20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 13

ஃபோவிசம் (FAUVISM)
வனவிலங்கு

ஃபோவிசம் (Fauvism) என்று குறிக்கப்படும் ஓவிய வழி/பாணிக்கு பாயின்ட்லிசம் (Pointillism), பின் இம்ப்ரெஷனிசம் (Post-Impressionism) இரண்டு பாணிகளுமே அடித்தளமாக அமைந்தன. ஆனால், அதில் பழங்குடிக் கலையின் தாக்கமும், இயற்கையிலிருந்து விலகுதலும் முதன்மை அணுகுமுறையாக இருந்தன. கலைஞனின் நவீன எண்ணங்களுக்கு வடிகால் கொடுத்த முதல் இயக்கமாக பாஃவிச பாணியைக் குறிப்பிடுகிறார்கள். 1901-1906 களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரிஸ் நகரில் தொடர்ந்து பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியக் காட்சிகளில் வின்சன்ட் வான் காஃப் (Vincent Van Gogh), பால் கூகென் (Paul Gauguin) மற்றும் பால் செஸான் (Paul Cezanne) போன்ற ஓவியர்களின் படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்றன. ஓவியங்கள் படைப்பதில் காணப்பட்ட அவர்களின் அச்சமற்ற அணுகுமுறையும், வண்ணங்களைக் கையாண்ட நுட்பமும் இளைய ஓவியர்களிடையே பெரும் தாக்கத்தைத் தோற்றுவித்தன. அவர்கள் மரபுத் தளையிலிருந்து விடுபட அவை பயன்பட்டன. புதியபாணி ஓவியங்களைப் படைக்கும் சோதனைகள் நிகழத் தொடங்கின. வண்ணங்கள் அங்கு கோலோச்சின. “நான் காண்பவற்றைப் பதிவு செய்வதைவிட அக்காட்சி என்னுள் ஏற்படுத்தும் உணர்வுகளை வண்ணங்களின் வழியாக வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன்” என்று கூறிய ஓவியர் வான் காஃப் அவர்களை மிகவும் ஈர்த்தார். போஃவிச இயக்கத்தினர் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றி அதற்கு மேலும் வலுச் சேர்த்தனர்.

1905 இல் பாரிஸ் நகரில் சலூன் -டொ-ட(ம்)ன் (Salon d`Automne) என்னும் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியக் காட்சியை நவீனபாணி ஓவியத்தின் வருகை என்பதாகவும், முன்னோடிகள் என்று அறியப்படும் அவாங் கார்ட் ((avant garde) இயக்கத்தின் வளர்ச்சி விரிவாக்கம் என்றும் கலை வல்லுனர் குறிப்பிடுவர் . இயற்கையிலிருந்து விலகிய வண்ணக்கலவைகள் அவ்வோவியங்களில் இடம் பெற்றன. நூதன வண்ணக் கோர்வைகளும், நளினம் தவிர்த்த திண்மையான கோடுகளும் மேலோங்கியிருந்தன. ஓவியர்கள் வண்ணத்தை உணர்வுகளுடனேயே தொடர்புப்படுத்தினர். வண்ணங்கள் அவற்றின் முந்தைய மரபு சார்ந்த குணங்களை விலக்கி, ஒளியைப் பிரதிபலிக்காமல் தாமே புதிய ஒளியாக ஒளிரவும் தொடங்கின.

இயக்கத்தை ஓவியர் மத்தீஸ் (Matisse) வழிநடத்திச் சென்றார். வ்ளாமினிக் (Vlaminick), டெஹ்ரான் (Derain), மார்கெ (Marquet), ருவோ (Rouault) ஆகிய ஓவியர்கள் அவ்வியக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். என்றாலும் படைப்பது என்னும்போது அவர்கள் தனித்தே இயங்கினர். இயக்கத்தினர் தங்களது கொள்கை அல்லது கோட்பாடு என்று எவ்விதப் பிரகடனமும் செய்ய வில்லை. மறுமலர்ச்சிக் காலத்தின் வழியிலிருந்த ஓவியக் கலையை, நவீன பாணிப் பாதைக்கு அறிமுகப்படுத்தியது அந்த இயக்கம்தான்.

