தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்

மாற்று மரபணு விலங்குகளை(transgenic) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் இதற்கு முன்பு எட்டப்படாத புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தாய்ப்பால் சுரக்கும் கன்றுகளை உருவாக்கியுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதை முதலில் சாத்தியப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அர்ஜென்டேனிய விஞ்ஞானிகள் அதே முயற்சியை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

ஒரு விலங்கின் இயல்பான மரபணு அமைப்பில் ஏதாவது ஒரு மாற்று உயிர்வகையின்(species) மரபணு சேர்க்கப்பட்டால் அது “மாற்று மரபணு விலங்கு”(transgenic) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உயிரினங்களை உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல அரசாங்கங்கள் இத்தகைய ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க தயங்கிய போதிலும் பல முன்ணணி உயிர் தொழில்நுட்ப(bio-technology) நிறுவனங்கள் இத்தகைய ஆராய்ச்சிக்கு பெரும் பக்கபலமாக திகழ்கின்றன. குறிப்பாக சீனா இத்தகைய முயற்சிகளை பெரிதும் ஊக்குவிக்கிறது. ஐரோப்பா போன்ற நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிக்கு பலத்த கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் சீனாவில் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஏன்? இத்தகைய ஆராய்ச்சிகள் வெற்றி அடையும்பட்சத்தில் பல புதுவித தொழில் வாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் சீனாவிற்கு கிடைக்கும். தன்னுடைய வளர்ச்சிக்கு இத்தகைய வாய்ப்புகள் பெரிதும் உதவும் என்று சீனா நினைக்கிறது.

சீனா குறித்தோ, பொருளாதார மற்றும் தொழிற்துறைகள் குறித்தோ பேசாமல், இந்த ஆராய்ச்சி குறித்து மட்டும் பார்க்கலாம்.

தாய்ப்பால் என்பது அனைத்து பாலூட்டிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம். ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் உணவுப்பழக்கத்தின் அடிப்படையில் அதன் பாலில் உள்ள சத்துக்கள் வேறுபடும். முக்கியமாக குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் (தண்ணீர் உட்பட) தாய்ப்பாலில் இருக்கும்.

பசும்பாலை விட மனித தாய்ப்பாலில் lysozyme என்கிற எதிர்ப்பு சக்தி தரும் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது. பசும்பாலில் அதன் அளவு மிக மிக குறைவு. பிஞ்சுக்குழந்தைகளை பாக்டீரியாக்களின் பாதிப்புகளிலிருந்து காக்க இப்புரதம் உதவுகிறது. மனித தாய்ப்பாலுக்கான தனித்தன்மை வாய்ந்த சுவையும் லைசோசைமின் அளவை அடிப்படையாகக் கொண்டது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆகையால், பசும்பாலில் கூடுதலாக வெளியிலிருந்து கலக்காமல் பசுவின் கரு முட்டையில் இரண்டு மனித புரதங்களுக்கான (Lactoferrin, Lysozyme) ஜீன்களை செலுத்தி ஒரு மாற்று மரபணு கன்றை (transgenic calf) தயார் செய்திருக்கிறார்கள். இந்த கன்று வளர்ந்து பசுவாகி தரும் பால் தாய்ப்பாலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி தரும் புரதங்களையும் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

என்னதான் மனித ஜீன்களை பசுவின் கரு முட்டைக்குள் செலுத்தினாலும் அது பசுவின் கருமுட்டை தான். அதை எடுத்து ஒரு பசுவின் கருப்பைக்குள் வைத்தால் தான் கரு கன்றாக வளரும். பதிலித் தாய் (surrogate mother) முறையில் இப்படி சினைபிடிக்கப்பட்ட பசுமாடு மாற்று மரபணு கன்றை(trans genic calf) ஈன்றெடுக்கும். அத்தகைய கன்று வளர்ந்து பால் கொடுக்கும்போது அதன் பாலில் மனித தாய்ப்பாலில் காணப்படும் புரதங்கள் இருக்கும். அது மனித புரதங்கள் உள்ளடங்கிய பசும்பால் தான். மனித தாய்ப்பால் அல்ல.

இது எப்படி சாத்தியமானது?

முதலில், தாய்ப்பாலில் உள்ள அதே புரதங்களை கொண்ட ஒரு செயற்கை மரபணுத் தொடர்(Artificial DNA or recombinant DNA) உருவாக்கப்பட்டது. பின், இந்த செயற்கை மரபணுத் தொடர் பசுக்களின் செல்களில் உள்ள ஜீனோமிற்குள்(இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு வைரஸின் உதவியுடன்)பொறுத்தப்பட்டது. இந்த முறை “Somatic Cell Nuclear Transfer” என்றழைக்கப்படுகிறது. “டாலி” என்ற ஆடு இதே முறையில் தான் படியாக்கம் செய்யப்பட்டது.

இத்தகைய செயற்கை மரபணுக்களை கொண்ட கன்றுகள் அதற்குரிய காலத்தில் பால் சுறக்கும். அந்தப் பால் தாய்ப்பாலின் சகல புரதங்களையும் கொண்டிருக்கும். இதன் மூலம் மனித குலம் தனக்கான ஊட்டச்சத்து தொடர்பான குறைபாடுகளை களைந்து கொள்ளும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீன விஞ்ஞானிகள் என்ன செய்தார்கள்?

