மத்தகங்கள் வீழ்ந்த காலம்!

1984 ல் இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு, அவர் புதல்வர், அன்றைய பாரதத்துக்கு நம்பிக்கையூட்டிய ஒரு இளம் தலைவராகப் பொறுப்பேற்கிறார். பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் சந்தித்த முதல் பெரும் பொருளாதாரச் சவால் – அந்நியச் செலாவணி மேலாண்மை. ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருக்கும் போது வரும் நெருக்கடி.

அதைச் சரி செய்ய, பிரச்சினைகளை ஆராய்ந்த போது, இறக்குமதியில், முதலிடம் வகித்தது எரிபொருள். அதை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், அதற்கடுத்த இடத்தில் இருந்த பொருள் கொஞ்சம் ஆச்சரியமளித்திருக்கலாம். சமையல் எண்ணெய்.

பாரதத்தில், எண்ணெய் வித்துக்கள் மானாவாரி நிலங்களில்தான் பொதுவாகப் பயிர் செய்யப் பட்டன. அதனால், குறைவான மகசூலும், மழை பொய்க்கும் காலங்களில் இன்னும் மோசமான மகசூலும் தான் உண்மை நிலை. மழை பெய்வது நிச்சயமில்லாததால், விவசாயிகள், அதில் அதிக முதலீடு செய்து, நல்ல விதை, உரமிடுதல் போன்றவற்றைச் செய்யத் தயங்கினர். இந்தியாவின் தேவையில் 40% சதம் மட்டுமே இங்கே உற்பத்தி செய்யப் பட்டது. 60 சதம் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம்.

தனது நண்பரும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான ஸாம் பிட்ரோடாவுடன், பிரதமர் 1986 எண்ணெய் வித்துத் தொழில்நுட்ப இயக்கம் (Technolgy mission on Oilseeds) என்னும் ஒரு புது முயற்சியைத் தொடங்கினார். அதில் ஒரு அங்கமாக, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ஒரு திட்டம் தீட்டினர் – எண்ணெய் வித்துக்கள் விளையும் பரப்பளவை அதிகரிப்பது, எண்ணெய் வித்துக்களின் மகசூலை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு, சரியான விலை அளிப்பது முதலானவை அத்திட்டத்தின் நோக்கங்கள்.

இது போன்ற திட்டங்கள், வழக்கமாக, மாநில அரசு வேளாண் துறைகளிடம் ஒப்படைக்கப் பட்டு, பின் மறக்கப்படும். ஆனால், பிட்ரோடா ஒரு செயல் தலைவர். இதை வெற்றிகரமாக இயக்க வேண்டுமெனில், ஒரு வெற்றிகரமான தலைவரும், நிறுவனமும் தேவை என்பதை உணர்ந்திருந்தார். அவர் கண் முன்னே இருந்தது – அமுல்,தேசிய பால் வள நிறுவனம் மற்றும் அதன் தலைவர் டாக்டர் குரியன். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளின் கூட்டுறவில் உருவாகிய ஒரு நிறுவனம் அமுல். ஆனந்த் மில்க் யூனியன் என்பதன் ஆங்கிலச் சுருக்கம்தான் அமுல். அமுல் மாடல் என்பது, ஒரு மூன்று அடுக்குகள் கொண்ட நிறுவனம். அதன் முதல் அடுக்கு, கிராமம். கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கி நடத்துவார்கள். இந்நிறுவனத்தின் கடமை, கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, பாலைச் சேகரித்து, தர நிர்ணயம் செய்து, இரண்டாவது அடுக்கு நிறுவனத்துக்கு அளிப்பதாகும்.

இரண்டாவது அடுக்கு நிறுவனம், கிராம கூட்டுறவு சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிராந்திய ஒன்றியம். இந்நிறுவனத்தின் வேலை, கிராம கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வரும் பாலைப் பதப் படுத்தி, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதாகும். அப்படிப் பதப் படுத்த பொருட்கள், மூன்றாவது அடுக்கு நிறுவனத்துக்கு அளிப்பதாகும்.

