20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 14

DADA
கலையில் அழகியல் தகர்ப்பு

இருபதாம் நூற்றாண்டில் முதல் உலகப் போர் நிகழும் நேரத்தில் போரில் ஈடுபட்டிருந்த பல நாடுகளிலிருந்தும் போரையும் அதன் விளைவுகளையும் வெறுத்த பல கலைஞர்கள் தங்கள் நாடுகளிலிருந்து தப்பித்து வெளியேறி அகதி களாக நடுநிலை நாடான ஸ்விஜர்லாந்தில் தஞ்சம் புகுந்தனர். அவருள் பலர் கட்டாயப் படை சேர்ப்பிலிருந்து தப்பித்தவர். அந்நாட்டின் தலை நகர் ஜூரிச் அவர்களின் மைய இயக்கமாக விளங்கியது.

அங்குதான் ‘டாடா’ சிந்தனை தோற்றம் கண்டது. 1916-1923 களுக்கு இடையில் அது பூதாகாரமாக வளர்ந்து ஐரோப்பிய கலை உலகைப் பெரும் கலக்குக் கலக்கியது. ஓவியம், சிற்பம், இலக்கியம், அரங்கம், இசை என்று அனைத்துத் தளங்களிலும் அப்போது நடை முறையிலிருந்த, சிறந்தது என்று கருதிப் போற்றப்பட்ட சிந்தனைகளை எள்ளிப் புறம் தள்ளி, கலையில் அதுவரை இருந்த அழகியலை புரட்டி உடைத்து உலகின் கவனத்தைத் தன்வசம் திருப்பியது அவ்வியக்கம். உண்மையில் ‘டாடா’ ஒரு கலை இயக்கமல்ல அது கலைக்கு எதிரானது. அதன் தோற்றத்தின் நோக்கமே அப்போதிருந்த கலாசாரத்தையும் கலையையும் கொல்வதுதான். அனைத்தையும் அழிப்பதுதான். ஒன்றன்மேல் ஒன்றாக பரப்பி அடுக்கியவிதமாக மின்னல் வேகத்தில் அது செயற்பட்டது. உலகின் பல பகுதிகளிலும் சீற்றத்துடன் புறப்பட்ட இளைய படைப்பாளிகளின் குழுக்கள் முந்தைய அனைத்து கலை கலாசாரக் கோட்பாடுகளையும் உலுக்கின. அக் கலைப்புரட்சியிலிருந்து தோன்றிய சர்ரியலிஸம் (Surrealism), பாப் ஆர்ட் (Pop art) பாணி சிந்தனைகள் அடுத்த அறை நூற்றாண்டில் உலகின் ஒட்டுமொத்த கலை, கலாசாரம் சார்ந்த சிந்தனைகளை முற்றிலுமாக உடைத்துப் போட்டன.

1916 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் ஹியூகோ பால் (Hugo Ball), தனது நண்பர் எம்மி ஹென்னிஸ் (Emmy Hennings), ட்ரிஸ்டன் சாரா (Tristan Tzara) ஆகியோருடன் காபரே வோல்டெர் (‘Cabaret Voltaire’) என்னும் பெயர் கொண்ட இரவுக் கேளிக்கை விடுதி (Night Club) ஒன்றைக் கலை, அரசியல் சார்ந்த கருத்துப் பகிர்தலுக்கானதாகத் தொடங்கினார்.

அப்போது வெளிவந்த அது பற்றிய பத்திரிகை செய்திக்குறிப்பு

“காபரே வோல்டெர் என்னும் அமைப்பு இளம் கலைஞர்கள், எழுத்தாளர் களை உள்ளடக்கிய ஒரு இரவு விடுதி. கலை விரும்பிகள் கலை நிகழ்வுகளை கண்டு களிக்கும் விதமாக இயங்குவதுதான் அதன் நோக்கம். அங்கு அதன் உறுப்பினரல்லாதவரும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கலாம். தினமும் இரவில் கூடும் சந்திப்புக்கள் இலக்கிய வாசிப்புகள், கலை நிகழ்ச்சிகள் என்பதாக அமையும். இளைஞர்கள் தமது நோக்கம் எதுவாயினும் தங்களது சிந்தனை களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அனைத்து விதமான கலைப் பங்களிப்பையும் அங்கு பகிர அழைக்கப்படுகின்றனர்.”

தங்கள் நிகழ்ச்சிகளை மிக வினோதமும் மிகுந்த எதிர் விளைவுகளைத் தோற்றுவிப்பதாகவும் அவர்கள் அமைத்தனர். அங்கு இடம்பெற்ற இசை, நடனம், பேச்சு மொழி (spoken Word) போன்றவை இங்கிதமற்றதும் முறட்டுத்தனம் கூடியதுமான நிகழ்வுகளாக அமைந்தன. பலமொழிக் கவிதைகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஏற்றதாழ்வுக் குரல் ஒலியளவில் படிக்கப்பட்டன. அதற்கு எந்தத் தொடர்பும் இல்லாத விதமாக தோல் கருவி (drum) ஒலிக்கப்பட்டது. அவை பார்வையாளரை முகம் சுளிக்க வைத்தன. அப்போது உலகில் நிலவிய குழப்பம் மிகுந்த போர்ச் சூழலைப் பிரதி பலிப்பதாகவே அவை அமைந்தன. வெவ்வேறு பாணிகளைப் பின் பற்றிய கன்டின்ஸ்கி (Kandinsky), பால் லீ (Paul Klee), ஜியோரிகோ தொ சிரிகோ (Giorigo de Chirico), மாக்ஸ் ஏர்ன்ஸ்ட் (Max Ernst) போன்ற ஓவியர்கள் தமது படைப்புகளை அங்கு காட்சிப்படுத்தினர்.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தங்கள் இயக்கத்திற்கு ‘டாடா’ (Dada) என்ற பெயரையும் அக்குழு தேர்ந்தெடுத்தது. அது தேர்வு செய்யப்பட்ட விதமும் வினோதமானதுதான். பிரென்ச்-ஜெர்மன் மொழி அகராதியை ஒரு கத்திகொண்டு குத்தி கத்தியின் முனை குத்திய இடத்தில் இருந்த சொல்லை தேர்ந்தெடுத்தனர். ஃப்ரென்ச் மொழிப் பேச்சுவழக்கில் dada என்னும் சொல்லுக்கு பொழுதுபோக்கு என்பது பொருள். அச்சொல் சிறுவர் ஆடும் குதிரை பொம்மையையும் குறிக்கும். ருமானிய மொழியில் ‘dada’ என்றால் ‘ஆம் ஆம்’ என்பது பொருள். ஓவியர்கள் சாரா, மார்செல் இருவரும் பிறருடன் உரையாடும்போது அதை அதிக அளவில் பயன் படுத்தியதால் அச்சொல்லே குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் அவையெல்லாவற்றையும் ‘டாடா’வின் தோற்றத்திற்கு காரணமானவர்கள் வன்மையாக மறுத்தனர்.

ஜூலை 14, 1916 அன்று கூடிய கூட்டத்தில் ஓவியர் பால் இயக்கத்தின் கோட்பாடுகளைப் (Manifesto) பட்டியலிட்டார். “எங்களது கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அனைத்தையும் உடைத்து எறியவேண்டிய தருணம் இது. பின்னர் அனைத்தையும் புதிதாகத் தொடங்குவோம்” என்னும் கருத்து அப்போது வலியுறுத்தப்பட்டது. ‘டாடா’வின் இயக்கம், பொதுக்கூட்டங்கள், செயல்முறை விளக்கங்கள், கலை இலக்கிய இதழ்கள் வெளியிடுதல் என்று விரிந்தது. போரை மறுத்தும், அதை எதிர்த்தும் அது எடுத்துச் செல்லப்பட்டது. இன்று நமக்கு அவை பொருளற்றுத் தோன்றினாலும், போர்மூள மூல காரணம் அப்போது நிலவிய கலாச்சாரம்தான் என்று அவர்கள் திடமாக நம்பியதாலேயே அவ்விதம் செயற்பட்டனர் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

போர் முடிவுக்கு வந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய குழுவின் உறுப்பினர் பலர் டாடா இயக்கத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தினர். ஒரு சூராவளி போல நாடு நாடாகப் பரவிய அது, உலகின் மறு புறத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, பெர்லின், பாரிஸ், நியூ யார்க் போன்ற நகரங்களில் அதன் தாக்கமும் அதிர்வும் கூடுதலாக இருந்தன.

