மின் புத்தகப் புழுக்கள்

இப்படியா புரியாத தலைப்பில் கட்டுரை? புத்தகப் புழுக்களை நாம் அறிவோம். அதென்ன மின்? முன்னே சொல்வனத்தில் ‘ஒலி/ஒளி மயமான எதிர்காலம்’ என்ற கட்டுரையில் மின் புத்தகக் கருவிகள் பற்றி அலசினோம். இதைப் போன்ற கருவிகளில் மூழ்கியவர்கள் இவ்வகை புத்தகப் புழுக்கள் எனலாம். இவர்கள் இன்றைய சமூகத்தில் படாத பாடு படுகிறார்கள்.

முதலில், இன்னும் மின் புத்தகக் கருவிகள் தமிழில் படிக்கத் தோதாக வரவில்லை. முன்பு எழுதிய கட்டுரையில் எதிர்காலம் பற்றி சொன்ன ஜோஸியம் சற்று தாமதமாகத் தான் பலிக்கும் போலத் தோன்றுகிறது! கலர் கலராக பல சைஸ்களில் இந்தப் புத்தகக் கருவிகள் வரத் தொடங்கிவிட்டன. பள்ளி திறக்கு முன் புத்தக அட்டை விற்கும் வியாபாரம் போல பல வகை உபரி சமாச்சாரங்கள் வரத் தொடங்கி விட்டன. இன்றைய மின் புத்தகக் கருவிகள் மாதம் ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும் என்ற அளவுக்கு சமர்த்தாகி விட்டன.

இக்கட்டுரையில் விவாதிக்க இருக்கும் பெரும்பாலான சமூக ஆச்சரியங்கள் மேலை நாடுகளில் ஆங்கில மின் புத்தகங்கள் படிக்கும் புழுக்களின் அனுபவங்கள். இவை எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் (எப்பொழுது என்று மீண்டும் ஜோஸியம் சொல்லி மாட்டிக் கொள்ள விருப்பமில்லை) தமிழில் படிப்பவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் வரக்கூடும் என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு இப்பொழுதே சொல்லத் துணிந்து விட்டோம்!

இன்றைய மின் புத்தகக் கருவிகள் (2011)

இன்று பல அம்சங்களுடனும், பல சைஸ்களிலும் மின் புத்தகக் கருவிகள் வரத் தொடங்கி விட்டன. விலையும் சரியத் தொடங்கி விட்டது. முன்னே நாம் சொன்ன ஒரு ஜோஸியம் நிஜமாகி விட்டது. சில மின் புத்தகக் கருவிகளை $100 விட குறைவாக விற்கத் தொடங்கி விட்டார்கள். கருவிகள் பற்றி அலசு முன் எதை நாம் மின் புத்தகக் கருவி என்று சொல்ல வருகிறோம் என்பதைத் தெளிவாக்க வேண்டும். விடாப்பிடியாக ஐஃபோனில் மின் புத்தகங்களைப் படிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தடவித் தடவி எழுத்துக்களைப் பெரிதாக்கி ‘இதோ நானும் மின் புத்தகம் படிக்கிறேன்’ என்று பறை சாற்றும் இந்த வகையை நாம் மின் புத்தகக் கருவியாக சேர்க்க முடியாது. அதே போல, ஐபேட் (iPad) போன்ற கருவிகள் சிறிய கணினிகள். திரைத் தடவல் முறையில் இயங்கும் இது போன்ற கருவிகள் பல உள்ளன. இதில் மின் புத்தகங்கள் படிக்கலாம். ஆனால், இவை ஒரு நாளுக்கு மேல் தாங்காது – மின்னூட்டம் செய்ய வேண்டும். மேலும் நல்ல சூரிய வெளிச்சத்தில் படிக்க இயலாது. அதனால் இது போன்ற Tablet கணிணிகளையும் நாம் மின் புத்தகக் கருவிகளாக சேர்க்க முடியாது. நாம் ஒப்பிடவிருக்கும் அத்தனை மின் புத்தகக் கருவிகளிலும் இரண்டு அம்சங்கள் உண்டு:

1) E-Ink என்ற தொழில்நுட்பம் மூலம் வேலை செய்யும் சூரிய வெளிச்சத்தில் படிக்க வல்ல கருவிகள்

2) ஏராளமாக எழுத்துக்களை பெரிதுபடுத்தாமல் சாதாரண புத்தகப் படிப்பு அனுபவத்தை தர வேண்டும்.

