இருளும் காமம், நிலங்களின் வழியே

தாகூர் இலக்கிய விருது – சாகித்ய அகதெமிக்கு இணையான அதே அலசல் முறையில் சாகித்ய அகதாமியாலே தேர்ந்தெடுக்கப்பட்டு, ( SAMSUNG ) சாம்சங் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருது தமிழுக்கு முதல் முறையாக யாமம் மூலம் அறிமுகமாகிறது. “ யாமம்” என்கிற தனது நாவலுக்கு தாகூர் இலக்கிய விருது வாங்கியிருக்கும் எழுத்தாளர், எஸ். ராமகிருஸ்ணன்(எஸ்ரா) இலக்கிய உலகத்தின் வெகுஜனசந்தையின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.

‘பயணம் என்பது தூரங்களை கடப்பது மட்டுமல்ல. இடங்கள் வெறும் பூகோள பட்த்தின் புள்ளிகள் மட்டுமல்ல. முடிவு தெளிவற்ற பயணத்தின் ருசி அபரிமிதமானது. மனத்திற்கேற்ப செல்லும் உடலும், திரியும் மனமும் கொண்ட பயணங்கள் தற்காலத்திலும் சாத்தியம்’ – என்பதை எஸ்ராவின் ஆனந்த விகடன் கட்டுரைகள் காட்டின. ஒரு வெகுஜனப் பத்திரிக்கையின் நாடகத்தன்மையை தாண்டியும் அந்த கட்டுரைகளின் ஆன்மா ஒரு பயண இலக்கியத்திற்கு வேறு முகம் கொடுத்தது என்பதை மறுக்க இயலாது.

இலக்கிய சர்ச்கைகளில் இடம் பெறாது எழுத்தில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தும் எஸ்ராவின் ஆளுமை, காழ்ப்புகளற்ற எழுத்துகளிலும் , எந்த அரசியல் கோட்பாடுகளுமற்ற மனிதம் மற்றும் இயற்கை சார்ந்த தளங்களிலும் மட்டுமே ஊர்ந்து செல்கிறது. எப்போதும் அலைந்து திரியும் மனம், இயற்கை முரண் வழியாக மனிதனை பார்க்க முயற்சித்தல் – என்கிற இரு இருப்புகளிடையே இவரது பெரும்பாலன படைப்புகள் பயணிக்க முயற்சிக்கின்றன. இந்தபயணத்தில் .இயற்கையும் கதாபாத்திரங்களாக மாறுவதில் வியப்பேதுமில்லை.

எஸ்ராவின் எழுத்தாளுமையும், கதைப்பொருளும் கவனத்துக்குரியவை. யதார்த்தம், கனவுலகம், மாயா யதார்த்தம், மரபான கதை சொல்லும் உத்தி, உபகதைகள் என எல்லா எழுத்து வகைகளிலும் இவரது படைப்புகள் உண்டு. அடுத்த தளத்திற்கு படைப்புலகை எடுத்து செல்லும் சோதனை முயற்சி கொண்டவை. இலக்கிய உலகத்தின் வாசக பரப்பை அதிகப் படுத்தும் அத்தனை காரணிகளையும் தன்னுள் அடக்கியவை. விவாதத்திற்குரியவை. ஆகவே கறாரான விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டியவை.

வெயிலை குடித்த மக்களின் வரைவை தனது பழைய நாவலில் சொல்ல முனைந்த எஸ்ராவின் இந்த நாவல் இரவை குடிக்கிறது.

