோழி

மேக்சீனி-பேர்கா தம்பதியரின் நான்கு மகன்களும் அசடர்கள். நாள் முழுதும் வீட்டு முற்றத்தின் பலகையில் அமர்ந்திருப்பர். இரு உதடுகளுக்கிடையே வெளித்தள்ளிய அவர்கள் நாக்கு எப்போதும் வெளியே தொங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் கண்களில் மந்தம் கவிந்திருக்கும். தலை திரும்பும்போதும் வாய் பிளந்து திறந்திருக்கும்.

அந்த வீட்டு முற்றத்தின் தரை களிமண்ணால் ஆகியது. மேற்கு பக்கத்தில் செங்கல் சுவர். அந்தச் சுவருக்கு எதிர்முகமாக ஐந்தடி தள்ளி அவர்கள் அமர்ந்திருக்கும் பலகை இருக்கும். அந்த நான்கு அசடர்களும் அந்த பலகையில் எந்த அசைவுமின்றி அமர்ந்தபடி, அந்த செங்கல் சுவரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பர். சூரியன் மாலையில் அஸ்தமனமாகையில், சுவற்றிற்குப் பின்னே மறையும். அந்த தருணத்தில் இந்த அசடர்களுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும். மறைவதற்கு முந்தைய தருணங்களில் கண்ணை குருடாக்கும் ஒளியோடு திகழும் அந்த மாலை சூரியன் எப்போதும் அந்த அசடர்களின் கவனத்தை கவரும். சூரியனை, அது ஏதோ தின்பண்டம் என்பதைப் போல, வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கண்கள் ஒளிகொள்ளும். சூரியன் சுவருக்கு பின்னால் மறைந்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் உரக்கச் சிரிப்பர். உச்சகட்ட உன்மத்த நிலையில் வரக்கூடியது அந்தச் சிரிப்பு.

மற்ற நேரங்களில், அந்தப் பலகையில் வரிசையாக அமர்ந்து கொண்டு, எதையாவது முணுமுணுத்தபடி இருப்பர். ஏதேனும் பெரும் சப்தம் கேட்டால் அவர்கள் நனவுலகத்திற்கு வந்து விழுந்ததுபோல் திடுக்கிட்டு எழுவர். நாக்கை கடித்தபடி, பூனை போல் ஒலி எழுப்பிக்கொண்டு வீட்டின் முன்வெளிப்புறத்தில் சுற்றி சுற்றி ஓடுவர். மற்றபடி, அந்தப் பலகையில் எப்போதும் அமர்ந்திருப்பர், எந்த அசைவுமின்றி.

இந்த நால்வரில், மூத்தவனுக்கு 12 வயது; கடைசி பையனுக்கு 8 வயது. நால்வரின் அழுக்கான அலங்கோல தோற்றமே சொல்லிவிடும் அவர்களது தாய் அவர்களை கவனித்துக் கொள்ளும் விதத்தை.

இந்த நான்கு அசடர்களும் ஒரு காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்கு சந்தோஷத்தை வாரி வழங்கினர். மேக்சீனி-பேர்கா, கணவன் – மனைவி இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அளவிலா அன்பை செலுத்தினர். திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த அன்பை அவர்களது வாரிசுக்கு முழுமையாகத் தர விரும்பினர். தங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்க ஒரு மகனை பெற விரும்பினர். தங்கள் இருவருக்குமிடையேயான காதலை முற்றிலும் தங்கள் மகனுக்கு அளிப்பதே தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கூட்டும் என்றும் நம்பினர். இதைவிட வேறு ஒரு இன்பமும் உலகத்தில் இல்லை என்றும் எண்ணினர்.

மேக்சீனி-பேர்கா தம்பதியினருக்கு திருமணமாகி 14 மாதத்திற்குப் பிறகு ஒரு மகன் பிறந்தான். அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். முதல் ஒன்றரை வருடத்திற்கு அந்த அழகான குழந்தை நல்ல முறையில் வளர்ந்து வந்தது. குழந்தையின் வயது அப்போது இருபது மாதம் இருக்கும். திடீரென ஒரு இரவில் அந்தக் குழந்தையின் உடல் பயங்கரமாக துடித்தது. கை கால்கள் விட்டு விட்டு இழுத்தபடி இருந்தன. அடுத்த நாள் காலையிலிருந்து அது தன் பெற்றோரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அசடாக ஆகியிருந்தது. மருத்துவர் அந்தக் குழந்தையின் உடல்நிலையை கவனமாக ஆராய்ந்தார். பெற்றோர்களின் உடல் குறைபாடுகளால் குழந்தையையும் இந்த நோய் பாதித்திருக்கலாம் என்று எண்ணினார். அதற்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

