ஸ்குரில்

ஸ்குரில் – இது நிச்சயம் காரணப் பெயர்தான். எங்கள் லண்டன் அலுவலகத்தில் இருக்கும் ஒரு சில தமிழர்களிடையே பள்ளியில் படித்த தமிழ் பயன்படுவது சக அலுவர்கள் மத்தியில் அவர்களை பற்றி அவர்களுக்குத் தெரியாமல் பேச நேரிடும் போதுதான். இந்த பெயர்சூட்டும் வழக்கத்துக்கு தமிழ் தெரியாத நம் நாட்டுக்காரர்களும் தப்பவில்லை.

“நல்ல கப்பல் (Goodship) மெசெஜ் சர்வீசிங்கில் நிபுணர்”, “மில்க் (Paul) நாளை வீட்டிலிருந்து வேலை செய்ய உள்ளார்”, இப்படி..!

இப்படித்தான் அந்த ஆந்திர அனிலுக்கு ஸ்குரில் என்ற பெயர் அமைந்தது. தமிழ்ப்படுத்தி பின் ஆங்கிலம்!

முதன்முறை சிலரைப் பார்க்கும்போது உண்டாகும் எண்ணம் மறக்கவே மறக்காது, அந்த முதன்முறை எப்போதுமே நினைவில் இருக்கும்.

ஸ்குரிலை முதல் முறை பார்த்த தருணம் – ஒரு காலை வேளையில் அலுவலத்தின் வரவேற்பறை பக்கத்தில் உள்ள ஏடிஎமில் பணம் எடுத்தபின் லிப்டிற்கு காத்துக்கொண்டு இருக்கும்போது: ரிசப்ஷனில் உள்ள பெண்ணை ஸ்குரில் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆம், எங்கோ லித்துவேனியாவிலிருந்தோ, போலந்திலிருந்தோ வந்த அந்த பெண் ‘ஆங்கிலத்தில்’ பேசிக்கொண்டிருக்க, ஸ்குரில் அவள் வாயையே பரிதாபமாக கவனித்துக் கொண்டிருந்தார். ஒட்ட வெட்டிய தலை முடி, சற்றே பெரிதான கண்கள் பார்க்க பரிதாபமாக இருந்தன. தோல் கோட்டு – கண்டிப்பாய் இந்தியாவில்தான் வாங்கியிருக்கவேண்டும் – ஒல்லி டை…அப்படியே என்னை, வந்த புதுதில் இருந்த என்னை பார்த்த மாதிரியே இருந்தார்.

சில தயக்க கணங்களுக்கு பின் நான் அவர்களை இடைமறித்தேன். சந்திர ரெட்டியை பார்க்கவந்திருக்கிறார். வரவேற்பறைப் பெண் தன் செயற்கை இமைகளையும், நகங்களையும் அசைத்து நன்றி சொன்னார்.

ரெட்டிக்கு தொலைபேசியில் சொன்னேன். ஸ்குரில் பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

-o00o-

எனது ப்ளாட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழி, ஒரு நடை, மிதிவண்டி பாதை – நேர்கோடாக சுமார் முன்னுறு அடிகள் இருக்கும்.

இருபுறமும் நன்கு வளர்ந்த பெர்ரி செடிகள்/ மரங்கள். பாதையில் ஒரு ஆள் நன்றாக கை வீசி நடக்கலாம். எதிர்புறம் வரும் நபர் கை வீசக் கூடாது.

நான் ஸ்குரிலை அடுத்த முறை அந்தப்பாதையில்தான் பார்த்தேன். ஒரு ஞாயிறு மாலையில், பாதையின் இந்த முனையின் துவக்கத்தில் நான், எதிர் முனையின் இறுதியில்அவர். இடையே அவ்வப்போது குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருக்கும் அணில்களையும், பறவைகளின் சத்தங்களையும் அக்டோபர் மாத கடும் காற்றையும், உக்கிரமடைந்து கொண்டிருக்கும் குளிரையும் தவிர வேறெதுவுமில்லை.

பார்வையை எங்கு செலுத்துவது?

கொஞ்சம் வலம், கொஞ்சம் இடம் திருப்பி மீண்டும் நேராக செலுத்தினேன். அவர் என்னைப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார். எனக்கு வசதியாக போய்விட்டது. லேசாக புன்னைகைத்தேன். கொஞ்சம் ஆச்சரியம், பதிலுக்கு புன்னகை, தலையசைப்பு, கண்களிலாவது சிரிப்பு? ம்ஹும்!

அதைவிட ஆச்சரியம், அவர் பார்வை என் கண்களைவிட்டு நகரவே இல்லை. அங்கிருந்து ஒரே நேர் பார்வைதான்.

