மேலாளன் என்பான்…

நாகேஷும், சோவும், ஒரு குமாஸ்தா வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார்கள். அங்கு, அவர்களுக்குப் போட்டியாக நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது ஏமாற்றி அனுப்பிவிட்டு, அந்த வேலையை வாங்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள்தான் நேர்முகத் தேர்வு நடத்துகிறார்கள் என்பது போல் பாவனை செய்து, ஒவ்வொரு போட்டியாளரையும் கண்டபடி கேள்வி கேட்டுத் துரத்துகிறார்கள். இறுதியில் ஒரு மத்திய வயது ஆள் வருகிறார்.

நாகேஷ், வழக்கம் போல் டான் டான் என்று கேள்விகளை வீசுகிறார்.

”டைப்பிங் தெரியுமா? – நாகேஷ்

“தெரியாது” இது வந்தவர்.

“ஷார்ட் ஹேண்ட்?”

“தெரியாது”

இதுபோலவே, பல கேள்விகள்.. எல்லாவற்றுக்கும் ஒரே பதில். தெரியாது. இறுதியில், நாகேஷ், வெறுத்துப் போய், “ஒண்ணுமே தெரியாதா?” என்று கேட்க, சோ இடைவெட்டி, “அப்ப நீர் மானேஜரா இருக்கத்தான் லாயக்கு” என்பார். அதற்கு அந்த நபர்,”கரெக்ட், நாந்தான் இங்கே மானேஜர்” என்பார்.

மேலாளர்களைப் பற்றி இப்படி பல ஜோக்குகள் உண்டு. இன்றைய தொழில்நுட்பப் பொருளாதார காலத்திலும் மேலாளர்கள் அவர்களின் கீழ் வேலை செய்பவர்களால் கேலிசெய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக, பொறியியல் பட்டதாரிகளுக்கு, மேலாளர்கள், மேலாண் பட்டதாரிகள் என்றாலே வெறுப்பு. சென்னைத் தமிழில் சொன்னால், “காண்டு”. தாம் கஷ்டப்பட்டுச் செய்யும் வேலைக்கான அங்கீகாரத்தை, நாலு பவர் பாய்ண்ட் சிலைட் வடிவமைத்துத் திருடிச் செல்கிறார்கள் என்று சொல்வார்கள். கொஞ்சம் உண்மையும்கூட.

மனித வரலாற்றிலேயே, மிக விரைவாக நிறுவனங்களை உருவாக்கியது மேலாண்மைதான் என்கிறார் பீட்டர் ட்ரக்கர். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள், அரசுகளின் படைகளே. நாட்டிற்காக உயிரை விடவும், வெற்றி பெற்றால், கொஞ்சம் கொள்ளையடித்துக் கொள்ளவும் அனுமதி பெற்ற தனி நபர்கள் அடங்கிய மாபெரும் குழு. பெரும்பாலும், உடல் பலத்தாலும், ஊழலாலும், அரச பக்தியாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒன்று. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்களும், போர்த் தந்திரங்கள், நாட்டை நிர்வகிப்பது போன்றவையே. Sun Tzu வின் போர்க்கலை, வள்ளுவரின் திருக்குறள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியாவில்லியின் இளவரசன், ஆடம் ஸ்மித்தின் “wealth of Nations” போன்றவை – இதில் ஆடம் ஸ்மித் தான், முதன் முதலில் நாடுகளின் பொருளாதாரம் பற்றிப் பெருமளவு பேசினார். அதுதான் முதலில், தொழிலாளரின் திறன் பெருக்கி, உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று சொன்னது. ஆனாலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பெரும் நிறுவனங்கள் உருவாகவேயில்லை. சிதறிக்கிடந்த உற்பத்தியாளர்களும், அவர்களின் உபரியை வாங்கி விற்ற வியாபாரிகளுமாகத்தான் அன்றைய பொருளாதாரம் இருந்தது.

முதலாம் உலகப் போர் காலத்தில், மேலாண்மை என்னும் கோட்பாடு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. 1911ல், டெய்லரின் “அறிவியல் மேலாண் கொள்கைகள்” எனும் மிக முக்கியமான புத்தகம் வந்தது. ஒவ்வொரு வேலையையும் சிறு சிறு பாகங்களாகப் பிரித்து, அதற்குத் தேவையான நேரம், உழைப்பு முதலியவை கணிக்கப்பட்டு, வேலையை மேலாண்மை செய்யும் ஒரு நோக்கு தொடங்கியது. 1920களில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மேலாண்மைக் கல்வி துவங்கி, உலகுக்கு மேலாண் பட்டதாரிகளை உருவாக்கத் தொடங்கியது. மு.க பாஷையில் சொல்லப் போனால், “MBA என்னும் மூன்றெழுத்து”.