சீன விஞ்ஞானிகள் lysozyme என்ற புரதத்தின் மரபணுவை(gene) பசுவின் கருமுட்டைக்குள் செலுத்தி transgenic கன்றுகளை உருவாக்கினர்.

கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட கன்றுகளை இப்படி உருவாக்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் மூலம் பால் உற்பத்தி செய்து வருகிறார்கள். அந்தப் பாலின் தன்மை குறித்து ஆராய்ச்சி முடிவுகளையும் சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இயற்கையான தாய்ப்பாலை விட பல மடங்கு சுவையாக இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். செயற்கை தாய்ப்பாலில் இருக்கும் லைசோசைமுக்கும் இயற்கையான தாய்ப்பாலில் இருக்கும் லைசோசைமுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை நிறுவியிருக்கின்றனர்.மேலும் மாற்றுமரபணு பசும்பாலில் உள்ள இன்ன பிற ஊட்டச்சத்து அளவுகளையும், சாதாரண பசும்பாலில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து எந்த வேறுபாடும் இல்லை என்றும் நிறுவியிருக்கின்றனர். இன்னும் சில மாதங்களிலேயே கூட இந்த “தாய்ப்பசும்பால்” அல்லது “பசுந்தாய்ப்பால்” சீன சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தால் அதில் வியப்பேதுமில்லை.

அர்ஜெண்டினா விஞ்ஞானிகள் சீனர்களை விட கூடுதலாக என்ன செய்தார்கள்?

அர்ஜெண்டினா விஞ்ஞானிகள் இந்த lysozyme தவிர Lactoferrin என்ற மற்றுமொரு எதிர்ப்பு சக்தி தரும் புரதத்தின் ஜீனையும் சேர்த்து பசுவின் கருமுட்டைக்குள் செலுத்துவதில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மற்றுமோர் மாற்றுமரபணு கன்றை இவர்கள் உருவாக்கிவிட்டனர். அந்த கன்றும் நல்ல முறையில் பிறந்து வளர்ந்து வருகிறது.

அர்ஜெண்டினியர்களின் இந்த முயற்சி தாய்ப்பாலை செயற்கையாக பெறும் முயற்சியில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், மனித lactoferrin க்கும், பசுவின் lactoferrin க்கும் சின்னச்சின்ன வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களை நிரப்புவதன் மூலம், செயற்கைத் தாய்பாலை பெறுவதில் இந்த முயற்சி விஞ்ஞானிகளை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றிருக்கிறது.

ஆனால், வழக்கம்போலவே இந்த முயற்சிக்கும் எதிர்ப்பு குவிகிறது.

மாற்று மரபணு உயிர்கள் இயற்கைக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்று இத்தகைய ஆராய்ச்சிகளை எதிர்க்கின்றனர் பலர். மேலும் இத்தகைய உயிரினங்களை உணவாக உட்கொள்வது மனித சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற பயமும் இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகளை வேறொரு பரிமாணத்திலிருந்து பார்க்கையில், இவர்களின் அச்சத்தை மேலும் வலுவூட்டூம் விதமாக பல தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, சீன விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் 42 கன்றுகள் பிறந்தன. இதில் தற்போது 26 மட்டுமே உயிரோடு உள்ளன. 10 கன்றுகள் பிறந்தவுடனேயே இறந்தன. மற்ற 6 கன்றுகள் பிறந்து ஆறு மாதம் கழித்து இறந்தன. விஞ்ஞானிகள் இந்த தகவல்களை மறுக்கவில்லை. இருந்தும், இத்தகைய இறப்பிற்கான காரணங்களை கண்டறிய முயல்வதாக கூறுகின்றனர். தங்களால் மனித குலம் மேம்பட ஆவன செய்யமுடியும் என்று நம்புகின்றனர்.

குளோனிங் முறையில் உருவாக்கப்படும் எல்லாவித ஜீவராசிகளுமே இயற்கையாக உருவாகும் ஜீவன்களைப் போலவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இரண்டு மனிதப் புரதங்கள் சேர்ந்ததால் பசும்பாலின் சுவை மாறப்போவதுமில்லை. ஆனால் இந்த மனிதப் புரதங்கள் அடங்கிய பசும்பாலுக்கு மார்கெட் வேல்யூ நிச்சயம் அதிகம். அதே நிலை தான் குளோனிங் மூலம் உருவாகும் பிற தயாரிப்புகளுக்கும். வணிக பெருநிறுவனங்கள் இத்தகைய ஆராய்ச்சிக்கு பக்கபலமாக இருப்பதன் காரணமும் இது தான்.

வேறு எதற்காக இல்லாவிட்டாலும், தாய்ப்பால் பெறமுடியாத குழந்தைகளை எண்ணிப்பார்க்கையில், அவர்களுக்காகவாவது இத்தகைய ஆராய்ச்சிகள் நல்ல பலனளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மேலும் தகவல்களுக்கு

http://www.huliq.com/3257/transgenic-cows-milk-developed-80-percent-identical-human-milk

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21436886

http://www.telegraph.co.uk/earth/agriculture/geneticmodification/8423536/Genetically-modified-cows-produce-human-milk.html

மனித மரபணுக்கள் குறித்த ஒரு ஒளிப்படம் :