மூன்றாவது அடுக்கு நிறுவனம், ஒன்றியங்கள் சேர்ந்து உருவாகிய மாநில அளவிலான கூட்டமைப்பு. இதன் முக்கிய வேலை, ப்ராந்திய ஒன்றியங்கள் தரும் பொருட்களை ப்ராண்ட் செய்து விற்பது. அமுல் என்னும் 8000 கோடி மதிப்புள்ள ப்ராண்ட் மிக வெற்றிகரமாக இந்த மூன்றடுக்கு நிறுவன அமைப்பினால் உருவாக்கப் பட்டது. இந்நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவு நிறுவனம் என்பதால், தனி நபர் லாப நோக்கில்லாமல் செயல்பட முடிவது ஒரு மாபெரும் வலிமை. லாப நோக்கில்லாத போது, பால் போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்கள் மிகச் சரியான விலையில் நுகர்வோருக்குக் கிடைக்க ஏதுவாகிறது. பால் பொருட்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்யும் போது கூட்டுறவு நிறுவனங்கள், கொள்முதல் விலை, பதப்படுத்தும் செலவு இவற்றுக்கு மேலே கொஞ்சம் சதவீதம் உபரியாக வைத்து, நிர்ணயிக்கின்றனர். வருட இறுதியில், சேரும் அந்த உபரித் தொகை, கூட்டுறவு அங்கத்தினர்களான விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, அமுலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் என்று நிர்ணயிக்கப் பட்டு, வாரா வாரம் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வருட இறுதியில், அமுல் ஈட்டும் உபரித் தொகை, கிட்டத் தட்ட 2-3 ரூபாய் லிட்டருக்கு என்னும் அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது.

உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் தொய்வின்றி, சரியான விலைக்கு வாங்கப் படுவதும், அந்தத் தொழில் ஈட்டும் லாபத்தில் பங்கிருப்பதும், அமுல் என்னும் மூன்றடுக்கு நிறுவனத்தை மிக வெற்றிகரமான ஒன்றாகவும், மிக நீடித்திருக்கும் ஒன்றாகவும் வைத்திருக்கிறது. ஒரு வகையில் சொல்லப் போனால், காந்திய வியாபார நிறுவனம். இந்த வெற்றி, 1960ல், 17 மில்லியன் டன்னாக இருந்த இந்தியப் பால் உற்பத்தியை, 2010ல் கிட்டத் தட்ட 120 மில்லியன் டன்னாக உயர்த்தியிருக்கிறது. உலகில், வேளாண் உற்பத்தியாளர்களே நடத்தும் மிகப் பெரும் வெற்றிகரமான இயக்கம் என இதைச் சொல்லலாம். இதை இந்திய அராசங்கம் “Operation Flood” என்று அழைத்தது. ஆவின், நந்தினி, விஜயா, மில்மா, மதர் டெய்ரி, மஹானந்த், சரஸ், வேர்கா, பராக், சாகர் என்று பலம் வாய்ந்த கூட்டுறவு பால் ப்ராண்ட்கள் இவ்வாறு உருவானவையே.

இவ்வளவு பலம் வாய்ந்த, வெற்றிகரமான நிறுவனத்தை அரசாங்கம், எண்ணெய் வியாபாரம் செய்ய அழைத்தது இயற்கையே. எண்ணெய் இயக்கத்துக்கு, அரசு, “Operation Golden Flow” என்று பெயரிட்டது. இவ்வியக்கத்தின் கீழ், தேசிய பால்வள நிறுவனம், (தே.பா.நி) இரண்டு திட்டங்களைத் தீட்டியது.

1. எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாநிலங்களில், அமுல் மாடல் மூன்றடுக்கு கூட்டுறவு எண்ணெய் உற்பத்தியாளர்கள் அமைப்பை உருவாக்குவது.

2. அரசு கொடுத்த 900 கோடி பணத்தில், சந்தைச் செயல்பாடுகள் செய்வது (Market Intervention Operation). உற்பத்திக் காலத்தில், விவசாயிக்கு, சரியான விலை கிடைப்பதில்லை. அதே சமயம், உற்பத்தி இல்லாக் காலத்தில், நுகர்வோர், மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைச் சரி செய்ய, உற்பத்தி காலத்தில், தே.பா.நி, ஒரு நேர்மையான விலை கொடுத்து எண்ணெய் வாங்கி, உற்பத்தி இல்லாக் காலத்தில், குறைந்த லாபத்தில் எண்ணெயை விற்கத் துவங்கியது. கூடவே, மிகக் குறைந்த விலையில் “தாரா” என்னும் பெயரில் பல்வேறு எண்ணெய்களை விற்கத் துவங்கியது.

தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, ஒரிஸ்ஸா, மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் மூன்றடுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் துவங்கப் பட்டன. 25 வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கையில், ஒன்றிரண்டு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில், இந்நிறுவனங்கள் இருந்த தடயமே இல்லை. என்னாச்சு??

தே.பா.நி எண்ணெய் வியாபாரத்தில் இறங்கிய அதே சமயம், ஐ.டி.ஸி என்னும் மாபெரும் தனியார் நிறுவனமும் எண்ணெய் வியாபாரத்தில் இறங்கியது. 60 சதம் இறக்குமதி செய்ய வேண்டிய ஒரு பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது, தமக்குச் சாதகமானது என்று எண்ணியிருக்கலாம். ஐ.டி.ஸி என்னும் இம்பீரியல் டொபாக்கோ நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரும் சிகரெட் கம்பெனி. வில்ஸ், கிங்ஸ், சிஸர்ஸ் என்னும் பலம் வாய்ந்த ப்ராண்டுகள் அவர்களின் சொத்து.

தங்கள் சிகரெட் உற்பத்திக்குத் தேவையான புகையிலையை, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில், மிகப் பெரும் அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனம். இந்தியாவில் விளையும் புகையிலையில் 50 சதம் கொள்முதல் ஐ.டி.ஸியுடையது. விவசாயிகளோடு மிக நெருக்கமாக உறவாடும் நிறுவனம். அவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் முதலியவற்றை வழங்குதல், கொள்முதல் கியாரண்டியோடு, வங்கிக் கடன் பெற உதவுதல் என்று, ஆந்திர விவசாயிகள் மத்தியில் மிக மதிப்புப் பெற்ற நிறுவனம். ஆந்திராவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அடுத்து வரதட்சணை வாங்குபவர் ஐ.டி.ஸி அதிகாரி என்பது அந்நிறுவனத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒன்று.

அவர்கள் சூரியகாந்தி எண்ணெய்த் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயம் என்னும் ஊரில், தினமும் 500 டன் சூரியகாந்தி விதையைப் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிறுவினர். அன்றையத் தேதியில், இந்தியாவின் மிகப் பெரும் கொள்திறன் கொண்ட ஆலை அது. பாரம்பரியமான, செக்கு ஆலைகள் இல்லாமல், expander என்னும் மாறுபட்ட மேலை நாட்டுத் தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்தினர். நமது பாரம்பரியமான செக்கு ஆலைகள், எண்ணெய் வித்துக்களைக் கசக்கிப் பிழியும் தொழில் நுட்பம். இதில், விதையின் புரதப்பகுதி சேதமடைந்துவிடுகிறது. அதை மாட்டுத் தீவனமாக இந்தியாவில பயன்படுத்துகின்றனர் (புண்ணாக்கு). மேலை நாடுகளில், புரதமும் ஒரு முக்கியப் பொருள். அவற்றிலிருந்து பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கின்றனர். நம் நாட்டில், எண்ணெய் வித்துக்களின் எண்ணெய் மனிதனுக்கு. கழிவு மாட்டுக்கு. மேலை நாடுகளில், எண்ணெயும், புரதமும் – இரண்டுமே மனிதனுக்கானவை.

