கண்ணீரால் காத்த பயிர்

காலனியாதிக்கத்தின் கடைசி வருடங்கள்: ஆயுதப்போரின் எழுச்சி

இந்திய சுதந்திரத்தில் இரண்டாம் உலகப்போரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் என்று காந்தியின் சாத்வீக போராட்டங்களை பல வருடங்களாக வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்திருந்த காலனீய அரசுக்கு புதியதாக ஒரு கடும் சவால் முளைத்தது. அந்த சவாலின் பெயர் சுபாஷ் சந்திர போஸ். துடிப்பும் உத்வேகமும் தலைமைப்பண்புகளும் ஒருங்கே வாய்த்திருந்த இந்த இளைஞர் பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறையில் தூக்கி எறியவும் தயாராகவே இருந்தார். மக்களின் பேராதரவைப்பெற்று காங்கிரஸ் தலைமையை இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் போஸ் வென்றது காலனீய அரசுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் காங்கிரஸின் தலைமையிலிருந்து அவர் விலகினாலும், கட்டுக்கோப்பான தலைமை ஒன்றின் கீழ் இந்தியரில் 2 சதவீதம் பேர் ஆயுதமேந்தத்திரண்டால் கூட பிரிட்டிஷ் ராஜ்யம் தாங்காது என்பது காலனி அரசுக்கு புரிந்தே இருந்தது.

1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.

சாத்வீக காங்கிரஸின் சத்யாக்கிரகத்தை சமாளிப்பது எளிது. ஆயுதமெடுக்கத்துணியும் சுபாஷ் போஸை அப்படி எண்ணி விட முடியாது என்பதால் சுபாஷ் போஸைக் கொலை செய்ய சர்ச்சிலின் போர்க்கால மந்திரிசபை ஆணை பிறப்பித்தது. சுபாஷ் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்குத் தப்பினார்.

1942- மே மாதம் சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரைச் சந்தித்துப்பேசினார். ஹிட்லரின் சுயசரிதையில் (Mein Kampf) இந்தியரை இழிவுபடுத்துவதாக உள்ள பகுதிகளை நீக்கச்சொல்லிக் கேட்டார். ஹிட்லரோ இந்தியர்கள் ஒரு தேசமாய் இணைய நூறு அல்லது இருநூறு வருடங்கள் ஆகும் என்று சொல்லி காது புளிக்கும் நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்த, ஜெர்மனியிடமிருந்து எந்த உதவியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இழந்து சுபாஷ் போஸ் வெளியேறினார். ”ஹிட்லருடன் சில நிமிடங்கள் கூட எதைப்பற்றியும் விவாதிப்பது யாராலும் முடியாத காரியம்” என்று விரக்தியுடன் பிறகு குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப்பின் ஐரோப்பாவில் இருப்பதில் பயனில்லை என்று, ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்து மடகாஸ்கரில் ஜப்பானிய நீர்மூழ்கிக்கு மாறி கடலுக்கடியிலேயே மேலும் மூன்று மாதம் பயணித்து சுமத்ரா தீவுகளுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஜப்பானுக்குப் போய் ஜப்பானியப் பிரதம மந்திரியைச்சந்தித்து அவரது ஆதரவை வென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கே செயலிழந்து கிடந்த இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையை ஏற்று பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு பெரும் ராணுவத்தைத்திரட்டும் பணியில் ஈடுபடத்துவங்கினார்.

ஜப்பானில் சுபாஷ்

அன்றைய பர்மிய நாட்டின் தலைவர் பா-மாவ் போஸ் குறித்துச்சொல்கையில் “போஸ் ஆழமாகப் பேசத்தொடங்கினால் இன்னொரு சக மனிதரிடம் பேசுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்; மாறாக, நம்மை விடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வீர்கள்” என்றார்.

சுபாஷ் போகுமிடத்திலெல்லாம் அவர் பேச்சைக்கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்கு சமர்ப்பித்தார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் பீட்டர் ஃபே. சுபாஷின் அறைகூவல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. தென்கோடியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் முனைப்பில் பல்லாயிரக்கணக்கான தீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர சிங்கப்பூர் சென்றனர்.

ஆனால் இந்திய தேசிய ராணுவம் ஒரு முழுப்பயிற்சி பெற்ற ராணுவமாகவோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்க்கும் அளவுக்கு ஆயுத பலம் வாய்ந்ததாகவோ உருவெடுக்க முடியவில்லை. இந்தியாவை நோக்கி படைதிரண்டு வந்தவர்களில் பத்து சதவீதம் பேரே உயிர் பிழைத்து இந்தியாவிற்குள் வர முடிந்தது. ஆனால் சாதி, மதப்பிரிவினைகளைத்தாண்டி தேசியவாத வேகத்தில் மக்களை இணைப்பதில் இந்திய தேசிய ராணுவம் பெரும் வெற்றி பெற்றது.