1905 இல் நடந்த ஓவியக்காட்சியைக் காணநேர்ந்த கலைப் பிரியர்களுக்கு அது கடும் அதிர்ச்சியை அளித்தது என்பது மிகையல்ல. விமர்சகர் லூயி வாஸெல் (Louis Vauxcelles) காட்சியரங்கின் மையத்தில் இருந்த ஒரு இளைஞனின் மரபுவழிச் சிற்பத்தைச் சுற்றிலும் சுவற்றில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்தபின், ‘வனவிலங்குகளின் நடுவில் சிக்கிக் கொண்ட மனிதன்’ என்று குறிப்பிட்டார் (Like a Donatello among the wild Beasts). காட்சியை விரும்பாத விமர்சகர்கள் அதைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். பயனாக பெயர் நிலைத்துவிட்டது.

இந்த இயக்கம் குறுகிய காலமே இயங்கியது. அதன் தொடக்கமாக இருந்த ஓவியர் ஹென்றி மத்தீஸ் (Henri Matisse-1869/1954) மரபு சார்ந்த ஓவியப் பாணியிலிருந்து விலகி, தனக்கான ஒரு புதிய பாணியை உருவாக்கும் முயற்சியில் இயங்கிய காலகட்டத்தில்தான் இவ்வியக்கமும் துடிப்புடனிருந்தது. 1908 இல் அதன் பல உறுப்பினர்கள் இயக்கத்திலிருந்து விலகி க்யூபிஸம் பாணிக்குச் சென்று விட்டனர். குறுகிய காலமே உயிர்த்திருந்தாலும், 20 ஆம் நூற்றாண்டின் நவீன படைப்புப் பயணத்துக்கு முகமன் கூறியபடி இவ்வியக்கம் உலா வந்தது. இதன் தாக்கத்தில் ஜெர்மன் நாட்டில் தோன்றிய ‘டி ப்ருக்கா’ (Die Brucke), ‘தி ப்ளூ ரைடர்’ (The Blue Rider) போன்ற அமைப்புகள் கலையுலகில் பெரும் தாக்கத்தையும் புதுமையும் ஏற்படுத்தின. அவைபற்றிப் பின்னர் பார்ப்போம்.

க்யூபிஸம் (Cubism)
கலையில் கூம்பும் கோண வடிவங்களும்

ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை என்று பல்வேறு கலைத்தளத்திலும் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும், மிகச்சிறப்பாகப் பேசப்படும் ஒரு புரட்சி கரமான படைப்புத்தியை ‘பாவ்லோ பிகாசோ’ (Pablo picasso) ‘ப்ராக்’ (Broque) என்னும் இரு ஓவியர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககால கட்டத்தில் நடைமுறைக்குக் கொணர்ந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஐரோப்பிய கலாச்சார அறிவு ஜீவிகளுக்கு ஆப்பிரிக்கா, மைக்ரொனேசியா [ (Micronesia) நான்கு தீவுகள் ஒருங்கிணைந்த தனி நாடு நியூ கினியா தீவுக்கு வடக்கில் உள்ளது] , அமெரிக்கா நிலப் பழங்குடியினரின் கலை, கலாச்சாரம் பற்றின அறிமுகம் நிகழ்ந்தது. அவர்களின் பாசாங்கற்ற, வெளிப் படையான கலைப் படைப்புகள் ஐரோப்பியக் கலை உலகிற்கு முற்றிலும் ஒரு புதிய கலை வழியைப் பற்றின பாங்கை எடுத்துரைத்தன. 1890 களின் இறுதியில் ஓவியர் பால் கோகின் (paul gauguin), ஹென்ரி மத்தீஸ், பாவ்லோ பிகாசோ  போன்ற இளம் கலைஞர்களை வழிநடத்திச் சென்றார். அந்தப் பழங்குடியினரின் கலை வெளிப்பாடு அவர்களை வெகுவாக உலுக்கியது. ஹென்ரி மத்தீஸ் , பாப்லோ பிகாசோ சந்திப்பு என்பது 1904 இல் நேர்ந்தது. இருவருமே அந்தநேரத்தில் ஆப்பிரிக்க பழங் குடியினரின் படைப்புகளின் அழகிலும், வலிமையிலும் ஈர்க்கப் பட்டிருந்தனர்.

