ஆயிரம் தெய்வங்கள் – 12

கிரீஸ் தேசம்

உலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர், மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கியதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஏஜியன் கடல் துருக்கியையும் கிரீசையும் பிரிக்கிறது. மேற்கே அயோனியன் கடல் கிழக்கே ஏஜியன் கடல் இடையே புள்ளி புள்ளிகளாகத் தோன்றும் எண்ணற்ற தீவுகளும் கிரேக்க நாகரிகங்களைப் பறைசாற்றும். மேற்படி இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள கிரீஸ் தேசத்தின் வடக்கே மாசிடோனியா, மேற்கே எயிட்டோலியா, கொரிந்த், ஸ்பார்ட்டா, லாக்கோனியா, ஆகியவை அடங்கிய பெலப்போனஸ் மலைத்தொடர், பின்னர் திபெஸ், மராத்தான், யுபோயா, ஏதன்ஸ் எல்லாம் இணைந்த பண்டைய கிரீஸ் நாகரிகம் தெற்கே கிரீட் தீவு வரை பரவியுள்ளது. கிரீட் மக்கள் கிரேக்கர்களால் வெல்லப்பட்டனர். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கிரீட் வளர்த்த நாகரிகப் பெருமையை 1870 -இல் புதையுண்ட நாஸ்ஸோஸ் (KNOSSOS) தலைநகரை அகழ்வாராய்ச்சி வெளிக்கொணர்ந்தது. நாஸ்ஸோஸ் நாகரிகச் சின்னங்களான அரண்மனைக் கட்டிடங்கள், வீடுகள், கழிவுநீர்க் கால்வாய்கள், நீர்வழி அமைப்புகள், மட்பாண்டங்கள், சிற்பங்கள் எல்லாம் கிரீட்டின் கடல் வணிகப் பண்பாட்டை உணர்த்தப் போதுமானவை. எனினும் கிரீட் மக்களும் ட்ராய் மக்களும் கிரேக்க இனத்துடன் தொடர்புள்ளவர்கள். ஆனால் கிரேக்கர்களாகக் கருதப்படும் மக்கள் டான்யூப் நதிச் சமவெளியிலிருந்து குடியேறியவர்கள். வேதகால சமஸ்கிருதம் பேசியவர்கள். இவர்களுக்கும் இந்தியாவில் குடியேறிய ஆரியர்களுக்கும் தொடர்பு உண்டு. கிரேக்க புராணங்களில் கிரேக்கர்கள் ஆக்கேயர்கள், அயோனியர்கள், டோரியர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர்.

தியோகோனி

கிரேக்கர்களின் தொன்மைப் பண்பாடுகளை அறிய ஹிசையத்தின் தியோகோனி (Theogony) அடிப்படை நூல், தியோகோனி என்றால் “படைப்பின் தோற்றம் – முதல் தெய்வ வாரிசுகள்” எனலாம். ஹிசையத்துக்குப் பின்னர் ஹோமரின் முற்றுப்பெறாத காவியமாகிய இலியத், இலியத்தின் முழுமையைப் புத்துருவம் செய்யப் புகுந்த புராதனக் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் கிரேக்கப் புராணங்களை முழுமையுறச் செய்துள்ளனர். பிளாட்டோவிலிருந்து இன்றைய காலகட்டத்திலும் பிரஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி இலக்கிய கர்த்தாக்கள் தங்களது புதினங்களுக்கு இன்னமும் கிரேக்க புராணங்களிலிருந்து கதைக்கரு தேடுகின்றனர்.  நிறைய ஹாலிவுட் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஹெலன் ஆஃப் ட்ராய் பழைய சினிமா, புதிய ரிமேக் எல்லாம் சுவாரசியமானவை. மகாபாரதம், ராமாயணம் எல்லாம் நிகழ்ந்தவையா இல்லையா என்று கேட்கப்படுவது போல் ஹோமரின் உலகத்தை உண்மையென நிலைநாட்ட மைசீன் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவு போதும். 1876-ஆம் ஆண்டில் மைபீன் என்ற புராதன கிரேக்க நகரத்தை ஒட்டியுள்ள பிலோப்போனஸ் மலைத்தொடரில் ஒரு ஜெர்மானியப் பேராசிரியர் அகழ்வாராய்ச்சி செய்து ஹோமல் உலகை நிஜமாக்கிவிட்டார். ஹோமர் குறிப்பிட்டுள்ள மைசீனியர்கள் (கிரேக்கர்கள்) கற்பனையில் பிறந்த தேவகுமாரர்கள் அல்லர் என்பதும் நிஜமான கிரேக்க மன்னர்களே என்பதும் நிரூபணம். அநேகமாக இவர்கள் வெண்கல யுகத்தைச் சேர்ந்த பழங்குடி மன்னர்கள்.