நான் இன்னம் கொஞ்சம் அதிகமாக முகத்தை சுருக்கினேன்; அதாவது புன்னகைக்க முயற்சித்தேன்! அவர் முகத்தில் சலனமே இல்லை.

நான் பார்வையை கொஞ்சம் தாழ்த்தி முன்னால் தைரியமாக ஓடி நின்று, ஓடி நின்ற ஒரு பெரிய அணிலை பார்த்தபடி மீண்டும் பார்வையை உயர்த்தினேன்.

அதே சலனமில்லாத, கொஞ்சம் பரிதாபமான (இப்போது சந்தேகம் வருகிறது) பார்வை என்மேல்தான்…

இப்போது மிக அருகில் வந்தாயிற்று…கடந்துமாச்சு! மாற்றமில்லை.

எனக்கு கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது, வீட்டிற்கு வந்து மீராவிடம் சொன்னேன்.

“ஆமங்க, ரெண்டு நாளைக்கு முன் லைப்ரரியில் தெலுங்கு சாடையில் ஒரு பொண்ணைப்பார்த்தனே! சிரிக்கவே இல்லை…”

“நீ சிரிச்சயா? அவங்களும் ஒன்னை மாதிரிதான் நினைச்சிருப்பாங்களோ என்னமோ”

“என்னைக்கு என்னை நம்பியிருக்கிங்க! சிரிச்சேன்…அந்த பக்கம் சுத்தம், அதோட, ஒரு நாலஞ்சு வயசில ஒரு பையன், புஷ் சேருக்கு பழகலைபோல, சத்தமோ சத்தம், அட்மின் பாட்டி வந்து ரெண்டு தடவை சொன்னாங்க, அப்புறம் காணோம்”

“மறுபடியும் எங்காவது பார்த்தா பேசறதுக்கு என்ன?”

நாங்கள் இருக்கும் இந்த டவுன் லண்டன் பக்கம்தான் என்றாலும் நம்ம தோல் மிக குறைவு. கூட்டமான சனிக் கிழமை டவுன் சென்டரிலும் மீரா எவ்வளவு தூரத்திலிருந்தாலும் தனியாகத் தெரிவாள், கையசைப்பாள்; நானும் அவளுக்கு அப்படித்தான் தெரிவேன், நானும் கையசைப்பேன்.

எனவே நமது முகங்களைக் கண்டால் மீரா உடனே தன் நட்பை பிரகனப்படுத்திக் கொள்ள ஆசைப்படுவாள்.

அந்த வாரத்தில் ஒரு அலுவலக பிற்பகலில் ஏதோ பழைய மின்னஞ்சலை பழைய PSTயில் தேடிக்கொண்டுருந்தபோது ரெட்டி பக்கத்தில் வந்து நின்றார். ஒல்லி. உயரம்.  அயர்ன் செய்யாத சட்டையை மறைக்க அதே பழுப்பு ஜம்பர்.

“ஹலோ கிருஷ்ணா”

பதில் ஹலோ முடிவதற்குள் அவர் பின் நின்றன ‘அதே கண்கள்’

“இவர் டிபிஏ குழுவில் புதிதாய் சேர்ந்திருக்கிறார், அனில்”

இப்போது அவர் முகத்தில் தெரிவது சிரிப்பா? ஒரு முடிவிற்கு வருவதற்குள் ‘அது’ மறைந்து பழைய நேர் குத்திய கண்கள்.

“உங்கள் அபார்ட்மெண்ட்தான்”

“அப்படியா, நாங்கள் E8”

ஸ்குரில் “D5”

நன்கு தெலுங்கில் தோய்த்த ஆங்கிலம், நினைத்த மாதிரியே. அதற்கடுத்து நடந்த ஐந்து நிமிட பேச்சில் ஏரியா பக்கத்தில் என்னென்ன கிடைக்கும், எங்கே போனால் எது கிடைக்கும் போன்ற விஷயங்கள்- ஆமாம், மலிவாக என்பது முக்கியம்…புதிதாக வரும் எல்லாருக்கும் வரும் சந்தேகங்கள், கேள்விகள்…ஆறாவது நிமிடத்தில் சட்டென்று விலகினார்…ஏதாவது முக்கிய அலுவலக சந்திப்பு இருப்பது நினைவுக்கு வந்திருக்கும் என்று நினைத்துகொண்டேன்…

-o00o-

மாலையில் உள்ளரங்கு கால்பந்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன்.

“அந்த பொண்ணு வந்திருந்தது”

“யாரு?”

“அதான், அன்னிக்கு லைப்ரரியில் பார்த்தேன்னு சொன்னனே!”

