20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 15

Tachisme
(1940s to 1950s)
அரூப வெளிப்பாட்டில்
வண்ணப் புள்ளிகளும், கறைகளும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அதுவரை உலக அரங்கில் கலைகளின் மையமாக விளங்கிய பாரிஸ் இறங்குமுகம் காணத் துவங்கியது. அமெரிக்கத் தலைநகர் நியூயார்க் கலைகளின் மையமாக செயற்படத் தொடங்கியது. வண்ணங்களை முதன்மையாகக் கொண்ட அரூப ஓவியங்கள் பெருமளவில் கலை ஆர்வலர்களின் ஈர்ப்புக்குளாயின.

அப்போது பாரிஸ் நகரில் தோன்றிய ஓவிய இயக்கம்தான் ‘டாஷிசிம்’ (Tachisme). பிரான்ஸ் நாட்டுக் கலை விமர்சகர் ‘சார்ல்ஸ் எஸ்டியென்’ (Charles Estienne) இவ்வித ஓவியங்களைப் பற்றியும், அவை வண்ணங்களைக் கித்தான் பரப்பில் தெளித்தும், தூவியும் படைக்கப்படுவதையும் குறிப்பிட ‘டாஷ்’ (Tache) என்னும் சொல்லைப் பயன் படுத்தினார். இந்தப் பாணிக்கு ‘அப்ஸ்ட்ராக்குயோன் லிரிக்'(Abstraction Lyrique), ‘லார்ட் இன்ஃபார்மல்’ (L`Art Informal) என்றும் கூடப் பெயர்கள் உண்டு.

ஓவியர்கள் கித்தான் பரப்பில் பசைகலந்த மாவைப் பூசி ஒழுங்கற்ற மேடு பள்ளங்களை உண்டாக்கி அதன்மீது தன்னிச்சையாகவும் விரைவாகவும் தூரிகையை வீசி, அழுத்தமும் திடமும் கொண்ட கோடுகளைத் தீட்டியும், வண்ணங்களை நேரிடையாக கித்தானில் வண்ணக் குழாயிலிருந்து பிதுக்கியும், எழுத்தைப்போன்ற வரிவடிவங்களை உண்டாக்கியும் ஓவியங்களைப் படைத்தனர்.

ஓவியர் ‘ஜார்ஜ் மாத்யூ’ (Georges Mathieu) தனது படைப்புகளில் இவ்வித உத்தியைக் கையாண்டு வேகம் மிகுந்த விதத்தில் குறுகிய நேரத்தில் ஓவியங் களைப் படைத்தார். பொது இடங்களில் இவ்வித ஓவியங்களைப் பார்வையாளர் முன்னிலையில் ஒரு நிகழ்வுபோல தீட்டிக் காட்டினார். 1959 இல் வியன்னா நகரின் ஆட்டிறைச்சி அங்காடியில் பார்வையாளர் முன்னிலையில் அளவில் பெரிய கித்தான் பரப்பில் வெறும் 40 நிமிடங்களில் ஓவியத்தைத் தீட்டி முடித்தார். ஓவியர் ‘ழான் ஃபோட்ரியேர்’ (Jean Fautrier) ‘ஹோஸ்டாஜெஸ்’ (Hostages) என்னும் தலைப்பிட்ட தொடர் ஓவியங்களில் 2ஆம் உலகப்போரில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப் பட்டதைப் பதிவு செய்தார். 1932 இல் பாரிஸ் நகரம் வந்த ஜெர்மன் ஓவியர் ‘வோல்ஸ்’ (Wols) முடிச்சும் சிக்கலும் கொண்ட நூலிழைகளை வண்ணங்களில் தோய்த்து, கித்தான் பரப்பில் ஒட்டி ஓவியங்களைப் படைத்தார். இவ்வித உடன் நிகழும் ஓவியங்களில் அப்போது சமூகத்தில் நிலவிய பரபரப்பையும், குழப்பத்தையும் காணமுடிகிறது. ஓவியனுக்குள் ஓடிய சிந்தனைக் குழப்பமும் அவற்றில் வெளிப்பட்டது.