தியோனோனியில் வர்ணிக்கப்பட்டுள்ள ஒலிம்பியா விண்ணுலக சொர்க்கம். தெய்வங்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். உண்மையில் பிலப்போனஸ் மலைத்தொடரில் ஒலிம்பியா நகர இடிபாடுகளும் அகழ்வாராய்ச்சியில் துலக்கப்பட்டுள்ளன. புராண அடிப்படையில் ஒலிம்பியா என்பது கிரேக்க தெய்வங்களின் விண்ணுலகம். ஆல்ஃபியஸ் நதியும் கிளாடியஸ் நதியும் சங்கமமாகும் ஒலிம்பியா பள்ளத்தாக்கு கிரீஸின் வளமான பகுதி. மண்ணில் உள்ள பொன்னகரம் புராண அடிப்படையில் விண்ணுலகின் பொன்னகராயிற்று.

புராண மரபின்படி தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் (ஜுபிட்டர்) தன் தந்தை குரோனசுடன் நிகழ்த்திய போர் வெற்றியே முதல் ஒலிம்பிக் விளையாட்டு. பகுத்தறிவுக்கு கிரேக்க சிந்தனைகளே முன்னோடி என்பர். பகுத்தறிவு பிறந்த அந்த நாட்டில்தான் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராணங்களும் தெய்வீகக் கதைகளும் இலக்கியவாதிகளின் சுரங்கங்களாயுள்ளன. புராணங்களையும் பழைய தெய்வங்களையும் கிரேக்கர்கள் நம்புகின்றனரா என்று கேட்பதைவிட பிடியாஸ் செதுக்கியுள்ள ஸீயஸ் சிலை வழங்கும் தெய்வீக தரிசனத்தை வியப்பது உண்டா? என்ற கேள்வி முக்கியமானது. இந்தியாவில் அப்படிப்பட்ட தெய்வீகச் சிலைகளுக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட அழகுச்சிலைகளின் கலை அம்சத்திற்கு மேல் நெஞ்சில் தைக்கக்கூடிய ஒரு தெய்வீக தரிசனம் அல்லது ஆனந்த உணர்வுக்கு முன் எத்தகைய பகுத்தறிவும் பொருளற்றுப் போய்விடுவதுண்டு!

பகுத்தறிவு என்பது காரணகாரியத் தொடர்புள்ளது. புராணம்(Myth) என்பது உண்மையை உள்ளடக்கிய கற்பனை. காரண காரியத்திற்கு அப்பாற்பட்டது. புராணம் என்ற களிமண்ணைக் கலைஞர்கள் தம் கற்பனை வளத்துடன் உருவங்களாகப் பிசைந்துவிட்டார்கள். இந்த உருவங்களால் மனித சிந்தனைக்குரிய வரலாறே வளமானது. இது பாரத மண்ணுக்கு மட்டுமல்ல. கிரீஸ் தேசத்திற்கும் இதுவே உண்மை நிலை. பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் தந்தையாகிய பிளாட்டோவுக்கும், இலியத்-ஒடிஸ்ஸே எழுதிய ஹோமருக்கும், இன்னம் பற்பல கிரேக்க கலைஞர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் தியோகோனி – அதாவது ஒலிம்பிக் தெய்வங்கள் ஆதர்சமாயிருந்தன.