“பக்கா தெலுங்கு”

” விஜயவாடா பக்கம் போல!”

“ம்…மத்தியானம் தான் அவன் கிட்ட பேசினேன்?”

“உடனே போன் பண்ணியிருப்பாரா இருக்கும்!”

சில மௌன நொடிகள்.

“ஏய், என்னது சோபாவில இவ்வளவு கறை?”

“அது..அந்த பையந்தாங்க, ரொம்ப வாலு, எண்ணெய் பாட்டிலை கொட்டிட்டான்”

“உறைஞ்சில்ல இருக்கும்?”

“தலைக்கு தேய்க்க அப்போதான் மைக்ரோவேவில் சூடு பண்ணி வைச்சிருந்தேன்”

அங்கு மட்டுமல்ல, அந்த புதிய கார்பெட்டில், முன்னாள் உலக வரைபடத்தில் இருந்த முன்னாள் சோவியத் எல்லை மாதிரி நிறைய பரவியிருந்தது.

எனக்கு வியர்த்தது, அந்த அக்டோபரிலும். வீட்டுக்காரர் என்ன சொல்வாரோ, அட்வான்ஸ் அவ்வளவுதானா?

கோபம் சுருசுருவென்று ஏறிக்கொண்டு வந்தது.

“அவங்ககிட்ட லேசா சொல்லிப்பார்த்தேன், அவங்க சீரியசாகவே எடுத்தக்கலை”

“பையன் ஓவர் குறும்புங்க, இந்த ஊரு பசங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுடுவான் போல இருக்கான்”

“நீ கொஞ்சம் கண்டிப்பா சொல்லலாம்ல?”

“நான் ரொம்ப சொல்லலைங்க, கீழ் வீட்டு சோபியும் இருந்தாங்க…ரொம்ப சொன்னா குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்னு சொல்லலாம், உனக்கு புரியாதுன்னு நினைச்சுக்கலாம்…”

திருமணம் ஆகி இவ்வளவு வருடங்கள் ஆச்சு, அவள் எதைச் சொல்கிறாள் என்பது புரியாமலில்லை.

-o00o-

அந்த வார இறுதியில் ஸ்குரில் குடும்பம் எங்கள் ப்ளாட்டிற்கு வந்திருந்தபோது அந்த சின்னப் பையனின் “வால்தனத்தின்” கடுமை பிடிபட்டது,

சோபாவின் மேலிருந்து உணவு மேசைக்கு ஒரு சாடல்; அங்கிருந்து பக்கத்து சன்னலுக்கு அடுத்த சாடல்…

ஸ்குரிலும் திருமதி ஸ்குரிலும் அவனை ரொம்ப கண்டுக்கவே இல்லை.

மூன்றாவது தாண்டலில் சன்னல் திரையை பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிட்டான்.

வீறிட்டபோது அடிபட்டுவிட்டதா என்ற கேள்வியின்கூடவே சன்னல்திரையைப்பற்றிய கவலையும் இருக்கத்தான் இருந்தது.

மறு நிமிடம் துள்ளி சமையலறைக்கு ஓடிப் போனான்; இரு நிமிடங்கள் கழித்து உள்ளே போன மீரா அலறலுடன் காஸ்ஸை அணைத்துவிட்டு பையனையும் கொஞ்சம் இறுகவே அணைத்து, இருண்ட முகத்துடன் வெளியே வந்தாள்…

-o00o-

நான்கு நாட்கள் கழித்து ஒரு வழக்கமான மழை மாலையில் BBC முன்னால் சவுகரியமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது மீரா சொன்ன விஷயம் ரொம்பவும் ஆச்சரியப்படுத்தவில்லை.

“அந்த பையன் ப்ளாட்டில் ரொம்ப குதிச்சிருக்கான் போல. அவங்க ப்ளாட்டுக்கு நேர் கீழ இருக்கிற ப்ளாட்டில் இருக்கற வெள்ளைப்பொம்பளை ரெண்டு தடவை இவங்க ப்ளாட் கதவைத்தட்டி கத்தியிருக்கா”

அடுத்த வாரத்தில் மதியவேளையில் ஸ்குரில் வந்து நின்றான்; முகம் கொஞ்சம் மாற்றம்; மீசை காணாமல் போனது மட்டுமல்ல, கண்கள் கொஞ்சம் கலங்கின மாதிரியும் இருந்தன.

அந்த வெள்ளைக்காரி அப்புறமும் கத்தியிருக்கிறாள்; பையன் தூங்கி விட்டானாம்; இருந்தும் தினம் ராத்திரி கதவை தட்டி பத்து நிமிடங்கள் கத்திவிட்டுப் போகிறாளாம்.