போரின் முடிவில் 1945 நவம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவக் கமாண்டர்கள் மூவர் பிரிட்டிஷ் ராணுவத்தால் ராஜதுரோகக்குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக நாடுகடத்தப்பட வேண்டும் எனத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அம்மூவர்: பிரேம் குமார் செகல் என்கிற இந்து, ஷா நவாஸ் கான்[1] என்கிற இஸ்லாமியர், குருபக் சிங் தில்லன் என்கிற சீக்கியர். ஆயுதமேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட இந்த மூவரையும் விடுவிக்க முன்வந்த வழக்கறிஞர்களில் அஹிம்சாவாதியான காந்தியின் சீடர் ஒருவரும் இருந்தார்: அவர் பெயர் ஜவஹர்லால் நேரு.

இந்த விசாரணை நடக்க நடக்க, நாடே கொந்தளிக்கத்தொடங்கியது. 1946 பிப்ரவரியில் இந்தியக் கடற்படைக்கப்பல்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி பம்பாய்க் கடற்கரையை ரோந்து வரத்தொடங்கின. தீ போல் இந்த எதிர்ப்பு பல துறைமுகங்களுக்கும் பரவியது. 1857-க்குப்பின் இந்திய ராணுவம் முதன்முறையாக பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டெழுவது கண்ட பிரிட்டிஷ் தலைமைக் கமாண்டர் ஆஷின்லெக் அவசர அவசரமாக இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று கமாண்டர்களையும் விடுதலை செய்தார்.

ஆனால் ஒன்று நிச்சயமாக உறுதி ஆகி விட்டிருந்தது. உலகப்போரின் முடிவில் ஆயுதபலத்தினால் இந்தியாவை அடக்கி வைப்பது இயலாத காரியம் என்று தெளிவாகப் புலப்படத்தொடங்கி விட்டது. இந்திய ராணுவம் துப்பாக்கி முனைகளை காலனீயம் நோக்கித்திருப்பத் தொடங்கிய கணத்தில், பிரிட்டிஷ் காலனீய அதிகார வட்டத்தின் அச்சம் முழுமையடைந்திருந்தது.

காலனியாதிக்கத்தின் கடைசி வருடங்கள்: இந்தியாவிடம் கடன்பட்ட பிரிட்டிஷ் அரசு

இரண்டாம் உலகப்போருக்கு இங்கிலாந்தின் ஆகப்பெரும் உற்பத்தி மற்றும் விநியோகக் கேந்திரமாக இந்தியா விளங்கியது. ஆறு லட்சம் மைல் அளவுக்கு பருத்தித்துணியை இந்தியா இங்கிலாந்துக்கு உற்பத்தி செய்து தந்தது. இதைக்கொண்டு 20 லட்சம் பாராசூட்டுகளும் 40 கோடிக்கும் அதிகமான ராணுவ உடைகளும் தைக்கப்பட்டன. இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டு உற்பத்தியும் பாராசூட்டுகள் செய்ய உபயோகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் கம்பளி உற்பத்தி ஒன்றரை கோடிக்கும் அதிகமான சீருடைகளுக்கும் 50 லட்சம் போர்வைகளுக்கும் செலவானது. இந்தியாவின் மொத்த தோல் உற்பத்தியும், ஒன்றரைக்கோடிக்கும் அதிகமான பூட்ஸுகளாக, 50 லட்சம் ஷுக்களாக, ஏறக்குறைய நான்கு லட்சம் தோலாடைகளாக மாறின. இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட 20 லட்சம் படைவீரர்களுக்குமான கோதுமையும் உணவும் இந்தியாவின் விளைச்சலிலிருந்தே அளிக்கப்பட்டது. அதையும் தாண்டி இந்தியா 40000 டன் உணவுப்பொருட்களை போர்முனைகளுக்கு ஏற்றுமதி செய்தது.

அவை மட்டுமன்றி, புகைவண்டிப்பெட்டிகள், தண்டவாளங்கள், வெடிகுண்டுகள், உருப்பெருக்கிக் கண்ணாடிகள், சாக்கு மூட்டைகள் என்று இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான அனைத்துப்பொருட்களின் உற்பத்திக்கான முதுகெலும்பாக இந்தியா ஆனது. 2 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. அதில் பாதி ஸ்டெர்லிங் கடனாக இங்கிலாந்து இந்தியாவிடம் கடன்பட்டது; காலனி நாடு ஒன்றிடத்தில் பிரிட்டன் இவ்வாறு கடன்பட்டது இங்கிலாந்தின் காலனி வரலாற்றில் முதல் முறையாகும்.

