இரு மணிகள்

பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய பேச்சில், பாலக்காடு மணி ஐயரின் பெயர் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது. இருவரும் மறைந்து பல வருடங்கள் ஓடிவிட்ட பின்னும், , ‘பழனியா, மணி ஐயரா’, என்று பட்டிமன்றம் சங்கீத ரசிகர்களிடையே முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘வலது கை மிருதங்க வித்வான்களில் மணி ஐயர் சிறந்தவர், இடது கை வித்வான்களில் பழனி சிறந்தவர் – என்ற தீர்ப்பை வேண்டுமானால் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடும்’, என்று விளையாட்டாய் இந்த விவாதத்தைப் பற்றி குறிக்கிறது ஸ்ருதி பத்திரிக்கை.

மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. ‘பழனி பழக மிகவும் இனிமையானார். அதிர்ந்து கூடப் பேசமாட்டார்.’, என்று அவருடன் பழகியவர்கள் கூறுகின்றனர். பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது. மணி ஐயர் சிறு வயதிலேயே உச்சத்தைத் தொட்டவர். அவருடைய தனித்தன்மை வாய்ந்த வாசிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாடுபவருக்கு தன்னால் ஆனவற்றை செய்ய வேண்டும். பாடகரின் கற்பனைகள் சரியாக ரசிகர்களிடையே சென்று சேர வேண்டும் என்பதில்தான் பழனிக்கு அக்கறை. மணி ஐயரின் அணுகுமுறை பழனியின் அணுகுமுறையை விட சற்றே ‘aggressive’-ஆக இருக்கும். மணி ஐயரின் வாசிப்பில் முக்கிய அம்சம் அவருடைய சமயோசிதம். சிறிது நேரம் வாசிக்காமல் இருந்துவிட்டு சரியான நேரத்தில் நுழைந்து பளீரிடும் சொற்களைப் போட்டு வாசிப்பதன் மூலம் கச்சேரியை சிறக்க வைப்பது மணி ஐயரின் பாணி. இவை இருவரின் வாசிப்பின் முக்கியமான கூறுகள். அதற்காக, மணி ஐயரின் வாசிப்பில் பாடகருக்கு வசதிக் குறைச்சல் ஏற்பட்டதென்றோ, பழனியின் வாசிப்பில் சமயோசிதம் இருக்கவில்லை என்றோ தப்பர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. இருவருமே அவரவர் பாணியில் கச்சேரியை சிறக்க வைத்தனர். இருவரின் வாசிப்பின் அணுகுமுறையில் வேறுபாடுகள் இருந்தாலும் அவை ஏற்படுத்திய விளைவுகள் ஒன்றுதான்.

பாட்டுக்கு வாசித்தல் என்கிற விஷயத்தில் மணி ஐயரின் வாசிப்பு பழனியின் வாசிப்பிலிருந்து கணிசமாக வேறுபட்டிருந்தது. மணி ஐயர் பாட்டுக்கு வாசிக்கும் முறையை தவில் மேதை நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வழியில் அமைத்துக் கொண்டார் என்று தா.சங்கரன் கூறியுள்ளார். பாடகர் பாடுவதைப் போலவே மிருதங்கத்தில் வாசிப்பது மணி ஐயரின் சிறப்பம்சமாகும். இவ்வகையில் வாசிக்கும் போது, பாட்டில் வரும் சங்கதிகளுக்கேற்ற சொற்கட்டுகளையும், கார்வைகளின் போது வாசிக்காமல் இருந்தும் வாசிக்க வேண்டும். மணி ஐயர் அபாரமான உள்ளுணர்வு (intuition) பெற்றவர். “கச்சேரியின் போது என் மனதில் ஒரு திரை ஓடிக் கொண்டே இருக்கும். அந்தத் திரையில் அடுத்து பாடகர் என்ன பாடப் போகிறார், அதற்கு என்ன வாசிக்க வேண்டும் என்பது ஓர் உருவமாகத் தெரியும். அதை வைத்தே வாசித்து வந்தேன்.”, என்று மணி ஐயர் மறைவதற்கு சில காலம் முன்னால் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஒரு சாதராண வித்வானுக்குக் கூட நிறைய வாசிக்க வாசிக்க அடுத்த என்ன சங்கதி வரப் போகிறதென்று ஓரளவு ஊகிக்க முடியும் எனும் போது மணி ஐயர் பாடகரின் பாட்டை இம்மி பிசகாமல் வாசித்ததில் ஆச்சர்யம் இல்லை.

