இரு புத்தகங்கள்

அசோகமித்திரனின் இருவர் என்ற குறுநாவல் தொகுப்பில் அவர் மற்ற எழுத்தாளர்கள் நினைத்துப் பார்க்கவும் தயங்கக்கூடிய விஷயங்களை அநாயசமாகக் கடந்து செல்கிறார். இருவர் என்ற கதையில் சிறுவன் விசு, ஒரு விபத்தில் இறந்த தன் தந்தையை நினைத்தபோதெல்லாம் அழைத்துப் பேசுகிறான், மூன்று இடங்களில் ஆற்றைக் கடந்து ஏறத்தாழ இருபத்தைந்து மைல்களை தன்னந்தனியனாக ஐந்து மணி நேரம் ‘நடந்து’ முன்பின் போயிராத ஆனால் சரியான இடத்தைச் சேர்கிறான், அடிக்கடி நிட்டை போன்றதொரு நிலையை அடைகிறான், வளர்ச்சியில்லாத தன் தங்கையின் பாதங்களை அப்படியொரு நிட்டையில் பற்றியிருந்து அவள் குறையைப் போக்குகிறான், தன் தாயின் மரண தருவாயில் அவளை இறந்த தன் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்- இது போன்ற பல்வேறு அதிசயங்கள், நம்பமுடியாத ஆச்சரியங்கள். ஆனால் நிகழ வேண்டிய அந்த ஒரு அதிசயம் மட்டும் நிகழ்வதில்லை-

அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்களில் ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை. “எதற்கும் ஒரு தொடக்கம் ஒரு விளைவு என்று ஒன்று உண்டு” என்பதை அறியாச் சிறுவனாக இருக்கும் விசு, உலக நடப்பின் ஒரு ஆழ்தள உண்மையின் அறிதலை அசோகமித்திரனுடன் பகிர்ந்து கொள்பவனாயிருக்க வேண்டும்: இந்தக் கதைகளின் நிகழ்வுகளின் துவக்கம் விபத்து, உடனிகழ்வு போன்ற அசாத்தியங்களில் நேர்கிறது- விளைவுகள் வாழ்வின் தற்காலிகத்தன்மையை அடிக்கோடிடுவது போல் எதிர்பாரா திசையில் செல்கின்றன. துவக்கங்களை விளைவுகள் தொடர்ந்தாலும், துவக்கங்கள் தர்க்கத்துக்கப்பாற்பட்டவை – விளைவுகள் துவக்கங்களில் நிழலைத் தொடுவதில்லை. அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்கள் இருப்பின் மாறிலிகளை வெவ்வேறு கோணங்களில் விசாரித்து நிராகரிக்கின்றன.

அசோகமித்திரனின் சிந்தனையின் திசை மிக நுட்பமானது- சென்னைக்கு வரும் தனத்தின் நினைவுகள் இப்படிச் செல்கின்றன, “தனம் தெருவைப் பார்த்தாள். சில வீடுகள் கிராமத்து வீடுகள் மாதிரி இருந்தன. திண்ணை, மரத் தூண், வாசல் படிக்குப் பக்கத்தில் விளக்குப் பிறை. சில அப்படி இல்லை. வீடே தெருவுக்கு வந்த மாதிரி இருந்தது. பல வீடுகள் முன்னால் கோலம் போட்டிருந்தது. அழியாமல் இருந்தது. அவள் அறிந்து வைதீசுவரன் கோயிலில் பறவைகள், கோலமிடப்படும் அரிசி மாவைக் கொத்திப் போகக் காத்திருக்கும். விடிந்து சிறிது நேரத்திற்குக் கோலமிட்ட இடம் தெரியும். ஆனால், பெரும் பகுதி மறைந்திருக்கும். விசேஷ நாட்களில் கல்லுரலில் மாவரைத்துச் செம்மண் இட்டுப் போடும் கோலங்கள்தான் நீடித்து இருக்கும். இந்த இருவேறு கோலங்களைப் போலத்தான் மனித உடலோ? ஒன்று மறைந்து அழிந்து விடுகிறது. இன்னொன்று நிலைத்து நிற்கிறது. அவர்கள் வீட்டிலேயே இசைப் பயிற்சி நடக்கும்போது, அதுவும் அவள் பாட்டி இருந்தபோது அவள் அடிக்கடி கத்துவாள், “சுருதியை விடாதேடீ! சுருதியை விடாதேடீ!” பாட்டு பாடுபவர்கள் சிறியவர்களாயிருந்தாலும் பெரியவர்களாயிருந்தாலும் காது கூசும்படி வைவாள். கைக்கருகில் இருந்தால் அடித்தும் விடுவாள்.

