யானைகளுடன் பேசுபவன்

எனக்கு யானைகளை முதலில் கோவில்கள்தான் அறிமுகம் செய்து வைத்தன. பிரம்மாண்டமான உருவமாக, கழுத்து மணிகளை ஆட்டி ஒலியெழுப்பியபடி கோவில் மண்டப முகப்பில் மெதுவாக உடலை அசைத்தபடி நின்று கொண்டிருக்கும். தும்பிக்கை நுனியால் சதா எதையாவது அளாவிக்கொண்டு நிற்கும். பாகன் சங்கிலி கட்ட வந்தால் கால் உயர்த்திக்காட்டும். அருகில் சென்று சொரசொரப்பான தும்பிக்கையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வோம்.

பண்டிகைக் காலங்களில் தெருவில் ஊர்வலமாய் வரும். வாழைப்பழம் தந்தால் உரிக்காமல் வாயில் போடுவதைப் பார்த்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. காசு தந்தால் துதிக்கையை மேலே கொண்டு போய் முதுகில் அமர்ந்திருக்கும் பாகனிடம் சேர்ப்பித்து விடும். துதிக்கை நுனியை வளைத்து தலையில் வைத்து ஆசீர்வாதம் என்கிற பெயரில் லேசான தடவலை வாங்கும்போது ஒரு திடீர் அமைதி மனதில் குடியேறும். இருபத்தைந்து பைசா தந்தால் யானையின் முதுகில் ஏறலாம். ஒருமுறை குலை நடுங்க அதன் முதுகில் ஏறி உயரத்தில் இருந்து தெருவைப் பார்த்திருக்கிறேன். பயம் யானையினால் அல்ல, அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து விட்டால் என்ன ஆவது என்கிற திகில்தான். குறுகிய தெருக்களில் குழந்தைக் கூட்டங்களுடன் சேர்ந்து யானையை மிக அருகில் பின் தொடர்ந்திருக்கிறேன். அதன் இளகிய வெதுவெதுப்பான பசுஞ்சாணத்தில் உடல் நலம் வேண்டி கால் மிதித்திருக்கிறேன்.

யானை என்பது எப்போதுமே ஒரு சந்தோஷமாகவேதான் இருந்திருக்கிறது. அத்தனை பிரம்மாண்டம் அருகில் நின்றபோதும் ஒருபோதும் பயத்தைத் தந்ததில்லை. மாறாக எப்போதும் குதூகலத்தையே தந்திருக்கிறது. இப்படித்தான் நம்மில் பெரும்பாலோருக்கு இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.

யானை என்றால் வேடிக்கை. யானை என்றால் நண்பன், யானை ஒரு கம்பீரன், யானை கோமாளி, யானை கடவுள்.

அதனால்தான் கோவிலில் இருந்து வாசல் நிலையை உடைத்துக்கொண்டு வெளியே ஓடிய யானை, வெளியே ஒரு மூதாட்டியை சிறிய துணிப்பந்துடன் விளையாடுவதுபோல் துதிக்கையில் சுழற்றி அடித்து காலால் தள்ளிக் கொன்ற ஒரு யு-ட்யுப் ஒளிப்படக்காட்சியை சமீபத்தில் கண்டதில் உறைந்து போனேன்.

பிறகு சில வாரம் முன்பு, மைசூரில் ஊருக்குள் வந்த யானை செய்த அட்டகாசம், ஒரு நெடுஞ்சாலையின் அவசர காலையில் திடீரென காட்டிலிருந்து புகுந்து குறுக்காகக் கடந்து செல்லும் யானைக்கூட்டத்தின் ஒளிப்படக்காட்சி என்று மனத்தை உளைய வைக்கும் செய்திகளே தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் யானை என்கிற தொன்மையான அற்புதத்திற்கு உரிய இடத்தைத் தராமல் ”we have started taking these giants for granted” என்று தோன்றியது. இதனைப் பல மட்டங்களில் காண முடிகிறது. யானைகளுக்கு போடப்பட்ட தடத்தில் கோர்ட் உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்பு செய்கையில், யானைகளின் காட்டு வாழ் நிலம் சிறிதுசிறிதாக சுருங்கிக்கொண்டே வருகையில், யானைகளின் நீர் நிலைகள் வற்றிப்போகையில், கோடை வெயிலில் கோவில் யானைகள் நெடுந்தொலைவு பயணிக்க வைக்கப்படுகையில், தீப்பந்தங்களும் அதிர்வேட்டுகளும் சூழ்ந்த நிலையில் முட்டாள் விடலை ஒருவன் யானை வாலை இழுத்து விளையாடத்துணிகையில்- என்று யானைகளும், அவற்றின் புழங்கு வெளியும் அவமதிக்கப்படும்தோறும் நம்மிடையே அவை சாந்தமாய் வாழ நாம் தகுதியில்லாதவர்களாகிறோம்.