மணி ஐயர் உச்சத்திலிருந்த போது, அவரைப் போலவே வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவியிருந்தது. மணி ஐயரின் வாசிப்பின் மேல் பெரு மதிப்பு வைத்திருந்தாலும், தன்னுடைய அணுகுமுறையை கொஞ்சம் கூட பழனி மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால், அப்படி மாற்றிக் கொள்ளாமல் இருந்ததே பழனிக்கு வெற்றியைக் கொடுத்தது. பழனியின் வாசிப்பில், பாடலின் அமைப்பை அப்படியே மிருதங்கத்தில் காட்டுவது போல சங்கதிக்கு சங்கதி வாசிக்காமல், பாடலுக்குப் பொருத்தமான நடைகளையும் சொற்கட்டுகளையுமே பழனி வாசிப்பார். கிருதியின் சில இடங்களின் முக்கியத்துவத்தைக் காண்பிக்க நினைத்தால் மட்டுமே பாடலின் அமைப்பை தன் மிருதங்கத்திலும் வாசித்துக் காண்பிப்பார். கிருதியில் கார்வைகள் உள்ள இடங்கள் வரும் போதும், இட்டு நிரப்பி வாசிப்பதே பழனியின் பாணியாகும்.

இவ்விரு அணுகுமுறைகளைப் பற்றியும் 1950-களில் ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியான இவ்விரு மேதைகளின் கடிதங்கள் மூலம் ஒரு விவாதம் நடந்தது என்றும் தா.சங்கரன் கூறியுள்ளார். என் தேடலில் அந்த விவாதம் அகப்படவில்லை.

எப்பேர்பட்ட கலைஞனுக்கும் எப்போதேனும் சறுக்கல்கள் ஏற்படுவதுண்டு. அவ்வாறு நிகழும் சறுக்கல்களை எதிர்கொள்வதிலும் இருவரின் அணுகுமுறையும் வேறு பட்டிருந்தது. பழனியின் வாசிப்பில் சறுக்கல் ஏற்பட்டால், தான் சறுக்கிவிட்டதை வெளிப்படையாய் காண்பித்து, மீண்டுமொரு முறை முதலில் இருந்து தொடங்கி சரியாக வாசிப்பார். தன் தவறை கேட்பவர்கள் புரிந்து கொண்டிருப்பார்களா? தான் திரும்ப வாசிப்பதன் மூலம் கச்சேரியில் தொய்வு ஏற்படுமா என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

மணி ஐயரோ, “சறுக்கி விட்டது தனக்குத் தெரிந்தால் போதும். எல்லோருக்கும் தெரியப்படுத்தி கச்சேரியின் சீரான ஓட்டத்தை குலைக்கத் தேவையில்லை”, என்ற அணுகுமுறையை பின்பற்றினார். “நான் வீட்டில் சாதகம் செய்யும் போது, மூன்று ஐந்து வர வேண்டிய இடத்தில் ஒரு ஐந்துக்கு பதில் நான்கை பாடிவிட்டால், “நிறுத்தாதே! அடுத்த ஐந்தை ஆறாகப் பாடி சரி பண்ணு. அடுத்த கச்சேரியில பாடும் போது தப்பு வராம பார்த்துக்கோ என்று அப்பா சொல்வார்”, என்கிறார் ராஜாராம். ஒரு வகையில் இந்த சமயோசிதம் வாய்ந்த அணுகுமுறையை மணி ஐயர் தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் இருந்து வாங்கிக் கொண்டார் எனலாம்.

“வாசிப்பு அணுகுமுறையில் இருவருக்கும் அபிப்ராய பேதம் இருந்திருக்கலாம். ஆனால், ஒருவர் மேல் மற்றவர் வைத்திருந்த மரியாதையை பாதிக்கவில்லை. இருவரிடமும் நெருங்கிப் பழகிய எனக்கு இதை உணரும் படியான அனுபவங்கள் நிறையவே கிடைத்துள்ளன. திருவையாறு உற்சவத்தில் நான் காரியதரிசியாக இருந்து நடத்தியிருக்கிறேன். வித்வான்கள் எல்லோரும் சேர்ந்து பஞ்சரத்னம் பாடும் போது பழனியும், மணி ஐயரும்தான் மிருதங்கம் வாசிப்பர். ஸ்வரத்துக்கு ஒருவரும் சாஹித்யத்துக்கு ஒருவரும் என மாற்றி மாற்றி வாசித்தது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. ஒருவர் வாசிப்பை மற்றவர் ரசிப்பதைக் காண்பதே கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.”, என்கிறார் ‘ஆனந்தா லாட்ஜ்’ ஜி.கிட்டப்பா.

