இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள பொக்கிஷம் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய பாதாள அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அனந்தபத்மனாசுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புகழ் பெற்ற ஆலயத்தின் கொக்கிஷம் சர்ச்சைக்குரியதாகியுள்ளது. இந்த பொக்கிஷம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு பொது காரியத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது அதை கோயில் நிர்வாகத்திடம் விட்டுவிடவேண்டுமா என்பது குறித்து பெரும் விவாதம் தற்போது நடைபெருகிறது.
இது தொடர்பாக பெங்களூரிலுள்ள Indian Institute of Managementல் நிதித்துறை பேராசிரியராக உள்ள திரு. ஆர்.வைத்தியநாதன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இந்த ஆலயத்தின் பொக்கிஷங்களை வெளிக்கொணர்வதற்கான வேளை வரவில்லை என்று அவர் நம்புகிறார்.
இந்த சர்ச்சை தொடர்பாக அவருடனான எங்கள் உரையாடலை இங்கே அளிக்கிறோம் :
தற்போது திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அளப்பறிய கொக்கிஷங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த பொக்கிஷங்களை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்கிறது. அது சாத்தியமா?
இந்திய சட்டத்தில் தெய்வங்களும் தங்களுக்கான சொத்துரிமை கொண்டிருக்க முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 1919-ல் நடந்த வழக்கொன்றில் வெளியான தீர்ப்பு இதை உறுதிபடுத்துகிறது. சமீபத்தில் வெளியான அயோத்தி வழக்கு சம்பந்தமான தீர்ப்பில் “ராம் லல்லா” எனும் கடவுளுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலத்தை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. ஆக, இந்திய சட்டத்தின்படி, தற்போது அறியப்பட்டிருக்கும் பொக்கிஷங்கள் பத்மநாபசுவாமிக்கு உரியது தான். ஆகையால் இந்த பொக்கிஷங்களை இந்திய அரசாங்கம் கைப்பற்ற முடியாது.
இந்திய கோயில்களின் நிரம்பியிருந்த செல்வங்கள் குறித்த தகவல்களை நமது வரலாற்றில் இருந்து நாம் பெறுகிறோம். ஆனால் தற்போது தான் அதை நாம் உண்மையென நம்ப தலைப்பட்டிருக்கிறோம். ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்களிலும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து தங்கள் கருத்து?
இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்கள் இத்தகைய செல்வக் குவியல்களை பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதை வெளிக்கொணரும் முயற்சியை துவங்கினால், அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போகும். கோயில்களை விடுங்கள். தாஜ்மஹாலில் இன்னும் 5 கதவுகள் திறக்கப்படாமல் உள்ளன. அஜ்மீர் தர்ஹாவின் பொக்கிஷங்கள் குறித்தும் தகவல்கள் காற்று வாக்கில் உங்களை வந்தடையும். இப்படியே ஒவ்வொன்றாக ஆரம்பித்தால் இதற்கு எங்கு தான் முடிவு!
அதற்காக நம்மிடம் இத்தனை செல்வங்கள் இருக்கும்போது அதை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று சொல்கிறீர்களா?
இத்தனை ஆண்டுகளாக அது அப்படியேதான் கிடந்திருக்கிறது. நாம் ஏன் அதை இப்போது வெளியே எடுக்க வேண்டும்? இப்போது அதைக் களஞ்சியத்தில் இருந்து எடுப்பதால் நமக்கு எந்த புண்ணியமும் கிடைக்கப்போவதில்லை.
அந்த செல்வங்கள் நமக்கு உரிமையானதில்லையா? அவற்றை நாம் நம் ஒட்டுமொத்த சமூக நலனுக்காக உபயோகப்படுத்தலாமே?
நம் மகாராஜாக்கள் காலத்திலிருந்து சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்களைப் பற்றிப் பேசும்போது, இன்றைய தலைமுறை அவையனைத்தும் தமக்கே உரியன என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. நமக்கு இந்த செல்வங்களில் எத்துணை உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை நம்முடைய கடந்தகால தலைமுறைக்கும் உண்டு. எதிர்கால தலைமுறைக்கும் தான்.
