சிவப்பு விளக்கு

சிவப்பு விளக்கு

ஓய்வின்றி விரையும் வண்டிகள்
சிவப்பு விளக்கில்
சாலையைக் கடக்க நிற்கிறேன்

எதிர்முனையில்
கைத்தடி ஊன்றி
தள்ளாடி நிற்கிறான்
ஒரு கிழவன்

சாலையைக் கடந்து
மறுபுறம் அடைந்தால்
நானும் அவன் தானா?

விழிப்பு

யாமத்தின் மர்ம கணமொன்றில்
கண்விழித்தேன்
திடீரென

இருண்ட அறை
அகன்ற கண்ணாடிச் சாளரம்
அடர்த்தியாய் விண்மீன் கூட்டம்

இந்த அறைக்கு எப்படி வந்தேன்
இந்தப் படுக்கையில் ஏன் கிடக்கிறேன்
ஏன் கண் விழித்தேன்

இது நான்தானா
வேறு யாரா
அல்லது நான் என்பது யார்

பதறியெழுந்து
நீர் பருகி
படுக்கைக்குத் திரும்பினேன்

ஒரு புத்தகத்தின் மரணம்
(அல்லது)
கவிதையைக் கொலை செய்வது எப்படி?

புத்தகம் ஒன்றை
துப்பாக்கியால் சுட்டு
அதிநவீனக் கருவியால்
அதிவேகப் படமெடுத்து
அனுப்பியிருந்தான்
நண்பன்

அருவியின் வீழ்ச்சி போல்
பக்கங்கள் சிதறித் தெறிப்பதை
துல்லியமாய் காட்டிற்று படம்
மிக மெதுசலனத்தில்

தொழில்நுட்பத்தில்
வியப்புகள் ஏதுமில்லை
என் ஆர்வமெல்லாம்
கொல்லப்பட்ட புத்தகம் எது
என்பதே

கடைசியில் தெரியவந்தது
அது ஒரு கவிதைத் தொகுப்பு
கவிஞர்கள் அணிய விரும்பும்
ஜிப்பா செருப்பு கண்ணாடியில்
எனக்குப் பிரியமில்லாத
கவிஞரொருவர்
பாசாங்குடன் புன்னகைக்கும்
பின்அட்டை

படிமங்கள் செறிந்த
வரிகளுக்குள்
ஆழமாகவே நுழைந்து சென்றிருந்தது
தோட்டா
சிரமம் ஏதுமின்றி

சர்ப்பம்

வழி தவறிய சர்ப்பம் ஒன்று
செய்வதறியாது திகைத்து
திடீரென
படம் விரித்து நிற்கிறது
வனநடுவே

பிறகு
பார்க்க எவருமில்லை
என்று தெரிந்து
படம் சுருக்கி தளர்ந்து
திரும்பிச் செல்கிறது
சலிப்புடன்

(புகைப்பட உதவி : http://www.flickr.com/photos/barberenc/2358659021/)