பழனி சுப்ரமணிய பிள்ளை
பழனி சுப்ரமணிய பிள்ளை

இருவரும் சேர்ந்து மிருதங்கம் வாசித்த நிகழ்வுகள் அபூர்வம் எனினும், மணி ஐயர் மிருதங்கத்துடன், பழனியின் கஞ்சிரா இடம் பெற்ற கச்சேரிகள் கணிசமானவை. இரு மேதைகளும் சேர்ந்து வாசிப்பதைக் காணக் கூட்டம் அலை மோதியது. தனவந்தர்கள் வீட்டுக் கல்யாணம், நிதி கச்சேரிகள் போன்ற முக்கியமான பெரிய கச்சேரிகளிலேயே இருவரும் சேர்ந்து வாசித்தனர். மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோயில் எழுப்ப பழனி சுப்ரமணிய பிள்ளை நிதி திரட்டிய போது, மதுரை மணி கச்சேரியில் பாலக்காடு மணி ஐயரும், பழனியும் சேர்ந்து வாசித்துள்ளனர்.

“கஞ்சிரா வாசிப்பது அவ்வளவு சுலபமான காரியமன்று. பிற்காலத்தில், உடல் நிலை காரணமாக எங்கள் குரு கஞ்சிரா வாசிப்பதை கிட்ட்த்தட்ட நிறுத்தியேவிட்டார். அப்படியும், சில தவிர்க்க முடியாத நேரங்களில், முக்கிய பிரமுகர்களின் நிர்பந்ததுக்கு இணங்கி கஞ்சிரா வாசித்ததும் உண்டு. திரைப்பட நடிகர் பாலைய்யா வீட்டு கல்யாணத்தில் மணி ஐயருடன் சேர்ந்து பழனி வாசிப்பதற்காக திருமண தேதியையே மாற்றி வைக்கத் தயாராக இருந்தார் பாலைய்யா. அந்தக் கச்சேரிக்கு முன் தினமும் கஞ்சிராவில் பல மணி நேரம் பழனி அண்ணா சாதகம் செய்தார். அப்போதெல்லாம் தட்சிணாமூர்த்தி பிள்ளையைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார்.” , என்கிறார் திருச்சி சங்கரன்.

சாதாரணமாய், கஞ்சிராவுக்கு உப பக்கவாத்ய இடம்தான். பிரதான பக்க வாத்தியமாய் மிருதங்கம் இருக்க, அதற்கு துணையாக ஒலிக்கும் வாத்தியம் என்றே கஞ்சிராவின் நிலை இன்று கூட பெரும்பான்மையான கச்சேரிகளில் நிலவுகிறது. ஆனால் பாலக்காடு மணி ஐயருடன் சேர்ந்து பழனி வாசித்த கச்சேரிகளில் எல்லாம் மிருதங்கத்துக்கு இணையான இடத்தை கஞ்சிராவும் பெற்றிருந்தது. மேடையில் அமர்வதில் கூட மணி ஐயருக்கு இணையாய், வழக்கமாய் வயலின் கலைஞருக்கான இடத்தில்தான் பழனி அமர்ந்து வாசித்தார். பழனியின் இசை வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் மிருதங்கம் வாசித்தால் இடம் மாற வேண்டி இருக்கும் என்று ஒத்துழைக்க மறுத்த வயலின் கலைஞர்கள் கூட, தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து பின்னால் அமர்ந்து வாசிக்க சம்மதித்தனர். “பழனியும், மணி ஐயரும் சேர்ந்து வாசித்தால் யாரை எங்கு அமர்த்துவது என்ற குழப்பம் முதன் முதலில் எழுந்த போது, ‘மாப்ள! என் இடத்துல உட்கார்ந்து நீங்க வாசிங்க.’, என்று மனமுவந்து கூறியவர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைதான். மதுரை மணி உடனோ, ஜி.என்.பி உடனோ இந்தக் கூட்டணி வாசித்த கச்சேரிகளை ‘மும்மணிகளும் மாணிக்கமும்’ என்று விளம்பரப் படுத்தினர். ”, என்கிறார் ஆனந்தா லாட்ஜ் ஜி.கிட்டப்பா.