தொடர்ந்து வந்த சில நாட்களில் அந்தக் குழந்தையின் முட்டிகள் அதன் சகஜ நிலையை அடைந்தன. ஆனால், அந்த குழந்தையின் அறிவு, அதன் உள்ளுணர்வும் கூட ஒரேடியாக பறிபோனது. அதனால் அந்தக் குழந்தை, ஒரு அசடாக, எப்போதும் வாயிலிருந்து எச்சில் ஒழுகியபடி, தனது பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் சிதறடித்துவிட்டு, அதன் தாயின் மடியில் கிடந்தது.

தன் முதல் குழந்தையின் அவல நிலையை எண்ணி பேர்கா மனம் வெதும்பி அழுதாள்.

அதன் அப்பா, துக்கத்தால் சிதைந்தவராய், மருத்துவருடன் இது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவர் சொன்னார், “என்னால் இது தான் சொல்ல முடியும். உங்கள் குழந்தை சகஜ நிலைக்கு திரும்ப வருவது சாத்தியமேயில்லை. வருங்காலத்தில் தற்போதைய நிலையிலிருந்து கொஞ்சம் முன்னேற்றமடையலாம். வேறு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. அவனது குறைவான மூளை வளர்ச்சியால் கல்வி நிறுவனங்கள் அவனை கல்வி பெற அனுமதிக்காது. அப்படி அனுமதித்தால் அவனால் படித்து பட்டம் பெற முடியும். இதுவே அதிகம். இதற்கு மேல் ஒன்றும் நடக்காது.”

“ஆம்! ஆம்!”, என்று மேக்சீனி அதை ஒப்புக்கொண்டார். “ஆனால் ஒரு விஷயம் சொல்லுங்கள் டாக்டர், என் குழந்தைக்கு நேர்ந்த அவலத்திற்கு காரணம் என்ன? வம்ச வழிக் காரணங்களா? என்னுடைய வம்சவழியா? அல்லது…”

“உங்கள் வம்சவழி எந்தளவிற்கு முக்கியமான காரணி என்பது குறித்த என்னுடைய கருத்துக்களை உங்கள் மகனை பரிசோதித்தவுடனேயே சொல்லிவிட்டேன். ஆனால் தாய் வம்சவழி காரணி குறித்து சொல்வதானால், உங்கள் மனைவியுடைய நுரையீரல் ஆரோக்கியமானதாக இல்லை. அவரது சுவாச முறையும் இயல்பாக இருப்பதாக தோன்றவில்லை. மற்றபடி வேறெந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எதற்கும் அவரை ஒரு முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திப் பாருங்கள்.”

தனது முன்னோர்களின் பாவத்தை சுமக்கும் அந்த அசட்டுக் குழந்தையின் துன்பத்தை எண்ணி மிகுந்த மனவருத்தம் அடைந்த அந்த தந்தை, தன் மகன் மீதான தனது அன்பை இரட்டிப்பாக்கினான். அதே சமயம், பெரும் தோல்வியில் முடிந்த தனது முதல் தாய்மையை நினைத்து தனது மன ஆழம் வரை மிகுந்த துயரம் அடைந்த அவன் மனைவியையும் அவன் தேற்ற வேண்டியிருந்தது.

தங்களது அடுத்த குழந்தை நல்லபடி பிறக்கும் என்று நம்பிய அந்த தம்பதியர்க்கு இரண்டாவது மகன் பிறந்தான். அவன் உடல்நிலையும், அவன் அழகான சிரிப்பும் தங்கள் வருங்காலம் குறித்த அவர்களின் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க செய்தது. ஆனால் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு இரவில் முதல் குழந்தையை தாக்கிய அதே கொடூர நோய் இரண்டாவது குழந்தையையும் தாக்கியது. அடுத்த நாள் காலை விடிந்தபோது இரண்டாவது குழந்தையும் அசடாக ஆகியிருந்தது.

