மெலமீன் – நடந்தது இதுதான்

2007 ஆம் ஆண்டு திடீரென்று மெலமீன் பற்றிய சர்ச்சை உலகெங்கும் பரவலாகக் கிளம்பியது. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாய்களும் பூனைகளும் கடைகளில் கிடைக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுப்பொருளை உண்டு கடுமையாக பாதிப்படைந்து திடீரென்று இறந்து போயின.  கலப்படம் செய்யப்பட்டது என்பதை அறியாமல் அவற்றை வளர்த்தவர்கள் கொடுத்ததால் வந்த தீவினை. சில மாதங்களுக்குப் பின் மெலமீன் கலப்படம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான பால்மாவால் ஏகப்பட்டக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதும் பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததும் உலகெங்கும் நாளிதழ்களில் செய்தியாக வந்தன.

மெலமீன் கலப்படம் செய்யப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்ட பலவித தின்பண்டங்கள், பால்பொருள்கள் ஆகியவற்றைத் தயாரித்த நிறுவனங்களின் பெயர்கள் நாளிதழ்களில் வெளிவந்தன.

வீடுகளில், உணவகங்களில், பல வண்ணங்களில் ஒரே நிறமாகவோ பலவண்ணங்ளுடன் பூக்கள், வண்ணக்கோலங்கள் வெவ்வேறு வடிவுருவங்கள் கொண்டதாகவோ அழகழகான சாப்பிடும் தட்டுகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் போன்றவற்றைப் பல அளவுகளில் பிளாஸ்டிக்கைப் போன்ற வெளித்தோற்றம் கொண்ட பொருள்களைப் பார்த்திருப்போம். கண்ணாடி, பீங்கான் முதலியவற்றைப் போல உடையும் அபாயம் அவ்வளவாக இல்லாத பிளாஸ்டிக் (நெகிழி) போலவும், ஆனால் அதைவிட உறுதியாக இருக்கும் தட்டுகளையும் பிற பொருள்களையும் கவனித்திருப்போம், பயன்படுத்தியும் இருப்போம். சாதாரண பிளாஸ்டிக் தட்டைக்காட்டிலும் விட காத்திரமாக இருக்கும், இது பிளாஸ்டிக்கால் ஆனது அன்று , மெலமீன் என்ற பொருளால் ஆனது.

தட்டு மட்டுமன்று, பெரிய, சிறிய கிண்ணங்கள், தம்ளர்கள், சாப்பிடும், பரிமாறும் கரண்டிகள், உணவுகளைச் சேமிக்க உதவும் பெரிய மூடிபோட்ட பாத்திரங்கள் என்று பல உருவங்களில் மெலமீன் அவதாரம் எடுத்துள்ளது.

வணிக நோக்கில் இவை மேலும் பரந்த வரவேற்பு பெற குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில், அவர்களுக்கேற்ற வடிவுருவுகளில், பிடித்தமான உருவளவுகளில், அவர்கள் விரும்பும் கேலிச்சித்திர படங்கள், அவற்றின் கதாபாத்திரங்களின் உருவப்படங்களுடன், சின்னச்சின்னப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட சாப்பிடும் தட்டுகள், குட்டிக் கிண்ணங்கள், தின்பண்டங்களுக்கான குறுந்தட்டுகள், சாப்பிடும் கரண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பல பெயர்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்பில் குழந்தைகளுக்கான திரைப்படங்களில் வரும் கதாபாத்திரக் காட்சிப்படங்களுடன் இப்பொருள்கள் சந்தைக்கு வருகின்றன. மெலமைனின் தரத்தையும், அதில் அச்சாகும் சித்திரத்தின் பரபரப்பு மதிப்பையும் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மெலமீன் அடிப்படையில் ஒரு வித பிளாஸ்டிக்தான். சமையலறை மேடைகள், அலமாரி கதவுகள் இவற்றின் மேல்புறத்திற்கும், மேசைகள், நாற்காலிகள் தயாரிப்பிலும் மெலமீன் பயன்படுத்தப்படுகிறது.