மகா வித்துவான்களும் மிகுந்த தேர்ச்சி பெற்ற பக்க வாத்தியக்காரர்களும் இத்தனை நாள் என்று இல்லாது தங்கியிருந்து சங்கீத விவாதத்தை தொடர்ந்து நிகழ்த்தும் வீட்டைச் சேர்ந்த தனம் சென்னைக்கு வந்து ஒரு கிராமபோன் கம்பெனிக்காக கால் ஹார்மோனியத்தையும் தபலாவையும் பிரதான பக்க வாத்தியமாக வைத்துக்கொண்டு கீச்சுக் குரலில் பேசிப் பாடுகிறாள். கதையின் இந்த பின்நிகழ்வை இணைத்துப் பார்க்கும்போது அவளது குகைக் கனவைப் போலவே இந்த எண்ண ஓட்டமும் எதிர்காலம் குறித்த அவளது துல்லியமான அச்சங்களை மெய்ப்பித்து காட்டுகிறது. எனக்கு இசையின் சுருதி, கோலத்தின் இணைகோடுகள் மற்றும் தனம்-விசு என்ற இருவரின் பிணைப்பை நினைவுறுத்தும் இந்த ஒரு பத்தி, கிராமத்திலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து திரும்பும் கதையின் போக்கைப் பார்க்கும்போது மிகவும் உருக்கமான கட்டமாக இருக்கிறது.

அசோகமித்திரனின் இந்த இருவர் என்ற குறுநாவலைப் பற்றி மட்டுமல்ல, மற்ற நான்கு குறுநாவல்களிலும் காணப்படும் அவரது தனித்துவ பார்வை, அது கதையாக விரியும் தன்மை, அதிலுள்ள நுட்பங்கள் என்று ரசித்துப் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் இது ஒரு சிறு வாசிப்பு மட்டுமே. இதில் அசோகமித்திரனின் சில தனித்தன்மைகள் தொட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

பொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று விரிகின்றது: அவரது சிந்தை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது. அசோகமித்திரனின் கற்பனையின் தனித்துவம் அது எங்கு துவங்கினாலும் எப்படிப்பட்ட அசாத்தியங்களைத் தொட்டாலும் இறுதியில் இயல்பு வாழ்வின் இன்றியமையாத்தன்மைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்பதுதான். அவர் இந்த குறுநாவல்களில் விவரிக்கும் துவக்கங்களனைத்தும் காரணங்களையொட்டி நிகழ்வதில்லை; விளைவுகள் துவக்கங்களின் சாத்தியங்களுக்கு உத்தரவாதமளிப்பதாயில்லை.

ஏதோ ஒரு திருப்பத்தில் நிகழக்கூடிய ஒரு விபத்து, அல்லது கண்ணாடித் தடுப்புக்குப்பின் எதிர்கொள்ளப்படக்கூடிய ஒரு உடனிகழ்வு, எது வேண்டுமானாலும் ஒரு புதிய துவக்கத்துக்குக் காரணமாகலாம்: ஆனால் இந்தக் கதைகளில் இவற்றின் விளைவுகள் மனித வாழ்வில் நாம் எப்போதும் நிலையாக எடுத்துக் கொள்ளும் விஷயங்களின் அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பனவாக இருக்கின்றன.

(அசோகமித்திரனின் “இருவர்” என்ற தொகுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருவர், பாவம் டல்பதடோ, வண்ணங்கள், மாறுதல் மற்றும் மாலதி என்ற ஐந்து தவிர்க்கக்கூடாத குறுநாவல்கள் உள்ளன)

-o00o-

மனித குலத்தின் மைல்கற்கள் என்று சொன்னால் நெருப்பின் பயன்பாட்டைக் கண்டுபிடித்தது, சக்கரத்தை வடிவமைத்தது போன்றவற்றோடு பெரியம்மை ஒழிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். நெருப்பின் பயன்பாடும் சக்கரத்தின் வடிவமைப்பும் அடிப்படையில் எளியவை. ஆனால் விளைவுகள் அளப்பரியவை. பெரியம்மை ஒழிப்புக்கும் அத்தன்மை உண்டு.