இந்த முறை பெற்றோர்கள் இருவரும் முழு அந்தகத்தில் தள்ளப்பட்டனர். சபிக்கப்பட்ட இந்த இரு குழந்தைகளும் அவர்கள் ரத்தம். மேலும் அந்த இரு குழந்தைகளும் அவர்கள் காதலின் அடையாளம். அவனுக்கு வயது 26. அவளுக்கு 22. தங்கள் இருவரின் காதலும், வாழ்க்கையின் ஒரு சிறு அணுவைக் கூட வெற்றிகரமாக உருவாக்கவில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு பெரும் மன வலியை அளித்தது. தங்கள் உன்னத காதலுக்கான சரியான பரிசு தங்களுக்கு கிடைத்தேயாக வேண்டும் என்ற வெறி அவர்களை ஆட்கொண்டது. இனியும் அவர்கள் ஈடில்லா அழகும் அறிவும் நிரம்பிய மகவை வேண்டவில்லை. எந்த ஒரு சாதாரண குழந்தை போன்றதொரு மகவையே வேண்டினர். அவர்களுக்கு மேலும் இரட்டைக் குழந்தை பிறந்தது. படிப் படியாக மீண்டும் பழைய கதையே அரங்கேறியது. இந்த இரட்டையரும் மூத்தவர்களைப் போல் அசடர்களாயினர்.

இத்தனை கசப்பிற்கு பிறகும் அந்த தம்பதியினர் தங்கள் நான்கு மகன்களையும் மிகுந்த அன்புடன் கவனித்து வந்தனர். தங்கள் ஆன்மாவையே தொலைத்த துக்கத்தில் உழன்ற அவர்கள், இந்த கோரமான துக்கத்திலிருந்து தங்களை மிகுந்த சிரமத்திற்கு பிறகே மீட்க வேண்டியிருந்தது. அவர்களின் நான்கு மகன்களும் தற்போது உணவை விழுங்கத் தெரியாதவர்களாய், அங்கிங்கு நகர முடியாதவர்களாய், தானாக எழுந்து உட்காரக் கூட முடியாதவர்களாய் இருந்தனர். ஒரு வழியாக நடக்க பழகிக் கொண்டனர். ஆனால் நடக்கும் வழியில் ஏதேனும் பொருள் இருந்தால் அதில் முட்டிக் கொள்வர். அந்தப் பொருள்களை அவர்களால் அடையாளம் காணமுடியதவர்களாய் இருந்தனர். அவர்களை குளிப்பாட்டும்போது அவர்கள் அழுவர். முகத்தை கழுவும் போது அந்த தண்ணீரை விழுங்கி அந்த தண்ணீராலேயே வாய் கொப்பளிப்பர். உணவையோ அல்லது பளீரென்று தெரியும் ஏதாவது ஒரு நிறத்தை பார்க்கும்போதும், பெரும் இடியோசையை கேட்கும் போதும் அவர்கள் அப்போது தான் உயிர் பெற்றவர்களாய் சலனம் கொள்வர். பிறகு சிரிப்பர். குரூரமான சிரிப்பு. நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொள்வர். எச்சில் வழிந்து ஆறாக ஓடும். ஆனால் அவர்களால் ஒருவர் செய்த விஷயத்தை அப்படியே திரும்ப செய்து காட்ட முடியும். அதற்கு மேல் அவர்களிடம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.

இரட்டையர்கள் பிறந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அந்தத் தம்பதியினர் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். இந்த மூன்று வருட இடைவெளியில் தங்கள் பாவங்கள் கரைந்திருக்கும் என்று நம்பினர். தங்கள் முந்தைய வாரிசுகளுக்கு நிகழ்ந்த அந்த கோரம் மீண்டும் நிகழாது என்று நம்பினர்.

அடுத்த குழந்தை பிறக்கும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. கணவன் மனைவிக்கிடையே கசப்பு வளர இந்த ஒரு காரணமே போதுமானதாயிருந்தது. அதுவரை தங்கள் மகன்களுக்கு நேர்ந்த கதிக்கு இருவரின் குடும்பங்களுக்கும் சரிபங்கு இருப்பதாக எண்ணிய அவர்கள், தற்போது மற்றவரை மட்டுமே குற்றவாளியாக நிரூபிக்க முயன்றனர்.

