செந்தாமரைப் புரட்சி

[stextbox id=”info” caption=”தாத்தியா டோபே – ஒரு அறிமுகம்”]
மூன்றாவது ஆங்கிலோ-மராட்டா போரில்(1817-1818) அடைந்த தோல்வியைத் தொடர்ந்து மராட்டா படை முற்றிலும் வலுவிழந்து காணப்பட்டது. பல்வேறு மராட்டா படைகளுக்கு நடுவே நிலவிய வலுவான ஒருங்கிணைப்பும் குலைந்திருந்தது. பேஷ்வாக்களை கைப்பற்றியதன் மூலம் கிழக்கிந்திய கம்பெனி தன் வெற்றியை அழுத்தமாக பதித்திருந்தது. மேலும் மராட்டாக்களின் சாம்ராஜ்யத்தை கைப்பற்றியதோடல்லாமல், பம்பாய் மாகாணம் முழுவதையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர். அடுத்த 40 வருடங்களில் கம்பெனியின் பல்வேறு மூர்க்கமான தரம்தாழ்ந்த நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கிய மராட்டாக்கள் அந்த இடத்தை முற்றிலும் இழந்து அந்த வித மீட்சிக்கும் வாய்ப்பில்லாதவர்களாகத் தான் அவர்கள் பார்க்கப்பட்டனர். ஆனால் வரலாறு வேறு விதமாக இருந்தது. முந்தைய நூற்றாண்டில் அவுரங்கசீப்பின் மூர்க்கமான ஆட்சியை எதிர்த்து மராட்டாக்கள் ஒன்றுதிரண்டு எழுந்ததைப் போல், மீண்டும் ஒருமுறை அவர்கள் பெருவலுவுடன் எழுந்தனர். வரலாற்றின் பக்கங்களில் தங்கள் முத்திரையை மீண்டும் அழுத்தமாக பதித்தனர். அவுரங்கசீப்பை எதிர்க்க வீர சிவாஜி எனும் மராட்டா உதித்தார். அதைப் போல் சிதறிக்கிடந்த பல்வேறு இந்திய சக்திகளை ஒன்றிணைத்து, வலுவான ஆங்கில ஆட்சிக்கெதிரான ஒரு இந்தியப் படையை மீண்டும் நிறுவியதும் இன்னொரு மராட்டா தான். அவர் பெயர் ”ராமச்சந்திர பாண்டுரங்க டோபே” எனும் ”தாத்தியா டோபே”.
[/stextbox]

பிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார். போரின் போது வீரர்கள் தங்களுக்கிடையே பரிமாறிக்கொண்ட பல கடிதங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கடிதங்கள் உருது, புந்தேலி, மராத்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இத்தகைய ஆவணங்களைக் கொண்டும், இந்தப் போர் குறித்த ஆங்கிலேயரின் அறிக்கையை மறு ஆய்வு செய்தும் இப்போர் குறித்த முற்றிலும் புதிய ஒரு கோணத்தை இந்தப் புத்தகம் நமக்கு அளிக்கிறது.

இந்தப் புத்தகத்தில் பல ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, 1857 போர் குறித்த பல ஊகங்களையும், வதந்திகளையும் இந்தப் புத்தகம் முற்றிலும் உடைக்கிறது. 1857 போர் குறித்த மிக பிரபலமான ஒரு ஊகம், “இது வெறும் கிளர்ச்சி. இவர்களின் நடவடிக்கையில் இந்தியாவை சுதந்திரத்தின் பாதையில் வழிநடத்திச் செல்லும் எந்தவித தரிசனமும் இல்லை” என்பதே. இந்த வாதத்தை பலரும் மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். இந்தப் போர் குறித்த முக்கிய அலசலாக நான் கருதும் சாவர்க்கரின் நூல் கூட இதே கருத்தை முன்வைக்கிறது. ஆனால், இந்த நூல் இந்த வாதத்தை முற்றிலும் நிராகரிக்கிறது. போர் நடந்த சமயத்தில் தாத்தியா டோபேவிற்கும் மற்ற கள அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பல்வேறு கடிதப் பரிமாற்றங்களை இந்தப் புத்தகம் நமக்கு அளிக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த உருது மொழிக் கடிதங்கள் கடந்த காலத்தின் சித்திரத்தை நமக்கு உள்ளபடியே அளிக்கிறது.