பாத்திரங்கள், நாற்காலி, மேசை முதலிய பொருள்களில் பயன்படுத்தப்படும் மெலமீன் ’பிசினு’க்கும், நச்சுத்தன்மை கொண்ட உணவு கலப்படப்பொருளான மெலமைனுக்கும் உள்ள வேறுபாடு அதன் பல்படியாக்கல் செயல்முறையில் உள்ளது.

மெலமீன் என்பது என்ன? என்னென்ன உருவங்களில் நாம் அதைக் காண்கிறோம். கொஞ்சம் அறிவியல் நோக்கோடு பார்ப்போம். மெலமீன் ஒரு கரிம வேதிப்பொருளாகும்.

இதன் வேதியியல் குறியீடு C6H6N6 ஆகும். 1834 ஆம் ஆண்டு யூஸ்ட்டஸ் ஃபான் லீபிக் (Justus von Liebig) என்ற ஜெர்மானிய வேதியியலர் இதனை உருவாக்கினார். வெப்பமும் அழுத்தமும் ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ளபோது ஃபார்மால்டிஹைட், யூரியாவுடன் இணைந்தால் மெலமீன் ஃபார்மால்டிஹைட் உருவாகிறது. 350 (C) பாகையில் உருகும் தன்மை உடையது. தண்ணீரில் கரையக்கூடியது. பல மெலமீன் பொருள்களைத் தயாரிக்கக்கூடிய மெலமீன் பிசினைத் தொழிற்சாலைகளில் தயாரிக்க மெலமீன் ஃபார்மால்டிஹைட் பயன்படுத்தப்படுகிறது.

யூரியா (நீரிய உப்பு) என்பது என்ன என்பதையும் இப்போதே தெரிந்து கொண்டு விடுவோம். யூரியா என்பதன் வேதிப்பெயர் கார்பமைட் ஆகும். இதன் வேதியியல் குறியீடு CO{(NH)2}2

உடலில் உள்ள பாய்மங்களான இரத்தம், சிறுநீர் போன்றவற்றில் இருக்கக்கூடியது யூரியா; உடலில் புரதங்கள் சிதைவுறுகையில் கழிவுப்பொருளாக வருவது. திரவ நிலையில் உள்ள அமோனியாவையும், திரவ நிலையில் உள்ள கரியமில வாயுவையும் வினைபுரிய வைத்தால் கிட்டும் வெண்ணிறப்பொடிதான் செயற்கையாகத் தயாரிக்கப்படும் யூரியா. இது நீரில் கரையக்கூடியது. உரம், விலங்குத் தீவனம், , பிளாஸ்டிக்குகள் , பிசின்கள், பார்பிட்யூரேட்டுகள் (மருந்துபொருள்கள்) போன்றவைகளைத் தயாரிக்க,  மருத்துவத்துறையில் சிறுநீரக செயல்பாட்டைக் கண்காணிக்க என பலவிதங்களில் யூரியா பயன்படுகிறது.

ஃபார்மால்டிஹைட் என்றால் என்ன என்பதையும் இப்பொழுதே தெளிவுபடுத்திக்கொண்டுவிடுவோம்.

ஃபார்மால்டிஹைட் நிறமற்றதும், நச்சுத்தன்மையுடையதும், புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட, ஒரு வளிமம் (வாயு). நீரில் கரையக்கூடியது. மூச்சைத்திணறச்செய்யும் நெடி கொண்டது. கிருமிநாசினியாகவும், பொருள்கெடா பாதுகாப்பியாகவும் , பலவித பிளாஸ்டிக்குகள், மெலமீன் பிசின் முதலிய பிசின்களைத் தயாரிக்கவும், உரமாகவும், சாயப்பொருளாகவும், பதப்படுத்தும் ஆற்றல் உடைய பாய்மமாகவும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