பிளாட்டோவின் சிம்போசியம்

தெய்வங்களின் படைப்பைப் பற்றி பிளாட்டோ உருவாக்கிய சிம்போசியம் தெரிவிக்கும் கருத்து சிறப்பானது. “மனிதனை மிகவும் சக்தியுள்ளவனாகப் படைக்க வேண்டுமென்று தெய்வம் ஆசைப்பட்டது. அதனால் மனிதனுக்கு இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்கள் இவற்றுடன் அசுரபலம் வழங்கியது. மனிதனின் தோற்றமே அகோரமாக இருந்தது. மனிதனின் கோர உருவத்தைப் பார்த்துப் படைத்தவனே அரண்டு போனான். ஆகவே, படைத்தவன் மனிதனின் பலத்தைக் குறைத்து ஒரு தலை, இரண்டு கை,  இரண்டு கால் என்று உடலைப் பாதியாகக் குறைத்தான். மனிதன் பலவீனமானான். தனது குறையை உணர்ந்த மனிதன் மறுபாதியைத் தேடி அத்துடன் இணைய ஆசைப்பட்டான். அப்போதுதான் முழுமைபெற முடியும் என்று எண்ணினான். இந்தத் தேடலே “அன்பின் ரகசியம்” அதாவது சிம்போசியம்.

ஹிசையாத்

பொதுவாகப் புராணத்தில் பொதிந்துள்ள ரகசிய உண்மைகளைத் தேடுவது, விளக்கம் அளிப்பது என்று ஆரம்பத்தால் அந்த அளவில் கிரேக்க புராணங்களில் ரகசியங்கள் உள்ளனவா என்பது ஐயமே. எனினும் ஹிசையாத் போன்ற கவிஞர்களும், நீதிமான்களும், ஞானிகளும் புராணங்களைச் சொல்லி நீதிநெறிகளை விளங்க வைத்தனர் எனலாம்.

புராணத்தின் குறிக்கோள், கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை மண்ணுக்கு இழுத்து வந்து மனிதனுடன் நெருக்கம் செய்து தருவதே. இது இந்தியாவில் மட்டுமல்ல. கிரீசிலும் நிகழ்ந்தது. கிரேக்க புராணங்களிலிருந்து பாடல்களைப் புனைந்த ஹிசையாத்தின் காலம் கி.மு.8-ஆம் நூற்றாண்டு. சொல்லப்போனால் ஹோமரின் காவியங்களிலும் பழைய புராணக் குறிப்புகள் உண்டு. கிரேக்க புராணங்களில் உள்ள தோற்றக்கதைகள், தெய்வங்களின் பாரம்பர்யங்கள் ஆகியவற்றை ஹிசையாத் வழங்கியுள்ளார் இவைதான் தியோகோனி எனப்படுகிறது. ஒலிம்பிக் தெய்வப் பிறப்பிலிருந்து தொடங்கலாம்.

தொடக்கநிலை

ஹிசையாத்தின் கருத்துப்படி உலகம் முதலில் வெற்றிடமாயிருந்தது. பூமி வெற்றிடத்தைப் பற்றிக் கொண்டது. பூமியின் கீழ் குழப்பம் நிலை கொண்டது. இக்குழப்பமே எரிபஸ். எரிபஸ் பாதாள உலக நரகமானது. பூமிக்கு மேல் வந்த வானம் சுயம்பு. பூமியின் புதல்வனாக வானம் சுயமாக உருப்பெற்றுள்ளது. மேலே விண்ணும் கீழே பாதாளமும் வந்தபின் பூமி-புவி அமைப்பு நிலை பெற்றது. புவி அமைப்பு நிலை பெற்றதும் ஈராஸ் வந்தது. ஈவாள் தெய்வமே படைப்புகளின் ஆதாரம். கீழே பாதாளத்தில் இரவும் பகலுமாக எரிபஸ்ஸும் ஹெக்கேடும் குழப்பத்தின் குழந்தைகளாகக் கருதப்பட்டன. பூமியின் மூன்றாவது முயற்சி கடல். பூமி தோற்றுவித்த அசையாப் பொருட்களான வானம், பாதாளம், கடல் தோற்றத்திற்கு ஈராஸ் உதவி தேவைப்படவில்லை. பின்னர் படைப்புகளுக்குரிய சூழ்நிலை உருவானபோது பூமியின் பரந்தவெளியில் உயர்ந்த மலைகளும், மலைகளுக்கு மேல் விண்ணும், விண்ணுக்கு மேல் சொர்க்கமும், அந்த சொர்க்கத்திற்குக் கதவுகளும் கடல் பரப்பில் நிழலாடினவாம். குழப்பத்திலிருந்த இரவு-பகல் விருப்பட்டன. இரவு தெய்வம் பகல்-இரவைப் படைத்தது. இரவில் தோன்றும் ஒளியாக ஈத்தர் வந்தது. ஈத்தர் என்பதை தெய்வங்கள் மட்டுமே உணரும். பகல் – இரவு வந்தாலும் கிரஹ சஞ்சாரமும் நட்சத்திரங்களும் வரவில்லை. ஹீலியஸ் – செலின் தோன்றியபின் கிரஹங்கள் வந்தன.

