20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 16


‘நியூ ரியலிஸம்’
New Realism
நிராகரித்தலிலிருந்து உதித்த கவித்துவம்

மிலன் நகரில் மே மாதம் 1960 இல் ‘அபொலினைர்’ (Apollinaire) கலைக் கூடத்தில் ஒரு ஓவியக் காட்சி நடைபெற்றது. பல புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ (Pierre Restany), ஓவியர் ‘வெஸ் க்ளெயின்’ (Yves Klein) ஆகிய இருவரும் இதனை முன்நின்று நடத்தியவராவர். அப்போதுதான் ‘நியூ ரியலிஸம்’ (New Realism) என்னும் பெயருடன் ஒரு புதிய குழு தொடங்கியது. ஏப்ரல் 1960 இல் ‘பியெர் ரெஸ்டனி’ இந்தக் குழுவின் சிந்தனைக் கோட்பாடு பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது, ‘புதிய விழிப்புணர்வின் ஒழுங்குமுறை அறிவிப்பு’ (Constitutive Declaration Of New Realism)என்று தலைப்பிடப்பட்டது. ‘புதிய தத்ரூபம்- உண்மையை / அசலைக் கண்டடையும் புதிய உத்திகள்’ என்ற விளக்கம் கொண்டது அது. ஓவியர் ‘வெஸ் க்ளெயின்’ உடைய படைப்புக் கூடத்தில் 27-அக்டோபர் 1960 இல் குழுவில் இணைந்த ஒன்பது படைப்பாளிகளின் கையொப்பத்துடன் அது உறுதி செய்யப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் மேலும் சில ஓவியர்கள் குழுவில் இணைந்தனர்.

குழுவுக்குப் பெயர் தேர்ந்தெடுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ஓவியர் ‘வெஸ் க்ளெயின்’ அது ‘நுவோ ரியலிஸம்’ (‘Nouveaux Re`alisme’) என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. மாறாக, ‘இன்றையத் தத்ரூபம்’ (Today’s Realaism) என்னும் பெயர்தான் சாலப் பொருத்தமாக இருக்குமென வாதிட்டார். 17 மே 10 ஜூன் 1961 இல் வடிவமைக்கப்பட்ட குழுவின் இரண்டாவது அறிக்கையில் “40* Above Dada” என்று பெயர் மாற்றம் நிகழ்ந்தது. அவ்வமயம் மேலும் ஆறு ஓவியர்கள் குழுவில் உறுப்பினராக இணைந்தனர்.

குழுவின் முதல் ஓவியக் காட்சி நவம்பர் 1960 இல் ‘நூவோ ரியலிஸ்ட்’ (Nouveaux Realistes) என்னும் தலைப்பில் பாரிஸ் நகரில் ‘தவன் கார்டு’ கலை விழாவில் “Festival d`avant-guard” காட்சிப் படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1962 இல் நியூயார்க் நகரிலும், 1963 இல் இத்தாலியில் ‘ஸான் மரினோ’ (San Marino) நகரில் நிகழ்ந்த ‘பியன்னேல்’ (Biennale) கலை விழாவிலும் குழுவின் ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

குழுவின் சிந்தனைக் கோட்பாடு நியூயார்க் நகரில் தோன்றிப் பரவிய ‘பாப் ஆர்ட்’ (Pop Art) என்னும் பாணியுடன் ஒப்பிடப்பட்டது. அதிலிருந்து பெற்ற பாதிப்புதான் பிரான்ஸ் நாட்டில் இதன் தோற்றம் எனும் கலை வல்லுனரும் உண்டு. 1960 களில் தோன்றி இயங்கிய ‘ஃப்ளாக்ஸ்’ (Flaxus) போன்ற பல குழுக்களைப் போல் எழுத்தாளர், ஓவியர், இசைக் கலைஞர் ஏனையோரின் பரிசோதனை கூடிய புதிய உத்திகளை கொண்ட இயக்கங்கள் அப்போது பலராலும் தொடங்கப்பட்டன. ஆனால், இக்குழுவின் சிந்தனைப்போக்கு என்பது தாதா இயக்கத்துடன்தான் பொருந்தி இருந்தது.

இக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவித்துவம் கூடிய மீள் சுழற்சி” என்று கூறினார். இக்காரணத்தால் அவர்களின் படைப்பு சார்ந்த கரு என்பது பொதுவானதாகவே இருந்தது.