பழனியும் மணி ஐயரும் சேர்ந்து வாசித்த கச்சேரிகள் பற்றி நிறைய பத்திரிக்கை குறிப்புகளைப் பார்க்க முடிந்தாலும், அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை. ஒரே ஒரு அரியக்குடி கச்செரி பதிவில் மட்டுமே பழனியின் கஞ்சிராவைக் கேட்க முடிகிறது. அந்தக் கச்சேரியில் ‘எந்தரோ மஹானுபாவுலு’ கிருதிக்கு ஸ்வரம் ஒருவரும், சாஹித்யம் மற்றவருமாக பிரித்துக் கொண்டு, ஒருவர் வழியில் மற்றவர் குறுக்கிடாமல் வாசிப்பதைக் கேட்டாலே, மணி ஐயர் பழனிக்கு இடையில் நிலவிய பரஸ்பர மரியாதையை உணர்ந்து கொள்ளலாம்.

சில அரிய சந்தர்ப்பங்களில் பழனி மிருதங்கத்துடன் மணி ஐயரின் கஞ்சிரா இடம் பெற்ற கச்சேரிகளும் நடை பெற்றுள்ளன. சென்னையில் நடந்த ஸ்வாதி திருநாள் விழாவில், ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரி ஒன்றில் இது நிகழ்ந்ததாக டி.எம்.தியாகராஜன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த அரசவைக் கச்சேரி ஒன்றிலும் பழனியின் மிருதங்கத்துடன் மணி ஐயரின் கஞ்சிரா இடம் பெற்றதாகத் தெரிய வருகிறது.

பழனிக்கு மணி ஐயர் மேல் இருந்த மதிப்பைப் பற்றி பழனியின் சீடர் தண்டமூடி ராம்மோகன் ராவ், “மணி ஐயரின் வாசிப்பைப் பற்றி மட்டமாக பேசினால் பழனி மகிழ்வார் என்ற எண்ணத்தில் ஒரு பாடகர் மணி ஐயர் வாசித்த கச்சேரியைப் பற்றி பழனியிடம் விமர்சனம் செய்தார். அவர் நினைப்புக்கு மாறாக பழனி கடும் கோபம் அடைந்து, ‘மணி ஐயரைப் பற்றி தவறாகப் பேசுவதென்றால் இந்த நிமிஷமே இங்கிருந்து போய் விடுங்கள். மணி ஐயரின் பெருமை எனக்கு நன்றாகத் தெரியும். மிருதங்கம் வாசிப்பதற்கென்றே ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால் அவர் மணி ஐயர்தான்’. என்று அவரை அனுப்பி வைத்தார். ”, என்று ஸ்ருதி பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

ஆனந்தா லாட்ஜ் கிட்டப்பா, “ஒரு ஜி.என்.பி கச்சேரிக்கு நானும் உடன் சென்றிருந்தேன். அன்று பழனி வாசித்தார். கச்சேரி முடிந்ததும், நீடாமங்களம் மின்னாட்சி சுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்க ஜி.என்.பி-யும் நானும் ஆவலாக இருந்தோம். பழனி களைத்திருந்ததால், எங்களை மட்டும் செல்லச் சொன்னார். ஜி.என்.பி-க்கு பழனியையும் எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணம். அதனால், “பழனி ஐயா, கொஞ்ச நாளைக்கு முன் மணி ஐயரிடம் பேசினேன். ‘சுப்ரமணிய பிள்ளை நன்னாத்தான் வாசிக்கறார். ஆனால், அவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தவிலை கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களை எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’, என்று மணி ஐயர் அபிப்ராயப்பட்டார். அதனால்தான் உங்களை அழைத்தேன்”, என்று ஜி.என்.பி ஒரு கற்பனையாய் ஒரு கதை சொன்னார். அதைக் கேட்ட பழனி உடனே கிளம்பிவிட்டார். கச்சேரி தொடங்கி இரண்டு மணி நேரம் ஆன போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. எங்களுக்கு தூக்கம் வந்ததால் கிளம்ப நினைத்தோம். பழனியிடம் கிளம்பலாமா என்று கேட்ட போது, “நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசா கேட்டுட்டு வரேன்.”, என்றார். பழனியை வரவைக்க தானே உருவாக்கிய கதை அது என்று ஜி.என்.பி புரிய வைத்த பின்னர்தான் எங்களுடன் வர சம்மதித்தார்.”, என்றார்.