ஜியாக்ரஃபி

புவியைக் குறிக்கும் ஒரு சொல் ஜியோ. ஜியாக்ரபி, ஜியாலஜி எல்லாம் ஜீயே என்ற கிரேக்கச் சொல்லின் நீட்சி. கிரேக்க புராணத்தில் பூமாதேவியே படைக்கும் சக்தியுள்ள ஜீயே சம்ஸ்க்ருதத்தில் ஜய, காயே என்ற சொற்களும் பொருள் தரும்.

ஜீயே என்பது பூமி. யுரேனஸ் என்பது விண். தெய்வங்களின் தோற்றங்கள் ஜீயேயும் யுரேனஸும் கூடியதால் விளைந்தன. ஜீயே பூமியின் அதிபதி. யுரேனஸ் சொர்க்கத்தின் அதிபதி.

டைட்டன்களின் உதயம்

முதலில் தோன்றிய பன்னிரு தெய்வங்களும் ஆதி டைட்டன்களாகும். டைட்டன்களை அசுர/அசுரிகளாகவும் கொள்ளலாம். தேவ தேவியர்களாகவும் கொள்ளலாம்.

ஜீயேயும் யுரேனசும் இணைந்து ஆறு பெண் டைட்டன்களையும் ஆறு ஆண் டைட்டன்களையும் உருவாக்கினர்.
ஆறு ஆண் டைட்டன்களாவன- ஓஷியானஸ், கோயஸ், கிரியஸ், ஹைபீரியன், அய்யாப்பீட்டஸ், குரோனஸ்.
பெண் டைட்டன்களாவன- திய்யா, ரியா, தெமிஸ், மனிமோசைன், போயபி, திதைஸ். இப்பன்னிரண்டில் சில டைட்டன்களுக்கு மட்டுமே குறிப்பான பணிகள் உண்டு. தெமிஸ் நீதியைக் குறிக்கிறது. மனிமோசைன் நினைவைக் குறிக்கிறது. உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டுக்கும் உலகின் தொடர்ச்சிக்கும் மனிமோசைன் காரணம். காலச்சக்கரமும் இதுவே.

திதைஸ் தனது மூத்த சகோதரனாகிய ஓஷியானிசை மணந்து அக்கடல் அசுரன் மூலம் இக்கடல் அசுரி, 3000 குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அந்த 3000 குழந்தைகளும் கடல் அலைகளாக வாழ்கின்றனவாம். சூரியனும் கடலும் சங்கமிக்கும் மேல்திசை முடிவில் தீதைஸ் வாழ்வதாக கிரேக்கர்கள் நம்புகின்றனர்.

ஹைபீரியன் விண்வெளி தெய்வம். ஹைபீரியன் தன் தங்கை திய்யாவுடன் கூடி ஹீலியஸ் (சூரியன்) மற்றும் செவின் (சந்திரன்) என்ற சூரியச் சந்திரர்களைத் தோற்றுவித்தார். கோயஸ் என்ற டைட்டன் தன் தங்கை போயபியுடன் சேர்ந்து லீட்டோவைப் படைத்தார். பிற்கால புராண மரபில் புகழ்பெற்ற அப்போலோவுக்கும் அர்ட்ட மீசுக்கும் லீட்டோ தாயானவள்.