போரின் முடிவில் 1 பில்லியன் பவுண்டுகளுக்கான மாபெரும் ஸ்டெர்லிங் கடனை இந்தியாவிற்கு அடைக்க வேண்டிய நாடாக இங்கிலாந்து ஆகியிருந்தது. 1940-இல் இந்திய தளவாடங்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய இங்கிலாந்தின் ஸ்டெர்லிங் பணத்தையே உபயோகப்படுத்தும் உத்தேசத்துடன், இங்கிலாந்து இந்திய ரூபாயின் மதிப்பை பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒன்றாய் இணைத்திருந்தது.

போர் நீடிக்க நீடிக்க இந்திய ரூபாயின் மதிப்பு சடசடவென விழத்தொடங்கியது. பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் அதிக மதிப்பு வாய்ந்ததாக ஆனது. இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் எரிச்சல் தரும் விஷயமாக ஆனது. ஸ்டெர்லிங் மதிப்புடன் பிணைக்காமலிருந்தால், குறைந்த ஸ்டெர்லின் தந்து அதிக ரூபாய்க்கான பொருளை பிரிட்டன் பெற்றிருக்க முடியும் என்பது அவரது வாதம். ஆனால் உண்மை நிலையை பிரிட்டிஷ் அரசின் இந்திய அரசுச் செயலரான லியோபால்ட் எமெரி அவருக்கு பதிலடியாகச் சொன்னார். “இந்திய ரூபாய் மதிப்புடன் ஸ்டெர்லிங் பிணைக்கப்படாதிருந்தால் அது இங்கிலாந்திற்கு இன்னமும் கேடாய் முடிந்திருக்கும். ஏனென்றால் போர்க்காலத்தில் இந்திய உணவுப்பொருட்களுக்கும், தளவாடங்களுக்கும் இருந்த மதிப்பில் ரூபாயின் மதிப்பு ஸ்டெர்லிங்கின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்கும்”.

பிரிட்டன் அமெரிக்காவிடமும் கடன்பட்டிருந்தது. பெரும் கடனில் மூழ்கிய பிரிட்டன் நிதி நிர்வாகம் போருக்குப்பின் மூழ்கிப்போகும் என அல்லது பெரும் அடி வாங்கும் என்ற பயம் பரவத்தொடங்கியது. பிரிட்டனின் ஸ்டெர்லிங்கிலும் அதனுடன் பிணைத்திருந்த இந்திய ரூபாயிலும் வியாபாரிகள் நம்பிக்கை இழக்கத்தொடங்கினர்.

காலனியாதிக்கத்தின் கடைசி வருடங்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் விளைவித்த பட்டினிச்சாவுகள்

சர்ச்சில் இந்தியா மீது கொண்ட வெறுப்பு ”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தாலும், போரில் உதவ மறுத்த காங்கிரஸாலும், எதிரியுடன் சேர்ந்து ராணுவப்போராட்டம் தொடங்கிய சுபாஷ் போஸாலும் பல மடங்கு அதிகரித்தது.

1942-இன் இறுதியில் வங்காளத்தைப் புயல்தாக்கியதில் கரையோர நெல்வயல்களெல்லாம் அழிந்துபோயின. முப்பதாயிரம் மக்கள் இறந்தனர். புயலின் விளைவாக உருவான பயிர் நோய்களில் மொத்த வங்க நெல் அறுவடையில் 20 சதவீதம் அழிந்தது. வங்காளத்தில் பஞ்சம் தொடங்கியது.

1942 பிப்ரவரியில் ஜப்பான் சிங்கப்பூரை ஏழே நாட்களில் கைப்பற்றி வரலாறு காணாத அளவுக்கு இங்கிலாந்து தலைமையிலான எண்பதாயிரம் நேசப்படை வீரர்களைச் சிறைப்பிடித்தது. மார்ச் மாதம் பர்மாவின் ரங்கூனும் வீழ்ந்தது. பிரிட்டிஷ் வங்காளம் ஜப்பானின் கையருகில் இருந்தது. ரங்கூனை விட்டு வெளியேறிய பிரிட்டிஷ் துருப்புகள் ரங்கூனை எரித்துச்சாம்பலாக்கி விட்டு வெள்ளையர்களை மட்டும் தப்பியோடவிட்டனர். ஜப்பானியர் கையில் மற்ற போர்வீரர்களை ஒப்புக்கொடுத்துவிட்டு, தப்பியோட முடியாத வகையில் படகுகளையும் அழித்து விட்டனர்.

பர்மாவிடமிருந்து இந்தியா ஒவ்வொரு வருடமும் இருபது லட்சம் டன் அளவுக்கு அரிசி இறக்குமதி செய்து வந்தது. பர்மா ஜப்பான் கைக்குப்போனபின் பஞ்சம் தொடங்கியபோது, பர்மாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த அரிசியும் வங்காளத்திற்கு இல்லாமலானது.

