தஞ்சம் புகுதலின் சுமை

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிவினை நிகழ்வில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட சிந்திக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாகக் குடி பெயர்ந்தனர், என்று எழுதுகிறார் ரிடா கோதாரி, தன் “தஞ்சம் புகுதலின் சுமை” என்ற புத்தகத்தில் (The Burden of Refuge, Rita Kothari, Orient Blackswan, 2009)- ரத்தம் தோய்ந்த பஞ்சாபி மற்றும் வங்காளப் பிரிவினை பற்றி ஏராளமான ஆய்வுகள் மற்றும் புதினங்கள் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த சிந்திக்களின் குடிபெயர்வு குறித்து இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் வகையில் தன் புத்தகத்தை முன்வைக்கிறார் ரிடா கோதாரி. சிறிய புத்தகம், சுவையான புத்தகம். சிந்தனையைத் தூண்டும் புத்தகம். ரிடா கோத்தாரி தன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்- இந்தப் புத்தகம் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை, இவற்றுக்கான பதில்களைத் தேடும் ஆய்வுகள் தொடரும் என்று நம்ப இடமிருக்கிறது.

ரிடா கோதாரி மிகவும் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்: ஆதர்சங்களில் நம்பிக்கை இருந்தாலன்றி இதற்கு வடிவம் தருவதோ, இதை ஏற்றுக் கொள்வதோ சாத்தியமாக இருக்காது: பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் இருந்த சிந்துவில், எழுபத்தைந்து சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் : இவர்களிடம் அரசியல் அதிகாரம் இருந்தாலும், சிந்துவின் நிதி மற்றும் நிர்வாகம் சிறுபான்மை இந்துக்களிடம்தான் இருந்தது. இந்த சிறுபான்மை இந்துக்கள் வணிகர்கள், நகரம் சார்ந்திருந்தவர்கள், காலம் காலமாக இவர்கள் ஒவ்வொரு ஊரிலும் வட்டிக்குக் கடன் தருபவர்களாக இருந்தனர், ஜமீன்தார்கள் மற்றும் அதிகார வர்க்கத்தில் இருந்த இஸ்லாமியர்களின் கணக்கு வழக்குகளையும் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் கல்வி மற்றும் அரசுத் துறையை முழுக்க முழுக்க கைப்பற்றி வைத்திருந்தனர். இதனால் சிறு சிறு மனவருத்தங்கள் இருந்தாலும் மதவாதம் தலையெடுக்காத, இந்து-இஸ்லாமிய வேற்றுமைகள் இல்லாத, ஒருமித்த உணர்வு கொண்ட ஒரு சமூகமாக இவர்கள் இருந்தனர். பிரிவினையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகாரில் இருந்து பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள் இந்த நல்லிணக்கத்துக்குக் கேடாய் வந்தனர், இருந்தாலும் சிந்துவில் பெரிய அளவில் படுகொலைகளோ கலவரங்களோ ஏற்பட்டிருக்காத நிலையில் அங்கிருந்த இந்து சிந்திக்கள் இங்கு இப்போது புதிதாக வந்து குடியேறிய சிந்தி அல்லாதவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியா செல்ல முடிவெடுத்தனர், இவர்களை இஸ்லாமிய சிந்திக்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