பொதுவாகவே எஸ்ராவின் படைப்புலகத்தில் இயற்கை கொஞ்சம் துருத்திக் கொண்டுதான் இருக்கும். அதில் – இருள் கசிந்து வழிகிறது. வெயில் வாட்டுகிறது. நிலவு வந்து போகிறது. சூரியன் எங்குமே எரிந்து கொண்டிருக்கிறான். மனித மனம் ஓயாது பேசிக்கொண்டேயிருக்கிறது மெளனத்திற்கு எதிராக. மெளனம் அமைதியாய் அதை கேட்டுக்கொண்டிருக்கிறது. மரங்கள் நிழல் தந்தும், வெயில் உறிஞ்சியும் சந்தோசமாய் காய்ந்து கொண்டிருக்கின்றன. காமம் மெல்லிய குவளை தண்ணியாய் கால் நனைத்து போகிறது.

இதை சொல்ல எஸ்ராவிற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இயற்கை உணர்ச்சி கதாபாத்திரங்களாகின்றன. இயற்கை சட்டை அணிந்து கொள்கிறது. தத்துவஙகள் சட்டை அணிவதில்லை.

ஆனால் கதையின் பங்கு ரொம்பவே குறைவோ என நினைக்குமளவிற்கு வர்ணனைகளுக்கும், வார்த்தைகளுக்கும், வரலாற்றிற்கும் இடமளிக்கும் இவரது கதைகளில் இடையே தொட்டுக் கொள்ள கொஞ்சம் கதையும் இருக்கிறது. நாவலில் அப்படித்தான் இருக்க வேண்டும் என விவாதிக்கவும் செய்யலாம்.

யாமம் இருளாய் – இருளின் வழியே எழுத்து

இருள் யாமத்தின் ஒரு கதாபாத்திரம்.

சொல்ல சொல்ல வற்றாத கதைகள் இரவிடம் இருந்து கொண்டேதானிருக்கிறது போல. இருள் வெறுமனே சூரியன் இல்லாத நேரத்து பூமியல்ல. அதற்கும் மனித உணர்வுகளின், உணர்ச்சிக்கும் மாபெரும் பங்கிருக்கிறது. இருளை நோக்கி தியானிக்க அழைப்பு விடுக்கிறார் சித்தர் இயேசுபிரான்.

வேதங்கள் இருட்டை புகழ்கின்றன. இருள் அறிவியல் தாண்டி உணர்வோடு ஒன்றி விட்ட ஓன்று. ஆக இருளும், காமமும் எப்போதும், மானுட குலம் இறப்பையும், இருளையும் புரிந்து கொள்ளும் வரைக்கும் பாடுபொருளாக, கதைப்பொருளாக இருந்து கொண்டேயிருக்கும்.

பகலில் வாழ்ந்து விடுகிறோம். ஆனால் இரவை கழிக்க வேண்டியிருக்கிறது. அகோரிகள் இரவை களிக்கிறார்கள். சாதரண மாந்தர்களுக்கு இரவை கடப்பது காமத்தை கடப்பதென்பது போல கடினமாகத்தான் இருக்கிறது. இரவு நமக்குள் நிறையவற்றை எழுப்பிவிடுகிறது. ஆகவேதான் இரவுமும், காமமும் எப்போதும் முக்கிய கதைப்பொருளாகின்ற்ன.

மனிதனின் அடிப்படை உணர்வும், இயற்கையின் ஒரு பக்க முகமும் கொண்ட இவைகள் மானுட குலத்தின் வளர்ச்சியில், தாழ்ச்சியில் பெரும் பங்கேற்கின்றன. “ This is the high time, man has to evolve from unknown of sex and death “என்கிறார் பகவான் ஓசோ.

நம்மில் பிரபஞ்ச அணுக்கள் இருப்பதனால் நம்மை உருவாக்கியதில் இருளுக்கும் பெரும் பங்கு உண்டு. நம் உணர்வுகளில் இருளின் தாக்கம் நிறைய உண்டு. அது சரி, தம சோமா ஜோதிர் கமயா. எது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வழி நடத்தி செல்லும்?.

