அம்மாயி

பெரியமோளபாளையத்துக்கும், தளவாய்ப்பேட்டைக்கும் நடுவே ரோட்டோரமாக, முட்டிக்கால் போட்டுக்கொண்டு, அரிவாளை ஓங்கிக் கொண்டு, கண்களைத் துருத்திக் கொண்டு நிற்பார் கருப்புசாமி. அவருக்குத் துணையாய், இடது புறத்தில் பெரும் பெரும் சுதைகளாய், மகாமுனி, தவசிமுனி, முத்து முனி என்று அவரின் கூட்டாளிகள். வலது புறம், புதிதாய்க் குடிவந்த, வள்ளி, தேவயானை சகித முருகன். அழகன். இவர்கள் சாலையில் ஒரு புறத்தில் மக்களைக் காத்துக் கொண்டு இருக்க, நாங்கள், எங்கள் ஜிம்மி நாய், ரெண்டு எருதுகள், நான்கு எருமைகள், கன்றுக் குட்டிகள், நாட்டுக் கோழிகள், ஒரு பூனை, மற்றும் எண்ணிலடங்காப் பூச்சிகள், பாம்புகள் சகிதம், சாலையின் மறுபுறத்தில், கருப்புசாமி கோவில் தோட்டத்தில் வசித்து வந்தோம்.
அப்போது நான் பவானி ஊராட்சி ஒன்றிய உயர் ஆரம்பப்பள்ளி (தளவாய்ப்பேட்டையில்) படித்து வந்தேன். வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து போகவேண்டும் பள்ளிக்கு. செருப்பு அணிவது வழக்கமில்லை. வேளாண் குடும்பமாகையால், காலையில் பழைய சோறுதான். சுடு சோறு மதியம்தான் ஆக்கப் படும். எனவே. மதிய உணவுக்கு மீண்டும் வீடு வந்து திரும்ப வேண்டும். கானல் நீர் பறக்கும், சுடும் தார்ச் சாலையில், மதிய உணவுக்குப் பசியோடு நடந்து வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு தேவதைக் கனவுதான் வரும். இன்னிக்கு வந்திருக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஆசைப்படும் அத்தேவதை மாதம் ஒரு முறைதான் வரும்.

தார்ச் சாலையில் இருந்து, வீட்டிற்குச் செல்லும் மண்பாதையில் இறங்கும் போதே, “அம்மா, சோறூ” என்று கத்திக் கொண்டே வருவேன். “பறக்காத, போய் கைகால் மூஞ்சி களுவீட்டு வா” என்று அம்மாவின் குரல் வந்தால், அன்று எனக்கு ஏமாற்றம். ”வந்துட்டானா” என்று கொஞ்சம் கம்மிய குரல் கேட்டால், உலகே ஆனந்தமாகி விடும். அது அம்மாயியின் குரல். செவ்வாய்க் கிழமை சந்தைப் பொரியைக் கண்டு குதிக்கும் ஜிம்மி நாயைப் போல அம்மாயியின் மீது விழுந்து புரளுவேன். “சீல அளுக்காயிரும்லோ.. போயி, கை காலக் களுவீட்டு வா” என்று துரத்துவது கேட்காமல், அம்மாயி என்ன கொண்டு வந்திருக்கிறது என்று பார்ப்பேன். பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றும், இரண்டு பாக்கெட் மில்க் பிக்கியும் கட்டாயம் இருக்கும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு உடனே ஓட வேண்டும். இல்லையெனில், பள்ளிக்கு நேரமாகிவிடும். ஹெட்மாஸ்டர் அடி பின்னிவிடுவார். சாப்பிட்டுவிட்டு, வெள்ளாவியில் வைக்கப் பட்டு, மொடமொடப்பாக இருக்கும் அம்மாயியின் வெள்ளைச் சேலை வாசனையைப் பிடித்துக் கொள்வேன். ஏனெனில், சாயங்காலம் வரும்போது அம்மாயி ஊருக்குப் போயிருக்கும்.

