ஆயிரம் தெய்வங்கள் -11

இல் அல்லா – யமனை வென்றபாய் – செமிட்டிக் – யூத் வரலாறு

செமிட்டிக் என்று வர்ணிக்கப்படும் மக்கள், புராண அடிப்படையில் நோவாவின் மூத்த புதல்வரான ஷெம்மினின் வாரிசுகள். பாலஸ்தீனத்தில் பழைய பைபிள் காலத்துக் குடுமிப்பிடி சண்டை 21ஆம் நூற்றாண்டில் குண்டுவெடிப்பு வரைத் தொடர்வதற்குக் காரணமான யூதர்களும், அராபியர்களும் பழைய பைபிளுக்கு முற்பட்ட பாபிலோனியர்களும், ஆசிரியர்களும் கேனனீயர்களும் (பாலஸ்தீனம்) போனீஷியர்களும் (சிரியா) செமிட்டிக் என்று மொழியியல் அடிப்படையில் ஒரே இனமாகக் கருதப்படுவதுண்டு.

கி.மு. 1000-1100 காலகட்டத்தில் செமிட்டிக் மொழி சிரியாவில் லிபி- அகரவரிசை எழுத்துகளாயிருந்தன. கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.

இந்த அகழ்வாராய்ச்சியின் சிறப்பு எதுவெனில் அங்கு கண்டெடுக்கப்பட்ட கியூனிபார்ம் கல்வெட்டுகள் மூலம் செமிட்டிக் அகரவரிசை புலனாவதுடன் செமிட்டிக் தெய்வீக உறவு பற்றிய புதிர்களுக்கு விளக்கம் கிடைத்ததுவே செமிட்டிக் அகர வரிசை மட்டுமல்ல. உலக மொழிகளுக்கே அகர வரிசையை செமிட்டிக் நாகரிகம் வழங்கியுள்ளது.

ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு பல தெய்வங்கள் தொடர்பு இல்லாமல் தொழப்பட்டு வந்தததாக எண்ணினர். பல்வேறு தெய்வங்கள் தொடர்பு இல்லாமல் தொழப்பட்டு வந்ததாக எண்ணினர். பல்வேறு செமிட்டிக் தெய்வங்களை ஒருமைப்படுத்திய குறிப்பு ரஸ்ஷம்ராவில் கிட்டியது. ரஸ்ஷ்ம்ரா உகாரித் எழுத்துகள் மிகவும் தெளிவாக பொனீஷியர் – இஸ்ரேலியர் பயன்படுத்திய கேனன் என்று மெய்யுறுதியானது. பால் தேவாலயத்தில் உள்ள கியூனிபார்ம் பலகைகளின் எழுத்துக்கள் ரஸ்ஷம்ரா கிடைத்த பின்னரே உறுதி செய்ய முடிந்தது. அதன் பின்னர் செமிட்டிக் புராணம் புத்துருவமானது.

இல் அல்லா

அன்றைய உகாரித் நகரம் சுமேரியா, பாபிலோனியா, ஹுரைட்டியா எகிப்து கிரீஸ் போன்ற பல்வேறு பண்பாடுகளின் சங்கமமாயிருந்தது. உகாரித்தின் பெருந்தெய்வம் இல். இல் என்றால் “சர்வ வல்லமையுள்ள ஆண்டவன்” என்று பொருள். “மனிதர்களின் தந்தை”, “படைத்தவன்” என்று பல பொருளும் இல்லைக் குறிக்கும். “வயதே கணிக்க முடியாத முதிய ஜடாதாரி” தோற்றமும், அன்பின் திரு உருவமாகவும், இரக்கத்தின் சின்னமாகவும் “இல்” எண்ணப்பட்டார். சொல்லப்போனால் பிற்காலத்தில் ஏசுவாக அவதரிப்பவரின் முன்னோடியாகவும், திருக்குர்ரானில் முன்மொழியப்பட்ட அல்லாவின் முன்னோடியாகவும் மட்டுமல்ல, இந்தியாவில் பாகவதத்தில் வர்ணிக்கப்படும் கிருஷ்ணருக்கும், தம்மபதம் கூறிய புத்தருக்கும்கூட “இல் அல்லா” முன்னோடி.