பெரியம்மை வைரஸ் கிருமி மனிதனை மட்டும் தாக்கும் ஒரு தொற்று நோய். மனிதர்களிடையே அக்கிருமிக்கு இடமில்லையெனில் பூமியில் அந்த நோய் அழிந்ததாகக் கொள்ளலாம். சுவாசக் குழாய் வழியாக மனிதனுட்புகும் இந்த வைரஸ், இரண்டு வாரங்கள் அமைதி காக்கிறது. அதன்பின் தலைவலி, காய்ச்சல், உடல்வலி போன்றவை மூன்று நான்கு நாட்களுக்கு உபாதிக்கின்றன. அதைத் தொடர்ந்து கொப்புளம் வைக்கிறது. இரண்டு வாரங்கள் சென்றபின் இந்த கொப்புளங்கள் காய்த்துப் போகின்றன. பொதுவாக மூன்றுக்கு ஒருவர் பெரியம்மை நோய் தாக்கினால் மரணமடைவர் என்று சொல்லலாம். பிழைத்துக் கொண்டவர்களும் பெரியம்மையின் தழும்புகளோடு வாழ வேண்டும், கொப்புளங்கள் கண்ணைத் தாக்கினால் பார்வையிழப்பதும் உண்டு. மனிதனால் பெரிய அளவில் அஞ்சப்பட்ட நோய் இது.

இதை ஒழிப்பது மிக சுலபம். ஏதோ ஒரு காலகட்டத்தில் பூமியில் யாருக்கும் இந்த நோய் இல்லாதிருந்தால் போதும். அது நிரந்தரமாக ஒழிந்துவிடும்- இந்த வைரஸ் மனித உடலுக்கு வெளியே ஜீவித்திருக்க முடியாதது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் உலக வரலாற்றில் முதல் முறையாக பெரியம்மை நோயை அழிக்கும் வாய்ப்பு மனிதர்களுக்குக் கிடைத்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத யுத்தத்தின் விளிம்பைத் தொட்ட கோல்ட் வார் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அனைத்து அரசுகளும் ஒருங்கிணைந்து இதை சாதித்தது என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. இந்த சாதனைக்கு தலைமை தாங்கிய WHO Smallpox Eradiction Unitன் தலைவராக இருந்த Isao Arita இது எப்படி சாத்தியப்பட்டது என்பதை சுருக்கமாக “The Smallpox Eradication Saga- An Insider’s View” என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார். இதில் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்று- பெரியம்மை ஒழிப்பில் ஒரு திருப்பத்தை நிகழ்த்திய மருத்துவர் சென்னையைச் சேர்ந்த ஏ. ராமச்சந்திர ராவ். இவர் பெரியம்மை வைரஸ் மெல்லத் தொற்றும் நோய் என்று நிறுவினார்- அது துயரரோடு நெருங்கிப் பழகுபவர்களையே தாக்குகிறது என்றும், அவர்கள் வழியாக மற்றவர்களைத் தொற்ற நாற்பது சதவிகித வாய்ப்புதான் உள்ளது என்றும் கண்டுபிடித்தார். இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகவும், இது உலக சுகாதார அமைப்பின் பெரியம்மை தடுப்பு நடவடிக்கைகளை நூறு சதவிகித தடுப்பூசி பாதுகாப்பு என்ற இலக்கிலிருந்து பெரியம்மை கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் என்ற திசையில் முன்னெடுத்துச் செல்ல உதவியது என்றும் அரிடா எழுதுகிறார். நான் இவரைப் பற்றி ஏதேனும் தமிழில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நான் ஏமாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர், பெரியம்மை காட்டுத்தீ போல பரவக்கூடியது என்று அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அக்கம் பக்கத்தில் வசிப்போரிடம் முழு அளவு கவனம் செலுத்தி அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு அவர்களை கவனமாக கண்காணித்தால் பெரியம்மை பரவுவதைத் தடுக்க முடியும் என்று நிரூபித்தவர் ஏ ராமச்சந்திர ராவ்- சென்னையில் நான்கே மாதங்களில் இப்படியொரு பெரியம்மை தாக்குதலை கட்டுக்குக் கொண்டு வந்த இந்த மருத்துவரின் வழிமுறைகள் உலகெங்கும் பெரியம்மை தடுப்பு வியூகம் அமைக்க உதவியுள்ளன. இதை இணையத் தமிழன் அறிந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.