பெர்லின்

ரிச்சர்டு ஹ்யூல்சென்பெக் (Richard Huelsenbeck) பெர்லின் நகரத்து எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து டாடா இயக்கத்தை நடத்தினார். முதல் உலகப் போரில் தோல்வி கண்ட ஜெர்மனி மிகுந்த குழப்பத்திலிருந்தது. அங்கு இடதுசாரிச் சிந்தனை வலுவாகச் செயற்பட்டது. நாட்டில் எங்கும் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடின. டாடா சிந்தனையாளர் இடதுசாரி சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால், அவர்களின் செயற்பாடுதான் முற்றிலும் வேறாயிருந்தது. மக்கள் குழுமித் தொழும் தேவாலயங்களில் குழுவினர் தங்கள் நிகழ்ச்சிகளால் தொழுகைக்கு இடையூறு விளைவித்தனர். அரசவை கூடிய நேரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கொள்கை அச்சடித்த தாள்களை வினியோகித்தனர். பொருளற்ற விதமான எழுத்துக்களைக் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்றனர். நகரின் ஒரு பகுதியை ‘டாடா குடியரசு’ (Dada Republic) என்றும் அறிவித்தனர். அரங்கம், நடன நிகழ்வுகள் விளக்க உரைப் பயணங்கள், காட்சிகள், நூல் இதழ் வெளியிடுதல் என்று பலதளங்களில் தங்கள் சிந்தனையை மக்களிடையே எடுத்துச் சென்றனர். ஆனால், அவை எப்போதுமே எதிர்பாராத தருணத்தில் பிறரை திகைக்கவைக்கும் விதமாகவே உருவானது. எங்கிருந்தோ தோன்றும் இதழ்கள் மக்களை சென்றடையும். அரசு தணிகைக் குழுவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவற்றை வினியோகித்த கும்பல் மறைந்துவிடும். அரசால் தடைசெய்யப்பட்ட அது வேறு உருவில் மீண்டும் மக்களிடையே உலாவரும்.

ஆனால், டாடா சிந்தனையாளர் இடதுசாரி இயக்கத்தினருடன் இணைந்து செயற்பட்டது பற்றி பின்னர் வெகுவாக வருந்தும் நிலை உருவாயிற்று. ஜெர்மனியில் இடதுசாரி சிந்தனை தோல்வியுற்று பிசுபிசுத்துப் போயிற்று. டாடாவின் வீரியமும் அதன் செயற்பாடும் முற்றுமாக நின்று போனது. கலைஞர்கள் அவரவர்க்கு விருப்பமான பாதையில் பயணித்தனர்.

பாரிஸ்

போருக்குப் பின் பாரிஸில் ரெவ்யூ லிட்ராதூர் (Review Litterature) என்னும் இலக்கிய இதழுடன் தொடர்பு கொண்ட இளைஞர் குழு ஒன்று ஜூரிச் நகரிலிருந்து திரும்பி வந்த சாரா (Tristan Tzara) வை உற்சாகத்துடன் எதிர் கொண்டது. லூயி அரகான் (Louis Aragon), ஆந்தரே ப்ரெடன் (Andre Breton), பால் லூவார்டு (Paul Eluard) போன்றோர் அவர்களில் சிலர். இவர்கள் பாரிஸ் நகரில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினர். அவற்றில் நாடகம், நகைச்சுவை கூடிய குறுநாடகம், இசை, டாடாவின் கொள்கையை விளக்கும் சொற்பொழிவுகள் போன்றவை இடம்பெற்றன. ஆனால், அவை பார்வையாளர்களை மகிழ்விக்க வில்லை; மாறாக, அவர்களது கடுமையான மதிப்பீடுகளை வெளிக் கொணர்ந்தது. டாடா வேண்டியதும் அதுதானே! தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு அதுபற்றி ஒன்றும் கூறாமலோ அல்லது மகிழ்ச்சியுடனோ பார்வையாளர் செல்வது என்பது அங்கு இல்லை. பார்வையாளரை ஏளனம் செய்து அவரது கோபத்தை தூண்டுவதும் அதனால் ஏற்படும் கூச்சலும் குழப்பமும் தவிர்க்க முடியாததாகப் போவதும் எங்கும் நிகழ்ந்தது.

கலை வரலாற்றுப் பதிவாளர்களுக்கு பாரிஸ் நகரக் கலை நிகழ்வுகள் பற்றின செய்திகள் அதிகம் கிட்டாது. அங்கு அரசியல்வாதிகளின் கருத்துப் போக்கும், இலக்கிய சண்டைகளும்தான் மேலோங்கியிருந்தன. டாடா இயக்கம் அங்கு டச் கேம்ப் (Duchcamp), பிகாபியா (Pikabia) என்னும் இரு ஓவியர் களைத்தான் தோற்றுவித்தது. டாடா இயக்கம் தொடங்கிய வேகத்திலேயே அங்கு கருத்து மோதல்களும் தோன்றிவிட்டன. பிகாபியா, சாரா போன்ற ஓவியர்களின் அணி ஒருபுறமும், ‘ரெவ்யூ லிட்ராதூர்’ இலக்கிய இதழின் எழுத்தாளர் அணி (லூயி அரகான், ஆந்தரே ப்ரெடன், பால் லூவார்டு) மறு புறமுமாக ஒரு அணியை மற்றது விமர்சிப்பதும் மறுப்பதுமாக பயணித்த டாடா இயக்கம் பாரிஸ் நகரில் வெறும் நான்காண்டு காலம்தான் செயற்பட்டது. பின்னர் அதன் வேகமும் தாக்கமும் வலுவிழந்தன. என்றாலும், அந்த இடைப் பட்ட காலத்தில் டாடா ஏராளமான ஓவியக் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், தொடர் அறிக்கைகள், அச்சிட்ட கையேடுகள், இலக்கிய இதழ்கள், நூல்கள் போன்றவற்றை கொணர்ந்தது. அதன் விளைவுகள் எப்போதும் வலிமை கூடியதாக, முரட்டுத்தனம் குறையாததாக, பிறருக்கு கோபத்தையும் எரிச்சலையும் தோற்றுவிப்பதாகவுமே இருந்தன. ஆந்தரே ப்ரெடன் தலைமையில் இயங்கிய வர்கள் 1924 இல் ‘ஸர்ரியலிசம்’ என்னும் புதிய கலை சார்ந்த சிந்தனையை அறிமுகப் படுத்தினர்.

நியூயார்க்

அதே காலகட்டத்தில் (1915) டச் கேம்ப் (Duchcamp), பிகாபியா (Pikabia) இருவரின் வருகை அமெரிக்கக் கலையுலகச் சிந்தனையில் டாடா வை இறக்குமதி செய்தது. 1913 லேயே அந்நகரில் ‘ஆர்மரி ஷோ’ என்னும் ஓவியக் காட்சியில் அவ்விருவரின் படைப்புகளும் இடம்பெற்று, பார்வையாளர்களை வரவிருந்த புதிய கலைச் சிந்தனைக்கு ஆயத்தப் படுத்தியிருந்தது. ‘கலை விடுதலை சிந்தனை இயக்கம்’ (Movement of Artistic Libaration) சார்ந்த ஒரு இளைஞர் கூட்டம் ஐரோப்பிய நாடுகளின் கட்டாயப் படைசேர்ப்புக்குத் தப்பி அடைக்கலமாக நியூயார்க் வந்தவருடன் இணைந்து உற்சாகமாக டாடாவை முன் நடத்திச் சென்றது. அந்த சூழலில்தான் டச் கேம்ப் தனது புதிய படைப்பு அணுகு முறையான ‘ரெடி மேட்’ (Ready made) என்ற பெயரிட்ட படைப்புகளைக் காட்சிப் படுத்தினார். ‘தனித்தியங்கும் கலைஞர் குழு’ வுடன் (Society of Indipendent Artists) அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஆனால், இன்று மிகச் சிறப்பாகப் பேசப்படும் அவரது படைப்பான ‘ஃபௌன்டன்’ (‘Fountain’ சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டி) என்னும் சிற்பம் தேர்வுக் குழுவின் தகுதி குறைவு என்னும் முடிவு காரணமாக அவர்களது ஆண்டு காட்சியில் இடம் பெறவில்லை.

நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டில் டாடா இயக்கம் ஓவியர் தியோவான் தோயஸ்பர்கோ (Theovan Doesburgo) வை மையமாகக் கொண்டு வளர்ந்தது. அவர் தோற்றுவித்த ‘டெஸ்டில்’ (Destijl) இயக்கம் தனது கலையிதழ்களில் டாடா தாக்கம்கொண்ட கட்டுரைகள், கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டது. ‘டாடா என்றால் என்ன?’ என்னும் தலைப்பில் அவர் கையேடுகளை அச்சிட்டு 1923 இல் டச் டா டா (Dutch Dada) சந்திப்பில் வந்தோர்க்கெல்லாம் வினியோகித்தார்.

1924 க்குள் டாடா சிந்தனை என்பது உருகி ‘சர்ரியலிசம்’ என்று மாற்றுருக் கொண்டது. ‘சர்ரியலிசம்’, ‘சோசிலிஸ்ட் ரியலிசம்’ போன்ற புதிய பாணிகளுக்குக் கலைஞர்கள் இடம்பெயர்ந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் பல ஐரோப்பிய டாடா இயக்க கலைஞர்கள் தமது நாட்டைவிட்டு ஓட நேர்ந்தது. அவர்களில் பலர் ஹிட்லரின் போர்க்கால மரணச் சிறைகளில் மாண்டு போயினர். எனினும், டாடா சிந்தனைமட்டும் இன்றளவும் உலகெங்கும் பேணப்பட்டு வருகிறது.

மாய யதார்த்த வெளிப்பாடு

ஸர்ரியலிஸம்-1924
Surrealism

முதல் உலகப் போர் பாரிஸ் நகரில் வசித்த பல கலைஞர்களை, எழுத்தாள சிந்தனாவாதிகளைச் சிதற அடித்ததையும், அழிவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டி, அப்போது நடுநிலை நாடாக அறிவித்துக் கொண்ட ஸ்விஜர் லாந்துக்குப் பலர் தப்பி ஓடியதையும். அங்கு ஜூரிச் நகரில் எவ்வாறு ‘தாதா’ எதிர் கலைச் சிந்தனை தோன்றி ஒரு பெரும் வலுவான இயக்கமாகப் பின்னர் பாரிஸ் நகரில் வளர்ந்து விரிவடைந்தது என்பதையும் ‘தாதா’ கட்டுரையில் கண்டோம்.

முதலாவது உலகப் போர்க் காலத்தில் மருத்துவத்திலும், மனநோய் சார்ந்த மருத்துவப் படிப்பிலும் பட்டம் பெற்றிருந்த ஆந்தரே ப்ரெடன் -பின்னாளில் ஸர்ரியலிஸ இயக்கத்துக்கு அச்சாணியாக இயங்கியவர்- நரம்பியல் சார்ந்த சிகிச்சைக்கான மருத்துவ மனையில் பணிபுரிந்தார். அங்கு பல போர்வீரர் களுக்கு, குறிப்பாக Shell-Shoked என்னும் எலும்பை உலுக்கும் அதிர்ச்சி காரணமாகத் சிந்தனை உறைந்து போன வீரர்களுக்கு சிக்மென்ட் ப்ராய்டு (Sigmund Freud) பரிந்துரைத்த ‘சைகோ அனலிடிக்’ (Psychoanalytic) முறையைக் கையாண்டு சிகிச்சை அளித்தார்.

பாரிஸ் நகரம் திரும்பிய அவர் ‘தாதா’ சிந்தனாவாதிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ‘லிட்றாதூர்’ (‘Litterature’) என்னும் இலக்கிய இதழை லூயி அரகான் (Louis Aragon), ஃபிலிப் சூபௌல்ட் (Philippe Soupault) இருவரின் துணையுடன் தொடங்கினார். அவர்கள் ‘தன்னிச்சையான எழுத்து’ (Automatic writing) என்னும் உத்தியைத் தோற்றுவித்து எழுதத் தொடங்கினர். தங்கள் படைப்புகளில் மனச்சிந்தனைக்கு எவ்விதத் தடையும் போடாமல் அனைத்தையும் படைப்புமூலம் வெளிக் கொணர்ந்தனர். எதையும் ஒளிக்கவோ, ஒழுங்கு படுத்தவோ, மறைக்கவோ இல்லை.

ஸர்ரியலிஸம் என்னும் கலாச்சார சிந்தனை சார்ந்த இயக்கம் 1920 களின் தொடக்கத்தில் ‘தாதா’ இயக்கத்தில் கிளைத்த ஒன்றாக பாரிஸ் நகரை மையமாகக் கொண்டு தோன்றியது. சமூக ஒழுக்க நெறி அழுத்திவைத்திருக்கும் மனதை அத் தளையிலிருந்து விடுவிக்கவும், பின்னர் சமூகத்தளையிலிருந்து தன்னை விடு வித்துக் கொள்ளவும் தொடங்கியது. அகமனம் சார்ந்த சிந்தனைகளை, மென்னுறக்கத்தில் காணும் கனவுகளில் கிட்டும் தொடர்பற்ற அனுபவங்களை எழுத்திலும், ஓவியத்திலும் பதிவு செய்வதும் அதிலடங்கும். தினசரி விழிப்பு நிலையில் நிகழும் உண்மையைவிட இதுதான் மெய்யானது என்னும் தங்கள் கோட்பாட்டை முன் நிறுத்தினர். முதலாவது உலகப் போரினால் விளைந்த பேரழிவும், தொழிற் புரட்சியின் தாக்கமும், அப்போதிருந்த வரட்டுத்தனமான சிந்தனைப் போக்கும்தான் கலாச்சாரச் சீரழிவிற்குக் காரணம் என்று உறுதியாக நம்பிய அவர்கள் அதற்கு மாற்றாக இந்த அணுகு முறை ஒரு புதிய கலாச்சாரக் கட்டுமானத்துக்கு வழிவகுக்கும் என திடமாக நம்பினார்கள். அவர்களது இயக்கத்துக்கு சிக்மென்ட் ப்ராய்டுஇன் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கான விளக்கங்கள், சிந்தனைகள் ஆகியவை பெரும் ஈர்ப்புடையனவாக இருந்தன. மனிதனின் ஆழ் மனச் சிந்தனைப் போக்கைப் படைப்பு உத்திக் கருவாக எடுத்துக் கொண்ட அவர்கள் மனப் பிழர்வையும், இருள் மனத்தையும் நிராகரித்தனர். அதன் தன்நிலை விளக்கமாக, ஓவியர் டாலி ‘ஒரு மனநிலை பிழன்றவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் பயித்தியமில்லை என்பதுதான்’ (The only difference between myself and a mad man is I am not mad) என்று ஒருமுறை கூறினார். இவ் ஓவியர்கள் ஆழ்மன அலசல்களில் தங்களுக்குக் கிட்டிய அனுபவங்களைத் தங்கள் படைப்பின் கருப்பொருளாகினர். ஆழ்மனக் கொந்தளிப்புகளை கூட்டுவதோ குறைப்பதோ இன்றி முற்றிலுமாக வெளிக் கொணர்ந்தனர். அவை காண்போர் அச்சுற்று மிரளும் விதத்தில், எந்த வரம்புக்கும் கட்டுப்படாமல் இயல்புக்கு முறணானதாக இருந்தன. மேலும் அவை வேறு உலகத்தைச் சார்ந்த, கனவுலகின் உறைந்த தன்மையையோ அல்லது அச்சுறுத்தும் கனவுகண்டு உறக்கதிலிருந்து விழித்துப் பதரவைப்பன போன்ற வகையிலோ இருந்தன.