இருளே , இருள் வழியே. வழி நடத்தி செல்லும். இருளே இருளை கடக்க உதவுகிறது. பயத்தாலே பயத்தை வெல்வது. இருட்டின் சகல குணாதிசியங்களோடு இயைந்து கொள்வது. இருட்டை உண்டு இருட்டோடு கலந்து கொள்வதே வெளிச்சத்திற்கு இட்டு செல்லும். இருளை எதிர்கொள்வதை பொறுத்தே ஒளியின் அளவு அமைகிறது

இருளும், ஓளியும் இணைந்த சாம்பல் பூத்த உணர்வுகளின் (Grey) வரைபடமாய் உண்மையை வரையும் கதையே இலக்கியத்தின் உச்சத்தை நோக்கி எழுகிறது.
அத்தகைய கிரே கதாபாத்திரங்களை ஓரளவு தன்னுள் பிரதிபலிக்க முயற்சிக்கிறது யாமம்.

யாமம் – இடமாய்

யாமம் மதராச பட்டிணத்தின் கதையை பேசுகிறது. வெறும் இடத்தின் கதையல்ல.
வெறும் வரலாற்று கதையல்ல. புராணக்கதையல்ல. அரசர்களின் கதையல்ல.
இடத்தின் கலாச்சாரக் கதை

ஒரு நகரம் என்பது வெறும் இடமல்ல. தேசப்படத்தின் புள்ளியல்ல. அது ஒரு நகரும் கதை. வாழும் உயிர். அதன் கலாச்சாரம், அதில் ஏற்படும் மாற்றங்கள், எல்லாவற்றையும் மீறி அடி நீரோட்டமாய் ஓடும் அந்த கலாச்சாரத்தின் சாரம், அதை தாங்கி நிற்கும் மக்களின் ஆத்மாவின் தொகுப்பு – என எழுந்தும், வீழ்ந்தும் வாழ்கின்றன நகரங்கள்.

ஓவ்வொரு நகரமும் தன்னுள் மிகப்பெரிய கதையை கொண்டுள்ளன. மனிதர்களை போலவே அவைகளது வாழ்க்கையும்(சரித்திரமும்) அளவிட முடியாத நிரந்தரமற்ற தன்மையையும், ஏதோ மாயத்தேவதைகளின், யட்சிகளின் ஆளுகைக்குட்பட்டது போலவும் வளர்ந்தும், வீழ்ந்தும் காற்றில் உரு மாறியும் உருக்கொள்கின்றன.

நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நகரங்களின் கதைகள் வெறும் வருடக் குறிப்புகள் மட்டுமல்ல. ஆனால் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகள் அப்படியான பிம்பத்தை தான் தருகின்றன. நமது வரலாறு, கலாச்சராத்தை, மரபின் நீட்சியை ஏனோ கை கழுவி விட்டது. அதன் நினைவுலகளை மறுபடி எழுப்பி ஓரளவு நிற்க வைப்பது இலக்கியம் மட்டும்.

அப்படி புனையப்பட்ட கதைகள் தமிழுக்கு புதிதல்ல. திஜாவின் எழுத்தில் தஞ்சையும், கிராவின் எழுத்தில் கரிசல் காடும் – இது போல பல கலாச்சாரங்கள் எழுத்துக்களால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவைதான். சரித்திரங்கள் வழியான புனைவும் தமிழில் பிரசித்தம் தான். சாண்டில்யனும், பொன்னியின் செல்வனும் இன்றும் வாசிக்கபடுகிறது என்பது வாசிப்புலகின் அதிசயங்களில் ஒன்று.

உணர்வுகளும், உணர்ச்சிகளும், சூழலும் கட்டுண்டு கிடக்கிற அவனின் கட்டுறு மனப்பாங்கை நாம் எத்தனையோ புதினங்களில் படித்திருக்கிறோம்.மனித அடிப்படை உணர்வுகள் பசி, காம்ம், துரோகம், குரோதம் இச்சை, கோபம், ஆகியவைகள் பேசும் நாவல்களும் தமிழில் உண்டு.