இல்லின் இடம் படைப்பு நிகழும் இடத்திற்கு அப்பால் ஒரு தனிவெளி. அது நதிகள் தொடங்கும் ஆகாயவெளி. மானசரோவர், கங்கோத்ரி போன்ற வெள்ளிப் பனிமலை. எனினும் செமிட்டிக் புராணத்தில் நதிகள் தொடங்கும் ஆகாயவெளியும், பாதாளத்தின் முடிவும் சங்கமிக்கும் இடத்தில் இல் இருப்பார். பாதாள உலகமும் விண்ணுலகும் பிரபஞ்ச நதிகளில் சங்கமம். இப்படிப்பட்ட இடத்தில் இல் இருந்தவண்ணம் பிரபஞ்சத்தை இயக்கும் மனித விதிகளை நிர்ணயிக்கிறார். இல் வாழும் இடத்திற்கு வந்து தெய்வங்கள் முறையிடும்.

இந்த இல்லின் கதையை விளக்கும் “அருள் தெய்வங்களின் பிறப்பு” என்ற உகாரித் பாடலின்படி, நீலத்திரைக்கடல் ஓரத்தில் இல் எழில் வடிவமாயுள்ளபோது மிகவும் அழகான இரு பெண்களை இல் மயக்கினார். (மனிதனுக்கு ஒரு மனைவி தெய்வத்திற்கு இரண்டு மனைவி என்ற கருத்தும் செமிட்டிக் சிந்தனையோ!) அம்மங்ஸடர் ஷஹர் (புலர்காலை) என்றும் ஷாம் (மறையும் மாலைப்பொழுது) என்றும் இரு தெய்வங்களை ஈன்றனர். ரிக்வேதத்தில் வரும் தாய் தெய்வம், அதிதி, யூதமொழியில் அதிரத்தாக வந்து இந்த இரு தெய்வக்குழந்தைகளுக்கும் முலைப்பால் வழங்கினாள்.

தெய்வங்களுக்கெல்லாம் தாயாக இருந்த அதிரத் வளர்த்தும்கூட குழந்தைகளின் பசி தணியவில்லை. ஆகவே, இல் இந்தக் குழந்தைகளை உணவு தானியப் பயிர்களுக்கு மத்தியிலும், பழத்தோட்டங்களுக்கு மத்தியிலும் ஏழு ஆண்டுகள் வாழச் செய்து பசியைப் போக்கிக் கொள்ள உத்தரவிட்டார்.

இத்துடன் இல் அல்லாவை நிறுத்திவிட்டு எமனுக்கு எமனான பாலின் கதைக்கு வரலாம்.

பால் – எமனுக்கு எமன்

உகாரித் இலக்கியத்தில் பால் என்றால் நிஜமான தெய்வம். பழைய பைபிளில் பால் போலியான தெய்வம் என்று சொல்லப்பட்டுள்ளதாம். செமிட்டிக் பால் இந்திரனுக்கு நிகரானது. மின்னல் – புயல் – இடிக்குரிய தெய்வம். ஆர்மேனியர்கள் தொழுத ஹேநாத் போலவும் இஸ்ரேலியர்களின் யஹுவே போலவும் பால் சிறப்பான தெய்வம்.

பூமி வறட்சியுற்றபோது முனிவர்கள் எலிஜாவை (எலிஸபத்?) எதிர்த்து பாலைத் தொழுதனர். பாலின் அருளால் மழை பெய்து பூமி குளிர்ந்து விவசாயம் பெருகியது. ஆகவே பால் தெய்வங்களின் தெய்வமானார். பாலின் புகழால் பொறாமையுற்ற எமன் பாலைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்.

யூதர்களின் எமன் கடலாகும். உகாரித் இலக்கியத்தில் எமன் நதிகளின் தெய்வமும் கூட. எமன் நேரடியாக மோதாமல் கூடிக்கெடுக்க சதி செய்தார். தானும் பாலைப்பாராட்டுவது போல் பாராட்டி பாலுக்கு ஒரு ஆலயம் கட்ட உத்தரவிட்டார்.