மண்ணும் கடலும் இணைந்த நிகழ்ச்சியில் போண்டஸ் என்ற ஆண் தத்துவம் பொருளாகிறது. இந்தத் தத்துவத்தில் பிறந்த எரிபஸ்ஸை கிரியஸ் மணந்து அஸ்ட்ரேயஸ் உதயமானது. அஸ்ட்ரேயஸ் என்பது புலர்காலைப் பொழுது. ஈவோசின் பல கணவன்மார்களில் அஸ்ட்ரேயஸ்ஸூம் ஒன்று. பல்லஸ் என்ற அரக்கனும் எரிபஸ்ஸின் புத்திரன். பின்னர் பெர்சஸ் பிறந்தான். இவன் ஹெக்கேடின் தந்தை. ஹெக்கேட் இரவைக் குறிக்கும் பெண் தெய்வம். பெர்சஸ் தன்னை நாயாகவும் நரியாகவும் மாற்றிக்கொள்ளும் மந்திர வித்தையில் தேர்ந்தவன். ஓஷியானசுக்கும் திதைசுக்கும் பிறந்த கிளேமீனை அய்யப்பீட்டஸ் (சித்தப்பா) மணந்து நான்கு டைட்டன்களுக்குத் தந்தையானார். அந்த நால்வரில் ஒருவனே அட்லஸ். பூமியே அவன் புஜபலத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அட்லஸ் நினைத்தால் ஆகாயத்தையே அலேக்காகத் தூக்கித் தோளில் வைத்துக் கொள்ளக்கூடியவன். இரண்டாவது டைட்டன் மினோஷியஸ். மினோஷியஸ் ஸீயஸ்ஸின் எதிரியாவான். மூன்றாவது நான்காவது டைட்டன்கள் முறையே புரோமீத்தியஸ் மற்றும் எபிமீத்தியஸ்.

ஆறாவது டைட்டன் குரோனஸ் மற்ற டைட்டன்களை விடச் சிறப்புடன் பேசப்படுவதன் காரணம் குரோனசின் வாரிசுகளே எல்லோரையும் வென்று விதியை நிர்ணயிக்கும் சக்திபெற்ற ஒலிம்பிக் தெய்வங்களாயின.

யுரேனைசும் ஜீயே இணைந்து மேற்படி 12 டைட்டன்களோடு படைப்பை நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஒன்று கூடிப் பல அசுரர்களைப் படைத்தனர். அந்த வரிசையில் சைக்ளோப்ஸ் முதன்மையானவன் . புயல், ஆவிகளைக் குறிக்கும் ஆர்ஜஸ் (மின்னல்) ஸ்டீரோப்ஸ் (புயல்-மேகங்கள்) மற்றும் புரோண்டஸ் (இடி) ஆகிய மூவரும் சிறப்பானவர்கள் என்றாலும் மற்ற மூவரும் முதன்மையான சைக்ளோப்சிடம் அடக்கம். ஜீயே உருவாக்கிய மற்றொரு அரக்கன் ஹிகட்டோன் கீரிஸ். பின்னர் நூறு கைகளை உடைய அரக்கர்களான கோட்டஸ், பிரியாரஸ், கைஜஸ் ஆகியோரையும் ஜீயே படைத்தாள். இவர்களில் தந்தையான யுரேனசிடம் வெறுப்புக்காட்டிய ஹிகட்டோன் கீர்ஸை யுரேனஸ் பாதாள உலகில் வெளிச்சமே வராத சிறையில் பூட்டி வைத்தார்.