போர்ப்பயிற்சி மிக்க வீரர்களையும் தலைமைகளையும் ஐரோப்பிய போர்முனைகளுக்கு அனுப்பி இருந்ததில், இந்தியாவின் ராணுவ தரப்பு வெகு பலவீனமாக இருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் போர்க்கால அமைச்சரவை, பர்மாவைப் போலவே ஜப்பான் வங்கக் கடலோரத்தையும் தாக்கக்கூடும் என்று பயந்தது. ஆனால் ராணுவத்தை வைத்து கடற்கரைப்பகுதிகளைக் காப்பதற்கு மாறாக, ஜப்பான் உள்ளே வந்து விடுவதைத் தடுக்க முடியாது என்றே முடிவு செய்து, எரிதரைக்கொள்கையை (scorched earth policy) அமல்படுத்தியது.

அதன் விளைவாக ராணுவமும் பிரிட்டிஷ் போலீஸும் இணைந்து வங்கக்கடலோரப்பகுதிகளில் இருந்த நெற்பயிர்கள், அவற்றை வினியோகிக்க உதவும் போக்குவரத்துப்பொருட்கள் அத்தனையையும் அழித்தனர். படகுகளைப் பறிமுதல் செய்து உடைத்தெறிந்தனர். வங்காள கடற்கரைப்பகுதிகளில் ஏழைகளுக்கு சுலபமாய்க் கிடைக்கும் படகுப்போக்குவரத்தை நாசமாக்கினக்கினர். பானை செய்யும் குயவர்கள் களிமண் நிலங்களுக்குப்போகும் நீர்வழிப்பாதைகள் இல்லாமலாயின. மீன் பிடித்தொழில் நசிந்தது. ஏழைகள் இடம்பெயரவும் அவர்களுக்கு உணவு சென்றடைவதற்கான எளிய விநியோக வழிகளும்கூட அடைபட்டன. விமானம் தரையிறங்க பாதைகள் அமைக்க என்று 35000 குடும்பங்கள் அவர்களது கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

படையெடுத்து வரும் ஜப்பானியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்கக்கூடாதல்லவா? எனவே, வங்காள இந்தியக்குடும்பங்கள் பசியால் பட்டினியால் கிராமம் கிராமமாக மடிந்து வந்த காலத்தில், பல ஆயிரம் டன் அரிசி வங்கக் கடலில் கொட்டப்பட்டது. போதாதற்கு எந்த விலை கொடுத்தும் நெல் வாங்க பிரிட்டிஷ் அரசு தயார் என அறிவித்ததில், இருந்த கையிருப்பு நெல்லின் விலையும் சாதாரணர்கள் வாங்க முடியாத அளவுக்கு சட்டென்று உயர்ந்தது. இவ்வாறு பட்டினியால் இறந்தவர்களின் வயிற்றின்மேல் ஏறி நின்றுகொண்டு கொள்முதல் செய்யப்பட்ட 40000 டன் நெல், பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

பட்டினிச்சாவுகள் அதிகரித்துக்கொண்டே வந்த அதே நேரத்தில் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒரு பகுதி பிரிட்டிஷாரால் அரசு கோடவுன்களில் பதுக்கப்பட்டது. மீதி கிழக்கு ஐரோப்பிய பால்கன் பிரதேசத்தில் இங்கிலாந்து வென்ற பகுதிகளின் மக்கள் பசியால் வாடிவிடக்கூடாதென்று அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

அதே நேரத்தில் காலனீய அரசு இந்திய மில் முதலாளிகள் மீது பதுக்கல் குற்றச்சாட்டை அரசு பிரசாரம் மூலம் பரப்பியது. பதுக்கல் இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கும் சர்ச்சிலின் இந்திய வெறுப்புக்கொள்கையே காரணமாக இருந்தது. இரண்டு காரணங்களைக் காட்டலாம்:

ஒன்று, இந்திய தானியங்களுக்கு கிடைக்கும் பணத்தின் மதிப்பு மீதான நம்பிக்கை அடி வாங்கியது. இரண்டாவது, பஞ்சம் வந்தால் அரசு தானியங்களை மக்களுக்கு வினியோகம் செய்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போனது. பொதுவாக பேரிழப்பு நேரங்களில் அரசாங்கம் குடிமக்களுக்குக் தாமதமானாலும் கைகொடுத்துக் காக்கும் என்பது ஓர் அடிப்படை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமல் போகும் நிலையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழப்பும் பாதுகாப்பின்மையும் வலுவடைகிறது.

