தி.ஜானகிராமன் அவர்களின் வாசகன் என்ற வகையில் சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ் நிறைய தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. இத்துடன் நான் வரைந்த அவருடைய கோட்டோவியம் ஒன்றை இணைத்துள்ளேன். சொல்வனத்துக்கு வாசகரின் நன்றியறிதலாக கொள்ளவும்.
அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்
-o00o-
சொல்வனம் ஆசிரியருக்கு,
சென்ற இதழில் அருண் நரசிம்மன் எழுதிய “கற்க கசடற” படித்தேன். அறிவியல் கல்வி என்பது இந்தியாவில் எக்காலத்திற்கும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுவதில்லை. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்காக படிக்கப்பட வேண்டிய ஒரு பாடம் மட்டுமே. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. பொருள் சார்ந்த தேடுதலில் சமூகம் எத்தனை அற்புதங்களைத் தான் இழக்கிறது. இந்த இழப்பை அருண் நரசிம்மனின் கட்டுரை மிக தெளிவாக முன்வைக்கிறது. தொடர்ந்து அறிவியல் குறித்த கட்டுரைகளை அவர் எழுதவேண்டும்.
நன்றி
லஷ்மி
-o00o-
அன்பு சொல்வனம்,
எஸ்.ராமநாதன் எழுதிய “Cloud Computing” குறித்த கட்டுரை மிக எளிமையாகவும், தெளிவாகவும் இருந்தது. தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் இத்தகைய எளிமையான மொழியில் எழுதப்படுவது வாசகர்களை பொருத்தவரை ஆரோக்கியமான செயல்பாடாகும்.
மேலும், அருண் மதுரா எழுதிவரும் கட்டுரைகளை குறித்தும் பேசவேண்டும். பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் பொதுவாக தமிழ் இதழ்களில் காணக்கிடைக்காதது. அப்படியே அத்தகைய கட்டுரைகள் வெளியானாலும் மிக மேலோட்டமாகவும், வாசகர்களுக்கு அந்நியமான மொழியிலும் இருக்கும். இவரின் கட்டுரைகள் அப்படியில்லாமல், வாசகனை முன்வைத்து எழுதப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த வரலாற்றுப் பார்வையை இவரது கட்டுரைகள் முன்வைக்கின்றன.
நன்றி
ரஷீத்