கிண்டில் (Kindle), நுக் (Nook), சோனி (Sony), மற்றும் கோபோ (Kobo) இன்றைய முன்ணணி மின் புத்தகக் கருவிகள். பெரிய திரையுடைய கிண்டில் DX $300 -க்கும் மேலாக விலை. ஆறு அங்குல கிண்டில் 3 மற்றும் நுக், கோபோ எல்லாம் $140 க்கு விற்கின்றன. சோனி 7 அங்குல திரையுடன் விற்கும் மின் புத்தகக் கருவி சற்று விலை அதிகம் ($250). ஆனால், பல நிறங்களில் வருகிறது – பெண்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். மின் புத்தகக் கருவி உலகில் இரு கோஷ்டிகள் உள்ளன. ஒன்று, அமேஸானின் கிண்டில் கோஷ்டி. மற்றவர்கள் எல்லாம் இன்னொரு கோஷ்டி (எதிர்கட்சி?). நுகர்வோர் இந்த இரு கோஷ்டிக்கு பின்னால் உள்ள சூட்சுமங்களை அறிவது அவசியம். கிண்டில் MOBI என்ற வடிவூட்டத்தைப் (format) பயன்படுத்துகிறது. மற்றவர்கள் அடோபியின் ePub என்ற வடிவூட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் என்ன? வட அமெரிக்காவில் இது பெரிய விஷயம். இங்குள்ள நூலகங்கள் ePub வடிவூட்டத்தில் உறுப்பினர்களுக்கு மின் புத்தகங்களைக் கடனளிக்கிறது. உங்களிடம் கிண்டில் இருந்தால், நூலகத்திலிருந்து மின் புத்தகங்களை கடன் வாங்கிப் படிக்க முடியாது. அமேஸான் அதனுடைய MOBI வடிவமைப்பிலும் புத்தகங்களை வெளியிட நூலகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இன்னொரு விஷயம் சில சமயங்களில் முக்கியமாகிறது. கிண்டிலில் மெமரியை விரிவாக்க முடியாது. மற்ற பல புத்தகக் கருவிகளில் இது சாத்தியம். MP3 யில் இசை கேட்க சில மின் புத்தகக் கருவிகள் வழி செய்து அசடு வழியத்தான் செய்கிறது! ஜி.பி.எஸ்-ஸில் எவ்வளவு பேர் MP3 மூலம் இசை கேட்கிறார்கள்? ஏதோ மலிவாகிவிட்ட்து என்று அள்ளி வீசும் இவர்களது போக்கு மின்னணு தொழிலுக்கே உரிய தனியான அம்சம்! இதைத் தவிர மின் புத்தகங்களை உங்களது கணிணிக்கும், கருவிக்கும் சரியாக பராமரிக்க நல்ல மென்பொருட்கள் வந்துள்ளன. Callibre என்பது இலவச மின் புத்தக நூலக பராமரிப்பு மென்பொருள். பலர் இதைப் போன்ற மென்பொருள் பற்றி அறியாமல் அநாவசியமாக அல்லாடுகிறார்கள். மற்றபடி வேறு சமூக மின் புத்தகக் கருவி தாக்கங்களை ஆராய்வோம்.

பெரிய அலட்டல் பிரச்சனை!

பொதுவாக வக்கீல்கள் தங்களின் படங்களை பல புத்தகங்கள் அடுக்கிய அலமாரி முன்பு எடுத்துக் கொள்வார்கள். மேற்கத்திய நாடுகளில் 8 வது வகுப்பு தேறிய உடனே இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு பலரிடம் அலட்டிக் கொள்வது வழக்கம். சரி, பிரச்சனை என்ன? அட போங்க சார், அலமாரி பூரா அடுக்கி வைத்த புத்தகம் எல்லாம் ஒரு கால் டைரி அளவில் அடங்கி விட்டது. மிகவும் செளகரியமாக இருந்தாலும் அலட்டல் வாய்ப்பைக் குறைக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஒழிக!

விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது, சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றை மேற்கோள் காட்டி அப்படியே தன்னுடைய புத்தக அறைக்கு சென்று அந்த புத்தகத்தில் சரியாக எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் பெருமையே/சுகமே தனி. சிறிய மின் புத்தகக் கருவியை இயக்கி, அதில் மிக எளிதில் புத்தகங்களில் தேடி இதைக் காட்டும் பொழுது, ஏதோ எலக்ட்ரானிக் தில்லாலங்கடி செய்வது போல பிசு பிசுத்து விடுகிறது!

போன வாரம் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டுத் துளைக்கும் நண்பருக்கு, “நான் லைப்ரரி சென்று அப்படியே படிப்பில் மூழ்கி விட்டேன்” என்று பொய் சொல்வது கடினமாகி விட்டது. வீட்டில் உட்கார்ந்தபடியே லைப்ரரி மின் புத்தகங்களை அலசி, மின்கடன் வாங்கி, படித்து, தக்கத் தேதியில் தானாகவே கருவியிலிருந்து மறையும் இந்த தொழில்நுட்பம் மிகவும் உபயோகமாக இருந்தாலும் பொய் சொல்ல உதவாததால் ஒழிக!