ஈரோட்டில் அம்மாயிக்கு ‘பால்கார ஆயா’ என்று பெயர். கருங்கல்பாளையம் வரகப்ப ஐயர் வீதியில் வந்து யார் கேட்டாலும் சொல்வார்கள். முப்பத்து எட்டு வயதில் கணவனை இழந்த பின், எருமைகளை வைத்துப் பால் கறந்து விற்ற காசில், தன் இரு குழந்தைகளைப் பெரியாளாக்கி, கல்யாணம் செய்து வைத்த உழைப்பாளி. காலை மூன்றரை மணிக்கு எழுந்து பால் கறந்து, ஐந்து மணிக்கு வீடு வீடாகச் சென்று பால் ஊற்றி, ஆறரை மணிக்கு வீடு திரும்பி, எருமைச் சாலையைச் சுத்தம் செய்து, அவற்றுக்கு தண்ணி காட்டி, தட்டு வெட்டிப் போட்டு, சமையல் செய்து, சாப்பிட்டு, கொஞ்சம் நேரம் கண்ணசந்து, மீண்டும் இரண்டரை மணிக்கு எழுந்து, பால் கறந்து.. என்று ஓடிக்கொண்டே இருக்கும்.

கொங்கு மண்டலத்தில், அதுவும் கவுண்டர்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகம். விவசாய வேலைகளில் பாதிக்கும் மேல் செய்பவர்கள் அவர்களே. எனக்குத் தெரிந்து, தென்னை மரம் ஏறவும், ஆயில் எஞ்ஜினை இயக்கவும் தெரிந்த பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அதுவும் விதவையாகி விட்ட அம்மாயிகளின் பங்களிப்பை பொருளாதார விதிகள் கொண்டு விளக்குவது கடினம். இன்றும், அதிகாலை மூன்று மணிக்கு, சில டவுன் பஸ்கள், சிறு கிராமங்களில் இருந்து, காய்கறிகளையும், கீரைக்கட்டுகளையும் கொண்டு வரும். அவற்றைக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெண்களே – அவர்களுள் பெரும்பான்மை வெள்ளைச் சேலை அணிந்த அம்மாயிகளே. அதற்கு, முதல் நாள் மதியமே, காய்கறிகளையும், கீரைகளையும், பறித்து, கட்டு கட்டி வைத்து விடுவார்கள். காலை இரண்டு மணிக்கு, எழுந்து, காய்கறிகளைச் சுமந்து வந்து விற்பனை செய்து விட்டு, வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வார்கள். வெறும் 650 மில்லி மீட்டர் (தார் பாலைவனத்துக்கு அடுத்துக் குறைவான மழை பெய்யும் மண்டலம்) மழை மட்டுமே பெய்யும் பாலை நிலமே கொங்கு மண்டலம். அதன் இன்றையப் பொருளாதார வளர்ச்சிக்கு, இங்குள்ள மக்களின் கடின உழைப்பும், குறிப்பாகப் பெண்களின் பங்களிப்புமே முக்கிய காரணம்.

பொன்னாயா என்று அழைக்கப் பட்ட அம்மாயியின் நிஜப் பெயர் சின்னம்மாள். தன் தந்தையின் மூத்த தாரத்தின் குழந்தை. பிறந்த சில காலத்திலேயே அவர் அம்மா இறந்து விட, அம்மாயியின் தந்தை மறுமணம் செய்து கொண்டார். முதல் தாரத்துக் குழந்தை என்பதால், கொஞ்சம் மாற்றுக் குறைவாகவே வளர்க்கப் பட்டதால், அம்மாயிக்குக் கொஞ்சம் தன்னிரக்கம் கூட உண்டு. அத்தோடு, தன் கணவன் இளம் வயதில் இறந்து விட்ட சோகமும் அவ்வப்போது சேர்ந்து கொள்ளும். யாரேனும் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கையில், தவறாமல், என் அப்பிச்சியும் அவர் கணவருமான கருப்பண்ண கவுண்டரின் பேர் வந்து விட, அம்மாயியின் குரலுடைந்து எழும் அழுகையில் எனக்கும் கண்ணீர் வரும்.