சர்ச்சிலின் காலனீய பிரிட்டிஷ் அரசு பஞ்சத்தின் பட்டினி சாவுகளிலிருந்து இந்தியர்களின் உயிரைக்காக்க முன்வரும் என்கிற நம்பிக்கை யாருக்குமே அன்று இல்லாமல் போனது. விளைவு, கையிருப்பு உணவுப்பொருட்கள் அனைத்தையும் அரசுக்கும் தெரியாமல் பதுக்கத்தொடங்கினர். (அரசுக்குத்தெரிந்தால் அதைப்பறித்து அரசே பதுக்கும், அல்லது ஐரோப்பிய வெள்ளை நாடுகளின் பசி போக்க அதை அனுப்பி வைக்கும்).

1943 மார்ச் மாதத்தில் வங்காள கிராமங்களில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கத்தொடங்கின. உலகத்துக்கே துணி வழங்கிய வங்க கிராமங்களின் பெண்கள் உடுத்த கோடித்துணியின்றி குடிசைக்குள் அடைந்தனர். முறைவைத்து உடைமாற்றி வெளியில் சென்று வந்தனர்.

சாலையில் இருக்கும் நெல்மணிகளை பொறுக்கும் பெண்
சாலையில் இருக்கும் நெல்மணிகளை பொறுக்கும் பெண்
சாலை ஓரத்தில் பசியால் வாடியபடி ஒரு பெண்
சாலை ஓரத்தில் பசியால் வாடியபடி ஒரு பெண்

வங்காளத்தின் கிராம மக்கள் நடைப்பிணங்களாக கூட்டம் கூட்டமாக கல்கத்தா வரத்தொடங்கினர். கல்கத்தா தெருக்கள் பிணங்களால் நிரம்பின. அத்தனை பட்டினியிலும் கல்கத்தாவின் உணவுக்கிடங்கோ அரிசிக்கடைகளோ தாக்கப்படவில்லை. பெரும் வன்முறை எதுவுமே நிகழவில்லை- குழந்தைகளும், பெண்களும், முதியோரும் ஆதரவின்றி தெருவோரங்களின் இறந்து நாய்களால் கடித்துக்குதறப்படுவதைத் தவிர[2].

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, – ஏன், ஜப்பானும், சுபாஷ் போஸும் கூட – வங்கத்திற்கு அரிசி அனுப்ப முன்வந்தும் சர்ச்சிலின் அரசு அதை ஏற்க மறுத்தது. நேச நாடுகளால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களைப் பசியிலிருந்து காக்க எடுக்கப்படும் முனைப்புகளின் சிறு சதவீதத்தைக்கூட போருக்கு உணவையும் தளவாடங்களையும், வீரர்களையும் தந்த இந்தியாவின் மக்களைப்பட்டினிச்சாவிலிருந்து காக்க சர்ச்சிலின் அரசு தரவில்லை.

நேச நாடுகள் இந்தியாவிற்கு உணவுப்பொருட்கள் அனுப்ப முன்வந்த போது அதனை எடுத்துச்செல்ல கப்பல்கள் கிடையாது என்று அனுமதி மறுத்தது சர்ச்சிலின் அரசு. ஆனால், உண்மையில் இங்கிலாந்தின் உணவுக் கிடங்குகள் இடமின்றி நிரம்பி வழிந்தன. தார்ப்பாய் மூடப்பட்டு வெளியே கிடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உணவு தானியங்கள் அழுகிப்போயின.

1943 ஜுலை மாதம் இந்திய வைஸ்ராய் லின்லித்கொவ் வருட இறுதிக்குள் 500,000 டன் கோதுமை வழங்காவிட்டால் அடுத்த அறுவடைக்காலம் வரை இந்திய ராணுவம் கூடத்தாக்குப்பிடிக்க முடியாதென்று வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் மாதம் நாலாம் நாள் கூடிய போர்க்கால மந்திரிசபையின் கூட்டத்தில் சர்ச்சிலும் அவரது சகாக்களும் சேர்ந்து இந்தியாவிற்கு ஒரு கப்பல் உணவுகூடப்போகக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

மாறாக தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு உணவுப்பொருட்களைக் கொண்டு சென்று சேமித்து அந்த நாடுகளுக்கு வினியோகம் செய்ய போர் மந்திரி சபை முடிவெடுத்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒவ்வொரு மாதமும் 75000 டன் கோதுமை இலங்கை வழியாகக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு டன் கூட இந்தியாவுக்குத் தரப்படவில்லை. இன்னமும் ஒரு 1,70,000 டன் போர் முடிந்ததும் வினியோகம் செய்ய என்று மத்தியதரைக்கடல் பகுதியில் பாதுகாக்கப்பட்டது. அதாவது போர் முடிந்தபின் ஐரோப்பாவைப் பசியிலிருந்து காக்க இந்திய மக்களைப் பட்டினிச்சாவுகளுக்கு பலி கொடுத்தது சர்ச்சிலின் அமைச்சரவை. கிரேக்கர்களைப் பாதுகாப்பது ”முயல் கூட்டம் போல் இனப்பெருக்கம் செய்யும்” வங்காளிகளைக் காப்பதை விட முக்கியம் என்று விளக்கினார் பிரிட்டிஷ் பிரதமர்.