‘அரூப’ப் படைப்புப் பாணிக்கு மாற்றாக அக்குழு ‘தத்ரூப’ பாணியை முன் நிறுத்திப் படைத்தது. ஆயின் மிகுந்த எச்சரிக்கையுடன் ‘உருவம் சார்ந்த ஓவிய உத்தி’ என்னும் பொறியில் விழாமல் விலகிக் கொண்டது. அதன் கருப்பொருள் கொச்சைப்படுத்தப்பட்ட தொழிலாளர் வர்க்கம் சார்ந்தது என்றும், ஸ்டாலினுடைய சிந்தனை தாக்கம் கொண்டது என்றும் அதற்கு விளக்கம் கொடுத்து, அதிலிருந்து ஒதுங்கியது.

தங்கள் காலத்து வாழ்க்கை சார்ந்த உண்மைகளை எளிய, வெளிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி படைப்புகள தீட்டியது. ‘கொலாஷ்’ என்னும் உத்திக்கு எதிரான ‘டி கொலாஷ்’ பாணியை தோற்றுவித்தவர்கள் அவர்கள். சுவரொட்டிகளைச் சிதைத்துப் பின் மீண்டும் அவற்றுக்கு மாற்றுருவம் கொடுத்து காட்சிப்படுத்தியதில் ‘ஃப்ரான்குவா டுபெர்ன்’ (Francois Dufrene), ‘ஷாக் வியகில்’ (Jacque Villegle), ‘மிம்மோ ரோடெலா’ (Mimmo Rotella), ‘ரெமான் ஹெயின்ஸ்’ (Raymond Hains) ஆகியோர் சிறந்து விளங்கினர். ஒரே படைப்பைப் பலர் ஒன்றிணைந்து படைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தது. அவற்றில் யாருடைய பெயரும் இடம் பெற்றிருக்கவில்லை. அவ்விதம் அடையாளமற்றுக் காட்சிப்படுத்துவதையே குழு விரும்பியது.

ஓவியர் ‘வெஸ் க்ளெயின்’ காலமான பின்னர் குழு ஒற்றுமை என்பது குறையத் தொடங்கி 1970 இல் குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டது.

Figuration Libre (Free Style)-1980s

1980இல் பாரிஸில் Robert Combas தமது ஓவிய நண்பர்கள் மூவருடன் இணைந்து ஒரு புதிய ஓவியக் குழுவைத் தொடங்கினார். அதற்கு Figuration Libre என்னும் பெயரை Ben Vautier என்னும் ஓவியர் தேர்ந்தெடுத்தார். இவர் Fluxus பாணி ஓவியர். 1982-85 களுக்கு இடையில் இக்கலைஞர்கள் அமெரிக்க சக கலைஞர்களுடன் இணைந்து நியூயார்க், இலண்டன், பாரிஸ், பிட்ஸ்புர்க் நகரங்களில் ஓவியக் காட்சிகளை நிகழ்த்தினர்.

இந்தப் படைப்பு சிந்தனை, அமெரிக்காவில் Bad Painting என்றும், ஐரோப்பாவில் Neo- Expressionism என்றும், ஜெர்மனியில் Junge Wilde என்றும், இத்தாலியில் Transvanguardia என்றும் நிகழ்ந்த கலை சோதனைகளுக்கு இணையானது.

இக்குழுவினரின் படைப்புகளில் எந்தவிதக் குறிக்கோளும் இருக்கவில்லை. யாதொரு சிந்தனை சார்ந்தும் இல்லாத எந்தவொரு பாணியையும் பின்பற்றாத உதிரிகளாகவே அவர்களின் கலை குழு இயங்கியது.

(வளரும்)

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்01-new-realism-475px-jean-baptiste_simeon_chardin_01702-newrealism-618px-they_did_not_expect_him03-newrealism-800px-gustave_courbet_01804-new-realism-sargent_madamex05-decollage59b-s06-jacques-villegle_pasquart_0907-rotella-mainz-200008-113006809-11300621a-robertcombas-indexb-robert-combas-indexc-remi-blanchard-a000840292-001d-remib-imagese-francoisboisrond-indexf-boisrond-a001002993-001g-herve-di-rosa-di_rosa_herve-miami_on_wheelh-herve-img_2_315_557_0[/DDET]