“ஒரு நாள் என் குருநாதருடன் இருந்த போது ரேடியோவில் செம்மங்குடி கச்சேரி. மணி ஐயர் மிருதங்கம் வாசித்தார். பைரவியில் ‘அம்ப காமாக்ஷி’-யை விஸ்தாரமாகப் பாடினார். சீனிவாஸ ஐயர் பாடிய ஒவ்வொரு வரியையும் மெருகேற்றிய படி மணி ஐயரின் வாசிப்பு அமைந்திருந்து. கண்ணை மூடி முழுவதும் ரசித்துக் கேட்ட பழனி அண்ணா, ‘எவ்வளவு பொருத்தமாய் வாசித்தார் பார்த்தாயா’, என்று மனமாறப் பாராட்டினார்.”, என்று வித்வான் திருச்சி சங்கரன் கூறுகிறார்.

மிருதங்கம்:மணி ஐயர்,கஞ்சிரா:பழனி சுப்பிரமணியப் பிள்ளை,வயலின்:டி.என்.கிருஷ்ணன்,வாய்ப்பாட்டு:அரியக்குடி
மிருதங்கம்:மணி ஐயர்,கஞ்சிரா:பழனி சுப்பிரமணியப் பிள்ளை,வயலின்:டி.என்.கிருஷ்ணன்,வாய்ப்பாட்டு:அரியக்குடி

மணி ஐயருக்கு பழனி மேல் இருந்த மதிப்பைக் காட்டும் நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன.

குறிப்பாக பழனியின் தொப்பியின் மேல் மணி ஐயருக்கு தீராத மயக்கம் இருந்தது. இதைப் பற்றி மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

அப்பாவுக்கு வாசிப்பை விட, வாத்யத்தின் மேல்தான் காதல் அதிகம். கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை மிருதங்கத்தை சரி பார்த்துக் கொள்வார். எந்தத் தோலை வாங்க வேண்டும், எப்படி மூட்டு அடிக்க வேண்டும், என்ன விதமாய் வார் பிடிக்க வேண்டும் என்று வாத்தியத்தைப் பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் அறிந்து கொள்வதில் அப்பாவுக்கு அளவுகடந்த ஈடுபாடு. பாலக்காட்டில் இருந்து நாங்கள் தஞ்சாவூருக்கு வந்ததற்கு முக்கிய காரணமே, தஞ்சாவூரில் மிருதங்க வேலை செய்ய நல்ல ஆட்கள் இருந்ததால்தான் என்று நாங்கள் நினைப்பதுண்டு. அப்பாவுக்கு மிருதங்கம் வேலை செய்து கொடுத்தவர் பர்லாந்து. அவரைப் போன்ற ஞானஸ்தனைப் பார்ப்பது அரிது. எந்தெந்த பாடகருக்கு என்னென்ன வகையில் மிருதங்கத்தை தயார் செய்ய வேண்டும் என்பது அவருக்குத்தான் தெரியும். பழனிக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார். உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வலவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புது தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

அப்போது அண்ணாசாமி பாகவதரின் அண்ணா, திருவையாறு கிருஷ்ணையர் அங்கு வந்தார், “கிருஷ்ணையரே! நீர் என்னமோ என் வாசிப்பை புகழறீர். பர்லாந்து சொல்லிட்டான்யா, எனக்கு கை வாகு இல்லையாம். தொப்பி சுகம் கிடைக்காதாம்”, என்று அப்பா சொன்னது இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது.

மணி ஐயரும் பழனியும் ஒருவர் மேல் மற்றவர் மதிப்பு வைத்திருந்ததோடு மட்டுமின்றி, ஒருவர் சிஷ்யரின் பேரில் மற்றவர் கொண்டிருந்த அக்கறையைப் பற்றியும் தெரிய வருகிறது. வித்வான் பாலக்காடு ரகுவின் பல நேர்காணல்களில், அவருக்கு பழனியின் வாசிப்பில் மேல் இருந்த காதலை வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். அவருடைய வாசிப்பில் பழனி பாணி சொற்கட்டுகள், கோர்வைகள் நிறைய இடம் பெறுவதை அவர் வாசித்துள்ள கச்சேரிகளைக் கேட்டால் உணர முடியும்.