வேளாண்மையில் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் – பயிர்களுக்கு இடையே உள்ள இடைவெளி. எடுத்துக்காட்டாக, ஒரு நெற்பயிரின் முழு வளர்ச்சியையும் தடையின்றி பெற்று, மிக அதிகமான விளைச்சலைக் கொடுக்க அதற்கு 60 செ.மி X 60 செ.மி இடம் தேவைப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஏக்கரில் கிட்டத்தட்ட 11000 நெற் பயிர்கள். இதே சமயம் 15 செ.மீ X 15 செ.மீ என்ற இடவிகிதத்தில் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் 182000 செடிகள் வரை நட முடியும். இந்த இரண்டு முறைகளில் எது ஏக்கருக்கு அதிக மகசூல் கொடுக்கும் என்று பார்த்தால், இரண்டாவதாகத்தான் இருக்கும். 15 செ.மீ தாண்டி, வளரும் நெற்பயிர் கொடுக்கும் மகசூலைவிட, தான் எடுத்துக் கொள்ளும் இடமும், சக்தியும் அதிகம். இந்த இடைவெளிக் கணக்கைச் சரியாகத் திட்டமிட்டு, மிக அதிகப் பயனை ஈட்டுவதே மேலாண்மை.

நெற்பயிர்கள் ஆறறிவில்லாதவை. மனிதப் பயிர்கள் பல்வேறு குணங்களில், புத்திசாலித்தனத்தில், ஆளுமைகளில் வருபவை. நிறுவனத்தின் தேவைக்கேற்ப தம்மிடம் உள்ள வள ஆதாரங்களாகிய மனிதர்களை, அவர்களின் திறனுக்கேற்ப அவர்களை ஒரு குழுவாக அமைத்து, அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து, மிக விரைவாக, மிகக் குறைவான பொருள் விரயத்தில், குழுவின் இலக்கை எட்டச் செய்பவரே மேலாளர். இப்படி இயங்கும் குழுவின் செயல்கள் ஒரு அழகான ஒத்திசைவாக இருக்கும். எடுத்துக் காட்டாகக், குழுவாகப் பறக்கும் பறவைக் கூட்டம், ஒரு தனித்துவமான வடிவில் பறப்பதைக் கவனித்திருக்கலாம். அவை பறக்கும் முறையும், ஒரு பறவைக்கும் இன்னொரு பறவைக்கும் இருக்கும் இடைவெளியும் மிக இயல்பான ஒரு இயற்கை அமைப்பு. அம்முறையில் எல்லாப் பறவைகளும், மிகக் குறைந்த சக்தியில், மிக அதிக தூரம் பறக்கின்றன என்று அறிவியலர் கூறுகின்றனர். ஒரு இலக்கை எட்ட, மிகக் குறைந்த நேரம் மற்றும் மிகக் குறைந்த சக்தி விரயம் என்பதே மேலாண்மையின் அடிப்படை என்று கூடச் சொல்லலாம்.

சிம்ஃபனி எழுதுவது ஒரு திறன். அதற்கேற்ப, அனைத்து கலைஞர்களையும் அழைத்து, பயிற்சி கொடுத்து, அவையில் அனைவரையும் எழுதிய எழுதியவாறே இசைக்க வைத்து, சிம்ஃபனியின் பேரனுபவத்தை உருவாக்குவது இன்னொரு திறன். அந்த இசை நடத்துனர் போன்றவர் மேலாளர். ஒரு நிறுவனம் செல்ல வேண்டிய திசையையும், அதற்கான அடிப்படை வளங்களையும் தருபவர் தலைவர். தன்னிடம் உள்ள குழுவை ஒரு ஒத்திசைவான குழுவாக மாற்றி, தன்னிடம் உள்ள வளங்களை உபயோகித்து, தலைமை சொல்லும் திசையில் பயணிக்க வைத்து, இலக்குகளை மிகக் குறைந்த உழைப்பில், மிகக் குறுகிய காலத்தில் எட்டச் செய்பவர் மேலாளர்.