அகதிகளாகக் குடியேறிய இந்தியாவில், பெரும்பான்மை இந்துக்கள் இந்த சிந்திக்களை பலவகையில் அவமானப்படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல், இந்துக்களால் ஏற்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அதுவரை வெறுப்பு என்பதையோ வன்முறை என்பதையோ அறியாத சிந்தியத்தைக் கைவிடுகின்றனர் சிந்திக்கள்- மதவாத இந்துக்களைவிடத் தீவிரமான மதவாதிகளாக மாறுகின்றனர்- இதுதான் கோத்தாரி குறிப்பிடுகிற தஞ்சம் புகுதலின் சுமை- மதவாத இந்தியாவில் சிந்திக்கள் சிந்திக்களாக இருக்க முடிவதில்லை- சிறுபான்மை இந்துக்களாக பாகிஸ்தானில் அவர்கள் உரிமையோடு தக்க வைத்துக் கொண்டிருந்த அடையாளங்களை, சிந்தியத்தை, இங்கே, இந்துக்களோடு இந்துக்களாக ஒன்றுவதற்கான முனைப்பில் காலப்போக்கில் இழந்து வருகின்றனர். இதில் ஒரு பெரிய சோகம், சிந்திகள் தங்கள் மத நல்லிணக்கத்தை இழந்து வருவதும், ஆர்எஸ்எஸ் போன்ற இந்துமத அடிப்படைவாத அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு பலியாவதும், அவர்களின் கருவிகளாகத் தங்களை ஒப்புக் கொடுப்பதும் என்று சொல்கிறார் ரிடா கோத்தாரி.

தஞ்சம் புகுதலின் சுமை நம் அடையாளங்களை இழத்தல் என்பதில் உண்மை இருக்கிறது- ஊரோடு ஒத்து வாழ் என்பதும் ரோமில் ரோமானியன் போல் இரு என்பதும் உலகெங்கும் ஒரு நியதியாக இருக்கிறது. எந்த நாட்டினராக இருந்தாலும், தொடரும் தலைமுறைகள் தாம் குடியேறிய மண்ணில் தங்களுக்கு தனித்துவம் தரும் அடையாளங்களை அவமானமாகக் கருதி அவற்றை இழந்து ஒரு பெருங்கூட்டத்தில் தங்களைக் கரைத்துக் கொள்ள முயற்சி செய்வதுதான் உலக இயல்பாக இருக்கிறது. இது தஞ்சம் புகுதலின் சுமை என்றால், இந்தியாவில் மட்டும் மதச்சார்பற்ற பண்டிதர்களுக்கென்று ஒரு பெருஞ்சுமை இருக்கிறது.

இந்து பேரினவாதத்தில் இருந்து வெவ்வேறு சிறுபான்மை மொழி, இன, சமய, பண்பாட்டு அமைப்புகளைக் காப்பாற்றும் கடமை இந்திய மதச்சார்பற்ற பண்டிதர்களின் கண நேரமும் கீழே இறக்கி வைக்க முடியாத பெருஞ்சுமையாக இருக்கிறது. சிறுபான்மை மக்களைக் காப்பது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஒரு கடமை என்றால், இந்து பேரினவாதம் உருவாவதற்குத் தகுந்த களம் அமைவதைத் தடுப்பது அதைவிட முக்கியமான கடமையாக இருக்கிறது: அது சாத்தியப்பட வேண்டுமென்றால், இந்துப் பேரினவாதம் என்ற ஒரு பூதத்தைக் காட்டி பீதியைக் கிளப்பியாக வேண்டும்.  அதே வேளை, இந்து மதம் என்று ஒன்றே கிடையாது என்ற வாதத்துக்கு வலுக்கூட்டும் வகையில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் வெவ்வேறு மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் சேர்ந்த சிறுபான்மையினர் என்பதை வலியுறுத்தவும் வேண்டும். இந்த நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்க, ஆர்எஸ்எஸ் போன்ற இந்து பேரினவாதிகள் இவர்களது அடையாளத்தை அழிக்க முற்படுகின்றனர் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி சிறுபான்மையினரை அவர்களது சிறுபான்மை அடையாளங்கள் கெடாமல் மீட்டெடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு எல்லாப் பழியும் இந்துக்களுக்கே என்று சொல்வது அவசியமாக இருந்தால், அப்படியே ஆகட்டும்.

