செயற்கை கிராமங்கள்

குடிமக்களைக் கட்டுப்படுத்த சுற்றுச் சுவர்களும் கிராதிக்கதவுகளும் கம்பி வேலிகளும் உதவியிருக்கிறதென்பதற்கு சீன வரலாறெங்கும் பதிவுகள் காணப்படுகின்றன. சுற்றுச் சுவர் எழுப்பப்பட்ட பெருநகரங்களே இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அதற்கான பிரமாண்ட சாட்சியமாகவே சீனப்பெருஞ்சுவர் நிற்கிறது. கம்யூனிஸக் கட்சியின் முதல் பத்தாண்டு கால ஆட்சியில் நிர்வாகத்தின் அங்கமாக அந்தப் போக்கு தொடர்ந்தது.  ‘யூனிட்’ என்றழைக்கப்பட்ட ‘மூடிய’ பகுதிகள் அப்போதே இருந்தன. இவை இடைவிடாத கண்காணிப்புடன் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் கிராதிக் கதவுகள் இரவெல்லாம் பூட்டி வைக்கப்படும்.ஆனால், தலைநகர் பேய்ஜிங்கின் வேலிக்குள் உருவாக்கப்பட்ட கிராமங்கள் சற்றே வித்தியாசமானவை.

அரை நூற்றாண்டுக்கு முன்னர், ஏழை பணக்காரர்களுக்கிடையே இடைவெளி என்பதே மிகவும் குறைவு. கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையை வலுவில் உருவாக்கியிருந்தது கம்யூனிஸக் கட்சி. அன்றாட அத்தியாவசியங்களுக்கே குடிமக்கள் அல்லாடினர். அப்போதெல்லாம் இன்று போன்ற பெரியளவிலான மனித இடப்பெயர்வுகளும் இருக்கவில்லை. அரிதாக, இயல்பாக நிகழ்ந்த சில இடப்பெயர்வுகளில் பறவைகள் வலசை போவது போல, மக்கள் சீக்கிரமே அவரவர் இருப்பிடம் திரும்பினர். போகுமிடத்திலே சில தினங்கள் தங்குவதென்பதுகூட மிக அரிதாகவே இருந்தது.

நகரமயமாக்கலையும் பொருளாதார விஸ்வரூபத்தையும் எடுக்க ஆரம்பித்த சீனம் பொருளாதார இடைவெளியை உருவாக்கிவிட்டது. அந்த இடைவெளி அத்தனை காலமாக அமுக்கி வைக்கப்பட்டதில் இன்றைக்கு மிக அகலமாகப் பல்லை இளிக்கிறது. பிரமாண்ட அளவில் நிகழும் இடப்பெயர்வுகள் உற்பத்தித் துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையாகத் தான் இருக்கிறது. அவை இல்லையென்றால், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தேக்கமடையும் என்பது உண்மைதான். தொழிலாளர்கள் இல்லையென்றால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குந்தகம் வரும். இந்த நிலையில், சமூகத்தில் பொதுப் பாதுகாப்பை ஏற்படுத்தவென்று இடம் பெயர்ந்து வருவோர் போவோரைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. கிராமத்திலிருந்து கிராமத்துக்குப் போவதும், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் நடக்கும் போக்குவரத்துகளும்கூட கட்டுப்படுத்தப்படுகின்றன.

நகரங்களுக்குள்ளேயே, வேலிக்குள் நிர்வகிக்கப்பட்ட பல கிராமங்கள் உருவாகி அவற்றின் எண்ணிக்கை கூடியது. தொடர்ந்து, பாதுகாப்பே காரணமாகச் சொல்லப்பட்டது. கடந்த இருபதாண்டுகளில் குற்றங்கள் அதிகரித்தபடியே இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10% அதிகரித்திருக்கின்றன. 5.3 மில்லியன் கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வு வன்முறைகள் நாடெங்கிலும் பதிவாகின.

பெருநகரங்களில், பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான மாளிகைகளும் உயர் அடுக்ககங்களும் அதிகரித்தன. நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், பல்பொருள் அங்காடி ஆகிய பலவும் உள்ளடங்கிய அதிநவீன வசிப்பிடங்கள் உருவாகின. பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

இடம்பெயர்ந்து வரும் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இத்திட்டத்தைத் தீட்டியது. இடம்பெயர்வோர் மீது செலுத்தப்படும் வன்முறையாகவே இதைக் காண்கிறார்கள் மனித உரிமை சங்கத்தினர். உருவாக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் 60வது கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டின்போது பூட்டி வைக்கப்பட்டன. பிறகு, இதையே மற்ற நகரங்களில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

உள்ளூர்வாசிகளில் 80% பேர் இந்தப் புதுத் திட்டத்தை வரவேற்றனர் என்று லாவ்ஸன்யூ கிராம சங்கத் தலைவர் சொன்னார். இடம்பெயர்ந்தோரில் எத்தனை பேர் இந்தத் திட்டத்தை அங்கீகரித்தனர் என்று மட்டும் அவர் சொல்லவேயில்லை. அங்கு வசிக்கும் நகரவாசிகளைவிட பத்து மடங்கு ஆட்கள் இடம்பெயர்ந்தோர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தானே செய்கிறோம். அதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். ஏதாவது சந்தேகம் தோன்றினால்தான் வாயிற்காவலர்கள் அடையாள அட்டைகளையோ கோப்புகளையோ கேட்டு வாங்கிச் சோதிப்பர்”, என்கிறார். “ஆனால், பெரிய கிராதிக் கதவுகளுக்குள் பெரிய மக்கள்தொகையை அடைத்து வைத்து நிர்வகிப்பதற்குப் பெயர் எங்கள் அகராதியில் ‘சிறை’,” என்று தர்க்கிப்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

பெருநகரங்களுக்குள் இவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை கிராமங்கள் என்ற கருத்து பேய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2008க்கு முன்னால் லாவ்ஸன்யூ என்ற இயற்கை கிராமத்தில்தான் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு கவனமும் பெற்றது. இருப்பினும், தாஷெங்ஜுவாங் கிராமத்தில் 2006லேயே அதற்கான துவக்க விதை ஊன்றப்பட்டு விட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாஸிங் மாவட்டத்தில் ‘பூட்டி நிர்வகிக்கும்’ மாதிரி கிராமம் உருவானது.

இது தாஸின் மாவட்டத்தின் ஸிஹோங்மென் என்ற ஊரில் இருக்கிறது. விரைவுச் சாலையைத் திறந்ததுமே குறைந்த வாடகையும் சுலபமாக வந்து போகும் போக்குவரத்து வசதியும் இடம்பெயர்ந்து வர விரும்பும் தொழிலாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டின. முறையான பணியிலில்லாத இவர்களில் சிலர் உதிரி வேலைகளைச் செய்வதும் கீரை காய்கறிகள் விற்பதுமாகப் பிழைக்கிறார்கள். இந்த கிராம மக்கள் தொகை மிகப் பெரியதும் கூட. ஒவ்வொருவராக நிறுத்தி விசாரிப்பதோ சோதிப்பதோ சாத்தியமும் இல்லை. சந்தேகத்திற்கு இடமிருந்தால் மட்டுமே நிறுத்தி சோதனை செய்வார்கள். அந்நிலையில்தான், ஸிஹோங்மென் ஊராட்சியில் கிராதிக்கதவு, சுவர், வேலி, காவலர் அலுவலகம், 24 மணிநேர ரோந்து மற்றும் வசிப்பிட அனுமதி அட்டையைச் சோதிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ‘பூட்டி நிர்வகி’ப்பதற்கு அனுமதிக்கு விண்ணப்பித்தனர்.