1907 இல் பாவ்லோ பிகாசோவின் படைப்புகளில் கிரீஸ், இப்ரியா, ஆப்பிரிக்கா பழங்குடியினரின் படைப்புத் தாக்கம் -குறிப்பாக முகமூடிகள்- அழுத்தமாக வெளிப்பட்டது. அவரது க்யூபிசம் பாணிக்கு அவற்றைத் தொடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அவரது ‘லெ தெம்வொசெல் டாவினோன்’ (“Les Demoiselles d`Avignon”) என்னும் ஓவியம் இந்த உத்தியின் முதல் முயற்சி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் ஒரு உருவத்தை (அல்லது வடிவத்தை) ஒரே சமயத்தில் பல்வேறு கோணங்களில் ஒரே ஓவியத்தில் பதிவு செய்தார். அவற்றை ஒருங்கிணைத்தார். இவ்வகைப் படைப்புகள் காண்போருக்கு அரூபமாகவும், வடிவியல் சார்ந்த கூட்டமைப்பில் அமைந்ததாகவும், குழப்பம் தருவதாகவும் இருந்தபோதும், உண்மையில் நிஜ உருவங்களையே பிரதிபலித்தன. அப் படைப்புகளில் உருவங்கள் தட்டையாக வடிவமைக்கப்பட்டு (flattend) காண் போரின் பார்வையிலிருந்து மறைந்திருக்கும் பகுதிகளும் பதிவு செய்யப்பட்டன.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து ஓவியர்கள் உருவங்களை தட்டைப்பரப்பில் ஒளியின் உதவிகொண்டு கிட்டிய முப்பரிமாணத்தைத் தீட்டி அவை நிஜம்போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள். இதற்கு மாற்றாக க்யூபிசம் பாணியில் ஓவியங்கள் இரு பரிமாணத் தோற்றம் கொண்டதாக தீட்டப்பட்டன. உருவங்களுக்கும் வெளிக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஒரு புதிய சித்தாந்தத்தை அது தோற்றுவித்து, மேலைக் கலாச்சாரப் போக்கையே நிரந்தரமாக அது மாற்றியமைத்துவிட்டது.

பிகாசோ, ப்ராக் இருவருமே பாரிஸ் நகர்புறத்தில் அமைந்துள்ள  மோமார்ட்(ர்) (Montmartre) பகுதியில் வாழ்ந்தனர். இருவரும் ஒருங்கிணைந்து ஒரே கூரையின்கீழ் ஓவியங்களைப் படைத்தனர். இதனால் ஒருவரை ஒருவர் பாதித்தனர். ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் பயணித்தனர். அவ்விதம் இவ்விருவரும் இணைந்து பயணித்து வெற்றிகண்ட உத்திதான் க்யூபிசம் பாணி. இவர்களுடன் பின்னர் ஸ்பெயின் நாட்டு ஓவியர் ஹ்வான் க்ரீஸ்(Juan Gris) உம் இணைந்து கொண்டார். முதல் உலகப் போர் தொடங்கும் வரை இது தொடர்ந்தது. பிரான்ஸ் குடிமகனான ப்ராக் படையில் சேரநேர்ந்தது. போரில் தலையில் கடுமையான காயத்துடன் உயிர்பிழைத்தார். பின்னாளில் அவர் பிகாசோவுடனான தமது அனுபவத்தை “ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்ட இரண்டு மலையேறிகள்” என்று நினைவு கூர்கிறார்.

இந்த இருபரிமாண அணுகுமுறை உத்தி என்பது இந்தியா, சைனா போன்ற கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாளப் பட்டு வந்த ஒன்றுதான் என்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது.

க்யூபிசம் பாணியின் வளர்ச்சியை  அனலிடிக் க்யூபிஸம் (Analytic cubism),  சிந்தெடிக் க்யூபிஸம் (Synthetic cubism) என்ற இரு கிளைகளாக வல்லுனர் பகுக்கின்றனர்.

அனலிடிக் க்யூபிஸம் (Analytic cubism)

1908 /1912 களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த ஓவிய சோதனையை ‘அனலிடிக் க்யூபிஸம்’ என்று கலை வல்லுனர் அடையாளப் படுத்தினர். ஓவியர்கள் இயற்கைத் தோற்றங்களை நுட்பமாக ஆராய்ந்து அவற்றின் அடிப்படை வடிவமைப்பை மட்டும் கொடுத்து,  இருபரிமாணம் கொண்டவையாக ஓவியங்களைக் கட்டமைத்தனர். அவற்றில் ஒளிரும் வண்ணங்களுக்கு பதிலாக சாம்பல், வெளிறிய நீலம், சந்தன மஞ்சள் போன்ற வண்ணங்கள் ஒளிர்வற்றதாக இடம்பெற்றன. உருளை, கோளம், கூம்பு போன்ற வடிவியல் வடிவங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. பிகாசோ, ப்ராக் இருவரது படைப்புகளிலும் இருந்த ஒருமைப்பாடு காண்போரைக் குழம்ப வைத்தது.

ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் கலைப்படைப்பு உத்திதான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்போர் ஒரு சாரார். இன்னொரு சாரார், ஓவியர் பால் செஸான் படைத்த பிந்தைய ஓவியங்களின் இரண்டு கூறுகள் தான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்று கூறுவார். அவை  செஸான் தமது ஓவியங்களில் வண்ணப் பரப்பை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றில் வண்ண பேதத்தால் புதிய கட்டமைப்பை தோற்றுவித்தது; மற்றது, அவற்றில் உருவங்களுக்கு உருளை, கோளம், கூம்பு போன்ற ஜியோமிதி வடிவங்களாக மாற்றுருவம் கொடுத்தது

சிந்தடிக் க்யூபிஸம் (Synthetic cubism)

கித்தானில் தூரிகைகொண்டு வண்ணங்களைத் தீட்டுவது என்பதிலிருந்து விலகி, பல்வேறு உத்திகளை ஒருங்கிணைத்து ஓவியங்கள் படைப்பது என்பது க்யூபிசம் பாணியின் இரண்டாவது வழி வளர்ச்சியாகும். 1912-19 களுக்கு இடைப் பட்ட காலகட்டத்தில் பிகாசோ, ப்ராக் இருவரும் இதனை முன்னெடுத்துச் சென்றனர். ஓவியங்களில் செய்தித்தாள் துண்டுகள், கெட்டி அட்டை, தகரத் தகடு போன்றவை ஓவியரின் கற்பனைக் கேற்றவாறு பொருத்தப்பட்டன. வண்ணங் களைத் தூரிகைகொண்டு தீட்டுவதிலிருந்து விலகி, உலராத வண்ணத்தில் சீப்பைக் கொண்டு வடிவங்களை வரைவதும், மணலைப் பசைகொண்டு கித்தானில் பரப்பி அதன்மீது வண்ணம் தீட்டுவதும், எழுத்துக்கள் தமது அடையாளம் இழந்து ஓவியத்தின் பகுதியானதும் அப்போது நிகழ்ந்தது.

கொல்லாஜ்(Collage) – 1912

‘அனலிடிக் க்யூபிஸம்’ பாணியினொரு கிளைதான் கொல்லாஜ் (Collage) பாணியும். 1912 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரம் பெரும் எண்ணிக்கையில் மக்களின் பயன்பொருள்களையும், அவற்றின் பிரதிகளின் உற்பத்தியையும் சந்தித்தது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன. எங்கும் சுவரொட்டிகளும், நவீன விளம்பரப் பலகைகளுமாக நகரின் முகத்தையே புதியதாக்கிக் காண்பித்தன. மக்களின் மனதில் அவை புதியதொரு கலைத் தளத்தை காட்டிக்கொடுத்தன.

ஓவியர் பிகாசோ தமது படைப்புகளில் அந்த அனுபவத்தைப் புதைத்தார். ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வேறு பொருள்களை ஒரே ஓவியத்தில் இணைத்து ஒரு நூதன அனுபவத்தைத் தந்தார். ‘ஸ்டில் லைஃப் வித் சேர்-கேனிங்’ (“Still life with Chair-Caning”) என்னும் தலைப்பிடப்பட்ட ஓவியம்தான் இந்த உத்தியின் தொடக்கம். ஓவியத்தின் பரப்பில் ஒரு துணித் துண்டு ஒட்டப்பட்டது. இடது மேற்புறத்தில் ‘Jou’ என்னும் எழுத்துகள் இடம்பெற்றன. செய்தித் தாளின் துண்டு, விளம்பரத்தாளின் கிழித்தபகுதி போன்றவை ஓவியத்தின் அங்கங் களாயின.

பிகாசோவின் சோதனை முயற்சியை ப்ராக்கும் தமது ஓவியங்களில் பயன் படுத்தினார். ஆனால், அதில் சிறு வேறுபாடு இருந்தது. செய்தித் தாள்கள் பல்வேறு உருவங்களாக வெட்டப்பட்டு கித்தானில் ஓவியமாக மாறியது. அது ‘பபியேர் கோல்’ (Papier colle) என்று அழைக்கப்பட்டது.

