மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம்

“ஆனால் இந்திய நாவல்களில் வரும் மகத்தான பெண் கதாபாத்திரங்களின் துயரமும் தியாகமும் அபூர்வமானவை என்று எனக்கு பட்டது.இந்திய இலக்கியத்துக்கு என ஏதேனும் தனித்தன்மை இருக்க முடியும் எனில் அது இதுதான் – மண்ணளவு பொறுமையும் கருணையும் கொண்ட சக்தி வடிவங்களான பெண்கள்.” ஜெயமோகன் இவ்வாறு தன்னுடைய “கண்ணீரைப் பின்தொடர்தல்” என்னும் புத்தகத்தின் முன்னுரையில் எழுதுகிறார். அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் ரித்விக் குமார் கடக் (ঋত্বিক (কুমার) ঘটক) இயக்கிய ‘மேகே தாகா தாரா'(Meghe Dhaka Tara- মেঘে ঢাকা তারা) என்னும் திரைப்படத்திலும் வருகிறாள். இந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இந்திய திரைப்படங்களில் மகத்தான ஒன்றாக இருக்கிறது. இந்த படம் பல மாற்றங்களுடன் தமிழில் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்றும், தெலுங்கில் ‘அந்துலேனி கதா’ என்றும், ஹிந்தியில் ‘தபஸ்யா’ என்றும் எடுக்கப்பட்டது. பலருக்கு இந்த கதை தெரிந்திருக்கும். ஒரு குடும்பத்தின் பாரம் முழுவதும் வேலைக்குப் போகும் ஒரு பெண் சுமக்கிறாள். அவள் வாழ்க்கை எப்படி விரிகிறது, அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, முடிவில் அவள் கதி என்ன என்பதை ஆராய்கிறது இந்த படம். கடக் எடுத்த படங்களில் ஆக சிறந்ததாக இந்த படம் கருதப்படுகிறது. எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு உண்டு.

இந்த படத்தை பற்றி ஆராய்வதற்கு முன் நாம் கடக் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.1950களில் வங்கம் பல உயர்தர கலைஞர்களை இந்திய திரைப்பட துறைக்கு அளித்தது. சத்யஜித் ரே, மிருணாள் சென், பிமல் ராய், சலில் சௌத்ரி வரிசையில் கடக் முக்கியமானவர். கடக் 1925இல் அப்பொழுதைய கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். அவர் குடும்பம் அகதிகளாக கல்கட்டாவிற்குப் புலம் பெயர்ந்தனர். இதனால் அவரின் பல படங்கள் அகதிகளின் நிலைமைகளைப் பற்றிப் பேசுகின்றன. இவர் 1952இல் நாகரிக் என்ற தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். இது வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பற்றிப் பேசிய படம். 1958இல் இவர் திரைக்கதை எழுதி பிமல் ராய் இயக்கிய ஹிந்தி படம் ‘மதுமதி’ மிக பெரிய வெற்றி அடைந்தது. 1960 திலிருந்து வருடத்திற்கு ஒன்றாக ‘மேகே தாகா தாரா’, ‘கோமல் காந்தார்’, ‘சுபர்ணலேகா’ என்று மூன்று படங்கள் எடுத்தார். இவை மூன்றுமே உயர்தரப் படங்களாக இருந்தாலும், ‘கோமல் காந்தார்’ மற்றும் ‘சுபர்ணலேகா’ வணிக ரீதியில் தோல்வியுற்றன. இதனால் கடக் 1970 வரை வேறு படம் எடுக்கவில்லை. சில காலம் பூனாவில் உள்ள Film and Television Institute of India (FTII) இல் ஆசிரியராக பணி புரிந்தார். அப்பொழுது மணி கௌல், ஜான் ஆபிரகாம், குமார் சஹானி போன்றவர்கள் மாணவர்களாக இருந்தார்கள். அவர்கள் மேல் இவர் பாதிப்பு நிறையவே இருந்தது. 1970இல் பங்களாதேஷ் தயாரிப்பாளர் ஒருவருக்காக ‘திதஸ் ஏக் நதிர் நாம்’ (திதஸ் என்று பெயர் கொண்ட ஒரு நதி) என்னும் அருமையான படத்தை இயக்கினார். ‘ஜுக்தி தக்கோ ஆர் கப்போ’ அவர் இயக்கிய கடைசி படம். 6 பிப்ரவரி 1976 அன்று காலமானார். (தகவல்: விக்கிபீடியா)