எனக்கென்னவோ பையன் மேல் நம்பிக்கை இல்லை, இவனிடம் அதை சொல்லவில்லை தான்.

“சைக்கோ மாதிரி கத்துகிறாள், என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றான்.

வீட்டுக்காரரிடம் காலிசெய்வதைப்பற்றி பேசியிருக்கிறான். அவர் ஆட்சேபமே சொல்லவில்லை; ஒரு வருட ஒப்பந்தம் என்பதால்,  முன் பணத்தில் பதினோரு மாத வாடகையைக் கழித்துக் கொள்வதில் அவருக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்!

மேலும் இந்த மாதிரி புது அபார்ட்மெண்ட்டில் அடுத்த வாடகைக்காரர் எளிதில் கிடைப்பார் (இந்த ஊரில் இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம் கட்டப்பட்ட எல்லாமே புதுசாதான் இவர்களுக்கு படும் – கட்டிடங்கள், டவுன்கள்….)

நம்மாள் அதைப்பற்றி அவரிடம் அதன்பின் பேசவில்லை.

இது நடந்து ஒரு சில நாட்கள் தான் இருக்கும். வியாழன் என்று நினைக்கிறேன், அலுவலகத்திலிருந்து திரும்ப தாமதமாகிவிட்டது, ஆறு ஆறரை ஆகிவிட்டது. வழக்கமான “தூறல்” மழையாயில்லாது “இந்திய மான்சூன்” மின்னலுடன் மழை, இதோ இங்கிருந்து அங்கேதான், போய்விடலாம் என்பதற்குள் தொப்பலாக நனைத்துவிட்ட மழை. மின்னலைப் பார்க்கும்போது வானம் ரொம்ப பக்கத்தில் இருப்பது போல் பட்டது.

நல்ல காலம் மடிகணிணியை அலுவலகத்திலேயே வைத்து வந்திருந்தேன்.

உடைமாற்றி, வந்திருந்த ஏகப்பட்ட கடிதங்களைப் பார்க்கலாமா அல்லது பால்கனிக்கு போய் தூர மழையில் நனைந்து கொண்டிருக்கும் இருட்டு குளோஷ்டர் பார்க்கை பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் விளக்கு அணைந்துவிட்டது.

ஒரு கணம் மீரா தெரியாமல் விளக்கை அணைத்துவிட்டாளோ என்று திரும்புகையில்தான் தெரிந்தது, ப்ளாட் பூரா விளக்கில்லை.

பின் மெல்ல கதவைத்திறந்து பார்த்தால் அபார்ட்மெண்ட், தெரு எங்கும் கரு கும்!

தடதடவென்று மழை அறையும் சத்தம், அப்பப்ப மின்னல்கள்…வாவ், அட்டகாசம்!

கண்ணைச் சுருக்கிப் பார்க்கையில் எதிரில் இருக்கும் பார்க்கில் உள்ள குளத்தின் நீர் பரப்பின் மேல் அப்பிக்கொண்டிருக்கும் நெருக்கமான கொசுப்படலம்போல மழை…

எதிர் ப்ளாட் கதவு திறந்து வெளிறிய தாத்தா வந்தார். வந்தார் என்றால் தடி ஊன்றி, ஊர்ந்தெல்லாம் இல்லை; திடமாக வந்தார். நீண்ட பாதையில் நடக்கும்போது நமக்கு பின்னால் வந்து சில நிமிடங்களில் நம்மைத்தாண்டி போகக்கூடியவர்தான்.

நான் “என்னாச்சு” என்பதற்குள் “பதற வேண்டாம்” என்று வந்தார், உதட்டில் இருந்த புன்னகை அவர் அருகில் வந்தபிறகுதான் தெரிந்தது.

“ஒன்றுமில்லை, வானிலை மோசமாக இருக்கிறதல்லவா, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும். கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்.”

நான் “இங்கிலாந்தில் மின் தடையா, கடவுளே நான் எதிர்பார்க்கவே இல்லை!!”

“ஏன் இருக்ககூடாதா?”

“இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா என்ன? இவ்வளவு வருஷங்களில் நான் பார்த்ததில்லை”

“எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது; 1954ல் சில மணி நேரங்கள் போய்விட்டது….நான் அந்த டிராக்டர் கம்பனியில் சேருவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்”

அடுத்த சில நிமிடங்கள் தாத்தா டிராக்டர் கம்பனிக்கும் நான் போன வாரம் பிபிசியில் வடக்கு லண்டனில் ஒரு பாட்டி ஒரு மணி நேரம் பைப்பில் தண்ணீர் வரவில்லையாதலால் டீக்கு அழைத்திருக்கும் சக பாட்டியை எப்படி எதிர்கொள்வது என்று ஆளும் கட்சியை திட்டிக்கொண்டிருந்த செய்திக்கும் போயிருந்தோம்.