1818-ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலோ-மராட்டா போரின் தொடர்ந்த நடைபெற்றது தான் 1857 போர். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்திருந்தது. பல்வேறு குடிசைத் தொழில்களும், சிறு தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உள்ளாயினர். மறைமுக மதமாற்றம் மிக தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக கிறித்துவ மதத்திற்கு மாறுவதன் மூலம் பெரும் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரப்பப்பட்டது. கோயில் சார்ந்த குடியிருப்புகளும், தொழில்களும் பெரும் வன்முறைக்கு இலக்காயின. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்கள் பலரும் “சுபேதார்” என்ற பணிநிலைக்கு மேல் உயர்த்தப்படவில்லை. 1857 புரட்சியை முன்னின்று நடத்திய தலைவர்கள் இந்த அடக்குமுறையையும், சுரண்டலையும் கண்டு பொங்கினர். அவர்கள் நடத்திய போரின் நோக்கமே இந்த அடக்குமுறைகளை வேருடன் களைவது தான். மேலும், தனிமனித சுதந்திரம், வர்த்தகம் மற்றும் சொத்துரிமையை உறுதிசெய்வதும் அவர்களின் நோக்கமாக இருந்தது(ஆதாரம் : Azamgarh declaration, Delhi Gazette, 28th September 1857).

இந்தப் போரில் பல குறியீடுகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை குறித்து இதுவரை எந்த நூலும் பேசியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த நூல் அந்தக் குறியீடுகளை மிக விரிவாக பதிவுசெய்துள்ளது. இந்த ஒரு காரணத்தால் இந்நூல் இன்னும் முக்கியமானதாக ஆகிறது. இந்தப் போரில் “சிவப்புத் தாமரை”யும், சப்பாத்தியும் பெரும் பங்கு வகித்துள்ளன. போரில் பங்குபெற விரும்புபவர்கள் தாமரையின் ஒவ்வொரு இதழையும் பறித்துக் கொள்வர். தாமரையில் பொதுவாக 25 முதல் 30 இதழ்கள் இருக்கும். ஒரு ராணுவ அணியிலும் 25 முதல் 30 பேர். எத்தனை இதழ்கள் பறிக்கப்படுகின்றனவோ அத்தனை வீரர்கள் போரில் பங்கேற்க தயாராக உள்ளனர் என்பது தெரியவரும். மேலும் எந்த கிராமத்திற்கு சப்பாத்தி அனுப்பப்படுகிறதோ, அந்த கிராமத்தில் ராணுவ அணிகளுக்கு உணவு கிடைக்கும் என்பதும் தெரியவரும். இந்த குறியீடுகள் மூலம் போர் படைக்கு தேவையான ஆள்பலத்தை திரட்டவும், ஒவ்வொரு அணியும் தனக்கிடையே தகவலை பரிமாறிக் கொள்ள ஒரு அமைப்பையும் நிறுவப்பட்டிருந்தது.

நானா சாகேப்பின் தளபதியான தாத்தியா டோபே இந்த மொத்த செயல்பாடுகளின் பின்னணியில் இயங்கிய ஒரு முக்கியமான நபர். பகதூர் ஷா, பேகம் ஹஜ்ரத் மஹால், பெய்ஜா பாய் ஷிண்டே மற்றும் ராணி லக்‌ஷ்மிபாய்(ஜான்சி) போன்ற பிற தலைவர்களுடனும் நானா சாகேப் தொடர்பில் இருந்தார். இவர்கள் அனைவரும் போருக்கான திட்டத்தையும், ஆயுத்தப் பணிகளையும் ரகசியமாக வைத்துக் கொள்வதில் பெரும் முனைப்புடன் இருந்தனர். குறிப்பாக பெய்ஜா பாய் போன்ற தலைவர்கள் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்தாலும், அவர்கள் மறைமுகமாக இந்த போருக்கு உதவி புரிந்தனர். அங்கங்கு இருந்த நிலச்சுவான்தார்கள் மற்றும் மதுராவைச் சேர்ந்த சேத் லக்‌ஷிமிசந்த் போன்ற லேவாதேவிக்காரர்கள் போருக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்தனர்.