‘கோப்ரா’ (Cobra) என்று அழைக்கப்பட்ட குழுவினரின் படைப்புகளும், ‘கடாய்’ (Gutai-Japan) குழுவினரின் படைப்புகளும் இவ்வகையைச் சார்ந்தவையே. இந்த ஓவிய உத்தியை ஐரோப்பிய அமெரிக்க அரூபபாணி வெளிப்பாட்டிற்கு (Abstract Expressionism) இணையானதாக வைத்துக் கலை வல்லுனர்கள் பேசுகிறார்கள்.

LETTERISM

1946 இல் இஸிடோர் இசோ (Isidore Isow) என்பவரின் சிந்தனையின் பயனாக பாரிஸ் நகரை களமாகக் கொண்டு மொழியின் வரிவடிவம் என்பதை கருப்பொருளாக எடுத்துக் கொண்டு அதில் பல்வேறு சோதனை உத்திகளைக் கையாண்ட ஒரு இயக்கம் உருவெடுத்தது. இவர் ருமேனியா நாட்டவர். எனினும் பாரிஸில் வாழ்ந்த ஃப்ரென்ச் மொழிக் கவிஞர். மொழியின் வரிவடிவங்கள், எண்கள், கிழக்கு நாடுகளைச் சார்ந்த எழுத்து வடிவங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஓவியத்திலும், கவிதையிலும் எழுத்துக்களின் இசையொன்றை வெளிக்கொணர அவர் பயன் படுத்தியதுதான் லெட்டரிஸம் (Letterism) என்னும் உத்தி. இந்த முயற்சி ஃப்ரென்ச் மொழிக் கவிஞர் போடொலெய்ர் (Baudelaire) தமது கவிதைப் படைப்பில் பயன்படுத்தியதிலிருந்து தொடங்கியது. நீண்ட விவரணைகளை அவர் தமது கவிதைகளில் வெகுவாகக் குறுக்கியிருந்தார். பின்னர் கவிஞர் ரிம்பார்டு (Rimbard) அந்த உத்தியிருந்து நகர்ந்து கவிதைகளை வெறும் எழுத்தும் வரியுமாக்கினார். கவிஞர் மல்லார்ம் (Mallarme) சொற்களை அவற்றின் பொருள் நீக்கிய இடை வெளிகள் கொண்ட வெறும் ஓசையாக்கினார். ‘தாதா’ இயக்கமோ சொல்லை முற்றிலுமாக அழித்தது. இஸிடோர் இசோ அங்கிருந்து ஒரு புதிய தொடக்கமாக ‘லெட்டரிஸம்’ உத்தியை அறிமுகம் செய்தார்.

‘தாதா’ இயக்கம் கலையை செதுக்கி வெறும் சொல்லாக்கியது. ஆனால் ‘லெட்டரிஸ’மோ அதை வரிவடிவமாக மீட்டெடுக்கத் தோன்றியது. அதன் காரணமாகவே இயக்கத்துக்கு இப்பெயர் என்பது இஸிடோர் இசோ வின் விளக்கமாக இருந்தது. ‘தாதா’ இயக்கம் கலையை அறிவுக்குப் பொருத்தமற்ற தோற்றமாக மக்களுக்கு மாற்றிக் கொடுத்தது. ஆனால், ‘லெட்டரிஸம்’ அதை எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்லும் வழியைத் தேடியது. இக்கலை உத்தியின் எளிமையான தோற்றம் என்பது அரூபமாகவே இருந்தது என்றபோதும் ஒரு குறிக்கோளின்றி அலைந்து திரியும் ஸர்ரியலிஸ பாணியின் எதிர் வழியாகவே அது பயணித்தது. இரு இயக்கங்களும் ‘தாதா’ இயக்கத்திலிருந்துதான் கிளைத்தன என்பதில் ஐயம் ஏதுமில்லை.