ஆனாலும் யாம்ம் மேற்சொன்ன எல்லாவற்றையும் – இடத்தையும், கலாச்சார நீரோட்டத்தையும், மனித அடிப்படை உணர்ச்சிகளையும், வரலாற்றோடு இணைத்து, இயற்கையோடு பிசைந்து தன்னகத்தே விழுங்கி அதிலிருந்து முன்னேழ முனைகிறது.

மனிதனைப் போல நகரத்திற்கும் விதி இருக்குமா என்ன ? பாக்கமும், பட்டிகளும், கேணிகளும் குளங்களும் நிறைந்த இந்த நகரத்தின் தலைவிதி எப்படியெல்லாம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற வரலாற்றை யாமம் புனைவில் குழைத்து தருகிறது.

s_raஇந்த நகரத்திலிருந்துதான் இந்திய வரைபடம் வரைய கருவி பொறுத்தப்படுகிறது. எல்லையற்று கலாச்சாரத்தால் இணைத்திருந்த ஒரு தேசத்தை எல்லை போட்டு பிரிக்கிறான் மிலேச்சன். அவனது போர் தளவாடங்களை எளிதில் கொண்டு செல்லும், போக்குவரத்து வசதிக்காகவே இவையனைத்தும் செய்யப்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லக்கனி. அப்போதுதானே எந்த புரட்சி வந்தாலும் சிப்பாய்களும், போர்க் கருவிகளும் உடனே கலவர இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். கலவரத்தை முளையிலே கிள்ளி எறியமுடியும். போடப்பட்ட ரயில் தண்டவாளங்களும் இதற்குத்தானே.

மதராச பட்டிணம் அப்படித்தான் மாறுகிறது.

இயற்கையின் கொடை காடு. நகரங்களின் எதிர்முனை. இடம் மட்டுமல்ல மனிதர்களும். இடமும் மனிதர்களும் மாறி மாறி ஒன்றின் மீது மற்றது தன்னியல்பை தேய்த்து கொள்ளும்தானே. சீனத்திலிருந்து வரப்போகிற சின்ன செடியோ, இலையோ பெரிய வர்த்தகமாகி தன் தலையெழுத்தே மாறிப்போகும் என அந்த காட்டிற்கு தெரியுமா என்ன ? ஒரு காடும் மாறிப்போகிறது. யாமம் – காடு தேயிலை காடாகி பணம் கொழிக்க போகும் ஒரு உப கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இடம் – எல்லாம் மாறும்.

அந்தக் கால சூரியன் மறையாத மாநகரமான இலண்டனின் தெருக்களும் இந்த நாவலில் நடந்து செல்கிறது. பனி, ஓபரா நடனம், தேம்ஸ் நதிக்கரை, உழைப்பாளிகளை உறிஞ்சும் ஆதிக்க வர்க்கம், உலகத்தை செல்வத்தையெல்லாம் உறிஞ்சி எந்த குற்றணர்வும் அற்ற மனிதர்களும், அதன் மூலமே செழிக்கும் மேட்டுமை கலாச்சாரம் கொண்ட- நாம்அறியாதஇலண்டன். சொல்லித்தரப்படாதலண்டன். கற்பனையில்மட்டும்கட்டப்பட்டகதையல்ல. வரலாறும் இணைந்திருப்பதால் புனைவிற்கான உழைப்பும், கனமும் அதிகம். தனது கலாச்சாரத்தின் தோல்கள் உறிக்கப்பட்டு ஒருவன் அதோடு ஓன்றிப்போகிறான். அதோடு கூடிக் குழைந்து ஜோதியில் கலக்க வந்தவன் கலகக்காரனாகிறான்.

இடம் – யாரையும் மாற்றும்.

ஆக ஒரு நகரம் மாறும், மாற்றும்.