பொதுவாக, போலிஸாரும் கிராம அதிகாரிகளும் சேர்ந்து அங்கே நடக்கும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது வழக்கம். “சின்ன விஷயங்கள கிராமத்த விட்டு வெளிய கொண்டு போகறதில்ல. பெரிய விஷயங்கள மட்டும்தான் காவல்துறை மேலிடத்துக்கு கொண்டு போவோம்”, என்று சொல்லும் கிராம அதிகாரியின் நிலைதான் மற்ற கிராமங்களிலும். வந்து போகும் தொழிலாளிகளில் 5% மற்றும் கிராமவாசிகளில் 2.5% பேர் நிர்வாகக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே விதிமுறை. இதைப் பெரும்பாலும் பின்பற்ற முடியாமலே இருக்கிறது.

வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுரிமையாளரைக் கூட்டிக் கொண்டு வந்துதான் காவல் நிலையத்தில் தற்காலிக வசிப்புரிமைக்கே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை. அது கிடைத்த பிறகு நாளடைவில் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பார்கள். கிராமத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஆட்களின் போக்குவரத்தை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் ‘பூட்டிய நிர்வாகம்’ உதவும் என்றே கிராம அதிகாரிகள் நம்பினர். இன்றும் நம்புகின்றனர். முக்கியமாக, மற்றவர் செலவிலேயே உண்டு வாழும் அல்லது திருடிப் பிழைக்கும் வேலையற்றுத் திரியும் ஆட்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டியதாகிறது. “லாவ்ஸன்யூவுக்குள்ள இப்போதெல்லாம் வேலையற்ற வெட்டிப்பயல்கள் நுழையவே முடியாது”, என்கிறார் அதிகாரி. பூட்டிய நிர்வாகம் படிப்படியாகக் கடுமையாக்கப் பட்டது. “இப்டி வேலியும் போலீஸ் ரோந்தும், வாசல்ல காவலர் கண்காணிப்புமாக இருப்பதைப் பார்த்தால் இது சிறை போலவும் நாங்கள் எல்லோரும் கைதிகள் போலவும் ஓர் உணர்வேற்படுகிறது”, என்கிறார் கொஞ்சம் கல்வியறிவுடனிருக்கும் ஒரு தொழிலாளி.

கூடிக் கொண்டே போகும் மக்கள் தொகை, நகரமயமாகும் போக்கில் நகரில் உருவாகும் வேலைவாய்ப்புகள், அதனால் ஏற்படும் இடப்பெயர்வுகள் என்று எல்லாமேதான் தற்காலிகக் குடியிருப்புகள் உருவாகக் காரணமாகின்றன. வேறு நாடுகளில் இருக்கும் நகரங்களில் உருவாகும் சேரிகள்/குப்பங்கள் போலத்தான். இவ்வெளியோருக்குக் கிடைக்கும் வருவாயில் அவர்களால் முறையான வீடுகள் தேடி வசிக்கவும் முடிவதில்லை.

“அடுத்த வருஷம் கடைய மூடிருவேனுதான் நெனைக்கிறேன். முன்னயெல்லாம் தெருவுல எப்பவும் தொழிலாளிகள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். இப்ப ஆள் நடமாட்டமே இல்ல”, என்கிறார் லாவ்ஸன்யூ கிராமத்திற்குள் இருக்கும் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர். “அரசாங்கம் எதுக்கு இவ்ளோ செலவிட்டு இவ்ளோ உயரமான வேலியப் போட்ருக்குன்னே எனக்குப் புரியல. கரடுமுரடான இந்தச் சாலைகள ஒழுங்குபடுத்தியிருக்கலாம். ரொம்ப மோசமான நிலைல இருக்கற பொதுக் கழிப்பிடங்களையாச்சும் புதுப்பிச்சிருக்கலாம்.”

அதிகரித்து வரும் குற்றங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் விவசாயத் தொழிலாளிகளே காரணம் என்று அரசாங்கமும் நம்புகிறது. அதனால்தான், பூட்டி நிர்வகிக்கும் பாணியை மேலும் அதிக இடங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்துச் செயல்பட்டது.  இடம்பெயர்ந்து கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சவால்களுடன் இந்த கெடுபிடிகளும் சேர்ந்துள்ளன.

குறைந்த வருவாய் கொண்ட இந்த இடம்பெயர் தொழிலாளிகளின் குடியிருப்புப் பகுதிகளை இரவெல்லாம் பூட்டிவைக்கும் இவ்வகை கிராமங்கள் தலைநகரில் பெருகி வருகின்றன. பகல் நேரங்களில் இவர்களை காவலர்கள் சதா கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். பழைய கம்யூனிஸ ஆட்சியின்போது நடந்தது போலவே, எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்பார்கள். பேய்ஜிங்கின் தென்புறநகர் பகுதியில் 16 கிராமங்கள் இது போலப் பூட்டிவைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 90% ஆட்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளிகள். இந்த ரீதியில் போனால், தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசாங்கம் மூக்கை நுழைக்கும் என்பதுதான் பெரும்பாலோரது அச்சம்.

இடம்பெயர்ந்துழைக்கும் தொழிலாளிகளுக்குச் செய்யக்கூடிய ஆகப்பெரிய அவமதிப்பாக இதைக்காணும் சமூகவியல் வல்லுனர்கள் பல்வேறு விமரிசனங்களை முன்வைக்கின்றனர். ஏற்கனவே, கல்வி, மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு சமூகச் சேவைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. போராட்ட வாழ்க்கையும் வறுமையும் பழகிப்போன இச்சமூகத்தில் சிலர் இது போன்ற கெடுபிடிகளையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். ஆனால், பூட்டுகளாலும் காவல் கேமராக்களாலும் ஏழை-பணக்காரர்களுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க எதுவும் செய்ய முடியுமா என்பதே பெரும்பாலோரது கேள்வி. கண்டிப்பாக இது உதவாது; அதுமட்டுமல்ல, பாதகமாகவே முடியும் என்பதே உண்மை என்கிறார்கள் இவர்கள்.

விவசாய வேலையிலிருந்து தப்பிக்க நகரில் கிடைக்கும் வேலை இவர்களுக்கு மிகவும் அவசியமாக இருப்பதால் அதற்குக் கொடுக்கும் விலையாகவே இதைப் பார்க்கிறார்கள். ஜியா யாங்யூ என்பவர் சில மாதங்களுக்கு முன்னால் பேய்ஜிங் வந்தவர். கிராதிக்கம்பிக்குள் இருக்கும் தாஷெங்ஹுவாங் என்ற கிராமத்தில் தனது உறவினருடன் தங்கியிருக்கிறார். எண்ணையில் சுட்டெடுக்கும் பணியாரங்கள் செய்து விற்கிறார். அவரது நடுத்தர வயது உறவுக்காரப் பெண்மணி, “முன்னாடி மாதிரி இப்ப கெடுபிடி இல்லைனு தான் சொல்லணும். முன்னல்லாம் கழிவறைக்குப் போகும்போதுகூட நிறுத்தி விசாரணை/சோதனை செஞ்சாங்க”, என்கிறார்.

தெருக்கள் துவங்கும் இடத்தில் பெரிய கிராதிக் கதவுகளுடன் இருக்கும் இந்த கிராமங்களில் சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கும். சுவரை ஒட்டினாற்போல உட்புறங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல கடைகள் இருக்கும். இரவு மணி பதினொன்று முதல் காலை ஆறு வரை முக்கிய வாயிற்கதவு தவிர மற்ற கிராதிக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். அங்கே இருக்கும் காவல்காரர் அடையாள அட்டையைக் கேட்டு சரி பார்ப்பார். பாதுகாப்புக் காவல்காரர்கள் கிராமத்தைச் சுற்றி பகலிலும் இரவிலும் ரோந்து வந்தபடியே இருப்பதைப் பார்த்தால் சிறை வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வேற்படக்கூடும்.