பாலக்காடு ரகு அப்படி வாசிப்பதை குறையாகச் சொல்லி குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் விரிசல் ஏற்படுத்த நினைத்தார் ஒருவர். அவர் சொன்னதையெல்லாம் பொறுமையாக மறுத்தலித்து வந்த மணி ஐயர், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவராய், “அதுக்கென்ன இப்ப? அவன் சத்தியத்தைதானே வாசிக்கறான்? தப்பொண்ணூமில்லையே!”, என்று அவர் வாயை அடைத்துவிட்டார். அதோடு நிற்காமல், அடுத்த நாள் அந்த பிரமுகர் பார்க்கும் படியாக பாலக்காடு ரகுவை அழைத்து, “இன்னிக்கு நீ என்னோட கச்சேரிக்கு வர வேண்டாம். பழனி இன்னிக்கு வாசிக்கறார். நீ அங்க போய் அவர் வாசிப்பைக் கேளு.”, என்றார். இந்த நிகழ்வை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் உட்பட பலரிடம் பாலக்காடு ரகு பகிர்ந்து கொண்டுள்ளார்.

பழனியும் பாலக்காடு ரகுவின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ஜி.என்.பி ஒரு முறை பாலக்காடு ரகுவிடம், “நீ பழனிக்கு என்ன சொக்குப் பொடி போட்ட? உன் புகழை ஓயாமல் பாடிண்டு இருக்காரே”, என்றார். கல்கட்டாவில் நடந்த ஜி.என்.பி கச்சேரிக்கு பாலக்காடு ரகுவை சிபாரிசு செய்து, பயணச் செலவுக்கு வேண்டி 250 ரூபாய் முன்பணமும் பழனி வாங்கிக் கொடுத்தார். இந்த விஷயத்தை கே.எஸ்.காளிதாஸ் எடுத்த நேர்காணலில் பாலக்காடு ரகு கூறியுள்ளார்.

பழனி – ரகு உறவைப் போலவே, மணி ஐயர் திருச்சி சங்கரன் உறவும் ஆச்சர்யமானது.

அதைப் பற்றி கூறுகையில், “என் சிறு வயதில் திருச்சியில் வசித்து வந்தேன். அங்கு கச்சேரிக்கு வந்த மணி ஐயர் “இங்கு பழனி வழியில் ஒரு சின்னப் பையன் வாசிக்கறானாமே, அவனை வந்து பார்க்கச் சொல்லு”, என்று சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் அவரைப் பார்த்து வாசித்துக் காண்பித்தேன். பொறுமையாகக் கேட்டு, “நன்னா வரட்டும்”, என்று வாழ்த்தியதோடு மட்டுமின்றி, சென்னை திரும்பியதும் பழனி அண்ணாவைப் பார்க்கும் போது, “உங்கள் சிஷ்யன் வாசிப்பைக் கேட்டேன். நன்றாக வந்து கொண்டிருக்கிறான்”, என்றும் கூறியுள்ளார். நான் முதன் முதலில் 1956-ல் திருவையாற்றில் வாசித்த போது பாலக்காடு மணி ஐயர் காரியதரிசியாக இருந்தார். அப்போதெல்லாம் பெரியவர்கள் மட்டுமே சிறிய தனி ஆவர்த்தனர் வாசிப்பார்கள். நான் ஒரு மோரா வைத்து பாட்டை முடித்துவிட்டேன். அப்போது மணி ஐயர் மைக்கை எடுத்துக் கொண்டு, “இப்போது இந்தப் பையன் ஒரு தனி ஆவர்த்தனம் வாசிப்பான். நீங்கள் கேட்டு அவனை ஆசிர்வதிக்க வேண்டும்”, என்று ரசிகர்களிடம் கூறினார். அவர் அன்பை எப்போதும் மறக்க முடியாது.”, என்று நெகிழ்கிறார் திருச்சி சங்கரன்.