கடக் படங்கள் சமூகத்தின் அன்றைய நிலை பற்றியும், அகதிகளின் நிலை பற்றியும், அன்றைய குடும்பங்களின் நிலையைப் பற்றியும், இந்த சூழலில் தனிமனிதன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால்களைப் பற்றியும் பேசின. எந்த சமரசமின்றியும் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவர் படங்கள் யதார்த்தவாத படங்கள் என்று சொல்லலாம். இவர் எல்லா படங்களிலும் இசையை வெகு நேர்த்தியாகப் பயன்படுத்தியிருப்பார். வெகு அருமையான ஹிந்துஸ்தானி மரபிசை பாடல்களும், ரபீந்திர சங்கீத் பாடல்களும், வங்க கிராமிய இசை பாடகளும் இவர் படங்களில் நமக்கு கேட்கக் கிடைக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் வெகுவாக அறியப்படவில்லை என்றாலும், மறைந்த பிறகு அவர் பெயர் மெதுவாக பரவ ஆரம்பித்தது. அவர் இன்னும் பல இயக்குனர்களுக்கு ஒரு ஆதர்ச இயக்குனராக இருக்கிறார் என்றால் மிகையாகாது. இவரின் எல்லாப் படங்களும் குறுந்தகடுகளில் நமக்கு இப்பொழுது கிடைக்கின்றன.

இந்த படத்தின் மேன்மையை நாம் பல கோணங்களிலிருந்து ஆராயலாம். கடக் கதாபாத்திரங்களை எப்படி வடிவமைக்கிறார் என்பதை முதலில் கவனிப்போம். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். கதாநாயகியை ‘பொறுமையும் கருணையும்’ கொண்டவளாக வடிவமைக்க வேண்டும். ஆனால் அதில் ஒரு அபாயம் இருக்கிறது. கதாநாயகி உயிருள்ள ஒரு பாத்திரமாக இல்லாமல், பொறுமைக்கும் கருணைக்கும் ஒரு சின்னமாக நின்றுவிடுவாள். ஒரு ஆதர்சப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பம் அங்கு இருக்குமே தவிர ஒரு சதை நரம்பு கொண்ட பெண் இருக்க மாட்டாள். கடக் இதை அருமையாக தவிர்க்கிறார். இந்த கதாநாயகி தனக்குத் தன் குடும்பத்தாலும், சமூகத்தாலும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்க மறுக்கிறாள், வேண்டாவெறுப்புடன் தான் தன் கடமைகளை செய்கிறாள், தானும் ஒரு பெண், தனக்கும் பல ஆசைகள் உண்டு என்பதை அவள் பிரகடன படுத்திக்கொண்டே இருக்கிறாள். இதனாலேயே அவள் ஒரு சாதாரணப் பெண்மணியாக நமக்குத் தோன்றுகிறாள். நாமும் அவளுக்காக கண்ணீர் வடிக்கிறோம், அவளுடைய நிலையை கண்டு பரிதாபப்படுகிறோம். நமக்கு அப்பொழுதுதான் புரிகிறது. ஆதர்சப் பெண்கள் என்று எவரும் இல்லை. சாதாரண பெண்கள்தான் நம்முடைய சுயநலத்திற்காக ஆதர்சப் பெண்மணிகளாக ஆக்கபடுகிறார்கள்.

அதேபோல் தான் அம்மா கதாபாத்திரத்தையும் அணுகுகிறார் கடக். நம் படங்களில் அம்மாவே இருப்பதில்லை. ஒரு அம்மா எப்படி இருக்க வேண்டும் என்ற நம் ஆசை தான் திரையில் இருக்கும். அம்மா என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ஒரு திரை இலக்கணமே இருக்கிறது. அந்த காலங்களில் அழுதுகொண்டு இருந்த அம்மாக்கள், இந்த காலத்தில் மகனுடன் / மகளுடன் ‘mall’ சென்று அவர்களுக்கு தோழி போல் இருக்கும் அம்மாக்கள். இந்த படத்தில் வரும் அம்மா, சராசரி பெண்மணி போல் நடந்துக்கொள்கிறார். தன் பிள்ளைகளுக்குள் ஒரு பெண் மீது அதிக பாசம் வைத்து மற்றொரு பெண்ணை சுரண்டுகிறார். ‘நமக்கு ஒன்றும் கையாலாகது’ என்று இருந்துவிடாமல், தன்னுடைய செல்லப் பெண்ணிற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகத் தானே காய்களை நகர்த்துகிறார். சுருக்கமாக சொல்லப்போனால், இவர் அம்மாவும் மாமியாரும் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கிறார். பல பெண்களுக்குள்ளும் இவ்விரண்டு உணர்ச்சிகளும் இருக்கின்றன அல்லவா?