தங்கள் சிந்தனை சார்ந்த பாதையில் பயணித்த அவர்களுக்கு ‘தாதா’ சிந்தனையாளர் வெறுத்து ஒதுக்கிய முந்தைய சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி மக்களிடையே அன்றாடப் புழக்கத்திலிருக்கும் எளிய பொருள்களைத் தமது படைப்பின் கருப்பொருளாக தேர்ந்தெடுப்பதுதான் உண்மையான கலாச்சார வளர்ச்சியாக இருக்கும் என்பது தெளிவாகியது. ஆனால், அவற்றைத் தமது படைப்பில் கட்டமைக்கும் விதத்தில் பெரும் வேறுபாடுகளைக் காட்ட முனைந்தனர்.

1924 இல் குழுவினர் தங்களது படைப்பு சிந்தனை சார்ந்த எதிர்கால திட்டங்கள் பற்றின அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கை ஆன்ந்ரெ ப்ரெடன் ஆல் வடிவமைக்கப் பட்டது. அதே ஆண்டில் ஸர்ரியலிஸ அராய்ச்சி அமைப்பு ஒன்றை நிறுவி ‘லா ரெவலூஷன் சர்ரியலிஸ்டிக்’ (La Revolution Surrealiste ) என்ற கலையிதழ் ஒன்றையும் வெளியிடத் தொடங்கினர். நான்காவது இதழ் முதற்கொண்டு ஆன்ந்ரெ ப்ரெடனை ஆசிரியராகக் கொண்டு டிசம்பர் 1924 முதல் 1929 வரை தொடந்து வெளிவந்தது. இதழில் வந்த கட்டுரைகள் நெருக்கமான கட்டமைப்பில் இருந்தபோதும் ஆங்காங்கே கியொரிகொ டெ சிரிகோ (Giorigo de Chirico), மாக்ஸ் ஏர்ன்ஸ்ட் (Max Ernst), ஆந்த்ரே மாசோன் (Andre Masson), மான் ரே (Man Ray) போன்றோரின் ஓவியங்களும் இடம்பெற்றன. இதழில் அரசை எதிர்த்தும், அதன் செயற்பாடுகளைக் கடுமையாக சாடியும் கடிதங்கள் வெளியிடப்பட்டன. கம்யூனிச சிந்தனைக்கு ஆதரவாக அவர்களது செயற்பாடுகள் இருந்தன. அந்த நேரத்தில்தான் ஓவியர் டாலி குழுவில் இணைவதும் நிகழ்ந்தது. 1920 களில் உணவகங்களில் கூடி ஓவியங்களைப் படைத்ததும், தங்கள் சிந்தனைப்போக்கு சார்ந்த சர்ச்சைகளில் ஈடுபட்டதும், அதன் பயனாக பல புதிய உத்திகளைக் கைகொண்டு படைப்பதும் நிகழ்ந்தது.

ஓவியர்கள் மிரோ, மாசன் இருவரும் 1925 இல் ஸர்ரியிலிஸ சிந்தனையை ஓவியத்தில் கருப்பொருளாக்கி வெற்றி கண்டனர். ‘சர்ரியலிஸ்ட் ஓவியக் காட்சி’ (La Painture Surrealiste Exhibition ) என்னும் பெயரில் பாரிஸ் நகரில் ‘காலரி ஃபியர்’ (Gallerie Pierre) ஓவியக் கூடத்தில் ஓவியக்காட்சி நிகழ்ந்தது. அக்காட்சியில் மேசன் (Masson), மான் ரே (Man Ray), லீ (Klee). மிரோ (Miro) போன்ற பலரது ஓவியங்கள் இடம்பெற்றன. அடுத்த ஆண்டில் (26-மார்ச் 1926) ஸர்ரியலிஸ காட்சிக்கூடம் (Gallerie Pierre) ஓவியர் மான் ரே யின் ஓவியக் காட்சியுடன் திறக்கப் பட்டது. 1928 இல் ப்ரெடன் ‘சர்ரியலிஸமும் ஓவியமும்’ (Surrealism and Painting) என்னும் தலைப்பில் அதன் சிந்தனை, சாதனை போன்றவற்றை விளக்கி ஒரு நூல் வெளியிட்டார். அறுபதுகள் வரை அவர் தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சி, மாற்றங்கள் பற்றின பதிவுகளைத் தொடர்ந்து செய்துவந்தார்.

ஸர்ரியலிஸத்தின் சிந்தனை என்பது எப்போதும் ப்ரெடனை மையமாகக் கொண்டே செயற்பட்டது. குழுவினர் தங்கள் இயக்கம் சார்ந்த சிந்தனை பற்றின விவரங்களை சிறு சிறு ஆய்வுக் கட்டுரைகள் மூலமும், குறிப்பேடுகள் மூலமும் மக்களிடையே பரப்பினர். பல்வித நூதன விளையாட்டுக்களைக் கற்பிதம் செய்து குழுவாக விளையாடினர். (e.g. le cadavre exquis) குழுவாக எழுதிய படைப்புகளை நூலாக்கி அச்சிட்டனர். இயக்கம் தன் வளர்ச்சி பற்றின மீள் பார்வையை கொண்டிருந்தது. அதுபற்றிய மதிப்பீடுகள் மிகுந்த அக்கரையோடு செய்யப் பட்டன. கவிதைகளை வெளியிடுதல், கனவுகளின் கிட்டிய அனுபவங்களைப் பதிவு செய்தல், தடையற்ற எழுத்து, ஓவியம் படைத்தல், புகைப்படக்கலை, திரைப் படமெடுத்தல் போன்றவற்றுடன் வாழ்க்கை சார்ந்த புதிர்ககளுக்கான தீர்வுகளைக் காண கேள்விகளை முன் நிறுத்தி குழுவாக விவாதித்து அவற்றுக் கான தீர்வுகளைக் கண்டறிய முனைந்தனர். அவற்றில் சில கேள்விகள்:
இதை யாருக்காகவென்று நீ படைத்தாய்/ (‘Pourquoi e`crives-vous?), அது ஒரு தீர்வைக் கொடுக்குமா? (Lesuicideest-il une solution?), உன் காதலிக்கு/காதலனுக்கு என்னவிதமான உதவியை அவளுடைய/அவனுடைய மனக் குழப்பதின்போது கொடுத்தாய்? (Quelle sorte d’espoir mettez-vous dans l’amour?’)

1925 இல் ப்ருசெல் (Brussels) நகரில் ஸர்ரியலிஸ குழு ஒன்று தோன்றியது. அது பாரிஸ் நகரக் குழுவுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்துவந்தது.

இரண்டாவது உலகப் போர் ஸர்ரியலிஸ இயக்கத்துக்குப் பெரும் இடராக அமைந்தது. அதன் காரணமாகப் பல கலைஞர்களும், சிந்தனாவாதிகளும் ஃபிரான்ஸ் நாட்டை விட்டு வேறு புகலிடம் தேட நேர்ந்தது. ஓவியர்கள் டாலி Dali, டான்கி Tanguy, மட்டா Matta மூவரும் ஐக்கிய அமெரிக்காவுக்கும், ப்ரெடென் Breton மெக்சிகோவுக்கும், ஓவியர் மாக்ரிட் Magritte பெல்ஜியத்துக்கும் இடம் பெயர்ந்தனர். அவர்களின் வரவால் அமெரிக்காவில் கலாச்சார சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், போர் முடிவுக்கு வந்து, பிரான்ஸ் விடுதலை அடைந்தபின் நாடு திரும்பிய அறிவு ஜீவிகள், கலைஞர்கள் கூடி இயங்குவது என்பது முன்புபோல நிகழ வில்லை.