-o00o-

ஆசியாவிலேயே அதிக யானைகள் இருப்பது இந்தியாவில்தான். இந்தியாவில் ஏறக்குறைய இருபத்தைந்திலிருந்து முப்பதாயிரம் காட்டு யானைகள் மட்டுமே உள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். யானைகளின் இறப்பில் 30 சதவீதம் மின்சாரம் பாய்ந்தோ, ரயிலில் அடிபட்டோ அல்லது வேட்டைக்காக கொல்லப்படுவதிலோ நிகழ்கிறது.

யானைகளின் தந்தங்களுக்காக அவை தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன. ஆசியாவில்விட ஆப்பிரிக்காவில் இது அதிகம் நடக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களில் ஆசியாவில் விட ஆப்பிரிக்காவில் யானைகளின் தொகை மிக அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. பெருகிவரும் சீனாவின் செல்வ வளம் அந்நாட்டில் யானைத்தந்தங்களுக்கான சந்தையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தி விட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் ஏழ்மை நிலை, தந்தங்களுக்கான யானை வேட்டையின் உக்கிரத்தை புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

ஆப்பிரிக்க யானைகளின் வாழ் வெளியும் சுருங்கிக்கொண்டேதான் வருகிறது. அரசின் துணையுடன் காட்டு விலங்குகள் சுதந்திரமாய்த்திரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் ஒதுக்கப்பட்டு அதில் காட்டு சூழல் பாதுகாக்கப்படுகிறது. Game Reserve என்று சொல்லப்படும் இந்த பரந்த ஒதுக்கீட்டு நில வெளிகளில் வேட்டை தடை செய்யப்பட்டு யானைகளும் பிற விலங்குகளும் அவற்றின் இயல்பான வாழ்க்கைச் சூழலில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் அங்கும் திருட்டுத்தனமான வேட்டை நடக்கத்தான் செய்கிறது.

-o00o-

தென் ஆப்பிரிக்காவின் ஜுலு பிரதேசத்தில் துலா துலா என்கிற ஒதுக்கீட்டு நிலத்தின் காப்பாளரான லாரன்ஸ் ஆண்டனி என்பவருக்கு 1999-இல் ஒருநாள் ஒரு டெலிபோன் அழைப்பு வருகிறது. ’தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் யானைக்கூட்டம் ஒன்றுக்கு துலாதுலாவில் இடம் கிடைக்குமா?’ துலாதுலாவில் அதுவரை யானைகள் கிடையாது. தப்பி ஓடும் யானைகள் வயல் வெளிகளையும் விளை நிலங்களையும் நாசம் செய்து விடும். எனவே ஒதுக்கீட்டு நிலத்தில் இருப்பு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் யானைகள் சுட்டுக்கொல்லப்பட்டு விடும். அப்படிப்பட்ட யானைக்கூட்டம் ஒன்றைக் காப்பது குறித்த டெலிபோன் அழைப்புதான் அது. துலாதுலாதான் அந்த யானைகளுக்கு உயிர்ப்பிச்சை தர கடைசி வழி. லாரன்ஸ் உடனே அவற்றை துலாதுலாவில் பாதுகாக்க ஒப்புக்கொள்கிறார். யானைகளுடனான லாரன்ஸின் நீண்ட உறவு அன்றைய தினத்தில் தொடங்குகிறது. உள்ளுணர்வை மட்டுமே உதவியாகக் கொண்டு அவர் துவங்கும் இந்தப் பயணம் யானைகளைக் குறித்த பல திறப்புகளை அவரிடத்தில் ஏற்படுத்துகிறது. இந்தப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் யானைகளின் நுண்புலன் அவரை அதிசயிக்கச்செய்து கொண்டே இருக்கிறது.ஒரு கட்டத்தில் அந்த காட்டு யானைகளுடன் சுதந்திரமாய் உலவக்கூடியவராக, அவற்றின் உணர்வுடன் ஒன்றக்கூடியவராக, யானைகளுடன் பேசுபவராக அந்த அனுபவம் விரிகிறது.