யூரியா- ஃபார்மால்டிஹைட் என்பது யூரியா மெத்தனால் என்றும் அழைக்கப்படுகிறது; ஒளிபுகும் தன்மையுடைய தெர்மோசெட்டிங் தன்மையுடைய பிளாஸ்டிக். தெர்மோசெட் தன்மையுடையது என்றால், பதமாக்கப்படுவதற்கு முன் (வெப்பம் அல்லது கதிர்வீச்சு மூலம்) , அச்சில் வார்க்கப்படக்கூடிய நிலையைஅடைவதற்குமுன், திரவநிலையில் இருக்கும் பொருளாகவோ தகடாக்கப்பட்ட நிலையிலோ, மெதுமையான திடப்பொருளாகவோ இருக்கும் பொருளாகும். உஷ்ணவார்ப்புத் (தெர்மோசெட்) தன்மை அடைந்த பல்படிப்பொருள் திரவ நிலையில் உள்ள பொருளை அச்சில் வார்க்கக்கூடிய திடப்பொருளாகவோ, அமோனியா போன்றதொரு மிதமான காரம் இருக்கையில் யூரியாவும் ஃபார்மால்டிஹைடும் வெப்பத்திற்கு உட்படுத்தப்பட்டால் உருவாகும் பிசின். விசையழுத்தத்தைத் தாங்கும் இறுகிய தன்மை, தீத்தடுப்பாற்றல், உருமாறாத்திறன், நீர் உறிஞ்சாத்திறன் (மிகக்குறைவே நீர் உறிஞ்சும்) போன்ற பண்புகளால் யூரியா மெத்தனால் பிசின் ஒட்டுப்பசைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 1950 களில் யூரியா மெத்தனால் நுரை, மிதவெப்ப நாடுகளில் வெப்பத்தடுப்பியாக சுவர்களில் பயன்படுத்தப்பட்டது. சிதைவுற்ற பழைய யுரியா மெத்தனால் நுரையிலிருந்து வெளியாகும் ·பார்மால்டிஹைட் ஆவியின் நச்சுத்தன்மை குறித்து உருவாக்கிய அச்சத்தால் 1980 களில் இதன் பயன்பாடு கைவிடப்பட்டு, விவசாயம், உரத்தயாரிப்பு முதலியவற்றிலும் யூரியா மெத்தனால் தவிர்க்கப்பட்டு தற்போது மெலமீன் பிசினே இதற்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது மீண்டும் மெலமீன் பிசினுக்கு வருவோம். மெலமீன் பிசின் ஒரு தெர்மோசெட் பிளாஸ்டிக் ஆகும். இது ஒரு செயற்கை பல்படிபொருள். தீத் தடுப்பாற்றல் கொண்டது. ஓரளவு அதிக வெப்பம் தாங்கக்கூடியது. சாதாரண வெப்பநிலையில் சமநிலையுடன் இருக்கவல்லது. அச்சில் அதை வார்த்து ஒரு பொருளாக்கிவிட்டால் அப்பொருள் இறுகியதாகவும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கூடியதாகவும் இருக்கும். மெலமீனால் ஆன பொருள் ஒன்று உடைந்துவிட்டால் அதை மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம். எரிக்கப்பட்டால் மெலமீன் பிசின் எரிய இயலாத நைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. இது தீயை அடக்கவல்லது. இவ்வாறு மெலமீன் பிசின் தீத் தடுப்பாற்றல் கொண்டதாகவும் விளங்குகிறது.

எங்கெல்லாம் எப்படியெல்லாம் மெலமீனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டால் எங்கும் எதிலும் மெலமீன் பரவலாகப் பயன்பட்டு வருவதை அறிய முடிகிறது.

