மூன்று கவிதைகள்

படிக்க ஒரு நூல்

வெட்டி உயிர் போகும்.
விழும் உடல் எழும்.
கட்டிவைத்த ஆசை
காமம் காற்றோடு போகும்.
விடுதலையும் தளையும் என
வேஷம் போடும்.
சூடும் குளிர்ச்சியும்
இடை நிலைகளும்
உணரும் உடம்பு
பேசும் பேச்சைக்
கேட்டால் போதும்.
பிறகெதுவும் வேண்டாம்.

-o00o-

ஒரு பறவை பழம் தின்னும்
எச்சமிடும்; கூடுகட்டும்;
குடும்பம் நடத்தும்.
ஒரு பறவை வெறுமனே
அமர்ந்திருக்கும்.

அது
ஆன்மாவா?
ஆதிக்க சக்தியா?
அலட்சிய புத்தியா?
மரணமா?

இரண்டு உளவா?

தீராத் துயரென்னும்
சந்தர்ப்பத்தில்
உள்ளே எக்காளமிடும்.
அதுவே
அடிவயிற்றிலிருந்து
உருண்டையாய்க் கிளம்பி
அழும் ஒன்றை விழுங்கி
அசைக்க முடியாததெனத் தோன்றி
அழிந்தும் போகும்.

-o00o-

எதுவும் முடிவதில்லை

நேற்று நீ செய்த நன்றை – நான்
நினைத்தே பார்ப்பதில்லை.
வழியெல்லாம் மழை பெய்து வெள்ளம்.
வண்டி ஏதும் தப்புவதில்லை.
இடுப்பில் குழந்தை.
இல் சுகத்தின், துயரின்
இல்வெறுப்பின், அலுப்பின்
இறுதி வடிவம்.
தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?
அன்றி
ஏதும் தொடர்வதில்லை.