பழக்கமாகும் வரை மின் வேலிக்குள் உள்ள பரந்த வெளியில் உலவ விடப்படும் ஒதுக்கீட்டு நிலத்தின் விலங்குகள் சில நாட்களில் பழகியதும் வெளியில் திறந்து விடப்படுகின்றன. துலாதுலாவிற்கு கொண்டு வரப்பட்ட யானைக் கூட்டத்திற்கு தலைமையாய் இருக்கும் தாய் யானையின் பெயர் ”நானா”. துலாதுலாவிற்கு வந்தவுடனேயே மின்சார வேலியை உடைத்துக்கொண்டு தன் கூட்டத்துடன் வெளியே ஓட முயற்சிக்கிறது நானா. அந்த சமயத்தில் லாரன்ஸ் ஆண்டனி நானாவிடம் பேசத்தொடங்குகிறார். ”போகாதே” என்று மனப்பூர்வமாக ஆனால் சக மனிதனுடன் உரையாடுவது போல கெஞ்சுகிறார். ”வெளியே போனால் கொன்று விடுவார்கள்” என்று எச்சரிக்கிறார். ”இங்கே நீ உன் குடும்பத்துடன் பாதுகாப்பாக வாழலாம்” என்று மீண்டும் மீண்டும் உரக்கச்சொல்கிறார். தான் பேசுவது புரியாவிட்டாலும், தன் அக்கறை உணர்வையும் உண்மையான கரிசனத்தையும் நானா புரிந்து கொண்டு விடும் என்று மனதார நம்புகிறார். அவ்வாறு பேசிக்கொண்டே இருக்கையில் ஒரு கட்டத்தில் அசையாமல் நின்று அவரைப் பல நிமிடங்கள் பார்க்கிறது நானா. பிறகு திரும்பி பாதுகாப்பு வேலிக்குள் போய் விடுகிறது.

’நானா’வுடன் லாரன்ஸ்

தான் பேசுவது பலன் தருகிறது என்று லாரன்ஸ் ஒவ்வொரு நாளும் யானைக்கூட்டம் இருக்குமிடத்தைத் தேடிப்போய் நானாவிடம் “உரையாடத்” தொடங்குகிறார். யானைக்கூட்டம் படிப்படியாக துலாதுலாவை ஒப்புக்கொண்டு சகஜமாக இருக்கத்தொடங்குகின்றன. ஒருநாள் நானா வேலி வழியாக தும்பிக்கையை லாரன்ஸை நோக்கி நீட்டுகிறது. அவரது உதவியாளர்கள் அதன் அருகில் போக வேண்டாமென எச்சரிக்கிறார்கள். அங்கிருந்து வந்துவிடும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் அது எதையுமே காதில் வாங்காமல் ஒருவித மயக்க நிலையில் இருப்பது போல் நானாவின் அருகே செல்கிறார் லாரன்ஸ். அதன் தும்பிக்கை அவர் தலையை வருடுகிறது. அந்த கணத்தில் ஆழ்ந்த மன அமைதியாகவும் நிம்மதியாகவும் உணர்கிறார். அந்த நேரத்தில் நானாவுக்கும் லாரன்ஸுக்கும், இடையேயான ஒரு ஆழமான பிணைப்பு- ஆழ் மனப் பிணைப்பு- உறுதியாகிறது. பிறகு அங்கிருந்து அந்த யானைக்கூட்டம் தப்பிச்செல்ல முயல்வதில்லை. ஆனால் யானைகளின் பல குண அதிசயங்கள் தொடர்ந்து லாரன்ஸுக்கு புலப்படத் தொடங்குகின்றன.

தொழில் நிமித்தம் அருகிலுள்ள டர்பனுக்கு அடிக்கடி செல்லும் லாரன்ஸ் திரும்பி வருகையில் வீட்டின் முன், வரிசையாய் நானாவின் யானைக்கூட்டம் நின்று அவரை வரவேற்கின்றது. முதல் முறை இதை கவனிக்கையில் தற்செயல் என்று ஒதுக்கி விட்டாலும், ஒவ்வொரு முறையும் இதேபோல் நடப்பதைக் காண்கிறார். ஊரில் இல்லாத நாட்களில் அவை வீட்டிற்கு வருவதில்லை. எப்படி அந்த யானைக்கூட்டத்திற்கு அவர் ஊரில் இல்லாததும் ஊர் திரும்பும் நேரமும் ஒவ்வொரு முறையும் தெரிந்து விடுகிறது?