எல்லாப் பாத்திரங்களையும் ஒரு பக்கமாகச் சாய விடாமல் சமன் செய்யும் கடக், கதையின் போக்கையும் இவ்வாறே சமன் செய்கிறார். கதையின் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால்: நீதா என்னும் ஒரு பெண் தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறாள். வேலையை இழந்துவிட்ட தந்தை, பாடகனாக முயற்சி செய்துக்கொண்டிருக்கும் தம்பி, படித்துக்கொண்டிருக்கும் இன்னொரு தம்பி, இந்தச் சூழ்நிலையை பற்றி கவலை படாமல் தன் சுயநலத்தையே பார்த்துக்கொள்ளும் ஒரு தங்கை, அந்த தங்கை மேல் அதீத பாசம் கொண்ட அம்மா என்ற இருக்கிறது அந்த குடும்பம். இந்தியப் பிரிவினை போது கல்கட்டாவிற்குப் புலம் பெயர்ந்த குடும்பம். எல்லோரும் நீதாவின் சம்பாத்தியத்தில் வாழ்கிறார்கள், அவள் கல்யாணம் செய்துகொள்ள நினைக்கும் அவள் காதலனை அவள் தங்கை கல்யாணம் செய்துக்கொள்கிறாள், அவள் செய்த தியாகங்களுக்குப் பலனாக காச நோய் தொற்றிக்கொள்கிறது, அவள் தம்பி ஒரு புகழ்பெற்ற பாடகனாகவும், குடும்ப பாரத்தை ஏற்றுக்கொள்ளவரும் தருணத்தில் அவள் ஷில்லாங் மருத்துவமனையில் இருக்கிறாள். தம்பி அவளை பார்க்க போகும்பொழுது தான் மறுபடியும் எல்லோருடனும் வாழவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் அது முடியாமல் போகிறது.

இது போன்ற கதைகள் ஒரு பக்கம் சாயும் அபாயம் உள்ளது. சோதனை மேல் சோதனை நாம் போதுமடா சாமி என்று சொல்லியும் திரையில் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் கடக் அவ்வாறு செய்யாமல், சுகங்களையும், துக்கங்களையும் சேர்க்கும் விகிதத்தில் சமநிலை குன்றாமல் பார்த்துக்கொள்கிறார். அதற்காக அவர் தம்பியின் கதாபாத்திரத்தை உபயோகித்துக்கொள்கிறார். அக்கா தம்பிக்கு நடுவில் இருக்கும் பந்தம் வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். அவர் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு அளவு கடந்த பாசம் இருக்கிறது. தம்பிக்குத் தான் வேலைக்கு சென்று சம்பாதித்து அக்காவின் பாரத்தை குறைக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அவன் ஒரு பெரிய பாடகனாக வரவேண்டும் என்பது அக்காவின் கனவு. அவன் ஒரு நல்ல பாடகன். அவன் குருவோ இன்னும் சில நாட்கள் கற்ற பிறகே பாடகனாக முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். குரு பேச்சையும் தன் அக்காவின் ஆசையையும் தட்டமுடியாமல் அவன் தவிக்கிறான். தன்னை சார்ந்து வாழும் மனிதர்களின் சுயநலத்திற்கு மத்தியில் தன் மீது உண்மையான பாசம் கொண்டிருக்கும் தம்பி இருக்கிறான் என்பது அவளுக்கு ஆறுதலான விஷயமாகிறது. அவனுடன் சேர்ந்து பாடுவதும், அவனுடன் அவர்களின் இளவயது ஞாபகங்களை பகிர்ந்து கொள்வது போன்ற விஷயங்களினால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அதே போல் அவள் தன்னுடைய காதலனுடன் இருக்கும் தருணங்கள் அவளுக்கு உவப்புடயதாக இருக்கின்றன. இது பலரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பல துன்பங்களுக்கிடையே வாழும் மனிதர்களுக்கு இது போன்ற சிறு சிறு இன்பங்கள் தான் ஒரே ஆறுதல் போல்!!