யுரேனசின் பல செயல்களால் ஜீயே வெறுப்புற்றாள். தனது புதல்வர்களைப் பாதாளச் சிறையில் பூட்டி வைத்ததால் யுரேனசைப் பழிவாங்க முனைந்தாள். தன்னுடைய ஆறு டைட்டன் புதல்வர்களையும் அழைத்து தன் விருப்பத்தை ஜீயே கூறியபோது குரோனஸ் தவிர மற்ற டைட்டன்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். குரோனசுக்கும் யுரேனசுக்கும் என்ன முன் விரோதமோ தெரியவில்லை. தாய்சொல்லைத் தட்டாதே என்று எண்ணியிருக்கலாம். குரோனசிடம் கூரிய வாள் வழங்கப்பட்டது. வழக்கப்படி படைக்கும் தொழிலைச் செய்ய நள்ளிரவில் யுரேனஸ் ஜீயேயைத் தேடிவந்த போது அங்கு ஒளிந்திருந்த குரோனஸ் சரியான நேரத்தில் வந்து யுரேனசின் ஆண்குறியை நறுக்கிவிட்டான். யுரேனசின் புண்பட்ட இடத்திலிருந்து கொட்டிய ரத்தம் பூமியிலும் கடலிலும் விழுந்து அதிலிருந்து எராளமான அரக்கர்கள் தோன்றினர். அப்படித் தோன்றியவர்களில் எரின்னீயஸ், யூமனைடஸ், அலக்டோ, திகிஃபோன், மெகரா என்ற மாயாவி ஆகிய அரக்கர்கள் நரகத்திற்குள் தள்ளப்படும் ஆத்மாக்களை சித்திரவதை செய்ய நியமனமானார்கள். கடலில் விழுந்த யுரேனசின் விந்துவால் ஏராளமான நீர்தேவதைகளும் தோன்றினர். அத்தேவதைகளில் மெலியாவும் ஒருவன்.

தியோ கோனியின் படைப்புக் கதையில் ஒரு புறம் ஜீயேயும் யுரேனசும் ஒலிம்பிக் தெய்வங்களின் பெற்றோர்களை உருவாக்கியதை விவரிப்பதோடு விடவில்லை. போண்டஸ்-ஆண்மையுள்ள பெண் (?) மண்ணுடன் இணைந்து அற்புதமான தெய்வங்களைப் படைத்தது. போண்டஸ் கடலின் உருவகம். அலைகளாகக் காட்சியளிக்கும் சமுத்திர ராணி. போண்டசின் மூத்த வாரிசு நீரியஸ். நீதிவழங்குவதில் சமநிலை மாறாத துலாக்கோல் தெய்வம். தாவ்மஸ் மற்றொரு பிள்ளை. பின்னர் ஃபோர்சைஸ், இது கடல் அரக்கனான ஸ்கைல்லாவின் தந்தை. சீட்டோ, யுரைபியா என்ற புத்திரிகளும் போண்டசுக்கு உண்டு.
போண்டசின் முதல் வாரிசான நீரியசும் ஓஷியானசின் புத்திரியான டோரிசும் இணைந்து நீரிட்ஸ் (Nereids) என்று கூறப்படும் 50 நீர்தேவதைகளைப் படைத்தனர். இந்த 50 நீர்தேவதைகளில் தீத்திஸ்-இலியத் போரில் பங்கேற்ற அக்கில்லசின் தாய். ஆம்பிட்ரைட் மற்றொரு நீர்தேவதை. இது ஸீயஸ்ஸின் சகோதரனான பாசிடானுக்கு மனைவியாயிற்று. அடுத்ததாக ஜலாத்தி. சிசிலியில் பிறந்த ஜலாத்தி ரெஷியானசின் தங்க அரண்மனையில் ஆடிப்பாடி மகிழ்ந்தவண்ணம் நூல்நூற்று வாழ்வதாகக் கடல்வாழ்வுடன் தொடர்புள்ள நாடகங்களில் சித்தரிக்கப்படுவதுண்டு. இன்றும்கூட (கதைகளில்) ஜலாத்தி டால்ஃபின்களுடனும் டிரைட்டன்களுடன் அழகுதேவதையாகக் காட்சி தரும்.

போண்டசின் இரண்டாவது வாரிசான தாவ்மனசை எடுத்துக்கொண்டால் அந்த தெய்வத்திற்கு ஐரிஸ், எயில்லோ என்றும் அழைக்கப்பட்ட ஒசிப்பிட், சிலோனா(கார்மேகம்) இவர்களின் பொதுப்பெயர் ஹார்ப்பைஸ் (புயலுக்கு முன் தோன்றும் கார்மேக ஓட்டங்கள்).  தாவ்மசின் மேற்படி புத்திரிக்கள் எல்லாமே துர்தேவதைகள். ஹார்ப்பைஸ் வானிலிருந்து கடலில் இறங்கும்போது எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. கவிஞர்களால் இவை கூரிய நகமுள்ள வல்லூறுகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை அயோனியன் கடலில் உள்ள ஸ்ட்ரோஃபேட் தீவுகளில் உலவுகின்றன.