இதை விட அதிசயமான நிகழ்ச்சி ஒன்றையும் சொல்கிறார். ஒருமுறை துலாதுலாவிலிருந்து 400 மைலுக்கு அப்பாலுள்ள ஜோஹன்னஸ்பர்க் சென்று திரும்பும்போது விமானத்தைத் தவற விட்டு விடுகிறார். அங்கே துலாதுலாவில், நானாவின் யானைகள் அவரது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை ரேஞ்சர்கள் பார்க்கின்றனர். ஆனால் திடீரென அவை மேலே போகாமல் நின்று விட்டு, வந்த வழி திரும்பிப்போய் விடுவதைக் கவனிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தைத் தவற விட்ட லாரன்ஸ் அடுத்த நாள் வேறு விமானம் பிடித்து வீடு வந்து சேர்கையில் மிகச்சரியாக நானாவின் யானைகள் அவரது வீட்டின் முன் நின்று அவரை வரவேற்கின்றன. ரேஞ்சர்கள் பிறகு யானைகள் அவர் வீடு நோக்கி வந்து, நின்று, திரும்பிச் சென்றதை விவரிக்கையில், அவர் விமானத்தைத் தவற விட்ட அதே நேரத்தில்தான் யானைக்கூட்டம் சட்டென்று நின்று, திரும்பிப்போயிருக்கின்றன என்று அறிந்து அந்த அமானுஷ்யத்தின் அதிசயத்தில் குழம்பிப் போகின்றார்.

-o00o-

ஆப்பிரிக்க நிலங்களில் அமானுஷ்யங்களுக்குக் குறைவில்லைதான். ரோந்து சுற்றி வருகையில் ஒரு குறிப்பிட்ட பாறை அருகே போக வேண்டாம் என ஜுலு பழங்குடிகளால் தடுக்கப்படுகிறார். தகடி என்னும் ஒருவகை துர்தேவதை அங்கே குடியிருப்பதாக ஜூலு மக்கள் நம்புகிறார்கள். அதனை நம்பாம்ல் ஒரு நாள் அந்தப்பாறை கீழ் போய் நின்று கொண்டிருக்கையில் கடும் வெறுப்புடன் தன்னை யாரோ பார்ப்பதாக உணர்கிறார். திகிலில் முதுகெலும்பு ஜில்லிட்டுப்போகிறது. அங்கிருந்து வந்த பிறகும்கூட அந்த அனுபவத்தை அவரால் முழுதும் நம்ப முடியவில்லை. தன் நண்பன் டேவிட்டை அழைத்துக்கொண்டு ரோந்து செல்வது போல் அங்கே போகிறார். இந்த இடம் பற்றி என்ன நினைக்கிறாய் என்று பொதுவாகக் கேட்கிறார். டேவிட் மெதுவாகச் சுற்றிலும் பார்க்கத்தொடங்குகிறான். அவன் பார்வை அந்தப்பாறையில் நிலைகுத்தி நிற்கிறது. சிறிது நேரம் அதையே பார்த்திருந்து விட்டு ’இந்த இடத்திலிருந்து இந்த கணமே ஓடிப்போய் விடுவோம்” என்கிறான்! விலங்குகள் வாழும் காட்டு வெளி உண்மையில் உள்ளுணர்வின் வெளியும் கூட.

உள்ளுணர்வு என்னும் சக்தி காட்டு விலங்குகளுக்கு அதிகக் கூர்மையாகச்செயல்பட வேண்டும். அதே கூர்மையுடனும் உள்ளுணர்வின் நுட்பத்துடனும் மனிதர்களும் இருக்கையில் விலங்குகளுடன் ”பேச” முடியும் என்கிறார் லாரன்ஸ். உதாரணமாக, யானைகள் கண்ணில் படாமல் புதர் மறைவில் முழுவதுமாய் மறைந்திருந்தாலும் கூட அருகில் எங்கோ அவை இருக்கின்றன என்று தன்னால் உணர முடிந்தது என்று குறிப்பிடுகிறார். இது காட்டு வாழ்க்கையில் மிக அவசியம், ஏனெனில் யானைக்குட்டிகளுக்கு அருகே தற்செயலாக போய் விட்டால் கூட தாய் யானை பாய்ந்து வந்து தாக்கி கூழாக்கி விடும்.