இதே காலகட்டத்தில் பிரிட்டனின் 48 லட்சம் (அதாவது இந்திய ஒட்டு மொத்த ஜனத்தொகையில் எட்டில் ஒரு பகுதி) மக்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள்: 40 லட்சம் டன் கோதுமை 14 லட்சன் டன் சர்க்கரை 15 லட்சம் டன் மாமிசம், 3 லட்சம் டன் மீன், ஏறக்குறைய ஒன்றரை லட்ச டன் அரிசி, 2 லட்சம் டன் டீ, 10 லட்சம் கேலன் வைன்(wine).

தொடர்ந்து இந்தியச்செயலர் லியோ எமெரி முயன்றதில் 500,000 டன் கோதுமைக்குப்பதில் 80,000 டன் கோதுமை 1943-ம் வருட இறுதியில் (அதாவது கேட்டதில் 16%) அனுப்பப்பட்டது. ஆனால் 1943 இறுதியில் வங்காள நிலங்கள் அமோக விளைச்சல் கண்டன. பஞ்சம் முடிவுக்கு வந்தது. அதற்குள் வங்காளத்தில் மட்டும் 30 லட்சம் பேர் பஞ்சத்திற்கு ஏற்கனவே பலியாகி இருந்தனர். ஆறு வருட காலத்தில் அறுபது லட்சம் யூதர்கள் ஹிட்லரின் நாசி ஜெர்மனியால் கொல்லப்பட்டனர். ஒரே வருடத்தில் சர்ச்சிலின் பிரிட்டிஷ் அரசின் இந்திய இன வெறுப்பு 30 லட்சம் இந்தியர்களைப் பட்டினிச்சாவுகள் மூலம் பலி வாங்கியது. போர்முடிந்தவுடன் உலகமெங்கும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து அள்ளிப்பதுக்கிய தானியக்கிடங்குகளில் இருந்து உணவுப்பொருட்களை விற்று நல்ல லாபம் கண்டது.

இந்தப்பட்டினிச்சாவுகள் பற்றி உலகிற்கே தெரிந்திருந்தது. ஆனால் சர்ச்சில் இதை முழுமையாக தன் கவனத்திலிருந்து உதாசீனப்படுத்தி ஒதுக்கித்தள்ளியிருந்தார் ஏனெனில் அந்த உதாசீனத்திற்கு அவர் ஒரு விலையும் தரவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

சர்ச்சில் என்ற தனிமனிதரின் இந்திய வெறுப்பைத் தனக்குள்ளும் தேக்கிய ஆயிரக்கணக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களின் இந்திய அடிமைகளும் இந்தப் படுகொலையில் பங்கேற்றவர்கள்தான். ஆனால் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் என்கிற வகையில் சர்ச்சில் செய்தது கலப்படமற்ற இனவெறுப்பில் விளைந்த விஷயம் என்று நம்ப பல சான்றுகள் உள்ளன. இந்திய அரசின் செயலர் லியொபொல்ட் எமெரியிடம் வெளிப்படையாகவே இவ்வாறு கூறினார்: ”நான் இந்தியர்களை வெறுக்கிறேன். காட்டுமிராண்டி மதத்தைப்பின்பற்றும் காட்டுமிராண்டி மக்கள் அவர்கள்… பஞ்சம் உருவாவதெல்லாம் அவர்களது சொந்தத் தவறினாலேயே” என்று இந்திய மக்கள் தொகைப்பெருக்கத்தைக் காரணம் காட்டினார். இந்தியாவின் பட்டினி சாவுகளைப்பற்றி சொன்ன போது, ”பின் ஏன் காந்தி இன்னமும் சாகவில்லை?” என்று கேட்டார். “அழிந்து போய்த்தொலைந்திருக்க வேண்டிய இந்துக்கள் இனப்பெருக்கத்தால் மட்டுமே உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று வெறுப்புமிழப்பேசிய சர்ச்சில் பிரிட்டிஷ் குண்டுவீச்சு கமாண்டர் ஆர்தர் ஹாரிஸ் ”போரில் ஈடுபட்டதுபோக மீதமுள்ள விமானங்களை அனுப்பி குண்டு வீசி அவர்களை அழித்தால் நன்றாயிருக்கும்” என்றும் கருத்துத் தெரிவித்தார்.