யூத நாடுகளில் மயனுக்கு நிகரான ஒரு தெய்வம் காதர். காதரிடம் ஆலயப்பணி ஒப்படைக்கப்பட்டது. எமனின் செய்கையால் இல் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அஸ்தார் மட்டும் எமன் சதி செய்வதை அறிந்து எதிர்க்கவே, அஸ்தார் தேவசபையிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் எமனின் சதி அம்பலத்திற்கு வந்தது. தெய்வங்களுக்குத் தரவேண்டிய திறையை பால் செலுத்தவில்லை என்று பொய்க்குற்றம் சுமத்தி பாலைக் கொல்ல வேண்டும் என்று கூறி எமதூதர்களை இல் அல்லாவிடம் அனுப்பினர். பரமண்டலத்தில் பரமபிதாவான இல்அல்லா நடுங்கிப்போனார். தேவர்கள் தலைகுனிந்து நின்றனர். “தலையை நிமிர்த்துங்கள், எமனை எதிர்த்து வெல்வோம்” என்று பால் அறைகூவல் விடுத்தார் பால் தனது சகோதரிகளான அனத் மற்றும் அஸ்தார் உதவிகளைப் பெற்றார். காதர் இரண்டு அற்புத ஆயுதங்களைக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு பால் எமனின் மண்டையைப் பிளந்தார். “எமன் இறந்தான். இனி பாலே நமது மன்னர்.” என்று அஸ்தார்த்தே உற்சாகக் குரல் கொடுத்தது. (அஸ்தார் – அஸ்தார்த்தே, செத்தின் மனைவி எகிப்திய புராணத்தில் அரக்க தெய்வம்)

இந்த எமவதத்திற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. பூகோளப் படத்தில் உகாரித் எகிப்துக்கு வடக்கே மத்திய தரைக்கடல் பகுதியில் லெபனான் தாண்டி, துருக்கி எல்லையில் சைப்ரஸ் தீவுகளையும் கடந்து கிழக்கே அமைந்துள்ள அற்புதமான கடற்கரை நகரம். வணிகர்கள் மிகுந்து செல்வம் செழித்த நாடு. உலகிலேயே முதன் முறையாக அகரவரிசையை (அடூணீடச்ஞஞுt) கண்டுபிடித்த நாடு. இந்த நாட்டைப் பகைவர்கள் முற்றுகையிட்டபோது பால் என்ற மன்னர் பகைவர்களை முறியடித்து உகாரித்தைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் விளக்கம் செய்யலாம்.

இப்படிப்பட்ட எமவதத்தைத் தொடர்ந்து விண்ணுலகில் கொண்டாட்டமும் கொலை வெறியும் எல்லை மீறிச் சென்றது. அரக்கியான அனத் பத்ரகாளியாகி பாலின் பகைவர்களைக் கொன்று குவித்த வண்ணம் உள்ளார். “போதும், போதும்” என்று பால் உத்தரவிடுகிறார். இன்னம் தானின், லோரான் போன்ற டிராகன், நாகம் எல்லாம் கொல்லப்படவில்லையே என்று அனத் வியப்புற்றுக் கொலை வெறியைத் தணித்துக் கொள்கிறான். இல் அனத்தை சாந்தப்படுத்தி பாலை தெய்வத்தின் தெய்வமாக அறிவிக்கிறார். பின்னர் இல்லின் உத்தரவை ஏற்று பாலுக்கு ஆலயம் கட்டக் காதர் முன்வருகிறாள்.

இது ஆலயம் மட்டுமல்ல. பாலின் அரண்மனையும்கூட. இந்த ஆலயப்பணிக்கு அதிரத் தங்கம், வெள்ளி வைர வைடூரியங்களை வழங்குகிறது. இந்த ஆலய அரண்மனையில் ஒரு வாசல் எப்போதுமே திறந்திருக்க வேண்டும் என்று காதர் ஆணையிடுகிறார். திறந்துள்ள வாசல் வழியே பால் வெளியேறி மக்கள் நலம் காக்க வேண்டும். மக்களை கவனிக்கவே ஒரு வாசல் திறந்துள்ளதாகக் காதர் கூறியதுடன், தெய்வங்களுக்குக் காணிக்கை செலுத்தவும் இந்தத் திறந்த வாசல் பயன்படும் என்றும் காதர் வர்ணிக்கிறார். (தென்னிந்தியக் கோவில்களில் நடை மூடும் மரபு உள்ளது. எப்போதுமே கோவில்களில் ஒரு வாசல் திறந்தபடி இருக்குமானால் பக்தர்கள் பயனுறுவார்கள்).

மோத்துடன் மோதல்

எகிப்திய புராணத்தில் மோத் விதையைக் குறிக்கும் சிறுதெய்வம். ஆனால் யூதர் புராணத்தில் மாபெரும் அரக்கியாகி பாலைப் போருக்கு அறைகூவல் விடுத்தது. மோத் பாதாளத்தில் வசிக்கிறது. பால் மறுப்புத் தெரிவிக்கவில்லை. எதிர்த்துப் போரிடவும் இல்லை. மோத் தன்னுடைய வாயைப் பிளந்தபோது மோத்தின் நாக்கு நட்சத்திர மண்டலங்களைத் துழாவியது. அப்போது பால், மோத்துக்கு தான் அடிமை என்று கூறி, அவகாசமும் கேட்டான். மோத் அசையவே, பால் மோத்தின் வாய்க்குள் நுழையும் முன்பு அனைத்தைப் புணர்ந்து வாரிசு வழங்கிவிட்டு மறைந்தார்.