இந்தப் போரின் இறுதி நோக்கம் இது தான் : ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின்(EEIC) இந்திய வீரர்களை ஒருங்கிணைப்பது; அந்தப் படையை கொண்டு பிரிட்டிஷ் அரசின் ராணுவ தளங்களை தகர்த்து சென்று முன்னேறி, ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட இடங்களை(ஒரு நகரம் மற்றும் சில சுற்றுப்புற கிராமங்கள்) கைப்பற்றி அவற்றை பிரிட்டிஷ் ஆளுகையிலிருந்து விடுவிப்பது. விடுவிக்கப்பட்ட இந்த இடங்களிலிருந்து செயல்படும் ஒரு அரசாங்கத்தை நிறுவி, அதை தாங்கள் உருவாக்க நினைத்த “இந்திய அரசாங்கம்” ஒன்றாக செயல்படுத்திக் காட்டுவது தான் அவர்களின் லட்சியம். இந்தப் போர் 29 மார்ச், 1857 அன்று துவங்கியது. மங்கள் பாண்டேயின் புரட்சியுடன் இது தொடங்கியது. இதை தொடர்ந்த அடுத்த சில மாதங்களில், புரட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அதே வருடம் மே மாதம் 10-ஆம் தேதியன்று தில்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது. தில்லியை தொடர்ந்து கான்பூர், லக்னொ, குவாலியர் மற்றும் பாண்டா(Banda) ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதே வருடம் ஜூன் மாதம், 4, 5, மற்றும் 6 ஆகிய தேதிகளில், அசம்கர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. ஜூன் 11 அன்று, ஃபைசாபாத், தைராபாத்/பாராபங்கி, சலன், சுல்தான்பூர் மற்றும் கோண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதே சமயத்தில், மத்திய இந்தியா, ஜான்சி, நெளகான்(Naugaon), குருசராய்(Gurasarai), பண்பூர்(Banpur) மற்றும் ஓராய்(Orai) ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளுடன் போர் நடந்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 27 ஜூனன்று கான்பூர், ஜூலை 5 லக்னொ ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. பகதூர் ஷா ஜபரின்(Bahadur Shah Zafar) தலைமையில் 15 ஆகஸ்டு 1857-அன்று ஒரு இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மே 1858 வரை தொடர்ந்து செயல்பட்டது.

இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த போர் எப்படி தோல்வியில் முடிந்தது? இந்தப் போரில் இந்தியர்கள் ஈட்டிய வெற்றியில் கிராமங்களுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிப் படைக்குத் தேவையான உணவை இந்த கிராமங்கள் போதுமானளவு அளித்துவந்தன. இதை அறிந்த பிரிட்டிஷார் பல்வேறு கிராமங்களை தரைமட்டமாக்கினர். கிராமத்து மனிதர்களை அவர்கள் பூமியிலிருந்து விரட்டினர். குறிப்பாக தற்கால டாக்கா தொடங்கி பேஷாவர்(பாகிஸ்தான்) வரையிலான நீண்ட “நெடுஞ்சாலை”யில்(Grand Trunk Road) இருந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாயின. இதனால் இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடங்கள் அவர்களின் அதிகார எல்லையில் இருந்து நழுவின. இதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியப் படை மீதான தாக்குதலுக்கு வசதியாக தங்கள் படைகளை இந்த இடங்களில் நிறுவியது. தங்கள் படைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல இந்த பெரும் “நெடுஞ்சாலை” அவர்களுக்கு பெரிதும் உதவியது. தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து பிரிட்டிஷ் படை இந்தியப் படை மீது தாக்குதலை துவங்கியது. இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பிரிட்டிஷ் படை மிக மூர்க்கமான தாக்குதலை நடத்தியது. இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை எதிர்பார்த்திராத இந்தியப் படை பெரும் இழப்பை சந்தித்தது. கொல்கத்தா முதல் கான்பூர் வரை இடங்களை கைப்பற்றியபடி முன்னேறிய பிரிட்டிஷ் படையினரின் மூர்க்கமான தாக்குதலில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு முரண்நகை என்னவென்றால், பல லட்ச இந்தியர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமான இரு பிரிட்டிஷ் தளபதிகளின் பெயரைத் தான் அந்தமான் மற்றும் நிகோபரின் இரு தீவுகளுக்கு சூட்டியுள்ளோம். அவர்களின் பெயர் பிரிகேடியர் ஜெனரல் ஹவேலாக்(Brigadier General Havelock) மற்றும் லெப்டினண்ட் நீல்(Lieutenant Colonel Neill). ஆனால், போரை துவங்கும் முன் நம் வீரர்கள் கடந்த காலத்தை கொஞ்சம் கூர்மையாக அறிய முனைந்திருந்தால் இத்தகைய மானுட பேரழிப்பை தவிர்த்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் போரின் முடிவும் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். பிரிட்டிஷ் படையின் போர் வரலாற்றை அறிவதில் இன்னும் கொஞ்சம் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருந்தால் அவர்கள் ஏற்கனவே நிகழ்த்தியிருந்த மானுட பேரழிப்பையும், அதிலிருந்து தனக்கான பாடங்களையும் நம் வீரர்கள் கற்றிருந்திருக்கலாம். மேலும், தெமூர் லாங் போன்ற மூர்க்கமான இஸ்லாமிய மன்னர்களால் இந்தியா கடந்துவந்த கொடூரமான கடந்தகாலத்திலிருந்தும் அவர்கள் பாடம் கற்றிருக்கலாம். வரலாற்றை அறிவதில் நம் வீரர்கள் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருந்தால் பல்வேறு கிராமங்கள் கோரமான மானுட அழிவை சந்திக்காமல் இருந்திருக்கும். மேலும், வீரர்களுக்கும் தங்கள் எதிரியின் பலமும், அதற்கு தேவையான பயிற்சியும் கிடைத்திருக்கும்.