ரீட்டா கோத்தாரியின் சிந்தியம் ஒரு அற்புதமான கருதுகோள். அங்கு அதிகாரத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், நல்லிணக்கம் நிலவும் சாதி மத பேதமற்ற சிந்துவில் இஸ்லாமியர்களின் சுஃபி அமைப்பில் இந்துக்களுக்கு இடம் இருக்கிறது. இந்துக்கள் குருத்வாராக்களுக்கும் மசூதிகளுக்கும் போகிறார்கள்: சமஸ்கிருதத்தை விடுத்து பாரசீக எழுத்துகளில் தங்கள் மொழியை எழுதுகிறார்கள். பேச்சுக்குப் பேச்சு அல்லாவை அழைக்கிறார்கள்- பிற்பாடு குடியேறிய இந்தியாவில், முஸ்லிம்கள் என்று ஏளனம் செய்யப்படுமளவு அவர்களது பண்பாடு தனித்துவம் கொண்டதாக இருக்கிறார்கள். அதைக் காக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தியத்தை நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது- சிந்துவில் ஒரு மத நல்லிணக்க சமுதாயம் வலுவாக நிலைகொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து சிந்துவுக்கு வந்து குடியேறுகிறார்கள்- இவர்கள் இங்கு வரக் காரணம் யார் என்பதை சொல்லத் தேவையில்லை- வீடற்ற, உடமையற்ற இந்த முஸ்லிம்கள் சிந்துவில் உள்ள இந்துக்களின் சொத்துக்களுக்கு ஆசைப்படுகிறார்கள். இதனால் சிந்தியில் இன்னமும் பெரும்பான்மையாக உள்ள சிந்தி முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் மீறி இந்த சிந்திக்கள் இந்தியா செல்கிறார்கள். அங்கு இந்து பேரினவாதம் என்ற வியாதிக்கு பலியாகி தங்கள் பண்பாட்டில் உள்ள இஸ்லாமிய அடையாளங்களை மறுதலிக்கிறார்கள், இந்துக்களோடு இந்துக்களாக மாற முயற்சி செய்கிறார்கள். எல்லைக்கு அப்பாலுள்ள, இன்னமும் இந்த சிந்தியத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கும் தங்கள் சகோதரர்களை மறந்து விட்டார்கள். இதுதான் ரிடா கோத்தாரி முன்வைக்கும் சிந்தி வரலாறு.

இந்தியா பல்வகைப்பட்ட சிறுபான்மை மக்களின் கூட்டமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும், இங்கு இந்துமதப் பேரினவாதம் தலையெடுத்துவிடக் கூடாது என்ற கவலையில் கட்டமைக்கப்பட்ட, இந்தியா-பாகிஸ்தான், இந்து-இஸ்லாம் எல்லைகளைக் கடந்த சிந்திய பண்பாட்டை அதன் தனித்தன்மைகள் கெடாமல் பாதுகாக்கக்கூடிய ஒரு உஷாரான வரலாற்றைக் கட்டமைக்க ரீடா கோத்தாரி எப்படிப்பட்ட முரண்களை அனாயசமாகக் கடந்து செல்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது. இதை ரீடா கோத்தாரி என்ற தனிப்பட்ட வரலாற்று ஆசிரியரின் மனச்சாய்வாக மட்டும் பார்ப்பதற்கில்லை- இது இந்திய மதச்சார்பற்ற பண்டிதர்கள் அனைவரிடமும் காணப்படும் பொதுப்பார்வை. மூன்றே மூன்று சான்றுகளை இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துத் தருகிறேன்-