அன்னதாதாவாகிய பாலை மோத் விழுங்கியதால் அதிர்ச்சியுற்ற தெய்வங்கள் இல்லிடம் புகார் செய்தன. தாய் தெய்வமான அதிரத் பால் அமர்ந்திருந்த ஆசனத்தில் அஸ்தார்த்தேயை அமரச் சொன்னாள். ஆசன அளவு சரியாக இல்லையாதலால் அஸ்தார்த்தேயால் அமர முடியவில்லை. பின்னர் ஷபாஷ் சூரிய தேவதைகளின் உதவியுடன் தன் சகோதரனைத் தேடி அனத் அலைந்தான். ஷபாஷுக்கு உலகில் ஒளிபரவும் இடங்களையெல்லாம் பார்க்கும் திறன் இருந்ததால் மோத்தைக் கண்டுபிடித்துப் போராடினாள். மோத்தைத் தீயில் சுட்டு வாந்தி எடுக்க வைத்தாள். இல்லுக்கு அசரீரி கிட்டியது. “பால் மீள்வான்” என்று தெய்வக்குரல் வந்ததும் எண்ணெய் மழையும், தேன் மழையும் பொழிந்தது. மோத் எடுத்த வாந்தியில் பாலின் இறந்த உடல் வெளிப்பட்டது. பாலின் இறந்த உடல் சபோன் என்ற சஞ்சீவி மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பால் உயிர் பிழைத்து மக்களுக்கு அன்னம் வழங்குகிறார்.

விவசாய உலகம்

மோத்தைப் பால் விழுங்கியதைத் தொடர்ந்து நிகழ்ந்தவை எல்லாமே உள்ளுறை உவமாக விதைத்துப் பயிராக மழை பெய்து விளைந்தது என்பதுவே கரு. பசு வடிவில் பால் அனத்தைப் புணர்ந்தது. கால்நடை வளர்ப்பு இனப்பெருக்கம். மழையின் தெய்வமான பால் இல்லாவிட்டால் மழை இல்லை. மோத் விதையைக் குறிக்கிறது. விதை முளைக்க நிறையத் தண்ணீர் தேவை. மோத் பாலை விழுங்கியதன் பொருள் விதைகள் முளைத்துப் பயிராகத்தான். பால் இறந்து போனதால் – தானியங்கள் அறுவடைக்குத் தயாராயின. அனத் அறுபடை தெய்வம். அனத் மோத்தைப் புரட்டிப் போட்டு அடித்த நிகழ்ச்சி – கதிரடியில்-போரடியில். பால் ஒரு வாசலைத் திறந்து வைத்ததாகக் கூறுவது மழையைப் பெய்விக்கவே. ஆகவே- பால் கதையில் உள்ள பாகவதச் சடங்குகள் விவசாய உலகத்தை எடுத்துக்காட்டுவதாகப் புராணவியல் அறிஞர்களின் கருத்தும்கூட.

கேரத் -டேனல் புராணம்

உகாரித் இலக்கியத்தில் இரண்டு அருமையான மனிதக்கதைகளும் உண்டு. ஒன்று கேரக். மற்றொன்று டேனல். இவர்கள் மனித மன்னர்களாவர்.

கேரத் மன்னன் மாடு, மனை, மக்கள், மனைவி எல்லாவற்றையும் இழந்த ஹரிசந்திரனாயிருந்த போது ‘இல்’ அவனைத் தன் வாரிசாக ஏற்று அவனது துயரை நீக்கியது. தனிமரமாக நின்ற கேரத்தின் கனவில் ‘இல்’ வந்து, ‘உடும்’ என்ற ஊருக்குச் சென்று அங்கு இளவரசியும் பபிலின் புத்திரியுமான ஹுரையாவைத் திருமணம் முடிப்பாயாக,” என்று கூறவே, தெய்வ ஆணையின்படி உடும் என்ற ஊருக்கு வந்து, தெய்வ சங்கல்பத்தின்படி ஹுரையாவை மணந்து எட்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிறார். இந்த எட்டில் ஒரு குழந்தை மட்டும் தெய்வங்களாகிய அனத்திடமும் அஸ்தஸ்த்புயிடமும் பால் குடித்து வளர்ந்து மன்னனானது. இரண்டு புத்திரர்களால் பல ஆண்டு செங்கோல் ஆட்சிக்குப் பின் கேரத்துக்கும் பிரச்சினைகள். மரணப்படுக்கையில் விழுந்தார். பின்னர் அந்த இரண்டு புத்திரர்களை இல் தண்டித்து கேரத்தை உயிர் பிழைக்க வைத்தார்.