வழக்கமாக, சூரியகாந்தி எண்ணெயில் மெழுகு போன்ற ஒரு பொருள் உண்டு. கொஞ்ச காலம், ஓரிடத்தில் எண்ணெய் அசையாது வைக்கப் பட்டிருந்தாலோ, அல்லது, வெப்ப நிலை குறைந்தாலோ, எண்ணெயில் ஒரு லேசான மங்கலான படலமாக இது தெரியும். இது தரக் குறைவல்ல.. ஆனால், நுகர்வோர் மனத்தில் இது தரக் குறைவாகத் தான் பார்க்கப் பட்டது. ஐ.டி.ஸி, இத்தொழிலுக்கு வருமுன், இது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருந்தது. அன்றைய பெரும் ப்ராண்டான “சனோலா” (தமிழக அரசு நிறுவனம்), எண்ணெய் வெளியில் தெரியாத ப்ளாஸ்டிக் பாட்டில்களில் எண்ணெயை விற்று வந்தது. அது ஒரு ஸ்மார்ட்டான ஐடியா என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், வாணலியில் ஊற்றியதும், சூட்டில், மெழுகு கரைந்து விடும். இதைச் சரி செய்ய, ஐ.டி.ஸி இந்தியாவில்யே முதல் முறையாக, மெழுகு நீக்கும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தது. கண்ணாடி போன்ற PET பாட்டில்களில், அதிரடியாக அறிமுகப்படுத்தியது. 1990ல், அது மிகப் பெரும் புரட்சி.

நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?

பாலும், எண்ணெயும், புகையிலையும் வேளாண்பொருட்கள்தாம். எனில், பாலிலும், புகையிலையிலும் வியாபாரத்திறன் பெற்ற இரண்டும் மாபெரும் நிறுவனங்கள், ஏன் எண்ணெயில் வழுக்கி விழுந்தார்கள்?

பால் இந்தியாவின் மிக அத்தியாவசியமான உணவுப் பொருள். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே, இது தொழிலாக்கப் பட்டு, கூட்டுறவுத் தொழில் நிறுவனங்களால் வெற்றிகரமாக வழிநடத்தப் பட்டது. அதுவுமின்றி, கோடிக் கணக்கான உற்பத்தியாளர்களையும், கோடிக்கணக்கான நுகர்வோரையும் பாதிக்கும் தினசரி உணவுப் பொருள் என்பதால், இதன் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் சீராக நிர்ணயிக்கப் பட்டன. லாபமில்லா வியாபார நோக்கு, உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஒரு நல்ல தொழிற் பரிமாற்றமாக அமைந்ததனால், அந்தத் தொழிலில் ஒரு ஸ்திரத் தன்மை இருந்தது. வருடம் 365 நாளும் நடக்கும் ஒரு தொழில். மூன்றடுக்கு நிறுவன அமைப்பு, அத்தொழிலுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியது.

சிகரெட் ஒரு லாகிரிப் பொருள், மற்றும் வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கும் ஒரு குறியீடு. ஸிஸர்ஸ் பிடிக்கும் நிலையில் இருந்து மேல்நிலையை அடைய விரும்பும் நுகர்வோர், அதிக விலை கொடுத்து கிங்ஸ் வாங்கிப் புகைப்பர்.. (மங்களூர் கணேஷ் பீடி பிடிக்கும் சகாவுகள் விதிவிலக்கு). இங்கே புகையிலையின் விலை ஒரு பொருட்டேயில்லை. அதனால், நல்ல தரம் வாய்ந்த புகையிலையை, நல்ல விலை கொடுத்து, ஐ.டி.ஸி வாங்கி வந்தது. அதனால், விவசாயிகளும் மிக்க மகிழ்வோடு ஐ.டிஸிக்கு பொருட்களைத் தந்தனர்.

ஆனால், சமையல் எண்ணெய் வேறு தொழில். மானாவாரிப் பயிராகையால், மழை என்னும் இயற்கைக் கூத்தின் மீது நடத்தப் படும் சூதாட்டம். இடைத் தரகர்களும், வியாபாரிகளும், வாங்கிப் பதுக்கி, சட்டத்துக்குப் புறம்பான முன் விற்பனைகள் செய்து, வரிகளை ஏய்த்துச் செய்யப் பட்டு வந்தது. இறக்குமதி செய்யப் படுவதால், உலகின் உற்பத்தி, நுகர்வு மாற்றங்களால் ஏற்படும் விலையேற்ற இறக்கங்களும், இந்திய எண்ணெய் விலைகளைப் பாதிப்பதும் உண்டு. சொல்லப் போனால், ஒரு நாளில் பலமுறைகள் விலை மாறும் பொருள், எண்ணெய்.