பாலக்காடு மணி ஐயர்
பாலக்காடு மணி ஐயர்

இருவரும் பெரும் பெயருடன் விளங்கினர் என்ற போதும் மணி ஐயருக்கு பட்டங்களும், பரிசுகளும் தேடி வந்தன. பழனிக்கோ ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத நாடக அகாடமி விருது’ போன்ற விருதுகள் கிடைக்கவில்லை. வெளிப்படையாய் சொல்லத் தயங்கினாலும், தனிப்பட்ட முறையில் பேசும் போது, ‘பழனி பிராமணரல்லாதவராய் பிறந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்’, என்று பலர் கூறுகின்றனர். அந்தக் காலச் சூழலை வைத்துப் பார்க்கும் போது இது உண்மை என்றே படுகிறது. இப்படிச் சொல்வதனால், மணி ஐயர் பிராமணராய் பிறந்ததால் மட்டுமே அவருக்கு விருதுகள் கிடைத்தன என்று தப்பர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. அவருக்கு சம காலத்திலும், அவருக்கும் முன்னரும் கூட பல பிராமணர்கள் மிருதங்க வித்வான்களாய் இருந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் மணி ஐயர் அளவுக்கு புகழ் பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிதும் மகிழ்ந்தவர். “ஜனாதிபதி விருது வாங்க அப்பா டில்லிக்குச் சென்ற போது, சென்னை ரயில் நிலையத்தில் பெருங் கூட்டம் கூடிவிட்ட்து. அன்று அப்பா கழுத்தில் விழுந்த முதல் மாலை பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதான் என்று அண்ணா கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.”, என்கிறார் ராஜாராம்.

பழனியின் தகுதிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததைப் பற்றி மணி ஐயர் பல இடங்களில் பேசியுள்ளார். “கிருஷ்ணா கான சபையின் யக்ஞராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் மணி ஐயர் பேசினார். தகுதியானோருக்கு தக்க விருதுகள் கிடைக்காத நிலையைப் பற்றி பேசும் போது, “சமீபத்தில் தவறிய மஹா வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளையைக் கூட தகுந்த கௌரவம் அளிக்காமல் விட்டுவிட்டோம்”, என்று ரொம்ப வருத்தப்பட்டு கூறினார்.”, என்று அந்த பேச்சை நேரில் கேட்ட கே.எஸ்.காளிதாஸ் கூறுகிறார்.

சம காலத்தில் இரு மேதைகள் வாழும் போது, ரசிகர்கள் இரண்டாக பிரிந்து விவாதிப்பது சகஜமாகும். “மணி ஐயர் வாசித்தால் அதுதான் சிறந்த வழி என்பது போலவும், பழனியைக் கேட்டால் அதற்கு மிஞ்சி ஒன்றும் இல்லை என்பது போலவும் தோன்றும். உண்மையில் இரண்டும் பெரு வழிகள். இரண்டில் எது சிறந்தது என்பதெல்லாம் வீண் விவாதம். நான் இளைஞனாக இருந்த போது ஒரே நாளில் மணி ஐயர் ஜி.என்.பி-க்கு வாசிப்பார், பழனி ஆலத்தூருக்கு வாசிப்பார். ஜி.என்.பி கச்சேரியில் முதல் ஒரு மணி நேரத்தில் தனி ஆவர்த்தனம் விட்டு விடுவார். அங்கு மணி ஐயர் வாசித்ததைக் கேட்டுவிட்டு ஆலத்தூர் கச்சேரிக்கு ஓடினால், அவர்கள் பல்லவி பாடும் போது சேர்ந்துவிடலாம். பல்லவிக்குப் பின், பழனி விஸ்தாரமாய் தனி வாசிப்பார். இவ்விருவர் வாசிப்பையும் அடுத்தடுத்து கேட்டு மகிழ்வோம். இரண்டு பேர் வாசிப்பும் மாணவர்களுக்கு எண்ணற்ற பரிமாணங்களை அள்ளித் தந்தன. அன்று அவர்கள் கச்சேரிகள் செய்த வேலையை இன்று அவர்கள் வாசித்த ஒலிப்பதிவுகள் செய்கின்றன.”, என்று அழகான தீர்ப்பை ‘பழனியா? மணி ஐயரா?’ பட்டி மன்றத்துக்கு அளிக்கிறார் வித்வான் மதுரை டி.ஸ்ரீனிவாஸன்.