பஞ்ச கதைகள் :

யாமத்தில் வாழ்வில் அலகிலா, அளவிலா, விளிம்பிலா விளையாட்டின் அத்தனை உணர்ச்சிகளும் எஸ்ராவின் இயற்கை அவதானிப்புகள் வழியே கதாபாத்திரங்களாக உருப்பெருகின்றன.

இந்த மாற்றத்தை ஐந்து கதைகள் வழியே தருகிறது நாவ்ல் :

அ) இந்தியாவில் காலூன்றும் கிழக்கிந்திய கம்பெனியர். பிரான்சிஸ்டேயும், அவனது பிரிய வேசை கிளாரிந்தாவும்

ஆ) யாமம் என்கிற காமம் தூண்டும் வாசனை திரவியம் தயாரிக்கும் அப்துல் க்ரிமின் குடும்பம்.

இ) சொத்துக்காக சண்டையிட்டு, எல்லாவற்றையும் இழந்து மலையை மட்டும் திருப்பி கேட்டு தனது பிரிய வேசையான எலிசபெத்தோடு காட்டில் வாழும் வாழ்க்கை கிருஸ்ண கரையாளரின் வாழ்க்கை

ஈ) லண்டனுக்கு சென்று படிக்கும் கணித மேதை திருச்சிற்றம்பலத்தின் மெல்லியதாய் மாறும் குணச்சித்திரங்கள். அவனது மனைவி தனது கணவனின் அண்ணனோடு கூடும் உறவும், குழந்தையும்

உ) நாயின் பின்னே போகும் சதாசிவ பண்டாரம், யாரோ ஒரு வீட்டில் நாய் படுக்க, இவரும் அவளிடம் படுத்து எழுந்து குழந்தை பிறந்து பின்னர் எல்லாம் விடுத்து பட்டினத்தார் வாழ்க்கை தொடருதல்.

சிதறுண்ட கதாபாத்திரங்கள், தொபுக்கென்று கொட்டிக் கலைத்த சீட்டுக் கட்டுகள் போல. எல்லாவற்றையும் இணைப்பது எது ? இயற்கை, இரவு, காமம், சென்னையின் சரித்திரம், கொஞ்சம் வரலாறு, நிரந்தர தன்மையற்ற மனதின், சூழலின் மாறும் சூத்திரங்கள்.?

எல்லாமே தான்.

மொழியின் அழகியல், நாவல் நுட்பம், வரலாற்று ஆதாரங்கள் தேய்த்து வருகிறது. எல்லாவற்றையும் ஒழுங்காய் நெய்வது எளிதல்ல. எதோ ஒன்று மற்றதை முந்த முயற்சிக்க துருத்திக் கொண்டு நிற்கவில்லை.

யாமம் – எழுப்பும் கேள்வி ?

வெறும் வரலாற்று நாவலை மேலே சொன்னபடி புதிய பார்வையின் புதினமாய் தருவது மட்டுமின்றி மானுட வரலாற்றில் மாறாது மனிதனோடு போட்டியிடும் அடிப்படை உணர்வுகளையும் இந்த நாவல் பேசுகிறது. அதன் வழியே வாழ்க்கையே கேள்வி கேட்கிறது.

இடங்கள், நகரங்கள் மாறினாலும் மனிதன் மாறாமல் தன் மனதோடும், காமத்தோடும் போட்டியிட்டுக்கொண்டேயிருக்கிறான். அந்த வினா வேட்கை நாவலின் வாசிப்பு வாழ்நாளை, சிரஜ்ஜீவித்தன்மையை கூட்டும்.

பல நூறாண்டுகளை சுமந்து காமமும், பசியும் மனிதனை போர்த்திக் கொண்டே வருகின்றன. அதுவும் காமம் என்பதும் யாமம் போல ஒரு வாசனைதான் போலும்.

காமத்தை நாவலில் ஓவ்வொரு கதாபாத்திரமும் ஓவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறார்கள். மனித வளர்ச்சியே இயற்கையை புரிந்து கொள்ளுதலும், தன்னை (பிரம்மத்தை) முழுமையாக புரிந்து கொள்ளுதலுமே என்கிற வாதம் வேத வழக்கத்தில் உண்டு.