இந்த செல்வம் பல தலைமுறைகளுக்கு உரியதெனில், என் கொள்ளுப் பேரர்களும் இதற்கு உரிமை கொண்டாடலாம் என்றாகிறது. அதை வெளிக்கொணர்ந்து இத்தனை பணத்தையும் இப்போதே பயன்படுத்தி சாலைகள் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
மேலும் இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் (commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!
சமீபத்தில் பொருளாதார சூறாவளியில் பெரிதும் சிக்கித்தவித்த ஐரோப்பிய நாடுகள் எதுவும் தங்களிடமிருந்த பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்களை விற்றுவிடவில்லை. அத்தகைய எண்ணமே எங்கும் எழவில்லை என்பதையும் கவனியுங்கள்.
உலகம் வியக்கும் பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜன் தனக்கென ஒரு சிலையை எழுப்பிக் கொள்ளவில்லை. ஆனால் தற்போதோ கோயிலுக்கு ஒரு மின்விளக்கை அன்பளிப்பாக தந்துவிட்டு தன் பரம்பரையின் மொத்த தகவலையும் அதில் எழுதும் மனோபாவத்தை பார்க்கிறோம். அனைத்தையும் சந்தை எனும் கண்ணோட்டத்தில் சுருக்குவதால் நேரும் விழுமியச் சரிவு இது. தற்போது நாம் கேட்கும் குரல்களும் இத்தகைய சரிவின் எதிரொலிகளே.
அப்படியானால் இந்த பொக்கிஷங்களை என்னதான் செய்ய வேண்டும்?
அது அப்படியே கிடக்கட்டும், இவ்வளவு நாட்களாக செய்து வந்ததுபோல் அதை இந்த ட்ரஸ்ட் நிர்வகிக்கட்டும். நமது ஆலயங்களுக்கு உரிய பில்லியன்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், ரூபி மற்றும் சஃபைர் என்றழைக்கப்படும் சிவப்புக்கல் மற்றும் நீலக்கற்கல் போன்றனவற்றைப் பட்டியலிட முனைவதற்கான காலம் இதுவல்ல.
நம் அரசியல்வாதிகளில் பொருட்படுத்தத்தக்க அளவினர் குற்றப்பின்னணி உள்ளவர்கள். நீதித்துறையின் சில அங்கங்களும் ஊழல் மலிந்தனவாகிவிட்டன. நிர்வாகத்துறையும் சீர்கெட்டு விட்டது.
அதிலும் அரசியல்வாதிகள்….அவர்களை சுற்றி நின்று கொண்டிருக்கும் காவலர்களை பார்க்கும் போது, “அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தான் அவர்களை சுற்றி இந்தக் காவலர்கள் கண்ணும் கருத்துமாக வலம் வருகிறார்கள்”, என்று நினைத்துக் கொள்வேன். சமீபத்தில் விமானநிலையத்தில் நடந்த சம்பவம் இது. காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு அரசியல்வாதி நடந்து சென்றார். அருகிலிருந்த ஒரு சின்னஞ் சிறுமி அவள் தாயிடம் “அங்க பாரு….பெரிய திருடன்” என்று சொன்னது…. காவலர்கள் ஒரு திருடனை கைது செய்து கொண்டு போவதாக அந்தப் சிறுமி நினைத்துக் கொண்டாள். ஆனால் ஒருவகையில் அது உண்மையும் கூட.