சுதந்திரத் தனிமொழி அரூபம்

Puteaux Group (Orphism)/Section d’e Or (Golden Section)- 1912-1914

க்யூபிசம் பாணியிலிருந்து கிளைத்துத்தழைத்த இயக்கம்தான் பிடோ குழு (Puteaux Group). பாரிஸ் நகரின் எல்லையில் பிடொ பகுதியில் ஓவியர்களும் விமர்சகர்களும் தங்கி ஒரு குழுவாகச் செயற்படத் தொடங்கினர். ஓர்ஃபிஸம் (Orphism) என்றும் அது குறிக்கப்பட்டது.

இந்த இயக்கம் 1912இல் பாரிஸ் நகரில் காலரி லா பொய்ட்டீ (Galerie La Boetie) என்னும் காட்சியகத்தில் பார்வைப்படுத்தப்பட்ட ஓவியக் காட்சியுடன் தொடக்கம் கண்டது. காட்சியின் தொடக்க உரையை ஓவியர் கியோமா அப்போலினேர் (Guillaume Apollinaire) வாசித்தார். இயக்கத்தின் மையமாக ஓவியர் ஹோபேர்ட் டெலூனே (Robert Delaunay) செயற்பட்டார். ஓவியர் ழாக்(ட்) வியோன் (Jacques Villon) குழுவின் பெயரைத் தேர்வுசெய்தார்.

அந்த நேரத்தில் க்யூபிசம் பாணியில் அறிவு ஜீவி பார்வை கூடிய, வண்ணங்கள் விலக்கப்பட்ட ஓவியங்கள்தான் படைக்கப்பட்டன. ஆனால் ஓர்ஃபிஸம் பாணியில் மிளிரும் வண்ணங்கள் கொண்ட விதத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான ஓர்ஃபியஸ் (Orpheus) என்னும் கிரேக்க புராண நாயகனிடம் ஈர்ப்புக் கொண்ட அவர்கள் தமது படைப்புகளில் அதன் அனுபவத்தைக் கொணர்ந்து, வரண்டு இருந்த க்யூபிசம் பாணியில் உயிரூட்ட முனைந்தனர். அவர்களுக்கு ஜியோமிதி சார்ந்த வடிவம், அதன் அளவுகள், அவை மனதில் எழுப்பும் அதிர்வுகள், இயற்கையுடன் அவை ஒன்றியிருத்தல் போன்றவை ஓவியப்படைப்பில் ஒரு புதிய கற்பனையை கொணர உதவின. தொடக்கத்தில் புறவுலகம் சார்ந்த கருப்பொருட்களைக் கொண்ட ஓவியங்களைப் படைத்த அவ்வோவியர்கள் (ஓவியர் ராபெர்ட் டெலூனே எஃபெல் கோபுரத்தை (Eiffel Tower) பல கோணங்களில் ஓவியமாக்கினார்) பின்னர், முற்றிலும் அரூப வடிவ ஓவியங்களைப் படைத்தனர். அவை பின்னாளில் முதலில் பிரெஞ்ச் ஓவியர்கள் படைத்த அரூபப் பாணி படைப்புகள் என்று இன்றையக் கலை வல்லுனர் களால் போற்றப்படுகின்றன.

குழுவின் உறுப்பினர்கள்

ராபெர்ட் டெலூனே (Robert Delaunay), ஃபெர்னான் லெஜெர் (Fernand Le’ger), மார்ஸ்ஸெல் டூஷாம்(ப்) (Marcel Duchamp) , ப்ரான்சிஸ் பிக்காபியா (Francis Picabia) ஃப்ரான்ஸ் குப்கா (Franz Kupka)

இந்த இயக்கம் உடைய முதல் உலகப்போர் காரணமாயிற்று. என்றாலும், பாவுல் க்ளீ (Paul Klee), ஃப்ரான்ஸ் மார்ச் (Franz Marc) போன்ற ஜெர்மன் ஓவியர்களைப் பெரிதும் கவர்ந்த அது அங்கு செரிவூட்டம் கண்டது. பாரிஸ் நகரில் வசித்த அமெரிக்க ஓவியர்கள் மோர்கன் ரஸ்ஸெல் (Morgan Russel), ஸ்டான்டன் மாக்டொனால்டு ரைட் (Stanton Macdonald-Wright) இருவரும் அமெரிக்காவில் (USA) அவ்வியக்கம் பரவி நிலைக்கக் காரணமானார்கள்.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்.]

01-fauvism02-fauvism03-fauvism04-fauvism05-cubism06-cubism07-cubism08-cumism09-orphism10-orphism11-orphism12-orphism
[/DDET]

(தொடரும்)