அப்துல் கரீமிற்கு, நகரத்தையே தனது யாம வாசனையால் கிறங்கடித்தவனுக்கு ஆண் பிள்ளை பேறில்லை. அவனது மூன்று பெண்டாட்டிகள் அவன் இருந்த போது காம வறுமையில் வாடினார்கள். செத்த பின் பொருளாதார வறுமை. ஓவ்வொரு ஆண் வாரிசு வழியாகவும் தனது யாம சூத்திரத்தை மாற்றும் ஆண்டவன் அருள் அவனுக்கு ஏன் வாய்க்கவில்லை. தனக்கு ஆண் வாரிசு இல்லாத சுமையை மறக்க குதிரை பந்தயத்தின் பின்னால் தனது புதை குழியைதேடுகிறான்.

சதாசிவ பண்டாரம், பட்டினத்தார் வழி போக நினைக்கிற ஓற்றைப் பிள்ளை. விளையும் பயிர் முளையிலே தெரிந்து எல்லாம் துறந்து, நீலகண்டனாய் ஒரு நாயை உருவகித்து, அது போன வழியே போய் ஜீவன் முக்தி தேடும் நாடோடி. நாய் தான் அவருக்கு தட்சிணா மூர்த்தி. அறிவை தேடி ஓடும் மானுட மரபின் கண்ணி அவர்.

அதனாலென்ன ? அவரும் தாண்டி போக வேண்டிய காமப் பாதை ஓன்று வருகிறது. ஒருபெண்ணோடு படுத்து, குழந்தை பெற்று, பாசம் மிகுந்து குழந்தையை காணும் கணத்தில் நாய் அதை விட்டொழித்து முன்னே நடக்கிறது. பாசமனைவி, பெத்த குழந்தையை காணாமல் வலியோடு முன்னேறுகிறார். புத்தனின் சாயலில்.

இது காம வலியல்ல. உறவின் எண்ணப் பதிவுகள் அறுப்பதும் வலிதானே. இப்படித்தானே சஞ்சித கர்மாக்கள் ஓட்டிக் கொள்கின்றன. எதற்காகவோ வந்து அதையறியாமல், இன்னும் நிறைய சேர்த்துக் கொண்டு அதை கழிக்கவே ஜன்மாக்கள், ஆகவே நீ முற்ற, முற்றும் துற என்னும் நமது சித்த மரபின் துளி சதாசிவ பண்டாரம்.

இவர்கள் மானுட சகஜ வாழ்க்கையின் எதிர் முனைகள். விதி சமைப்பவர்கள். சாதாரண மக்களைதங்களை நோக்கி சதா இழுத்துக் கொண்டேயிருப்பவர்கள். இவர்களுக்கு காம்மும் அது கொடுக்கும் உறவுகளும், உணர்வுகளும் பெரும் சுமை. இதுவும் கடந்து போகும் என்கிற உத்தம நிலையின் உதாரணங்கள் இவர்கள்.

இது போலவே பத்ரகிரியும், திருச்சிற்றம்பலமும், கிருஸ்ண கரையாளரும் – காமத்தின் வழியே உறவின் மேன்மையை உணர்ந்து கொள்கிறார்கள். சிலருக்கு அது ஏணியாகிறது. சிலருக்கு பாம்பாகிறது. ஓவ்வொரு உணர்வும் வாழ்க்கையில் ஓவ்வொரு கட்டத்திலும் விளையாடும் விளையாட்டுகளை எத்தனை கதை சொன்னாலும் அடக்கி விட முடியுமா என்ன ?

புலன்களின் குறைபாடுகள் அறிதலின், உணர்தலின் குறைபாடுகளாகிறது. ஆறு அறிவு அலுத்துப் போகிறது. புலன்களால் புசிப்பதை, அறிவதை விட நிறைய மானுடமனதிற்கு தேவையாயிருக்கிறது.