அதுவரை ”நமது மகன்” என்று பேசியவர்கள், இப்போதோ “உனது மகன்” என்று விளிக்கத் தொடங்கினர். இப்படி ஒருவர் இன்னொருவரை குற்றம் சுமத்த முயல, அவர்கள் குடும்பச் சூழல் சிதைய ஆரம்பித்தது.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் கைகளை சுத்தப்படுத்த துவங்கிய மேக்சீனி பேர்காவிடம் இப்படிக் கூறினான் : “உன்னால் அவர்களை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்”

அவன் சொன்னது காதில் விழாததைப் போல் பேர்கா தொடர்ந்து புத்தகத்தை வாசித்தபடி இருந்தாள்.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு பேர்கா, “உங்கள் மகன்களைப் பற்றி இப்போது தான் முதன் முறையாக நீங்கள் கவலைப்படுவதை நான் பார்க்கிறேன்”, என்றாள்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது. கஷ்டப்பட்டு தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவளை நோக்கி தன் தலையை திருப்பினான்.

”நமது மகன்கள், இல்லையா?”

“சரி…நமது மகன்கள். அப்படி அழைப்பதைத்தான் நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?”

இந்த முறை மேக்சீனி தன் கோபத்தை மறைக்கமுயலவில்லை.

“அவர்களுக்கு இப்படி ஒரு நிலை நேர்ந்ததற்கு என்னை குற்றம் சொல்லப் போகிறாயா?”

”ஓ..அப்போது நீ காரணமில்லையா? சரி…”. பேர்கா தனக்குத் தானே சிரித்தபடி, “ஆனால் அவர்களின் இந்த நிலைக்கு நிச்சயம் நான் காரணமில்லை என்றே நினைக்கிறேன்”, என்றாள். ”அப்படித்தான் இருக்க விரும்புகிறேன்…” என்று மெல்லியதாக முணுமுணுத்தாள்.

“என்ன? நீ என்னதான் சொல்ல விரும்புகிறாய்?”

“நான் சொல்ல வருவது….அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக யாரையாவது சுட்ட முடியுமென்றால் அது நானல்ல. இதை நன்கு நினைவில் வைத்துக்கொள்”

அவனுக்கு பெரும் கோபம் வந்தது. அவளை அடித்துவிடுவதைப் போல் பார்த்தான்

முடிவில், தன் கைகளை துடைத்தபடி, “இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம்” என்றான்.

“உன் விருப்பம், ஆனால் என் மீது நீ…”

“பேர்கா!”

“சரி..உன் விருப்பப்படியே இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம்!”

இது தான் அவர்களிடையே நடந்த முதல் சண்டை. இது பலமுறை மீண்டும் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் சண்டையைத் தொடர்ந்து சமரசம் ஏற்படும். அப்போது இருவர் மனதும் இன்னொரு குழந்தைக்காக ஏங்குவது இருவருக்கும் புரியும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்தாள். அவள் பெயர் பேர்கிகா. தங்கள் மகன்களுக்கு நேர்ந்த கொடூரம் இவளுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே அடுத்த இரண்டு வருடங்களும் கழிந்தன. ஆனால் அத்தகைய கொடூரம் எதுவும் நடைபெறவில்லை. தங்கள் மகள் மீது இருவரும் பாசத்தை அளவுக்கதிகமாக செலுத்தினர். அவள் இதை பயன்படுத்திக் கொண்டு தன் இஷ்டத்திற்கு வளர்ந்தாள்.

பேர்கிகா பிறந்தவுடன் பேர்கா தன் நான்கு மகன்களையும் பரமாரிப்பதை அடியோடு நிறுத்திவிட்டிருந்தாள். அந்த நால்வரை பற்றிய நினைப்பே அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பிறரது கட்டாயத்திற்கு பணிந்து செய்யக் கூடாத ஒரு குற்றத்தை செய்து விட்டு, அதை நினைத்து நினைத்து பயப்படுவதைப் போலவே அவளும் அச்சத்தில் உறைந்துவிடுவாள். மேக்சீனிக்கும் இதே நிலைதான், ஆனால் பேர்கா அளவிற்கில்லை.