சமநிலை குன்றாமல் இருக்க கடக் இசையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். இசை இந்த படம் முழுக்க வியாபித்திருக்கிறது. தம்பி ஒரு மரபிசைப் பாடகன் என்பதனால் நமக்கு பல ஹிந்துஸ்தானி மரபிசை பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஹம்சத்வனி, மியா-கி-மல்ஹார் போன்ற ராகங்கள், இந்த படத்திற்காக செய்யப்பட்ட பாடல்கள் என பல விதமான இசையை நாம் கேட்கிறோம். இதனாலேயே படம் முழுவதும் சோகமாக இல்லாமல் பல இடங்களில் நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

மேலே நான் எழுதியதை படிக்கும் பொழுது கடக் ஏதோ மெனக்கெட்டு இதையெல்லாம் செய்தார் என்று தோன்றும். ஆனால் கடக் ஓர் மஹா கலைஞன். சிறந்த கலைஞர்கள் தங்கள் செயல்முறையை அருமையாக மறைத்துவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்தால் தவிர நமக்கு அவர் செயல்முறை பிடிபடாது. அதேபோல் இந்த படம் வெகு இயற்கையாக இருக்கும். கடக் இதெயெல்லாம் யோசித்தா செய்தார் என்ற சந்தேகமும் வரும். ஏதோ ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து, அவர் வீட்டில் ஒரு கேமிராவை வைத்துவிட்டரோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இயற்கையாகக் காட்சிகள் ஓடும். எந்த ஒரு இடத்திலும் இயக்குநர் காய்களை நகர்த்துகிறார் என்ற எண்ணமே நமக்கு வராது. ‘Neo Realistic Cinema’ என்று அழைக்கப்பட்ட சினிமாவின் உச்சம் இந்த படம் என்று கூறலாம்.

ஒரு இயக்குநரின் செயல்திறனால் மட்டும் ஒரு படம் ‘classic’ ஆக ஆவதில்லை. ஒரு படம் காலத்தை கடந்து நிலைத்து நிற்பதற்கும், செவ்வியல் படம் என்ற அங்கீகாரம் பெறுவதற்கும், அது முன் வைக்கும் வாழ்க்கை தரிசனம் முக்கியமானதாகிறது. இந்த படம் மூலம் கடக் நமக்கு என்ன ஒரு வாழ்க்கை தரிசனத்தை கொடுக்கிறார்? இதை பல கோணங்களில் நாம் அணுகலாம். முதலாவது இந்த படம் பெண்கள் பற்றியது. அவர்கள் மேல் சமூகம் வைக்கும் பாரங்கள், அவர்கள் அதை உதறிவிட்டுப் போக முடியாத சூழ்நிலை. இந்த படம் பல குணாதிசயங்களை பற்றி பேசுகிறது என்கிறார் புகழ் பெற்ற இயக்குநர் குமார் சஹானி. கதாநாயகி நீதா பெண்களின் பொறுமைக்கும் கருணைக்கும் குறியீடாகவும், அவள் தங்கை காமத்திற்குக் குறியீடாகவும், அவள் அம்மா குரூரத்திற்குக் குறியீடாக இருக்கிறார்கள் என்கிறார் சஹானி. எனக்கு கடக் படங்களில் பெண்கள் கஷ்டங்களையே சந்தித்தாலும்,  அவர்களிடம் வாழ்க்கையைப் பற்றிச் சரியான புரிதல் இருப்பதாகவே தெரிகிறது. ஆண்கள் மட்டும் வாழ்கையின் மாறும் தடங்களை புரிந்துக்கொள்ள முடியாமல் விழிக்கிறார்கள். இந்த படத்தில் ஆகட்டும், அவருடைய வேறு படங்களான ‘நாகரிக்’, ‘சுபர்ண ரேகா’ஆகட்டும், இதுவே நமக்கு காணக் கிடைக்கிறது.