போண்டசின் வாரிசுகளில் க்ராயே சகோதரிகள் என்று கூறப்படும் என்யோ, பெம்திடோ, டைனோ “கடல் மூதாட்டிகள்” என்று வர்ணிக்கப்படுவதுண்டு. எனினும் இவர்கள் அகோரமான விலங்குப்புள்ளுரு (MONSTER)-  பல் உள்ள இடத்தில் கண் இருக்கும். கண் உள்ள இடத்தில் பல் இருக்கும் யானையைப் போல் தந்தமும் கரடி போன்ற உடல்வாகும் இருக்கும். இம்மூன்று மான்ஸ்டர்களுக்கும் மூன்று சகோதரிகள் உண்டு. அவர்கள் முறையே ஸ்தன்னோ, முர்யோ, மெடுசா. மெடுசாவுக்கு மட்டுமே பெண் தோற்றம் உண்டு. மற்றவை இரண்டும் மான்ஸ்டர்கள் இம்மான்ஸ்டர்கள் கார்கோன்ஸ் (GORGONS) என்றும் அழைக்கப்படுவார்கள். இந்த கார்கோன்ஸின் விழி பட்டால் உடல் கல்லாகும். தலைகளில் முடி மறைந்து பாம்புகள் நெளியும். பொல்லாத கண்கள் பார்வையில் விலகி இருக்க வேண்டும். இந்த கார்கோன்ஸ்களுக்குப் பக்கவாட்டில் தங்கச்சிறகுகள் உண்டு. வானில் பறக்கும் சக்தி உண்டு. பூமியின் விளிம்பில் எட்டாத தொலைவில் கார்கோன் இயங்கினாலும் அவ்வப்போது மனிதர்கள் மாட்டிக்கொண்டு இவர்களிடம் நரகவேதனையை அனுபவிப்பார்கள்.

மனிதத் தோற்றமுள்ள மெடுசாவை பாசிடாடன் மணந்தான். மெடுசாவை பெர்சியஸ் வெட்டி வீழ்த்தியபோது மெடுசாவின் உடலிலிருந்து பெகாசஸும் தங்கவாள் வீரன் கிரைசோர் (SPHINXES)தோன்றினர். கிரைசோரின் வாரிசுகளில் மூன்றுடல் கொண்ட அரக்கன் ஜெரியான் தோன்றி ஹிராக்ளீஸ் கொல்லப்பட்ட நிகழ்ச்சி இலியத்தில் வருகிறது. கிரைசோரின் மற்றொரு வாரிசு எக்கினா. இது ஒரு கட்டுவிரியன். எக்கினா என்ற நாக அரக்கியுடன் டைஃபோன் ஒன்றுகூடி ஆர்த்ரஸ் என்ற கொடிய ஓநாயும், ஹைதரா என்ற மூன்று தலை நாக அரக்கனும், சிமேரா அசுரனும் படைக்கப்பட்டனர். மூன்றுடல் ஜெரியானுடன் துணையாயிருந்த ஓநாய் அசுரன் ஆர்த்ரஸ் தனது தாயான எக்கினாவுடன்கூடி இரண்டு சிங்கமுக அரக்கர்களை உருவாக்கினான். அந்த இரண்டு சிங்க முகங்களும் எகிப்திய நாகரிகச் சின்னமான ஸ்ஃபின்க்ஸ். அது மட்டுமல்ல. கிரேக்க வழிவந்த மன்னர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஆண்டபோது சிங்கமுகத் தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள தூண்களில் உள்ள யாளி முகங்கள், அநேகமாக கிரேக்க இரவல்களாக இருக்கலாம்.

(குறிப்பு – இக்கட்டுரையில் ஏராளமான கிரேக்க தெய்வங்கள் கதாபாத்திரங்கள் உள்ளன. இவை பின்வரப்போகும் ஒலிம்பிக் போரிலும், இலியத்தின் ட்ரோஜன் போரிலும் பங்கேற்க உள்ளன. இனிவரும் கதைகளுக்குரிய அறிமுகமாகவும் இக்கட்டுரையை ஏற்கலாம்.)

(தொடரும்)