w_ch

பஞ்சம் தொடங்கியவுடன் சர்ச்சில் தலைமையிலான பிரிட்டிஷ் காலனீய அரசு நடந்து கொண்ட முறை ஹிட்லரின் யூத இனவெறிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. யூத வெறுப்பாளர்கள் யூதர்களைத் திட்டும் வசை வார்த்தையைக்கொண்டு “இரக்கமற்ற லேவாதேவிக்காரர்கள்” என்று காங்கிரஸ்காரர்களையும் இந்துக்களையும் குறிப்பிட்டார் சர்ச்சில். யுத்த காலத்தில் இந்திய செயலராக இருந்த எமெரி தன் வரலாற்றுக்குறிப்பில் சர்ச்சிலை ஹிட்லருடன் ஒப்பிட்டுப்பேசுகிறார். இந்தியாவிற்கு உணவு அனுப்பக்கேட்டு வந்த எமெரியை ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகப்பேசாமல் “இந்திய லேவாதேவிக்காரர்களுக்கு” ஆதரவாகப்பேசுவதாக ஏசுகிறார் சர்ச்சில். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த எமெரி சர்ச்சிலிடம் ” பொதுநோக்கில் ஹிட்லருக்கும் உங்களுக்கும் ஒன்றும் அதிக வித்தியாசம் தெரியவில்லை” என்று பதிலடி கொடுக்கிறார். (எமெரி இந்தியாவில் பிறந்தவர்; அவரது தாய் ஒரு யூதர்).

இந்தியாவின் கையிருப்பில் இருந்த ஸ்டெர்லிங் பணத்தை வைத்து பஞ்சம் தீர்க்க உணவை இறக்குமதி செய்யக்கூட இந்தியாவிற்கு அனுமதி மறுத்திருக்கிறார் சர்ச்சில். இந்தியாவின் வைஸ்ராயாய் இருந்த வேவல் பிரபு, “இந்தியாவை, இந்தியா தொடர்பான அத்தனை விஷயங்களையும் சர்ச்சில் வெறுப்ப”தாகவும், ”பொறுப்பற்றதாகவும், பகைமையும் காழ்ப்பும் நிறைந்ததாகவும் இந்தியா குறித்த அவரது நடத்தை இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.

கண்ணீரால் காத்த பயிர்

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது உண்மையில் அதன் சோற்றுக்கணக்குடன் சம்பந்தப்பட்டது என்பது பிரிட்டிஷ் காலனீய வரலாற்றைப்பார்த்தாலே எளிதில் புரியக்கூடியது. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை பிரிட்டிஷ் இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில் பஞ்சமும் பட்டினிச்சாவுகளும் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தன. சுதந்திரம் இல்லாத நாட்டில் ”வெறும்” சோற்றுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் சொல்லக்கூசும் அளவுக்கு பஞ்சமும் பட்டினியும் வழமையானதற்கு ஆதாரக் காரணம், பிரிட்டிஷ்காரர்களின் ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவத்தில் ஊறி வளர்ந்திருந்த உயர் இனவாதம்.

ப்ராட்ஸ்டண்ட் கிறித்துவம் (சீர்திருத்தசபை) என்று சொல்லக்காரணம் இருக்கிறது. ப்ராட்டஸ்டண்ட் இன வெறுப்பு ஜெர்மனியில் யூதர்களை அழித்தது போலவே, இந்தியாவிலும் இந்தியர்களை நிர்த்தாட்சண்யமாக அழித்தொழித்தது. இந்த இன உயர்வு எண்ண ஓட்டத்திற்கும் இனவெறிப்போக்கிற்கும் பிராட்டஸ்டண்ட் மத வளர்ச்சியில் – மார்ட்டின் லூதர் தொடங்கி- ஒரு அறுபடாத தொடர்ச்சி இருக்கிறது. ஜாக்கோபைட்டுகளின் கத்தோலிக்கக்கலவரங்களை முறியடித்து ஒருங்கிணைந்த நாடாக 1700-இல் உருவெடுத்த பிரிட்டனின் உளவியலில் பிராட்டஸ்டண்ட் மேலாதிக்க உணர்வு பெரும்பங்கு வகித்தது.

1943-இன் இந்தியப்பஞ்சங்களைக்குறித்த சர்ச்சிலின் எண்ணம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரிஷ் பகுதியில் உருவான பஞ்சம் குறித்து சர். சார்லஸ் ட்ராவல்யன் கூறியதை அப்படியே ஒத்திருக்கிறது. ”பஞ்சம் என்பது அளவுக்கு அதிகமாக உள்ள மக்கள் தொகையைக்குறைக்கும் ஒன்று” என்று கூறினார் ட்ராவல்யன். இவர் மதராஸ் கவர்னராக 1859-60இல் பணியாற்றியவர். 1862-65 இந்திய நிதியமைச்சராக இருந்தவர். இந்திய மொழிவழிக் கல்வியை ஒழித்து, மனதில் ஆங்கிலேயர்களாக- ஆங்கிலேயர்களுக்கான விசுவாசிகளாக- இந்தியர்களை உருவாக்கும் வகையில் ஆங்கில வழிக் கல்வித்திட்டத்தை அமைக்க வித்திட்ட மெக்காலே பிரபு இவரது நெருங்கிய நண்பர் என்பதும் மெக்காலேயின் சகோதரியை மணந்தவர் என்பதும் குறிப்படத்தக்கவை.