இயற்கையை இருப்பதை அறிந்து கொள்வதன் மூலமே, அது நம்முள் ஏற்படுத்திய சுவடிகளை சுத்தப்படுத்துவதன் மூலமே, அறிந்து கொள்வதன் மூலமே அறிதல், கடத்தல் சாத்தியமாகிறது.

ஆனால், புலன்கள் மனிதனை கீழ் இழுக்கின்றன. அறியும் அவா, அவன் புலன் தாண்டிய ஏதோ ஓன்று அவனை மேல் இழுக்கிறது.

ஏழு மரங்களை தாண்டி பாய்ந்ததாம் ராம பாணம் ஏன் ஏழுமரம்? . ஏழு உலகங்களைத் தாண்டியும் ஏதோ இருக்குமா என்ன? இருக்கலாம். ஏழு சரீரங்கள் புற உலகத்தில் இருக்குமாம் அதையும் தாண்டியும் எதேனும் இருக்கலாம். ஏழு சரீரங்களையும் தாண்டி இருப்பதை எப்படி அறிவது.

அந்த ஏழு உலகங்களில் ஒன்று இருள். அதன் விளைவாய் காமம் ( ஆசை ) மற்றும் பயம். அந்த விளையாட்டின் புனைவுத்தெறிப்பே யாமம்.

நிலம், வரலாறு, அங்கு நர்த்தனமிடும் மனித மனம், அது கூட்டு சேர்ந்து உருவாக்கும் அக மற்றும் புற கலாச்சாரம், அதன் மூலம் நாவலாசிரியன் எழுப்புகிற கேள்வி, அதன் விடை தேடி பயணக்கின்ற பாத்திரங்கள் வழியான விடைப்புள்ளிகள் என பலவற்றை கொண்டு சரியாய் நெய்யப்பட்ட புதினங்கள் வெகுவே. யாமம் அந்த இடத்தில் மெளனமாய் தனது இருக்கையை போட்டுக் கொள்கிறது.

ஆசிரியரின் மற்ற நாவலகளை விட கொஞ்சம் மேம்பட்ட முறையில், வாசகனை கடுப்பேத்தாத மொழி, ஓரளவு தெளிவான கால வரையறைகள், எல்லையற்ற பக்க சுகந்திரம் நாவலில் உண்டு என்றாலும் – நறுக்குத் தெரித்த நடை, அலைக் குமிழியில் அமரும் பட்டாம் பூச்சியின் பயணம் போன்று உறுத்தாத நாவல் உள்நடை, மூளை கசக்காத எளிய கட்டமைப்பு, அவற்றின் மூலமே எழும் மானிட தரிசனம் போன்றவை இந்த நாவலுக்கான முத்திரைகள். எஸ்ராவின் எல்லா எழுத்துக்களை போலவும் இதிலும் தெரிகிறது கடின உழைப்பில் எழுகிற படைப்பின் அத்தனை அம்சங்களும்.

அதீத வர்ணனைகளும், தொகுக்க பயன்படுத்திய எழுத்து நுட்பங்களும் அதிகமானதால், வார்த்தைகளும் மெளனமாகும் இலக்கிய உச்சியை தொடும் முன்னே கதை கீழறங்குகிறதே என்கிற மெல்லிய குறை தாண்டியும் யாமம் உங்களுக்கும் பிடிக்கலாம்.

ஆனால் மேற்சொன்ன காரணங்களால் எந்த கதாபாத்திரமும் காலம் தாண்டி பேசப்படும், வாழும் யோக்கியதையை, வலுவை இழந்துவிடுகிறார்களோ என யோசிக்க வைக்கிறது. யாம்ம் படிக்க, உங்களுக்குள்ளும் நீங்கள் படிக்கலாம்.