பால் போலன்றி, எண்ணெய் வித்துக்கள், வருடத்தில் 2-3 மாதங்கள்தாம் சந்தைக்கு வரும். அந்தச் சமயத்தில் கிராம உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் வாங்கி ப்ராந்திய பதன நிலையங்களுக்கு அனுப்பியது. பதன நிலையங்கள், தம் கொள்திறனுக்கேற்ப, வருட முழுமைக்குமான எண்ணெய் வித்துக்களை வாங்கிச் சேகரித்து, பதப் படுத்த துவங்கினர். ஒரு நாளில் பல முறை மாறும் எண்ணெய்ச் சந்தையில், வருட முழுதும் ஒரே விலையில் எப்படி விற்க முடியும். உலகச் சந்தையின் பாதிப்பில், சற்றும் எதிர்பாராத அளவில் சந்தையில் விலை ஏற்றமும் இறக்கமும் இருக்கும். சந்தையில் எண்ணெய் விலை குறைவாக இருக்கும் போது தன்னிடமுள்ள எண்ணெய்க்கு அதிக விலை சொன்னால், யாரும் வாங்க மாட்டார்கள். விலை குறைத்து விற்றால், நஷ்டத்தில் முடியும். எண்ணெய், ஒரு அத்தியாவசியப் பண்டமாகையால், பொருளின் விற்பனை விலை நுகர்வோருக்கு ஒரு மிக முக்கியமான விஷயமாக இருந்தது.

ஐ.டி.ஸி கொண்டு வந்த எக்ஸ்பாண்டர் தொழில் நுட்பத்தினால், அதன் பதப் படுத்தப் படும் செலவு குறையவில்லை. கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதில் கழிவாக வரும் புண்ணாக்கு, கோழித்தீவனத்துக்கு ஏற்றதாக இல்லை. அதனால், அந்தப் புண்ணாக்கின் விலை குறைந்தது. அதுமட்டுமில்லாமல், லாப எதிர்பார்ப்பும், விளம்பரச் செலவும் ஐ.டிஸியின் எண்ணெய் விலையை அதிகப் படுத்தி விட்டது. லோக்கல் எண்ணெய் ப்ராண்டுகளை விட, லிட்டருக்குக் கிட்டத் தட்ட பத்து ரூபாய் அதிகம். அந்த விலைக்கு ஐ.டி,ஸியின் எண்ணெயை வாங்க நுகர்வோர் தயாரில்லை. அவர்கள் உபயோகித்த PET பாட்டில் விலையும் அதிகம். லோக்கல் ப்ராண்டுகள் எண்ணெயை, விலை குறைவான ப்ளாஸ்டிக் பவுச்களில் அடைத்து விற்றார்கள். தனது ஆலையின் கொள்திறனை முழுதும் உபயோகிக்க முடியாமல் திணறியது ஐ.டி.ஸி. கொள்திறன் உபயோகித்தால் விலை நஷ்டம். உபயோக்கிக்க வில்லையெனில், முதலீட்டின் மீதான் வட்டி நஷ்டம்.

அது மட்டுமில்லாமல். ஒவ்வொரு மாநிலத்திலும், விற்பனை விதிகள் மட்டும், போக்குவரத்துச் செலவுகள் காரணமாக எண்ணெய் விலைகள் மாறுபட்டன. எடுத்துக் காட்டாக, சூரியகந்தி அதிகம் விளையும் ஆந்திரத்தில் ரூபாய் 50 விலையென்றால், உத்தரப் ப்ரதேசத்தில் விலை ரூபாய் 58 இருக்கும். ஐ.டி.ஸி இந்தியா முழுமைக்கும் ஒரே விலை யோசித்தது. அதன் போட்டியாளர்கள் இரண்டு மூன்று மாவட்டங்களில் மட்டுமே தொழில் நடத்துபவர்கள். உள்ளூர் விலை நிலவரத்துக்கேற்ப விற்பனை விலைகளை மாற்றி, மளிகைக் கடைக் காரர்களுக்குச் சலுகைகளை அளித்து, தம் விற்பனையை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். ஐ.டி.ஸியில் ஒவ்வொரு முடிவும் தலைமை அலுவலகத்தில்தான் எடுக்கப் பட்டது.