1966ல் பெரியம்மை நோயை ஒழிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியபோது அதன் நிதியாதாரங்கள் என்ன, எந்த நாடுகள் எவ்வளவு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கடுமையான விவாதங்கள் எழுகின்றன, என்று இந்தப் புத்தகத்தைத் துவங்கும் அரிடா பெரியம்மை நிலவிய வெவ்வேறு நாடுகளில் அது எந்த ஆண்டு எப்படிப்பட்ட அணுகுமுறையால் ஒழிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார்.  அப்போது சுகாதாரத் துறையினர் எதிர்கொண்ட சவால்கள் வெவ்வேறு விதமானவை என்று கூறி அவற்றையும் விவாதிக்கிறார் அரிடோ.

ஆண்டொன்றுக்கு இரண்டரை மில்லியன் டாலர்கள் இந்தத் திட்டத்துக்கு தேவைப்படுகின்றன. இது உலக சுகாதார நிறுவன பட்ஜெட்டில் ஐந்து சதவிகித அளவுக்கு கூடுதல் நிதியைக் கோருவதாக இருக்கிறது. பல நாடுகளும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இதை எதிர்க்கும்போது, ஒரு கிழக்கு ஐரோப்பிய தேசத்தின் பிரதிநிதி முக்கியமான புள்ளிவிவரமொன்றைச் சுட்டிக் காட்டுகிறார்- அமேரிக்கா ஆண்டொன்றுக்கு பெரியம்மை நோய் தடுப்புக்கு நூற்று நாற்பது மில்லியன் டாலர்கள் உள்ளூரில் செலவு செய்கிறது. ஒரேயடியாக உலகை பெரியம்மை நோயிலிருந்து விடுவிக்க ஆண்டொன்றுக்கு இரண்டரை மில்லியன் டாலர்கள் என்று பத்தாண்டுகள் செலவு செய்வதொன்றும் பெரிய விஷயமில்லை என்று சொல்கிறார் அவர். “கைவசமுள்ள தொழில்நுட்பம் மற்றும் அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்தி தேசிய, இன அரசியல் வேற்றுமைகளை கடந்து நாம் செயல்பட்டால் இம்முயற்சியில் வெற்றி பெறுவது உறுதி” என்றும் சொல்கிறார் அவர். உலகை ரஷ்யாவும் அமெரிக்காவும் பங்கு போட்டுக் கொண்டு என் மேல் கை வைத்தால் உலகையே அழிப்பேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்த ஒற்றுமை கைகூடியிருக்கிறது.

http://science.nationalgeographic.com/science/enlarge/african-smallpox-idol.html

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பெரியம்மை தடுப்பு நடவடிக்கைகள் 1967ல் உலக சுகாதார அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றே ஆண்டுகளில் அந்த பத்தொன்பது நாடுகளில் பெரியம்மை முழுமையாக ஒழிக்கப்பட்டு விடுகிறது. இதற்கான நிதியை அமெரிக்கா அளிக்கிறது: அது ஆப்பிரிக்காவுக்குத் தந்த உதவித் தொகை உள்ளூரில் பெரியம்மையைத் தடுக்க முப்பத்தாறு நாள் செலவுக்கு இணையான ஒன்று.

1973ஆம் ஆண்டு உலகெங்கும் ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் பேர் பெரியம்மை தாக்குண்டனர். இதில் 95 சதவிகித பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய மூன்று தேசங்களில்தான் இருக்கின்றன. உலகில் ஒருவருக்கு பெரியம்மை இருந்தாலும் அனைவருக்கும் அதனால் ஆபத்து என்றாலும்கூட, முதலில் இந்த மூன்று நாடுகளிலும் பெரியம்மையை ஒழிப்பது மிக அவசியமான ஒன்று என்று உணரப்படுகிறது.