மேலும், தங்கள் மகளுக்கு சிறு நோய் வந்தால் கூட இருவராலும் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. முந்தைய கொடூரங்களின் நினைவுகளும், அவளை இழந்துவிடுவோமோ என்ற பயமும் அவர்களை மேலும் துக்கத்தில் தள்ளின. மேலும் அவ்வப்போது நடக்கும் வாக்குவாதத்தால் ஒருவர் மீது மற்றவருக்கு கொஞ்சமும் மரியாதை இல்லாமல் போனது. இருவருக்கும் மற்றவரிடம் கசப்பு முற்றியிருந்தது. அந்தக் கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெருகி அவர்களை முற்றிலும் நிரப்பியிருந்தது. ஒரு சின்ன காரணம் போதும், மற்றவர் மீது தன் முழு கசப்பையும் உமிழ்ந்துவிட இருவரும் தயாராக இருந்தனர். இருவரும் அடுத்தவரை எள்ளி நகையாட எப்போதும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்தகாலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் தோல்விகள். அதை அவர்கள் தங்களுக்கிடையே பங்குப்போட்டுக் கொள்ள தயாராகயிருந்தனர். தற்போது வெற்றியை சுவைக்கத் துவங்கியதும், அதை தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட துடித்தனர்.

இந்த நிலையில் இருவரும் அந்த நான்கு அசடர்கள் மீதும் அன்பை பொழிய தயாராக இல்லை. நால்வரையும் கொஞ்சம் வெறுப்புடனே வீட்டுப் பணியாளே குளிப்பாட்டி, உணவளித்து, அவர்களை உறங்கவைப்பாள்.

பேர்கிகாவிற்கு அன்று நான்காவது பிறந்தநாள். பெற்றோர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவள் அன்று அளவிற்கதிகமாக இனிப்புகள் சாப்பிட்டாள். அதனால் அன்றிரவு அவளுக்கு குளிரும் ஜுரமும் பிடித்தது. ’அவளும் அசடாகிவிடுவாளோ? இல்லை, அவள் இறந்துவிடுவாளோ?’, என்ற பயம் அவர்களை தொற்றிக் கொண்டது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பதட்டத்தில் மேக்சீனி அங்குமிங்குமாக நிலம் அதிர வேகமாக நடந்தான். அங்கு ஆரம்பித்தது பிரச்சனை.

“அடக் கடவுளே! கொஞ்சம் மெதுவாகத்தான் நடந்தால்தான் என்ன? எத்தனை முறை உன்னிடம்…?”

“சரி சரி. நான் மறந்துவிட்டேன். இனி அப்படி நடக்க மாட்டேன். நான் நிச்சயமாக வேண்டுமென்றே செய்யவில்லை”

அவள் அலட்சியமாக புன்னகைத்தாள்.

“ஐயோ பாவம்…..நீ வேண்டுமென்றா அப்படி நடக்கிறாய்? ஒன்றும் அறியாமல்தான் செய்கிறாய், இல்லையா?”, என்றாள்.

”உன் வார்த்தையில் தான் எவ்வளவு விஷம்? திருமணத்திற்கு முன் நீ இப்படிப்பட்டவள் என்று யாரேனும் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் அப்போது அதை நம்பியிருக்க மாட்டேன்”

“என்ன! இப்போது நீ என்ன சொன்னாய்?”

“ஒன்றுமில்லை!”

“இல்லை. நீ நிச்சயம் என்னைப் பற்றி ஏதோ சொன்னாய்! நீ என்ன சொன்னாய் என்று எனக்குப் புரியவில்லை, இருந்தும் ஒன்று மட்டும் உறுதி. உன் தகப்பனுக்கு நான் மகளாக பிறக்க நேருமானால், நான் வேறு ஒரு தகப்பனை தேர்ந்தெடுத்திருப்பேன்!”

மேக்சீனியின் முகம் வெளுத்தது.

“நச்சுப் பாம்பே…..ஆக…இத்தனை நாள் நீ சொல்லத் துடித்துக் கொண்டிருந்ததை இப்போது சொல்லிவிட்டாய்!”

“ஆம்! நான் நச்சுப் பாம்புதான்! ஆனால் என் பெற்றோர் உடல் நலம் மிக்கவர்கள். சொன்னது கேட்டதா? உடல் நலம் மிக்கவர்கள்! என் தந்தை மனம் பிறழ்ந்து ஊர் ஊராக அலைந்து இறந்தவரில்லை! நான் உன்னை மணக்காவிட்டால் வேறு ஒருவரின் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றிருப்பேன்! அந்த அசடர்கள்……அந்த நால்வரும் உன் பிள்ளைகள்!”

மேக்சீனி விடுவதாகயில்லை.

”நச்சுப் பாம்பே! நான் உன்னை அப்படித்தான் அழைப்பேன். போ…அந்த மருத்துவரிடம் கேள்…உன் மகன்களின் மனப்பிறழ்வுக்கு காரணம் என் தந்தையா அல்லது உன் உழுத்த நுரையீரலா என்று? நச்சுப் பாம்பு!”