ரொம்ப நேரம் காக்கவைக்கவில்லை மின்சாரம், வந்துவிட்டது. நல்ல மாலை சொல்லிவிட்டு தாத்தா அவரது கதவினுள் மறைந்தார், அவருடன் வளர்ப்பு நாயின் கொஞ்சலும் மறைந்தது.

கதவை மூடிவிட்டு மெழுகுவர்த்தி அணைந்த நெடியுடன் தொலைகாட்சியை ஆரம்பித்தபோது கதவு மணி அடித்தது. போச்சு, தாத்தா விடமாட்டார் போல இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே கதவு துளையில் பார்த்தால் ஸ்குரில்!!!

கதவைத்திறந்தேன். ஸ்குரில் உள்ளே வந்தான், குடும்பத்துடன்!

முகம் நன்கு இருண்டிருந்தது.

அவன் மனைவியின் கண்கள் அன்றுதான் முதன்முதலில் காண்டாக்டெட் லென்ஸ் போட்டு பழக்கமில்லாத மாதிரி கலங்கியிருந்தன.

விஷயம் இதுதான்; நன்றாக முற்றியிருக்கிறது.

பையன் இன்று ரொம்ப குதித்துக்கொண்டே இருந்திருக்கிறான். (கொஞ்ச நேரம்தான் என்று அம்மாகாரி சொன்னாலும்).

அந்தப்பெண் கீழேயிருந்து அவளது கூரையில் (இவர்களது தரை) கம்போ, கட்டையோ வைத்து இடித்திருக்கிறாள்.

பின் இவர்களது கதவை இடித்து, கொன்றுவிடுவேன், உங்கள் ஊருக்கே போய்த்தொலை என்றெல்லாம் கத்தியிருக்கிறாள்!

கத்திக்கொண்டு இருந்தவள், இரு என்று கீழே போன நேரம் பார்த்து இவர்கள் தடாலென்று மேலே எங்கள் ப்ளாட்டிற்கு தப்பி வந்துவிட்டார்கள்.

அடர்ந்த, கனத்த மௌனம்; மின்சாரம் வந்தமாதிரியே படவில்லை…

…இப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தூக்கிவாரிப் போட்டது. ஸ்குரில் மட்டும் ஒருமாதிரி எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தான். அவளாகத்தான் இருக்கும்- அழைப்புமணி அடிக்காமல் கதவு தட்டப்படுகிறதே!

கதவுத்துளையில் பார்த்தேன்…அவளேதான். கூட இரண்டு விஷயங்கள். அவள் பக்கத்தில் வெள்ளை மொட்டைத்தடியன், பவுன்சர் மாதிரி அப்புறம் அவள் கையில் பளபளக்கும் கத்தி. அய்யோ!

திரும்பி அனைவருக்கும் இதை அறிவித்தால்,  “ஆமாம், எங்கள் வீட்டிற்கு வந்தபோதே இந்த இரண்டும் இருந்தன” என்றான் அதே நேர்பார்வையில்!

எட்டாம் வகுப்பு கணக்கு தப்பாய் போடும்போது அப்பா பிடரியில் போடுவாரே அப்படி இவனைப் போடவேண்டும் என்று தோன்றியது!

கதவைத்திறப்பதா வேண்டாமா…திறக்காமல் விட்டால் கண்டிப்பாய் உடைத்துவிடுவாள் போல இருந்தது!

மீரா ஒரு காரியம் செய்தாள்; தனது அலைபேசியை எடுத்தாள், கதவைத்திறந்தாள்…வேண்டாம் என்று நான் சொல்ல வந்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

அந்த வெள்ளைக்காரியின் சத்தம் கதவை திறந்ததனால் அதிகமாகி உள்ளே வந்தது. கூடவே ஆல்கஹால், சுருட்டு மாதிரி ஏதோ பெரும் வாடை.

மீரா தயவு செய்து சத்தத்தை நிறுத்து, இல்லையென்றால் காவல்துறையினரை கூப்பிட போகிறேன் என்றாள், சத்தமாகத்தான்.

அவள் இதற்கெல்லாம் மசியவில்லை. கத்தி சமையலறை சின்ன சைஸ் கத்திதான், இருந்தாலும் குத்தினால் வலிக்கதானே செய்யும்!

நான் ஸ்குரிலிடன் திரும்பி “999 டயல் செய்” என்றேன்.