இந்த நிலை இந்தியாவை இக்கட்டில் ஆழ்த்துகிறது- 1973ல் நடைபெற்ற ஒரு சர்வதேச சுகாதார கலந்தாலோசனைக் கூட்டத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத் திட்டங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று உதவிக் கரம் நீட்டுகிறார். ஒரு மேற்காசிய பிரதிநிதி,”பெரியம்மையை ஒழிக்க முடியாத ஒரு நாடு, ஏற்கனவே பெரியம்மை ஒழிப்பில் வெற்றி பெற்றுவிட்ட ஒரு நாட்டுக்கு உதவ முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்! இந்தியா உலக சுகாதார அமைப்புடன் கலந்தாலோசித்து பெரியம்மை தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. டார்ஜட் ஜீரோ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் இந்திய அரசு பெரியம்மை ஒழிப்புக்கு மேலதிக முக்கியத்துவம் தருகிறது என்றும் இனியும் தேவையின்றி பெரியம்மை நோயால் எவரொருவர் சாவதையும் ஏற்க முடியாதென்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்,

இதைத் தொடர்ந்து நம் அரசு எந்திரம் விழித்துக் கொள்கிறது- ஒரே வாரத்தில் எண்ணூறு துயரர்கள் அடையாளம் காணப்பட்ட நிலை பத்தாயிரமாக அதிகரிக்கிறது. அதாவது இதுவரை நூற்றுக்கு எட்டு பெரியம்மை நோயாளிகள்தான் அரசின் கவனத்துக்கு வந்து சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.1974ல் இந்தியாவில் 198003 பெரியம்மை நோயாளிகள் இருந்த நிலை அடுத்த ஆண்டே 1436ஆகக் குறைந்து 1976ல் இல்லாமல் போகிறது.

ol_spபுதிய பெரியம்மை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பதினெட்டே மாதங்களில், 24.5.1975 அன்று சைபான் பீபி என்ற பிச்சையெடுக்கும் பெண்ணைத் தாக்கி இந்தியாவில் அந்த நோய் முடிவுக்கு வருகிறது. 25.6.1975ல் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டட நிலையில் 30.7.1975 அன்று ஆறு வாரங்களாக இந்தியாவில் ஒருவர் கூட பெரியம்மையால் பாதிக்கப்படவில்லை என்ற வெற்றியைக் கொண்டாடும் இந்திரா காந்தி, “பொருளாதார பின்னடைவால் உருவாகும் வியாதியே பெரியம்மை…. அலட்சியமாகவோ கவனமில்லாமலோ இருந்து மீண்டும் அது தலையெடுத்துவிட அனுமதிக்கக்கூடாது… நாம் தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும்” என்று அறிக்கை விடுகிறார்.

இந்தியாவில் பெரியம்மை ஒழிக்கப்படுவதற்கு முன்னரே, 1971ல் வங்காள தேசத்தில் பெரியம்மை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இந்திய பாகிஸ்தான் யுத்தம் தொடர்ந்த கண்காணிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. போர் முடிந்து இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகள் வங்க தேசத்துக்கு பெரியம்மை நோய் கிருமிகளைத் திரும்பக் கொணர்ந்தனர்- அடுத்த ஆண்டே ஏறத்தாழ பதினொன்றாயிரம் பேரை பெரியம்மை தாக்கியது. 1971ல் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய விஷயம் 1975 வரை உலகுக்கு அச்சுறுத்தலாகத் தொடர்ந்தது.

போர் மனிதனின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. போர் அச்சுறுத்தல் தேசங்களையும் அமைப்புகளையும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்தலாம். ஒரு வகையில் இந்த விழிப்பு நிலையே பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்று ஆண்டுகளை சாத்தியப்படுத்தியிருக்ககூடும். இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் உலகில் இரண்டே இரண்டு போர்கள்தான் நடந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, வங்காள தேசத்தை முன்வைத்து இந்திய பாகிஸ்தான் போர், இரண்டாவது எதியோப்பிய சோமாலிய போர். இவ்விரு போர்களும் பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்தன. எதியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் பரவியிருந்த ஒகாடன் பாலைவனம், எதியோப்பிய சோமாலிய போரின் காரணமாக கண்காணிக்கப்பட முடியாததாக இருந்தது. இந்த மூன்று நாடுகளிலும் பயணிக்கும் நாடோடிகள் இந்த பாலைவனத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்ததால் மிகச் சிறிய அளவில் பலி கொண்டாலும் பெரியம்மை உலக நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகத் தொடர்ந்தது- இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவுக்குப் புனிதப் பயணம் செய்வதால் பெரியம்மை நோய் ஓரிரு இடங்களில் எஞ்சியிருந்தாலும் ஏற்படக்கூடிய இழப்புகள் பயங்கரமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது. ஒரு உச்சகட்ட பிரம்மப்பிரயத்தன முயற்சியில் ஒகாடன் பாலைவனத்தில் உலக சுகாதார அமைப்பின் முழு கவனமும் தீவிரமாக செலுத்தப்பட்டு அக்டோபர் 1977 ல் உலகின் கடைசி இயற்கை பெரியம்மை தொற்று அலி மாவ் மாலின் என்ற 23 வயது இளைஞரில் அடையாளம் காணப்பட்டு முடிவுக்கு வந்தது.