பெரிய வளாகத்தின் சுற்று வேலியில் பொருத்தியிருக்கும் ஒவ்வொரு வாயிலிலும் பாதுகாப்புப் பரிசோதனை செய்யப்படுகிறது. அடையாள அட்டைச் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக யாரும் வந்தாலோ விருந்தினராக யாரும் வந்தாலோ அங்கே வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் அடையாள அட்டை எண், முகவரி, வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் போன்றவற்றை எழுதிவிட்டுதான் உள்ளேயே போக முடியும். ஊடகத்துறை, இதழியல் துறை, சமூகவியல் துறை போன்றவற்றிலிருந்து யாரும் போவதை முன்பே அறிந்தால் சுத்தமும் ஒழுங்கும் இருப்பது போன்றதொரு தோற்றத்தைச் சட்டென்று ஏற்படுத்தி விடுகிறார்கள். தெருவோரங்களில் காணப்படும் குப்பை மேடுகளும் சடாரென்று காணாமல் போய்விடுகின்றன.

பூட்டி நிர்வகிக்க ஆரம்பித்த பிறகு, குற்றங்கள் குறைந்துள்ளதாகச் சொல்கிறார் கிராம நிர்வாகி. பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் ரோந்துகள் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டன என்கிறார்.  மாதிரி கிராமத்தில் 13 பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. “சின்னச் சின்ன திருட்டுகள் நடக்கதான் செய்யிது. ஆனா, அதையெல்லாம் செய்யிறது கிராமத்துக்குள்ள வசிக்கற ஆட்கள்தான்னு எங்களுக்குத் தெரியும்.”

ஜாவ் என்ற தொண்டூழிய இளைஞர் இரவு ரோந்து போகும் குழு உறுப்பினர், “பொதுப்பாதுகாப்பு கண்டிப்பா முன்னைக்கிப்ப மேம்பட்டிருக்கு. வெளியூர்லயிருந்து வந்து வேலை செய்யறவங்க சந்தோஷமா வந்து இங்க குடியிருக்காங்க. எல்லா அறைகள்ளயும் ஆள் இருக்காங்க. வாடகைக்கி வேணும்னாலும் காலியா அறையே இல்லை”, என்று சொல்கிறார்.

தாஸிங்கில் இருக்கும் 16ல் 12 கிராமங்கள் பூட்டி நிர்வகிக்கப்படுகின்றன. குற்றச்செயல்கள் மிகவும் குறைந்து போனதாகப் பதிவுகள் காண்பிக்கின்றன. சில இடங்களில் எந்தக் குற்றச் செயல்களும் நடந்திருக்கவில்லை. இது போன்ற நேர்மறையான விளைவுகளைக் காணும் அதிகாரிகளுக்கு மற்ற நகர கிராமங்களிலும் செயல்படுத்திப் பயனடையலாம் என்ற யோசனை தோன்றியது. ச்சாங்பிங் போன்ற வட்டாரங்களிலிருக்கும் 100க்கும் மேற்பட்ட நகர கிராமங்களிலும் செய்து பார்க்க நினைத்தனர்.

முதல் கட்டமாக, 44 கிராமங்களைப் ‘பூட்டி நிர்வகிக்க’ ஆரம்பித்தனர். இதில் 15 தியாந்தோங்குவான் மற்றும் ஹ்யூலோங்குவான் ஆகிய வட்டாரங்களில் இருக்கின்றன. இங்கெல்லாம் இடம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 80%. இந்த விகிதம் சற்றே கூடுவதும் குறைவதுமாகவே இருக்கும்.

954 ஆம் இலக்கம் கொண்ட பொதுப்பேருந்து புகையுடன் சௌபோவ் கிராமத்தில் நிற்கும் காட்சி எந்தவொரு கிராமத்துக்கும் பொருந்தக் கூடியது. நகரிலிருந்து வரும் இந்த வாகனம் தூசி படிந்த உடைகளுடன் தற்காலிக வேலைகளிலிருக்கும் தொழிலாளிகளை இறக்கி விட்டுவிட்டுப் போகும்.  ஆய்ந்தோய்ந்த உடலை இழுத்து நடப்பவர் போல தொழிலாளிகள் குடியிருப்பிடம் நோக்கி நடப்பர். மாத வாடகைக்கு எடுத்து தங்கும் அந்த அறைகளுக்கு சில நூறு யுவான்கள் கொடுப்பார்கள். இரவெல்லாம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் நகர மையம் நோக்கி அதிகாலை பேருந்திலேறிப் போவார்கள்.

தெருவின் இருபுறமும் சிறுவியாபாரிகள் தத்தமது வண்டிகளுடனும் பெட்டிக் கடைகளுடனுமிருக்க உள்ளேயும் வெளியேயும் போய்வருவோர் எண்ணற்றோர். கூச்சல்களும், உற்சாகக் கூவல்களும், சளசளப்புகளும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குப்பைகள் தெருவெங்கும் போடப்பட்டிருக்க, கிராமத்துக்குள் ஐந்தடிக்கு ஆறடி என்ற சின்னஞ்சிறு அளவில் புகைப்படக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டி, “இது சும்மா பேருக்குதான்”, என்கிறார். பூட்டிய நிர்வாகம் என்பதே மேல்ப்பூச்சுக்குதான் என்கிறார் இவர். “முன்னாடியெல்லாம் சோதனைகள் இருந்துச்சு. இப்பல்லாம் இல்ல. வெளிய இருக்கற பெரிய இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டிருவாங்க ராத்ரில. அவ்ளோதான். அதையும் சில நாட்கள் பூட்றதில்ல இப்பல்லாம்.”

கைபேசி கருவிகள் விற்கும் சின்னஞ்சிறு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர், “எப்பவும் நா ரொம்ப லேட்டாதான் தூங்கவே போவேன். அன்னைக்கி தலைய சாச்சதுமே ஏதோ சத்தம் கேட்டுச்சு. நைஸா எழுந்து போய்ப் பார்த்தேன். திருடன்தான். என்னோட கைபேசி கடைக் கதவ நெம்பித் தெறக்க முயற்சி செஞ்சிட்டிருந்தான்”, என்கிறார். ஆள் வருவது தெரிந்ததும் திருடன் ஓடிவிட்டான். பூட்டிய நிர்வாகத்தால் தனது வர்த்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுரைக்கும் இவர் நிர்வாகம் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.

சோதனையாக பூட்டிய நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து நகர கிராமங்களிலும் விடியலில் வெளியே போவதோ இரவு நேரமானபின் திரும்புவதோ கூடாதென்பதே பொது விதி. முக்கிய வாயிலில் பெரிய இரும்புக் கிராதிக் கதவு போடப்பட்டிருக்கும். காவலர் அறை வாயிலுக்கருகிலேயே இருக்கும். காவலர் சீருடை அணிந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் கிராம ஊழியராகவே இருப்பார். உள்ளேயும் வெளியேயும் போவோரை முகமன் கூறிப் புன்னகைப்பார் என்றாலும் அவர்களைக் கண்காணிப்பதுதான் இவரது முக்கிய வேலை. “இந்த கிராமத்துல வசிக்காத எல்லாருமே அடையாள அட்டை காட்டணும். இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு, கிராம வாசிகளும் அடையாள அட்டை, வாகன உரிமம் போன்றவற்றைக் காட்டியே ஆக வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வரவிருக்கிறது”, என்று ச்சாங்ஸியாங் என்கிறார் லாவ்ஸன்யூ கிராம அதிகாரி. இரவில் ஒரு நிமிடத்திற்கு 20 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பர். “அடையாள அட்டையைக் காட்டச் சொல்லவில்லை. பூட்டிய கிராமம் போலவே இல்லை”, என்று மகிழ்வுடன் குறிப்பிட்டார் ஒரு வருகையாளர்.