வெண் எழுதுபலகைகள், தரைக்குப் போடும் தட்டை ஓடுகள் , தீ தடுக்கும் துணிமணிகள், தீயணைப்பாளர்கள் பயன்படுத்தும் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் சாக்குகள், கம்பளிகள் போன்ற துணிவகைகள் முதலியவற்றின் தயாரிப்பில், பலவிதமான மேற்பரப்புகளில் ஏற்படும் அழுக்குகளை நீக்கும் அழிப்பான்கள் (மெலமீன் நுரைவடிவில்), தீ தடுப்பாற்றல் கொண்ட கட்டுமானப்பொருள்கள் தயாரிப்பில், அதிக வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்ட சமையல் மேடை மேற்பரப்பு தயாரிக்க, கீறல், கறை, வெப்பம், தீ இவற்றிடம் தடுப்பாற்றல் கொண்ட பொருள்களைத் தயாரிக்க, அதிக வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய பசைகள், வடிகட்டிகள் தயாரிப்பில் என்று மெலமீனின் பயன்பாடு கொடிகட்டிப்பறக்கிறது.

மற்றெல்லா வகை பிளாஸ்டிக்குகளையும் விடச் சிறந்தது என்றாலும், மீவெப்பநிலையில் மெலமீன் பயன்படுத்தப்பட்டால் 350(C) பாகையில் மெலமீன் மெதுமையடைந்து உருகிவிடும். மெலமீன் பொருள்கள் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மெலமீன் பிசின் பொருள்கள் சமநிலை உடையவை, நச்சுத்தன்மை இல்லாதவை என்றுதான் அறியப்பட்டு வந்ததுள்ளன.

பாத்திரப் பண்டங்கள், மேசை நாற்காலிகள் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மெலமீனுக்கும், பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட மெலமீனுக்கும் வேறுபாடு அதன் பல்படியாக்கப்படும் செயல்முறையில் உள்ளது.

பல்படி என்பது அடிப்படையில் ஒரு பெரிய நீளமான மூலக்கூறு. அதிக மூலக்கூறு எடை கொண்டதும், ஒரே மாதிரியான பல சிறு மூலக்கூறுகள் இணைக்கப்பட்டும் உள்ள சேர்மம் ஆகும். இவ்வாறு பல்படிகளை உருவாக்குவதற்குப் பெயர் பல்படியாக்கம்.

பல லட்சங்கள் பல கோடிகள் எண்ணிக்கை கொண்ட எடை குறைந்த ஒருபடிகள் அல்லது எளிய ஒரே மாதிரியான மூலக்கூறுகள் இணைக்கப்பட்ட பலபடிகள் இயற்கையாகவும் (மாவியம்), செயற்கையாகவும் (நைலான்) கூட இருக்கின்றன. தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக்குகள், கற்காறை, கண்ணாடி, தொய்வை போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. உயிரினங்களின் திசுக்களில் கூட பல்படிகள் இருக்கும்.

திடீரென்று மெலமீன் கலப்பட உணவுச் சர்ச்சை வந்தபோதுதான், மெலமீன் என்று ஒரு பொருள் இருப்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள நேரிட்டது. உணவுக் கலப்படத்தில் மெலமீனின் பங்கு எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம்.

உணவுப்பொருள்கள் அதிலும் குழந்தைகளுக்கான பால்மாவில் மெலமீன் கலப்படம் செய்யப்பட்டது, உலகெங்கும் பெருத்த அதிர்ச்சியைக் கிளப்பியது. பால்மாவு முதலிய குழந்தை உணவுப் பொருள்களில் என்னென்ன சத்துகள் எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பது டப்பாக்களின் வெளிப்புறம் பொதுமக்கள் காணும் வகையில் அச்சிடப்பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான சட்டம் அனேகமாக உலகெங்கும் அமலில் உள்ளதே. ஒவ்வொரு நாட்டிலும் தயாரிக்கப்படும் பால்மாவு அந்தந்த நாட்டின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சோதனையில் வெற்றிபெற்ற பின்னரே விற்பனைக்கு வந்துசேரும். தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தினர் நடத்தும் பல சோதனைகளில் இன்றியமையாத ஒன்று, பால்மாவில் உள்ள புரதச்சத்தின் அளவு.