ஐரிஷ் பஞ்சத்தை கடவுளின் தீர்ப்பு என்று குறிப்பிடும் சர்.ட்ராவல்யன் (ஐரிஷ் பகுதி ப்ராட்டஸ்டண்டுகளை எதிர்க்கும் கத்தோலிக்க பிரதேசம் என்பதை நினைவில் கொள்வோம்) ”நாம் எதிர் கொள்ள வேண்டியது பஞ்சம் என்பதன் தீமையையல்ல, (ஐரிஷ் மக்களின்) சுயநலம் மனப்பிறழ்வு ஆகிய சுபாவங்களின் தீமைகளையே” என்று குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் கீழிருந்த ஐரிஷ் பிரதேச பஞ்சத்தில் 10 லட்சம் பேர் இறந்தனர். பிரிட்டனோ தன் அரசின் பொறுப்பைக் கைகழுவி பட்டினிச்சாவுகளை ஐரிஷ் மக்கள் தலையிலேயே சுமத்தியது. பாதிக்கப்பட்டவரையே பலிகடா ஆக்கும் அதே ப்ராட்டஸ்டண்ட் ”அறவுணர்வு”, ஒரு நூற்றாண்டு கழித்து பட்டினியில் இறந்து படும் இந்தியர்களின் மீது- குறிப்பாக- வங்காள இந்துக்களின் மீது – சர்ச்சில் காட்டும் வெறுப்பில் எதிரொலிப்பதைக் காணலாம்.

நிராதரவின் பரிதாபத்தின்மேல் வெறுப்பு உமிழும் உளப்போக்கை முழுமையாய்ப் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனால் அப்படி ஒரு ஒன்று இருப்பது இந்தியாவின் காலனீய ஆட்சியில் பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.

காலனீய அடிமைக்காலத்தின் கடைசி வருடங்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன. அதன் ஈரத்தில்தான் சுதந்திரச்செடி முளைவிட்டு எழுந்தது.

உலகத்தின் எந்த மூலையில் நான் அலைக்கழிந்தாலும் கடைசியில் ஒதுங்க நிழல் தரத்தயாராய் இருக்கும் தாயாக அந்தச்செடி வளர்ந்து நிற்கிறது. அந்நிழலின் உருவாக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டு உரமாகிப்போன ஒவ்வொரு உயிருக்கும் நான் எப்படி நன்றி செலுத்தப்போகிறேன்?

(முற்றும்)

குறிப்பு :

1. ஷா நவாஸ் கான் அரசியல் பேரணிகளில் கலந்து கொண்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி உருக்கமாகப் பேசத்தொடங்கினார். அவ்வகை பேச்சுகளுக்கு இஸ்லாமியர்களிடமிருந்து அவருக்கு கிடைத்த பரிசோ அவரை அதிர்ச்சியடைய வைத்தது. கல்கத்தா மசூதி ஒன்றில் தொழுகை முடித்து அவர் வெளிவரும்போது முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஆதரவுக்கோஷங்களை எழுப்பிக்கொண்டே பாய்ந்து வந்து அவர் கார் மீது கல்லெறிந்து அவரை விரட்டியடித்தார்கள். பிரிவினைக்குப்பின் இந்தியாவில் வாழ்ந்த அவர், இந்திய அரசு சுபாஷின் மறைவு குறித்து ஆராய அமைத்த கமிட்டியிலும் இடம்பெற்றிருந்தார்.

2. வங்காளத்தில் நிலவிய பெரும் பஞ்சத்தை ஆவணபப்டுத்தும் புகைப்படங்களை கீழே இருக்கும் இணைப்புகளில் பார்க்கலாம் :

http://www.oldindianphotos.in/2009/12/bengal-famine-of-1943-part-1.html

http://www.oldindianphotos.in/2009/12/bengal-famine-of-1943-part-2.html

இந்தக்கட்டுரையின் பல தரவுகளும் செய்திகளும் மதுஸ்ரி முகர்ஜியின் “Churchill’s Secret War” என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் பேரரசு எப்படி இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் சின்னாபின்னப்படுத்தியது என்பதையும், அதற்கு அச்சாணியாக சர்ச்சில் செயல்பட்டதையும் இதுவரை வெளிவராத பல ஆய்வுகளின் மூலமும் மூல ஆதாரத்தரவுகளின் மூலமும் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் மதுஸ்ரி முகர்ஜி. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

முகப்புப் படம் : THE ATTACK OF MUTINEERS, JULY 30, 1857