இரவு பத்து மணிக்கு மனித நடமாட்டம் குறைவதால் அப்போது ஒவ்வொருவரையும் நிறுத்திச் சோதிப்பது சற்று எளிது. பணியாளர்கள் குறைவென்பதால் தான் சோதனைகள் கடுமையாக்கப்படவில்லை என்கிறார் அதிகாரி. சோதனைகள் செய்யும் பணிக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறதென்றும் மேலும் அதிக ஊழியர்கள் உருவானதும் பாதுகாப்புச் சோதனை மேலும் கடுமையாக்கப் படும் என்கிறார்.

பூட்டி நிர்வகிக்க எந்தெந்த கிராமங்களைத் தேர்ந்தெடுப்பதென்று ஆலோசித்த போது அவ்வந்த கிராமத்தினரே தத்தமது கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்கிறார்கள். “அது உண்மையோ பொய்யோ, ஆனா இது புதிய முறை. சாதக பாதகங்கள் இதுலயும் இருக்கு. அவ்வந்த கிராமமே நிர்வாக முறையும் தேர்ந்தெடுக்க முடியும்னு சொல்றாங்க”, என்கிறார் கிராமவாசி.  இடம்பெயர் தொழிலாளிகள் அதிகமிருக்கும் தாஸின் வட்டாரத்தின் 92 கிராமங்களில் பரிசோதனையாக ஓராண்டுக்கு ‘பூட்டிய நிர்வாகம்’ என்று முடிவானதிலிருந்து ‘சமூக மாற்ற மேலாண்மை’ என்ற புதிய பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தையும் கேலியாக விமரிசிக்கின்றன சீன ஊடகங்கள்.

கூடிவரும் இடம்பெயர் தொழிலாளிகளே உள்ளூர்காரர்களுக்கான வருவாயாகிப் போயினர். உள்ளூர் காரர்கள் முன்பெல்லாம் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிட்டு விவசாயத்தின் மூலம் பொருளீட்டினர். ஆனால், லாவ்ஸன்யூவில் இடம்பெயர்ந்த தொழிலாளிகள் உள்ளூர்காரர்களை விட பத்து மடங்கு அதிகம் என்ற நிலையில் அதிகமானோர் தத்தமது வசிப்பிடங்களை வாடகைக்கு  விட்டு நல்ல காசு பார்க்கின்றனர். மக்கள் தொகை கூடும் போது திருட்டு, அடிக்கடி, குத்துச் சண்டைகள், சிறிய மற்றும் பெரிய சண்டைகள் ஆகியவை அதிகரித்தன. நிர்வாகத்தின் பொதுச் சுகாதாரம், சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்துச் செலவுகளும் சமாளிக்கவே முடியாத அளவு தொடர்ந்து கூடின.

2008டின் இறுதியில் நகரையும் கிராமத்தையும் இணைக்கும் பெருமுயற்சியில் சீன அரசு இறங்கியது. சுமார் 753 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்த இத்திட்டம் 227 நிர்மாணிக்கப் பட்ட செயற்கை கிராமங்களை உள்ளடக்கியிருந்தது. அத்துடன், 450 இயற்கை கிராமங்களும் இதில் அடங்கின. இந்தப் பரப்பளவில் சாவோயாங், ஹாயாங், ஃபெங்தாய், தாஸிங் மாவட்டத் தலைநகரங்கள் 50 முக்கிய மையங்களாக இருந்தன.

கிராம அதிகாரி வாங் சாங்ஸியாங் லாவ்ஸன்யூவைக் குறித்ததொரு கனவை மனதில் தீட்டி வைத்திருக்கிறார். கிராமத்தினரின் வீடுகளை இடித்தழித்து அவர்களை வேறிடம் விரட்டுவது முக்கிய திட்டம். வேறிடத்தில் உருவாக்கப் படும் கிராமத்தை சூழியல் நோக்கில் அமைப்பதும் ஒருபகுதி. தாஸின்னில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு விலை 1,900,000 யுவான். 600 ஹெக்டேர் நிலத்தை மனைகளாக விற்று விட்டார்கள். விற்பனைகளின் போது பல கட்டங்களில் அரசாங்க அதிகாரிகள் பெற்றுக் கொண்ட கையூட்டமே பெரிய தொகை. அப்போதும் கிராமத்தினருக்கு குறைந்தது 200 மில்லியன் யுவான்களாவது கிடைத்திருக்கும். மீதமிருக்கும் நிலத்தின் அந்தஸ்தை மாற்றுவதும் திட்டத்தின் இன்னொரு பகுதி. அவற்றை ஏலங்கள் விட்டு அடர்த்தியான குடியிருப்புகளை உருவாக்க நினைக்கிறது அரசாங்கம். இன்னும் 600 ஹெக்டேர் நிலம் மீதமிருக்கின்றது. காய்கறி விளையும் நிலத்தில் தான் கட்டியிருக்கும் பல அறைகள் அடங்கிய வீட்டைக் குறித்து தான் லீலியாங் என்பவருக்கு கவலை. “இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கை வைக்காம இருந்தா போதும். போட்ட பணத்தை எடுத்துருவேன்”, என்று பதைபதைப்போடு இருக்கிறார்.

போலீஸ் படை மற்றும் ரோந்துப் படையைப் பற்றி பல விஷயங்களை லாவ்ஸன்யூவின் தலைமை அதிகாரி குவோ சொல்கிறார். ரோந்து போகும் போலீஸ் படையில் சேரும் ஒவ்வொரு கிராம ஆளும் தேர்வெழுதி தான் வெற்றி பெறவேண்டும். கிராம மக்கள் தொகையைப் பொருத்து குழுவினரது எண்ணிக்கை கூடக் குறைய இருக்கும். பொதுப்பாதுகாப்புத் துறை தான் இவர்களை வேலைக்கமர்த்தும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 30 யுவான்கள் வாங்கும் வரிப்பணத்திலிருந்து இந்த வேலையில் சேர்பவர்களுக்கு 400 யுவான்கள் ஊதியம் வழங்குகிறார்கள். அத்துடன், தண்ணீருக்கும் பொது இடச் சுத்திகரிப்புக்கும் இதிலிருந்து தான் செலவிடுகிறார்கள். 11,000 யுவான்கள் கிராம அலுவலகத்துக்கும் மீதி பொதுமக்கள் நலத்துக்கும் போகின்றது.

கூச்சலும் சந்தடியுமாக இருக்கும் கிராம முகப்பில் உள்ளே போகவிருப்போர் ஒரு வரிசையிலும் ஏற்கனவே உள்ளே போயிருக்கும் வெளியாட்கள் வெளியேறும் முன்னர் தமது அடையாள அட்டையைப் பெறவென்று காவலர் அறைக்கு அருகில் இன்னொரு வரிசையுமாக நிற்கிறார்கள். “முன்னாடியெல்லாம் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று ஒன்றுமே தெரியாமலிருந்தது. ஆனால், இப்போது முறைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முன்னயெல்லாம் மே முதல் தேதி இல்லைன்னா தேசிய தினத்துல மட்டுமே கிராமங்கள் பூட்டியிருக்கும். இப்பல்லாம் அப்படியில்லை”, என்கிறார் அதிகாரி.

அவரவர் இஷ்டத்துக்கு கட்டடங்களை கட்ட முடியாதென்ற நிலையில் சில கிராம ஆட்கள் பூட்டிய நிர்வாகத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு காவல்துறையில் சேர்ந்து விடுகின்றனர். இடம்பெயர்ந்து வந்திருக்கும் வந்தேறிகளுக்கு அறை வாடகை கூடிக் கொண்டே வருகிறது.  அதனால், அப்படி வருவோரின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. “சூழல் மேம்படும் போது வாடகை கூடுவது இயற்கை தான். வாடகை கட்டுப் படியாகவில்லை என்று கருதுவோர் வேறிடம் போய் விடுகிறார்கள். வருவாய் கூட இருக்கும் ஆட்கள் மட்டுமே இங்கே வசிப்பார்கள்”, என்று கூறும் அதிகாரியின் தொனியில் பூட்டிய நிர்வாக முறை நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதென்று அறிவிக்கும் உறுதி தெரிக்கிறது.