புத்தகத்தின் முடிவில், 176ம் பக்கத்தில் கோத்தாரி இவ்வாறு எழுதுகிறார், “இன்றும் சிந்தி முஸ்லிம்கள் இந்து சூபி மறைஞானிகளின் சமாதிகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது குஜராத்தில் உள்ள இந்துக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பிரிவினையின்போது உயிரிழப்பை ஏற்படுத்திய வன்முறை நினைவுகள் எதையும் தங்கள் பெற்றோர்களோ அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரோ பதிவு செய்யவில்லை என்பதையும் அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, பெரும்பான்மை இந்துக்களாக மாற வேண்டும் என்று ஆசைப்படும்போது, அவர்கள் தாங்கள் தள்ளி வைக்கப்பட்டது முஸ்லிம் அமைப்பால் அல்ல, இந்து அமைப்பால் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்” (The Sindhis of Gujarat may not know, do not know, that even today, Sindhi Muslims go to Hindu Sufi saints and pay their respects. They migh also want to remember that their parents or tgrandparents had no memory of physical violence during th Partition. Finally, in their desire to become mainstream Hindus, they might wnt to remember that their exclusion has come not from Muslim quarters, but from Hindu quarters). சிந்துவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு இருந்தவர்கள் இன்று ஏறத்தாழ அனைவரும் சிந்துவில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் குடிபுகுந்த இடங்களில் அகதிகளாக அவமானப்படுத்தப்பட்ட, பல்வேறு அல்லல்களுக்கு உட்படுத்தப்பட்ட வரலாற்றை சுட்டி, “they might want to remember that their exclusion has come not from Muslim quarters, but from Hindu quarters” என்று எழுத என்ன ஒரு துணிச்சல் வேண்டும்! ஆனால் கோத்தாரி போன்ற பண்டிதர்களுக்கு இன்று பாகிஸ்தானைவிட, இந்து மதம்தான் தேசிய ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட கருத்துத் திரிபுகள் வியப்பளிப்பதில்லை.

சிந்துவில் இருந்து சிந்திக்கள் வெளியேற அங்கு குடிபுகுந்த முஸ்லிம்கள் மட்டுமே காரணமாக இருந்தார்கள்- அவர்களும் மதக்கலவரங்களின் காயங்களை சுமந்து வந்த பிணியாளர்கள்-, சிந்துவின் முஸ்லிம்கள் மத நல்லிணக்க உணர்வு மிகுந்த, வன்முறைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத குற்றமற்ற பார்வையாளர்களாகவே இருந்தார்கள்- அப்படி ஒன்றும் பெரிய அளவில் வன்முறையும் சிந்துவில் நிகழ்ந்துவிடவில்லை, சிந்திகள் பொருளாதார முன்னேற்றத்தை நாடியே இந்தியா வந்தார்கள்: இதை எல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த சிந்தியம், ஏழு முதல் பத்து லட்சம் சிந்திக்கள், ஏறத்தாழ அங்கிருந்த இந்துக்களில் அனைவரும், சிந்துவைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் ஆற்றல் இல்லாததாக, சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்புணர்வு தர முடியாத ஒன்றாக இருந்தது என்பதுதானே உண்மை? ஆனால், இந்த சிந்தியம் இன, மத நல்லிணக்கம் கொண்ட ஒன்று என்றும், அதன் பெயரில் இந்தியாவில் உள்ள சிந்திக்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்திக்களுடன் ஒத்துணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் எழுதுகிற கோத்தாரி, குஜராத்தின் மதக கலவரங்களில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று குறிப்பிட்டு, அதை ஒரு இன ஒழிப்பாக (ethnic cleansing) அடையாளப்படுத்துகிறார்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இந்து வன்முறையில் தலித்களும் மலைவாழ் மக்களும் பங்கேற்றது குறித்து வருத்தப்படும் கோத்தாரி- “The unexpected and disturbing participation of Dalit and tribal groups” என்று குறிப்பிடுகிறார்-, சாஹ்ரா என்றழைக்கப்படும் அட்டவணைப் பட்டியலில் இருக்கும் பழங்குடியினர் சிந்தி அடையாளங்களைக் கைகொண்டு சிந்திக்களோடு சிந்திக்களாக ஒன்றினைவதை சிந்தியத்தின் பரந்த மனப்பான்மைக்கு சான்றாகப் பாராட்டுகிறார்! எப்போதும் தீவிரவாதத்தோடு சேர்ந்தே இருக்கும் இந்து மதம் மட்டும் இரும்பு வேலிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் போலிருக்கிறது- சிந்திக்கள் இந்துக்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளும்போது பேரினவாதத்துக்கு அவர்கள் பலியாவதாக வருத்தப்படும் கோத்தாரிக்கு சாஹ்ராக்கள் சிந்தி அடையாளங்களோடு சிந்திக்களுடன் சிந்திக்களாக சேர்ந்து கொள்வது சிந்தியத்துக்கு மட்டுமே உரிய போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய தனித்தன்மையாகத் தெரிகிறது.

