துப்பாக்கி நண்பர்கள்

‘தேசிகன்’ என்ற என் பெயர் கடைசியில் ‘Gun’ இருப்பதாலோ என்னவோ எனக்கும் துப்பாக்கிக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டெடுத்த துப்பாக்கி பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.

திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.

அந்த வயதில் மார்க் ட்வைன் எழுதிய, ‘த அட்வென்ச்சர் ஆஃப் டாம் சாயர்’ போன்ற கதைகளைப் படித்ததாலாலோ என்னவோ ஒரு நாள் அந்தத் தொட்டிக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்து இறங்கியபோது காலில் பாம்பு ஒன்று விரல் இடுக்கில் மாட்டிக்கொள்ள, பதறி தொட்டிக்குள் விழுந்தேன். அது பாம்பு இல்லை, வெறும் தோல் பெல்ட் என்ற அத்வைத ஞானம் பெற்றபிறகு உயிர் வந்தது. அந்த பெல்டை இழுத்துப் பார்த்தபோது எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. பெல்ட்டின் மறு முனையில் துப்பாக்கி ஒன்று உறையுடன் இருந்தது; பாதி மண்ணில் புதைந்து, அழுக்காக. கையில் எடுத்தால் வெடித்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு, அந்தப் புதையலை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிக்கு ஓடி வந்துவிட்டேன்.

மேலே சொல்லுமுன், என் நண்பர்கள் இருவரைப் பற்றி சொல்லவேண்டும், அவர்களுக்கும் துப்பாக்கி சம்பந்தம் உண்டு என்பதால். என் வீட்டுக்கு இடது பக்கத்தில் இருக்கும் நண்பனின் வீட்டிலும் வலது பக்கத்தில் இருக்கும் நண்பனின் வீட்டிலும் துப்பாக்கிகள் உண்டு. நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்.

இ.ப நண்பனின் தந்தை முன்பு இராணுவத்தில் மேஜராகப் பணிபுரிந்தவர். வீட்டில் ஒரு குழல், இரட்டைக் குழல் துப்பாக்கிகளை ஹாலில் மாட்டியிருப்பார்கள். நண்பனுக்கு எல்லாம் அத்துப்படி, .22mm, .13mm.. எங்கே செய்தது… என்று டெக்னிகலாக ஏதேதோ சொல்லுவான். கேட்டுக்கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்த பிறகு பளபளவென்று எண்ணெய் போட்டுத் துடைப்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். வாரயிறுதியில் ஜீப்பில், தொப்பி, துப்பாக்கி, மாமிசம், டார்ச் சகிதம் வேட்டைக்குப் புறப்பட்டுப் போவார்கள், மறுநாள் திரும்ப வரும்போது, ஜீப் பின்புறம் முயல், கொக்கு, கௌதாரி போன்றவை ரத்தப் பொட்டுடன் தூங்கிக்கொண்டு இருக்கும். அடுத்த இரண்டு நாள் துரத்தியது, சுட்டது பற்றியேதான் பேச்சு இருக்கும்

கோடை விடுமுறை சமயம், நண்பனுக்கு அவன் தந்தை ஏர்கன் ஒன்றைப் பரிசளித்தார். எல்லோரிடமும் பெருமையாகக் காண்பித்தான். சின்னதாக ஈயத்தால் செய்த தோட்டாவைப் போட்டு அணில், குருவி என்று எதைப் பார்த்தாலும் சுட்டுக்கொண்டு இருந்தான். எதன் மேலேயும் படாமல், குறி பார்க்கும்முன்பே அவை தப்பித்தன. சிறிது நேரம் கழித்து, கிணற்றுப் பக்கம் இருந்த கல்லில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது சும்மா துப்பாக்கியைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன், என் கை அதன் விசையின் மீது தெரியாமல் பட்டுவிட, உள்ளே இருந்த தோட்டா சீறிக்கொண்டு மரத்தின் மேல்நோக்கிப் போனது. என்ன நடந்தது என்று புரிபடும் விநாடிகளுக்குள் மரத்தின் மேலிருந்து சிட்டுக்குருவி ஒன்று ‘சொத்’ என்று கீழே விழுந்தது. அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

இப்படியாக, துப்பாக்கியைக் குறிபார்த்து சுடுவதில் எனக்கு இருந்த குருட்டு அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து, இப்போது கண்டுபிடிப்பதிலும் இருந்திருக்கிறது. தொட்டியில் கண்டுபிடித்த துப்பாக்கியை எப்படி எடுப்பது என்று யோசித்தேன். என் நண்பர்கள்தான் துப்பாகியைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் சொன்னேன். உடனே மூவரும் துப்பாக்கியை எடுக்கப் புறப்பட்டோம். நான் தொட்டிக்குள் இறங்கி துப்பாக்கி இருக்கும் இடத்தைக் காண்பித்தேன். அவர்களும் தயங்கித் தயங்கிப் பார்த்தார்கள்.