2009தின் தொடக்கத்தில் தாஸிங்கின் கிராமப்புறங்களை நகரமயமாக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன என்றார் வாங் சாங்ஸியாங். சென்றாண்டு தான் லாவ்ஸன்யூ இத்திட்டத்தில் சேரவிருந்தது. ஆனால், தலைமைத்துவ மாற்றத்தினால் மேலும் 3-5 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வடக்கில் ஜ்யூகோங் மற்றும் தான்ஸியிலிருக்கும் ஹோங்ஃபாங்ஸி முதல் தெற்கின் லாவ்ஸன்யூ வரை பல பழைய கட்டடங்கள் இடித்தழிக்கப் பட்டன. இதன் காரணமாக இடம்பெயர்வோர் தெற்கு நோக்கிப் போக ஆரம்பித்தனர். அங்கேயும் அறைகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு உள்ளூர்காரர்கள் அவரவர் வீடுகளில் மாடியைக் கட்ட ஆரம்பித்தனர். வாடகைக்கு விடவென்றே அறைகள் கட்டும் போக்கு மிகவும் கூடியது. கிராமத்தினரில் சிலர் கிராமத்தின் வடதிக்கில் இருந்த விளைநிலங்களில் பல அறைகள் கொண்ட வீடுகள் கட்டினர். இப்படித்தான், சட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்படாத கட்டடங்கள் பல எழும்பின.

c_mg_c_22009ல் ஸிஹோங்மென்னில் இதே போல சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டங்களை இடித்தனர். அதுபோலக் கட்டக் கூடாதென்ற எச்சரிக்கை கிராமத்தினருக்கு மறைமுகமாக விடுக்கப்பட்டது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களின் இருப்புக்கும் கிராமப் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தொடர்புண்டு என்று அறிவிக்கப்பட்டது. 2009யின் இறுதியில் ஊழியர்களின் வருவாய் 60% குறைக்கப் பட்டது. அதற்குக் காரணம் இந்தக் கட்டடங்கள் தான். “இயற்கை கிராமங்களை அப்படியே பராமரிக்க முனைகிறோம். விரிவடையும் கிராமத்தின் மனித இடப்பெயர்வுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டியதா இருக்கு”, என்கிறார் அதிகாரி. “எங்களால விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்படும் கட்டங்களையெல்லாம் முழுமையாகக் கண்டறிந்து தடுப்பது முடியாமலிருப்பதால் இந்த அபராதம் எங்களுக்கு”, என்கிறார் ஓர் ஊழியர். வெளியில் கட்டப்படும் வீடுகளைத் தடுப்பது எளிதாக இருக்க, வளாகத்துக்குள்ளேயே வாடகைக்கு விடும் நோக்கில் கூடுதல் அறைகள் கட்டுவோரை ஒன்றுமே செய்ய முடிவதில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

இது போன்ற நடவடிக்கைகளால் புதிதாக வாடகைக்கு அறை தேடுவோருக்கு கிடைப்பதே சிரமமாகி விடும். மேலும் அறைகள் கட்டுவது குறையும். உள்ளூர்காரர்களுக்கு குறைவான வாடகை வருவாய் கிடைக்கும் என்றாலும் வாடகைக்கு விடும் ஆட்கள் பெருகாததால், போட்டிகள் குறையும். “இன்னும் அதிகமாவும் கடுமையாவும் கட்டடங்கள் இடிக்கப்படும்னு கிராம ஆட்களுக்கு சொல்லிட்டே தான் இருக்கோம். செலவழிச்சிக் கட்டியும் உங்களுக்கு பிரயோசனமில்ல. போட்ட காசும் போகும், வாடகையும் கிடைக்காது”, என்று சொல்கிறார் ஊழியர் ஒருவர்.

லாவ்ஸன்யூ கிராமத்தில் சாலைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கின்றன. பராமரிப்போ புதுப்பித்தலோ இல்லாத அச்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் கட்டடங்கள் சிறியதாகவும் சீரற்றும் இருக்கின்றன. யாராவது அறை வாடகைக்கு வேண்டும் என்று போய் கேட்டால், “இல்லையே. எல்லா அறையிலும் ஆட்கள் இருக்கிறார்களே”, என்பதே எங்கும் எப்போதும் கிடைக்கும் பதில். சாலைகள் கூடுமிடங்களில் இடிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமலே குவியலாகக் கிடக்கும். அருகிலேயே சிமெண்ட்டைக் குழைத்து புதிதாகக் கட்டும் பணியும் நடக்கும் விநோதம் தான் எல்லா இடங்களிலும்.

பொதுப்பாதுகாப்பு மட்டுமே பூட்டிய நிர்வாகத்தில் இல்லை, நீண்ட காலத்திட்டமாக சூழலில் மாற்றம் கொண்டு வருவதும் அதில் வருகிறதென்கிறார் வாங் சாங்ஸியாங். இதைப் பொதுவாக மக்களும் ஊடகங்களும் அறிவதில்லை என்பது இவரது புகார். நகரமயமாக்கலின் ஒரு பகுதி தான் இதுவும் என்கிறார் இவர். நகர மையம், புறநகர்புறங்கள், கிராமங்கள், நகருக்குள் இருக்கும் செயற்கை கிராமங்கள் என்று எல்லா இடங்களிலுமே இந்த கட்டட இடிப்புகள் நடைபெறுகின்றன. நகர மையத்துக்கு மிக அருகில் இருக்கும் ஹோங்ஃபாங்ஜி போன்ற கிராமங்களிலிருந்து சமீபத்தில் வந்திருக்கும் இடம்பெயர்ந்தோர் தான் இன்று லாவ்ஸன்யூவில் இருந்து வருகிறது. பேய்ஜிங்கில் இன்றும் இடம்பெயர்ந்தோர் 5,090,000 என்ற எண்ணிக்கையில் தான் இருக்கிறது. குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளிகளின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது. வாடகைக்கு அறை கிடைக்காமல் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொன்றுக்கு என்று அலைந்து தேடுவோரும் இருக்கிறார்கள். நகரிலோ நகரிலிருந்து தள்ளியோ ஏதேனும் ஒரு எலிவளை கிடைக்குமா என்பதே எப்போதும் இவர்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனை.

கேட்காமலேயே போட்ட வேலி மிகவும் அசௌகரிய உணர்வை ஏற்படுத்துகிறதென்று சொல்கிற கிராமத்தினரும் இருக்கின்றனர். “இதொண்ணே போதுமே, இடம்பெயர்ந்து வந்து உழைக்கும் எங்களைப் போன்ற தொழிலாளிகளை வேறுபடுத்திப் பார்க்கும் நகரத்தினரது போக்கை நிரூபிக்க”, என்கிறார்கள் பலர். பேய்ஜிங்கிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலே சமூக அந்தஸ்தில் ஓரிரு படிகள் குறைந்து போகின்றார்கள். ஷௌபாவ்ஜுவாங் கிராமத்தில் அடையாள அட்டை பரிசோதிக்கும் காவலரைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த முதியவர், “இதெல்லாம் எங்க விருப்பத்திற்கு விரோதமா செய்யப் படுது. எங்கள மாதிரி சாதாரண ஆட்களுக்கு மனித உரிமைகள்னு ஏதுவுமே இல்லை”, என்கிறார் ரகசியக் குரலில்.