கோத்தாரி முன்வைக்கும் சிந்தியத்தின் இந்த முரண்பட்ட, இருமுக இயல்பானது குழு அடையாளத்தின் அடிப்படையில் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் அனைத்து கருதுகோள்களுக்கும் உரித்தான ஒன்று- அதில் எந்த தனித்துவமோ சகோதரத்துவமோ இருப்பதாகத் தெரியவில்லை. அதன் இழப்பும் நினைத்து அழவேண்டிய ஒன்றாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஜியே சிந்த் என்று போற்றப்படும் ஜி.எம்.சையத் பாகிஸ்தானில் சிந்து இணையக் காரணமாக இருந்தவர். சிந்துவில் ஆறாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஜின்னாவின் முஸ்லிம் லீக் சையத் இணைந்ததும் குறுகிய காலத்தில் மூன்று லட்சமாக உயர்ந்தது. “ஜெர்மனியில் இருந்து யூதர்கள் விரட்டப்பட்டதைப் போல சிந்துவில் இருந்து இந்துக்கள் விரட்டப்பட வேண்டும்,” என்று முழங்கிய சையத், வீட்டுக் காவலில் இறந்தார்- பாகிஸ்தானில் சிந்து மாகாணத்துக்கு நீதி கிடைக்கவில்லை, அங்கு அந்நியர்களின் பேராதிக்கம் நடக்கிறது, என்று தனி நாடு கேட்டுப் போராட்டம் நடத்தியவர் அவர். இடைப்பட்ட காலத்தில், எழுபதுகளில் இந்தியா வந்த சையதுடன் கை குலுக்க பால்தேவ் கஜ்ரா மறுத்துவிட்டார். “உன் கைகள் இந்துக்களின் ரத்தத்தால் தோய்ந்திருக்கிறது” என்ற கஜ்ராவிடம் சையத், “ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கே இருபத்தைந்து ஆண்டுகள் போதுமான தண்டனையாக இருக்கிறது. நானும் இருபத்தைந்து ஆண்டுகள் வேதனையை அனுபவித்து விட்டேன். எனக்கு மன்னிப்பு கேட்கும் உரிமை கிடையாதா?” என்று கேட்டாராம்.

முதலில் வேற்றுமையை பிரதானப்படுத்துவதும், அதன் பயன்களை சுகித்தபின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் முன்னிருத்துவதும் உலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் நாம் காணும் நிகழ்வு: ஆஸ்திரேலிய அதிபர் அங்கிருந்த பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்கிறார்; அமெரிக்க அதிபர் செவ்விந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்; ஜெர்மனி யூதர்களிடம் மன்னிப்பு கேட்கிறது; நாளை இலங்கை அரசு தமிழர்களிடமும் இந்த மாதிரியான ஒரு மன்னிப்பு கேட்கலாம்- ஆனால், இப்படிப்பட்ட உள்ளடக்கமற்ற, காலங்கடந்த ஞானத்தால் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

அன்னியர்களை அடையாளப்படுத்தி, அவர்களது வெளியேற்றத்தில்தான் தம் இருப்பு தூய்மையானதாகவும், சமத்துவத்துடன் கூடிய ஒரு உன்னத பொருளாதார அமைப்பைக் கொண்ட லட்சிய சமுதாயத்தை நிலைநிறுத்துவதாகவும் இருக்கும் என்ற தேசியம் மக்களாட்சியின் பிணி. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. சிந்திக்கள் உடைமையை மட்டுமே இழந்தார்கள், பெரிய அளவில் அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாதது ஒரு இருபதாம் நூற்றாண்டு அதிசயம். இதை தன் பிழைபட்ட பார்வையால் திரிக்காமல், தகவல்களால் நிறைத்து, அருமையாக விவரித்திருக்கிறார் ரீட்டா கோத்தாரி. இந்திய வரலாற்றில் சில முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் இந்தப் புத்தகம் முக்கியமான ஒன்று.