இது எளிதான காரியம் அல்ல. பல்வேறு மனிதர்களின் புத்திசாலித்தனங்களும், செயல் திறனும் (efficiency), ஆளுமை குணங்களும் சேர்ந்தியங்கும்போது, ஒரு கலைடாஸ்கோப்பில், கணந்தோறும் மாறும் வடிவம் போல, குழுவின் திறனும் மாறிக் கொண்டே இருக்கும். ஓவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் இடம், பொருள், குழுவில் அவர் பங்கு இவற்றை சரியான அளவில் திட்டமிடுதல் மிக முக்கியம்.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறந்த மென்பொறியாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மிக வேகமாகப் ப்ரோகிராம்கள் எழுதக்கூடியவர். ஆனால், குழுவோடு சேர்ந்து வேலை செய்யும் திறன் குறைந்தவர். அவர் ஒரு மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தில் இருந்தால், அவரின் மென்பொருள் செயல் திறன் மிக முக்கியமான பொருள். அவரின் மேலாளருக்கு, அவரது செயல் திறன் மிக முக்கியம். அவருக்கு, குழுவோடு சேர்ந்து செய்யும் வேலைகள் கொடுக்காமல், மென்பொருள் ப்ரோகிராம்களை மட்டும் எழுதவைத்து, அவரது செயல் திறனை, நிறுவனத்துக்கு நன்மை தர உபயோகிப்பார் அவர் மேலாளர்.

அதே மென்பொறியாளர், ஒரு சோப்புக் கம்பெனியில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கே, மென்பொருள் பிரிவு, சோப்புக் கம்பெனியின் வியாபாரத்துக்கு உதவும் ஒரு சேவைப் பிரிவு மட்டுமே. அங்கே, சோப்பு விற்கும் குழுவின் பிரச்சினைகளை உணர்ந்து சேவை செய்யும் மனப்பான்மை மிக முக்கியம். மென்பொறியாளரின் மேலாளர், பொறியாளருக்கு குழுவோடு சேர்ந்து வேலை செய்யும் தேவையை எடுத்துரைப்பார். ஒரு வேளை, பொறியாளர், தம் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவரை அனுப்பி விட்டு, சேவை மனப்பான்மை கொண்ட ஒரு மென்பொறியாளரை, கொஞ்சம் மென்பொருள் திறன் குறைவாக இருந்தாலும் நியமிப்பார். இந்த இடத்தில், மிகச் சிறந்த மென்பொருள் எழுதும் திறன் மிக முக்கியமல்ல. நிறுவனத்தின் மென்பொருள் பிரச்சினைகளைத் தீர்த்துச் சேவை செய்யும் திறனே முக்கியம்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என்னும் வள்ளுவர் வாக்கு ஒரு மேலாளனுக்கு மிக முக்கியம்.

தன் மேலாளனுக்கு வேலை தெரியாது என்று புறம் கூறுவர் சிலர். மேலாளனைவிட தாம் அதிகத் திறன் பெற்றவர் என்று பீற்றிக் கொள்வர் சிலர். சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரளவுக்கு, பேட்டிங் திறனும், ஸ்டைலும் அற்றவர் தோனி. ஆனால், தோனிக்கு, சச்சின் டெண்டுல்கரோடு, இன்னும் ஒன்பது பேரைச் சேர்த்து, அதை ஒரு வெல்லும் அணியாக மாற்றும் திறன் உண்டு என்பதை நாம் யாவரும் அறிவோம். சச்சினின் செயல் திறனை, அணிக்குத் தேவையான பயன் திறனாக மாற்றி, இலக்கை எட்டுபவர் தோனி. சச்சின், இந்திய அணியின் தலைவராக பெரும் தோல்வியடைந்தார் என்பது வரலாறு. அவர் தம் அணியை, மிகச் சிறந்த செயல்திறன் (efficiency) வேண்டும் என்று அணுகினார். ஏனெனில், அவர் உலகின் மிகச் சிறந்த செயல் திறன் கொண்ட கிரிக்கெட்டர். தோனி, அணி விளையாடும் சூழலுக்கேற்ற பயன் தரும் திறனை (effectiveness) பயன்படுத்தினார். ஏனெனில், அவர் அணியின் இலக்கை முழுமையாக உள்வாங்கிய மேலாளர்.