என்ன சொல்ல வந்தேன் என்றால், உண்மையான வருவாய்க்கும் அரசு நிதிக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்றுள்ள நிலையில் விலைமதிப்பில்லாத இந்தச் செல்வங்களை நம் அரசியல்வாதிகள் தங்கள் தணியாத தனிப்பட்ட மற்றும் அரசியல் பேராசையால் “உணவுக் காப்பு” போன்ற பரபரப்பு திட்டங்களில் ஸ்ரீ அனந்தபத்மனாப்ஸ்வாமிக்குரிய சொத்துக்களை செலவழித்துவிடவே வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே நம் மாபெரும் கோயில்களின் வருவாய்களில் எண்பது சதவிகிதம் ‘புனித’ பணிகளுக்கன்றி ‘மதசார்பற்ற’ செலவினங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. இதே விஷயம் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஆனால் செல்வம் என்றைக்கும் அப்படியே கிடக்க முடியாதில்லையா?
நான் அப்படி சொல்லவில்லை. உலகம் இன்றுள்ள நிலையை வைத்துப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் காலம் இதுவல்ல என்று மட்டுமே நான் சொல்ல வருகிறேன்.
பல நூறாண்டுகளாக பக்தர்களால் கோயிலுக்கு இந்தப் புதையல்கள் தரப்பட்டுள்ளன. இவை பக்தர்களால் எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் முழுமையாக காணப்பட முடியாத ஸ்ரீ அனந்தபத்மனாபஸ்வாமிக்கே நியாயப்படி உரியவை. இந்த செல்வத்தின் அதிபதி அவரே இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்த செல்வம் அப்படியே கிடப்பதில் என்ன பயனிருக்கும் என்பதற்கான பதிலை அறிய விரும்புகிறேன்.
அரசர்கள் காலத்தில் இப்படிப்பட்ட பணம் வைப்பு நிதியாக (reserve fund) இருந்தது. அரசாங்கக் கருவூலத்தில் எதுவுமில்லாதபோது இயற்கை இழப்புகள் நேர்கையில் மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டன. ஆண்டவனுக்குரிய பணம் ஆண்டவன் நிகழ்த்திய சேதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
நமக்காக இந்த செல்வத்தை காப்பாற்றி வைத்த நம் அரசர்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் சமுதாயச் சிக்கல்களில் இருந்து மீட்பதற்காக அரசர்கள் இத்தகைய செல்வங்களைப் பயன்படுத்தினார்கள். நாமும் இந்த செல்வத்தை அதற்காகவே பயன்படுத்த வேண்டும்.
மேலும், கடந்த கால ராஜாக்கள் காப்பற்றி வைத்திருக்கும் செல்வங்களை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, தற்கால “ராசா”-க்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை, கறுப்புப் பணத்தை மீட்கும் வழியை யோசிக்க வேண்டும். அது தான் உண்மையிலேயே மக்கள் பணம்.
மேலும், இந்தப் பொக்கிஷங்களை நாம் ஐரோப்பிய நோக்கில் அணுகுவதாக எனக்குப் படுகிறது. ஐரோப்பியர்கள் எதையும் நூற்றாண்டு கணக்கின் அடிப்படையில் தான் அணுகுவார்கள். ஆனால் நம்முடைய வரலாறும் பொக்கிஷங்களும் காலம் கடந்தவை. அதற்கு உறுதியான காலத்தை வகுத்துவிட முடியாது. பொதுவாக இந்தியாவின் வருங்காலம் குறித்து பலர் கவலைப் படுகிறார்கள். நான் சொல்லுவேன் : ”our future is very much certain than the past”.
இந்த சொத்து விவகாரங்களை வெளிப்படுத்தியதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்று சொல்கிறீர்களா?
சிறிதளவும் பயனில்லை. அரசுக்கு எதிரானவர்கள் நம் கோவில்களை இன்னும் கூடுதல் பேராசையுடன் பார்ப்பார்கள். சிக்கலில் இருக்கும் மற்ற நாடுகளும் அவற்றின் மேல் ஆசைப்படும்.
இதனாலெல்லாம் நாம் நம் ஆலயங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் முன்னிலையும் நாம் வழிபாடு செய்ய வேண்டியிருக்கும். ஆலயத்தின் சூழல் முழுதுமே சீர்கெட்டுவிடும்.
இதை மேலும் விளக்க முடியுமா?