இந்த மின் புத்தகக் கருவி தயாரிப்பாளர்கள் கில்லாடிகள். புத்தக படிப்பு அலட்டல்களுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள். படிக்கும் புத்தகம் பற்றி கம்பியில்லா இணைப்பு மூலம் கருவியிலிருந்தே ஃபேஸ்புக்கில் அலட்டிக் கொள்ளலாம். அதே போல பல வித குறிப்புகளையும் கருவியிலிருந்தே ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உலகிற்கு பறை சாற்றலாம். வாழ்க இந்த தொழில்நுட்பம்!

காலை அலுவலக ரயில் பயணம் பல மேற்கத்திய பெரு நகரங்களில் ஒரு அன்றாட நிகழ்வு. நேற்று வெளியான ஸ்டீவன் கிங் புத்தகத்தை அலட்டலாக படிப்பது பலரது வழக்கம். இதையே மின் புத்தகக் கருவியில் பலரும் இன்று செய்கிறார்கள். ஆனால், பாவம் பல சக பயணிகளுக்கு இது தெரிவதே இல்லை. “இந்த ஆளு சதா இந்த நீல நிற சோனி கருவியில் என்னதான் படித்துக் கிழிக்கிறாரோ” என்ற எண்ணமே உருவாக்க உதவுகிறது.

”நான் என் புத்தகங்களை ஒழுங்காக பராமரிப்பதில் குறிப்பாக இருப்பவன்” என்று நம்மில் பலரும் அலட்டிக் கொள்கிறோம். “கடன் வாங்கிச் செல்லும் நண்பர்களிடம் நான் ரொம்ப கரார்!” என்றும் நமது குணாதிசயத்தையே தெளிவு படுத்தும் பலருக்கு இவ்வகை கருவிகள் பெரிய எதிரி. பராமரிப்பு, கடன் – துச்ச சிலிக்கான் விஷயங்கள். இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

வேறு படிப்பு பிரச்சனைகள்

இவ்வகை கருவிகளை வாங்கியவுடன் சில வாரங்களுக்கு எல்லோரும் தீவிரமாகப் படிக்கிறார்கள். காகித புத்தகங்கள் படித்து முடிக்காமல் மேஜையின் மேல் விட்டு வைத்தால், சில சமயங்களில், “படித்து முடித்துத் தொலையேன்” என்று அது சிலருக்கு நினைவு படுத்தலாம். ஆனால் மின் புத்தக்க் கருவி இப்படி எந்த தூண்டுதலுக்கும் உதவாமல் பாவமாய் சில ஆயிரம் புத்தகங்களை தாங்கி யாராவது படிப்பார்களா என்று சிலிக்கான் ஏக்கத்துடன் மந்தமாக தூங்குவது உண்மை.

”புதுசா வீடு வாங்கியிருக்கானே சாமி. என்னமாய் ஒரு படிப்பு அறை தெரியுமா?” என்று உட்புர வடிவமைப்பு (interior design) விஷயங்களுக்கு மின் புத்தகக் கருவிகள் ஒரு போதும் உதவுவதில்லை.
இக்கருவிகளால் பல சமூக நன்மைகளையும் நுகர்வோர் சொல்லி வருகின்றனர். மேற்குலகில் ஒரு மாத கோடை விடுமுறையில் சுற்றுலா சென்றால் டஜன் கணக்கில் புத்தகம் படிப்பதற்கு எடுத்துச் செல்வது வழக்கம். வர வர, விமானக் கம்பெனிகள் எதை எடுத்துச் சென்றாலும் எடைக்கு எடை கட்டணம் வசூலிக்கிறார்கள். மின் புத்தகக் கருவிகள் விமான கம்பெனிகள் எடை கட்டண சுருட்டலிருந்து பலரைக் காப்பாற்றுகின்றது. அதே போல, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் போது பல நூறு பத்தகங்களை எடுத்துச் செல்வது பெரிய இட/எடைப் பிரச்சனை. மின் புத்தகக் கருவிகளை எடுத்துச் செல்வது ஒரு பொருட்டாகவே இருக்காது.

நாம் மேலே பார்த்த சமூக அனுபவங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் சில முன்னோடிகளின் கருத்துக்கள். ஒரு 20 வருடம் முன்பு மோடார் பைக் ஓட்டிக் கொண்டு ஒற்றைக் கையில் எஸ்.எம்.எஸ் ஸை நினைத்துப் பார்த்தோமா? அதற்காக செல்பேசிகளை துறக்கப் போகிறோமா? மின் புத்தகக் கருவிகளால் மனிதர்களுக்கு நன்மைகளே அதிகம் என்பது என் கருத்து. மற்றவை எல்லாம் மனித சமூக வழக்கங்களின் பிரதிபலிப்புகள் தான்.

(முற்றும்)