இந்த வாக்குவாதம் நீண்டு கொண்டு சென்றது. அப்போது பேர்கிகா முனகினாள். அதைக் கேட்ட உடனே அவர்கள் தங்கள் சண்டையை நிறுத்தினர். அதிகாலை ஒரு மணிக்கு பேர்கிகாவின் அஜீரணக் கோளாறு சரியானது. மற்ற எல்லா இளவயது தம்பதிகளைப் போல அவர்களும் உடனே சமாதானமாயினர். தாங்கள் உபயோகப்படுத்திய வார்த்தைகளுக்காக வருந்தினர்.

ஒரு அற்புதமான காலை விடிந்த அன்றைய தினம், பேர்கா படுக்கையை விட்டு எழுந்தபோது அவள் ரத்த வாந்தி எடுத்தாள். சந்தேகமேயில்லாமல், முந்தைய இரவில் நடந்த பயங்கர வாக்குவாதமும், அதில் அவள் அடைந்த உச்சகட்ட கோபமும்தான் இதற்கு காரணமும். அதிர்ச்சியில் உறைந்த மேக்சீனி அவளை நீண்ட நேரம் தன் அணைப்பில் வைத்திருந்தான். அவள் அவநம்பிக்கையில் அழுதபடியிருந்தாள். இருவராலும் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.

சுமார் பத்து மணியளவில், மதிய சாப்பாட்டுக்கு பிறகு வெளியே செல்ல தீர்மானித்தனர். அவர்களுக்கு சீக்கிரம் வெளியே கிளம்ப வேண்டியிருந்தது. அதிக நேரமில்லை. ஆகையால் தங்கள் பணிப்பெண்ணை ஒரு கோழியைக் கொன்று சமைக்கச் சொன்னார்கள்.

அந்த அற்புத தினம் நான்கு அசடர்களையும் அவர்கள் வழக்கமாக அமர்ந்திருக்கும் பலகையிலிருந்து எழுந்த வரச் செய்தது. பணிபெண் பேர்காவின் சொல்படி கோழியின் தலையை, கொஞ்சமாக ரத்தம் வெளியேறும் வகையில் வெட்டிக் கொண்டிருந்தாள்(மாமிசத்தை நீண்ட நாட்களுக்கு புதிது போல வைத்திருக்க உதவும் இந்த வித்தையை பேர்கா தன் தாயிடமிருந்து கற்றிருந்தாள்.). அப்போது அவளுக்கு பின்னால் வெகு அருகில் யாரோ நின்றிருப்பதை உணர்ந்தாள். அவள் திரும்பி பார்த்தாள். அந்த நான்கு அசடர்களும் தோளோடு தோள் சேர்த்து நின்று கொண்டு கோழி அறுபடும் விதத்தை பெரும் ஆச்சரியத்துடன் கண்டுகளிப்பதை பார்த்தாள்.

“மேடம், உங்கள் மகன்கள் சமையலறையில் உள்ளனர்”

பேர்கா உடனே சமையலறைக்கு வந்தாள். சமையலறையில் அவர்கள் இருப்பதை பார்த்து பேர்கா பெரும் கோபம் கொண்டாள். எப்போதும் அவர்கள் வீட்டிற்கு வெளியே இருப்பதையே அவள் விரும்பினாள். குறிப்பாக, அவர்கள் சமையலறைக்குள் நுழைவதை அவள் நிச்சயம் அனுமதிக்க விரும்பவில்லை. மேலும், தன் மகள் மற்றும் கணவன் மீதான அன்பில் அவள் அவ்வளவு லயிக்கிறாளோ, அதைவிட அதிகமாக இந்த பிசாசுகள் மீதான வெறுப்பில் மூழ்கிவிடுகிறாள். அவள் வாழ்க்கையில் இப்போது வசந்தகாலம். இவர்கள் நால்வரும் அவளுக்கு கடந்தகாலக் கசப்பை கண்முன் கொண்டுவந்து நிறுத்தினர். அதை அவள் விரும்பவில்லை.

“அவர்களை இங்கிருந்து உடனே வெளியேற்று, மரியா! அவர்களை வெளியே கொண்டு போடு! நான் சொல்கிறேன், அவர்களை வெளியே கொண்டு போடு!”