நவம்பர் 1857-ல் பிரிட்டிஷ் தாக்குதலில் சிதைந்த லக்னொ அரண்மனை
நவம்பர் 1857-ல் பிரிட்டிஷ் தாக்குதலில் சிதைந்த லக்னொ அரண்மனை

இந்தப் புத்தகத்திலிருந்து போரின் கடைசி கட்ட நிகழ்வுகள் குறித்த நல்ல வர்ணனை நமக்கு கிடைக்கிறது. பிரிட்டிஷாரின் நடவடிக்கையால் உணவு கிடைக்காமல் பசியால் வருந்திய நம் வீரர்களிடமிருந்து மிக எளிதாக டெல்லி கைப்பற்றப்படுகிறது. இதனால் தாபே கல்பி-யில்(Kalpi) இரண்டாவது தலைமையகத்தை அமைக்கிறார். தாபேயின் இந்த முயற்சிக்கு பெய்ஜா பாய் ஷிண்டே மறைமுகமாக அனைத்து வித உதவிகளையும் புரிகிறார். போர் தளவாடங்களை தயாரிப்பதிலிருந்து, அவர்கள் போக்குவரத்துக்கு தேவையான அனைத்தையும் ஷிண்டே அளித்தார். அதுவரை தங்கள் வழியிலிருந்த கிராமங்களை மட்டும் நம்பியிருந்த இந்திய வீரர்களுக்கு இது பேருதவியாக இருந்தது. ஷிண்டேயின் இந்த உதவியால் தாபே நவம்பர்-டிசம்பர்(1857) மாதங்களில் மிகத் திறமையாக போரிட்டு கான்பூரை மீண்டும் கைப்பற்றி லக்னொவையும் தனது கட்டுபாட்டில் கொண்டுவந்தார். லக்னொவில் பதுங்கியிருந்த நானா சாகேப் போன்றவர்களுக்கு இது பெரும் ஆறுதலை அளித்தது. மேலும் இந்த காலகட்டத்தில் தாபேயின் பிற படையெடுப்புகளும் முக்கியமானவை. குறிப்பாக, ஹூக் ரோஸ்டமிருந்து(Hugh Rose) ராணி லக்‌ஷ்மி பாய் அவர்களை காப்பாற்றியது மற்றும் சர்காரி மீதான போர். மேலும், தாபே குவாலியரில் இருந்த சிந்தியா அரச வீரர்களையும் ஒருங்கிணைத்தார். சிந்தியா வம்சம் இந்தப் போரில் பங்குபெறததால் இந்தப் போர் தோல்வியடைந்தது என்ற பொய்யான கருத்து இந்த தகவல் மூலம் உடைகிறது.