இன்னொரு கோணத்தில் அணுகினால் இந்த படம் குடும்பம் என்னும் அமைப்பைப் பற்றிய படம் என்று கூறலாம். கடக் குடும்பம் என்னும் சிக்கலான அமைப்பை ஆராய்கிறார். ஒருவனை அல்லது ஒருத்தியை குடும்பத்துடன் கட்டிப் போடும் நூல் எது?  அந்த பெண்ணால் குடும்பத்தை மீறி ஏன் செல்ல முடியவில்லை? குடும்பம் என்னும் அமைப்பு ஒருவருக்கு கொடுக்கும் பாதுகாப்பு என்ன, சந்தோஷங்கள் என்ன, அதில் உள்ள சமரசங்கள் என்ன, அதில் உள்ள குரூரம் என்ன, இப்படிப் பல தளங்களில் குடும்பத்தையும், அதில் உள்ள சிக்கல்களையும், அரசியலையும் ஆராய்கிறது இந்த படம். கடக்கின் பல படங்கள் குடும்பம் என்ற அமைப்பை பற்றியே இருந்திருக்கின்றன. பல இந்திய காவியங்கள், சிறந்த திரைப்படங்கள் எல்லாம் குடும்பத்தைப் பற்றியே பேசுகின்றன என்பதினால் இதில் ஒன்றும் ஆச்சரியபடுவதற்கு இல்ல.

இந்தப் படத்தை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். இந்தப் படம் ஒரு தனிமனிதனைப் பற்றிய படம் என்றும் பார்க்கலாம். கதாநாயகி தன் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்திற்காகவே உழைக்கிறாள். ஆனால் கடைசியில் காசநோய் வந்தவுடன், அதே குடும்பம் அவளை ஒதுக்கி வைக்கிறது. ஷில்லாங் மலைகள் சூழ அவள் தம்பி பக்கத்தில் இருக்க, தனக்குத் தன் காதலன் முன்னொரு காலத்தில் எழுதிய ஒரு கடிதத்தைக் காச நோய் முற்றிவிட்ட அவள் படிக்கிறாள். “நான் வாழ வேண்டும், நான் வாழ வேண்டும்” என்று அவள் தம்பியிடம் கதறுகிறாள். தம்பி கையலாகாதவனாக, என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறான். இந்திய சினிமாவில் இந்த அளவிற்கு என் மனதை எந்த காட்சியும் தொட்டதில்லை. இந்த காட்சியின் மூலம்தான் கடக் வாழ்க்கையைப் பற்றிய தன் கேள்வியை முன் வைக்கிறார். வாழ்கையின் அபத்தத்தைப் புரிந்துக்கொள்ள முயல்கிறார். ஒருவன் அல்லது ஒருத்தி ஒரு கொள்கைக்காகவோ, பிறருக்காகவோ தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்கிறாள். ஆனால் அவர் தியாகம் அர்த்தமற்ற ஒன்றாக போய்விட்டால்? மனிதர்களின் சுயநலமோ, அல்லது மாறும் காலமோ இவர்களின் உழைப்பை எல்லாம் மறக்கடித்துவிட்டால்? இது வரலாற்றில் பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. இது போன்ற தருணங்களில்தான் வாழ்க்கையின் அபத்தத்தை மனிதன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல், ஒரு கொள்கைப் பிடிப்பு இல்லாமல் வாழ்வது கடினம். அதே சமயம் ஒரு கொள்கையுடன், ஒரு நம்பிக்கையுடன் வாழ்ந்து, அதற்கு வேண்டிய தியாகங்களை செய்தும் நாம் வேண்டாதவர்களாக ஆகிவிட்டால்? இது பெரிய கொள்கைகளுக்கு மற்றுமல்ல, சிறு சிறு மனித உறவுகளுக்கும் பொருந்தும். இந்த கேள்வியைத்தான் இந்தப் படம் கேட்கிறது. இந்தக் கதாநாயகியின் தியாகத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா அல்லது அது அபத்தமானதா? ஆனால் நாம் எல்லாம் பாசம், அன்பு, கடமை போன்ற கயிற்றினால் கட்டப்பட்டவர்கள் அல்லவா? அந்த பெண் வேறு என்ன தான் செய்திருக்க முடியும்? கண்ணதாசன் எழுதியது போல் “மனிதனின் இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்”!! படம் ஆரம்பிக்கும் பொழுது கதாநாயகியின் செருப்பு அறுந்து விடுகிறது. அதை சரி செய்ய காசு இல்லாமல் தன் சேலையை சற்று கீழே இறக்கி அறுந்த செருப்பை மறைத்து நடக்கிறாள். கடைசிக் காட்சியும் இதே. ஆனால் கதாநாயகி இடத்தில் வேறொரு பெண். வாழ்க்கை எப்பொழுதும் போல் சுழல்கிறது!! கேள்விகள் இருந்தபடியே இருக்கின்றன.