“டேய் இது ரிவால்வர், எங்கப்பாகிட்ட இருக்குடா” என்றான் வ.பக்கத்து போலீஸ் வீட்டு நண்பன்.

“பார்த்து எடுடா. லோடாகியிருந்தா அவ்ளோதான், வெடிச்சுடும்” என்றான், இ.ப நண்பன். என் அர்ஜுனக் குறியில் எனக்கு ஏற்கனவே அனுபவம் இருந்ததால் பயந்துபயந்துதான் எடுத்தேன்.

துப்பாக்கியில் மண் ஒற்றிக்கொண்டு இருந்ததால் பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து அதில் துப்பாக்கியைப் போட்டோம். சிறிது நேரத்தில் மண் எல்லாம் கரைந்து, கருப்பு நிறத் துப்பாக்கி வெளியே வந்தது. ஷோலே படத்தில் பார்த்த மாதிரியே இருந்தது. துப்பாக்கி முனையில், குறிபார்க்க, சேவல் கொண்டை போல் ஒன்று இருந்தது. சினிமாவில் ஒரே ஒரு தோட்டா போட்டு சுற்றிவிட்டு வில்லன் ஹீரோவுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரே அந்தப் பகுதி கூட இருந்தது. ஆனால் சுத்த முடியவில்லை.

“டேய் இந்தத் துப்பாக்கியை நாம வெச்சிருக்கக்கூடாது. லைசன்ஸ்லாம் வாங்கணும்டா..” இ.ப.நண்பன்

“யாராவது கொலைசெஞ்சுட்டுப் போட்ருப்பாங்க. இப்ப நம்ப கைரேகை வேற அதுல வந்திருக்கும்” என்று பீதியைக் கிளப்பினான் வ.ப. நண்பன்.

சினிமாவில் ஜெயசங்கர்போல் கர்ச்சீப்பால் பிடித்து எடுத்திருக்கலாம். பயத்தில் திரும்பவும் தண்ணீருக்குள் போட எழுந்தேன்.

“ஆனா எங்க அப்பா போலீஸ்தான் கவலைப்படாதே” என்ற தைரியம் சொன்ன பிறகு, “கண்டேன்மெண்ட் போலீஸ்ல போய் கொடுக்கலாம்” என்றேன்.

“அட, ஒருதரம் சுட்டுப் பார்த்துட்டு தரலாம்டா” என்றான் இராணுவ வீட்டு நண்பன்.

பயமாக இருந்தாலும், செய்து பார்த்துவிடலாம் என்ற ஆவல் எல்லோரிடமும் இருந்தது.

தோட்டா எப்படி உள்ளே போட வேண்டும் என்று ஆராய்ந்தோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக துப்பாக்கியை மேலே பிடித்து விசையை அழுத்திப் பார்க்க முடிவு செய்தோம். போலீஸ் வீட்டு நண்பன் தைரியமாக துப்பாக்கியை மேல்நோக்கிச் சுட, இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். ‘கடக்’ ஒலியைத் தொடர்ந்து, துப்பாக்கி பின்பிறம் சின்னதாக ஒரு தட்டை வந்து செல்லமாகத் தட்டியது. கேப் வெடிக்கும் துப்பாக்கி என்று கண்டுபிடிக்க எங்களுக்கு அதிக நேரம் ஆகவில்லை. சில மாதங்கள் கழித்து அதே துப்பாக்கி விளம்பரம் கல்கண்டு பத்திரிகையில் வந்தபோது அது சிவகாசி பூர்வீகம் என்று கண்டுபிடித்தேன்.

இந்தத் துப்பாக்கியை தைரியமாக மேலே நோக்கிச் சுட்ட என் நண்பன், சில வருடங்கள் கழித்து, தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு நிஜ ரிவால்வரைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்பிழைத்தது வேறு கதை; மற்றொரு சந்தர்ப்பத்தில் அது பற்றிச் சொல்லுகிறேன்.