இந்தப் புத்தகத்தில் இருந்து நமக்கு பின்வரும் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன :

– போரில் மனிதர்களை தங்கள் கவசமாக பிரிட்டிஷ் உபயோகப்படுத்தியது குறித்த தகவல்
– பிரிட்டிஷ், ஸ்காட்லாந்து மற்றும் ஐரிஷ் ராணுவ வீரர்கள் நடத்திய ரத்தக் கறை மிகுந்த மானுடப் படுகொலைகள் குறித்த தகவல்
– போர் தந்திரங்களை வகுக்குவும், படைகளின் போக்குவரத்துக்கு உதவிய நில வரைபடங்கள்(maps)
– வேறு பல இடங்களுக்கு போரை விரிவாக்க தாபே வகுத்த திட்டங்களை பதிவு செய்யும் ஆவணங்கள்
– ராணி லக்‌ஷ்மிபாய் தப்பித்து சென்றதும், ஜான்சியில் பிரிட்டிஷ் ஆகிய கொலை வெறியாட்டம் குறித்த தகவல்கள்
– இந்தப் போரில் பங்கேற்ற பல முகமறியா மாவீரர்கள் குறித்த இதுவரை வெளியாகாத பல தகவல்கள்
– தாத்தியா டோபேயின் மரணம் குறித்தும், மரணத் தேதியை நிர்ணயம் செய்ய ஆசிரியர் கையாளும் புதிய அணுகுமுறை

மேலும் இந்தப் புத்தகம் இந்த போரின் உலகளாவிய தாக்கத்தை பற்றியும் பேசுகிறது. அமெரிக்க உள்நாட்டு போருக்கும் இந்த போருக்கும் இடையே சில தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. ஆனால் இன்னொரு வகையில், புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை வாசிக்கும் போது, நூலாசிரியருக்கு இந்தியாவின் பிரபல வரலாற்றாய்வாளர்கள் ஒரு சிலர் மீது கசப்பு இருப்பதை உணரமுடிகிறது. அந்தப் பிரபலங்களின் கூற்றை பொய்யென நிறுவும் முயற்சியில் சில சமயம் தனது வெறுப்பையும் வெளிப்படுத்துவதாக தோன்றுகிறார். உதாரணமாக பக்கம் 156 வரும் ஒரு வரி :

“For R.C. Majumdar who for some is India’s ‘greatest historian’, Bahadur Shah was a ‘dotard’, a senile old man. Majumdar was obviously not very impressed with Bahadur Shah, who ‘dared’ to rise against the English, when he was supposed to be nothing more than a ‘puppet in their hands’. ”

இத்தகைய வெறுப்பை தாத்தியா டோபேயின் வம்சாவழியில் வந்த ஒருவரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய ஆபாரமான உழைப்பால் தூய வரலாற்றுநோக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூலாசிரியர் சில இடங்களில் உணர்ச்சிவசப்படுவதாக தோன்றுகிறது. இது அவரது வரலாற்றுப் பார்வையில் இடறல்களாக முன்வைக்கப்படலாம். ஆகையால் இந்தப் புத்தகத்தின் வாசகன் இதை வெறும் ”நாயக வழிபாடு” செய்யும் நூலாக இதைக் கருத இடம் தருகிறது. ஒரு வரலாற்றுப் பாடப்புத்தகமாக வைக்க தகுதியான இந்நூல் இதே காரணங்களுக்காக தனது தகுதியை இழந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து பார்க்கும் போது, இந்தப் புத்தகம் 1857-ல் நடந்த போர் குறித்து நமக்கு பல புதிய தகவல்களை தருகிறது. இந்தப் போர் குறித்த பல நூல்கள் வெளியாகியிருந்தாலும், இதுபோன்ற தரம் வேறு எந்தப் புத்தகத்திலும் இல்லை. வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய நூல் இது. இந்தியாவின் முதல் சுதந்திர போர் குறித்த வரலாற்றை பல்வேறு கோணங்களிலிருந்து அணுகி அதை முழுமையாக பதிவு செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன. இந்நூல் அந்த முயற்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

(முற்றும்)

குறிப்பு : கர்மாசுரா இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். இவரது பிற கட்டுரைகளை http://centreright.in என்ற தளத்தில் படிக்கலாம்.