ஒருமுறை குட்டி யானைகளுக்கு சற்றருகில் அவரது ஜீப் சென்று விட, ஃப்ராங்கி எனும் பெண்யானை முழுவேகத்தில் அவரை நோக்கிப்பாய்ந்து தாக்க வருகிறது. தப்பியோட முடியாத நிலையில் ஜீப்பில் இருந்துகொண்டே “It’s me” என்று கத்த மட்டுமே அவரால் முடிகிறது. மோதிக்கூழாக்கும் வேகத்தில் கண்மண் தெரியாமல் ஓடி வந்த ஃப்ராங்கி, ஜீப்பை முட்டப்போகும் நேரத்தில் திடீரென சங்கிலியால் இழுத்தது போல் சறுக்கி புழுதிவாரியிறைத்து லாரன்ஸின் முகத்துக்கு அருகே வந்து நிற்கிறது. ஃப்ராங்கியின் திறந்த வாயின் சதைப்பகுதி மட்டுமே லாரன்ஸின் கண்களில் நிறைத்திருக்கிறது. பிறகு சில அடிகள் பின்வாங்கி, சிறிது நேரம் முறைத்து விட்டு திரும்பிப் போகிறது. இவை அத்தனையும் தாய் யானையும் தலைவியுமான நானா பார்த்துக்கொண்டிருக்கும்போதே நடக்கிறது. இதன் மூலம் ஃப்ராங்கிக்கும் தனக்கும் ஒரு புதிய பாடத்தை நானா கற்றுத்தந்ததாக லாரன்ஸ் முடிவு செய்கிறார். நானா இல்லாத நிலை ஏற்பட்டால், ஃப்ராங்கிக்கு லாரன்ஸின் மீது சுயமாக நம்பிக்கை ஏற்பட வேண்டும். அப்போதுதான் அந்த யானைக்கூட்டம் பாதுகாக்கப்பட முடியும். அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு ஃப்ராங்கியும் நானா போலவே லாரன்ஸை நட்பாகப் பாவிக்கத்தொடங்குவதையும் கவனிக்கிறார்.

ஆனால் அதே சமயம் நானா கூட்டத்தில் புதிதாக வந்து சேரும் ET என்கிற குட்டி யானையை நானா கையாளும் விதம் அலாதியாய் இருக்கிறது. ETஇன் தாயும் அதன் கூட்டமும் தந்த வேட்டைக்காரர்களால் குட்டி யானை கண்ணெதிரிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு தந்தம் அறுக்கப்பட்டவை. துலாதுலாவிற்கு வந்த நாள் முதலே ET மனிதர்களை ஆழமாக வெறுப்பதும், பயப்படுவதும், அவநம்பிக்கையுடன் பார்ப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

நானாவின் கூட்டத்தோடு உலவும் ET, லாரன்ஸை நோக்கி பலமுறை தாக்குவதற்குப் பாய்கிறது. ஒவ்வொரு முறையும் நானா அல்லது ஃப்ராங்கி அதன் வழியில் குறுக்கிட்டு தடுக்கின்றன. ஆனால் ஒரு முறை நானா ETயைத் தடுத்த விதம் அற்புதமானது. லாரன்ஸை கூழ் செய்து விடும் வேகத்தில் ஜீப்பை நோக்கி படு தீவிரமாக ஓடி வருகிறது ET. நானாவைத் தாண்டித்தான் அது வர வேண்டும் என்பதால் பயப்படாமல் என்ன நடக்கிறதென்று கவனிக்கிறார் லாரன்ஸ். நானாவிற்கு இணையாக ET வந்ததும் நானா மிக சாதாரணமாக தன் துதிக்கையை வளைத்து ETஇன் முன் நெற்றியில் லேசாகத் தொடுகிறது, அவ்வளவுதான். சம்மட்டியால் அறைந்தது போல, ஆணி அடித்தது போல அப்படியே உறைந்து நின்றுவிடுகிறது ET ! நெற்றியில் தொட்டதில் என்ன இருக்க முடியும்? அந்தத்தொடுதல் என்ன செய்தியை ET-க்கு சொல்லியிருக்கும்?

-o00o-

யானைகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கிறதென்று முழுமையாய் அறிய முடியவில்லை, ஆனால் அவை தொலைதூரம் தொடர்பு கொள்ளும் சக்தி உடையவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றே. கேட்டி பெய்ன் என்னும் கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானி 1984-இல் வயிற்றிலிருந்து உருவாக்கும் அகஒலி அலைகள் மூலம் யானைகள் தொடர்பு கொள்கின்றன என்று கண்டுபிடித்தது முக்கியமான ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது. யானைகள் வயிற்றிலிருந்து உருவாக்கும் ”உறுமல்கள்” சில நாம் கேட்கக்கூடியவை, பல நம் செவிப்புலனுக்கு எட்டாத குறைந்த அலைநீளம் கொண்டவை. பெரும்பாலான உறுமல்கள் 5-30 ஹெர்ட்ஸ் அலை நீளம் உடையவை. குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியலைகள் சிதைவின்றி பல கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியவை. 2 முதல் நான்கு கிலோமீட்டர் வரை யானைகளின் உறுமல்கள் போகக்கூடும் என்கிறார்கள். வெப்ப நிலைத் திருப்பம் (temperature inversion) ஏற்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த ஒலியலைகள் இன்னும் பல மடங்கு தூரம் வலுவிழக்காமல் பயணிக்க முடியும். காற்றின் மேலடுக்கு கீழடுக்கை விட வெம்மையாக (எனவே அடர்வு குறைவாக) இருக்கையில் , அக எதிரொலிப்பின் மூலம் குறை அலைநீள ஒலி அலைகள் வெகு தூரம் பயணிக்க முடிகிறது (உதாரணத்திற்கு பனிமூட்ட நாட்களில் உள்ளூர் எஃப் எம் ரேடியோ ஒலிபரப்பை பல நூறு அல்லது சிலசமயம் ஆயிரம் மைல் தாண்டிக்கூட கேட்க முடியும்). யானைகள் மிக அதிகமாக குறை அலை நீள ஒலிகளை ஏற்படுத்துவது இவ்வாறு வெப்பத்திருப்பம் நிகழக்கூடிய மாலை மற்றும் இரவு நேரங்களில்தான் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