பெண்ணியவாதிகள் ஸர்ரியலிஸ இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கையில் அடிப்படையில் அது ஒரு ஆணாதிக்க சிந்தனை இழை ஓடிய இயக்கம் என்னும் எதிர் கருத்தை முன் வைத்தனர். ஸர்ரியலிஸ குழு உறுப்பினர்களும் மற்ற எல்லா ஆண்களையும் போலவே பெண்ணைத் தேவையற்றுப் போற்றுவதும், பெண்களை உடல்ரீதியாக அணுகுவதும், பெண் எப்போதும் ஆணின் காம உணர்வுடன் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவன் என்பதாகத்தான் இயங்கினர், என்று கடுமையாகச் சாடியபோதிலும் இயக்கத்தில் சில பெண்கவிஞர்களும் பெண் ஓவியர்களும் இருக்கத்தான் செய்தனர். ( லியொனா ஃபினி Leonor Fini, லாம்பா ப்ரெடென் Lamba Breton, டோரோதியா டேனிங் Dorothea Tanning, ரெனெட்வா வாரோ Renedios varo போன்றவர் அவர்களில் சிலர்)

குழுவின் இயக்கம் எப்போது நின்று போயிற்று என்பது – அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் – தெளிவான ஒன்றல்ல. சில கலை வரலாற்று வல்லுனர்கள் இரண்டாம் உலகப் போர்தான் அதைச் சிதைத்தது என்னும் கருத்தை முன் வைக்கின்றனர். 1989 இல் இறந்த ஓவியர் டாலியுடன் இதை இணைப்போரும் உண்டு. ஆனால், கலை வரலாற்று ஆசிரியர் சரீன் அலெக்ஸ்சாண்டியன் (Sarene Alexandian) (1927-2009) 1966 இல் நிகழ்ந்த ஆன்ந்ரே ப்ரெடொன் மரணம்தான் இயக்கத்தின் சிதைவுக்குக் காரணம் என்கிறார். அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கத்தின் உறுப்பினர் குழுவைக் கலைத்துவிட வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

ஸர்ரியலிஸ இயக்கத்தின்
ஆண்டு ரீதியான குறிப்புகள்
(1922 முதல் 1939 வரை)

படிப்பவருக்கு அதன் வளர்ச்சி பற்றின தெளிவினைக் கொடுக்கும் என்னும் நம்பிக்கையில் இடம் பெறுகிறது.

1922

கவிஞர் ஆன்ந்ரே ப்ரெடொன் (Andre Breton) தனது இலக்கிய இதழான ‘லிட்றாதூர்’ (‘Litterature’) இல் ‘தாதா’ சிந்தனையை மதிப்பீடுகள் செய்து கட்டுரைகள் எழுதுகிறார். அதன்விளைவாக ‘தாதா’ குழுவிலிருந்து விலகிய அவருடன் ராபர்ட் டெஸ்னோ (Robert Desnos), பென்ஜமின் பொரட் (Benjamin Peret) போன்ற கவிஞர்களும் விலகி அவரைச்சார்ந்து இயங்குகின்றனர். ஆன்ந்ரே ப்ரெடொன், ஃபிலிப் சூபௌல்ட் (Philippe Soupault) இருவரும் தொடங்கிய ‘தன்னிச்சையான எழுத்து’ (Automatic writing) படைப்புகளைத் தொகுத்து 1919 இல் பதிப்பிக்கின்றனர். அந்த உத்தியில் படைப்பது தொடர்கிறது. குழு தன்னை மூவ்மென்ட் ஃப்லொ (Movement Flou) என்ற பெயரில் அழைத்துக் கொள்கிறது 1924 இல் முறைப்படி “ஸர்ரியலிஸம்” என்னும் பெயருடன் இயக்கம் அறிமுகமாகிறது.

1924

ஆன்ந்ரே ப்ரெடொன் தொகுத்த ‘கரையும் மீன்’ (“Soluble Fish”) என்னும் ‘தன்னிச்சையான எழுத்து’ உத்தி கவிதை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை இயக்கத்தின் சிந்தனைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் திறந்தவெளி அறிக்கையாக மறுபடியும் அச்சடிக்கப்பட்டு இயக்கத்தை முறையாக அறிவிப்புச் செய்கிறது. நரம்பியல் மருத்துவ வல்லுனரான சிக்மென்ட் ப்ராய்டு (Sigmund Freud) தான் ஆன்ந்ரே ப்ரெடொனுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அவரால் மருத்துவத் துறையில் அறிமுகம் செயப்பட்ட ஸைகோ அனலிடிக் (Psychoanalitic) சிகிச்சை முறை சித்தாந்தம் ஆன்ந்ரே ப்ரெடொனால் கலைப் படைப்பு சிந்தனையாக அறிமுகமாகிறது. அவர் கனவுகளுக்குப் பொருளும் விளக்கமும் கொடுத்து ஒரு புதிய சிந்தனையைக் கலை, இலக்கியப் படைப்புகளில் உலாவ விடுகிறார். ‘லிட்றாதூர்’ இலக்கிய இதழுக்கு மாற்றாக லா ரெவலூஷன் சர்ரியலிஸ்டிக் (‘La Revolution Surrealiste’) என்னும் புதிய பெயருடன் இதழ் அறிமுகமாகிறது. உறுப்பினர் கூடி செயற்பட பீரோ ஒஃப் சர்ரியலிஸ்ட் ரிசர்ச் (‘Bureau of Surrealist Research’) என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது. ஓவியர்கள் ஆன்ந்ரே மாசோன் (Andre Masson), ழான் மிரோ (Joan Miro) இருவரும் இயக்கத்தில் இணைகிறார்கள்.

1925

இயக்கத்தினரின் முதல் ஓவியக் காட்சி பாரிஸ் நகரில் ‘Galerie Pierre’ என்னும் ஓவியக்கூடத்தில் 13 நவம்பர் அன்று நள்ளிரவில் திறக்கப்படுகிறது. அதில் ஜார்கியோ தொ சிரிகோ (Giorgio De Chirico), ஹான்ஸ் ஆர்ப் (Hans Arp), மாக்ஸ் ஏர்ன்ஸ்ட் (Max Ernst), பால் லீ (Paul Klee), மான் ரே (Man Ray), ஆன்ந்ரே மாசோன் (Andre Masson), ழான் மிரோ (Joan Miro), பிக்காசொ(Picasso), பியெர் ராய் (Pierre Roy) ஆகியோரின் படைப்புகள் இடம் பெறுகிறன.

ஓவியர் மாக்ஸ் ஏர்ன்ஸ்ட் தனது படைப்பில் புதிய உத்தியான ‘உரசுதல் உத்தி’ (Frottage) கொண்டு படைக்கத் தொடங்குகிறார். லூயி அரகோன் (Louis Aragon) தமது ‘லெ பெசோன் டெ பரி’ (Le Paysan de Paris) என்னும் புதினத்தை வெளியிடுகிறார். அது ஓவியர் ஆன்ந்ரே மாசோனுக்குக் காணிக்கையாக்கப் படுகிறது.

ப்ருஸெல் (Brussels) நகரில் எழுத்தாளர் பால் நூஷ் (Paul Nouge), E.L.T.மெசன் (E.L.T.Mesens) இருவரின் முயற்சியால் ஸர்ரியலிஸ குழு ஒன்று தோற்றம் கொள்கிறது. பின்னர் அது தன்னை ஃபாரிஸ் நகரக் குழுவுடன் இணத்துகொண்டு செயற்படுகிறது. பெல்ஜிய நாட்டு ஓவியர் ரென் மாக்ரிட் (Rene Magritte) குழுவை வழிநடத்தி செல்கிறார்.

1926

ஓவியர் ஆன்ந்ரே மாசோன் பசைகூடிய மணல் கொண்டு படைத்த ஓவியத்தில் ‘பொருளும்-யதேச்சையான விளைவும்’ (Matter and Chance) என்னும் உத்தியை முதன்மைப் படுத்தியது நிகழ்ந்தது.