குறிப்பிட்ட வகை பால்மாவு எந்த வயதுடைய குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படுகிறது என்பதும் அந்த வயதுக் குழந்தைகளுக்கேற்ற விகிதத்தில் அதில் புரதச்சத்து இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ள, அதிலுள்ள நைட்ரஜன் அளவை சோதித்துப் பார்ப்பர். மெலமீன், நைட்ரஜன்(N என்பது நைட்ரஜனைக்குறிக்கும்) நிறைந்த ஒரு வேதிப்பொருள் என்பதை முதலிலேயே அறிந்துகொண்டோம் (C6H6N6). குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்ட குழந்தை பால்மாவு தயாரிப்பாளர்களில் சிலர், பால்மாவில் உள்ள புரதத்தைக் கூட்டிக்காட்ட,  நச்சுத்தன்மைதான் இல்லையே என்று நினைத்து பால்மாவில் நைட்ரஜன் நிறைந்த மெலமைனைக் கலக்கத் துணிந்தனர்.

நச்சற்ற மெலமீன் நச்சற்ற சயனூரிக் அமிலத்துடன் {(CNOH)3}, இணைந்தபோது, சிறுநீரகக் கற்களை உருவாக்கக்கூடிய, நீரில் கரையவே கரையாத தன்மை வாய்ந்த படிகங்கள் உருவாயின.(இதன் விளைவாக சிறுநீரகம் தனது செயல்பாட்டை இழப்பது, உயிரிழப்பது போன்ற அபாயங்கள் ஏற்பட்டன)

இவை இரத்தவோட்டத்தில் கலந்துவிட்டால், அடர்மிகு நிலையடைந்து, சிறுநீரக நுண்குழல்களில் சிக்கல் உண்டாக்கலாம்; அவற்றை சீரழிக்கலாம். எளிதில் கரையவே கரையாத படிகங்கள் உருவாகி குழல்களில் (அங்கு சிறுநீரும் இருக்கும்) உள்ள கண்ணறைகளை பாதிக்கும். இதன் தொடர்ச்சியாக சிறுநீரகம் செயலிழக்கும். கலப்படம் செய்யப்பட்ட பால்மாவால் சீனாவில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதே போன்ற கலப்பட உணவை உட்கொண்ட செல்லப்பிராணிகள், சிறுநீரக செயல்பாடு தடைபட்டு நூற்றுக்கணக்கில் மாண்டன. 2007 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கோழித்தீவனத்திலும் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நாட்டில் கோழிமுட்டைகளும் நச்சுத்தன்மை அடைந்ததும் கண்டுபிடித்துக் கூறப்பட்டது.

இதற்குப் பிறகுதான் பொதுமக்கள் எச்சரிக்கை அடைந்தார்கள். ஒரு வேதிப்பொருள் நச்சற்றது என்ற யூகத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாகாது. அது வேறு ஒரு நச்சற்ற பொருளுடன் இணைந்தாலும், நச்சுத்தன்மை அடைய வாய்ப்புள்ளது.

மனித இனத்திற்கு மட்டுமின்றி எந்த உயிரினத்திற்கும் கேடுசெய்யாத உணவு தயாரிப்புகள் அவசியம். அதே வேளையில் அவற்றின் தரக்கட்டுப்பாடும் இன்றியமையாதது மட்டுமன்று, இதுபோன்ற சோதனைகளைக் குறுக்குவழிகளில் கடக்க நினைக்கும் நிறுவனங்களில் உள்ள வல்லுநர்களைக் காட்டிலும் திறமையான, குறுக்கு வழிகள் மேற்கொள்ளப்படும் சாத்தியத்தை முன் கூட்டியே ஊகம் செய்து, அவற்றை முறியடிக்கக்கூடிய சோதனைகளைச் செய்யும் திறன்கொண்ட வேதியியல் வல்லுநர்கள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்குத் தேவை.