பல நேரங்களில் மத்திய அரசைத் திருப்திப் படுத்தவென்றே மாவட்ட மற்றும் கிராம அதிகாரிகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் வென்ஜோவ் கிராமத்திலிருந்து 1980களில் நிறைய விவசாயத் தொழிலாளிகள் பேய்ஜிங்கின் புறநகர் கிராமமான ஃபெங்தாய்யில் வந்து குடியேறி  அங்கே சிறுவியாபாரங்களில் ஈடுபட்டனர். 1986ல் ஆயிரக்கணக்கான  வென்ஜோவ்வினர் அங்கே வசித்தனர். ஜேஜியாங் கிராமம் என்றே அறியப்பட்டது. 1994ல் 100,000 இடம்பெயர்ந்தோர் வசித்த இந்த கிராமத்தில் 14,000 உள்ளூர் வாசிகள் மட்டுமே இருந்தனர். உள்ளூர் ஜவுளி, தோல் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் இந்தக் குடியேறிகளின் கையோங்கியது. இந்தச் சமயத்தில் தான் அரசதிகாரிகள் ‘சுத்திகரிப்பு’ செய்ய முற்பட்டனர். இடம்பெயர்ந்து வந்தோரை வேறிடம் போகும் படி கட்டாயப்படுத்தினர். பேய்ஜிங்கை விட்டு வெளியேறி ஹீபேய் வட்டாரத்திற்குப் போக வற்புறுத்தப்பட்டனர். 1995ல் உள்ளூர் போலிஸார் கிராமத்தை இடித்தழித்ததில் கிட்டத்தட்ட 50 குடியிருப்பு வளாகங்கள் அழிந்தன. 80,000 இடம்பெயர் தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றனர்.

பூட்டிய நிர்வாகத்தினால் அதிகாரிகளுக்கும் இடம்பெயர்ந்தோருக்குமான மோதல்களும் கூடுகின்றன. அதிகாரிகளின் ஊழலும் லஞ்சமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகளும் தோன்றுகின்றன.  நேர் வழியில் சமாளிக்கும் மனோபாவம் இருக்கும் வெளியூர்கார்கள் உள்ளூர் காரர்களுடன் சுமுக நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனால், இடைவெளிகள் குறையவும் மறையவும் வாய்ப்புண்டு. ச்சாங்க்பிங்கும் அதைச் சுற்றியுள்ள 44 கிராமங்களும் பூட்டிய நிர்வாகத்திற்குள் வந்தபோது மக்கள் உள்ளே போகவும் வெளியேறவும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிருந்தது. பெரும்பாலோருக்கு அங்கே நடப்பதைப் பற்றிய அறிவோ விழ்ப்புணர்வோ இல்லாமலே இருக்கிறது. அதனால், இந்த நிர்வாகமுறை இடைஞ்சலாக இருக்கிறதா அநியாயமாக இருக்கிறதா என்று கருத்து கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியாமல் திருதிருவென்றுவிழித்தனர்.

தலைநகருக்கு அருகில் 5ஆம் இலக்கப் பெருவிரைவுப் பாதாளப் பாதையில் இருப்பது ஜோங்தன் கிராமம். தியங்தோங்யுவான் நிறுத்தத்தில் இருக்கும் இந்த கிராமம் தோங்ஸியாவ்கோவ் மாவட்ட அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறது. அங்கிருந்த அதிகாரி, “இதுபோல பூட்டி நிர்வாகம் செய்யும் போது சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களப் பிடிக்க முடியுது. மக்கள் போக்குவரத்தையும் கண்காணிக்க முடியுது”, என்கிறார்.

மாலை ஆறுமணிக்கு, வேலை முடியும் வேளையில் சாலையில் பெருங்கூட்டமாக மக்கள் வாகனங்களில் விரைவதைக் காணலாம். இதில் உரிமம் இல்லாத சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும் நிறைய உண்டு. சாலையோரங்களில் சிறுவியாபாரிகள் மும்முரமாக அவரவர் வியாபாரத்தில் மூழ்கியிருப்பார்கள்.  கிராமத்துக்கு சந்தையின் சந்தடிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் அனைத்துப் பரபரப்புகளும் இருக்கும்.

ஜோங்தன் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 40,000. இதில் 30,000 பேர் தற்காலிகக் குடியேறிகள். மீதி பேர் நிரந்தரக் குடியேறிகள். உள்ளூர் கிராமத்தினர் வெறும் 1000 பேர் தான். உள்ளூர் கிராமத்தினருக்கு முக்கிய வருவாயே அறைகளை வாடகைக்கு விடுவதில் கிடைப்பது.  கிராமத்தின் முக்கிய சாலைகள் தான் மொத்த கிராமத்தையும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிகின்றன. சிலவற்றை வேண்டுமானால் முழுவதுமாகப் பூட்டி வைக்க முடியும். அதேபோல, சாலைகள் கூடுமிடங்களில் கெடுபிடிகளைக் கூட்டலாம் என்கிறார், அதிகாரியான கட்சித் தலைவர். இவற்றைப் பூட்டி நிர்வகிப்பதும் சிரமம் என்கிறார்கள்.

பெரும்பான்மையோருக்கு நடப்பதென்னவென்றே தெரியாமல் இருக்கிறது. கிராமத்தினரின் கருத்தையும் தாம் கேட்பதாய்ச் சொல்கிறார்கள். கிராமத்தினரின் பெரும்பாலோருக்கு இதில் இசைவு தான் என்றும் சொல்கிறார். சிலர் பூட்டி நிர்வகிப்பதை ஆதரிக்கிறார்கள். உள்ளே வந்து போவோர் யார் என்றே தெரியாமல் இருப்பதால் இது பாதுகாப்புக்கு நல்லது தானே என்கிறார்கள். குற்றச் செயல்கள், குறிப்பாக திருட்டுகள் அதிகம் இங்கே. எப்படியும் தினமும் ஒன்றிரண்டு காதில் விழும். சட்டவிரோதமாக சாலைகளில் ஓடும் மோட்டர் சைக்கிள்கள் மிக அதிகம். இவை தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாகின்றன என்கிறார்கள். “தண்ணி வசதியில்லாத மத்த கிராமத்துலயிருந்த ஆட்கள் அழுக்குத் துணிகளத் துவைக்க கூட இங்க வராங்களாம். கெடுபிடி அதிகமிருந்தா வரமுடியுமா?” குற்றச் செயல்கள் குறை இந்த மாதிரியான நிர்வாகம் உதவுகின்றது என்கிறார்கள் அதிகாரிகள்.

நடப்பைக் குறித்த அறிவு கொண்டவர்களுக்கு அடையாள அட்டையைக் காட்டிவிட்டு உள்ளே போகவும் வெளியேறவும் ஆட்சேபமில்லை. ஆனால், அதுவே நாளடைவில் பெரியதொரு வேறுபாட்டைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறார்கள். “யாருக்கு தான் நான் ‘வெளியாள்’னு காட்டற மாதிரி கழுத்தில் அட்டையத் தொங்க விட்டுகிட்டு போகவும் வரவும் பிடிக்கும்?” சின்ன துணிக்கடை உரிமையாளர் வாங் யாவ் அதை ஆதரிக்கவில்லை. “இங்க விலையெல்லாம் நல்ல மலிவு, தெரியுமா? வார இறுதியானனாலே தியாந்தோங்குவான் போன்ற பக்கத்து இடங்கள்லயிருந்து பொருட்கள் வாங்க இங்க தான் வராங்க.