கேரத் கதையில் திருப்பம் எதுவும் இல்லை. ஆனால் டேனர் கதை சற்று மாறுபட்டது. கேரத்தைப் போல் டேனும் வாரிசு இல்லாத மன்னர். போருக்கு உதவியாக இருக்க மாவீரனை மகனாகப் பெற விரும்புகிறார். பால் உதவுகிறார். டேனலின் விருப்பம் இல்லின் செவிக்கு எட்டுகிறது. இல்லின் அருளால் டேனலுக்கு “அக்காட்” என்ற ஆண்குழந்தை பிறக்கிறது.

ஒரு நாள் டேனல் ஒரு விதவைக்கும், ஒரு அனாதைக்கும் நீதி வழங்கிக் கொண்டிருந்தபோது சபையின் வாசலில் காதர் வருவதை கவனித்தார். காதர் வந்தால் வசிஷ்டர், அகத்தியர் வந்தது போலதான். சர்வ வல்லமையுள்ள ரிஷிகள் மன்னரை விட சக்தியுடையவர்கள் அல்லவா? வாசலில் நின்றிருந்த காதரை விரைந்து சென்று வணங்கி அரண்மனையில் தங்க வைத்து சகல ராஜமரியாதை, ராஜ விருந்து எல்லாம் வழங்கவே அகம் மகிழ்ந்த காதர் ஸ்ரீராமனுக்கு அகத்தியர் வழங்கியதைப் போல் அதிசய வில்லையும் அஸ்திரத்தையும் வழங்கினார். டேனல் பிஸ்டி இந்த அஸ்திரத்தை அக்காட்டிடம் தந்தார். இந்த அபூர்வ அஸ்திரத்தை அனத் பறிக்க விரும்பியது. முதலில் அனத் தன் அழகைக்காட்டி மயக்கியது. அக்காட் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் வெள்ளி, தங்கம், சாகாவரம் என்று எதைக் கேட்டாலும் வாங்கிக் கொண்டு காதரின் அஸ்திரத்தை வழங்க வற்புறுத்தியது. மிகுந்த சினமுற்ற அனத், இல்லிடம் உதவி கேட்டு எதூபனைத் துணையாகக் கொண்டு விஷ்ணு சக்கரத்தால் தாக்கவே அக்காட் சிரம் தனியே உருண்டது.

அக்காடை வீழ்த்தி காதரின் அஸ்திரங்களை அனத் பறித்துக் கொண்டதால் சினமுற்ற டேனல் பூமியை ஏழாண்டுகளுக்கு எதுவும் விளையக்கூடாது என்று சாபமிடுகிறான். அக்காட்டின் சகோதரி எதுõபனைப் பழிவாங்கினாள். மனமிரங்கிய அனத் அக்காட்டை உயிர் பிழைக்க வைக்கிறாள். அதற்கான சடங்குகளை டேனல் செய்கிறார். இந்தியப் புராணங்களைப் போலவே உகாரித்-மேற்கு செமிட்டிக் புராண இலக்கியங்களில் “தெய்வீக சம்மதம் இல்லாமல் புவியில் எதுவும் இயங்காது, தெய்வம் கோபமுற்றால் மன்னருக்குத் துன்பமே” என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பழைய பைபிள்

உகாரித் – ரஸ்வும்ராவின் பல கருத்துக்களைப் பழைய பைபிள் தமதாக்கி கொண்டுள்ளது. இதை பழைய பைபிள் கதைகளிலிருந்து உய்துணர முடிகிறது.