அதன்பின் இங்கிலாந்தில் ஒரு ஆய்வுக்கூடத்திலிருந்து இந்தக் கிருமி தப்பி அங்கு வேலை செய்த திருமதி பார்க்கர் என்ற பெண்மணியையும் அவரது தாயையும் தாக்கியது வேறு கதை- இது புதிய அச்சங்களை, பெரியம்மையின் புதிய அவதாரத்தின் சாத்தியங்களைக் குறித்த விழிப்புணர்வை உலக நாடுகளில் ஏற்படுத்தியது. பெரியம்மை ஒழிப்பு ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய டாக்டர் ஹென்றி பெட்சன் தன் ஆய்வுக் கூடம் இந்த நோய்க் கிருமிகளை முறையாக பாதுகாத்து வைத்திருக்கத் தவறிவிட்டது என்ற குற்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டார். இவர்தான் பெரியம்மையின் கடைசி பலி என்று சொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் பெருமளவில் சாவதற்கும், அது வெல்லப்படவும் பெரியம்மை காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். பெரியம்மைக் கிருமிகளில் தோய்த்த போர்வைகளை வெள்ளைக்காரர்கள் செவ்விந்தியர்களுக்குப் பரிசாக அளித்ததாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் புத்தகத்தில் இல்லை.

எகிப்திய மம்மிகளில் பெரியம்மை தழும்புகள் இருக்கின்றன. இந்தியாவில் முவ்வாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே இந்திய மருத்துவர்கள் பெரியம்மையை inoculate செய்திருக்கிறார்கள். பொதுவாக மூன்றில் ஒருவரை அது காலி செய்கிறது.

2001ல், அமேரிக்கா ஒக்லஹாமா நகரை தீவிரவாதிகள் பெரியம்மைக் கிருமிகளைக் கொண்டு தாக்கினால் என்ன ஆகும் என்று ஒரு சிமுலேஷன் செய்தார்கள். அது வெகு விரைவில் கட்டுமீறிப் போய் ஏழே வாரங்களில் ஒரு மில்லியன் பேரைக் கொல்லும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இந்த சிமுலேஷனுக்குப் பெயர் ஆபரேஷன் டார்க் வின்டர். இதையடுத்த சில மாதங்களில் இரட்டை கோபுரங்கள் சாய்க்கப்பட்டன.

இன்று உலகை அச்சுறுத்தும் விஷயம் என்னவென்றால் உலகில் எங்காவது ஒரு லேப்பில் இந்தக் கிருமி இருந்து, அது போகக்கூடாத ஆளிடம் போய் விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். தடுப்பூசிகளை நிறுத்தி நாற்பது ஆண்டுகளாகி விட்டன. பொதுவாக மூன்றில் ஒருவர் மரணமடைவது வழக்கம்.

இதுதவிர பெரியம்மை வைரஸின் மரபணுத் தொகுப்பு முழுமையாக வாசிக்கப்பட்டுவிட்டது. அதன் 190000 பேஸ் பேர்களும் அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில் இது பரிசோதனைக் கூடங்களில் புதிதாக வடிவமைக்கப்பட முடியாததில்லை.

மனிதனைக் கிருமிகள் கருவியாகப் பயன்படுத்தியதில் ஏற்பட்ட அழிவைவிட கிருமிகளை மனிதன் கருவிகளாகப் பயன்படுத்துவதில் உள்ள அச்சுருத்தல்தான் இன்று மனித குலத்துக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

(முற்றும்)