இவ்வாறு பூட்டி நிர்வகிக்கப்படும் செயற்கை கிராமங்கள் நகரைச் சுற்றி நிறையவே இருக்கின்றன. தலைநகரில் மட்டும் இதுபோன்ற 50 கிராமங்கள் இருக்கின்றனவாம்.இவற்றை ‘பட்டியலிடப்பட்ட கிராமங்கள்’ என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் பலரது எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது. குற்றவாளிப் பட்டியல் என்பது போலிருக்கிறது என்று அதிருப்தியுடன் விமரிசிக்கும் ஊடகத் துறையினர் அதிகரித்துள்ளனர். தரமே இல்லாத கழிவோடைகளும் நிலையற்ற பொதுப்பாதுகாப்பும் கொண்ட இந்த கிராமங்களில் வசிப்பது, “முதலில் சிரமமாக இருக்கும். போகப்போகப் பழகி விடும்”, என்கிறார்கள் குடியிருப்பு வாசிகள். சமத்துவத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஒன்றான ‘நகர-கிராம இணைப்பு’ என்ற புதுத்திட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கிராமங்களையும் சேர்த்திருக்கின்றனர். நகர விரிவாக்கம் மற்றும் மறுநிர்மாணப் பணியில் இக்கிராமங்கள் முக்கிய கவனம் பெறும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஷுன்யீ மாவட்ட அரசு தனக்குட்பட்ட வட்டாரங்களிலும் பூட்டி நிர்வகிக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. முக்கியமாக, கிராமத்தினருக்கும் நகரத்தினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் நோக்கமே பிரதானமாகச் சொல்லப் பட்டது. இந்த நிர்வாகம் வெற்றியடைந்தால் மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு போகவே மாவட்ட அதிகாரியின் திட்டம்.

ஷிஜிங்ஷான் கிராமத்திலும் பூட்டிய நிர்வாகம் நடைமுறையில் இருந்து வருகிறது. விவசாயத் தொழிலாளிகளை உள்ளூர் வாசிகளிடமிருந்து பிரித்து விலக்கும் பணியும் இங்கு நடந்துள்ளது.  ‘பட்டியலிடப்பட்ட கிராமங்க’ளுள் ஒன்றானது. இவ்வட்டாரத்தின் பத்து இயற்கை கிராமங்களுக்கும் இம்முறை புகுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் இயற்கை கிராமங்கள் முன்பிருந்ததை விட எண்ணிக்கையில் மிகவும் குறைந்து போயிருக்கின்றன. விவசாயத்திற்கு நிலம் உருவாக்கும் முயற்சியில் ஜாவ்யாங் மாவட்டத்தில் கிராமங்கள் இடித்தழிக்கப் படுகின்றன. இதனால், கிராமத்தினர் இடம்பெயர்ந்துள்ளனர். முழுக் கிராமத்தையே வேறிடத்தில் பெயர்த்தெடுத்து உருவாக்கியது போலச் செய்துள்ளனர். இவ்வட்டாரத்தில் இயற்கையாக இருந்து வந்த பல கிராமங்களை ஏற்கனவே சிதைத்தாயிற்று.

சில கல்வியாளர்களும் அறிஞர்களும் இந்த ‘பூட்டி நிர்வகிக்கும்’ முறையைத் தவிர்ப்பதற்கில்லை என்கிறார்கள். நகரம் அளவில் கிராமம் விரிவானால் எப்படித் தான் அதை நிர்வகிப்பது? அங்கே வசிப்போர் அனைவரும் குறைந்த வருமானத்தினர். தியாந்தோங்குவான், ஹ்யூலோங்குவான் போன்ற பெரிய பெரிய குடியிருப்புப் பேட்டைகளை நிர்வகிக்க முடியாமல் மிகவும் திணறுகிறார்கள். இருப்பினும், இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த நிர்வாக முறை தீர்வாக அமையாதென்கிறார்கள். முக்கிய கட்டடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் போன்றவற்றின் பாதுகாப்பில் கவனம் குவிய வேண்டுமே தவிர இம்மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவது நீண்டநாள் தீர்வாகாது என்கின்றனர். அதேபோல புதிதாக உருவாகும் வீடுகளையும் கட்டடங்களையும் சட்ட விதிமுறைகளால் கண்காணித்தால் பாதுகாப்பை மேலும் எளிதில் உறுதி செய்ய முடியும். கூடுகளில் அடைத்து நிர்வகிக்க மக்கள் ஒன்றும் கோழிகள் இல்லையே என்று ஓர் இளம் இதழியலாளர் அச்சூடகத்தில் விமரிசித்தார்.

தாஸிங்கில் சென்ற 2010 ஏப்ரலில் மேலும் 16 கிராமங்களைப் பூட்டி நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து 12 கிராமங்களில் குற்றச் செயல்களே இல்லை என்று கூறினார்கள். மொத்தத்தில் 73% குற்றச் செயல்கள் குறைந்தது. உதவி வேண்டி காவலருக்கு அழைத்தோர் எண்ணிக்கையும் 46% குறைந்தது. அரசாங்கம் எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 88.5% பேர் தமது திருப்தியைத் தெரிவித்தனர். அந்த வாழ்க்கைச் சூழலை அங்கீகரித்தவர்கள் 95.5% பேராக உயர்ந்தது. அரசு தரப்பில் பூட்டிய நிர்வாகம் குறித்து சொல்லப் படுவதெல்லாம் இப்படி நல்ல செய்திகளாகவே இருக்கின்றன. சீராக இல்லாத இயற்கை வளங்களை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தது மக்கள் தொகையைச் சீராக்கும் நோக்கத்தில் தான் அரசாங்கம் பூட்டிய நிர்வாகத்தைச் செய்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். இருப்பினும், உண்மையில் மக்கள் தொகை ஒரே இடத்தில் குவியாமல் சீராகச் சிதற இம்முறை உதவுமா என்பது தான் பெரும்பாலோரது ஐயம்.

உள்ளடங்கிய மாகாணங்களில் $586 மில்லியன் முதலீடு செய்து எக்கச்சக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும் தெற்கேயும் மேற்கேயும் போக மக்களுக்கு விருப்பமில்லை. அங்கெல்லாம் தொடர்ந்தும் 2 மில்லியன் வேலையிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. சீனத்தில் தொழிலாளர் பற்றாக்குறை என்றெல்லாம் ஒன்றுமில்லை. நடப்பதென்னவென்றால், தொழிலாளர்கள் தமது விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முக்கியமாக, அதிக ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.

நிரந்தரமாக இடம்பெயர்வோர் 50 மில்லியனுக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அதைவிட அதிகமாக இருக்கிறார்கள் தற்காலிகமாக இடம்பெயரும் தொழிலாளிகள். 20 மில்லியன் பேர் மாகாணம் விட்டு மாகாணம் போகிறவர்கள். இவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறங்களிருந்து தான் வருகிறார்கள்.  நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேர் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். மக்கள் தொகையில் 84% பேர் சொந்த கிராமத்திலிருந்து சராசரி 7 மாதங்கள் வேறிடத்தில் வேலை செய்கிறார்கள். 16% பேர் ஆறு அல்லது அதற்கும் குறைவான மாதங்கள் வேறிடத்தில் பணிபுரிகிறார்கள். ஷான்ஸியில் மட்டும் இடம்பெயர்ந்த தொழிலாளிகளில்  79% பேர் சொந்த கிராமத்திற்கு வெளியே ஆறு மாதத்திற்கு மேல் வேலை செய்திருக்கிறார்கள்.