மார்ச் மாதம் பாரிஸ் நகரில் ஆன்ந்ரே ப்ரெடோன், ஷாக் ட்ருவால் (Jacques Trual) இருவரின் முயற்சியால் ஸர்ரியலிஸ்ட் காட்சிக்கூடம் (Surrealist Gallery) தோன்றுகிறது. அதில் தொடக்கமாக ஓவியர் மான் ரே (Man Ray) யின் படைப்புகளுடன் ஓஷனியா (Oceania) தீவுகளின் பழங்குடி மக்களின் கலைப் படைப்புகளும் காட்சிப்படுத்தப் படுகின்றன. அது, இயக்கம் பழங்குடியினரின் கலை அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டதைக் கூறுகிறது. காட்சியின் கையேட்டின் முகப்பட்டையில் காணப்பட்ட பழங்குடிச் சிலை உருவம் தரக் குறைவாக இருப்பதாகக் குறைகூறப்படுகிறது. ஓவியர் மான் ரேதான் அதைத் தெரிவு செய்து காட்சிக்கூடத்தின் நுழைவாயில் சாரளத்தில் காட்சிப் படுத்தியிருந்தார்.

1927

ஜனவரி மாதத்தில் ஆன்ந்ரே ப்ரெடொன் ஃப்ரென்ச் கம்யூனிசக் கட்சியில் இணைகிறார். ஜூன் மாதத்தில் ஓவியர் வெஸ் டான்கி (Yves Tanguy) ஸர்ரியலிஸ்டு காட்சிக் கூடத்தில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறார். ஆன்ந்ரே ப்ரெடொன் மனநிலை பிழன்ற தனது காதலி நாடா (Nadja) வை கருப்பொருளாகக் கொண்ட புதினம் படைக்கிறார். ‘அழகு நல்விளைவைத் தருவதாக இருக்கும்; அல்லது அது அவ்வாறு இல்லாமலும் போகும்’ (Beauty will be CONVULSIVE or it shall not be) என்னும் பதிவுடன் புதினம் முடிவுறுகிறது.

1928

பிப்ரவரி மாதத்தில் ‘ஸர்ரியலிஸமும் ஓவியமும்’ (Surrealism and Painting) நூல் ஆன்ந்ரே ப்ரெடொனால் எழுதி வெளியிடப்படுகிறது. அதில் அவர் இயக்கத்தின் பல படைப்பாளிகளின் படைப்பாற்றல் பற்றின ஆய்வுக் கட்டுரைகளை தொகுக்கிறார். ஸால்வடோர் டாலி, லூயி புனூயெல் (Luis Bunuel) இருவரும் இணைந்து ‘ஒரு ஆண்டலுசிய நாய்’ (Un Chien Andalou) என்னும் பதினாறு நிமிடங்கள் ஓடும் ஒலியற்ற திரைப்படம் எடுக்கிறார்கள். ஷான் காக்டோ (Jean Cocteau) என்பவரால் ‘ஓவியனின் குருதி’ (“The Blood of the Poet” “Le Sang D’un Poete”) என்னும் பெயரில் மற்ரொரு ஸர்ரியலிஸத் திரைப் படம் எடுக்கப்படுகிறது.

1929

பிப்ரவரி மாதத்தில் ஆன்ந்ரே ப்ரெடொன் ஸர்ரியலிஸ இயக்கத்தில் பற்றுக் கொண்ட, குழுவிலிருந்த படைப்பாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் இயக்கத்தில் அவர்களுக்கு இருக்கும் நெஞ்சார்ந்த ஈடுபாடு பற்றி கேள்வியெழுப்பி அதற்கான பதிலை வேண்டிக் கடிதங்கள் அனுப்புகிறார். அது பலருக்கும் உடன்பாடானதாக இருக்கவில்லை. அது சார்ந்த சர்ச்சை உருவாகிறது. அதன் பின்விளைவாக, டிசம்பரில் ஸர்ரியலிஸம் பற்றின உருமாற்றம் கொண்ட சித்தாந்தங்கள் அடங்கிய இரண்டாவது அறிக்கை வெளிவருகிறது. அதில் வெளிப்படையாக சில உறுப்பினர்களின் செயற்பாடு பற்றின விமர்சனம் பின்னர் குழு பிளவுபடக் காரணமாகிறது.

மாக்ஸ் ஏர்னஸ்ட் “நூறு தலைகள் கொண்ட மனம் கலங்கிய உடன் பிறந்தாள்” (Perturbation Masoeur La Femme 100 tetes) என்னும் தலைப்பில் தமது கொலாஜ் பாணிப் புதினத்தை வெளியிடுகிறார். பழங்காலச் செதுக்கல்களிலிருந்து வடிவங்களைப்(Engravings) படியெடுத்து, பக்கங்களில் தொடராக அச்சிட்டு அரை உறக்க நிலையில் கிட்டும் கனவுலக காட்சிகளை தோற்றுவிக்கிறார்.
டாலியின் ஓவியப்படைப்புகள் முதன்முறையாக நவம்பர் 20 முதல் டிசம்பர் 5 வரை ஃபாரிஸ் நகரில் உள்ள காலரி கோமான் (Galerie Goemans) கூடத்தில் பார்வைக்கு இடம் பெறுகின்றன.

1930

இரண்டாவது அறிக்கைக்கு எதிர்வினையாக ஜனவரியில் ‘ஆன் காடவ்ர’ (‘Un Cadavre”) என்று தலைப்பிட்ட கையேட்டை ‘ஜியோஜெ பாதைல’ (Geoges Bataille) வெளியிடுகிறார். அதில் ஆன்ந்ரே ப்ரெடொன் முன்வைக்கும் ஸர்ரியலிஸ சிந்தனைகளில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அறிக்கையை முற்றுமாக ஒதுக்குகிறார். கட்டுரையின் முடிவில் அத்துடன் உடன்படும் மேலும் சிலரது கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. ஆன்ந்ரே ப்ரெடொன் தலைமையில் இணக்கமில்லாதவர்களில் ‘ஜியோஜெ பாதைல’ முதன்மையானவர்.

ஜூலை மாதத்தில் லூயி அரகோன் தந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இயக்கத்தினர் வெளியிடும் கலை இலக்கிய இதழ் ‘புரட்சிக்குத் தொண்டாற்றும் ஸர்ரியலிஸம்’ (‘La Revolution Surrealiste’ “Surrealisme au service de la Revolution” Surrealism in the Service of the Revolution) என்னும் பெயர் மாற்றத்துடன் வெளி வரத் தொடங்குகிறது.

டிசம்பரில் “பொற்காலம்” (‘L’age d’or’ ‘The Golden Age”) என்னும் திரைப் படம் டாலி, புனுயெல் இருவரின் தயாரிப்பில் பாரிஸில் திரையிடப்படுகிறது. தேசபக்தர்களின் அமைப்பு, யூதருக்கு எதிரான அமைப்பு (The League of Patriots, Ante-Jewish Leage) போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். காட்சியின்போது அரங்கத்தில் திரைசீலை கிழிக்கப் படுகிறது. காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் சிதைக்கப்படுகின்றன. கூடியிருந்தவர் மீதும் கலகக்கூட்டம் வன்முறையில் இறங்குகிறது. பத்தாம் தேதி திரைப்படம் தடை செய்யப்படுகிறது.

1931

ஸர்ரியலிஸ இயக்கக் குழுவினரின் படைப்புகள் முதன்முறையாக அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதி தலைநகரில் (Hartford) காட்சிப்படுத்தப் படுகின்றன. அல்பெர்டோ ஜியகோமெட்டி (Alberto Giacometti) தனது ,ஆர்கானிக் உருவங்கள்’ (“organic forms” )சிற்பங்களை படைக்கத் தொடங்குகிறார்.

1932

நவம்பரில் ஆன்ந்ரே ப்ரெடொன் கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள அழுத்தமான தொடர்பு பற்றி (The Communicating Vessels) ஒரு நூலை வெளியிடுகிறார். அதில் ஓவியர் டாலியின் படைப்பு ஆய்வுக்குள்ளாகிறது. அவரது ஸர்ரியலிஸ அணுகுமுறை கேள்விக்குள்ளாகிறது.