யானைகளின் அதிசய தொலை தொடர்பு திறமையை அடிக்கோடிடும் இன்னொரு சம்பவம் சூடானில் நடந்திருக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இருபது வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் யானைகள் தந்தங்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக பெரும் திரளாக யானைகள் சூடானிலிருந்து பல நூறு மைல் தொலைவிலுள்ள கென்யாவிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் போர் நிறுத்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சூடானுக்கு வந்து விடுகின்றன. சூடானில் அமைதி திரும்பியது என்பது எப்படியோ அந்த ஒட்டுமொத்த யானைக்கூட்டத்துக்கும் தெரிந்து விட்டிருக்கிறது!

மிக அதிக தூரம் தொடர்புகொள்வதென்பது நேரடியாக அறிவுப்பரிணாம முதிர்ச்சியுடன் தொடர்புடைய விஷயம். சில அடிகள் மட்டுமே ஒலியெழுப்பி தொடர்புகொள்ளும் ஒரு விலங்கினத்திற்கு தான் வாழும் உலகு என்பது குறித்த பார்வை அந்த சிறு வட்டத்திற்குள்தான் இருக்க முடியும். யானைகளால் பல ஆயிரம் மைல்கள் தாண்டியும் தொடர்பு கொள்ள முடிகிறது என்கிற விஷயம், உலகம் என்பது குறித்த அவற்றின் பார்வை மிக விசாலமானது என்பதைச் சுட்டுகிறது. அறிவிலும் நுண்ணுணர்விலும் பரிணாம அளவில் பலமடங்கு முன்னேறியதாய்க் கருதப்படும் திமிங்கலத்தையும், சிம்பன்ஸியையும் ஒத்ததாய் யானைகளின் அறிவுத்திறன் கருதப்படுகிறது. தாழ்ப்பாள் நீக்குதல் போன்ற நுட்பமான விஷயத்தை யானைகள் விரைவிலேயே கற்றுக் கொண்டு விடுகின்றன. துலாதுலாவில் மின் வேலிகளுக்குப்பின் வைக்கப்பட்ட கலைமான் கூட்டம் ஒன்றை நானா வந்து தாழ் நீக்கி வெளியே போக விடுகிறது. (ஏன் இதை நானா செய்ய வேண்டும் என்று அதிசயிக்கிறார் லாரன்ஸ்).

யானைகள் அறிவார்ந்தவை. முக்கியமாக, விஷயங்களை நினைவில் சேமித்து பின் தேவையானபோது வெளிக்கொணர்ந்து முடிவெடுக்கக்கூடிய அளவுக்கு சிந்திக்கும் வல்லமை படைத்தவை. யானைகளின் இந்த தீர்க்கமான நினைவாற்றல் உணவிடங்களை கண்டுபிடிப்பதிலும், ஆபத்துகாலங்களில் தப்பித்து பாதுகாப்பான இடம் நோக்கி தன் கூட்டத்தை வழிநடத்திச்செல்லவும் அவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன. ஒருமுறை துலாதுலாவின் புல்வெளி வெப்பத்தில் தீப்பற்றி எரியத்தொடங்குகையில், லாரன்ஸ் பதைத்துப்போய் யானைக்கூட்டத்தைத்தேடிப் போகிறார். நானாவோ தன் கூட்டத்தை பத்திரமாக பல மைல்கள் தாண்டி இருக்கும் முதலைக்குளம் என்கிற நீர்நிலையின் நடுவில் கூட்டிக்கொண்டு வந்து நின்றுகொண்டிருக்கிறது. முதலைகளோ வெப்பம் தாளாமல் நீர்நிலையின் தொலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டிருக்கின்றன.