நல்ல ஊதியம் தான் தொழிலாளிகளை ஒரே வேலையில் தக்க வைக்கிறது. 10 வருடத்திற்கும் அதிகமான வேலை அனுபவம் பெற்றிருக்கும் சூப்பர்வைஸர்களுக்கு வழக்கமாகக் கிடைப்பது மாதம் $200. ஆனால், இரண்டு மடங்குக்கு மேலாகவே கொடுக்கும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடலோர நகர/பெருநகரங்களில் இருக்கின்றன. இந்நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடும் மான்யத்துடன் அடுக்ககமும் கொடுக்கின்றன. ஆகவே, உள்ளடங்கிய மாகாணங்களில் வேலை செய்ய தொழிலாளிகள் விரும்புவதில்லை. எந்த ஊர், எந்த வேலை என்பதெல்லாம் தனிநபர் தேர்வாகி விடுகிறது. தொழிலாளி தான் அவற்றைத் தீர்மானிக்கிறான். தெற்கும் மேற்கும் போகும் சீனத் தொழிலாளிக்கு முன்னால் இருக்கும் தேர்வுகள் எண்ணற்றவை. என்றாலும், கிழக்கில் கிடைக்கும் ஊதியம் அங்கே கிடைக்காதென்றே தொழிலாளிகள் நினைக்கிறார்கள்.

நகர கிராமங்கள் ஏற்படுத்தும் பணிகளிலும் தொழிலாளிகளின் தேவை கூடிவருகிறது. கழிவோடை உருவாக்குவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது, அறைகள் கட்டுவது போன்ற பணிகள் வேலைவாய்ப்புகள் நிறைய. இதுபோன்ற வேலைகள் சில மாதங்கள் முதல் ஓரிரு ஆண்டுகள் வரை நீடிக்கும். நகரில் உழைக்கும் தொழிலாளிகளின் அன்றாட உணவுச் செலவு $0.70. வேலை முடிந்ததும் வேறிடத்தில் சேர்கிறார்கள். அல்லது சொந்த ஊருக்குப் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து வேலை தேடுகிறார்கள். “நகர வாழ்க்கை போதுமடா சாமி”, என்று மீண்டும் நகரத்துக்கே திரும்பி வராதவர்களும் இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் நகரில் முக்கிய இடங்களைச் சென்று பார்த்து விடவே துடிக்கிறார்கள். “இனி மீண்டும் வரப்போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன். பேய்ஜிங் வரதொண்ணும் சுலபமில்ல. வந்தது வந்தாச்சி. ஒரு தடவ தியான்மென் சதுக்கத்தையாச்சும் பார்த்துட்டு தான் புறப்படணும்”, என்று சொல்லும் தொழிலாளியைப் பார்த்தால் வேற்று நாட்டுக்கு வந்தவர் பேசுவது போலத் தோன்றிவிடும்.

ஒலிம்பிக்ஸ்ஸுக்கு முன்பும் பேய்ஜிங்கின் சில நகர குடியிருப்புகள் இவ்வாறு பூட்டப்பட்டன. ஆனால், அப்போது அதிக தீவிரமோ பரபரப்போ இல்லாதிருந்தது. கட்டடத் தளங்களுக்கு அருகில் இருந்த தொழிலாளிகள் வசிப்பிடங்கள் மட்டும் தான் இவ்வாறு பூட்டப்பட்டன. வெளிநாட்டினரின் பார்வைக்கும் கருத்துக்கும் கவனப் பொருளாகக் கூடாதென்பதே முக்கிய அக்கறையாக இருந்திருக்கிறது. அத்துடன், உலகைக் கவரும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் நடந்தேற வேண்டிய கட்டாயமும் இருந்தது. கூடவே, எந்தக் குற்றச் செயலும் நடக்கக் கூடாதென்ற அவசியமும் தான்.

ஒலிம்பிக்ஸுக்குப் பிறகும் இது போன்ற கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன. சிலருக்கு இதில் பெரிய புகார்கள் இல்லை. ஆனால், குற்றச் செயல்களைக் குறைக்க உதவும் என்றும் தோன்றவில்லை என்றே சொல்கிறார்கள். பூட்டி நிர்வகிக்கும் முறையே இடம்பெயர்ந்த வெளியூர் தொழிலாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தான்.

“படு அபத்தமான நடவடிக்கை!”, என்று விமரிசிக்கும் லீ வென்ஹுவா என்ற தனியார் சமூகநல ஊழியர், இடம்பெயர்ந்து நகரில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்காக யோசிப்பவர். “நீண்ட காலம் நடைமுறைப் படுத்தக் கூடியதே அல்ல.  குற்றச் செயல்கள் ஏற்படவும் அதிகரிக்கவும் சமூகத்தில் இருக்கக் கூடிய அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களையவும் நீக்கவும் அரசு முயல வேண்டும். அது தான் நீண்டகாலத் தீர்வாக இருக்கும். இதற்கெல்லாம் உதவுக்கூடியது கல்வியும் விழிப்புணர்வும் தான். எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது மிக முக்கியமாகிறது.” நோயின் மூல காரணத்தைக் கண்டறியாமல் வெறும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பது போலிருக்கிறது இது என்கிறார்.

இடம்பெயர் தொழிலாளிகள் மற்றும் உள்ளூர் ஏழைகளின் கிராம வேலிகளில் தொங்கும் பூட்டுகளின் நீண்ட காலத் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது சமூகவியல் வல்லுனர்களின் அக்கறையாக இருந்து வருகிறது. “எப்படியும் இந்த நகரம் உங்களுக்கானதல்ல, நகர வாசிகளுக்குரியது”, என்பதைத் தான் சொல்லாமல் சொல்கிறது அரசு என்கிறார்கள் இவர்கள்.

பூட்டி நிர்வகிப்பதை விட வேறு பாதுகாப்பிற்கான ஏதும் நல்ல வழி உண்டா என்ற கேள்வி ஆங்காகே ஊடகங்களில் எழுப்பப் படுகின்றது. இது தான் கிராம நிர்வாகம் என்று உறுதிப்பட்டால், இது எங்கு கொண்டு போய் விடும் என்ற அக்கறையும் குடிமக்களுக்கு இருக்கிறது. நாட்டின் உள்ளடங்கிய இயற்கையான கிராமங்கள் வெறும் மலரும் நினைவுகளில் தான் இனி இருக்க முடியுமா? எதிர்காலத் தலைமுறை அவற்றை இனி வாசித்தும் பல்லூகம் வழி கண்டும் தான் அறிய வேண்டுமா?

சீனத்தில், ‘தூரத்து உறவுகளைவிட நெருங்கிய அண்டை வீட்டார் உற்றவர்களாகிறார்கள்’, என்றொரு வழக்குண்டு. ஸோங் முடியாட்சியைச் சேர்ந்த ‘நதியோரம் ச்சிங் மிங் விழா’ என்ற பிரபல ஒவியம் ஒன்றில் தீட்டப்பட்டிருக்கும் வரி இது. பண்டைய கிராமங்கள் ‘சொந்த சீனக் கிராமம்’ என்ற பொருளில் ஸியாங்டு ஜோங்குவோ என்றழைக்கப்பட்டன. முன்பிருந்த அமைதியும் அழகுமான அந்த கிராமங்கள் எல்லாம் ஏற்கனவே கடந்த காலமாகிப் போயின. அன்றைய கிராம மக்கள் ஒருவருக்கொருவர் அனுசணையும் அன்பும் கொண்டு வாழ்ந்தனர். மரபிலிருந்து துண்டிக்கப்பட்ட இன்றைய கிராமங்கள் ‘சமூக நிர்வாகம்’ என்றாகி பின்னர் ‘பூட்டப்பட்ட கிராமங்களாகின. பொதுவாக, கிராமங்கள் நகரங்களாகின்றன. நகர/பெருநகர கிராமங்களில் உருவாகும் குடியிருப்புகளோ நகர இயல்புகளையெல்லாம் தொடர்ந்து தன்னுள் ஏற்றவாறே பெயரில் மட்டும் கிராமங்கள் என்றழைக்கப் படுகின்றன.  அடுத்தென்ன? பூட்டப்பட்ட கிராமங்களுக்குப் பிறகு பூட்டப் பட்ட நகரங்களா?

(முற்றும்)

jeyanthisankar@gmail.com