அவன் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தான் – “நீங்களே உங்கள் அலைபேசியில் இருந்து கூப்பிடுங்களேன்…தயவுசெய்து!”

என்னுடைய வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு, இவன் பிரச்சனைக்கு நான் கூப்பிட வேண்டுமாம்…ராஸ்கல்!

நேரமில்லை இப்போது. அந்த அவசர எண்ணை டயல் செய்தேன். அந்த முனையில் காத்துக்கொண்டிருந்தவர் பதட்டம் இல்லாத குரலில் உனக்கு யாரிடம் பேச வேண்டும் – காவல், மருத்துவம், தீயணைப்பு என்று கேட்டு முடிப்பதற்குள் “காவல் துறை…தயவு செய்து!…”

அடுத்த நான்கு அல்லது ஐந்து நிமிடங்களில் காவல்துறை கார் வரும்வரை அதே நிலைமைதான்; அவள் அடங்கவே இல்லை; ஸ்குரிலைப்பார்த்து உச்சஸ்தாயில் உள்ளூர் உச்சரிப்பில் கத்தல்தான்.
எதிர்ப்ளாட் தாத்தா ஏதோ சொல்லவந்தார்; ஒன்றும் நடக்கவில்லை.

காவல்துறையினர் ஒரு ஆண், ஒரு பெண், இருவருமே பிரமாண்டமாகத்தான் இருந்தனர். அந்த நேரத்திலும் அவர்கள் அணிந்திருந்த சட்டையின் வெண்மை கவர்ந்தது.

ஸ்குரிலின் இமைக்காத கோலிக்குண்டு நீலக்கண்கள் என்னை விட்டு அகலவில்லை.

அவள் கத்தலில் மாற்றமில்லை. காவல்காரருக்கு பிரச்சனை புரிய கொஞ்ச நேரமாயிற்று. பிரச்சனை என் வீட்டில் இல்லை, கீழே ஸ்குரில் வீட்டில்தான்…அவருக்கு குழப்பம், நான் இந்த பிரச்சனையில் என்ன பண்ணுகிறேன் என்று கேட்டார்.

நான் ஸ்குரிலைப்பார்த்தேன். சலனமில்லாமல் ஜென் கதையில் வரும் துறவிமாதிரிதான் பட்டான்.

அவர் பேசுவதைக் கேட்க விடாமல் அவள் சத்தம் தொந்தரவு செய்தது. ஒரு முறை சொல்லிப் பார்த்தார். ஒருமுறைதான். அடுத்த நொடி அவள் கையை மடக்கி கீழே தள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எனக்கு ஸ்குரிலையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லவேண்டும் போல இருந்தது!

பின் ஒருவர் மட்டும் மேலே வந்து சில விபரங்களை எழுதிக்கொண்டு போனார்.

எதிர்தாத்தா “அவள் காலையில் வந்துவிடுவாள்” என்று சொல்லி விட்டு மறைந்து போனார், தன் வீட்டிற்குள்தான்.

ஏதோ பக்கத்து தெருவிலிருந்து கத்திக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கி அமைதியானது போல இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து “ஊரா இது, மனுஷன் இருப்பானா இந்த ஊரில், நிறவெறி பிடித்த பிசாசுகள்” என்றான் ஸ்குரில். நிறவெறி எங்கு இங்கு வந்தது என்று தெரியவில்லை. “நாளைக்கு அக்கவுண்ட் மேனேஜரிடம் சொல்லிவிட்டு ஊருக்கே போகிறோம்!!” என்றான்…

ஸ்குரில் குடும்பத்துடன் சத்தமே இல்லாமல் தோசை சாப்பிட்டு விட்டு எங்கள் ப்ளாட்டிலிருந்து வெளியேற இன்னும் ஒரு மணி நேரமாயிற்று – அடுத்த நாள் காலையிலேயே ஸ்குரில் இல்போர்ட்டில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டதாக மீராவிடம் ரெட்டி மனைவி பார்க்கில் சொன்னார்கள்.

அந்த வாரம் முழுவதும் ஸ்குரிலை அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை.

மாலை மீரா ஸ்குரில் தன் ப்ளாட்டை சென்ற ஒரு வார இறுதி அதிகாலையில் காலிசெய்துவிட்டதாகச் சொன்னாள், வழக்கம்போல ரெட்டி மனைவிதான் செய்தியைக் கொண்டு வந்தது.

ஊருக்கு போய்விட்டான் போல.

ஒரு வார்த்தை, அலைபேசியில், மின்னஞ்சலில்… சொல்லவே இல்லை… ஆச்சரியமாக இருந்தது.