-o00o-

காட்டு யானைகள் பொதுவாக கூட்டம் கூட்டமாக வாழ்பவை. பருவ வயதடைந்த ஆண்யானை கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே போகிறது. துலாதுலாவின் நும்ஜானெ எனும் யானை அப்படிப்பட்டது. நானாவின் கூட்டத்தில் அதற்கு கடைசி இடம்தான். ஒரு கட்டத்தில் தனியாளாய்த்திரியத் தொடங்குகிறது. தனியாய்த் திரிந்தாலும் லாரன்ஸின் நண்பனாகவே அது இருக்கிறது. பிரம்மாண்டமாக வளர்ந்து கம்பீர ஆகிருதியுடன் இருக்கும் நும்ஜானெ ஒருநாள் லாரன்ஸின் ஜீப்பை வழிமறிக்கிறது. ஆனால் அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு நண்பன்தான் என்பதைப்புரிந்து கொள்ளும் லாரன்ஸ் அதனுடன் நண்பனாக பேசுகிறார். லாரன்ஸுடன் அரைமணி நேரம் அமைதியாகக் கழிக்கிறது நும்ஜானெ. அந்த முப்பது நிமிடங்களில் லாரன்ஸ் மிகவும் நிச்சலனமாகவும் நிம்மதியாகவும் உணர்கிறார். ஆனால் அவ்வாறு தான் உணர்வது உண்மையில் நும்ஜானெனின் உணர்வையே என்று அவருக்கு திடீரெனத்தோன்றுகிறது. யானைகள் தமது உள்ளுணர்ச்சிகளை அருகில் உள்ள வெளியில் பரவ விட்டுக்கொண்டே இருக்கின்றன, அந்த உணர்வு வட்டத்திற்குள் நம்மைக் கொண்டு சென்று விட முடிகையில் யானைகளைப் ”புரிந்து கொள்ள” முடிகிறது என்கிறார்.

ஆனால் இத்தனை உள்ளுணர்வு இருந்தபோதும் நும்ஜானெனை அவர் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாமல்தான் போகிறது. திடீரென்று நும்ஜானெ கிறுக்குத்தனமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறது. திடீர் திடீரென ரேஞ்சர்களைத்தாக்கும் விதத்தில் ஓடிவரத்தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் ரோந்து ஜீப்பை கடுமையாக தாக்குகிறது. அதனுள் இருப்பவர்கள் தெய்வாதீனமாக உயிருடன் தப்புகின்றனர். அடிபட்டு கீழேவிழுந்து கிடக்கும் லாரன்ஸை காலடியில் வைத்து துதிக்கையால் முகர்ந்து தடவிப் பார்த்து பின் விட்டு விடுகிறது. அதே நேரத்தில் நானாவின் மொத்த யானைக்கூட்டமும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து நும்ஜானெவை அப்புறப்படுத்திக் கூட்டிச்செல்கின்றன. அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு யாருமற்ற சஃபாரி வேன் ஒன்று நும்ஜானெனால் சின்னாபின்னமாக்கப்படுகிறது. தூண்டுதல் ஏதுமில்லாமலேயே நிகழும் இவ்வகை தாக்குதல்கள் நும்ஜானெனுக்கு மதம் பிடித்து கட்டுக்கடங்காமல் போய் விட்டதாக லாரன்ஸை முடிவு செய்ய வைக்கிறது.

கட்டுக்கடங்காத யானையை சுட்டுக்கொல்வதே ஒரே தீர்வு என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதனைச்செயல்படுத்துவதைத் தள்ளிப்போடுகிறார் லாரன்ஸ். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி கொன்று விடுவதுதான் ஒரே வழி என்று முடிவெடுக்கிறார். தன்னால் சுட முடியாத நிலையில், வேறு இரண்டு தேர்ந்த ரேஞ்சர்களை வரவழைத்து தான் பார்க்காத தூரத்தில் போய் நும்ஜானெனைக் சுட்டுக்கொல்லும்படி சொல்லி விடுகிறார். தனது ஒன்பது வருட நண்பனைக் கொல்வதற்கு தானே ஆணை பிறப்பிக்க நேர்ந்த துக்கத்தில் மூழ்கிப்போகிறார்.