இந்திய கோயில்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கின்றன. நம் சமூக அமைப்புக்கு அச்சுறுத்தல் உள்ள காலத்தில் இது குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டன.
ஐரோப்பாவில் உள்ள பொருளாதார தொய்வையும் (depression) அமெரிக்காவில் உள்ள வேலையின்மையையும் கருத்தில் கொண்டால். இப்படிப்பட்ட செய்திக் குறிப்புகள் அந்த நாடுகளை ஈர்ப்பதாக இருக்கக்கூடும். இல்லவே இல்லாத ஆயுதங்களை இருப்பதாக சொல்லிக் கொண்டு அமேரிக்கா ஈராக்கைப் படையெடுத்தது என்ற உண்மையை நாம் நினைவு கூர வேண்டும்.
நம் ஆலய கருவூலங்களைத் திறந்தால் இது போன்ற விஷயங்கள் அப்படிப்பட்ட நாடுகளைக் கவர்வதாகவே இருக்கும். உச்ச நீதிமன்றமே இந்தப் பணியை துவங்குவதற்கான ஆணையை பிறப்பித்த போது இத்துணை செல்வங்களை எதிர்பார்த்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் தற்போது வெளியாகிவரும் தகவல்களை பார்த்ததும் உச்ச நீதிமன்றம் கொஞ்சம் உஷாராகி விட்டது என்றே நினைக்கிறேன். அதனால் தான் இந்தப் பணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
அப்படியானால் பிரிட்டிஷ் போல அமெரிக்காவும் நம் ஆலயங்களின் சொத்துக்காக நம்மைப் படையெடுக்கக் கூடும் என்று சொல்கிறீர்களா?
செய்வார்கள் என்று நான் சொல்லவில்லை, செய்யக் கூடும் என்று மட்டுமே சொல்கிறேன். மேலும் இது அவர்களைப் பற்றி மட்டுமல்ல. ஆலயங்கள் தீவிரவாதிகளின் இலக்குகள், அவர்கள் கோயில்களைக் கைப்பற்றவும் கூடும்.
இப்படிப்பட்ட விபரங்களை தீவிரவாதிகளிடம் தருவதென்பது அவர்களை நம் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நம் கோவில்களை நோக்கி ஈர்ப்பதாகவே இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளும் சிக்கலில் இருக்கின்றன. அவையும் நம் கோவில் சொத்துக்களுக்கு ஆபத்தாக இருக்ககூடும். இப்படிப்பட்ட நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
அப்படியானால் இப்போது என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
தர்மத்தையும் தெய்வத்தையும் மதித்து நம் ஆலயங்களில் உள்ள சொத்துக்களைத் தோண்டுவதை நம் நீதிமன்றங்களும் அரசுகளும் நிறுத்த வேண்டும்.
நாம் இங்கே ட்ரில்லியன் கணக்கில் உள்ள சொத்துகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பேராசையுடன் துழாவிப் பார்க்கும் கண்களிலிருந்து இதைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு தேசிய சொத்து. அதனால் இதற்கான பாதுகாப்பும் உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். ஆலய காப்புப்படை ஒன்று அமைக்க வேண்டும். அதற்கான பொறுப்பை மாநில மற்றும் மத்திய அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய அருங்காட்சியகங்கள் விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை கொண்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க அதிநவீன முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் அத்தகைய ஒரு இடத்திலேயே பொக்கிஷங்கள் கொள்ளை போகின்றன. இதில் இந்தியா போன்ற நாடு இத்துணை பெரிய பொக்கிஷத்தை காப்பாற்றும் திறன் கொண்டதுதானா என்று கேள்வி எழுகிறது. மேற்கொண்டு இத்தகைய பணிகளை தொடரும் முன் இந்த கேள்வியை நம் மனதில் நிறுத்துவது அவசியமாகிறது.
(முற்றும்)
One Reply to “‘கோவில் பொக்கிஷங்கள் சந்தைப் பொருட்கள் அல்ல’”
Comments are closed.