எந்தக் கலையும் இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, இணைத்தல் அல்லது கூட்டுதல்; மற்றது பிரித்தல் அல்லது கழித்தல். இதில் இணைந்த கலைஞர்கள் படைப்பை எளிமைப் படுத்துதல் என்னும் வகையில் இசை, ஓவியம், சிற்பம் போன்றவற்றில் புதிய உத்திகளைப் புகுத்தி நவீனப் படைப்பு களை அறிமுகப்படுத்தினர். கவிதையில் இடைவெளிகளைப் புகுத்தி வரிவடிவங்களை நீக்கி புதிய வடிவம் கொண்ட கவிதை படைப்பது என்று இப்பாணி வளர்ந்தது. அக்கவிதைகள் குழுவாகப் பாடப்பட்டன (Choral Groups). பின்னர், இப்படைப்புதளம் திரைப்படத் துறையிலும் நுழைந்தது. இஸிடோர் இசோவின் ‘வெனம் அண்டு எடர்னிடி’ (Venom and Eternity) என்னும் திரைப்படம் 1952 இல் கேன்ஸ் விழா (Cannes Festival என்பது ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நிகழும் பன்னாட்டுத் திரைப்பட விழா) இல் திரையிடப்பட்டு புதுமையான அணுகுதலுக்கான விருதையும் பெற்றது. இப்பாணியைப் பின்பற்றின குழுவின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு புதிய குழுக்கள் தம்மிச்சையாக செயற்படத் தொடங்கின. அவை பின் வந்த ஆண்டுகளில் காட்சி சார்ந்த படைப்புகளை உருவாக்கின. ‘அல்ட்ரா லெட்டரிஸ்ட்ஸ்’ (Ulatra Letterists) போன்ற சிதறிப்போன, அல்லது ஒதுக்கப்பட்ட, முனை உடைந்த குழுக்கள் அரசியல் சார்ந்த குழுக்களாக முதலில் 1952 இல் ‘த லெட்டரிஸ்ட் இன்டெர்நேஷனல்’ (‘The Letterist International) என்றும், பின்னர் (1957-72) ‘சிட்சுவேஷனிஸம்’ (Situationism) என்றும் தோற்றம் கொண்டன.
இவ்வியக்கம் இன்றளவும் நுணுக்கம் கூடிய ‘ஹைர்ஃபர் கிராஃபிகல்’ (Hypergraphical) ஓவியங்களைப் படைப்பதில் இயங்கிவருகிறது.

The Situationist International
பன்னாட்டு சூழ்நிலைவாதிகள்

பன்னாட்டு சூழ்நிலைவாதம் என்னும் சிந்தனை 1956 இல் “விடுத்லைக் கலைஞர்கள்” என்னும் பெயரில் இத்தாலியிலுள்ள ஆல்பா (Alba) நகரில் கூடிய விழாவில் (First World Congress Of Liberated Artists) தோற்றம் கண்டது. அது ஐம்பதுகளில் குழப்பமான கொள்கைகளுடன் இயங்கிய பல் வேறு குழுக்களிலிருந்து பங்கேற்ற கலைஞர்களின் கூட்டம். அதில் ‘கோப்ரா’ ( ‘COBRA’ ஸர்ரியலிஸ சிந்தனைக்கு எதிரான பெல்ஜியநாட்டு குழு) ‘பஹஸ்’ சிந்தனைக்கு எதிரான ‘அன் ஏன்டி-மாக்ஸ் பில் குழு’ (An anty-max bill Group) போன்றவை அடங்கி இருந்தன. அதில் ‘லெட்டரிஸ்ட் இன்டெர்நேஷனல்’ (Letterist International) சார்ந்த கலைஞர்களும் இருந்தனர்.

இடைவிடாத மாற்றங்களும், புரட்சி சார்ந்த புதுமைகளும் நிகழும் உலகத்தைக் காட்சிப்படுத்தும் விதமாக சிந்தித்த கூட்டம் அதற்கு இருவிதக் கருவிகளை முன்வைத்தது. ஒன்று, பழைய கலை அம்சம் கொண்ட உத்தியைத் திருடுவது, மற்றது, நகரச் சூழலின் மயக்க நிலையைக் கலைஞன் அணுகிப் புரிந்து கொள்வது. அனால், அறுபதுகளில் அவர்களது சிந்தனை நிறம் மங்கி ஒரு குழப்பநிலையை அடைந்து விட்டது. அதன் விளைவாகத் தோன்றிய கருத்து வேறுபாடுகள் இயக்கத்தில் பிளவுகளைத் தோற்றுவித்தது. குழுவினை வழி நடத்துபவராகக் கருதப்பட்ட கை டூபோர்டு (Guy Dubord) ஐ சுற்றி ஒரு சிறு கூட்டம் இயங்கியதுதான் அதன் உயிர்ப்பாக இருந்தது. எப்போதாவது மெழுகில் படி எடுக்கப்பட்ட கைப்பிரதிகளின் நடமாட்டம் குழு இயங்குவதான பிரமையைத் தோற்றுவித்தது.