மிகத் துரதிருஷ்டவசமாக, இத்தொழில் துவங்கிய காலத்தில் மலேசியாவும் இந்தோனேஷியாவும், மிகப் பெரும் பாம் ஆயில் உற்பத்தியாளர்களாக எழுந்தனர். இந்திய அரசு, பாம் ஆயில் இறக்குமதியைத் தாராளமாக்கி, சுங்க வரி விலக்கும் தந்தது. மற்ற எண்ணெய்களை விட பாமாயில் மிக விலை குறைவானதாக இருந்ததால், மற்ற எண்ணெய் விலைகளும் குறைந்தன. எண்ணெய் வித்து உற்பத்தி ஒரு லாபமில்லாத தொழிலாக மாறியது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்களை வாங்கி, பதப் படுத்தி, விற்பனை செய்வதை விட, இறக்குமதி செய்து, சுத்திகரித்து, விற்பது லாபகரமாக மாறியது.
அப்போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் தளர்த்தப் பட்டன, இறக்குமதி செய்வதற்கு, பன்னாட்டு வங்கிகள் கடன் தர முன்வந்தன. இந்தியாவுக்கு வெளியில், வட்டி விகிதம் 6-8 சதம் இருந்தது. இந்தியாவில் 14-16 சதம் இருந்தது. இறக்குமதி செய்ய, இந்தியாவில் கடன் வாங்குவதை விட, வெளி நாட்டு வங்கியில் வாங்குவது, 6-8 சதம் லாபம் அளிக்கக் கூடியதாக இருந்தது. எண்ணெய்த் தொழிலில் 6-8 சதம் என்பது மிகப் பெரும் லாபம்.

இதை பயன்படுத்திக் கொண்டு, சில சாதுர்யமான தொழிலதிபர்கள், பெரும் துறைமுக நகரங்களில், எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து விற்கத் துவங்கினர். பெருங்கப்பல்களில் இருந்து, நேரிடையாக, குழாய்கள் மூலம் பொருள் இறக்கப் பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப் பட்டது. இதனால், லாரிகளில் கொண்டு செல்லும் செலவும், பொருள் விரயமும் தவிர்க்கப் பட்டது. இறக்குமதி, இறக்குமதிக் கடன், போக்குவரத்துச் செலவு இம்மூன்றிலும் பெரும் பணம் சேமித்து, அதை விற்பனை விலையில் குறைத்து விற்றனர் போட்டியாளர்கள். ருச்சி, ஃபார்ச்சூன், கோல்ட் வின்னர் என்று புதிய வெற்றிகரமான ப்ராண்டுகள் எழுந்து வந்தன.

தே.பா.நிறுவனத்தின் வலிமை, அதன் மூன்றடுக்கு நிறுவன அமைப்பு. ஐ.டி.ஸியின் வலிமை அதன் சந்தைப் படுத்துதலும், தொழில்நுட்பமும். இரண்டு நிறுவனங்களுமே மாபெரும் மத்தகங்கள். இந்தியத் தொழில் கானகத்தின் அரசர்கள். ஆனால், அவர்கள் தம் தளம் விட்டு, வெளியே வந்த போது, புதுத் தொழிலின் தளம், அங்கே தொழில்செய்யத் தேவையான திறன்களை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. கணந்தோறும் விலை மாறும் தொழிலில், விரைந்து முடிவெடுப்பதே வலிமை. அதற்கான வழிமுறைகள் இரண்டு நிறுவனங்களிலும் இல்லை. அதே சமயம், எண்ணெய்த் தொழிலின் அடிப்படைத் தரவுகளும் மாறின – மலேசியா/இந்தோனேசியா உலகின் மிகப் பெரும் எண்ணெய் ஏற்றுமதியாளர்களாக மாறியதும், இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள் தளர்த்தப்பட்டதுமே அவை. அதை எதிர்நோக்கும் தீர்க்க தரிசனமும், அதற்கான மாறுதல்களைத் தத்தம் நிறுவனங்களில் கொண்டு வரும் சாமர்த்தியமும் அந்நிறுவனத் தலைவர்களிடம் அன்றில்லை.

விளைவு.. இந்தக் கட்டுரை!