இதை முற்றிலும் எதிர்பார்க்காத பரிதாபத்திற்குரிய அந்த நான்கு ”பிசாசு”களும், மனவருத்தமடைந்தனர். ஆக்ரோஷத்துடன் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு தங்கள் வழக்கமான இடத்திற்கு சென்றமர்ந்தனர்.

மதிய உணவிற்கு பிறகு அனைவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினர். பணிப்பெண் பியோனல் ஏய்ரெஸ்க்கு கிளம்பினாள். அந்தத் தம்பதியினரும் அவர்களது மகளும் சுற்றியிருந்த கிராமப்புற வீடுகளை சுற்றி நடை வர கிளம்பினர். அவர்கள் சந்தியாகாலத்தில் திரும்பினர். சூரியன் அப்போது வானத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. வீட்டை நெருங்குகையில் பேர்கா அண்டை வீட்டாரிடம் பேசிக்கொண்டிருக்கையில், அவளது மகள் வீட்டை நோக்கி ஓடோடிச் சென்றாள்.

வீட்டு முற்றத்தில் வழக்கம்போல் அந்த நான்கு அசடர்களும் எங்கும் நகராமல் அந்தப் பலகையிலேயே அமர்ந்திருந்தனர். வழக்கத்தைவிடவும் மிக மெத்தனமாக சூரியன் மறைந்து கொண்டிருந்தது. சூரியன் சுவரை கடந்து கீழே சென்று விட்டிருந்தது.

திடீரென்று தங்களுக்கும் சுவருக்குமிடையே ஏதோ ஒன்று கடந்து சென்றதை அந்த அசடர்கள் உணர்ந்தனர். அது, அவர்களின் தங்கை. கடந்த ஐந்து மணி நேரங்களாக தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் சுற்றிய அவள், சுதந்திரமாக தன் இஷ்டத்திற்கு ஏதேனும் செய்ய நினைத்தாள். அந்த சுவரின் அருகில் சென்று நின்றவள், சுவரின் உயரத்தை கவனத்துடன் பார்த்தாள். அவள் சுவற்றின் மீது ஏறி நிற்க விரும்பினாள். முதலில் உடைந்த ஒரு நாற்காலியை தேர்ந்தெடுத்தாள். அதன் மீது ஏறி, சுவற்றின் உச்சியை அடைய முயற்சித்தாள். ஆனால் உயரம் போதவில்லை. ஒரு மண்ணெண்ணைய் சேமிக்கும் டின்னை(tin) நாற்காலியின் மீது சரியாக பொறுத்தினாள்.

அந்த நான்கு அசடர்களும் எந்தவித ஆர்வமுமின்றி தங்கள் சகோதரி செய்வதை பார்த்தபடி இருந்தனர். கவிழ்த்து வைக்கப்பட்ட டின் மீது ஏறிய அந்தச் சிறுமி, கொஞ்ச கொஞ்சமாக தன் கால் கட்டை விரல் நுனியில் நிற்க முயன்றாள். மிகப் பொறுமையுடன் இதில் ஈடுபட்ட அவளால், முடிவில் வெற்றிகரமாக தன் கால் கட்டை விரல்களின் நுனியில் நிற்க முடிந்தது. அப்படியே தன் கையிரண்டையும் சுவற்றின் மேல் பகுதியில் அழுத்தியபடி தன் கழுத்தை சுவற்றின் மேல் பகுதியில் வைத்தாள். இப்போது தன் விரல் நுனியை ஏதாவது ஒரு இடத்தில் அழுத்தி தன் உடலை மேலே உயர்த்த எத்தனித்தாள்.

இதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நான்கு அசடர்களும் திடீரென உயிர்பெற்றதை போல் தோன்றினர். அவர்கள் கண்களில் மீண்டும் அந்த அசாதாரண ஒளி படர்ந்தது. அந்தக் கண்கள் அவர்கள் தங்கை மீது நிலைகுத்தி நின்றிருந்தன. அவர்கள் முகம் பரவசத்தால் நிரம்பியிருந்தது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சுவரை நோக்கி நகர்ந்தனர். அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.

“காலை விடு! என்னை விடு!” என்ற அந்தச் சிறுமி தன் காலை உதறியபடி கத்தினாள். ஆனால் அவர்களின் இறுக்கமான பிடியில் அவள் சிக்கிக்கொண்டிருந்தாள்.