அதற்கடுத்த வாரம் டீபிஏ குழுக்கூட்டத்தில் ஸ்குரிலுக்கு பதில் வேறு பெயரை அறிவித்தார்கள் (நம்ம ரெட்டிக்கு கண்டிப்பாய் தெரிந்தவராகத்தான் இருக்க வேண்டும்!), பின்னாளில் எங்களால் ஷுகர் (Sugar) என பெயரிடப்பட்ட சீனிவாச ரெட்டி.

-o00o-

போன வருடம் லூப்தன்சாவில் ஊருக்கு போன போது இருந்த ஓரே தமிழ் படத்திற்கு தாவினேன். ஒரு பாட்டு இப்படி ஆரம்பித்தது.

“கும்பிடப் போன தெய்வம், குறுக்கே வந்ததம்மா!”

அடுத்த வரி வருவதற்குள் சுமாரான பணிப்பெண் உணவு கொண்டுவந்தார்.

யாரோ ஒரு புலவர் “மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே” என்று உழவன் பாடுவதைக்கேட்டு அடுத்த வரி என்னவாயிருக்கும் என்று யோசித்தாராமே அது மாதிரி நானும் அடுத்தது என்ன வரி என்று யோசித்துக்கொண்டிருந்தேன் – அந்தப்பெண் என்னைத் தாண்டி பக்கத்து இருக்கைகாரருக்கு உணவு கொடுத்துவிட்டு போகும்வரை.

புலவர் மாதிரியே என்னாலும் “குறுக்கே வந்த தெய்வம் கூடவந்து ஆடுதம்மா” என்ற அந்த மகத்தான அடுத்த வரியை ஊகிக்கவே முடியவில்லை!

ஒரு வழக்கமான கொடுங்குளிர் மாலையில் அபார்ட்மெண்ட் தானியங்கியில் நுழைந்து தளப்பொத்தானை அமுக்கும் போது உள்ளே வந்த நபரைப்பார்த்தபோது அந்த வரி எனக்கு மறுபடியும் நினைவிற்கு வந்தது.

ஆமாம் – நானும் அந்த வெள்ளைக்காரியும் மட்டும் தான் தானியங்கியில்.

அது என்ன வாக்கியம்? ஆ, கையும் களவுமாக பிடிபட்டான்!

ஒரு மிகப்பெரிய நொடி முடிவதற்குள் மெல்லிய புன்னகையுடன் “ஹலோ” என்றாள்.

“ஹலோ தேர்” நானா சொன்னேன்?

“அன்று நான் அப்படி நடந்துகொண்டது தவறுதான்…”

மன்னிப்பு கேட்கும்போது கூட குரல் குறையாமல், தணியாமல் பிரிட்டிஷ்காரர்களுக்கே உரிய அழுத்தக் குரலில்…அதுசரி, மன்னிப்பு கேட்கும்போது குரல் தணியவேண்டும் என்று விதியா என்ன?
இப்போதுதான் கொஞ்சம் நன்றாக அவளைக் கவனிக்க முடிந்தது.

பரம்பரை பரம்பரையாக உருளைக்கிழங்கு தின்ற மதர்ப்பு, சிவப்பு செதில்கள் முகம் பூராவும். உயரம் – அவளைத் தலைகுனிய வைத்த பெருமை என்னைச் சேரும். இரு கைகளிலும் ஷாப்பிங் பைகள்.

அவள் வாரம் நான்கு இரவுகள் அஸ்டாவில் (வால்மார்ட்டின் பிரிட்டிஷ் வடிவம்) வேலை செய்கிறாளாம். பின் மோட்டார் பாதை உணவகங்களில் ஓரிரு இரவுகள் வேலை. சரியான இராப் பிசாசு; எனவே பகலில் நன்றாக தூக்கம் தேவை.

ஸ்குரிலின் பையனின் ஓயாத குதியினால் தூக்கம் நிறைய கெடுகிறது.

கொஞ்சம் பொறுமையாகச் சொல்லியிருக்கலாமே என்று நான் சொன்ன வாக்கியத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் கூட்டினாலும் நாலைந்து மாத்திரை அளவிற்கு மேல் மிகாது. அதற்கே அவளது நீலக்கண்கள் ஒளிர ஆரம்பித்தன.

“எவ்வளவு பொறுமையாகச் சொன்னேன் தெரியுமா? என்னுடைய எந்த ஆண் நண்பனிடமும்கூட இவ்வளவு பொறுமை காட்டியதில்லை… ம் என்னுடைய தெரபி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது…”

“இப்போது கடந்த சில நாட்களாகத்தான் நிம்மதியாக தூங்குகிறேன்”

நாங்கள் இருவரும் எங்கள் தளத்தில் நின்ற தானியங்கியை விட்டு வெளியே வந்து என்னுடைய அபார்ட்மெண்ட் முன்னர் நின்றதை அப்போதுதான் உணர்ந்தேன்!