1933

பதிப்பாளர் ஆல்பெர்ட் ஸ்கிரா (Albert Skira) ஆன்ந்ரே ப்ரெடொனை சந்திக்கிறார். அவருடைய உதவியுடன் ஒரு கலை இலக்கிய இதழ் கொணர முடிவு செய்கிறார். இதழின் பெயர் மினோடௌர் (Minotaure) ஆன்ந்ரே ப்ரெடொன் அதில் சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில்லை என்று ஒப்புக்கொள்கிறார். முதல் இதழ் முற்றிலுமாக ஓவியர் பிக்காஸோவுக்கு ஒதுக்கப்படுகிறது. வண்ண ஓவியங்களைத் தாங்கிவந்த அது 1939 வரை வெளி வருகிறது. அனால் அது மாத, மும்மாத இதழ்கள் போல இல்லாமல் தொகுப்பாக வருகிறது. இதழ்களுக்கு எண்கள் கொடுக்கப் படுகின்றன.

1934

ப்ருஸேல்ஸ் நகரில் ஐரோப்பாவின் அனைத்துப்பகுதி ஸர்ரியலிஸப் பாணி படைப்புகளை ஒருங்கிணைத்து பெல்ஜியம் ஸர்ரியலிஸ்டு குழு ஒரு காட்சி நிகழ்த்துகிறது. இக்காட்சிக்கும் மினோடௌர் என்னும் பெயர் கொடுக்கப் படுகிறது. ஜெர்மனி நாட்டு ஓவியர் ஹான்ஸ் பெல்மெர் (Hans Bellmer) மினோடௌர் ஆறாவது இதழை வெளியிட்ட போது ஸர்ரியலிஸ இயக்கத்தில் இணைகிறார். அவரது ‘பொம்மை’ (“The Doll’) என்னும் படைப்பின் புகைப் படம் அவ்விதழில் இடம்பெறுகிறது.

1935

ஓவியர் ஆல்பெர்டோ ஜியகோமெட்டி குழுவிலிருந்து விலக்கப்படுகிறார்.

1936

மே மாதத்தில் ‘காலரி சார்ல்ஸ் ராலோன்’ (Galerie Charles Rallon) வளாகத்தில் ஸர்ரியலிஸ அணுகு முறையில் ‘கிட்டிய பொருள்’ ‘இயற்கைப் பொருள்’ மற்றும் கலைஞர்களின் கற்பனையில் உருவான பொருள்களைக் கொண்ட படைப்புக் காட்சி இடம் பெறுகிறது.

கலை, வரலாற்று வல்லுனர் ஹெர்பெர்ட் ரீட் (Herbert Read) இலண்டன் நகரில் பன்நாட்டு ஸர்ரியலிஸக் கலைஞர்களின் படைப்புகளை காட்சிப் படுத்துகிறார். அக்காட்சி பற்றின ஒரு அறிமுகக் கட்டுரையை ஆன்ந்ரே ப்ரெடொன் தருகிறார்.

டிசம்பரில் நியூயார்க் நகரில் நவீனபாணிக் கலைகளுக்கான கலைக்கூடம் ‘MOMA’ (Museum of modern art) ஃபென்டாஸ்டிக் ஆர்ட், டாடா, ஸர்ரியலிஸம் (Fantastic Art, Dada and Surrealism) ஆகிய மூன்று பாணிப் படைப்புகளயும் காட்சிப் படுத்துகிறது.

1937

‘மினோடௌர் இதழின் ஆசிரியர் குழுவின் தலைமைப் பொறுப்பைஆன்ந்ரே ப்ரெடொன் ஏற்கிறார். அவரது ‘லாமுர் ஃபூ’ (L’Amour Fou) என்னும் படைப்பு வெளிவருகிறது.

1938

பாரிஸ் நகரில் ‘போ ஆர்ட் காலரி’ (Beaux-art Gallery) வளாகத்தில் ‘பன்னாட்டு ஸர்ரியலிஸக் கண்காட்சி’ நடக்கிறது. ஓவியர் மார்ஸல் டச்கேம்ப் Marcel Duchamp அதனை வடிவமைக்கிறார். காட்சியின் தலைப்பு “பொருள்கள்’ (Objects). அறுபது படைப்பாளர்களின் முந்நூறு கொலாஜ், புகைப்படங்கள், கட்டமைப்புகள் (Instalations), ஓவியங்கள் அங்கு இடம் பெறுகின்றன. காட்சிக்கூடத்தின் நுழைவாயிலில் டாலியின் படைப்பான ‘ரைனி டாக்ஸி’ (“Rainy Taxi”) இடம் பெறுகிறது. பழுதுபட்ட அந்த வண்டியின் உட்புறத்தில் நீரூற்று பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு சுராமீன் தலைகொண்ட உருவம் வண்டி ஓட்டியின் இருக்கையில் அமர்ந்துள்ளது. பின்னிருக்கையில் வினோத ஆடை களையணிந்த ஒரு இளம்பெண் தன்மேனியில் ஊரும் நத்தைகளுடன் பார்வையாளர்களை முகமன் கூறி வரவேற்கிறாள். வழிநெடுக விதம்விதமான உடைகளணிந்து வேடமிட்டவரின் உற்சாக வரவேற்பு. காட்சிக்கூடத்தின் தளம் காய்ந்த இலை சரகு கொண்டு பரப்பப்பட்டுள்ளது. கரிப்பைகள் (coal Bags) விதானத்திலிருந்து தொங்குகின்றன. உட்புறமோ புல், இலை போன்றவை நெருப்பிலிடப்பட்டு புகையுடன்கூடிய நெடியால் நிறைந்திருக்கிறது. காட்சிக் கூடத்தின் நடுவில் ஒரு மங்கலாக ஒளிகூடிய விளக்கு தொங்குகிறது. படைப்புகளைக் காண வரும் பார்வையாளருக்கு ஒரு கைவிளக்கு (Flash Light) கொடுக்கப்படுகிறது. இவ்விதம் பார்வையாளருக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை கொடுத்ததில் அமைப்பாளர்களுக்குப் பெருமகிழ்ச்சி. டாடா குழுவினர் நிகழ்த்திய காட்சி நினைவுக்கு வருகிறதா?

1939

ஓவியர் டாலி குழுவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

இரண்டாம் உலகப்போர் குழுவைச் சிதறடிக்கிறது. அமெரிக்கா பல கலைஞர், அறிவுஜீவி, எழுத்தாளர் போன்றோருக்கு புகலிடம் அளிக்கிறது. பின்னாளில் நவீன இலக்கிய, கலைச் சிந்தனை அங்கு வேர்பிடித்து வளர்ந்து பரவுகிறது. பாரிஸ் நகரின் இடம் பறிபோகிறது.

ஸர்ரியிலிசப் படைப்பாளிகள் கண்டுபிடித்துக் கையாண்ட உத்திகளில் சில

ஸர்ரியிலிசப் படைப்பாளிகள் கண்டுபிடித்துக் கையாண்ட உத்திகள் கலை, கவிதை, இலக்கியம், அரங்கம், புகைப்படக் கலை, திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு அவர்களது சிந்தனையாக்கத்தை வளம்பெறவைத்தன. .அகமன நிகழ்வுகளும், கனவுகளும்தான் அவர்களைச் சுண்டியிழுத்த தளங்களென்பதை நாம் அறிவோம்.