சிறிது நாட்கள் கழித்து நும்ஜானெனின் இறந்த உடலிலிருந்த தந்தம் ஒன்றை ரேஞ்சர் ஒருவன் கொண்டு வந்து லாரன்ஸிடம் காட்டுகிறான். அதன் முனை மிகப்பெரிதாக பிளவுபட்டிருக்கிறது. அதன் வழியாக விரல்களை நுழைத்து ஆராயும் லாரன்ஸ் அந்த நீண்ட பல்லின் திசுக்கள் கிருமிகளால் தாக்கப்பட்டு ஆழமாக அழுகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். நமக்கு பல் வலி போலத்தான் யானைக்கு தந்தத்தின் வலியும். கிருமி இன்ஃபெக்‌ஷனின் வலி தாங்க முடியாமல் ஓடியும் கத்தியும் அது செய்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் மதம் பிடித்தது என்று தப்புக்கணக்கு போட்டு அதனைக்கொன்று விட்ட கொடுமை அப்போது அவருக்கு மண்டையில் அடித்தது போல் புரிகிறது.

ஒரு மயக்க ஊசியில் சரி செய்திருக்க வேண்டிய ஒரு எளிய விஷயத்தை யானைகளுடன் பேசுபவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. யானைகளின் வாழ்விடம் மீதான தனது அதிகாரம், கையில் இருக்கும் துப்பாக்கி, யானைகளை அறிந்தவன் என்கிற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து ஒரு மனத்தடையை ஏற்படுத்தி சந்தேகத்தின் பலனை அந்த யானைக்கு அளிக்க முடியாதவராக்கி, நும்ஜானெ என்கிற அப்பாவி யானையின் உயிரை பலிவாங்கியிருக்கிறது உண்மையின் வெளிச்சத்தில் தன்னை கழுவிக்கொள்வதே இதற்கான பரிகாரம் என்று நினைத்தாரோ என்னவோ, தனது இந்தத்தவற்றை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார் ஆண்டனி லாரன்ஸ்.

துலாதுலாவின் யானைகள் குருகுல ஆசான்களாய் இருந்து தன் இயல்பான வாழ்க்கை மூலம் பல விஷயங்களைக் லாரன்ஸுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. குடும்பம், தன்னலமின்மை, தலைமைக்குணம், பணிவு, வாழ்வின் மீதான நம்பிக்கை, தைரியம், அப்பழுக்கற்ற அன்பு, தடையற்ற வீரம், காருண்யம், உறுதி, மன்னிக்கும் குணம், கம்பீரம், விவேகம் என்று ஒவ்வொரு யானையும் தன் ஒவ்வொரு அசைவிலும் தன் ஆளுமையின் அதிசயத்தை மனிதனுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டே இருக்கின்றது. நும்ஜானெ கூட தன் இறப்பின் மூலம் லாரன்ஸின் மனத்தடையை அவருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டுத்தான் போயிருக்கிறது.

நாமே எழுப்பிக்கொள்ளும் மனத்தடைகள் தவிர, மனிதனுக்கும் யானைக்கும் இடையேயான தொடர்புக்கு உண்மையில் எந்தத்தடையுமே இல்லை என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டதாக நெகிழ்வுடன் இறுதியில் குறிப்பிடுகிறார்.

துலாதுலாவின் யானைக்கூட்டதுடனான லாரன்ஸின் நெருங்கிய உறவு நானாவையும் ஃப்ராங்கியையும் தாண்டி அடுத்த தலைமுறை யானைகள் வரை செல்லவில்லை. அவ்வாறு செல்வது யானைகளுக்கு நல்லதில்லை என்று தீர்மானிக்கிறார். பாதுகாப்பாக அவற்றை உணர வைக்கும் பணியில் வெற்றி பெற்ற பின், அவற்றுடனான தொடர்ந்த மனிதத் தொடர்பு தீங்கே விளைவிக்கும் என்று முடிவு செய்கிறார். இளைய யானைகள் லாரன்ஸை வெறுப்பதில்லை. ஆனால் நானா போல் அவரை அவை மதிப்பதுமில்லை. லாரன்ஸை இயல்பாக உதாசீனப்படுத்தி அவை தம் வாழ்க்கையை துலாதுலாவில் சாதாரணமாக வாழ்கின்றன.

(முற்றும்)

பிகு: இந்தப்புத்தகத்தில் யானைகள் தவிர, வேட்டைக்காரர்களுடனான பூசல்கள், தென்னாப்ரிக்க அரசியலில் தோய்ந்த ஜுலு நாட்டு உள்ளரசியல் பிரச்சனைகள், துலாதுலாவில் வேட்டையாடுவது பரம்பரை உரிமை என வாதாடும் ஒரு பிரிவு, என நில ஒதுக்கீட்டுப்பராமரிப்பின் பல பரிமாணங்களும் விளக்கப்பட்டுள்ளன.

“The Elephant Whisperer”- My Life with the Herd in the African Wild

– Lawrence Anthony with Graham Spence

One Reply to “யானைகளுடன் பேசுபவன்”

Comments are closed.