மீரா கதவைத் திறந்தவள் ஆச்சரியத்துடன் அதிர்ந்துதான் நின்றாள். நான் அவளை இப்படி இதற்கு முன் பார்த்ததில்லை…திருமணத்தின் போது? நாஹ்!

“ஹலோ டார்லிங், அற்புதமான மணம், உங்கள் கறி வாசனை!”

ஈஸ்ட்ஹாமிலில் வாங்கிய அந்த ஒல்லி, காய்ந்த முருங்கைக்காய் சாம்பாராய் இப்படி மணந்து அந்த பரம்பரை எஸ்செக்ஸ்காரியின் மூக்கை கவரும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை!

-o00o-

அதற்கப்புறம் நானும் அந்த அபார்ட்மெண்டை காலிசெய்துவிட்டு ப்ரண்ட்வுட் பக்கம் வீடு வாங்கி போய்விட்டேன். அக்கவுண்டும் மாறியாயிற்று.

மீராவின் பிரசவம் இங்கேயா ஊரிலா என்பதை இன்னும் முடிவு செய்யாத ஒரு அருமையான ஜூலை நேரம்.

டெஸ்கோவில் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். பம்ப்பை அழுத்திக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். பின்னால் ஒரு பெரிய ஜாகுவார் நின்றது, ஏறத்தாழ புதிது. இறங்கியது சாட்சாத் நமது ஸ்குரில்தான்!

“டேங்க் நிரம்பிவிட்டது போல?” என்றான். ஆம், பம்ப்பை அழுத்த முடியவில்லை.

“எங்க இந்தப்பக்கம்?” எனக்கு ரொம்ப பொதுவாக கேட்பதாக நினைப்பு. இந்தப் பக்கம் என்பதற்கு டெஸ்கோ, பிரண்ட்வுட், இங்கிலாந்து இப்படி எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாமாம்!

அவன் நல்ல புஷ்டியாக, ஜெல் தடவி அரை டிராயர் போட்டுக் கொஞ்சம் மாறியிருந்தாலும் அதே கண்கள், அதே மாறாத பாவனை!

“நான் வேறு அக்கவுண்ட் பாறிவிட்டேன்; இல்போர்டில் வீடு வாங்கி விட்டேன்” என்றான்.

அவன் கார் பக்கம் பார்த்தேன். காருக்குள் திருமதி ஸ்குரிலும் தூங்கிக்கொண்டிருந்த நம்ம வால்பையனும்…பையன் வளர்ந்திருந்தது சட்டென்று தெரிந்தது.

அவன் கார் பின்னால் ஒரு பழைய பஸாட் வந்து நின்றது.

“சரி பெட்ரோல் போடவேண்டும்” என்றபடியே போனான்.

மீராவிடம் சொல்லலாம் என்றால் அவள் களைப்பாய் கண்களை மூடியிருந்தாள். பெட்ரோல் வாசனை குமட்டும் போல.

பணம் கொடுக்கும் கவுண்டரில் எனக்கும் முன்னால் இருவர் நின்றிருந்த ஒரு குட்டி வரிசையில் எனக்கு பின்னால் சேர்ந்துகொண்டான், ஆனால் பேசவில்லை.

திரும்ப வந்து காரில் ஏறி உட்கார்ந்தபோது கிளப் கார்ட் அங்கேயே வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. திரும்பப் போய் சிரித்துக் கொண்டே கொடுத்த பாட்டியிடம் நன்றி சொல்லி வரும்போது அவன் அவனது காரில் நான் முன்னேற காத்துக்கொண்டிருந்தான்.

நான் கிளப்பும்போது அவன் தன் கதவைத் திறந்து ஓட்டமான நடையில் என்னை நெருங்குவதை எனக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியில் பின் பார்த்தேன்.

“எனக்கு அதே அலைப்பேசி எண்தான்” என்று நான் முடிப்பதற்குள்

“சொல்ல மறந்துவிட்டேன், செயின்ஸ்பெரியில் இன்று நல்ல சேல் போட்டிருக்கிறான் விடாதே, டாய்லெட் டிஷ்யு, பாசுமதி அரிசி” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

எனக்கு அப்போது தோன்றியதெல்லாம் முன்னாள் உலக வரைபடத்தில் இருந்த முன்னாள் சோவியத் யூனியனும் அதற்காக வீட்டுக்காரரிடம் அழுத ஆயிரத்து சொச்ச பவுண்டுகளும்தான்.

காரை ஸ்டார்ட் செய்தேன்.