பழைய பைபிளில் போற்றப்படும் யூத தெய்வம் யஹுவே. யூதர்களாகக் கருதப்படும் இஸ்ரேலியர்கள் செமிட்டிக் மலைப்பகுதிகளில் நாடோடிகளாகத் திரிந்து பின்னர் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்தவர்கள் நல்ல நாகரிங்களைக் கற்றிருந்தனர். ஒரு தெய்வ வழிபாடு ஏற்படாததால் பாலஸ்தீனயிர்கள் (கேனனீயர்கள்) பல தெய்வங்களை வணங்கி கிரேக்கர்களுக்கு முன்பே நகர அரசுகளை (இடிtதூ-குtச்tஞு)உருவாக்கியவர்களென்பதை ரஸ் ஷம்ரா தொல்லிலக்கியங்கள் வாயிலாக அறிவோம். ஆகவே பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் “பாகன்கள்” என்று இகழ்ந்து ஒதுக்கினர். இஸ்ரேலியர்களுக்குப் புராணங்களோ, காவியங்களோ இலக்கிய வாசனையோ அறவே இல்லை. யஹுவே மட்டுமே தெரியும்.

இதனால் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் போர்மூண்டது. தெய்வத்தைப் பிரச்சினையாக்கி உருவானதால் இதன் பெயரே யஹுவேப் போராகும். மதத்தை அரசியலாக்குவதை ஏசு பிறப்பதற்கு முன்பு யூதர்கள் செய்தனர். ஏசு பிறந்த பின்னர் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் செய்தான். பிறகு இஸ்லாமியர்களும் பின்பற்றத் தவறவில்லை. இன்றைய இந்தியாவில் “மதச்சார்பின்மை” என்ற பெயரில் மத அரசியல் நிகழ்ந்தது.

சரி, யஹுவைப் போர் என்ன ஆச்சு? பாலஸ்தீனியர்களை யூதர்கள் வென்றனர். டேவிடும், சாலமனுன் வெற்றியுற்றனர். யூதர்களின் தலைநகராக ஜெருசலம் மாறியது. யஹுவேக்கு ஆலயம் உருவானது. தோற்றுப்போன பாலஸ்தீனியர்களில் பலர் யூதர்களாக மதம் மாற நிர்ப்பந்திக்கப்பட்டனர். யூத மாமன்னர் சாலமன் காலத்தில் “புனிதப்போர்” வெற்றிக்குப்பின் இயற்றப்பட்ட ஹிப்ரு மொழிப் பாசுரங்கள் சையன் (ஙூஐON) வழிபாட்டுச் சான்றுகளாயின. யஹிவே தவிர பிறதெய்வங்கள் பழிக்கப்பட்டாலும் பாலையும், இல்லையும் தமதாக்கினர். யஹுவேயே இஸ்லின் அம்சம், பாலே யஹ்வேயின் அம்சம் என்று கூசாமல் பேசியதெல்லாம் இஸ்ரேல் யூதர்களே. ரஸ்ஷம்ரா-உகாரித் இலக்கியத்தைத் தமாதிக்கொண்டது தெளிவு. யஹுவேயின் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற ஆயிரம் தெய்வங்கள் பற்றிய குறிப்பு பழைய பைபிளில் உள்ளது. ஒரே தெய்வம் யஹுவே என்று யூதர்கள் கூறினாலும் பல தெய்வங்களின் குறிப்புகள் பற்றிக் கேள்வி கேட்டால் சப்பைக்கட்டு பதில் உண்டு. யஹுவே தோன்றி மற்ற தெய்வங்களை அடிமையாக்கினாராம்.

எனினும் ஜெருசலத்தின் சிறப்பு பூர்வீக ஹீப்ரு மரபுகள் காப்பாற்றப்பட்டு வருவதால், அம்மரபு வழியில் பழைய பைபிள் ஆட்கொண்ட எகிப்திய, சுமேரிய, கேனனிய மரபுகள் இஸ்ரேலிய வாழ்த்தொலிகள் வெளிப்படுகின்றன. சொல்லப் போனால் பழைய பைபிளில் கூறப்படும் ஊழிக்கதை கில்காமேஷ் காவியத்தில் குறிப்பிடப்பட்ட உத்ன பிஷ்டிமை நினைவுபடுத்தவில்லையா?

இத்துடன் மிகவும் கடினமான, எளிதில் புரிபடாத மெசப்பட்டோமியா-செமிட்டிக் நாடுகளின் தெய்வங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அநேகமாக ஆங்கில இலக்கியத்தில் சற்று பரிச்சியம் உள்ளவர்கள் அறிந்துள்ளதும், சற்று சுவையானதுமான கிரேக்க தெய்வக் கதைகளுக்குள் நுழைவோம். கிரேக்க புராணம் இந்திய புராணங்கள் போல் பெரியது என்றாலும் இலக்கியச் சிறப்புள்ள கதையம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை. இனிவரும் தொடர்களில் கிரேக்க இலக்கிய இன்சுவை பெறுவோம்.

(தொடரும்)