இயக்கம் தோன்றும்போதே தோன்றிவிட்ட சிடுசிடுக்கும் சிந்தனை வேறு பாடுகளுடந்தான் அவர்கள் கூடிச் செயற்பட்டனர். பல்வேறு உத்திகளும், முறை களும் அவர்களுள் தோன்றியபோது ஒருமித்த, ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அங்கு நிலவவில்லை. சிலர் அவை படைக்கத்தொடங்கக் கிட்டும் உற்சாகபானம் என்றும், சிலர் நிறைவடைந்த படைப்பின் புதிய தொடக்கம் என்றும், இன்னும் சிலர் அவையே முற்றுமாக நிறைவடைந்த படைப்பு என்றும் மேலே தொடர வேண்டியதில்லை என்றும் கருத்து வேறுபட்டனர். அவ்விதம் அவர்கள் பயன் படுத்திய உத்திகள் 32 என்று கலை வல்லுனர் வரிசைப்படுத்துகின்றனர். நாம் அவற்றில் குறிப்பாக ஓவியம் சார்ந்த சில உத்திகளைப் பார்ப்போம்

01) கொலாஷ் (Collage)

பல்வேறு பொருள்களின் பகுதிகளை முன்னரே திட்டமிடாமல் கித்தான் பரப்பில் அந்தக் கணத்தில் மனதிற்குத் தோன்றிய விதத்தில் ஒட்டி ஒரு புதிய முழுமையை படைப்பில் கொணர்வது வண்ணக் காகிதத்துண்டுகள், புகைப் படங்கள், செய்தித்தாள் கத்தரிப்புகள், துண்டுத்துணி, ரிப்பன் (Ribbon) போன்றவை அவற்றில் சில. எந்தப்பொருளும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.

02) கூலாஷ் (Coulage)

முன்னரே முடிவேதும் செய்யாது, படைக்கத் தொடங்கும்போது அந்தக் கணத்திலெழும் கற்பனைக்கேற்ப சிலைவடிக்கும் முறை. குளிர்ந்த நீர்சேமிப்பில் உருகிய உலோகம், மெழுகு போன்றவற்றை ஊற்றுவது. அவை நீரில் இருகி உருண்டையான (ஏறக்குறைய) திட உருவம் பெற்றவுடன் அவற்றில் படைப்பளி காணும் உருவத்தை மெருகேற்றுவது.

03) கபோமானியா (Cabomania)

ஒரு படம் அல்லது ஒரு உருவம் உள்ள தாள் சதுரங்களாக வெட்டப் பட்டுப் பின்னர் மீண்டும் ஒன்றிணைக்கப்படும். அப்போது முன்னர் இருந்த உருவம் முற்றுமாக ஒதுக்கப்பட்டு கைக்குக் கிட்டும் சதுரம் கித்தானில் ஒட்டப் படும்.

04) டிகால்கொமானியா (Decalcomania)

கித்தான் பரப்பில் ஏதேனும் ஒரு வண்ணப்பசையை கனமாகப் பூச வேண்டும். அது உலராமல் இருக்கும்போதே அப்பரப்பின் மீது தாள் அல்லது அலுமினிய வலை ஒன்றைக் கொண்டு அழுத்திப் போர்த்தவேண்டும். வண்ணம் உலரும் முன்னரே தாள்/அலுமினிய வலை உரித்தெடுக்கப்படும். வண்ணப்பரப்பில் உண்டாகியிருக்கும் பதிவுகளையும், வடிவங்களையும் அடித்தளமாகக் கொண்டு ஓவியங்கள் படைப்பது நிகழும் (இந்த உத்தியை சிறப்பாகப் பயன்படுத்திய ஓவியர் Max Ernst)

05) எக்லாபூசூர் (Eclaboussure)

இந்த உத்தியில் வண்ணம் (தைல அல்லது நீர் வண்ணம்) கித்தான் பரப்பில் தாராளமாகப் பூசப்பட்டபின் நீர் அல்லது டர்பன்டைன் திரவத்தை அதன் மேல் தெளிக்க அது பட்ட இடங்களில் வண்ணம் நீங்கியோ அல்லது வெளிறியோ காணப்படும். அதை தளமாகக் கொண்டு ஓவியம் படைப்பது நிகழும். (இந்த உத்தியை சிறப்பாகப் பயன்படுத்திய ஓவியர் Remedios Varo)

06) என்டாபிக் க்ராஃபோமானியா (Entopic Graphomania)

வெற்றுத்தாளின் பரப்பில் ஆங்காங்கே தோன்றிய விதமாகப் புள்ளிகளை உண்டாக்கிப் பின் அவற்றைக் கோடுகளால் இணப்பது. கோடுகள் வளைந்தோ நெளிந்தோஅல்லது நேராகவோ எப்படியும் இருக்கலாம் (இது Automatic உத்தி சார்ந்தது)

07) ஃப்ரொட்டாஷ் (Frottage)

உரசுவது அல்லது அழுத்தித் தேய்ப்பது என்று பொருள்படும் இதுவும் Automatic உத்தி முறையில் ஒன்றுதான். சொரசொரப்பான பரப்பில் பென்சில் அல்லது கரிகொண்டு தோன்றியவிதமாகத் தீற்றிக் கிட்டும் வடிவத்தை அப்படியே விட்டுவிடுவது அல்லது அப்பரப்பையே தளமாகக்கொண்டு இன்னும் மனம் போனபோக்கில் படைப்பது.

08) க்ராடாஷ் (Grattage)

முன்னரே தீட்டிக் காய்ந்த எண்ணெய் வண்ணத்தை கித்தானிலிருந்து சுரண்டி எடுத்து அப்போது அமையும் வடிவத்தில் மெருகு ஏற்றுவது.( ஓவியர்கள் Max Ernst Joan Miro இருவரும் கையாண்டு படைத்தனர்)

09) Movement of Liquid down a Vertical Surface

செங்குத்தாக நிறுத்திய கித்தான் பரப்பின் மேலிருந்து வண்ணங்களை ஒழுகவிட்டு அதில் கிட்டும் விளைவை ஓவியமாக மாற்றுவது. இந்த உத்தி ருமானிய நாட்டு ஸர்ரியலிச ஓவியர்கள் உருவாக்கியது. அவர்கள் அதை surautomatic என்று அழைத்தனர்.

10) பார்சமாஷ் (Parsemage)

ஓவியர் Ithell Colquhoun பயன்படுத்திய உத்தி இது. கரிப்பொடி அல்லது க்ரெயான் வண்ணப்பொடியை தேக்கிய நீர் பரப்பில் தூவி, பின் நீர்ப்பரப்பின் மேல் கெட்டியான தாள் அல்லது அட்டையைப் படியவிட்டு, தூவிய துகள் அதில் படியும்விதமாக இழுத்து எடுப்பது. (இந்த முறையில் புதுவையில் உள்ள அரபிந்தோ காகிதத் தொழிற் கூடத்தில் ‘மார்மில் டிசைன்’ (‘Marble Design’) எனப்படும் விதவிதமான தாள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன)

11) டிகால்கொமானியா (Decalcomania)

பழைய செதுக்கல்களைப் படியெடுத்து (Tracing) அவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் படைப்பது. 1750 இல் பிரான்ஸ் நாட்டுக் கைவினைக் கலைஞர் (Engraver) இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தார். இந்த உத்தி அவரால் முதன் முறையாக அங்கு அறிமுகமாயிற்று. 1865 இல் அது அமெரிக்காவுக்குப் பரவியது. அந்த உத்தியை அவர் ‘டிகால்கர்’ (Decalquer) என்று அழைத்தார். ஓவியர் ‘ஆஸ்கார் டொமின்குயெ’ (Oscar Dominguez) 1936 இல் இந்த உத்தியைக் கொண்டு ஓவியங்கள் படைத்தார். ஒரு தாளிலோ அல்லது கண்ணாடிப் பரப்பிலோ வண்ணத்தை (தொடக்கத்தில் கருப்பு) திடமாகப் பூசி அதன்மீது கித்தான் அல்லது தாளைப் படியப்பரப்பி ஒத்தியெடுத்துக் கிட்டும் வடிவங்களை செழுமைப் படுத்தி ஓவியம் படைப்பது.

பள்ளிச் சிறார் ஒரு தாளை இரண்டாக மடித்து ஒருபுறம் வண்ணங்களைப் பூசிப் பின் தாளின் மடித்த பகுதியை அதன்மேல் படியவைத்து கைகொண்டு அழுத்தி வியப்பூட்டும் வண்ண அமைப்புகளை உருவாக்குவதை நாம் அறிவோம்.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01-dada02-dada03-dada04-dada05-surrealist-painting06-surrealaist07-surrealist08-surrealist
[/DDET]
(தொடரும்)