கடக்கின் இந்த படம் ஜப்பானிய இயக்குநரான ஓஸுவின் (Ozu)  ‘Tokyo Story’ க்கு நிகரானது என்று கூறும் சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ‘Tokyo Story’ உலகின் மிக உன்னத படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. அதே உலகத் தரத்தில் உள்ள படம் ‘மேகே தாகா தாரா’. ஆனால் ஓஸுவிற்கு கிடைத்த அங்கீகாரம் கடக்கிற்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஓஸுஎன்றே இல்லை, இந்திய இயக்குநர்களான சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம் கடகிற்குத் தன் வாழ்நாளில் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு சில காரணங்களை நாம் ஊகிக்கலாம். முக்கியமானதாக அவர் படங்களில் உள்ள ‘இந்திய தன்மை’. இவர் படங்களை ‘Neo Realism’ என்ற வட்டத்துக்குள் வைத்தாலும் அதில் எந்த ஒரு அயல் நாட்டு இயக்குநரின் தாக்கமும் நாம் காண முடியாது. அவர் ஒரு ‘Original’. அவரது அழகியல் இந்திய மனம் சார்ந்தே இருந்திருக்கிறது. அவர் இந்திய வணிக சினிமாவின் எல்லா உத்திகளையும் உபயோகித்துக் கொண்டார். மனதை மயக்கும் இசை ஆகட்டும், முக்கியமான தருணங்களில் பாடல்கள் ஆகட்டும், உணர்ச்சி பொங்கும் காட்சிகளாகட்டும், சில இடங்களில் மிகை நடிப்பு ஆகட்டும், கடக் இவைகளைப் பயன்படுத்த தயங்கியதில்லை. இதனால் கூட வெளி நாட்டாருக்கு அவரை அணுக கடினமாக இருக்கலாம்.

அது அப்படி இருக்கும் பொழுது இந்தியர்கள் இந்த படத்தை மீள் கண்டுப்பிடிப்பு செய்தபடியே இருக்கிறார்கள். ‘Passion For Cinema’ என்னும் வலைத் தளம் (www.passionforcinema.com) இந்தியாவின் ஆகச் சிறந்த இருபது படங்களை தேர்ந்தெடுக்குமாறு தன் வாசகர்களை கோரியது. இதில் ‘மேகே தாகா தாரா’ முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடக்கின் இந்த படத்தை பார்த்துவிட்டு இது எப்படியெல்லாம் வேறு மொழிகளில் மாற்றப்பட்டுள்ளது என்று பார்த்தல் நமக்கு கடக்கின் பெருமை புரிந்துவிடும்!! மற்ற இயக்குநர்களுக்கு நம் உணர்ச்சிகளை இயக்குவதே குறிக்கோளாக இருக்கிறது. எப்படி நம்மைச் சிரிக்கவைக்கலாம், எப்பொழுது சிரிக்க வைக்கலாம், எப்படி கை தட்ட வைக்கலாம், எப்பொழுது கைக்குட்டையை எடுக்க வைக்கலாம் என்பதில் குறியாக இருப்பார்கள். கடக் பார்வையாளரை குறி வைத்து படம் எடுப்பதில்லை. உங்கள் உணர்ச்சிகளை இயக்குவது அவர் லட்சியமல்ல. அவர் வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகள் கேட்கிறார், அதற்கு பதில்களை தேடுகிறார். அந்த தேடலின் பொழுது உங்களையும் கூட்டி செல்கிறார். நீங்களும் அவரும் வேறல்ல. இருவரும் ஒரே பயணத்தை மேற்கொண்டவர்கள். இந்த தேடல் தான் கடக்கை இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர் ஆக்குகிறது. அதனாலேதான் அவை வெளிவந்தபோது தோல்வியை தழுவினாலும், காலத்தை வென்று இன்றும் நமக்கு அர்த்தமுள்ள படங்களாகவே இருக்கின்றன. கடக் என்ற கலைஞன் என்றும் அழியமாட்டான்.

One Reply to “மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம்”

Comments are closed.