“அம்மா….ஐயோ அம்மா….அப்பா!” என்று திரும்பத் திரும்ப அழைத்தாள். அப்போதும் அவள் சுவற்றின் மீது ஏறி நின்றுவிட எத்தனித்தாள். ஆனால் அந்த நால்வரும் அவளை பலங்கொண்டு கீழே இழுத்தனர். அவள் கீழே விழுந்தாள்.

“அம்மா….அம்….”. இதற்கு மேல் அவளால் கத்த முடியவில்லை. நால்வரில் ஒருவன் அவள் கழுத்தை இறுக்கமாக பிடித்து நெருக்கினான். மேலும், அவள் கைகள் இரண்டையும் நன்றாக-ஏதோ பறவையின் சிறகு விரிவதைப் போல- விரித்தான். மற்ற மூவரும் அவளின் ஒரு காலை பிடித்துதரதரவென இழுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தனர். காலை அந்த கோழி வெட்டப்பட்ட விதம் அவர்களுக்கு நன்றாக நினைவில் இருந்தது. அதே முறையில் அவளையும் அறுக்க துவங்கினார். அவள் உடலிலிருந்து சொட்டு சொட்டாக ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவளது உயிரும்.

மேக்சீனிக்கு இப்போது தன் மகளின் குரலை கேட்டதை போல் இருந்தது.

”பேர்கா, அவள் உன்னை அழைக்கிறாள் என்று நினைக்கிறேன்”, என்றான்.

அவர்கள் இருவரும் காதை கூர்மையாக்கி கவனித்தனர். ஏதோ ஒரு அபாயத்தை அவர்களால் உணரமுடிந்தது. ஆனால் எந்த சத்தமும் இல்லை. இருந்தும், மேலும் ஒரு சில நிமிடங்கள் அண்டைவீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்தனர். முதலில் வீட்டிற்குள் நுழைந்தது மேக்சீனி.

வீட்டிற்குள் நுழைந்தபடி, “பேர்கிகா!” என்று அழைத்தான்.

பதிலில்லை.

மீண்டும் குரலை உயர்த்தி “பேர்கிகா” என்றழைத்தான்.

அவன் உள்ளுணர்வு ஏதோ ஒரு அபாயம் நடந்துவிட்டிருந்ததை அவனுக்கு உணர்த்தியது. அவன் முதுகு சில்லிட்டது.

”பேர்கிகா, பேர்கிகா!” என்ற கதறியபடி பைத்தியக்காரன் போல் தன் வீட்டின் பின்புறம் நோக்கி ஓடினான். அவன் வீட்டின் சமையலறையை கடந்து ஓடியபோதுதான் அதை கவனித்தான். தரையெங்கும் ரத்தம். அரைகுறையாக மூடியிருந்த சமையலறைக் கதவை ஓங்கி உதைத்து திறந்தான். உள்ளே கண்ட காட்சியால் அவன் பயங்கரமாக அலறினான். தன் கணவனின் அலறலை கேட்ட பேர்காவும் வீட்டிற்குள் ஓடினாள். சமையலறையிலிருந்து சத்தம் வந்ததை அவள் உணர்ந்தாள். அவள் சமையலறையை அடைந்த போது முகம் வெளுத்த மேக்சீனி அங்கு பேயறைந்தைப்போல் நின்றிருந்தான்.

”உள்ளே போகாதே….உள்ளே போகாதே” என்றபடி அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

ஆனால் பேர்காவால் எங்கும் ரத்தம் விரவியிருந்த அந்த தரையை பார்க்க முடிந்தது. தன் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, ஒரு பெரும் ஓலத்தை மட்டுமே அவளால் எழுப்ப முடிந்தது. தன் கணவன் மேல் சாய்ந்தபடி பேர்கா தரையில் சரிந்தாள்.

குறிப்பு : இந்த சிறுகதையை எழுதியவர் ஹொடாசியோ கிரோவா(Horacio Quiroga). உருகுவேயில் பிறந்த இவர் தனது இளமைக் காலங்களை அர்ஜெண்டீனாவில் கழித்தார். இவரது கதைகள் பெரும்பாலும் அர்ஜெண்டீனாவை களமாகக் கொண்டிருக்கும். மாய-யதார்த்த கதைகளை எழுதிய இவர், அவ்வரிசையில் தற்போது பிரபலமாக அறியப்படும் மார்குவேஸீக்கு முன்னோடி. “Decapitated Chicken” என்ற அவரது பிரபலமான சிறுகதையின் மொழிபெயர்ப்பு தான் இது.