1966 இல் தமது சக மாணவரிடம் கொண்ட சலிப்பால் ஐவரைக் கொண்ட மாணவர் குழு உறுப்பினர் ‘ஸ்ர்ராஸ்ப்ரூக்’ (Strasbourg) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் அரசாங்க அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினரானார்கள். அங்கு நிகழ்ந்த, பின்பற்றப்பட்ட நடைமுறைகளைக் கண்டு உள்ளம் வெதும்பி ‘சிட்சுவேஷனிஸ்ட் இன்டெர்நேஷனல்” இயக்கத்துடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டனர். தங்களைச் சுற்றிக் காணப்பட்ட புதுமைகளற்ற அற்பமான சிந்தனைத் தேக்கத்தை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று அதில் வினவியிருந்தனர். பலமுறை கடிதத் தொடர்பு கொண்டபின், இயக்கத்திடமிருந்து வந்த கடிதத்தில் பல்கலைக் கழகத்தில் உள்ள உண்மை நிலையைப்பற்றி வெளிப் படையாக விவாதித்துக் கட்டுரை ஒன்றை எழுதுமாறு யோசனை கூறப்பட்டிருந்தது. மாணவர்களால் அதைச் செயலாற்ற இயலாததால் SI குழுவைச் சேர்ந்த முஸ்டபா கயாடி (Mustapha Khayati) என்பவரே ‘மாணவப் பருவத்தில் ஏழ்மை’ (“On Poverty Of the Student Life”) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். கடுஞ் சொற்களாலான, அங்கதம் கூடிய அந்த ஆய்வுக் கட்டுரை மாணவரிடையே நிலவிய வறுமை, கோட்பாடுகள், சூழல் சார்ந்த சிந்தனைகள் போன்றவற்றைப் பல்கலைக் கழகம் எப்படிப் புறக்கணிக்கிறது என்பதைப் பற்றி விரிவாகப் பேசியது. இருபத்து எட்டுப் பக்கங்களைக் கொண்ட நீண்ட கட்டுரை அது. அங்கு பணி செய்த ஆசிரியர்கள், அரசு, சர்ச் என்று அனைவரையும் சாடுவதாக அது இருந்தது. அதன் பயனாக, பல்கலைக்கழகம் அந்த மாணவர்களை உறுப்பினர் பொறுப்பினின்று உடனடியாக நீக்கியது.

இந்நிகழ்வின் தொடர் அலைகளாய் ஆங்காங்கே நிகழ்ந்த தாக்கங்களின் பலனாக, 1968 இல் பாரிஸில் வேலை நிறுத்தத்தில் வந்து முடிந்தது. மாணவர்-தொழிலாளர் இணைந்து மேற்கொண்ட, பல நாட்கள் தொடர்ந்த கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டமான அது இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரசு எதிர்கொண்ட மிகச்சிக்கலான பிரச்சனையாக இன்றளவும் கருதப்படுகிறது.

அப்போதிலிருந்து ஒரு புதிய் சிந்தனை பாரிஸ் நகரில் எழுந்தது. அமெரிக்காவில் தோன்றிப் பரவிய ‘பங்க்’ (Punk) சிந்தனாவாதிகளுடன் IS இயக்கதினருக்கு ஏற்பட்ட தொடர்பால் எதிர்கலாசார செயற்பாடு தீவிரமடைந்தது. இதில் என்ன வினோதமென்றால், இந்த இயக்க உறுப்பினர் பெரும்பொழுது ஏதேனும் ஒரு மதுக்கடையில் அமர்ந்தவாறு தங்களைச் சுற்றி நிகழ்ந்தவற்றை கவனமாகப் பார்த்தவண்ணம் பொழுதைக் கழித்தனர்.

பின்வந்த ஆண்டுகளில் அவர்களின் சிந்தனையை வெளிப்படுத்திய சுற்றறிக்கைகளும், அவர்கள் செயற்பட்ட நிகழ்வுகளின் மீள் காட்சிகளும் (Retrospectives) பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு இன்றையத் தலை முறையினருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இயக்கத்துக்கான வலைத் தளம் ஒன்றும் இயங்குகிறது.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01a-tachisme01b-tachisme01c-tachisme01d-tachisme02a-letterism02b-letterism02c-isidore-isou-letterism02d-letterism03a-si03b-guy-debord-1931-199403c-si-movement-conference-gothenberg03d-si
[/DDET]
(வளரும்)