மேற்சொன்ன பத்தியைப் படிக்கும்போது, தோனி ஒரு தலைவரல்லவா, அவரை மேலாளர் என்று எப்படிச் சொல்ல முடியும் என்னும் கேள்வி எழும். உண்மை. மேலாளர் Vs தலைவர் என்றொரு வாதம் மேலாண் சிந்தனைகள் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. மேலாளர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தன் எல்லையை நன்றாக உணர்ந்து அதற்குள் தம் உழைப்பைச் செலுத்தி, இலக்குகளை எட்டுபவர் ஒரு வகை. அவர்கள் தம் பிரிவின் தேவைகளை, முன்னேற்றங்களை உணர்ந்து அதற்கேற்றார்போல், தம் குழுவின் செயல் திறனைக் கூர்படுத்தி, நிறுவனத்தின் இலக்கை எட்டுபவர். இன்னொருவகை, ஒரு அளவுக்கப்புறம், தன் பிரிவு தாண்டி, தன் நிறுவனத்தின் இலக்கையும் தாண்டி, நிறுவனம் இயங்கும் சூழலையும் அறிந்து கொண்டு, நிறுவனத்துக்குப் புதிய இலக்குகளை உருவாக்கி, அவற்றை வழி நடத்தும் திறன் கொண்ட மேலாளர்கள். இவர்கள் தலைவர்கள்! இவர்கள் ஒரு சிறுபான்மையினரே. அது மட்டுமல்ல, தன்னை விடத் திறமை கொண்டவர்கள் தம் கீழ் வேலை செய்யும் போது, பொதுவாகத் தலைவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை உணர்வு இருக்கும். எல்லா அங்கீகாரமும் அவருக்குப் போய்விடுமோ என்ற பயமும். இது சாதாரணமாக எல்லோருக்கும் உண்டாகும் எண்ணங்கள். அவற்றை ஒரு மனமுதிர்வுடன் எதிர் கொண்டு அதைத் தாண்டிவருபவர்களே மிகப் பெரும் தலைவர்கள். தோனி அவ்வகையிலான ஒரு பெரும் தலைவர். எல்லா மேலாளர்களும் தலைவர்களல்ல.. ஆனால், எல்லாத் தலைவர்களும் நல்ல மேலாளர்கள்!

பயன் திறன் (effectiveness) முக்கியமெனில், செயல் திறன் (efficiency) முக்கியமில்லையா என்றும் ஒரு கேள்வி எழலாம். எல்லொரும் குறைந்த உழைப்பில், 100 மீட்டர் தூரத்தை 20 விநாடிகளில் கடக்க முடியும் போது, எதற்காக உசைன் போல்ட், 9.59 வினாடிகளுள் ஓட அதிக சிரமம் எடுக்க வேண்டும்? அதற்கான செலவுகள், பயிற்சிகள் எல்லாம் வீண் என்று தோன்றலாம்.

கார்கள் உருவாக்கப் பட்ட காலங்களில், ஒரு கார் உருவாக்க, 12.5 மணி நேரம் தேவைப்பட்டது. ஒவ்வொரு காரையும் ஒரு குழு சேர்ந்து உருவாக்கும். இஞ்சின் செய்து, தகரங்களை வெட்டி, கியர் பாக்ஸ் பொருத்தி என்று எல்லா வேலைகளையும் ஒரே குழு செய்து வந்தது. அப்போது தனியே ஒரு ஆசாமி யோசித்து, அசெம்ப்ளி லைன் என்னும் ஒரு முறையை அமல் செய்தார். அது மெல்ல மெல்ல ஒட்டு மொத்த கார் தயாரிப்பு முறைகளுக்குள் புகுத்தப்பட்டு, இன்று மூன்று நிமிடத்துக்கு ஒரு கார் தயாரிக்கும் வேகத்தை எட்ட உதவியிருக்கிறது.

செயல் திறன் (efficiency) மனித சாத்தியங்களின் எல்லைகளை விஸ்தரிக்க உதவுகிறது. அது மெல்ல மெல்ல, சமுதாயக் கட்டமைப்பில் ஏற்கப்பட, மானிட சமுதாயம் முன்னேறுகிறது. ஜெயமோகன் தன் விதி சமைப்பவர்கள் கட்டுரையில் சொன்னது போல, படைப்பாளி ஒட்டு மொத்தக் கட்டமைப்பின் வளரும் நுனி. அவன் இன்றி கட்டமைப்புக்கு முன்னேற்றமில்லை. ஒரு நல்ல மேலாளன் அதை உணர்ந்தவனாக இருப்பான். அவன், செயல் திறனை, அவற்றின் சாதனைகளை மறுக்க மாட்டான். தக்க தருணத்தில், தான் மேலாண்மை செய்யும் கட்டமைப்பில் அதை இணைத்து, நிறுவனத்தின் இலக்கை முன்பை விட விரைவாக அடைய முயல்வான்..

(பின் குறிப்பு: தன் விதி சமைப்பவர்கள் கட்டுரையில் ஜெயமோகன், “ஆமடா, நீ வெறும் கூழாங்கல் தான்” என்று எழுதியிருந்தது ரொம்பத் துக்கமா இருந்தது. இப்படி, வெட்டியா ஒரு பொறப்பெடுத்துட்டமே என்று.. துன்பம் நேர்கையில் நீ தாளெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா என்று என் மனதுக்கு நானே பாடிக் கொண்டதன் விளைவு இக்கட்டுரை. பின்னே நாம பண்றதும் ஒரு கௌரதையான வேலதான்னு ஜஸ்டிஃபை பண்ணிக்க வேணாமா?)