கண்ணாடி வீடுகள்

கோவையில் ஒரு மனிதர் பட்டப்பகலில் போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் நான்கு பேரால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதைப் பற்றிய விவாதங்களை நடத்த ஊடகங்கள் தயாராக இருந்தன. அதே தினம், தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் மும்பை மீண்டும் ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளானது. ஊடகங்கள் வழக்கம்போல் இந்த துக்க நிகழ்விற்கும் உடனடியாக ஒரு பெயரை சூட்டியது, 13/7. அதைத் தொடர்ந்து வழக்கமான ஊடகக் கூத்துகள் நடந்தேறின. கோவை சம்பவம் யாருடைய நினைவிலும் இல்லை. மும்பை பற்றி செய்திகள் ஓரிரு நாட்கள் காற்றில் வந்து விழுந்தன. அதற்குள் வந்தார் ரூப்பார்ட் மர்டாக். மும்பையும் மறந்து போனது. ஊடகவியலாளர்கள் மர்டாக்கின் வாழ்க்கை வரலாற்றை மெய்சிலிர்த்தபடி விவரித்துக் கொண்டிருந்தனர். அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தோன்றி மன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதிலளிக்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பாயின. மும்பையில் கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்களின் முகங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.

அன்றைய தினத்திற்கான பரபரப்பான செய்திகளை மட்டுமே முன்வைக்கும் ஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற செயல்பாடுகள் நிச்சயம் கண்டிக்கத்தக்கவை. ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் இது குறித்த விவாதமல்ல. சமூகத்தில் மாற்று அரசியலின் குரலாகவும், தார்மீகத்தின் அதிபதியாகவும் தன்னை முன்னிருத்தும் இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே அத்தகைய ஒரு இடம் உண்டா என்பது தான் விவாதிக்கப்பட வேண்டியது.

தற்போது ரூப்பர்ட் மர்டாக் குறித்து திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் மர்டாக்கை விமர்சன ரீதியாக அணுக முயல்கின்றன, ஏதோ இப்போது தான் மர்டாக்கின் தவறுகள் வெளியுலகத்திற்கு வந்திருப்பதைப் போன்ற பாவனையுடன். மர்டாக் மீதான குற்றச்சாட்டுகள் 2008 முதலே எழுத் துவங்கிவிட்டன. அவருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகளின் வலை பெருகி, இன்னும் வீரியத்துடன் அவரை தற்போது சுற்றி வளைத்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

மர்டாக்கின் நிறுவனங்கள் பலவித தனிமனித உரிமை மற்றும் சட்ட ரீதியான அத்துமீறல்களை செய்துவந்துள்ளது தற்போது பேசுப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அதன் அரசியல் அமைப்பிற்கும் அவரது நடவடிக்கைகள் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மர்டாக்கின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை?

முதலில் மக்களை தன்பக்கம் ஈர்க்க வேண்டும். அதற்கு நிர்வாண அழகிகளின் புகைப்படங்களையும், பிரபலங்களின் அந்தரங்கங்களையும் வெளியிட்டார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. எந்தளவிற்கு மக்களோ அந்தளவிற்கு பணம். பணம் பெருக தன்னுடைய தொழிலை பெருக்கலாம். தொழில் பெருகிய பிறகு, அந்தத் தொழிலை பாதுகாக்க அரசியல் பலம். மர்டாக்கின் மொத்த செயல்பாட்டையும் இந்த எளிய சூத்திரத்தில் அடக்கிவிடலாம்.

”பேச்சு சுதந்திரம்”, “ஜனநாயகம்” போன்ற சமூகத்தை ஆரோக்கியமாக வைக்க முன்வைக்கப்படும் கருத்தியல்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஊடகங்கள் மக்களுக்கு குப்பைகளை வாரி வாரி வழங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தன் மூளையை அடகு வைக்கும் மக்கள் ஊடக மாயையை உண்மையென நம்பத்துவங்குகின்றனர். மேலும் மக்களை ஈர்க்க அறம் குறித்த கவலைகளை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டு எதையும் செய்ய ஊடகங்கள் தயாராக உள்ளன. பக்கம் பக்கமாக நிர்வாண அழகிகளின் படத்தை வெளியிடுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை கேள்வி கேட்க போதிய அமைப்புகளோ சட்டங்களோ இல்லை என்பது ஊடகங்களின் சக்தியை அதிகப்படுத்துகிறது. அறம் குறித்து கவலைப்பட மக்களுக்கு நேரமுமில்லை. மக்கள் எந்த எதிர்ப்புமின்றி பார்க்கும் வரை முதலீட்டாளர்களும் கவலைப்படப் போவதில்லை. ஆகையால் தனக்கு எந்த வகையிலும் பிரச்சனையில்லை என்பதை அறிந்துக் கொள்ளும் ஊடகங்கள் தொடர்ந்து தம் போக்கிலேயே செயல்படுகிறது. மேலும் தன் சக போட்டியாளர்களை வீழ்த்த எதைச் செய்யவும் இவர்கள் தயாராக உள்ளனர்.

தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவாக்கி அனைத்து ஊடக வடிவங்களையும் கைப்பற்றும் இந்நிறுவனங்கள் தன்னுடைய நிறுவனத்தை பாதுகாத்துக் கொள்ள தனக்குச் சாதகமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க தயங்குவதில்லை. தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு ஏற்றதாக நம்பவைக்க தொடர்ந்து பல பொய்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன. தொடர்ந்து பொய்களையும் வெற்றுக் குப்பைகளையும் செய்திகளாக வழங்கும் ஊடகங்கள் தன்னுடைய தொடர்ச்சியான செயல்பாட்டால் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியை முட்டாளாக மாற்றுகிறது. நாளடைவில் இதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகங்கள் அரசாங்கங்களை பணிய வைக்கின்றன.

மர்டாக்கின் நிறுவனங்கள் இதைத் தான் இன்று வரை செய்து வருகின்றன. கடந்த 30 வருடங்களாக மேற்குலகில் பெரும் பகுதியை முழு மூடர்களாக, பகுத்தறிவு என்று சொல்லுக்கு முற்றிலும் எதிர் திசையில் சென்று நிறுத்தியுள்ளதில் மர்டாக்கின் ஊடக செயல்பாடுகள் பெரும் பங்கு வகித்துள்ளது. தனக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வழங்கி மக்களை உண்மையிலிருந்து முற்றிலும் விலக்கி மறு புறத்தில் நிற்க வைத்துள்ளது. கொஞ்சம் கவனித்தால் இந்திய ஊடகங்களும் தன் பார்வையாளர்களுக்கு இதைத் தான் செய்து வருகின்றன என்பது எளிதாக விளங்கும்.

மர்டாக் போல நிர்வாணப் புகைப்படங்களை வெளிப்படையாக வெளியிட்டு தனக்கான வாசகர்/பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்திய ஊடகங்கள் துணியவில்லை என்பது உண்மை. ஆனால் அவை முழு உண்மை அல்ல. இந்தியாவின் வெகுஜன அச்சு இதழ்கள் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை நம்பித்தான் இயங்குகின்றன. அதே சமயம், தொலைக்காட்சி ஊடகங்கள் தன்னை எந்தளவிற்கு மாற்று அரசியலின் குரல்களாகவும், முற்போக்கு வாதிகளாகவும் முன்னிருத்துகின்றனவோ அதே அளவிற்கு அவர்களின் இணையதளங்களில் ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் தனக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயல்கின்றன. மேலும், தனக்கு சாதகமான அரசியல் நிலைப்பாடுகளை அவ்வப்போது மிக சூட்சுமமாக பார்வையாளர்/வாசகருக்கோ கொண்டு செல்வதில் இந்திய ஊடகங்கள் அசாத்திய திறமை படைத்தவை. இத்தகைய செயல்பாடுகளால் தனக்கான அரசியல் கூட்டணிகளை இந்திய ஊடக நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன. நீரா ராடியாவின் தொலைப்பேசி உரையாடல்கள் பல பிரபல இந்திய ஊடகவியலாளர்களின் நிஜ முகத்தை நமக்கு காட்டியது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், மர்டாக்கை விமர்சன ரீதியாக அணுகும் நம் இந்திய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அதற்கான தார்மீகத்தை கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியதாகிறது. சமூகத்திற்கான மாற்று அரசியலை பேசுவதாக பாவனை செய்யும் இந்த ஊடகங்களும், அதன் பிரபல முகங்களும் இந்த இடத்தில் தன்னுடைய நிஜமுகத்தை வெளிப்படுத்துகின்றன.

மேலும், உலகளாவிய ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனிக்கும் போது, ஊடகத் துறையின் அறம் குறித்த வரையறை எப்படிப்பட்டது? ஊடக வெற்றியும் அறமும் கைக்கோர்த்து நடைபோட முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விக்கான விடையை ஒரு சாமியாரின் அந்தரங்கத்தை தொடர்ச்சியாக ஒளிப்பரப்பிய ஊடக சாம்ராஜ்ஜியத்தை பெருமளவில் ஆதரிக்கும் ஒரு சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் யோசிக்கலாம்.