ஆனால், பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.

1976ல், நான் ஐந்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிக்க அம்மாயி வீட்டுக்கு வந்தேன். அப்போது, மருமகள் வந்து விட்டதால், அம்மாயி, சமையல் வேலையை விட்டு விட்டது. அம்மாயிக்குச் சரியாகச் சமைக்க வராது. பிடிக்காது. இரவில் அம்மாயிகூடத் தான் தூங்குவேன்.. அம்மாயி விடும் குறட்டை ஒரு மாபெரும் இம்சை.. மெல்ல, கீழ் ஸ்தாயியில் இருந்து மேலெழும்பி, உச்சக் கட்டத்தில், அம்மாயியின் குறட்டை கேட்டு, அம்மாயே எழுந்துவிடும். இம்சை தாங்க முடியாமல், கொஞ்ச நாள் கழித்து, அழுது அடம் பிடித்து, இன்னொரு கயிற்றுக் கட்டிலுக்கு மாறினேன்.

விடுமுறை நாட்களில், மாலையில் அம்மாயி கூட ஒட்டிக் கொண்டு, பாலூற்றும் வீடுகளுக்குச் செல்வேன். பெரும்பாலும் முஸ்லீம் வீடுகள். ”என்ன, பால்கார ஆயா, வியாபாரம் பண்ண ஒம் பேரனையும் கூட்டிட்டு வந்திட்டியா.. என்னடா? நல்லாப் படிக்கிறியா..” என்று முக்காடு அணிந்த முஸ்லீம் பெண்கள், கன்னம் கிள்ள வெட்குவேன்..

“பால்கார ஆயா,, பரவால்ல., பேரங்க தலையெடுத்துட்டாங்க.. நல்லா படிச்சு அவிங்க உன்னயப் பாத்துக்குவாங்க” என்று யாரேனும் சொன்னால், “இவிங்க அப்பிச்சி உசுரோட இருந்த நான் ஏங்கண்ணு நாலு ஊட்டுப் படியேர்றேன்? அவிங்க பன மரத்துல பாதி இருப்பாங்க.. கரு கருண்ணு தலை மசுரு.. ஒலக்க மாதிரிக் கைகாலு.. “ என்று ஒரு பாட்டம் தன் கணவனழகைப் பாடி விட்டு, என்னை காட்டி,”இது பாச்ச குஞ்சு” என்று discount செய்து விடும். மிக நீண்ட நாட்கள் நானொரு பாச்சைக் குஞ்சு என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே இருந்து வந்தேன்.

கொஞ்ச நாள், கழிந்து, ஒரு விறகுக் கடை திறந்தது. மாமா பல வியாபாரம் செய்தும் பலனில்லை. ஆனால், அம்மாயி தொட்ட எல்லாம் துலங்கியது என்றே சொல்ல வேண்டும். ஆட்களை அதிகாரமும் அன்பும் கொண்டு வேலை வாங்குவது அம்மாயியின் தனித்திறன். விறகுக் கடையும் நன்றாகவே சென்றது. பாலோடு விறகும் சேர்ந்து கொண்டது. ஆனால், கொஞ்ச நாளில், சோளத்தட்டு கிடைப்பது கடினமாகி விட பால் வியாபாரத்தை விட்டு விட நேர்ந்தது. தலையில் வெண் சுழியோடு இருந்த ஒரு அதிர்ஷ்டக் கிடேரியையும் மற்ற எல்லா எருமைகளையும் விற்று விட்டு, சாலையைக் கொஞ்சம் மாற்றி, வீடாக்கி வாடகைக்கு விட்டு விட்டது.

பால் வியாபாரம் நின்றதும், அம்மாயிக்கு கோவில் குளங்கள் செல்லும் ஆசை வந்து விட்டது. வருடம் முழுதும் சீட்டு சேர்த்து, ஒரு வாரம் பத்து நாட்கள் தன் நட்பு வட்டாரத்துடன் புறப்பட்டு விடும். நான் படிக்க, குஜராத் சென்று விட்ட காலத்தில் ஒரு முறை மகாராஷ்ட்ரம் வரை வந்து போயிற்று. ஒரு எழுத்துப் படிக்கத் தெரியாமல். என் அம்மா, அப்பா, மாமா யாருக்கும் இந்தத் திறன் கிடையாது.

அம்மாயி என்ற சொல்லுக்கு, வீட்டில் ஒரு கடவுளின் மரியாதைதான் இருந்தது. விதவையென்று விலக்க சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாததனால், அம்மாயிதான் எங்கும் முதல். விறகுக் கடை வியாபாரத்தில், அம்மாயியின் சுருக்குப் பை எப்போதும் பணம் கொண்டதாகத் தான் இருந்தது. விவரம் தெரிந்ததில் இருந்து, பண முடை என்று கேட்டதில்லை. ஐஸ்வர்யலட்சுமி.

ஆனால், தன் கணவன் இளம் வயதில் இறந்த துயர்தீர்க்க வந்ததாக நம்பிக்கொண்டிருந்த நான் தான் அம்மாயிக்குத் தீராத்துயரம் தந்தேன். என்னுடன் படித்த என் தோழியைத் திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவு அம்மாயியை மிகத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. சாதி விட்டுத் திருமணம் செய்து கொள்ள ஒப்பவேயில்லை.

கடும் விவாதங்கள் நடந்து நான் வீட்டை விட்டு வெளியேறும் அக்கணத்தில், அம்மாயி என் காலில் விழுந்தது என்னால் இன்றும் தாள முடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கிறது. ஒரு நாள் கூட தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத அம்மாயி. “கண்ணு.. இப்புடி உட்டுட்டுப் போனயினா நாங்கெல்லா நாண்டுகிட்டுச் செத்து போயிருவம்” என்று அழுத போது, அழுகையை உதறிவிட்டு வெளியேறினேன். அம்மாயி சாகாது என்று எனக்கு மிக நிச்சயமாகத் தெரியும். அதற்கு இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் பாக்கி இருந்தன – பேத்திக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. பையனப் பாத்துக்கனும்..

அதற்குப் பின்னும் ஓரிரண்டு வருடங்கள், எப்போதாவது, தொலைபேசும் போது, “அந்தப் புள்ளய உட்டுப் போட்டு வந்துரு.. இங்க தங்கச் செலயாட்டமா ஒரு புள்ளையப் பாத்துக் கட்டி வெக்கறம்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. சிரித்துக் கொள்வேன். பின்னர் விட்டு விட்டது.

1995ல் எங்கள் மகள் மதுரா பிறந்தாள். 10 மாதத்திலேயே பேசத் துவங்கிவிட்டாள்.. ஒரு வருடத்தில் அழகாகப் பாடுவாள்.. அப்போது திடிரென்று ஒரு நாள் காலை, வீட்டின் காலிங் பெல் அடிக்கத் திறந்தால்.. அம்மாயி.. எங்கேயோ எப்படியோ என் விலாசம் வாங்கிக் கொண்டு, சென்னையில் வசிக்கும் ஒரு ஈரோட்டுப் பையனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டது. மனைவி விஜி காப்பி கொடுக்க, அமைதியாக வாங்கிக் குடித்த அம்மாயி, “புள்ள எங்க?” என்று கேட்டது.

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மதுராவை எடுத்து வந்து, மடியில் கிடத்தினேன். கண் விழித்த மதுரா மேலே பார்த்தாள்.. இரவில் போட்ட வாசல் லைட் எரிந்து கொண்டிருந்தது. “லைட்ட ஆஃப் பண்ணும்மா..” என்றாள். “அதிகாரத்தப் பார்றா..” என்ற அம்மாயி, மதுராவை அணைத்து முத்தமிட்டது. அம்மாயிக்குச் சரியான வாரிசுதானேன்னு ஒரு நிமிடம் எண்ண, கண்கள் நிறைந்துவிட்டன.

(முற்றும்)

புகைப்பட உதவி : http://pixdaus.com/single.php?id=208472